செவ்வாய், 10 டிசம்பர், 2013

எங்கள் சிவப்பு அனுமார்



பள்ளிக்கூடத்தில் கீழ் வகுப்புகளில் நான் படித்துக் கொண்டிருந்த காலத்துச் சம்பவம். எங்கள் ஊரில் இரண்டு தாலீம்கானாக்கள் இருந்தன. ‘தாலீம்கானாஎன்றால் ‘கெறடி’, அதாவது நாட்டு முறையில் தேகாப்பியாசம், குஸ்தி முதலியன பயிலுமிடம். எங்கள் பள்ளிக்கூடத்து தேகப் பயிற்சி வாத்தியார் மகம்மது கவுஸ் ஒரு தாலீம்கானாவை நடத்தி வந்தார். மற்றொன்று இதற்குப் போட்டியாக, கரடிபாவி சுப்பன் என்பவன் பெங்களூரிவிலிருந்து வந்து ஏற்படுத்தியது. எங்கள் கெறடியில் ஒரு பெரிய சிவப்பு அனுமார் சுவரில் எழுதப்பட்டு விளங்கினார். அந்த உருவத்தை இப்போது நினைத்தாலுங்கூட என் உடம்பெல்லாம் ஒரு வீரிய உணர்ச்சி உண்டாகிறது. கரடிபாவி சுப்பன் கெறடியில் அதே மாதிரி ஒரு கறுப்பு அனுமார் சுவரில் எழுதப்பட்டிருந்ததாகச் சொல்லுவார்கள்.  அதை நாங்கள் பார்த்தது கிடையாது. விரோதிகளுடைய தாலீம்கானாவுக்குள் நாங்கள் எப்படிப் போவோம்? சொல்லத்தான் கேள்வி. இரண்டு அனுமார்களுக்குள் இந்த வண்ண பேதம் ஏற்பட்டதற்கு வேறொரு காரணமுமில்லை; தற்செயலாக ஏற்பட்டதுதான். சுப்பன் சீடன் ஒருவன் அடுப்புக் கரியால் எழுதிவிட்டான்; எங்கள் தாலீம்கானாவைச் சேர்ந்த எழுத்துக்கார முத்துசாமி காவி மண்ணைக் கரைத்து எழுதினான். போட்டிகள் மும்மரமாக நடந்த போது கறுப்பு அனுமார் கட்சி, சிவப்பு அனுமார் கட்சி என்று இரு அனுமார்களுக்குமே யுத்தம் நடப்பது போலிருக்கும். எங்கள் உற்சாகமும், ஜயித்தபோது உண்டான மகிழ்ச்சியும், தோற்றபோது உண்டான கோபமும் அனுமாரின் ஆவேசமாகத்தான் பொங்கும்.





எங்கள் உஸ்தாது கவுஸ் சாயபு என் மனதில் ஒரு தெய்வம் போல விளங்கினார். படிப்பு வாத்தியார்களில் ஒருவர் பாடங்கள் எல்லாம் தீர்ந்த பின் எங்களுக்கு மாலைப்பொழுதில் பாரதக் கதை சொல்லுவார். [பள்ளிக்கூட வேளையில் இம்மாதிரியான பாட்டி கதைகள் சொன்னால், ஹெட்மாஸ்டர் ஆக்ஷேபிப்பார்]. பீமனைப் பற்றி வெகு உற்சாகமாக்க் கதை சொல்லுவார். அப்போது என் கண் முன் கவுஸ் சாயபு தான் நிற்பார். துரியோதனனைப் பற்றிச் சொல்லும்போது கரடிபாவி சுப்பனைப் போலிருந்தான் என்று வைத்துக் கொள்ளுவேன். எனக்கு அப்போது ஒன்பது வயது முடியவில்லை. என் வகுப்பில் மற்றவர்கள் எல்லோரும் என்னைவிட நாலு வயதுக்கு மேல் மூத்தவர்களாகவே இருந்தார்கள்.



சுப்பனுடைய கெறடியைச் சேர்ந்தவர்களோடு அநேகமாக நாங்கள் பேசவே மாட்டோம். ஜென்ம விரோதிகளைப் போல் தான் பாவிப்போம். அசுரர்களுக்கும் தேவர்களுக்குமுள்ள விரோதம் போல் இந்த இரண்டு கெறடிகளைச் சேர்ந்த சீடர்களுக்குள்ளிருந்த உணர்ச்சி என்றால் மிகையாகாது. இது தாலீம்கானாவில் பயிலாதவர்களுக்கு விளங்காது.



