செவ்வாய், 31 டிசம்பர், 2013

திரும்பிப் பார்க்கிறேன்.......சமீபத்தில் திருப்பாவை பற்றிய ஒரு பிரசங்கம் நண்பரது வீட்டில் இருந்தது. தில்லியில் சமஸ்கிருத பல்கலைக்கழகத்தில் பணி புரியும் ஒரு பேராசிரியர் திருப்பாவையின் பாசுரங்களில் பொதிந்திருந்த அர்த்தங்களை எடுத்துச் சொல்லிக் கொண்டிருந்தார்.  ஒரு மணி நேரத்திற்கும் மேலான அவரது பிரசங்கத்தில் சொன்ன விஷயங்கள் நிறையவே.  அதிலிருந்து ஒரு பகுதி மட்டும் என்னுடைய இப்பகிர்வுக்கு பயன்படுத்த நினைத்திருக்கிறேன். 

 நன்றி: கூகிள்

கடந்த சில வாரங்களாகவே சில வலைப்பூக்களில் திரும்பிப் பார்க்கிறேன் என்ற தலைப்பில் இந்த வருடத்தில் தாங்கள் கடந்த பாதையை சற்றே திரும்பிப் பார்த்து அந்த நினைவுகளைப் பகிர்ந்து கொண்டது மட்டுமல்லாது, அதை தொடர் பதிவாகவும் ஆக்க முடிவு செய்து ஐந்து ஐந்து பேராய் அழைத்து இருந்தார்கள்.

முந்தைய தொடர் பதிவுகள் போல ஏனோ இத் தொடர் பதிவுக்கு அத்தனை ஆதரவு இல்லாதது போலத் தோன்றுகிறது.  தொடர்ந்து எழுதிய பதிவர்கள் மிக மிகக் குறைவே என்பது எனது எண்ணம். வலைப்பூவில் எழுதும் பலருக்கும் தொடர்ந்து எழுதும் ஆர்வம் சற்றே குறைந்து விட்டது போலத் தோன்றுகிறது.  தொடர்ந்து எழுதிக்கொண்டிருந்த சில பதிவர்கள் இப்போதெல்லாம் மாதத்திற்கு இரண்டு மூன்று பதிவுகள் எழுதுவதே பெரிய விஷயமாக இருக்கிறது.

  
நன்றி: கூகிள்

இப்படி இருக்க, நான் கடந்த இரண்டு மாதமாக, அதாவது நவம்பர் மற்றும் டிசம்பர் ஆகிய இரு மாதங்களிலும் தினம் ஒரு பதிவு எழுதி வந்திருக்கிறேன். இது எனக்கே கொஞ்சம் அதிகமாகத் தான் தோன்றுகிறது.  எழுத வேண்டிய, எழுத நினைத்திருக்கும் பதிவுகள் நிறையவே இருக்கின்றன, என்றாலும், இந்த புத்தாண்டு முதல், தினம் தினம் பதிவுகள் எழுதுவதை குறைத்துக் கொள்ள நினைத்திருக்கிறேன். 

தற்போது வெளிவந்து கொண்டிருக்கும் ஓவியக் கவிதைகள் முடிந்த பின் தினம் ஒரு பதிவுகள் வெளிவருவதைக் குறைத்துக் கொண்டு, முன் போலவே வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு பதிவுகள் மட்டுமே எழுத நினைத்திருக்கிறேன். எழுதுவதிலும், வலைப்பூக்களைப் படிப்பதிலும் அதிகமாக நேரம் போவது போல தெரிகிறது. செய்ய வேண்டிய வேலைகள் சில செய்ய முடிவதில்லை.

சற்றே திரும்பிப் பார்த்தால், இந்த வருடத்தில் மட்டும் நான் எழுதிய பதிவுகள் 245 – இப்பதிவு உட்பட.  அதாவது வருடத்தின் 365 நாட்களில் 120 நாட்கள் மட்டுமே பதிவுகள் எழுதாது விட்டிருக்கிறேன். இத்தனை பதிவுகள் எழுதி விட்டது மலைப்பாக இருந்தாலும், இது கொஞ்சம் அதிகம் என்றே தோன்றுகிறது. 

