திங்கள், 25 ஜூலை, 2011

ரகசியம்... பரம ரகசியம்
பள்ளியில் படித்துக்கொண்டிருந்தபோது எனக்குப் பிடிக்காத ஒரு பாடம் என்றால் அது வரலாறு தான். அதன் கூடவே ஒட்டிப் பிறந்த இரட்டைக் குழந்தை போல சேர்ந்தே  இருக்கும் புவியியலைக் கண்டாலோ அதை விட அலர்ஜி.  பொதுவாகவே இந்தப் பாடத்தில் நான் அதிக மதிப்பெண்கள் எடுத்ததில்லை.  [”அப்படி என்ன மத்த பாடங்களிலெல்லாம் நூற்றுக்கு நூறா எடுத்து விட்டாய்”, என்ற என்னுடைய உள் மனதின் குரல் உங்களுக்குக் கேட்டால் அதற்கு நான் பொறுப்பல்ல].

ஆனாலும் அப்படி ஒரு விருப்பமில்லாத வரலாறு-புவியியல் பாடத்திலேயே ஒரு முறை [ஏழாவது முழு ஆண்டுதேர்வு என நியாபகம்] 87 மதிப்பெண் பெற்றேன்.  மற்ற எல்லாப்  பாட மார்க்குகளையும் விட இது தான் அதிகம் என்பதில் என் வீட்டில் உள்ள எல்லாருக்குமே "ஆஹா... பரவாயில்லையே நம்ம பையன் வரலாறில் மிகுந்த ஈடுபாடு வைத்திருக்கிறானே" என்று ஒரு பெரிய திருப்திபத்தாவது வரை வரலாறு-புவியியல் பாடத்தில் நான் எடுத்த அதிகமான மதிப்பெண் அது

அப்படி அன்று அதிகமாக மதிப்பெண் எடுத்ததன் ரகசியம் இன்று வரை யாருக்குமே தெரியாது.  இப்போது தான் சொல்லப் போகிறேன். அன்று பிட் அடித்துத் தான் அத்தனை மதிப்பெண் எடுத்தேன்.  அதுவும் சின்னச் சின்ன பிட் எல்லாம் கிடையாது, மொத்தமாய்வெற்றிஉரை அப்படியே பலகையின் கீழே வைத்து மெகா சைஸ் பிட்! தேர்வின் போது அந்த அறையில் இருந்த ஆசிரியரின் பட்டப் பெயர் மூக்கன் [இயற்பெயர் இப்போது நியாபகமில்லை, அவருக்கு மிக நீண்ட மூக்கு இருந்ததால், மூக்கன்] அவ்வளவு அழகாய் எங்களைக் கண்காணித்தனால் தான் நான் மாட்டிக்கொள்ளவில்லை.

கேள்விகளுக்கான விடைகளை விரைவாக எழுதிக் கொடுத்து விட்டு, நியாபகமாய் வெற்றி உரை நூலையும் எடுத்துக்கொண்டு விடுவிடுவென வீட்டை நோக்கி நடந்தேன்ஆனால் மனதுள் நான் செய்தது தப்பென்ற எண்ணம் மட்டும் என்னை அரித்துக் கொண்டே இருந்தது.  விடுமுறை முழுவதுமே என்னால் இயல்பாய் இருக்க முடியவில்லை.  யாருக்காவது தெரிந்து விடுமோ, என்ற பயம் நெஞ்சு முழுவதும்.

தேர்வு முடிந்து, விடுமுறையெல்லாம் கழிந்து அடுத்த வகுப்பில் சென்று வகுப்பாசிரியர் [எஸ்தர் டீச்சர்] ஒவ்வொரு மாணவரையும் பற்றிச் சொல்லிக்கொண்டு வரும்போது என்னைப் பார்த்து, “பாருங்க, நம்ம வெங்கட் தான் வகுப்பிலேயே வரலாறு பாடத்தில் முதல் மதிப்பெண்என்று சிரித்தபடி சொல்லி உற்சாகப்படுத்திய போது எனக்குள் அப்படி ஒரு உறுத்தல். வெளிப்படையாய் நான் பிட் அடித்ததை அப்போது சொல்லவும் பயம்

அன்று அப்படி பார்த்து எழுதாமல் இருந்திருந்தால் என்ன ஒரு பத்துஇருபது மதிப்பெண் குறைந்திருக்கலாமே தவிர தேர்வில் தோல்வியை தழுவியிருக்கமாட்டேன்.   முதல் மதிப்பெண் பெற்று விட்டாலும், என்னுள்  இருந்த குற்ற உணர்ச்சி, என்னை வாட்டியதுடன் நில்லாமல்  அதன் பிறகு மீண்டும் அது போன்ற தவறை செய்யாமல் இருக்க காரணமாய் இருந்ததும் அதுவே.  நான் முதலும் கடைசியுமாய் பிட் அடித்தது அந்த ஒரு முறை மட்டுமே

அவ்வப்போது வலைப்பூ உலகில்காப்பிஎன்பது அடிக்கடி பேசப்படும் விஷயம்.  இந்த காப்பி அதைப் பற்றியது அல்ல. பள்ளிக் காலத்தில் தேர்வில் அடித்த காப்பி (பிட் அடித்த)அனுபவம் பற்றியதுஇதைப் படிக்கும் உங்களுக்குள்ளும் ஏதேனும் ஒன்று  ரகசியமாய் இருக்குமானால், அதைப் பற்றி நீங்களும் (விரும்பினால்) பகிரலாமே

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்.