அல்லாப் பண்டிகையில் ஒவ்வொரு வருஷமும் எங்கள் உஸ்தாது புலி வேஷம் போடுவார். ஒரு தடவை எதிர்க்கட்சி சுப்பனும் வேஷம் போட்டான். ஆனால் அவன் போட்ட்து கரடி வேஷம். புலிக் கட்சியும் கரடிக்கட்சியுமாக ஊரே இரண்டு கட்சியாகப் பிரிந்தது. ‘இன்றிரவுக்குள் பிரமாதம் நடக்கப்போகிறதுஎன்று எல்லாரும் எதிர்பார்த்தார்கள்.



ஊர்வலம் இரண்டு மணி நடந்தது. எங்கள் வஸ்தாதுதான் வென்றார் என்பது எங்களுடைய தீர்மானம். புலியாட்டம் அந்த வருஷத்திற்குமுன் என்றும் அவ்வளவு நன்றாக இருந்ததில்லையென்று எல்லாரும் சொன்னார்கள். சந்தைபேட்டையில் ஒரு ஆட்டைக் கொண்டுவந்து புலிக்குக் கொடுப்பது வழக்கம். அவர் அதை வாயில் கவ்வி, தூக்கி எறிவார். பிறகு சீடன் ஒருவன் அதை எடுத்துக் கொண்டுபோய் உஸ்தாது வீட்டில் சேர்ப்பான். இந்த வருஷம் புலி வேஷத்தின் ஆவேசம் மிகவும் அளவு கடந்து போயிருப்பதால் ஆட்டின் ரத்தத்தை உறிஞ்சி அங்கேயே சாப்பிட்டுவிடுவார் என்று சிலர் சொன்னார்கள்.



இம்மாதிரி நடக்கும் என்று நானும் நினைத்தேன். அதற்குமுன் வீட்டுக்குப் போய்விடலாம் என்பது என் எண்ணம். என் நண்பன் அப்துல் ரஹீம், ‘பயப்படாதே, நான் கூட இருக்கிறேன்என்று எனக்கு தைரியமும் உத்சாகமும் ஊட்டி, நடுவில் போய்விட வேண்டாம் என்று சொல்லிக் கொண்டிருந்தான்.



எங்கள் புலியைச் சுற்றி ஏராளமான கூட்டம். கரடி சுப்பனைச் சுற்றிச் சிறுகூட்டம் தான் சென்றது. அதுவும் அநேகமாக அவனுடைய கெறடி சீடர்கள் தான். கூட்டம் குறைந்து போனதற்கு ஒருவாறு ஈடாகச் சத்தம் அதிகமாகப் போட்டார்கள். ஆனால் அது பலிக்கவில்லை. தோற்றுப்போனதாக சுப்பனுக்கே உணர்ச்சி ஏற்பட்டது. இதனால் அவனுக்குக் கோபம் அதிகரித்தது. அவன் கொஞ்சம் கள்ளும் குடிப்பதுண்டு.  அன்று பலமாகக் குடித்து விட்டிருப்பதாகவும், எப்படியாவது எங்கள் உஸ்தாதைக் கலகத்திற்கு இழுப்பான் என்றும் எங்கள் கூட்டத்தில் பேச்சு. தன் தோல்வியை மறைத்துக் கொள்ள வேண்டுமென்று எண்ணி, சுப்பன் நம்முடைய புலி வேஷக் கூட்டத்தையும் தன் கூட்டத்தையும் ஒன்றாகச் சேர்த்துவிட யோசனை செய்தான். மெள்ள மெள்ள ஊர்வலத்தில் அவன் முந்திக் கொண்டே சென்று, கடைத் தெருவில் பிள்ளையார் கோவிலண்டை வந்த போது இரண்டு வேஷங்களும் ஒரு கூட்டமாகச் சேர்ந்து போயின. இப்போது இரண்டு வஸ்தாதுகளுக்கும் இடையில் எட்டு கெஜ தூரம் தான் இருந்தது. பாயும் பாய்ச்சல்களில் ஒருவரோடொருவர் மோதிக் கொள்ளும் நிலையில் இருந்தார்கள். இரண்டு பேர்களுக்கும் சங்கிலிகள் போட்டு ஒவ்வொருவருக்கும் பக்கத்துக்கு இருவராக நான்கு பேர்கள் இழுத்துப் பிடித்துக் கொண்டிருந்தார்கள். கூட்டம் பெருங் கூட்டமாயிருந்தாலும் வேஷத்தைச் சுற்றி விசாலமாக இடம் விட்டு ஆட்டத்தைப் பார்த்துக் கொண்டே சென்றது. இரண்டு மிருகங்களுக்கும் யுத்தம் எந்த நிமிஷத்தில் நடக்கப் போகிறதோ என்று பார்த்துக் கொண்டிருந்த எல்லாருக்கும் பட படவென்று மார்பில் அடித்துக் கொண்டிருந்தது. நானும் என் நண்பன் அப்துல் ரஹிமானும் கை கோர்த்துக் கொண்டு கண் கொட்டாமல் பார்த்துக் கொண்டே சென்றோம்.  