சரி திரும்பிப் பார்க்கிறேன் எனச் சொன்னதும், முதல் பத்தியில் சொன்ன திருப்பாவை விளக்கம் மனதுக்குள் வந்து அதைப் பற்றிச் சொல்லவில்லை என்பதை நினைவுபடுத்துகிறது. 

விலங்குகளில் ஒரே ஒரு விலங்குக்கு மட்டும் தான் இப்படி திரும்பிப் பார்க்கும் வழக்கம் உண்டாம்.  ஒவ்வொரு பத்து அடி நடந்ததும் சற்றே நின்று அப்படியே திரும்பிப் பார்க்குமாம் அவ்விலங்கு. எதற்கு என்றால் தன்னை யாராவது பின்புறத்திலிருந்து தாக்க வருகிறார்களா என்பதைப் பார்க்கவும், தான் பயணித்து வந்த பாதை சரியானதுதானா என்பதைத் தெரிந்து கொள்ளவும் திரும்பிப் பார்க்குமாம் அந்த விலங்கு! அந்த விலங்கு என்ன என்று தானே கேட்கப் போகிறீர்கள்.......  அவ்விலங்கு காட்டின் ராஜா சிங்கம்.  
நன்றி: கூகிள்


அந்தச் சிங்கத்தினைப் போல நான் திரும்பிப் பார்ப்பதாகவோ, என்னை பதிவுலக சிங்கம் என்றோ யாரும் நினைத்து விடவேண்டாம்! எனக்குத் தெரிந்து சிங்கம் தவிர வேறு சில மிருகங்களும் திரும்பிப் பார்ப்பதுண்டு...... :)

திரும்பிப் பார்த்தபோது இவ்வருடத்தில் மட்டுமே முன் பத்தியில் சொன்னது போல வெளியிட்ட பதிவுகள் 245, அதில் கல்லும் முள்ளும் காலுக்கு மெத்தை என்ற தலைப்பில் வெளியிட்ட சபரிமலைப் பயணம் பற்றிய பதிவுகள் – 13, ரத்த பூமி என்ற தலைப்பில் வெளியிட்ட குருக்ஷேத்திரப் பயணம் பற்றிய பதிவுகள் – 10, அலஹாபாத் நகரில் நடைபெற்ற மஹா கும்பமேளா போது அங்கே சென்று வந்த நினைவுகள் பற்றிய பயணக் கட்டுரைகள் – 8 என பயணக் கட்டுரைகள் வெளியிட்டது தவிர சென்ற பயணங்கள் இன்னும் உண்டு.

எனது பதிவுகளில் எல்லோராலும் ரசிக்கப்பட்ட ஃப்ரூட் சாலட் பதிவுகள், அவ்வப்போது வெளியிடும் மனச் சுரங்கத்திலிருந்து, தலைநகரிலிருந்து தொடர்கள், குறும்படங்கள், படித்ததில் பிடித்ததுஎன்ற தலைப்பில் எழுதிய புத்தக வாசிப்பு அனுபவங்கள், சாலைக் காட்சிகள் என சில பகுதிகள் இவ்வருடத்திலும் தொடர்ந்து வரும்.

வருடத்தில் சந்தித்த மனிதர்களும் கிடைத்த அனுபவங்களும் என்னை நிறையவே பாதித்த சில விஷயங்களும் என நிறையவே இருக்கிறது. நல்லதை மட்டும் நினைவில் வைத்திருப்போம் என்ற எண்ணத்துடன் அவ்வப்போது கெட்ட விஷயங்களை மறந்து விடுவது நல்லது. அதனால் அவற்றை அங்கங்கே விட்டு விடுகிறேன்.

