எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, November 10, 2014

பகைவனுக்கும் அருளும் அன்னைமாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 9

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8

இந்த வார பதிவிற்குள் செல்வதற்கு முன் சென்ற வாரத்தில் சொன்ன கதையின் தொடர்ச்சியைப் பார்க்கலாம்!

 படம்: கூகிளாண்டவர் உபயம்!

தன் தவறினை உணர்ந்து கொண்ட பைரோன் நாத் அன்னையின் முன் மண்டியிட்டு, “அன்னையே உன்னை யாரென்று தெரியாது நான் பெருந்தவறு செய்து விட்டேன்.  என்னை மன்னித்து அருள வேண்டும் என அவள் தாழ் பணிந்தான். அன்னையும் அவனது தவறினை மன்னித்து, அவனுக்கு ஒரு வரமும் அளித்தாள். அந்த வரம் பைரோன் நாத் தலை விழுந்த இடத்தில் அவன் கோவில் கொண்டிருக்க, அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும், பைரோன் நாத் குடிகொண்டிருக்கும் இடத்திற்கு வந்து பைரைவனையும் தரிசிக்க வேண்டும்.  அப்படி தரிசித்தால் தான் அன்னையை தரிசிக்க வந்த பயணம் முழுமையாகும். 

இப்போதும் அன்னையை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் பைரோன் நாத் குடியிருக்கும் பைரவ் மந்திர் செல்லாது திரும்புவதில்லை.  அப்படித் திரும்பினால் அன்னையை தரிசித்த பலன் கிட்டாது என்று நம்புகிறார்கள்.   

 படம்: கூகிளாண்டவர் உபயம்!

இந்த ஒன்பது வாரங்களில் அன்னை வைஷ்ணவ தேவியின் கதையினை பார்த்தோம்.  அன்னையின் அருளைச் சொல்லும் நிறைய நிகழ்வுகளை வைஷ்ணவ தேவி பயணம் செய்யும் ஒவ்வொருவரும் சொல்வதுண்டு. ஒவ்வொரு பயணத்தின் போதும் இங்கே வரும் பக்தர்கள் தங்களது அனுபவங்களை சக பயணிகளிடம் சொன்ன படியே நடந்து வருவதைக் கவனித்திருக்கிறேன்.

 இங்கே வீடு கட்டினால் விரைவில் சொந்த வீடு அமையும் என நம்பிக்கை! - பைரவ் மந்திர் பாதை ஓர வீடுகள்!

அன்னையை தரிசித்த பின்னர் அக்குகைக்குக் கீழ்ப்புறமாக சுமார் நூறு படிகள் இறங்கிச் சென்றால், இன்னுமொரு குகை உண்டு. அங்கே சிவபெருமான் லிங்க ரூபமாகக் குடிகொண்டிருக்கிறார்.  அவரையும் வழிபட்டு, பொருட்கள் பாதுகாப்பு அறையிலிருந்து பையை எடுத்துக் கொண்டு பைரவ் மந்திர் நோக்கிய பயணத்தினை தொடங்கினோம்.  நீங்களும் கூடவே வந்து கொண்டிருப்பதில் மகிழ்ச்சி!

ஏற்றி விடம்மா....  தூக்கி விடம்மா! 

அன்னை சொன்ன மாதிரியே இப்போதும் அவளை தரிசிக்க வரும் அனைத்து பக்தர்களும் அவளை தரிசித்த பின்னர், பைரவ் மந்திர் நோக்கி நடக்க ஆரம்பிக்கிறார்கள்.  பைரவ் மந்திர் “[b]பவன் என்று அழைக்கப்படும் இடத்திலிருந்து சுமார் மூன்று கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது.  இந்தப் பாதை கொஞ்சம் கடினமான ஏற்றம் கொண்டது – சற்றே செங்குத்தான பாதை என்பதால் இதில் பயணிப்பது கொஞ்சம் கடினமானது.

 படம்: கூகிளாண்டவர் உபயம்!

ஆனாலும் மூன்று கிலோமீட்டர் மட்டுமே என்பதால் அன்னையின் நாமத்தினைச் சொல்லியபடியே நடந்தால் எந்தவிதமான பாதையையும் சுலபமாகக் கடக்க முடியும் என்பதில் ஐயமில்லை.  நானும் நண்பரும் வழியில் பார்க்கும் காட்சிகளை ரசித்தபடியே நடந்து கொண்டிருந்தோம்.  வழியெங்கும் லங்கூர் குரங்குகள் மரங்களில் அமர்ந்து பக்தர்கள் ஏதாவது தின்பண்டம் கொண்டு வருகிறார்களா எனப் பார்த்தபடியே அமர்ந்திருந்தன.  அன்னையின் கோவிலில் கிடைக்கும் தேங்காய் பிரசாதம் வெளியே தெரியும்படி வைத்திருந்தால் உங்களிடமிருந்து தட்டிப் பறித்து விடும்! அதனால் பத்திரமாக நீங்கள் கொண்டுவரும் பைகளுக்குள் மறைத்து வைக்க வேண்டும்!

