திங்கள், 31 மார்ச், 2014

நைனிதால் – [kh]குர்பாதால்ஏரிகள் நகரம் – பகுதி 6


ஏரிகள் நகரம் தொடரின் பகுதி ஐந்தினை முடிக்கும்போது கீழ்க்கண்டவாறு முடித்திருந்தேன்.


நாங்கள் தற்கொலை முனைக்கு வந்து சில நிமிடங்கள் ஆகிவிடவே, எங்கள் ஓட்டுனர் மத்லூப் எங்களைத் தேடிக் கொண்டு அங்கே வந்துவிட்டார். ஒரு வேளை பணம் கொடுக்காது நாங்களும் காணாமல் போய்விடுவோம் என்று எண்ணியிருப்பாரோ?  பயப்படாதே மத்லூப், நாங்கள் இங்கே விழப்போவதில்லை! கொஞ்சம் இயற்கையையும், மக்களின் செயற்கையான செயல்களையும் பார்த்துக் கொண்டிருந்தோம்எனச் சொல்லி அங்கிருந்து நகர்ந்தோம்.அடுத்ததாய் நாம் பார்க்கப் போகும் இடத்திற்கும் குதிரைக்கும் சம்பந்தம் உண்டு. அது என்ன சம்பந்தம்? அடுத்த பகுதியில் பார்க்கலாமா?  


தற்கொலை முனையிலிருந்து புறப்பட்ட எங்களது பயணம் அடுத்ததாய் நின்றது ஒரு மலை முகட்டில். இங்கே என்ன இருக்கிறது என்று ஓட்டுனர் மத்லூபிடம் கேட்க, மேலேயிருந்து ஒரு அற்புதமான இடத்தினை நீங்கள் பார்க்கப் போகிறீர்கள் என்று சொன்னார். அது என்ன இடம் என்று பார்க்கலாமா?

 ’என் பெயர் மோகனாங்கி...  அட இல்லைப்பா வேற எதுவோ நினைப்புல சொல்லிட்டேன்! - நான் தான் [KH]குர்பா தால்’

சில அடிகள் நடந்தால் சில மரங்களும், மரங்களின் ஊடே பார்த்தால் ஒரு சிறிய ஊரும் தெரிகிறது. அந்த ஊரின் பெயர் குர்பாதால் [khurpa tal]. இந்த தொடரின் முதல் பகுதியில் சொன்னது போல தால் என்ற ஹிந்தி சொல்லிற்கு ஏரி என்ற பெயர். நைனிதால் மற்றும் சுற்றுப் பகுதிகளில் நிறையவே சின்னச் சின்ன ஏரிகள். அப்படி ஒரு ஏரி தான் குர்பா தால். மேலிருந்து பார்க்கும்போது குதிரைக் குளம்பு போன்ற வடிவத்தில் இருப்பதால் இந்த ஏரிக்கும் அது இருக்கும் சிறு கிராமத்திற்கும் குர்பாதால் என்று பெயர் எனச் சிலர் சொல்கிறார்கள். 

 ’குதிரைக் குளம்பு என்பதை விட TROWEL போல இருக்கிறது என்பது தான் பொருத்தமா இருக்கும்!’

ஹிந்தி மொழியில் குர்பா என்றால் சிறிய மண்வெட்டி! இந்த குர்பா தால் நைனிதால் நகரிலிருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது. முன்பு இங்கே நிறைய இரும்பு சம்பந்தப்பட்ட தொழில்கள் நடந்ததாகவும், அவையெல்லாம் இப்போது குறைந்து காய்கறித் தோட்டங்கள் அதிக அளவில் வந்து விட்டதாகவும் ஓட்டுனர் சொல்லிக் கொண்டிருந்தார். மிக அழகிய கிராமம் என்று சொன்னாலும் நாங்கள் மேலேயிருந்து அதன் அழகினைப் பார்த்ததோடு சரி. தனிமை விரும்பிகள் மற்றும் இயற்கை விரும்பிகள் அங்கே சென்று கிராமிய சூழலில் இருக்கலாம்!

 ”அந்தா தெரியுதே ரோடு.... அது மேலே போனா குர்பா தால் வந்துடும்!”

