ஏழு சகோதரி மாநிலங்கள்
பயணம் – பகுதி 4
கங்க்லா - நுழைவாயில்....
படம்: இணையத்திலிருந்து...
தங்கும் அறையிலிருந்து
புறப்பட்ட நாங்கள் மணிப்பூரின் மிக முக்கியமான இடத்திற்குச் சென்றோம் – கங்க்லா என
அழைக்கப்படும் இந்த இடம் மணிப்பூர் பிராந்தியத்தின் பழமையான தலைநகரப் பகுதி. கங்க்லா எனும் ஹிந்தி வார்த்தைக்கு ஓட்டாண்டி/பிச்சைக்காரன்
எனும் அர்த்தம்! என்றாலும் கங்க்லா கோட்டையில் இருந்து அரசாண்டவர்கள் பல மணிப்பூர்
ராஜாக்கள். கோட்டை மட்டுமல்லாது, இவ்விடம்
மணிப்பூரின் பல பழங்குடி மக்களுக்கு புனிதமான இடமும் கூட. மணிப்பூர் பழங்குடி மக்களின்
பல வித புனித வழிபாடுகளை இவ்விடத்தில் தான் செய்தார்கள்.
ஹிஜகாங்க் என அழைக்கப்படும் படகுத்துறையில் படகுகள்
படம்: இணையத்திலிருந்து...
கங்க்லா – மணிப்பூரின்
புராதனமான தலைநகரம் – பல நூற்றாண்டுகள் கங்க்லாவை தலைநகராகக் கொண்டு பல ராஜாக்கள் மணிப்பூரை
ஆண்டு வந்தார்கள். Khaba, Pakhangba போன்ற பழங்குடி மக்கள் காலத்திலிருந்தே இம்ஃபால்
நதிக்கரையின் மேற்குக் கரையில் இருக்கும் கங்க்லா நகரினைத் தலைநகராகக் கொண்டு மிகப்
பெரிய பரப்பளவினை ஆண்டு வந்தார்கள். மணிப்பூரின்
பழங்குடிகளில் ஒரு இனமான Ningthoujaக்கள் இங்கிருந்து தான் தங்களது பெயரையும் புகழையும்
பரப்பினார்கள்.
பழங்குடி ராஜாக்களின் சின்னம்
ராஜா Khagemba [1597
– 1652 AD] காலத்தில் தான் கங்க்லா கோட்டை கட்டப்பட்டது என்று சில வரலாற்றுக் குறிப்புகளைப்
பார்க்க முடிந்தது. மணிப்பூருக்கு படையெடுத்து
வந்த சீனர்களை முறியடித்து அவர்களில் சிலரை சிறைப்படுத்தி அழைத்து வந்து அவர்களிடம்
இருந்து கட்டிடக் கலையைக் கற்று கங்க்லா கோட்டையைக் கட்டியதாகவும் சொல்கிறார்கள். அவருக்குப் பிறகு அவருடைய மகன் Khunjaoba [1632
– 1666 AD] கங்க்லா கோட்டையை மேலும் பலப்படுத்தியதாகவும் அழகுற அமைத்ததாகவும் வரலாறு. இவருடைய காலத்தில் மணிப்பூர்/கங்க்லாவின் பலமும்
புகழும் மிக உயர்ந்த நிலையில் இருந்ததாம்.
கங்க்லா கோட்டை - ஒரு வரைபடம்
எப்போதும் மணிப்பூர் உடன்
சண்டையிட்டுக் கொண்டிருந்த பர்மிய ராஜாக்களும் மணிப்பூர்/கங்க்லா உடன் சமாதான உடன்படிக்கைகள்
செய்து கொண்டு, அழகிய மணிப்பூர் ராஜகுமாரிகளை மணம் புரிந்து கொண்டார்களாம். ராஜா Khunjaoba வைத் தொடர்ந்து Garibaniwaz என்பவரும்
மற்ற ராஜாக்களும் தொடர்ந்து அரசாண்டு கங்க்லாவின் பெயரையும் புகழையும் நிலைநாட்டினார்கள்.
கோட்டைப் பகுதியில் இருக்கும் ஒரு வழிபாட்டுத் தலம்
மஹாராஜா
Bhagyachandra [1762 – 1798 AD] அவர்கள் ஆட்சி புரிந்தபோது பர்மியர்கள் மணிப்பூர் மீது
பல முறை படையெடுத்து கங்க்லா கோட்டைக்கு பலத்த சேதத்தை ஏற்படுத்தினார்கள். கங்க்லா கோட்டையை முறியடித்து பர்மிய ராஜாக்கள்
சுமார் ஏழாண்டு காலம் மணிப்பூரில் ஆட்சி புரிந்தார்கள். பர்மிய ராஜாக்கள் மணிப்பூரை ஆண்ட ஏழு ஆண்டுகளை
“Chahi Taret Khuntakpa” அதாவது “ஏழு வருட பேரழிவு” என்று அழைக்கிறார்கள்.
