எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Friday, June 10, 2016

மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்.....

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 16

மணிப்பூரில் இரண்டாம் உலகப் போரில் உயிர் நீத்தோர்களின் கல்லறைகளைப் பார்த்த பிறகு அங்கிருந்து எங்கள் தங்குமிடமான Hotel Bheigo வந்து சேர்ந்தோம். இரவு 7 மணிக்குள் எங்கள் அடுத்த இலக்கு நோக்கி பயணித்து அங்கே சேர்ந்து விட வேண்டும் என்பது திட்டம். அதற்கு மேல் அங்கே சென்று சேர்வது அவ்வளவு பாதுகாப்பானது அல்ல என்பதை எங்களுக்கு முன்னரே சொல்லி இருந்தார்கள்.  அதற்காக அறையைக் காலி செய்து கொண்டு புறப்பட்டோம்.  மற்ற மாநிலங்கள் போல வடகிழக்கு மாநிலங்கள் பலவற்றில் பேருந்துப் போக்குவரத்து மிகவும் குறைவு.

ஆள் பிடிக்கக் காத்திருக்கும் நண்பர்கள்....

தனியார் வாகனங்கள் வாடகைக்கு எடுத்துப் போக முடியாதவர்களுக்காகவே 10-12 பேர் அமரக் கூடிய Winger, Safari, Xylo போன்ற வண்டிகளை இயக்குகிறார்கள்.  அனைத்து இருக்கைகளுக்கும் ஆள் வந்தால் வண்டி புறப்படும் – புறப்படும் நேரம் எனத் தனியாக ஒன்றும் இல்லை! நாங்களே ஐந்து பேர் – மீதி ஏழு பேர் வந்தவுடன் வண்டியை எடுப்பதாகச் சொன்னார் அங்கே இருந்த வண்டியின் உரிமையாளர்.  கிட்டத்தட்ட ஒரு மணி நேரத்திற்கு மேல் அங்கே காத்திருக்க வேண்டியிருந்தது. பொறுமையைச் சோதிக்கும் படியாக இருந்தது அவர்கள் நடவடிக்கை – கிழக்கும் மேற்கும் போய்க் கொண்டிருக்க, சீட்டு விளையாடிக் கொண்டிருக்க, நாங்களோ, போகும் வரும் அனைவரையும், இந்த வண்டில வாங்க!என்று கூவும் நிலை!

சீட்டு விளையாடிக் கொண்டிருக்கும் வண்டி உரிமையாளர்கள்....

ஒரு ராஜஸ்தான் மாநிலத்தவரும் அவர் மனைவியும் வந்து வண்டியில் அமர்ந்தார்கள் – இன்னும் ஐந்து சீட் என நாங்கள் மனதில் நினைத்தோம். ராஜஸ்தான் மாநிலத்தவர் அங்கேயே கடை வைத்திருக்கிறாராம் – நன்றாகவே மணிப்பூர் மொழியில் பேசினார் வண்டிக்காரரிடம்! ஒரு இளைஞர் முதுகில் சுமையோடு வர அவரையும் அமுக்கிப் பிடித்து வண்டியில் ஏற்றினோம். இன்னும் நாலு பேர் வேண்டும். ஒருவர் ஒருவராய் இன்னும் இரண்டு பேர் வந்து சேர்ந்தார்கள்.  இரண்டு பேர் தானே குறைவாக இருக்கிறது, வண்டியை எடுக்கலாமே என நாங்கள் சொல்ல, முடியாது, நீங்க வேணும்னா வேற வண்டி பார்த்துக்கோங்க என திமிராக பதில் வருகிறது!

காத்திருக்கும் போது பார்த்த கரும்புச் சாறு விற்கும் பீஹார் மாநிலத்தவர்......

அப்போது காதில் தேனாய் ஒரு குரல்.....  அதுவும் தமிழ்க் குரல்.... பார்த்தால் மூன்று தமிழர்கள் வண்டியின் அருகே வந்து பேசிக் கொண்டதைக் கேட்டோம். அவர்களில் இருவருக்கு நாங்கள் செல்லுமிடமே செல்ல வேண்டும்!  தமிழர்கள் என்றவுடன், அவர்களிடம் பேச்சுக் கொடுத்தேன். அப்போது தான் அவர் மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம் இருப்பதைப் பற்றிச் சொன்னார்....... 