 ”மலையேற்றம் எங்களுக்கு பெரிய விஷயமேயில்லை!” எனச் சொல்லும் குழந்தைகள்.

இந்தப் பயணத்தில் நாம் காணும் ஒரு விஷயம் – பெரியவர்கள் அனைவருமே “அம்மாடி, அப்பாடி, காலை பிடி, கையைப் பிடிஎன்று நடந்து வர, குழந்தைகள் ஓட்டமும் நடையுமாக ஓடி, குரங்குகளைப் பார்த்தபடி, குதிரையில் செல்லும் மனிதர்களைப் பார்த்தபடி வேகவேகமாக நடந்து வந்து விடுகிறார்கள்.  இந்த பைரவ் மந்திர் செல்லும் கடினமான பாதையைக் கூட ஓட்டமும் நடையுமாக கடக்கிறார்கள்.  பைரவ் மந்திர் செல்லும் வழியிலும் இப்படி நிறைய குழந்தைகளைப் பார்க்க முடிந்தது.

 நான் தட்டிப் பறித்தவண்டா!

சில வருடங்கள் முன்பு வரை இந்தப் பாதையில் எந்தவித வசதிகளும் இல்லாமல் இருந்தது.  இப்போது மேற்கூரைகளும், குடிதண்ணீர் வசதிகளும், கழிப்பறை வசதிகளும் செய்து இருக்கிறார்கள்.  பைரவ் மந்திர் இருப்பது ஒரு சிறிய இடம் தான். இங்கே தரிசனமும் சுலபமாக முடிந்து விடும்.  குகைக்கோவில் இல்லை என்பதால், விரைவில் தரிசனம் முடித்து அங்கிருந்து கீழ் நோக்கி இறங்கலாம். 

 தரையிறங்கும் ஹெலிகாப்டர்
 
பைரவ் மந்திரிலிருந்து கட்ரா நோக்கிய பாதையில் தான் ஹெலிகாப்டரில் வரும் பயணிகள் இறங்கும் இடமான சாஞ்சி சத் இருக்கிறது.  மேலிருந்து பார்க்கும்போது ஹெலிகாப்டர் தரையிறங்குவதையும் அன்னையின் தரிசனம் முடித்து கட்ரா திரும்பும் பயணிகளை ஏற்றிக்கொண்டு திரும்புவதையும் பார்க்க முடியும்.  இந்த இடத்தில் நிறைய குழந்தைகள் இதனை வேடிக்கை பார்த்தபடி நின்றுவிடுவதுண்டு! என்னைப் போன்ற பெரிய குழந்தைகளும் நிற்பதுண்டு – புகைப்படம் பிடிக்க!  

 இளைப்பாற இங்கே இடமுண்டு! கூடவே சூரியனும்!

மலைப்பாதை என்பதால் நடந்து வரும்போது இயற்கைக்காட்சிகளை தரிசித்த படியே வருவது ஒரு நல்ல அனுபவம்.  நாங்கள் வந்து கொண்டிருந்தபோது ஒரு சிறு கும்பல் மலையை அண்ணாந்து பார்த்தபடி நின்று கொண்டு “அதோ அங்கே போகுது...  அங்கே போகுதுஎன்று அலறிக் கொண்டிருந்தார்கள்.  என்ன என்று நாங்களும் பார்க்க நின்றோம் – ஏதோ காட்டு விலங்கு – நரியாக இருக்கலாம் – மலை மேலே தனது இணையுடன் போய்க் கொண்டிருந்தது.  அவற்றின் வேகம் மனிதர்களைப் பார்த்து விரைவில் விலக வேண்டும் என்பதைப் போலத் தோன்றியது.

 ”தம்பி உங்கிட்ட சாப்பிட எதும் இருக்கா! எனக்குத் தாயேன்!”

