வியாழன், 30 ஜூன், 2016

முகம் காட்டு கண்மணியே – ராஜி வெங்கட்


[படம்-7 கவிதை-1]

படமும் கவிதை வரிசையில் இந்த வாரம் ஏழாம் வாரம்.  நான் எடுத்த புகைப்படம் ஒன்றிற்கு கற்றலும் கேட்டலும்வலைப்பூவில் எழுதி வரும் ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையோடு உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி. 

புகைப்படம்-7:எடுக்கப்பட்ட இடம்:  திருவரங்கம் என்றாலே எல்லோருக்கும் நினைவுக்கு வருவது அரங்கனின் திருக்கோவில் தான். ஆனால் அதே திருவரங்கத்தில் விஷ்ணுவின் பத்து அவதாரங்களையும் ஒருங்கே வழிபட வசதியாய் “தசாவதார சன்னதியும் உண்டு என்பது தெரியுமா? அந்த தசாவதார சன்னதிக்கு ஒரு முறை போயிருந்த போது கோவிலின் வாசலில் இரண்டு குழந்தைகள் முகமூடி போட்டுக் கொண்டு விளையாடிக் கொண்டிருந்தார்கள்.  அவர்களை எடுத்த படம் தான் இது.....

படம் பார்த்த போது எனக்குத் தோன்றிய எண்ணம்:  இச்சிறு வயதிலேயே முகமூடி போட்டுக் கொண்டு பழக்கப் படுத்திக் கொள்ள வேண்டுமோ? பெரிதான பிறகு போட்டுக்கொள்ள வேண்டியிருக்குமோ என இப்பொழுதே பழக்கம் செய்து கொள்கிறார்களோ.....

புகைப்படத்திற்கு ராஜி வெங்கட் எழுதி அனுப்பிய கவிதை இதோ.....

கவிதை-1:

முகம் காட்டு கண்மணியே!

வளர்கின்ற பிஞ்சுகளே
விளையாட்டோ முகமூடி?
வெளிக்காட்டா கயமைகளை
விரைவாக உள்புதைத்து,
ஒளிக்கின்ற காலமுண்டு
ஒவ்வொன்றாய் அணிவோமே!
களிக்கின்ற வயதினிலே
கழட்டுங்கள் கண்மணிகாள்!

     ராஜி வெங்கட் [எ] ரேவதி வெங்கட்......

என்ன நண்பர்களே, படமும் கவிதையும் வரிசையில் ஏழாம் படமும் ராஜி வெங்கட் அவர்கள் எழுதிய கவிதையையும் ரசித்தீர்களா? தொடர்ந்து புதன் கிழமைகளில் படமும் கவிதையும் பதிவுகள் வெளிவரும். நான் எடுத்த புகைப்படத்திற்கு கவிதை எழுத விருப்பம் இருந்தால் எனக்கு மின்னஞ்சல் [ venkatnagaraj@gmail.com ] அனுப்பினால் நான் எடுத்த புகைப்படம் ஒன்றினை அனுப்பி வைக்கிறேன்.

கவிதை எழுதுபவர்களுக்கு ஊக்கம் தரும் முயற்சி மட்டுமே. வேறு எந்த நோக்கமும் இல்லை.  சில கவிதைகள் சேர்ந்தபிறகு அவற்றைத் தொகுத்து மின்னூலாகவும் வெளியிடலாம்.  அனைவருடைய படைப்புகளையும் படிப்பவர்களிடம் கொண்டு சேர்க்க இது ஒரு முயற்சி....  கவிதை மற்றும் புகைப்படம் பற்றிய எண்ணங்களை பின்னூக்கத்தில் சொல்லுங்கள்.....

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


டிஸ்கி:  இந்த பதிவு என்னுடைய வலைப்பக்கத்தில் வெளிவரும் 1100-வது பதிவு.  என் பதிவுகளை வாசிக்கும், கருத்துரைகள் பகிர்ந்து கொள்ளும், ஊக்க மொழிகள் சொல்லும் அனைத்து நட்புகளுக்கும் மனம் நிறைந்த நன்றி! 

புதன், 29 ஜூன், 2016

ப்யாஸ் நதியில் ராஃப்டிங்.....

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

ஹிமாச்சலப் பிரதேசத்தின் குலூ நகர்.  குளிர் பிரதேசமான மணாலி என்று சொல்லும்போது குலூவையும் சேர்த்து, குலூ-மணாலி என்று தான் சொல்வார்கள். இரண்டுமே அருகருகே இருக்கும் இரு நகரங்கள்.  மணாலியில் பனிப்பொழிவும் பனிபடர்ந்த சிகரங்களும் பார்க்கலாம் என்றால் குலூவில் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யும் த்ரில் அனுபவம் பெறலாம்.  வாருங்கள் கூழாங்கற்கள் நிரம்பிய [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்யலாம்.

ப்யாஸ் நதி....

குளிர் மற்றும் மழை அதிகம் இல்லாத மாதங்களில் மட்டுமே இங்கே ராஃப்டிங் செய்ய முடியும். மார்ச் முதல் ஜூலை இரண்டாம் வாரம் வரை மற்றும் செப்டம்பர் 15 முதல் நவம்பர் இறுதி வரை ராஃப்டிங் செய்ய உகந்த மாதங்கள். [B]ப்யாஸ் நதிக்கரையில் நதியைப் பார்த்தபடியே பயணித்து பிர்டி எனும் இடத்திற்கு வந்து சேர்ந்தால் அங்கே சின்னச்சின்ன தனியார் கடைகளைக் காணமுடியும். அவர்களிடம் இருக்கும் காற்றடைத்த ரப்பர் படகுகளில் தான் நாம் ராஃப்டிங் செய்ய வேண்டும். சில அரசு நிறுவனங்கள் உண்டென்றாலும், தனியார் படகுகள் தான் அதிகமான அளவில் இருக்கின்றன.

ப்யாஸ் நதியின் ஒரு பயணம்.....

Small, Medium, Large என மூன்றுவிதமான பயணங்கள் உண்டு – பிர்டியிலிருந்து தொடங்கி, ஜீரி எனும் இடம் வரை கிட்டத்தட்ட 14 கிலோமீட்டர் தொலைவு தூரத்தினை நீங்கள் [B]ப்யாஸ் நதியில் ராஃப்டிங் செய்து கடக்க முடியும்.  14 கிலோமீட்டர் தொலைவும் ராஃப்டிங் செய்ய சில மணி நேரங்கள் ஆகலாம் – என்றாலும், ராஃப்டிங் செய்து பழக்கமில்லாதவர்களுக்காக அரை மணி அல்லது ஒரு மணி நேரம் ராஃப்டிங் செய்யும் வசதிகள் இங்கே உண்டு.