மணிப்பூர் மாநிலத்தின் எல்லை – தற்போதைய மியான்மார் [பர்மா] எல்லையில் உள்ள ஒரு கிராமம்  - மோரே..... தமிழர்கள் பர்மாவிற்குச் சென்று வியாபாரம் செய்தது உங்களுக்குத் தெரிந்த விஷயம். 1960-களில் பர்மாவின் அரசு அதிகாரங்களை Junta ராணுவம் கைப்பற்ற, பர்மியர்கள் அல்லாத மற்றவர்கள் அந்த நாட்டிலிருந்து தங்கள் உடைமைகளையும் சொத்துகளையும் விட்டு நாடு திரும்ப வேண்டிய நிலை.  பல கஷ்டங்களை அனுபவித்து நாடு திரும்பினார்கள் – இது பற்றிய புத்தகம் பர்மாவிலிருந்து நடையாய் நடந்துபற்றி முன்னரே எனது பக்கத்தில் எழுதி இருக்கிறேன்.

இரண்டு மூன்று தலைமுறைகளுக்குப் பிறகு தமிழகம் வந்த அவர்களில் சில குடுமத்தினரால் தமிழகத்தில் இருக்க முடியவில்லை. மீண்டும் பர்மாவிற்குச் சென்று தாங்கள் விட்டு வந்த சொத்துக்களையும் வீடுகளையும் மீட்கலாம் என தமிழகத்திலிருந்து புறப்படுகிறார்கள்.  நிலவழியாக மட்டுமே செல்ல வேண்டும் என்ற நிலையில் தமிழகத்திலிருந்து பல கிலோமீட்டர் தொலைவு பயணித்து மணிப்பூரின் எல்லைப் பகுதிக்கு வருகிறார்கள். பர்மிய எல்லையைக் கடக்க முயல, பர்மிய Junta ராணுவம் அவர்களுக்கு அனுமதி வழங்க மறுக்கிறது. பர்மாவுக்கும் செல்ல முடியவில்லை, தமிழகத்திற்கும் மீண்டும் செல்ல விருப்பமில்லை என்ற நிலையில் மணிப்பூர்-பர்மா எல்லையில் இருந்த மோரே கிராமத்திலேயே தங்க முடிவு செய்கிறார்கள்.

வனப் பகுதியாக இருந்த மோரே கிராமத்தில் இருப்பிடங்களை அமைத்து வசிக்க ஆரம்பித்திருக்கிறார்கள்.  சில வருடங்களில் பர்மா திரும்பச் செல்லும் முயற்சியில் இங்கே வந்த தமிழர்களின் குடும்பங்கள் எண்ணிக்கை 1600-ஐத் தொட்டது! எல்லா நாட்டு எல்லைகள் போல இங்கேயும் வர்த்தக பரிமாற்றங்கள் –  அரசுக்குத் தெரிந்தும் தெரியாமலும் நடக்கும் வர்த்தகப் பரிமாற்றங்கள் தொடங்கின. மோரே கிராமத்தில் தமிழர்கள் அதிக அளவில் இருக்க, உள்ளூர் Kuki – Meitei மக்களுக்கும் தமிழர்களுக்கும் அவ்வப்போது சண்டைகள் வந்தாலும், அனைவரும் அங்கே வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்.

மோரே கிராமத்தில் பொங்கல் திருவிழா....
படம்: இணையத்திலிருந்து.....

சின்னச் சின்ன கடைகள், வியாபார நிறுவனங்கள் ஆகியவற்றை தமிழர்கள் அங்கே நடத்துகிறார்கள். தமிழ் பள்ளிகள், தமிழ் சங்கம், வழிபாட்டுத் தலங்கள், தள்ளு வண்டிகளில் இட்லிக் கடைகள் என அனைத்தும் இங்கே உண்டு!  தமிழர்களின் அனைத்து பண்டிகைகளையும் இங்கே கொண்டாடுகிறார்கள்.  பொங்கல் திருவிழா மிகவும் சிறப்பாக இங்கே கொண்டாடுவார்களாம்.....  இப்படி பல தகவல்களைச் சொல்லி, அவரது உறவினர்கள் இருவரையும் [இருவருக்கும் ஹிந்தி தெரியாதாம்!] பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுங்கள் எனச் சொன்னார்.

பன்னிரெண்டு பயணிகளுடன் டாடா விங்கர் புறப்பட்டது! வண்டியில் பயணித்து நாங்கள் சென்ற இடம், வழியில் கிடைத்த அனுபவங்கள் ஆகியவற்றை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

32 comments:

 1. படிக்கவே வியப்பாக இருக்கிறது ... தொடர்கிறேன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீமலையப்பன் ஸ்ரீராம்.

   Delete
 2. ஒரு சாண்வயிற்றுக்காக எங்கேயெல்லாம் சென்று வாழ வேண்டியிருக்கிறது !

  ReplyDelete
  Replies
  1. குடும்பத்தின் அனைத்து வயிறுகளுக்கும் சேர்த்து!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான்ஜி!

   Delete
 3. நல்ல சுவாரசியமா இருக்குங்க..! :)

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மஹி.

   Delete
 4. Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சிவபார்கவி.....