‘ரஹிமான், சண்டையானால் நம் உஸ்தாது தானே ஜெயிப்பார்?என்று பொறுக்க முடியாத கவலையுடன் என் நண்பனைக் கேட்டேன். சுப்பன் எங்கள் உஸ்தாதை விடக் கொஞ்சம் உயரம் அதிகம். நல்ல தடியன். அவனையும் அவனது அட்டகாசங்களையும் பார்த்து என் மனதில் கொஞ்சம் சந்தேகம். ஆனால் ரஹிமான், ‘கட்டாயம் புலிதான் ஜயிக்கும் பார், இன்னும் ஒரு நிமிஷத்திற்குள்!என்றான்.



நான் ஆஞ்சனேயனை [அதாவது, எங்கள் சிவப்பு ஆஞ்சனேயனை] மனதில் தியானித்தேன். எப்படியாவது எங்கள் உஸ்தாதுக்கு வெற்றி தர வேண்டுமென்று பிரார்த்தித்தேன்.



‘ஹா!என்று ஓர் இரைச்சல் கேட்டது. துள்ளி விழுந்தேன். ‘பயப்படாதே!என்றான் ரஹிமான். அவன் கையை கெட்டியாகப் பிடித்துக் கொண்டேன்.



அடுத்த கணத்தில் சுப்பன் பாய்ந்து எங்கள் உஸ்தாது பேரில் குதித்து அவரைக் கீழே வீழ்த்தப் பார்த்தான். எங்கள் உஸ்தாது அவன் வந்த பக்கம் திரும்பித் தலையை முட்டுக் கொடுத்தார். இருவரும் குஸ்தியில் கலந்தார்கள். கூட்டத்தில் பேரிரைச்சல் கிளம்பிற்று. சுப்பனுடைய சீடர்களின் ஜய கோஷம் எல்லாக் கூச்சலுக்கும் மேல் காதைப் பிளந்தது.



நான்கு போலீஸ் ஆட்கள் திடீர் என்று பிரசன்னமாகி இரண்டு உஸ்தாதுகளையும் பிரித்தார்கள். சங்கிலி பிடித்துக் கொண்டிருந்த சீடர்களின் பாடு வெகு பாடாகிப் போயிற்று. கரடி மேல் பாய்ந்து பழி வாங்கப் புலி ஒரு பக்கம் இழுப்பதும், அவர்கள் அப்படிப் பாய்ந்து விடாமல் இழுத்துப் பிடிப்பதும், கூட்டத்தில் ‘சங்கிலியை விடு, விடுஎன்று பலர் கூச்சல் போடுவதும், போலீசார், ‘போ! போ!என்று தடிப் பிரயோகம் செய்வதும், சில நிமிஷங்கள் வரையில் ஒரே அமர்க்களமாக இருந்தது. பிறகு நான்கு போலீஸ்காரர்களில் மூவர் ஜனக் கூட்டத்தை சமாளித்துக் கொண்டு சென்றார்கள். ஒருவன் புலிக்கும் கரடிக்கும் மத்தியில் கையும் தடியுமாகச் சென்றான். கொஞ்ச தூரம் போனதும் அந்தப் போலீஸ்காரனுடன் தங்க சரிகை கொண்ட சிவப்பு உருமாலை தரித்த போலீஸ் உத்தியோகஸ்தர் ஒருவர் வந்து சேர்ந்து கொண்டார். ரஹிமான் என் காதில் மெள்ள ‘அவர் தான் ஹேட் கான்ஸ்டேபிள் வரதராஜுலுஎன்றான். [ரஹிமானுக்குத் தெரியாத விஷயம் ஒன்றுமில்லை. அவன் என்னை விட எட்டு வயது பெரியவன். என் வகுப்பிலே தான் படித்துக் கொண்டிருந்தான்]. ‘ஹேட்டு வரதராஜுலுஎன்றால் ஊரே நடுங்கும். அவருடைய உடையும் அவருடைய தலைப்பாகையில் சரிகையின் மினுமினுப்பும் என் மனதைக் கவர்ந்தன.