ஏலேலோ ஐலேசா......

சீசனைப் பொறுத்து ராஃப்டிங் கட்டணங்கள் மாறுபடுகின்றன. நீங்கள் பயணிக்கும் தூரத்தினைப் பொறுத்து கட்டணங்கள் வசூலிக்கப்படுகின்றன. 500 முதல் 1000 ரூபாய் வரை கட்டணங்கள் கொடுத்து ராஃப்டிங் செய்யலாம். முழு தொலைவும் பயணிக்க கட்டணம் இன்னும் அதிகம்.  பாதுகாப்பு உடைகள், தலைக்கவசம் ஆகியவற்றை அணிந்து கொண்டு ரப்பர் படகில் அமர்ந்து கொள்ள, அனுபவம் பெற்ற படகோட்டி ஒருவர் ராஃப்டிங் செய்ய நம்மை அழைத்துச் செல்கிறார்.

காற்றடைத்த ரப்பர் படகுகள்....

ராஃப்டிங் தொடங்குமுன்னரே, நமக்கு இந்த த்ரில் பயணத்தினை தாங்க முடியுமா? இருதய நோய், ரத்த அழுத்தம் போன்ற பிரச்சனைகள் இருந்தால் வர வேண்டாம் என்பதையும் சொல்லி விடுகிறார்கள். கூழாங்கற்கள் நிறைந்த [B]ப்யாஸ் நதிக்குள் பயணிக்கத் துவங்குகிறோம். சமவெளியாக இல்லாமல் பள்ளங்களும் மேடுகளும் நிறைந்த பகுதி என்பதால் படகு செலுத்துபவரின் கட்டுப்பாட்டை மீறிச் செல்ல வாய்ப்புகள் அதிகம். சில இடங்களில் தண்ணீரின் வேகம் மிக அதிகம் என்பதால் படகும் வேகமாக நகர்கிறது. 

ப்யாஸ் நதியின் ஓரத்தில் அமர்ந்து த்யானம் செய்யும் மூதாட்டி....

படகின் ஓரங்களிலும் நடுவிலும் இருக்கும் கயிறுகளை கெட்டியாக பிடித்துக் கொண்டு நாம் அமர்ந்திருக்க, படகோட்டி மிக லாவகமாக படகைச் செலுத்துகிறார்.  பள்ளமான இடம் வரும்போது இப்போது நாம் கீழ்நோக்கி வேகமாகச் செல்லப்போகிறோம் என்பதையும் சொல்லி விடுவதால் நம் இதயத் துடிப்பு அதிகரிக்கிறது. ஒரு வித சத்தத்தோடு படகு தண்ணீரில் கீழ் நோக்கி இறங்க, நாமும் தண்ணீரில் நனைகிறோம்.  நம்மை மீறி நம்மிடமிருந்தும் உற்சாகக் குரல் வெளிவருகிறது – சிலருக்கு பயத்தில் கூச்சலும்!

கயிற கெட்டியா புடிச்சுக்கோங்க.... பள்ளம் வரப் போது.....

சில இடங்களில் படகைச் சுற்றிச் சுற்றி ஓட்டியும் துடுப்பினால் தண்ணீரில் அடித்து தண்ணீர் திவலைகள் நம் மீது படும்படியும் செய்து மகிழ்விக்கிறார் படகோட்டி.  எங்களுக்கு அமைந்த படகோட்டி நேபாள் நாட்டைச் சேர்ந்த கர்மாஎனும் 23 வயது இளைஞர்.  எங்களுடன் சேர்ந்து “ஐலேசாபாட்டுப் பாடியதோடு நேபாளி மொழியிலும் சில பாடல்கள் பாடி எங்களை மகிழ்வித்தார். குழுவாக பயணித்த நாங்களும் அவருடன் பயமின்றி உற்சாகமாக பயணிக்க, அவருக்கும் மகிழ்ச்சி. [B]ப்யாஸ் நதியில் இருக்கும் குறுகிய பாதைகளிலும், பெரிய பள்ளங்களிலும் படகைச் செலுத்தி எங்கள் அனைவரையும் நனைய வைத்தார்.

இதோ வந்துடுச்சு பள்ளம்....

எப்படியும் தண்ணீரில் நனைந்து விடுவோம் என்பதால், கரையிலேயே காமிரா, மொபைல், பர்ஸ் போன்றவற்றை நீங்கள் சென்ற வாகனத்தில் விட்டுவிடுவது நல்லது.  பயணிக்கும் போது செல்ஃபி எடுத்துக்கொள்ள காமிரா வைத்துக் கொண்டு அது முழுவதும் நனைந்து செயலிழப்பதையும் காணமுடிந்தது.  நீங்கள் ராஃப்டிங் செய்வதை படம்/காணொளியாக எடுத்துத் தரவும் இங்கே வசதிகள் உண்டு.  படகொன்றுக்கு 500 ரூபாய் வாங்கிக்கொண்டு ஆரம்பத்திலிருந்து முடியும் இடம் வரை உங்களைத் தொடர்ந்து சாலையோரமாக பைக்கில் வந்து ஆங்காங்கே நின்று வீடியோவும், புகைப்படமும் எடுக்கிறார்கள்.  நீங்கள் கரையேறிய பிறகு உங்களுக்கு அந்த படங்களையும் காணொளியையும் ஒரு குறுந்தகடில் பதிவு செய்து தருவார்கள்.

என்ன நனைஞ்சுட்டீங்களா....

உற்சாகமாக பயணித்து, நதியில் இருக்கும் நெளிவு சுளிவுகளைக் கடந்து கரையோரம் வருகிறோம். வாழ்க்கையில் ஒரு முறையாவது நிச்சயமாக அனுபவிக்க வேண்டிய விஷயம் இந்த ராஃப்டிங்.  இந்தியாவில் பல இடங்களில் இந்த ராஃப்டிங் வசதிகள் இருக்கிறது – ரிஷிகேஷ் [கங்கை நதி, உத்திராகண்ட் மாநிலம்], குலூ [[B]ப்யாஸ் நதி - ஹிமாச்சலப் பிரதேசம்], ஓர்ச்சா [[B]பேத்வா நதி - மத்தியப் பிரதேசம்] ஆகிய இடங்களில் ராஃப்டிங் வசதிகள் உண்டு.

ப்யாஸ் நதியின் ஒரு பள்ளத்தில் இறங்கும் போது....

குலூ-மணாலி செல்வது எப்படி?