செப்டம்பர் மாதத்தில் சென்னை பதிவர் சந்திப்பில் நிறைய பதிவர்களை சந்தித்த்தில் மகிழ்ச்சி. என்ன ஒரு வருத்தம் – நிறைய பேருடன் பேச முடியவில்லை – கேமரா கையோடு அலைந்ததில்!  அடுத்த சந்திப்பின் போது படங்கள் எடுப்பதை விட்டு, எல்லோருடனும் பேச வேண்டும்!

வருடம் முழுவதும் எனது பதிவுகளைப் படித்து கருத்திட்ட அனைவருக்கும் அவ்வப்போது நன்றி சொல்லி இருந்தாலும், மீண்டும் ஒரு முறை இங்கே வருடத்தின் முடிவில் நன்றி சொல்ல வேண்டியிருக்கிறது.

இவ்வருடம் முழுவதும் எனைத் தொடர்ந்து படித்து, பின்னூட்டங்கள் மூலம் ஊக்கமளித்து வந்த அனைத்து நண்பர்களுக்கும் மிக்க நன்றி.  புத்தாண்டில் புத்துணர்வோடு சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


திங்கள், 30 டிசம்பர், 2013

மகளின் புதிய வலைப்பூஅன்பின் நண்பர்களுக்கு,

என்னுடைய மகள் ரோஷ்ணி வரைந்த ஓவியங்களையும், கணினியில் வரைந்த ஓவியங்களையும் அவளுக்கென்று ஒரு தனி வலைப்பூ துவங்கி வெளியிட்டுக் கொண்டிருந்தது உங்களுக்குத் தெரியும்.  இன்று காலை செய்த தவறு ஒன்றினால் அவளது வலைப்பூ முழுவதும் கூகிளினால் முடக்கப்பட்டு விட்டது. அதனால், என்னுடைய மின்னஞ்சல் முகவரி மூலமாகவே வேறொரு வலைப்பூவினை தொடங்கியிருக்கிறேன்.  அதன் முகவரி www.roshnivenkat2.blogspot.com. 

நேற்றைய வலைச்சரத்தில் திருமதி கோமதி அரசு அவர்கள் என்னுடைய மகளின் வலைப்பூவை [முடக்கப்பட்ட!] அறிமுகம் செய்து அதற்கு அவள் கணினியில் ஒரு படம் வரைவது போல ஒரு ஓவியத்தினையும் வெளியிட்டு இருந்தார்கள்.

அதற்கு நன்றி கூறும் வகையில் நேற்று ரோஷ்ணியும் ஒரு ஓவியம் வரைந்து அதை நான் இன்று காலை அவளது பக்கத்தில் வெளியிட்டு இருந்தேன். அதன் பிறகு தான் அப்பக்கம் முடக்கப்பட்டு விட்டது. :( அந்த ஓவியம் மீண்டும் புதிய வலைப்பூவில் வெளியிட்டு இருக்கிறேன்.

புதிய வலைப்பூவின் தலைப்பு – வெளிச்சக் கீற்றுகள்
புதிய வலைப்பூவின் முகவரி – www.roshnivenkat2.blogspot.com

தங்கள் தகவலுக்காக!

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஓவியக் கவிதை – 6 – அம்பாளடியாள்டிசம்பர் மாதம் ஏழாம் தேதி “கவிதை எழுத வாருங்கள் என்ற தலைப்பில் என்னுடைய வலைப்பூவில் ஒரு படத்தினை வெளியிட்டு கவிதை எழுத அழைப்பு விடுத்திருந்தேன். வருகிற 31-ஆம் தேதி வரை கவிதைகள் எழுதி அனுப்பலாம் எனவும் அதில் சொல்லி இருந்தேன். இந்த வேண்டுகோளுக்கு செவி சாய்த்து சில நண்பர்கள் கவிதைகளை எழுதி அனுப்பி இருக்கிறார்கள். அந்த வரிசையில் இது ஆறாம் கவிதை.