இப்படி இயற்கை காட்சிகளை ரசித்தபடி மலையேற்றத்திற்கு எடுத்துக் கொண்ட நேரத்தினை விட கொஞ்சம் சீக்கிரமாகவே கட்ரா வரை வந்து விட்டோம்.  இத்தனை நேரம் தெரியாத கால்வலி தெரிய ஆரம்பித்தது. நுழைவாயில் அருகே வந்ததும் தங்கும் விடுதி வரை இருக்கும் ஒன்றரை கிலோ மீட்டர் தொலைவினை ஆட்டோவில் பயணிக்கலாமே என்று தோன்றியது!  ஆனாலும் ஆட்டோக்களுக்கான காத்திருப்பினை விட நடப்பது மேல் என நடந்தோம். 

என்ன நண்பர்களே, வைஷ்ணவ தேவி அன்னையையும், பைரவ் நாதனையும் திவ்யமாக தரிசனம் செய்தீர்களா?  கட்டுரை வழி கண்ட அன்னையை எப்போது முடியுமோ அப்போது நேரில் சென்று அன்னையை தரிசிக்க வைஷ்ணவ தேவி அன்னை அருள் புரியட்டும்!

அடுத்த வாரம் வேறு சில அனுபவங்களையும் தகவல்களையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி


எச்சரிக்கை!: இன்று முதல் வலைச்சரத்தில் ஒரு வாரத்திற்கு ஆசிரியர் பொறுப்பினை ஏற்றிருக்கிறேன்! இந்த வாரம் முழுவதும் இத்தளத்திலும், வலைச்சரத்திலும் தினம் ஒரு பதிவு வெளியிடப்படும் என்று தெரிவித்துக் கொள்கிறேன்!


வலைச்சரத்தில் இன்று:   நான் யாரு எனக்கேதும் புரியலையே! படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!
 

34 comments:

 1. வலைச்சர ஆசிரியர் ஆனதுக்கு வாழ்த்துகள். டெல்லியிலே இருக்கீங்களா! அவ்வளவு தூரம் வர முடியலை. அதிலும் இப்போக் கஷ்டமான வைஷ்ணோதேவி பயணம் வேறே. முடியும்போது வரேன். அனுபவங்கள் அனைத்தும் அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   முடிந்த போது வந்து உங்கள் கருத்துகளைச் சொல்லுங்கள்....

   Delete
 2. //நான் தட்டிப் பறிச்சவண்டா//

  ஹா...ஹா...ஹா...

  ஹெலிகாப்டரில் ஒரு தடவைக்கு எத்தனை பயணிகள் ஏற்றிச் செல்வார்கள்?

  பைரோன் நாத்துக்கும் சன்னதி வைத்திருப்பது சரி, அங்கும் சென்று வந்தால்தான் வைஷ்ணவி தேவியைத் தரிசித்த முழுப்பலன் கிட்டும் என்பது...

  ReplyDelete
  Replies
  1. ஐந்து முதல் எட்டு இருக்கைகள் கொண்ட ஹெலிகாப்டர்கள் இங்கே இருப்பவை. அப்படி நான்கு - ஐந்து ஹெலிகாப்டர்கள் உண்டு. இந்த பயணத்திற்கு இணையம் மூலமாம முன்பதிவும் செய்து கொள்ள முடியும்.

   பைரோன் நாத் செல்லாமல் வருபவர்களும் உண்டு.... நானே ஒரு பயணத்தில் அங்கே செல்லாமல் வந்ததுண்டு....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 3. ஹெலிகாப்டரைப் பொறுத்துப் பயணிகள் எண்ணிக்கை அமையும். நேபாள் காட்மான்டுவில் இருந்து முக்திநாத்துக்கு நாங்கள் பதினாறு நபர்கள் பயணம் செய்தோம். பைலட்டும், உதவிக்கு இருந்தவரையும் தவிர்த்துப் பயணிகள் மட்டும் பதினாறு நபர்கள். குறைவாக அழைத்துச் செல்லும் ஹெலிகாப்டர்களும் உண்டு. என்றாலும் இருபது நபர்களுக்கு மேல் அனுமதிப்பது இல்லை என்றே எண்ணுகிறேன்.

  ReplyDelete
  Replies
  1. இங்கே இருப்பவை குறைவான பயணிகள் இருக்கை கொண்டவை.... - ஐந்து முதல் எட்டு பேர் பயணிக்கக் கூடியவை...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 4. வலைச்சர ஆசிரியர் பணிக்கு நல்வாழ்த்துகள்..

  மலைப் பயணத்தில் நானும் தங்களுடன் பயணிக்கின்றேன்...
  வாழ்க நலம்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ...