குலூ வருவதற்கு முக்கிய வழி சாலை வழி தான். தில்லி வரை விமானத்தில்/ரயிலில் வந்து அங்கிருந்து குலூ-மணாலி வரை செல்ல நிறைய வோல்வோ பேருந்துகளும், சாதாரண பேருந்துகளும் உண்டு.  பன்னிரெண்டு மணி முதல் பதினான்கு மணிநேர பயணத்தில் நீங்கள் குலூ சென்றடையலாம்.  ரயிலில் பயணிப்பதென்றால் சண்டிகர் வரை ரயிலில் பயணித்து, பிறகு தனியார் வாகனத்திலோ அல்லது பேருந்துகளிலோ செல்ல முடியும்.  நேரடி விமான சேவை இல்லையென்றாலும், சென்னையிலிருந்து தில்லி வரை வந்துவிட்டால், தில்லி-சண்டிகர் வரை விமானத்திலும், பிறகு சண்டிகரிலிருந்து 9 இருக்கைகள் கொண்ட சிறிய விமானத்திலும் வரலாம். 

யாருப்பா அது எழுந்து நிக்கறது....

குலூ-மணாலி தங்குவது எங்கே?

குலூ-மணாலி இரண்டு இடங்களிலுமே தங்குமிடங்கள் நிறையவே இருக்கின்றன. சீசன் சமயங்களில் [ப்ரல்-ஜூன்] அறை வாடகை மிக அதிகமாக இருக்கும்.  மற்ற சமயங்களில் வசதிகள் பொறுத்து 1000 ரூபாய் முதல் தங்குமிடங்கள் கிடைக்கின்றன. குழுவாக பயணிப்பவர்கள் காட்டேஜ் எடுத்தும் தங்கலாம். நான்கு அறைகள், ஒரு ஹால், டைனிங், சமையல் அறை என மொத்தமாக இருக்கும் காட்டேஜ் 8000 முதல் 10000 வரை கிடைக்கிறது.

என்ன ராஃப்டிங் நல்லா இருந்துதா?....

நீங்களும் ஒரு முறை குலூ-மணாலி சென்று ராஃப்டிங் செய்து இந்த த்ரில் அனுபவத்தினை பெறுங்கள்.


-          வெங்கட் நாகராஜ்

ஜூன் மாத ஹாலிடே நியூஸ் இதழில் வெளிவந்த எனது கட்டுரை.  உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி...

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.
செவ்வாய், 28 ஜூன், 2016

ஆண் [அ]சிங்கம்

நல்ல சிங்கம்.....
படம்: இணையத்திலிருந்து.....

அலுவலகத்தில் ஒரு பாதுகாப்புத்துறை ஊழியர் – மதுராவினைச் சேர்ந்தவர். திருமணம் ஆகிவிட்டது. இரண்டு குழந்தைகள் – இரண்டுமே ஆண் குழந்தைகள். பெரியவன் முதலாம் வகுப்பில் படிக்கிறான், இரண்டாமவன் இரண்டு வயதுக் குழந்தை.  மதுராவில் மனைவி, மகன்கள் ஆகியோர் ஊழியரின் வீட்டில் இருக்க, இவர் மட்டும் இங்கே தனியாக இருந்து கொண்டிருந்தார். வெள்ளியன்று இரவு சென்றால் திங்கள் அன்று தில்லி திரும்புவார்.  தில்லியில் அவர் தனது Unit-ல் தங்கிக் கொண்டிருந்தார்.

சில மாதங்கள் முன்னர் Unit-ல் தங்க அனுமதி மறுக்கப்பட்டபோது, தினமும் மதுராவிலிருந்து தில்லிக்கு பயணிக்க ஆரம்பித்தார். பாதுகாப்புத் துறையில் இருப்பதால் தினமும் ரயில் பயணிக்க சீட்டு வாங்குவதில்லை. எப்போதாவது TTE கேட்டால் அவர் யார், அவரது தந்தை யார் [தந்தையும் உத்திரப் பிரதேச காவல் துறையில்] என்ற பிரதாபங்களைச் சொல்லி சீட்டு வாங்க முடியாது என்று சொல்லி விடுவார். இப்படியே சென்று வருவதை அவரால் தொடர முடியவில்லை.

தில்லியின் எல்லையிலேயே அலுவலக குடியிருப்பில் தங்குமிடம் வாங்கிக் கொண்டு குடும்பத்தையும் அழைத்துக் கொண்டு வந்து விட்டார். இது நடந்து ஆறு மாதங்களுக்கு மேல் ஆகிவிட்டன. இந்த மாதங்களில் மூன்று முறை என்னிடம் வந்து புலம்பி இருக்கிறார் – எல்லாம் ஆண் சிங்கம் வேலை தான். ஒவ்வொரு முறையும் அறிவுரை சொன்னாலும் திருந்தவில்லை.

நேற்று மூன்றாவது முறையாக அவரது மனைவிக்கு கருக்கலைப்பு! மருத்துவரிடம் அழைத்துச் செல்ல, அவர் சகட்டு மேனிக்குத் திட்டியிருக்கிறார் – மனைவியின் உடல்நலத்தோடு ஏன் விளையாடுகிறாய் என்று அவரைத் திட்டியதோடு, மனைவியையும் கன்னா பின்னாவென்று திட்டி இருக்கிறார். மனைவியின் உடல் நிலை மோசமாக இருக்கிறது என்று நேற்று வந்து என்னிடம் புலம்பிக் கொண்டிருந்தார். இரண்டு மாதங்களுக்கு முன்னரே இப்படி நடந்தபோது அவருக்கு அறிவுரை கூறி இருந்தேன்.

படம்: இணையத்திலிருந்து.....

ஆறு ஏழு மாதங்களுக்குள் மூன்றாவது முறையாக கருத்தரிப்பு. கொஞ்சம் கூட தனது மனைவியின் உடல் நலத்தில் அக்கறை இல்லாது, தனது வேட்கைக்குத் தீனி போடும் ஒரு பொருளாக மனைவியை பயன்படுத்துவது தவறு என்று நேரடியாகவும், இப்படி அடிக்கடி கருத்தரிப்பு, கருக்கலைப்பு என்றால் அவரது மனைவிக்கு எத்தனை தொந்தரவுகள், உடல் உபாதைகள் உண்டாகும் என்றும் விளக்கிச் சொன்னாலும் புரிவதில்லை.