அதன் பிறகு மஹாராஜா கம்பீர்
சிங் என்பவர் பர்மியர்களைத் தோற்கடித்து மணிப்பூரை மீட்டாலும், தனது தலைநகரை
Lagthabal [தற்போதைய Canchipur] எனும் இடத்திற்கு மாற்றிக் கொண்டாராம். பல வருடங்கள் கழித்து ராஜா நாரா சிங் என்பவரின் ஆட்சிக் காலத்தில்
[1844 ஆம் வருடம்] தான் மீண்டும் கங்க்லா மணிப்பூர் பிராந்திய தலைநகராக திரும்பவும்
ஏற்கப்பட்டது.
ஆங்கிலேயர்களின் வருகையும் கங்க்லாவின் அழிவும்:
மஹாராஜா சந்த்ரகீர்த்தி
என்பவரின் ஆட்சியைத் தொடர்ந்து அவரது மூத்த மகன் சூர்சந்திரா என்பவர் ராஜா பதவியில்
அமர்ந்தார். ராஜா சந்த்ரகீர்த்திக்கும் இரண்டாம், மூன்றாம் ராணிகளுக்குப் பிறந்த மகன்களுக்கும்
அவ்வளவு ஒத்துப் போகவில்லை. அவர்களுக்குள் தொடர்ந்து சண்டை நடந்து கொண்டிருந்தது. இதைப் பயன்படுத்திக் கொண்ட சேனாபதி Tikendrajit
என்பவர் ராஜாவுக்கு எதிராக புரட்சி செய்து தனது தம்பி Yubaraj Kulachandra என்பவரை
ராஜாவாக முடிசூட்டி கங்க்லா கோட்டையில் அமர்த்தினார்.
காளான் அல்ல! இளைப்பாற ஒரு இடம்
இந்தப் புரட்சியை தங்களுக்கு
சாதகமாகப் பயன்படுத்த நினைத்த ஆங்கிலேயர்கள் சமாதானம் செய்து வைப்பதாக முன் வந்தார்கள்.
சமாதானம் செய்வதாகச் சொன்னாலும் கங்க்லா கோட்டை மீது போர் தொடுக்க, அவர்களுக்குள் போர்
மூண்டது. சமாதானத்திற்கென்று அனுப்பப்பட்ட ஆங்கிலேயே வீரர்களை, ராஜா சிறை பிடிக்க சொல்ல,
சேனாதிபதி அவர்களை சிரச்சேதம் செய்து விடுகிறார்.
அது ஆங்கிலேயர்களை இன்னும் அதிகமாய் கோபப்படுத்துகிறது. மணிப்பூரை சில்ச்சர்,
கொஹிமா மற்றும் டாமு [மியான்மார்] ஆகிய மூன்று பக்கங்களிலிருந்தும் தாக்குகிறார்கள்.
கங்க்லா கோட்டை பலத்த சேதமடைந்து வீழ்கிறது.
சேனாதிபதி, ராஜா, மற்றும் பலர் பொதுமக்களுக்கு முன்பாக தூக்கில் தொங்க விடப்படுகிறார்கள்…
சிற்றோடை
பல நூற்றாண்டுகளாக கோலோச்சிக்
கொண்டிருந்த கங்க்லா இன்றைக்கு அதன் அழிவின் சின்னங்களை மட்டுமே கொண்டிருக்கிறது. சுதந்திரத்திற்குப் பின்னரும் ராணுவத்தினர் கோட்டையைத் தங்கள் வசமே
வைத்திருந்தார்கள். வெகு சில இடங்கள் மட்டுமே பொதுமக்கள் பார்வைக்கு அனுமதி உண்டு.
மணிப்பூர் பழங்குடி மக்கள் இன்றைக்கும் அங்கே இருக்கும் சில புனிதமான இடங்களில் தங்களது
வழிபாடுகளைச் செய்கிறார்கள். 2004-ஆம் ஆண்டிற்குப் பிறகு அழிக்கப்பட்ட சில இடங்கள்
மட்டும் புனரமைக்கப்பட்டு இருக்கிறது.