   Delete
 5. அங்கேயும் தமிழர்கள். பர்மாவிலிருந்து நடையாய் நடந்து புத்தகம் நானும் படித்திருக்கிறேன். நம்மூர் ஷேர் ஆட்டோக்கள் தேவலாம் போல!

  ReplyDelete
  Replies
  1. இவற்றுக்குள் பயணம் செய்வது கொடுமை.... நீண்ட தூரம் கூட இதில் பயணிக்கிறார்கள்......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 6. மோரே கிராமம் மார்கபந்து போல உள்ளது. நீங்களும் விருந்தினர்களுக்கு வழித் துணையாக இருந்திருக்கிறீர்கள். எங்கும் தமிழன் வசிக்கத் தெரிந்து கொண்டு விட்டான்.அது விசேஷமல்லவா?அன்புடன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி காமாட்சிம்மா.....

   Delete

 7. மணிப்பூர் எல்லையில் ஒரு மினி தமிழகம்.....படிக்க படிக்க மிகவும் வியப்பாகவும் விறுவிறுப்பாகவும் இருந்தது. மிகவும் அருமையான பகிர்வு. சூப்பர்ம்மா. தொடரட்டும் நின் பணி. வாழ்த்துக்கள்.
  டில்லி விஜயராகவன்

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

   Delete
 8. வியப்பாகத்தான் இருக்கிறது ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 9. மணிப்பூர் எல்லையில் நம் தமிழ் மக்களா! போகிற போக்கில் தகவல் சேகரித்து எங்களுக்கு கொடுக்கிறீர்கள். மோரெவில் நம் மக்கள் ஜோரா இருந்தா சரிதான்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி.

   Delete
 10. தமிழ் கிராமத்தைப் பார்க்கச் செல்லவில்லையா? மேற்கிந்தியத்தீவு கிரிக்கெட் அணி வீர்ர்கள் சிலர் தமிழ் வம்சம். பேரைவைத்து யூகித்துக்கொள்வேன்.

  பகவான்ஜி -- ஒருசாண் வயிற்றுக்காக யாரும் வெளியூர் செல்வதில்லை. பல ஒரு சாண் வயிருகளுக்காகத்தான். ஆண்டிகளுக்கு (ஒரே ஒரு சாண் வயித்துக்கு) ஊரென்ன.. இடமென்ன.. என்னை நினைத்துக்கொண்டதால் உங்கள் கமெண்டுக்குப் பதில் எழுதினேன்

  ReplyDelete
  Replies
  1. எங்களுடைய பயணத் திட்டத்தில் மோரே இல்லை என்பதால் செல்லவில்லை. இங்கும் இன்னும் சில விடுபட்ட இடங்களுக்கும் ஒரு முறை செல்ல வேண்டும்.......

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நெல்லைத் தமிழன்.

   Delete
 11. சுவையாக இருக்கிறது பயண அனுபவம்! வித்தியாசமான அனுபவங்கள்! தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. ஆச்சர்யமான தகவல்கள் சுவாரசியமாக செல்கிறது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 13. தொடர்கிறேன் மினி தமிழகம் பற்றி அறிய

  ReplyDelete
  Replies
  1. மினி தமிழகம் பற்றிய தகவல்கள் மட்டுமே இங்கே தந்திருக்கிறேன்... நாங்கள் அங்கு பயணிக்கவில்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB ஐயா.

   Delete
 14. ‘மோரே’ பற்றி படித்திருக்கிறேன். அங்கு தங்களுக்கு ஏற்பட்ட அனுபவம் பற்றி அறிய காத்திருக்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. மோரே செல்ல வில்லை ஐயா. அவ்விடம் பற்றி அந்த தமிழர் சொன்னதைக் கேட்டு இங்கே பகிர்ந்திருக்கிறேன்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 15. புகைப்படக்கவிதைப் போட்டி தொடர்பாக சில பதிவுகள் அண்மையில் வெளிவந்ததால் ஏழு மாநில சகோதரிகள் பதிவின் தொடரை சிறிது இடைவெளிக்குப் பின் கண்டதில் மகிழ்ச்சி.

  ReplyDelete
  Replies
  1. வாரத்திற்கு இரண்டு பதிவுகள் ஏழு சகோதரிகள் பயணம் பற்றிய பதிவுகள் தான் ஐயா.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 16. மோரே! மணிப்பூர் எல்லையில் சிறிய தமிழகம்! அட வியப்பான அறிந்திராத தகவல். தொடர்கின்றோம் தங்கள் பயணம் பற்றி மேலும் அறிந்திட


  கீதா: சென்று பார்க்க வேண்டும் என்ற ஆசை வந்துவிட்டது...சூப்பரா இருக்கு வெங்கட்ஜி

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....