நேற்று மூன்றாவது முறை என்று சொன்னதும் கொஞ்சம் கோபமாகி, நீ எல்லாம் மனுஷனா, இல்லை மிருகமா என்று திட்டியதோடு, எத்தனையோ கருத்தடை சாதனங்கள் இருக்கிறது, இல்லை எனில் நீயோ, மனைவியோ கருத்தடை ஆபரேஷன் செய்து கொள்ளலாமே என்றால் அதற்கு அவர் சொன்ன பதில் இன்னும் அதிக கோபத்தினை வரவைத்தது.  அவர் ஆபரேஷன் செய்து கொண்டால் அவரது மர்[dh]தானி அதாவது ஆண்மை குறைந்து விடுமாம்... சரி மனைவியையாவது ஆபரேஷன் செய்து கொள்ளச் சொல்லலாமே என்றால், குண்டாகி விடுவாராம்..... அடேய் மாக்கான்... குண்டானா பரவாயில்லைடா, உண்டாகத்தான் கூடாது என்று திட்டினேன்.

கருத்தடை சாதனங்களைப் பயன்படுத்துவதிலும் அவருக்கு விருப்பம் இல்லை. அவற்றால் சரியான சுகம் கிடைப்பதில்லையாம்.....  அசிங்கமாக திட்டலாம் என்று தோன்றியது -  திட்டினேன் – இங்கே எழுத முடியாத அளவு திட்டினேன். 

மனைவியின் உடல்நிலை சரியில்லை என்பதை தனது வீட்டிற்குச் சொல்லாமல் தில்லியில் இருக்கும் அவரது சித்தப்பா மகளைத் துணைக்கு அழைத்து வந்து மனைவியைப் பார்த்துக் கொள்கிறார். மருத்துவரும் இன்னுமொரு முறை இப்படி நடந்தால், அதைத் தாங்கும் சக்தி உன் மனைவிக்கு இல்லை என்று சொல்லி இருக்கிறாராம்.

நானும் தொடர்ந்து இப்படி கருத்தரிப்பும், கருக்கலைப்பும் நடந்தால் அவரது மனைவிக்கு கர்ப்பப்பையில் புற்று நோய் உண்டாகும் அபாயமும் இருக்கிறது என்று சொல்லி இருக்கிறேன். அவளுக்கு ஏதாவது ஒன்று ஆகிவிட்டால், இரண்டு குழந்தைகளை வைத்துக் கொண்டு நீ திண்டாடுவாய் என்றும் சொல்லி பயமுறுத்தி இருக்கிறேன். 

ஆண் சிங்கம் இப்போதைக்கு வாலைச் சுருட்டியபடி இருந்தாலும், ஆண்மையைப் பறை சாற்ற ஏதாவது செய்து, அடுத்த முறை இப்படி ஏதாவது நடந்தால் நிச்சயம் வெட்டி விட வேண்டியது தான்! வேறு வழியில்லை......

என்ன ஆண்மையோ...  என்ன பெருமையோ..... தனது துணைவியின் கஷ்டங்களைப் புரிந்து கொள்ளாத ஆண்மை என்ன ஆண்மை?.....

வேறொரு பதிவில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

திங்கள், 27 ஜூன், 2016

ஊர்வன, பறப்பன, நடப்பன, குரைப்பன – அனைத்தும் உணவு

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 21

இந்தப் பயணக் கட்டுரையின் முதல் 20 பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu.....


இத்தொடரின் சென்ற பகுதியை இப்படி முடித்திருந்தேன்.....

சரி அடுத்து எங்கே? எனக் கேட்க, அவரை அனுப்பி வைத்த கேரள நண்பர் எங்களை ஒரு இடத்திற்கு அழைத்துப் போகச் சொல்லி இருப்பதாகவும், அங்கே தான் போகப் போகிறோம் என்றும் சொன்னார்.  அது எந்த இடம்.....

கடைவீதி கலகலக்கும்....

நாகாலாந்து செல்வதற்கு முன்னரே நாகாலாந்து மக்களின் உணவுப் பழக்கங்கள் பற்றி கொஞ்சம் தெரிந்து வைத்திருந்தோம். தில்லியில் இந்தியாவின் அனைத்து பகுதிகளிலிருந்தும் மக்கள் வந்து வசிக்கிறார்கள். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு பழக்கம். அலுவலகத்திலும் நாகாலாந்து மக்கள் ஒன்றிரண்டு பேர் உண்டு. அங்கே இருக்கும் வித்தியாசமான உணவுப் பழக்கங்கள் பற்றி அவர்களிடம் பேசியதுண்டு.  கேள்விப்பட்ட சில கதைகளும் உண்டு.  அவற்றைப் பார்க்கும் முன்னர் எங்கள் ஓட்டுனர் அழைத்துச் சென்ற இடத்திற்கு உங்களையும் அழைத்துச் செல்கிறேன்....

உள்ளே சென்றால்.......

ஓட்டுனர் வண்டியை லாவகமாக கொஹிமா நகரின் சிறிய சந்துகளில் ஓட்டிச் சென்றார். ஒரு வண்டி எதிர் புறமாக வந்துவிட்டால் இரண்டு வண்டிகளும் எதிரும் புதிருமாக நிற்க வேண்டியிருக்கலாம். அல்லது ரொம்பவே சிரமப்பட்டு தான் முன்னேற வேண்டியிருக்கும். அப்படிப்பட்ட சந்துகள் வழியே எங்களை அழைத்துச் சென்று வண்டியை நிறுத்திய இடம் ஒரு கடைத்தெரு – சுற்றிலும் கடைகள். கடைகளைத் தவிர வேறு எதுவுமில்லை.  என்ன கடைகள் என்று தானே கேட்கிறீர்கள் – சொல்கிறேன்.

புழுக்களும் விற்பனைக்கு.....

எங்கு பார்த்தாலும் இறைச்சிக் கடைகள் – பெரும்பாலான உயிரினங்களை – ஊர்வன, பறப்பன, நடப்பன, மிதப்பன மற்றும் குரைப்பன சாப்பிடும் வழக்கம் நாகாலாந்து மக்களுக்கு உண்டு. நாய்களைக் கூட இவர்கள் விட்டு வைப்பதில்லை.  நாய் இறைச்சி இங்கே மிகவும் பிரபலமான உணவு! ஒவ்வொரு கடையிலும் ஒவ்வொரு உயிரினத்தின் இறைச்சி விற்கப்படுகிறது – ஒரு பக்கம் பார்த்தால் பன்றி இறைச்சி, இன்னுமொரு பக்கத்தில் கோழி, நாய் என பக்கம் பக்கமாக வெட்டித் தள்ளுகிறார்கள்.  அவற்றை வாங்குவதற்கு மக்கள் வந்த வண்ணமே இருக்கிறார்கள்.

தவளை, நத்தை, வெள்ளெலி விற்பனை......