கங்க்லா என்பது கோட்டையாக,
மணிப்பூரின் தலைநகராக சுமார் ஒரு சதுர மைல் பரப்பளவில் இருந்தது, இன்றைக்கு பல அழிவுகளுக்குப்
பிறகு சுமார் 237 ஏக்கர் மட்டுமே கங்க்லாவுக்குள் இருக்கிறது. Meitei பழங்குடியினரின் மொழியில் கங்க்லா எனும்
சொல்லுக்கு ”வறண்ட நிலம்” எனும் பொருளாம். அதைப் போலவே இன்றைக்கு கங்க்லாவின் பல பகுதிகள்
வறண்டு போய் கிடக்கிறது.
இன்றைய நாளில் அங்கே ஒரு
சிற்றோடை ஓடிக்கொண்டிருக்கிறது. நிறைய மரங்கள், பூக்கள், ஓரிரு வழிபாட்டுத் தலங்கள்
ஆகியவை மட்டுமே அங்கே இருக்கின்றன. பார்க்க அனுமதிக்கப்பட்ட இடங்களில் எடுத்த புகைப்படங்களை
இங்கே தந்திருக்கிறேன். சிற்றோடையின் அருகே
சில இளைஞர்களும் இளைஞிகளும் கல்லூரியைக் கட்டடித்து வந்திருந்தார்கள். அந்த இளைஞர்கள், தங்களுடன் வந்திருந்த பெண்களைக்
கவர பலத்த முயற்சி செய்து கொண்டிருந்தார்கள்!
கங்க்லா ஷா:
கங்க்லா ஷா
இரண்டு பிரம்மாண்டமான
ட்ராகனின் சிலைகள் தான் கங்க்லா ஷா. அவை கங்க்லா
கோட்டையை ஆண்ட Meitei பழங்குடி ராஜாக்களின் சின்னங்கள். பலமுறை இவை தாக்கப்பட்டு அழிக்கப்பட்டிருக்கின்றன.
ஆங்கிலேயர் படையெடுப்பின் போதும் கங்க்லா ஷா தரைமட்டமாக இடிக்கப்பட்டிருக்கிறது. இப்போது
அவற்றை புனரமைத்து இருக்கிறார்கள்.
பிரம்மாண்டமான கோட்டை
என்பது இல்லாமல் அழிக்கப்பட்டால் எவ்வளவு சோகம். எந்த ஒரு கட்டிடமாக இருந்தாலும், அவற்றை
நிர்மாணிக்க எத்தனை மனிதர்கள் உழைத்திருப்பார்கள், அவர்களின் உழைப்பு முழுவதும் இப்படி
அழிக்கப்படுவது எந்த விதத்திலும் நியாயமானது என்று சொல்வதிற்கில்லை – போரைக் காரணமாகக்
கொண்டு அழிப்பது நிச்சயம் சரியல்ல. எங்கே போர்
என்றாலும் பல கட்டிடங்களும், வழிபாட்டுத் தலங்களும் அழிக்கப்படுகின்றன. கங்க்லா கோட்டையும் இப்படி பாழடைந்து கிடக்கிறது……
அடுத்த பதிவில் மணிப்பூரில்
இருக்கும் வேறொரு இடத்திற்கு உங்களை அழைத்துச் செல்கிறேன். அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
இதுவரை அறிந்திராத பல அரிய வரலாற்றுத் தகவல்கள் வெங்கட்ஜி! அருமை. இறுதிப் பத்தியில் நீங்கள் சொல்லியிருப்பது அருமையான கருத்து. உண்மைதான். அருமையான அழகான ஒரு தொடர். உங்கள் வழி வடகிழக்கு மாநிலங்களைக் காண்கின்றோம். தொடர்கின்றோம்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!
நீக்குஅறிந்தேன்... நன்றி ஜி...
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன் ஜி!
நீக்குசுவையான தவல்கள் அழகிய படங்களுடன். தொடர்கிறேன்.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.
நீக்கு
பதிலளிநீக்குநிலம் வறண்டு போனால் விளைச்சல் இல்லாமல் விவசாயி ஓட்டாண்டி ஆகவேண்டியதுதான். அதனால் இந்தியிலும் Meitei பழங்குடியினரின் மொழியிலும் கங்க்லா என்று பேரிட்டிருக்கிறார்கள் போலும். அறியாத தகவல்களை பகிர்ந்தமைக்கு நன்றி!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.
நீக்குவணக்கம்
பதிலளிநீக்குஐயா
அறியாத புதிய தகவல் தங்களின் பதிவுவழி அறியத்தந்தமைக்கு நன்றி ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.
நீக்குஅறியாத செய்திகளை அறிந்தேன்
பதிலளிநீக்குநன்றி ஐயா
படங்கள் அருமை
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.
நீக்குபடங்களுடன் இதுவரை அறிந்திராத செய்திகளை அறியத் தந்தீர்கள் அண்ணா.
பதிலளிநீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.
நீக்கு