   Delete
 5. தங்களின் புண்ணியத்தால் மலையேறாமல் அன்னையின் தரிசனத்தை கண்டோம். அதற்கு நன்றி! இவ்வார வலைச்சர ஆசிரியராக பணியேற்பது அறிந்து மகிழ்ச்சி. பணி சிறக்க வாழ்த்துக்கள்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. "//கட்டுரை வழி கண்ட அன்னையை எப்போது முடியுமோ அப்போது நேரில் சென்று அன்னையை தரிசிக்க வைஷ்ணவ தேவி அன்னை அருள் புரியட்டும்!//"

  உங்களின் இந்த வாக்கு எல்லோருக்கும் பலிக்கட்டும் வெங்கட் சார்.

  ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. சபரி மலைப் பயணத்தின் புகழை எட்டிவிடும் போலிருக்கிறதே. வலைச்சர ஆசிரியர் பொறுப்புக்குவாழ்த்துக்கள்.

  ReplyDelete
  Replies
  1. தென்னகத்தில் எப்படி சபரிமலை புகழ் பெற்றதோ அதே போல வடக்கில் இது ரொம்பவும் பிரபலம்..... லட்சக்கணக்கில் பக்தர்கள் வந்து போகும் இடம்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   Delete
 8. படங்களை மட்டுமே பார்த்து ரசித்தேன் முந்தைய பகிர்வினைப் படித்து விட்டு
  மீண்டும் தொடர்கின்றேன் ¨.பகிர்வுக்கு மிக்க நன்றி சகோதரா .

  ReplyDelete
  Replies
  1. முடிந்த போது அனைத்து பகுதிகளையும் படியுங்கள்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   Delete
 9. வணக்கம் சகோதரரே!

  தங்களின் வழி நடத்துதலுடன், வைஷ்ணவ தேவி அன்னையை தரிசிக்கும் பேறு கிடைத்தது. அன்னையை தரிசித்த முழுமையான பலனை பெறுவதற்காக பைரோன் நாத் கோவிலுக்கும் சென்று தரிசனமும் பெற வைத்து விட்டீர்கள். நன்றி.. அன்னையின் அருள் அனைவரும் பெற வாழ்த்தியமைக்கும் நன்றி. தொடர்ந்து பயணிக்கிறேன்.!

  தாங்கள் ஏற்றுக்கொண்ட இவ்வார வலைச்சர ஆசிரியர் பணிக்கு வாழ்த்துக்கள்.
  ஒரு வார பதிவுகளையும் படிக்க ஆவலாயுள்ளேன். அதற்கு நன்றி!

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 10. மாதாவை நாங்களும் உங்கள் மூலம் தரிசித்தோம்.
  நன்றி சகோ

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 11. அழகர் மலை போலவே இருக்கிறது . அருமை !

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   Delete
 12. தங்களுடன் நேரில் வந்து தரித்த அனுபவம் கிடைத்தது ஐயா
  நன்றி
  தம +1

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 13. உண்மைதான் மாதாவின் அருளிருப்பின் அவளை தரிசித்து வழிபட முடியும்! சிறப்பான கட்டுரைக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 14. அருமையான பயணக்கட்டுரை அண்ணா...
  படங்கள் அருமை...
  வலைச்சர ஆசிரியர் பணி சிறக்கட்டும்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 15. தங்கள் பயணக் கட்டுரைகள் எல்லாமே மிக அருமையாக உள்ளன ஜி! வாசிப்பதற்கு மட்டுமல்ல....செல்ல வேண்டும் என ஆர்வமும் எழுகின்ரது....நீங்கள் உங்கள் பயணக் கட்டுரைகளை புத்தகமாகக் கொண்டு வரலாமே!

  நான் தட்டிப் பறிச்சவண்டா!////// இவர்களின் ரௌடியிஸம்??!! மிகவும் ரசிக்கத்தக்கவை!!!

  ஹஹஹஹஹ்....படங்களும் மிகவும் ரசித்தோம்!

  ReplyDelete
 16. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

  புத்தகமாகக் கொண்டு வருவதில் சில சிக்கல்கள் உண்டு!

  ReplyDelete
 17. காட்சிகள் கண்கள் நிறைக்கப் பயணத்தொடர் மனம் நிறைத்தது சகோதரரே!
  அன்னை அருளினால் நானும் கூடவே..!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இளமதி.

   Delete
 18. அழகான மலை பயணம் அல்லவா அது., நடந்து போகும் போது எவ்வளவு அழகான இயற்கை காட்சிகள்!
  உங்கள் பயண அனுபவம், படங்கள் எல்லாம் மிக அருமை.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா....

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....