சின்னச் சின்ன சந்துகளில் இருந்த கடைகளுக்கு எங்களை அழைத்துச் செல்கிறார் அந்த ஓட்டுனர் – நாங்கள் ஐவரும் கையில் கேமராவைப் பிடித்தவாறு கூடவே நடக்கிறோம்.  எல்லா பக்கமும் பார்த்தவாறே உள்ளே செல்ல, அவர் எங்களை நிறுத்திய இடம் நாய்க்கறி விற்கும் ஒரு கடைக்கு முன்னர்! இங்கே தான் நாய்கள் வெட்டுவார்கள் எனச் சொன்னதோடு, கடைக்காரரிடம் நாகா மொழியில் பேசுகிறார் – அவர் உள்ளே சென்று ஒரு தட்டில் நாயின் இறைச்சி எடுத்து வந்து காண்பித்து, நாய் வெட்டுவதைப் பார்க்க வேண்டுமா என்றும் கேட்க, நாங்கள் மெர்சலானோம்..... 

மீனம்மா.... மீனம்மா....

அவசரமாக மறுத்து விட்டு, முன்னேறினோம்.  ஒவ்வொரு கடையிலும் வைத்திருக்கும் அவர்களது உணவு வகைகளின் பெயர்கள் கூடத் தெரியாமல், அவற்றை பார்த்தபடியே முன்னேறுகிறோம்.  ஒரு கடையின் வாசலில் மூங்கில் தட்டுகள் – அதில் பிளாஸ்டிக் பைகளில் ஏதோ இருக்கிறது – பிளாஸ்டிக் பைகளுக்குள் குதித்த வண்ணம் இருக்கிறது – சற்றே கூர்ந்து கவனித்தால் அவை உயிருள்ள தவளைகள்/தேரைகள்.  அவற்றையும் சாப்பிடுவார்களாம். வாத்து, வெள்ளெலி, புழுக்கள், நத்தை, தேனீக்கள் என எதையும் விடுவதில்லை......

தட்டுத் தட்டாய் புழுக்கள்...... - உயிருடன்!

ஒரு கோழிக்கடையில் சின்னதாய் ஒரு டிரம். அதற்கு ஒரு மூடி. உயிருடன் இருக்கும் கோழியை ஒருவர் எடுத்துக் கொடுக்க, டிரம்மில் கோழியைப் போட்டு ஒரு Switch போட டிரம் சுற்ற ஆரம்பிக்கிறது.  டிரம்மின் அடிப்பகுதியில் இருக்கும் ஒரு ஓட்டை வழியே ரத்தம் கொட்ட ஆரம்பிக்கிறது. உயிருடன் போட்ட கோழி உள்ளே ஒரு உயிர்போராட்டம் நடத்துகிறது. டிரம்மில் இருக்கும் கத்திகள், கோழியின் இறக்கைகளையும் தோலையும் உரித்து எடுக்கிறது! Switch-ஐ நிறுத்தி உரித்த கோழியை எடுக்கிறார் கடைக்காரர்...

தேனடை - தேனீக்களுடன்.....

எங்குமே சுத்தம் என்பது இல்லை. ரத்தமும், தோல்களும், இறக்கைகளும் கிடக்க, ஒரு வித ரத்த வாடை அடித்த படியே இருக்கிறது. எங்கெங்கும் இறைச்சியும், ரத்தமும்!

வேறு வகை புழுக்கள் - இவையும் உயிருடன்.....

என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவம் சாப்பிடுபவர்கள் தான் என்றாலும், கடைகளைப் பார்த்த பிறகு அவர்கள் நான்கு பேருமே கொஞ்சம் தடுமாறித்தான் போனார்கள் என்று சொல்ல வேண்டும்.  “இரும்பு அடிக்கற இடத்துல ஈக்கு என்ன வேலை?என்று என்னிடம் நீங்கள் கேட்கலாம்.....  பயணத்தின் போது இப்படி அமைந்து விடுவது தவிர்க்க முடியாத ஒன்று! நான் சாப்பிடுவது இல்லை என்றாலும் அடுத்தவர்கள் சாப்பிடுவதை தவறாகச் சொல்வதில்லை. பிடித்தவர்கள் சாப்பிடுகிறார்கள், சாப்பிடட்டும் என்று நினைப்பவன் நான்.

உணவாகப் போகும் வெள்ளெலிகள்......

கைகளில் கேமராவுடன் நாங்கள் அனைவரும் செல்ல, முன்னே நாகாலாந்து ஓட்டுனர் இருக்க, எங்களைப் பார்த்த கடைக்காரர்கள், வந்திருந்த மக்கள் அனைவரும் வித்தியாசமாகப் பார்த்துக் கொண்டிருந்தார்கள். சில கடைக்காரர்கள் ஓட்டுனரிடம் நாகா மொழியில் எங்களைப் பற்றிக் கேட்கவும் செய்தார்கள். அவர் என்ன சொன்னார் என்பது புரியவில்லை – சுற்றுலாப் பயணிகள் என்பதைத் தவிர – கூடவே அரசுத் துறை என்றும் சொன்னது புரிந்தது. நாங்கள் கடைகளையும், அங்கே விற்பனை செய்யப்படும் பொருட்களையும் புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.

பைக்குள் தவளைகள்/தேரைகள்.....

வித்தியாசமான அனுபவம் அது. நாகாலாந்தில் பெரும்பாலானவர்கள் இறைச்சி சாப்பிடும் வழக்கம் கொண்டவர்கள் – எதையும் விட்டுவைப்பதில்லை. அவர்களுக்கு பிடித்திருக்கிறது சாப்பிட்டுப் போகிறார்கள் என்று நினைத்தபடியே தில்லி நண்பர் அவர்களைப் பற்றி சொன்ன கதையை நினைத்துக் கொண்டேன்.  அது என்ன கதை?.....

ஓடுகளோடு.....  

தில்லியில் முனீர்கா பகுதியில் வடகிழக்கு மாநிலங்களில் இருந்து வந்தவர்கள் நிறைய பேர் இருக்கிறார்கள் – நாகாலாந்து மக்களும் உண்டு. அவர்கள் வந்த பிறகு இரவு நேரங்களில் தெரு நாய்களை பிடித்து சமைத்து விடுவார்கள் என்றும், அவர்களிடம் இருந்து வரும் வியர்வை காரணமாக நாய்கள் அவர்களைப் பார்த்தாலே ஓடி விடும் என்றும் சொல்வார்கள்.  சில அரசுக் குடியிருப்புகளில் நாகாலாந்து மக்கள் வந்த பின்னர் தெரு நாய் தொந்தரவு இல்லை என்றும் பேசிக் கொள்வார்கள். இது உண்மையோ இல்லை கட்டுக் கதையோ தெரியாது....  நாகாலாந்தில் வசிக்கும் பலர் நாய்க்கறி சாப்பிடுவார்கள் என்பது உண்மை!