தான் ஜயித்து விட்ட்தாகச் சுப்பனுடைய எண்ணம். அவனுடைய சீடர்களின் எக்களிப்புச் சத்தம் எங்களுக்குப் பொறுக்க முடியாததாக இருந்தது. ரஹிமான்! பார்த்தாயா, என்ன அவமானம் செய்துவிட்டான் கரடிபாவி சுப்பன்!என்றேன். அவனுக்கும் மிகுந்த கோபம். பல்லைக் கடித்து பதில் சொல்லாமல் நின்றான்.



புலி உறுமிக்கொண்டு மெதுவாகவும் கம்பீரமாகவும் சென்று கொண்டிருந்தது. அவ்வப்போது பின் காலில் நிமிர்ந்து நின்று பேரிரைச்சல் போடும். மறுபடி கம்பீரமாக நகர்ந்து செல்லும். ‘பார், இன்னும் கொஞ்ச நேரத்தில்என்றான் ரஹிமான். ‘எப்படியாவது அந்த சுப்பனை அவமானப் படுத்திப் பழி வாங்க வேண்டும்என்று என் உள்ளம் முழுவதும் பக்தி பரவசமாகி எங்கள் அனுமாரின் தியானமாகவே இருந்தது!   புலி அனுமாராகத் தோன்றினார்; அனுமார் புலியைப் போல் மஞ்சள் பட்டைகளுடன் என் மனதில் தோன்றினார்.



‘பார்த்தாயா, உங்கள் புலியின் கதி என்னவாயிற்று!என்று இந்த சமயத்தில் என் காதண்டை திடீர் என்று யாரோ ஒருவன் சொன்னான். திரும்பிப் பார்க்க, செக்குக் காரத் தெருவு சஞ்சீவி. இவன் சுப்பனுடைய தாலீமைச் சேர்ந்தவன். என் வகுப்பில் படித்துக் கொண்டு இருந்தான். ரஹிமான் வயது. குஸ்தியில் நல்ல கெட்டிக்காரன். ரஹிமானைப் பல தடவை தோற்கடித்தவன். படிப்பு சூன்யம்.



‘என்னத்தைப் பார்ப்பது? போலீஸ்காரர்கள் இல்லாதிருந்தால் உங்கள் சுப்பன் கதி இன்று என்னவாகுமோ தெரியுமா?என்றேன். ‘எங்கள் கறுப்பு அனுமாருக்குத் தேங்காய் உடைத்திருக்கிறேன். அது வீணாகுமா? அது தான் இப்படியாச்சுஎன்றான். இதைக் கேட்ட்தும் எனக்குத் தாங்க முடியவில்லை. ‘நாளை உனக்கு இரண்டு தேங்காய் உடைப்பேன்என்று எங்கள் அழல்வண்ண ஆஞ்சனேயனைத் தியானித்தேன். அதோஎன்றான் ரஹிமான்.