மேலே இருந்து பார்த்தபோது அவ்வளவு அழகான சூழலாக இருந்தது. அங்கே ஒரு மரம். ஆரம்பிக்கும்போதே நான்கு கிளைகளோடு இருப்பது போல தோன்றியது. அந்த கிளைகளைப் பிடித்துக்கொண்டு சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம். சில மணித்துளிகள் அங்கிருந்தோம். அவ்விடத்தினை விட்டு நகர மனதில்லை. இருந்தாலும் இன்னும் பார்க்க வேண்டிய இடங்கள் நிறையவே என்பதால் வெளியே வந்தோம்.


”என்ன குற்றம் செய்தோம் கொற்றவனே? 
எங்களை இப்படி தூக்கிலிட்டது எதற்காக?”

வாசலில் சில சிறிய கடைகள் – ஒரு டேபிள் சில குப்பிகள், பாத்திரங்கள் – அவ்வளவு தான் கடை! சுடச்சுட MAGGIE, மோமோஸ் மற்றும் தேநீர் தயாரித்துக் கொடுக்கும் கடைகள் இருந்தன. குளிர் மிகவும் அதிகமாக இருந்ததால், கொஞ்சம் சூடாக தேநீர் அருந்தினால் நன்றாக இருக்கும் என நண்பர்கள் அனைவரும் ஒரு சேரக் கருதவே ஐந்து பேருக்கும் [அட ஐந்தாவது எங்கள் ஓட்டுனர் மத்லூப் தான்] தேநீர் தயாரிக்கச் சொன்னோம். இஞ்சி, ஏலக்காய் போட்டு அவர் தயாரித்த தேநீர் மிகவும் சுவையாகவே இருந்தது.

 ”யாரப்பா அது? எங்களுக்கு நடுவே எங்களைப் போலவே நிற்பது?”

ஐந்து தேநீருக்கு விலை 75 ரூபாய். என்னது விலை அதிகம் என்று தோன்றுகிறதா? அங்கே இருந்த குளிருக்கு இதமாக இருந்தது அந்த சூடான தேநீர். எங்களுடன் வந்த நண்பர் ஒருவர் எனக்கு குளிராது. அதனால் தொப்பி, கையுறை எல்லாம் போட்டுக் கொள்ள மாட்டேன்என்று சொல்லிக் கொண்டிருந்தார். அங்கே நின்றபோது கொஞ்சம் குளிர் அதிகம் என்பதைப் புரிந்து கொண்டு விட்டார்.  தேநீர் நிச்சயம் தேவை என்று முதலில் உணர்ந்ததும், சொன்னதும் அவர் தான்!


 ”கோப்பையில் இருப்பது தேநீர் தானே? என்று சந்தேகத்துடன் கேட்பவர் யார்?”

ஆகவே ஐந்து தேநீருக்கான விலை அதிகமில்லை ஜென்டில்மேன் என்று சொல்லி, பணம் கொடுத்துவிட்டு தேநீர் தயாரித்துக் கொடுத்த அந்த நல்லுள்ளத்திற்கு நன்றியையும் சொல்லி புறப்பட்டோம்!  தேநீர் தயாரித்தவருக்கு தன் சொத்தையே எழுதித் தரத் தயார் என்று சொன்னார் மேலே சொன்ன ஆசாமி!

 ”இந்த இடத்தினைப் பார்த்தபோது ‘உள்ளம் கொள்ளை போகுதே’ எனப் பாடத் தோன்றியது. பக்கத்தில் குதிரை/கழுதை இருந்ததால் பாடவில்லை!”

மேலே இருந்து பார்க்கும்போதே மிக அழகாக இருக்கிறதே இந்த இடம், அருகில் சென்று பார்த்திருந்தால் இன்னும் அழகாக இருந்திருக்கும் என மனதுக்குள் ஒரு ஆசை இருந்தபடியே இருந்தது எங்களுக்கு.  ஆனாலும் இன்னும் சில ஏரிகளையும், நைனிதால் நகரில் இருக்கும் சில இடங்களையும் பார்க்க வேண்டும் என்பதால் அங்கிருந்து நகர்ந்தோம். 

 ”மலையோரம் வீசும் காத்து..... 
மனதோடு பாடும் பாட்டு.....  
கேட்குதா கேட்குதா?”