பன்றி இறைச்சிக்குப் பக்கத்தில் உட்கார்ந்திருந்த முதியவர்......

எது எப்படியோ, இங்கே சென்று வந்ததில் எனக்குப் பெரிதாய் பாதிப்பு எதுவும் இல்லை என்றாலும், என்னுடன் வந்த அசைவ உணவு சாப்பிடும் நண்பர்கள் இரண்டு நாட்களுக்கு அசைவ உணவு சாப்பிடவில்லை.....

மார்க்கெட் சென்ற பிறகு, எங்கே சென்றோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.....

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

ஞாயிறு, 26 ஜூன், 2016

ஓவியம் – கண் பார்ப்பதை கை வரையும்....நம் கண்களுக்கு மட்டும் பார்த்தவுடன் ஒருவரது திறமைகளைக் கண்டுபிடிக்கும் திறன் இருந்தால்..... எவ்வளவு நன்றாக இருக்கும்? யாரையும் பார்வையால் எடை போட்டு விட முடிவதில்லை.  இந்த வாரம் ஃப்ரூட் சாலட் பதிவில் ஒரு காணொளியைப் பகிர்ந்து கொண்டிருந்தேன். காவி உடை அணிந்து கைகளில் குரங்கை வைத்திருக்கும் ஒரு முதியவர் சாலையில் சாக்பீஸ் கொண்டு விறுவிறுவென அத்தனை லாவகமாக அனுமனின் படத்தை வரைந்தார்.  அவரே இன்னுமொரு காணொளியில் முருகனின் படமும் வரைவதையும் பார்த்தேன்.  அவரைப் பார்த்தால், அவருள் இப்படி ஒரு திறமை ஒளிந்திருப்பதைத் தெரிந்து கொள்ள முடியுமா?

இப்படி திறமைகள் பலரிடமும் ஒளிந்திருக்கிறது. பார்க்கும் அனைத்தையும் ஓவியமாக வரைபவர்கள், எவரிடமும் பயிற்சி எடுத்துக் கொள்ளாமலேயே கேள்வி ஞானத்திலேயே இனிய குரலில் சிறப்பாக பாடுபவர்கள் என எத்தனை எத்தனை உதாரணங்கள்.  இன்று நாம் பார்க்கப் போகும் புகைப்படங்களும் அப்படி திறமை மிகுந்த ஒரு சிறுவன் வரைந்த ஓவியங்களே.....

நண்பரின் வீட்டுக்கு வரும், பள்ளியில் படிக்கும் மாணவன் அமித்.  தந்தை தோட்ட வேலை செய்பவர். இவனும் மாலை நேரங்களில் நண்பர் வீட்டிலும் இன்னும் சிலர் வீட்டிலும் தோட்ட வேலை செய்கிறான். புதிது புதிதாய் செடிகள் வைப்பது, செடிகளை பராமரிப்பது, தண்ணீர் பாய்ச்சுவது என பல வேலைகள்.  காலை நேரத்தில் எங்கள் பகுதியில் இருக்கும் வீடுகளுக்கு செய்தித்தாள் விநியோகிப்பது என பல வேலைகள் செய்து வருமானம் ஈட்டி தனது தந்தைக்கும், குடும்பத்திற்கும் உதவுவதோடு படிக்கவும் செய்கிறான்.  உழைப்பாளி.....

ஓய்வு நேரங்களில் நண்பர் வீட்டில் இருக்கும் திருப்பதி தேவஸ்தான கேலண்டரில் பார்க்கும் படங்களை அப்படியே பென்சில் ஓவியமாக தீட்டுவதும் இவனது பொழுது போக்கு. அமித்தின் பெரிய சகோதரன் ஓவியக் கல்லூரியில் படித்துக் கொண்டிருக்கிறான். அவனது ஓவியங்களும் வெகு அழகு. அவற்றை பிரிதொரு சமயத்தில் பகிர்ந்து கொள்கிறேன். இன்றைக்கு இளையவனின் ஓவியங்கள் – புகைப்படங்களாக!


என்ன நண்பர்களே, ஓவியங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. சனி, 25 ஜூன், 2016

சாப்பிட வாங்க: Caribbean Egg Wrap


 Caribbean Wrap
படம்: இணையத்திலிருந்து.....

பெரும்பாலான குடும்பங்களில் கணவன், மனைவி என இருவருமே வேலைக்குப் போகும் இந்த நாட்களில் வீட்டில் சமைப்பதை கடினமான ஒரு விஷயமாக நினைக்கிறார்கள். பெரும்பாலான நாட்களில் ஏதோ ஹோட்டலுக்குச் சென்று சாப்பிடுகிறார்கள். இல்லையெனில் இணையம் மூலமாகவோ, அலைபேசிகளில் இருக்கும் App மூலமாகவோ அவர்களுக்குத் தேவையான உணவினை வீட்டுக்கு வரவழைத்துச் சாப்பிடுவது நிறைய பேருக்கு வழக்கமாக இருக்கிறது. இப்படி நிறைய பேர் இருக்கிறார்கள். 

சரி அவர்கள் இணையம் மூலமே சாப்பிட்டு நிம்மதியாக இருக்கட்டும். யாரும் குறை சொல்லப் போவதில்லை. வீட்டில் ஒழுங்காகச் சமைத்து சாப்பிடும் என் போன்றவர்களையும் தெரியாமலேயே வெளியே சாப்பிடத் தூண்டுகிறார்கள்....  எப்படி என்று கேட்பவர்களுக்கு ஒரு சிறிய விளக்கம்.

www.swiggy.com என்று ஒரு இணைய தளம். பெங்களூருவிலிருந்து செயல்படுகிறது.  இளைஞர்களால், இளைஞர்களுக்காகவே நடத்தப்படும் இணையதளம். பல உணவகங்களுடன் தொடர்பு வைத்துக் கொண்டு, இவர்கள் தளம் மூலம், தங்களுக்குத் தேவையான உணவினை, தாங்கள் இருக்கும் இடத்திற்கு பக்கத்தில் இருக்கும் உணவகத்திலிருந்து எவரும் ஆர்டர் செய்ய முடியும். இவர்களது ஊழியர்கள் அந்த உணவினை உங்கள் வீடு தேடி வந்து கொடுத்து விடுவார்கள்.  உணவுக்கான கட்டணத்தினை நீங்கள் ஆர்டர் கொடுக்கும் போதே, Debit/Credit Card மூலம், swiggy தளத்திலேயே கட்டி விடலாம்.