திரும்பிப் பார்த்தோம், எங்கள் உஸ்தாது தேகத்தைச் சுருக்கிக் கொண்டு பின் கால்கள் மடங்க, பாயும் வண்ணமாக நின்று, ஓர் உறுமல் உறுமினார். அப்போது அவர் காட்டிய காட்சி பெங்களூரில் லால்பாக்கில் நான் பார்த்த உண்மை வேங்கையைப் போலவே இருந்தது. சங்கிலி பிடித்தவர்கள் என்ன காரணமோ சங்கிலியை விட்டு விட்டார்கள். அடுத்த கணம் ‘அல்லல்லோ! குலி குலி!என்று கூட்டத்தில் ஒரு பேரிரைச்சல் கிளம்பிற்று. காளியம்மனுக்கு எருமையைப் பலி கொடுக்கும்போது இந்த இரைச்சல் போடுவது வழக்கம். எங்கள் புலி ஒரு தாவு தாவிற்று. போலீஸ் ஹேட் வரதராஜுலுவின் தலைமேல் புலி இறங்க, அவர் தரையில் விழுந்தார். மறுபடி ஒரு தாவுத் தாவி, சுப்பன் கழுத்தின் மேல் இறங்கிற்று. அவனும் தரையில் தலைகீழாக விழுந்து உருண்டான். விழுந்த கரடியின் தோளைப் புலி கவ்விக் கொண்டு வீரக் காட்சி தந்தது. கூட்டத்தில் அடங்காத மகிழ்ச்சி. ‘செத்தான், செத்தான்!என்று பேரிரைச்சல் கிளம்பிற்று. கீழே விழுந்த ஹேட் கான்ஸ்டேபிள் வரதராஜுலு மெள்ள எழுந்து உருமாலையைத் தட்டித் தலையில் மறுபடி கம்பீரமாக அணிந்தது அனுமார் தட்டிக் கொடுத்த மைனாக பருவதக் காட்சியாக இருந்தது. தன்னுடைய வெட்கத்தை மறைக்க வாயில் ஊது குழல் வைத்து ‘விசில்அடித்தார். அதற்குள் நம்முடைய புலி இன்னொரு தாவுத் தாவி, எங்கேயோ மறைந்து போயிற்று.



‘எங்கே, எங்கே?என்று கூட்டமெல்லாம் ஒரே கலவரம். அடுத்த கணத்தில் நாங்கள் இருந்த இடத்திற்கு இருபது கஜத்திற்கு முன்னால் தன் சீடர்களுடன் முன்போல கம்பீரமாகச் சென்று கொண்டிருந்தது.  ரஹிமானைக் கட்டிக்கொண்டு ஆனந்தக் கண்ணீர் விட்டேன். ‘பார்த்தாயா?என்றான் ரஹிமான். ‘நாளை அனுமாருக்கு இரண்டு தேங்காய் உடைக்கப் போகிறேன். நீ தப்பாமல் வர வேண்டும்என்றேன்.

இந்த சம்பவத்தின் காரணமாக எங்கள் உஸ்தாது மகம்மது கவுஸுக்குக் கச்சேரியில் விசாரணை செய்து ஐந்து ரூபாய் அபராதம் போட்டதாக எங்கள் பள்ளிக்கூட்த்தில் ‘குசுகுசுப் பேச்சு. நாங்கள் யாரும் அவரைக் கேட்கவில்லை. போலீசார் சுப்பனுடைய கட்சியில் சேர்ந்துகொண்டு விட்டார்கள். பெரிய அநியாயம் செய்து விட்டார்கள் என்று நாங்கள் எல்லோரும் எண்ணினோம். அபராதம் போட்டால் என்ன?என்று எங்கள் உஸ்தாது மேல் இரு மடங்கு கௌரவமும் அன்பும் செலுத்தினோம்.



***



இது நடந்து ஐம்பது ஆண்டுகளாயின. இன்னும் அதிகமாகவே இருக்கும். காலம் ஓட்டமாக ஓடுகிறது. நேற்று நடந்தது போலிருக்கிறது. சென்ற வாரம் எங்கள் ஊருக்கு ஏதோ காரணமாக போயிருந்தபோது எங்கள் தாலீம்கானா இருந்த இடத்திற்கு முன் நின்றேன். அந்த இடத்தில் ஒன்றும் இல்லை. எல்லாம் பாழாகக் கிடந்தது. முள் செடிகள் வளர்ந்து அங்கே ஒரு வெள்ளாடு மேய்ந்து கொண்டிருந்தது. இப்போது மகம்மது கவுஸ் மேலுலகத்தில் இருக்கிறார். அவர் வீட்டில் வேறு யாரோ குடியிருக்கிறார்கள்.  அவரைச் சேர்ந்தவர்கள் கூட அல்ல.



கெறடி இருந்த இடத்தில் மேய்ந்து கொண்டிருந்த ஆட்டைப் பார்த்த வண்ணமாக வெகு நேரம் நின்றேன். அந்த ஆட்டின் பேரில் என்னையறியாது ஓர் அன்பு எனக்கு உண்டாயிற்று. என் மனக் கற்பனையில் அதன் முகம் வர வர மாறி கவுஸ் உஸ்தாதே அங்கே நின்றார். அவர் சுவரைப் பிடித்துக் கொண்டு ‘ஊட் பைட்தேகாப்பியாசம் செய்வது போல மனக் காட்சி கண்டேன்.