ஓவியம் எழுத அழைப்பு விடுத்து, வெளியிட்ட ஓவியம் திரு ராஜன் அவர்களின் கைவண்ணத்தில் உருவானது. ஓவியம் கீழே.


இந்த ஓவியத்திற்கான கவிதை எழுதிய அம்பாளடியாள் அவர்கள் பற்றிய சிறு குறிப்பு:

அம்பாளடியாள் எனும் வலைப்பூவில் கவிதைகள் படைத்து வரும் சாந்தரூபி கந்தசாமி அவர்கள் தனது வலைப்பூவில் தினம் ஒரு கவிதை எழுதி வெளியிடுகிறார். சிறப்பான பல கருத்துகளை இவரது கவிதைகளில் காண முடியும். ஈழத் தமிழர்கள் படும் துயரங்களை தனது கவிதையில் வடித்து அவர்களின் துயரத்தினை நம் கண்முன்னே காட்டுவார் இவர்.  தொடர்ந்து பல கவிதைகள் எழுதிட எனது வாழ்த்துகள்.

மேலே கொடுத்துள்ள ஓவியத்திற்கு அம்பாளடியாள் அவர்கள் எழுதிய கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்....

வில்லேந்தும் விழியிரண்டில்
மொழிப் பயிற்சி தான் எதற்குக்
கல்லாரும் கற்றவரும்
கண்டு மயங்கும் பேரழகே !....

முல்லைப் பூச் சூடி விட்டேன் என்
முன் அமர்ந்த பாவை உன்னைக்
கண்ணுக்குள் வைத்த நொடி
காதல் நெஞ்சில் பொங்குதடி .....

நாணத்தை விட்டுத் தள்ளு 
நாளிதழ் போல் ஒட்டிக் கொள்ளு 
கானத்தை இசைக்கும் குயில் முன் 
களியாட்டம் ஆடும் மயிலே .......

ஊரெல்லாம் உன் பேச்சு 
உனக்குள் தான் என் மூச்சு 
காதோரம் சொல்வேன் கேள் 
களிப்பான செய்தியொன்று 

மாதவத்தால் வந்தவளே தேன் 
மாங்கனி போல் சுவைப்பவளே
ஈருடலில் ஓருயிராய் நாம் 
இணைந்திடத்தான் சம்மதமா ?.... 

-          அம்பாளடியாள்

என்ன நண்பர்களே, கவிதை ரசித்தீர்களா?  இந்த ஓவியத்திற்கான ஆறாம் கவிதை இது. கவிதை படைத்த அம்பாளடியாள் அவர்களுக்கு ஒரு அழகிய பூங்கொத்து!31-ஆம் தேதி வரை அதாவது நாளை நள்ளிரவு வரை நேரமிருக்கிறது. இந்த வருடத்தின் கடைசி நாள்! இன்னும் சில மணித்துளிகளே இருக்கிறது வருடம் முடிய! கவிதை எழுத விருப்பம் இருப்பவர்கள் ஓவியத்திற்கான கவிதை எழுதி எனது மின்னஞ்சலில் [venkatnagaraj@gmail.com] அனுப்பி வைத்தால் கவிதை வந்த வரிசைப்படி ஒவ்வொன்றாய் எனது பக்கத்தில் வெளியிடுகிறேன். இங்கே வெளியிட்ட பிறகு உங்கள் பக்கத்திலும் வெளியிடலாம்.

மீண்டும் வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

ஞாயிறு, 29 டிசம்பர், 2013

மார்கழியும் கோலங்களும்
இந்த மாதத்தின் ஆரம்பத்தில் “தலைநகரிலிருந்துதொடரின் பகுதியாக “கோலங்கள்எனும் தலைப்பில் எனது இல்லத்தின் அருகே இருக்கும் திருமலா திருப்பதி தேவஸ்தானத்தின் புது தில்லி கோவிலில் இங்கிருக்கும் தமிழ் நண்பர்கள் வாசலில் போடும் கோலங்கள் பற்றி பகிர்ந்திருந்தேன்.  இந்த ஞாயிறில் இதே இடத்தில் போட்ட இன்னும் சில கோலங்கள் உங்கள் பார்வைக்கு.......