இருந்த இடத்திலேயே உங்களுக்குப் பிடித்த உணவினை, உங்களுக்குப் பிடித்த உங்கள் ஊர் உணவகத்திலிருந்து வாங்கிக் கொள்ள வசதி தருகிறது இந்த இணைய தளம்.  நல்ல விஷயம். யாருக்குத் தேவையோ பயன்படுத்தட்டும்.  தவறில்லை..... 

ஆனால் என்னைப் படுத்தும் விஷயத்துக்கு வருகிறேன்.....  தினமும் பகலிலோ, இரவிலோ எனது மின்னஞ்சலுக்கு இவர்கள் தளத்திலிருந்து செய்தி வருகிறது. “வெங்கட், Swiggy தளத்தை பயன்படுத்தியதற்கு நன்றி. நீங்கள் கேட்டபடியே உங்களுக்கான உணவு இதோ வந்து கொண்டிருக்கிறது எனும் செய்தி. எப்போது வரும் என்பதை தெரிந்து கொள்ள கீழே Track your order பட்டனும் இருக்கிறது! நான் கேட்ட உணவு என்ன என்பதையும் கீழே தருகிறார்கள்.  அப்படி வந்த மின்னஞ்சல்களின் புகைப்படங்கள் கீழே.


வாரத்திற்கு மூன்று நான்கு நாட்கள் இப்படி மின்னஞ்சல் வருகிறது.  ஹைதையின் கொத்தகூடா, கொண்டாபூரில் வசிக்கும் ஏதோ ஒரு வெங்கட் இந்த உணவினை வாங்க, தில்லியில் இருக்கும் இந்த வெங்கட்-டுக்கு மின்னஞ்சல் வருகிறது! அவரது மின்னஞ்சல் முகவரியும் எனது மின்னஞ்சல் முகவரியும் ஒரே மாதிரியாக, ஒரு எழுத்து மட்டும் மாற்றத்தோடு இருக்கும் என்பது எனது உணர்வு.  தனது பயனர் கணக்கை Swiggy தளத்தில் உருவாக்கும்போது அவர் தவறாக மின்னஞ்சல் முகவரியை தட்டச்சு செய்திருக்க வேண்டும் அல்லது Swiggy தளத்தில் ஏதாவது தவறு நடந்திருக்க வேண்டும்.

எது எப்படியோ, தினம் தினம் இப்படி மின்னஞ்சல் மட்டும் வந்து, அதில் குறிப்பிடப் பட்டிருக்கும் உணவு வராமல் இருந்தால் என்ன செய்வது. “எப்ப வருமோ....என்று காத்திருக்காமல் சமையல் செய்து சாப்பிட வேண்டியிருக்கிறது! அதற்காகவே சமையல் செய்து முடித்த பிறகு தான் கணினியை திறப்பது என்று வைத்துக் கொண்டிருக்கிறேன் – குறிப்பாக மாலை வேளைகளில்!

சரி Swiggy-யிலிருந்து வரும் மின்னஞ்சலுக்கு ஒரு பதில் அனுப்பலாம் என்றால் அது no reply மின்னஞ்சல்! அதற்கு அனுப்பியும் ஒரு பயனும் இல்லை! தானியங்கி மின்னஞ்சல்! அதற்கு பதில் போகாது. போனாலும் அதை யாரும் பார்க்கப் போவதில்லை.... உணவினை ஆர்டர் செய்யும் ஹைதை வெங்கட் முகவரி மட்டுமே இருக்கிறது. அலைபேசி எண் இல்லை! மின்னஞ்சல் முகவரி என்னுடையது! எப்படி அவருக்கு சொல்வது....  இதற்காகவே ஒரு முறை ஹைதை செல்ல வேண்டும் போலிருக்கிறது!

சரி அந்த வெங்கட் தனக்குச் சொன்ன Caribbean Egg Wrap எப்படி இருக்கும் என்பதே தெரியாத இந்த வெங்கட், இணையத்தில் தேட கிடைத்த படம் தான் பதிவின் ஆரம்பத்தில் இருக்கு! அதைப் பார்த்து சாப்பிட்ட மாதிரி நினைச்சுக்கோங்க!  - யான் பெற்ற இன்பம் பெறுக இவ்வையகம்! :)

நமக்குன்னு எப்படியெல்லாம் வந்து மாட்டுது பாருங்க!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 24 ஜூன், 2016

ஃப்ரூட் சாலட் – 167 – மனிதம் – தன்னம்பிக்கை – பலி!


மனிதம் மகத்தானது:

ஜூன் 16, 2016: இன்று காலை கடலூரிலிருந்து சிதம்பரம் செல்ல பி.முட்லூர் இறங்கி எனது பைக்கில் சிதம்பரம் அரசு கலைக்கல்லூரியை நெருங்கும்போது ஒரு விபத்தில் அடிபட்டு ஒரு இளைஞன் துடித்துக்கொண்டிருந்தான். உடனடியாக ஆம்புலன்சுக்கும் கவல்துறைக்கும் போன் செய்துவிட்டு காத்திருந்தோம். அந்த நேரம் சொல்லிவைத்தார்போல ஒரு தனியார் அம்புலன்ஸ் அப்பக்கம் வந்தது.

அந்த ஆம்புலன்ஸில் மருத்துவ உதவியாளர்கள் இல்லாமல் ஓட்டுனர் மட்டுமே இருந்தர். உடன் சொந்தங்கள் யாராவது வரவேண்டும் இவ்வுளவு பணம் வேண்டும் என பேரம் பேச துவங்கினார்.

அதே நேரம் அண்ணாமலைப் பல்கலைக்கழக ஆம்புலன்ஸ் ஒன்று வந்தது. அந்த வண்டியை கைகாட்டி நிறுத்தியபோது அதில் வந்த ஓட்டுனர் அங்கே நின்ற தனியார் ஆம்புலன்ஸ் வண்டியை பார்த்துவிட்டு அந்த வண்டியில எடுத்து வாருங்கள் என சொல்லிவிட்டு நிறுத்தாமல் சென்றுவிட்டார்.

திரும்பி வருவதற்குள் அங்கு உதவி செய்ய நின்றவர்களிடம் பேரம் பேசிவிட்டு தனியார் ஆம்புலன்சும் சென்றுவிட்டது. நாங்கள் போன் செய்த வண்டியும் வரவில்லை. அடிபட்ட இளைஞனுக்கு ரத்தம் கொட்டிக்கொண்டே இருந்தது.

