வெள்ளி, 30 செப்டம்பர், 2011

வலைப் பூவிற்கு வயது இரண்டு!
கடந்த 2009-ஆம் வருடம் செப்டம்பர் மாதம் இதே முப்பதாம் தேதியில் ஆரம்பித்தது எனது வலைப்பூ பயணம்இன்று இப்போது உங்கள் கண் முன்னே கணிணியின் திரையில் ஒளிரும் எனது இவ்வலைப்பூவிற்கு வயது இரண்டு.  எண்ணிப் பார்க்கவே வியப்பாகவும் மலைப்பாகவும் இருக்கிறது.

ஏற்கனவே பல முறை சொன்னது போல இந்தப் பயணத்திற்கும், வலையுலக நட்புகள் பெற்றதற்கும் நான் முதலில் நன்றி சொல்ல வேண்டியது எனக்கு வலைப்பூ உலகை அறிமுகம் செய்துவைத்து, என்னை எழுதத் தூண்டிய திரு ரேகாராகவன் அவர்களுக்குத்தான். மேலும் எனக்குள் உதித்த ஐயங்களைப் போக்கியும் மாற்றங்களை குறிப்பு காட்டி மேம்படுத்திய திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களுக்கும் இத் தருணத்தில் நன்றி கூற கடமைப்பட்டிருக்கிறேன்.

இந்த இரண்டு ஆண்டுகளில் நான் வலையுலகம் மூலம் பெற்ற எண்ணற்ற நண்பர்கள் அனைவருக்கும் எனது வணக்கங்களும், நன்றியும்.


இந்த இரண்டு வருடங்களில் இதுவரை 174 பதிவுகள் [இந்த பதிவு 174-ஆவது], 136 தொடரும் நண்பர்கள், வலைச்சரத்தில் பல அறிமுகங்கள் என வளர்ச்சி பெற்றுள்ளது இந்த வலைப்பூ

இன்னும் மேலும் மேலும் நான் எழுத நீங்கள் அனைவரும் ஆதரவு தருவீர்கள் என நம்புகிறேன்.

உங்களது வாழ்த்துகளும் தொடர்ந்த ஆதரவும் நிச்சயம் எனக்கு உண்டு என்ற நம்பிக்கையில்

உங்கள் நண்பன்

வெங்கட்
புது தில்லிவியாழன், 29 செப்டம்பர், 2011

ஓடு…
நம்மள திடீர்னுஓடு…”ன்னு சொன்னா எப்படி ஓடுவோம்?  எந்தப் பக்கம் ஓடணுமோ அந்தப் பக்கத்தை நோக்கியே ஓடுவோம்.  அதுவே எங்க ஓடணுமோ அந்த இடத்துக்கு எதிர்ப்பக்கம் பார்த்து அதாவது பின்பக்கமாகவே உங்கள ஓடச் சொன்னா உங்களால முடியுமா?

இந்தியாவில் இந்த மாதிரி பின்பக்கமாகவே ஓட ஒருத்தரால தான் முடியும்.  தில்லியில் வசிக்கும் திரு பூரன் சந்த் [Shri Puran Chand] இந்தியாவின் முதல் ரெட்ரோ ரன்னர். அதாவது பின்பக்கமாகவே ஓடுபவர்.

நேற்று இவர் பின்பக்கமாக ஓடிக்கொண்டு இருந்தபோது அவரிடம் பேச்சுக் கொடுத்தேன்.  எதற்காக இப்படி செய்கிறார், எங்கு பணி புரிகிறார் என்றெல்லாம் கேட்க நினைத்து ஆரம்பித்த எனக்கு அவர் அந்த வேலையே கொடுக்கவில்லை.  தானாகவே முன்வந்து அவர் சொன்ன சில விஷயங்கள் தான் நீங்கள் படிக்கப் போவது

இந்திய அரசின் உள்துறை அமைச்சகத்தில் தற்போது பணி புரியும் இவர் ஒரு முன்னாள் என்.சி.சி கேடட், மற்றும் ராணுவ வீரர்.  2005-இல் பின்பக்கமாகவே நடக்கவும் ஓடவும் ஆரம்பித்த இவரை ஆரம்பத்தில் பார்த்து ஏளனம் செய்தவர்கள் தான் அதிகம் என்கிறார்

 ஆறு வருட கடும் பயிற்சி… தினமும் பளீரென அடிக்கும் வெய்யிலோ, அல்லது மழையோ, குளிரோ எதையும் பொருட்படுத்தாது ஓடுவார். வேலை நாட்களில் உணவு இடைவேளையில் பின்பக்கமாய் நடக்கும் இவரை தில்லியின் ராஜபாட்டையில் கண்ணுக்கு கூலிங் கிளாஸ், காதில் மொபைல் மூலம் கேட்கும் பாட்டு என நீங்கள் இவரைப் பார்க்க முடியும்.  சனி-ஞாயிறுகளில் நேரு பூங்காவில் இவரை நீங்கள் காண முடியும்


இந்த ஆறு வருடங்களில் இவர் தில்லியில் மட்டுமல்லாது இந்தியாவின் பல மாநிலங்களில் இது போன்று ரெட்ரோ ரன்னிங் செய்து வருவதாகக் கூறினார்.   

வருடா வருடம் தில்லியில் நடக்கும் மாரத்தான் போட்டிகளில் பின்பக்கமாக ஓடியே இவர் மொத்த தூரத்தையும் கடந்திருக்கிறார்.  கின்னஸ் புத்தகங்களிலும் இவர் பெயர் இடம் பெற்றிருப்பதாகச் சொல்கிறார். இந்தியாவின் சுற்றுப்புறச் சூழல், மாசுக்கட்டுப்பாடு ஆகியவற்றை சரிப்படுத்த முயல்வதாகவும் சொல்லும் இவரின் ஆசை என்ன தெரியுமா?

அடுத்த ஒலிம்பிக்ஸில்  ரெட்ரோ ரன்னிங் ரேஸ் இருந்தால், அதில் இந்தியா சார்பாகக் கலந்து கொண்டு இந்தியாவிற்கு ஒரு தங்கப் பதக்கம் வாங்கித்தருவது தான்.  அது  நிறைவேறட்டும் என வாழ்த்துவோம்.


மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்
புதுதில்லி