அச்சு கொண்டு போடப்பட்ட மயில்

இப்போதெல்லாம் அடுக்கு மாடி வீடுகள் முன் போடும் கோலங்களுக்கு சில கோலத்தட்டுகள் வந்து விட்டன. சல்லடை போல இருக்கும் அதில் கோலங்களின் வடிவங்கள் இருக்க, அதன் மேல் கோல மாவினை போட்டு பரப்பினால் அழகிய கோலம் ரெடி! எத்தனை சுலபம் எனச் சொல்ல வைத்துவிட்டார்கள்.  ஆனாலும் புள்ளி வைத்து கோலம் போடுவது சுலபம் இல்லை......

கோலங்கள் என்றதும் சும்மா ஏதோ நாலு புள்ளி வைத்து இப்படி ஒரு கோடு அப்படி ஒரு கோடு என சாதாரண விஷயம் தானே – அதில் என்ன பெரியதாய் இருக்கிறது என மிகச் சுலபமாய் நினைத்து விடாதீர்கள் அருமை நண்பர்களே – இங்கே தந்திருக்கும் சில கோலங்கள் போட எவ்வளவு நேரம் ஆனது என்பது தெரிந்தால் உங்கள் நினைவு மாறும்! கோலத்தினால் பல நன்மைகளும் இருக்கின்றனவே.

வீடு/கோவில்களில் போடப்படும் கோலங்கள், ரங்கோலி ஆகியவை நமது சிந்தனையைத் தூண்டி, கற்பனா சக்தியை வெளிக்கொணர்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது.  அது மட்டுமா, குனிந்து நிமிர்ந்து கோலம் போடுவது ஒரு சிறப்பான உடற்பயிற்சியும் ஆகிறதே – அதுவும் இப்போதைய இயந்திரமயமான வாழ்க்கையில் இது போல ஒரு வாய்ப்பு இருந்தால் நல்லது தானே.  வெட்ட வெளியில் நின்று பிராண வாயுவினை சுவாஸிப்பதால் உண்டாகும் நன்மையும் நமக்குக் கிடைக்கிறதே.

ஆதலினால் கோலம் போடுவீர்!


வண்ணம் அதிகம் போடாத படிக்கோலம்......


வாழ்க்கையைப் போலவே இதிலும் எத்தனை நெளிவு சுளிவுகள்.....


வண்ணம் கொண்ட வெண்ணிலவே..... 


குடைக்குள் மழை போல விளக்கினுள் தாமரை!


உங்கள் வாழ்வும் நட்சத்திரமாய் ஜொலிக்கட்டும்......


மாக்கோலம்....ஆண்டவனுக்கு அளித்தட்ட வண்ணமயமான கழுத்தணி.....  வைரங்கள் மின்னும் அணிகளை விட இந்த கழுத்தணி தான் மிகவும் பிடித்ததாம்......


விஷ்ணுவின் பஞ்சாயுதங்களில் ஒன்றாகப் போற்றப்படும் சங்கு இங்கேயும்......


அலங்கார விளக்குகள்....


சக்ராயுதம் எனவும் நினைக்கலாம்!


படிக்கோலம்


வண்ண மலர்கள்......

என்ன நண்பர்களே, இந்த வாரம் வெளியிட்ட கோலங்களின் புகைப்படங்களை ரசித்தீர்களா? இந்தக் கோலங்களில் சில எனது முகப்புத்தகத்தில் ஏற்கனவே வெளியிட்ட படங்கள் தான் – முகநூலில் எனைத் தொடராத மற்ற வலைப்பதிவர்களின் பார்வைக்கு இங்கேயும் பகிர்ந்து கொண்டேன்.


அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கிறேன்......

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.