அப்போது சி.முட்லூர் கிராமத்தை சார்ந்த விஜி எனும் வாலிபன் தனது நண்பர்களுடன் வந்தான். உடலெல்லாம் இரத்தம் ஒழுக வலியால் துடித்துக்கொண்டிருந்த அந்த இளைஞனை அள்ளி எடுத்தனர், ஒரு பைக்கின் நடுவில் அவனை அமரவைத்து அணைத்து பிடித்துக்கொண்டு சிதம்பரம் அண்ணாமலை நகர் மருத்துவமணை நோக்கி சென்றனர்.

அந்த இளைஞனை இடித்த காரில் இருந்தவர்கள் யாரும் ஓட வாய்ப்பிருந்தும் ஓடவில்லை. அவனை எப்படியும் காப்பாற்ற துடித்தனர். எங்களோடு மருத்துவமணைக்கு வந்தனர்.

நாங்கள் 6 கிலோ மீட்டர் கடந்து மருத்துவமணையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்த்து முதலுதவி ஏற்பாடு செய்து அங்கு முடியாது பாண்டி ஜிப்மர் கொண்டு செல்லுங்கள் என கூறியதால் அதற்கும் ஆம்புலன்ஸ் ஏற்பாடு செய்தோம்.

முகம் தெரியாத ஒருவனை காப்பாற்ற உதவிய, தங்களது உடைகளில் தோய்த இரத்த வாடையோடு விஜியும் அவனது நண்பர்களும் "அண்ணா நாங்க கிளம்பரறோம்" என இரத்தம் உலர்ந்த கையை நீட்டினார்கள்.

அடிபட்ட இளைஞனை சுமந்த ஆம்புலன்ஸ் சைரன் ஒலியோடு புதுச்சேரியை நோக்கி செல்ல துவங்கியது. .

ஏனோ கண்ணீர் சுரந்து விஜியும் அவரது நண்பர்களும் மங்களாக தெரிந்தனர்.

அவர்களது கரங்களை இறுக பற்றிக்கொண்டேன். "தம்பி நீங்கள் நம்பிக்கை. நல்லா இருப்பீங்க . . பார்த்து பத்திரமா போய் வாருங்கள்" என அனுப்பிவைத்தேன்.

இளைஞர்கள் எப்போதும் இளைஞர்கள்தான்.

-          ஃபேஸ்புக்கிலிருந்து.  எழுதியவர் திரு ரமேஷ் பாபு...  பகிர்ந்து கொண்ட நண்பர் ரமேஷ் ராமலிங்கம் அவர்களுக்கு நன்றி.

மனிதனும் இயந்திரமும்:

500 ரூபாயை எண்ணினாலும்
, 50000 ரூபாயை எண்ணினாலும் ஒரே மாதிரி சத்தத்தோடு நடந்து கொள்ளும் ஏடி எம் மெஷின்..... ஏன்னா அது மெஷின், மனிதன் இல்லை.

தன்னம்பிக்கை....:

உதவிக்கு யாருமே இல்லை என வருந்தாதே.... உனக்கு துணையாக நான் இருக்கிறேன், தைரியமாக போராடு.... – இப்படிக்கு தன்னம்பிக்கை!
 
சாலைக் காட்சிகள்:

சென்ற ஞாயிறன்று நண்பருடன் பல்சர் பைக்கில் சென்று கொண்டிருந்தேன்.  வழியே சிக்னலில் நிற்க வேண்டியிருந்தது. எங்களுக்கு முன்னர் ஒரு கார் நின்று கொண்டிருந்தது. பச்சை விளக்கு எரிந்த பிறகும் கார் நகரவில்லை.  பின்னாலிருந்த அனைத்து வாகனங்களும் விதம் விதமாக ஒலிப்பான்களை அழுத்த காதில் ரணம்.  முன்னால் நின்றிருந்த வாகனம் நகருவதாய் இல்லை....  என்ன பிரச்சனை என கொஞ்சம் கூர்ந்து கவனிக்க, வாகனத்தில் இருவர் – ஒரு இளைஞர், பக்கத்தில் ஒரு இளைஞி....

அந்தப் பெண் பீர் பாட்டிலிலிருந்து பீர் குடித்துக் கொண்டிருக்க, வண்டியைக் கிளப்பினால் பீர் சிந்தி விடுமாம்! அதனால் குடித்து முடித்த பிறகு வண்டியை எடுப்பாராம்....  பாட்டில் கீழே வைத்த பிறகு தான் வண்டி புறப்பட்டது! நல்ல முன்னேற்றம் தான் போங்க!
   
ஒளிந்திருக்கும் திறமை:

திறமை எங்கேயும் இருக்கலாம்....  இவரது திறமையைப் பாருங்கள்.... ஓவியம் வரைவதில் என்ன ஒரு லாவகம்!


படித்ததில் பிடித்தது:ஒரு பானை செய்பவரை சந்திக்க குரு சென்றார். பானைகளை செய்து கொண்டிருந்தார் குயவர். பக்கத்தில் ஒரு காட்டுஆட்டை கட்டி போட்டிருந்தார். குரு எதற்கு அந்த ஆட்டை கட்டி போட்டிருக்கிறாய் என்று கேட்டார்.

அதற்கு குயவன் இது காட்டு ஆடு, இதை கடவுளுக்கு பலி குடுக்க போகிறேன் என்றான். உடனே குரு அவன் செய்த பானைகளில் இருந்து இரண்டை அவன் முன் போட்டு உடைத்தார். இதை பார்த்த குயவனுக்கு கோவம் வந்துவிட்டது.

எதற்கு பித்துபிடித்ததை போல உடைக்கிறீர் என்று கேட்டான்.அதற்கு குரு உனக்கு பிடிக்குமே என்றுதான் என்று சொன்னார். நான் உருவாகியதை உடைத்தால் எனக்கு எப்படி பிடிக்கும் என்று கேட்டான். அதற்கு குரு ஆண்டவன் கஷ்ட பட்டு படைத்த உயிரை அவன் முன்னால் கொல்கிறாயே அது மட்டும் எப்படி ஆண்டவனுக்கு பிடிக்கும் என்று கேட்டார்.

அவன் ஆட்டை கயிற்றை அவிழ்த்து விட்டுவிட்டான். ஆண்டவன் படைத்ததை அவனுக்கே குடுக்க வேண்டும் என்று நினைத்தால் நல்ல எண்ணங்களை கொடுங்கள்.அன்பை கொடுங்கள். இல்லாதவர்க்கு உதவி செய்யுங்கள். ஆண்டவன் மகிழ்ச்சி அடைவான்.

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.....