‘போலாமேஎன்றார் என் கூட இருந்த கூட்டுறவு இன்ஸ்பெக்டர் சீதாபதி ராவ். என் மனக் கனவிலிருந்து இறங்கினேன். உமக்கு ஜிம்னாஸ்டிக்ஸ் இன்ஸ்பெக்டர் மகம்மது கவுஸ் தெரியுமா?என்று கேட்டேன். பாவம், சீதாபதி ராவ் அவரை எவ்வாறு அறிவார்? உத்தியோகத்திற்காக இந்த ஊருக்கு எங்கிருந்தோ நாலு ஆண்டுகளுக்கு முன்தான் வந்தவர். ‘அது யார்? எனக்குத் தெரியவில்லையே?என்றார்.



இவரிடம் எங்கள் உஸ்தாதைப் பற்றிப் பேசி என்ன பயன்? நானும் எத்தனையோ வாத்தியார்களிடம் எத்தனையோ பாடங்கள் படித்தேன். அவர்களில் யாரும் எங்கள் மகம்மது கவுஸ் உஸ்தாதுக்கு சமானமாக மாட்டார்கள்.



அங்கிருந்து கிழக்கே சென்று அவ்விடமுள்ள குன்றண்டை போனோம். குன்றின் அடிவாரத்தண்டை ஒரு பாறையில் ஒரு பெரிய அனுமார் செதுக்கப்பட்டிருந்தது. அங்கே ஊரார் வேண்டுதல்கள் வேண்டிக்கொண்டு தேங்காய் உடைத்துப் பூஜை செய்வதுண்டு. அந்த அனுமாரும் செங்காவி பூசி எங்கள் தாலீமில் வரைந்திருந்தது போலவே இருந்தபடியால் அவர் மேல் எங்களுக்கெல்லாம் அதிக பக்தி. அந்த அனுமாரையாவது பார்த்துக் கொஞ்சம் ஆறுதல் அடையலாம் என்று அவ்விடம் போனேன். சுற்றிச் சுற்றிப் பார்த்தும் அவர் காணப்படவில்லை.



‘இங்கே ஒரு பெரிய அனுமார் பாறையில் இருக்குமே, அது என்னவாயிற்று?என்று சீதாபதி ராயரைக் கேட்டேன். ‘அதோ பாருங்கள், அதுதான் அனுமார் கோயில்என்றார்.  ஒரு மண்டபம் தென்பட்டது. யாரோ பக்தர்கள் அசட்டுத்தனமாக எங்கள் அனுமாரைச் சுவர் கட்டி அடைத்துப் போட்டு ஒரு கோயிலாகச் செய்து விட்டிருப்பதைப் பார்த்தேன். ஊரெல்லாம் பாழாய்ப் போன மாதிரி இந்த மலையடி அனுமாரும் கோயிலுக்குள் மறைந்து போனாரே என்று வருத்தப்பட்டேன். கோயிலுக்குள் போனேன். அனுமார் என்னமோ இருந்தார். ஆனால் முன் மாதிரி ஜொலிக்கவில்லை. அடங்கி ஒடுங்கி அரக்கர் கையில் சிக்கின மாதிரி இருந்தார்.



ரஹிமான் வீட்டைக் கண்ணால் பார்க்கலாம் என்று ஆசை தோன்றிற்று. அந்த தெருவுக்குப் போனேன். வீடு மட்டும் முன் போலவே செம்மண் பூசிய வண்ணமாக இருந்தது. ஆனால் யாரோ குடியிருந்தார்கள்.



ரஹிமான் தன் வீட்டு வாசலில் சமையலுக்காக விறகு வெட்டுவது வழக்கம். அதைப் பார்த்து அனுபவித்துக் கொண்டு சில சமயம் நான் நிற்பதுண்டு. எத்தனையோ சிநேகிதர்களைப் பார்த்திருக்கிறேன். என் ரஹிமானுக்கு சமானம் யாரும் ஆக மாட்டார்கள்! அவன் இப்போது எங்கே என்ன தொழிலில் இருக்கிறான் என்பது கூட எனக்குத் தெரியாது; சொல்லுவாரும் இல்லை. உயிரை வேண்டுமானாலும் தருவான். ஒரு பரீக்ஷையும் அவன் சரியாகத் தேறவில்லை. என் படிப்பில் அவனுக்கு முடியுமானால் பாதி தந்திருப்பேன்; இருவரும் பாஸ் செய்திருக்கலாம். பாவம்! அவனை வாத்தியார்கள் எல்லாரும் சேர்ந்து கோளாறு செய்து விட்டார்கள். பள்ளிக்கூடம் விட்ட பின், அவன் என்னவானோனோ தெரியவில்லை. என்ன விலை கொடுத்தால் அத்தகைய நண்பன் எனக்குக் கிடைப்பான்?



குழந்தைகாள், உங்கள் நண்பர்களைப் பற்றிக் கவனமாயிருங்கள். என்னைப் போல் ஏமாற்றமடையாதீர்கள். நட்பைப் போல் ஒரு செல்வமுமில்லை. மற்றதெல்லாம் பொய்; காற்றைப் போல் பறந்து போகும். அன்பும் நட்புமே வாழ்க்கையில் பெருத்த செல்வம்......



-          சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.


இன்றைக்கு டிசம்பர் மாதம் 10 ஆம் தேதி.  இதே நாளில் 1878 ஆம் வருடம் பிறந்தவர் சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார் எனும் ராஜாஜி.  அவரது நினைவாக அவர் எழுதிய சிறுகதை இங்கே உங்களுக்காக.....



கதை வெளிவந்தது 1940-ஆம் வருட ஆனந்த விகடன் தீபாவளி மலரில்! நன்றி ஆனந்தவிகடன்.



நாளை வேறொரு பகிர்வில் உங்களைச் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.

புது தில்லி.

44 கருத்துகள்:

  1. வணக்கம்
    ஐயா.

    காற்றைப் போல் பறந்து போகும். அன்பும் நட்புமே வாழ்க்கையில் பெருத்த செல்வம்..
    அருமையாக பதிவில் பல விடயங்களை சொல்லியுள்ளிர்கள் வாழ்த்துக்கள் ஐயா

    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  2. மூதறிஞரின் பிறந்த நாளில் அவர்
    சிறுகதையைப் பிரசுரித்து அவரி நினைவுப்படுத்திய விதம்
    மிக மிக அருமை
    பகிர்வுக்கும் தொடரவும்
    மனமார்ந்த நல்வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  3. பதில்கள்
    1. தமிழ் மணம் மூன்றாம் வாக்கிற்கு மிக்க நன்றி ரமணி ஜி!

      நீக்கு
  4. நட்பைப் போல் ஒரு செல்வமுமில்லை - உண்மை... சுவாரஸ்யமான பகிர்வு... நன்றி... வாழ்த்துக்கள்...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  5. ராஜாஜி கதையா? ஒரு நிமிஷம் என்னோட சித்தப்பா தன் சிகந்திராபாத் அனுபவங்கள் குறித்து எழுதினதோனு நினைச்சுட்டேன். :))) எழுத்து நடை அப்படி இருந்தது. :)))

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. உங்கள் சித்தப்பா எழுதிய சில கதைகளும் என்னிடத்தில் இருந்தன. தேடுகிறேன்..... :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

      நீக்கு
  6. ராஜாஜி எழுதிய கதை அபாரம் ..மல்யுத்தப்போட்டியை கண்முன் கொண்டு வந்ததே..!

    இங்கே கோவையில் ஒரு கெரடி கோவில் உண்டு ..
    அங்கே இருந்தவர்தான் தற்போது திருவரங்கத்தில் ஜீயராக பட்டம் ஏற்றிருக்கும்
    ஶ்ரீ ரங்க நாராயண ஜீயர் ..!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

      நீக்கு
  7. பதில்கள்
    1. தமிழ் மணம் நான்காம் வாக்கிற்கு மிக்க நன்றி மதுரைத் தமிழன்.

      நீக்கு
  8. நட்பைப் போல் ஒரு செல்வமுமில்லை. மற்றதெல்லாம் பொய்; காற்றைப் போல் பறந்து போகும். அன்பும் நட்புமே வாழ்க்கையில் பெருத்த செல்வம்......

    - சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியார்.

    அழகான அருமையான பதிவு, வெங்கட்ஜி. பாராட்டுக்கள். வாழ்த்துகள்.

    எழுத்துக்களின் கலர் மங்கலாக உள்ளது. பளிச்சென்ற நீலம் [DARK BLUE] கொடுத்திருக்கலாம். படிக்க சிரமம் இல்லாமல் இருக்குமே.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வண்ணத்தினை மாற்றி விட்டேன்.... சொன்னதற்கு நன்றி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

      நீக்கு
  10. Padippadharku konjam kazhtamaga irundhdhal sariyaga padikka mudiyamal vulladhu.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்போது வண்ணத்தினை மாற்றி விட்டேன் சித்தி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  11. தாலீம்கானா பிரயோகமே எனக்குப் புதிது. அருமையான மரியாதை செய்திருக்கிறீர்கள் ராஜாஜிக்கு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  12. இரண்டாம் முறையாக நான் ஏமாந்தேன். வெங்கட்டின் கதை என்றே முதலில் எண்ணினேன். சமயமறிந்து பதிவுகளைப் பகிர்கிறீர்கள். பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. அடடா.... முதலில் சொல்ல வேண்டாம் என நினைத்தேன்......

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

      நீக்கு
  13. அருமை! எங்கோ வாசித்த நினைவு வருகிறது.

    ராஜாஜியின் கதைகள் எல்லாம் ஆற்றொழுக்கு போல ஒரு அருமையான நடையில் இருக்கும். வாசிக்கவும் எளிது.

    பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

      நீக்கு
  14. உங்கள் அனுபவம்தான் என்று நினைத்து படித்து ,கடைசியில் பல்பு வாங்கிட்டேன் !
    ராஜாஜியை நினைவி கூர்ந்த விதம்அருமை !
    +1

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  15. என்னங்க ஜி.... தொடக்கத்திலேயே இது ராஜாஜியின் கதை என்று சொல்லி இருக்கலாம்....

    நான் உங்களுக்கு தான் இவ்வளவு வயதாகிவிட்டதா....?
    படத்தில் (சற்று) கம்மியாகத் தெரிகிறாரே...
    ஒரு சமயம் இருபது வருடங்களுக்கு முன் பிடித்த படமோ...
    என்றெல்லாம் எண்ணியபடி படித்தேன்.

    கடைசியில் தான் புரிந்தது.
    பரவாயில்லை உங்களுக்கு நான் நினைத்தபடி எண்பது வயதெல்லாம் ஆகவில்லை...

    கதை பகிர்வுக்கு மிக்க நன்றி நாகராஜ் ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அருணா செல்வம்......

      ”இதனால் சகலமானவர்களுக்கும் அறிவிப்பது என்னவென்றால்” என்று எழுதி என் பிறந்த நாளை குறிப்பிட்டு விடலாம் என நினைக்கிறேன்! நீங்க என்ன நினைக்கறீங்க!?

      நீக்கு
  16. நான் இது உங்களுடைய அனுபவ என்றே நினைத்தேன். இறுதியில் மூதறிஞர் ராஜாஜி என்று சொல்லி விட்டீர்கள். அருமையான கதை தான். ஜாதி மத பேதம் பார்ப்பதில்லை நட்பு என்று புரிய வைத்து விட்டார்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜலக்ஷ்மி பரமசிவம் ஜி!

      நீக்கு
  17. படித்து முடிக்கும் வரை உங்கள் அனுபவம் என்றே நினைக்க வைத்தது,
    கடைசியில்தான் திரு.இராஜாஜி அவர்களின் கதை என்பது தெரிந்தது...
    அருமையான சிறுகதைப் பகிர்வு அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி குமார்.

      நீக்கு
  18. அழகிய வாசகங்கள்! அருமையான பகிர்வு!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ சாமிநாதன் ஜி!

      நீக்கு
  19. Anbum natpume vazhkkaiyil peruththa selvam . Sirandha vari.

    Vannaththai matriyadhal meendum thelivaga padiththu rasiththen

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

      நீக்கு
  20. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனி.

      நீக்கு
  21. தலைநகர் டெல்லிவாழ் பதிவர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களுக்கு வாழ்த்துக்கள். அவரை வாழ்த்தி வாழ்த்துரை படித்த கவிஞர் ரமணி அவர்களுக்கு நன்றி!
    காண்க http://yaathoramani.blogspot.in/2013/12/blog-post_15.html

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  22. ராஜாஜி எழுதிய கதை மிக ‌மிக அருமை. தங்களின் வர்ணனை அதை ‌விட அருமை வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி விஜயராகவன் ஜி!

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....