இந்தப் பதிவில் மேலே ஒரு புகைப்படம் வெளியிட்டு இருக்கிறேன். வரிசையாக குளிர்பான குப்பிகளை கட்டித் தொங்க விட்டிருப்பதைப் பார்த்தீர்களா? இது எதற்காக என்று யாருக்காவது தெரிந்தால், பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்! அது எதற்கு என்பதை அடுத்த பதிவில் நான் சொல்வதற்குள்! :)

   
தொடர்ந்து பயணிப்போம்......

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

ஞாயிறு, 30 மார்ச், 2014

பூப்பூவாய் பூத்திருக்கு....
பூக்களில் தான் எத்தனை வகைகள்! பூக்களைப் பார்த்துக் கொண்டே இருக்கலாம் என்று தோன்றும். மனதுக்குக் கொஞ்சம் கஷ்டமாக இருக்கும்போது ஏதோ ஒரு பூங்காவிற்குச் சென்று அங்கிருக்கும் பூக்களைப் பார்த்தாலே மகிழ்ச்சி பொங்கும் என நினைக்கிறேன்!பூக்களைப் பற்றி நினைக்கும் போது சில வருடங்களுக்கு முன்னர் படித்த ஒரு கவிதை நினைவுக்கு வர, அதைத் தேடினேன். பூக்களைப் பார்க்கு முன்னர் அந்த கவிதையைப் பார்க்கலாமா?

செடியில் பூக்கும் சிலபூக்கள்
மரத்தில் பூக்கும் சிலபூக்கள்
கொடியில் பூக்கும் சிலபூக்கள்
கொஞ்சும் அழகாய் இப்பூக்கள்!

நீரில் பூக்கும் சிலபூக்கள்
நிலத்தில் பூக்கும் சிலபூக்கள்
நாரில் இணைக்கக் கதம்பமென
நாளும் சிரிக்கும் இப்பூக்கள்!

காலையில் பூக்கும் சிலபூக்கள்
கண்ணைப் பறிக்கும் சிலபூக்கள்
மாலை அந்தி இரவினிலே
மலரும் மயக்கும் சிலபூக்கள்!

வெண்மை நிறத்தில் சிலபூக்கள்
வண்ண வண்ணமாய் சிலபூக்கள்
எண்ணம் தன்னை ஈர்க்கின்ற
எழிலின் வடிவாய் சிலபூக்கள்!

வாச மின்றிச் சிலபூக்கள்
வாசம் தூக்கும் சிலபூக்கள்
பூசை செய்ய சிலபூக்கள்
பிணத்தின் மாலையாய் சிலபூக்கள்!

வகைவகைப் பூக்கள் மலர்ந்திருக்கும்
வையம் முழுதும் மணந்திருக்கும்
தொகைதொகை தொகையாய் பலருக்கும்
வாழ்வை யளிக்கும் இப்பூக்கள்!

இந்தக் கவிதையினை எழுதியவர் வெற்றிப்பேரொளி!


கவிதையை ரசித்தீர்களா? இப்போது இயற்கையின் கவிதையை ரசிக்கலாம் வாருங்கள்!


யாருப்பா அது பிங்க் கலரு சிங்குச்சான்னு பாடறது?


’எனக்குள்ளும் வேறு வண்ணமுண்டு.... 
அதை உன்னிடம் சொல்வதெப்போ?


’பெரிசானதும் நாங்க எப்படி இருப்போம்னு பார்க்க வந்தோம்’- சொல்லாமல் சொல்கிறதோ அந்த மொட்டுக்கள்?
 ’நடுவில் என்னை அடித்தது யார்? 
பாருங்க கருரத்தம் கட்டிக் கொண்டது போலாகி விட்டது!’


’கருப்பு சிவப்புன்னு நினைச்சுடாதீங்க....
தேர்தல் சமயத்தில் பலருக்கு எல்லாமே கட்சிக் கொடி மாதிரி தோணுது!’


 ’நாங்க புதுசா கட்டிக்கிட்ட ஜோடிதானுங்க!’
ஜோடிப் பொருத்தம் சரியா இருக்கா?


’வெள்ளை மனம் கொண்ட பிள்ளை ஒண்ணு....”


’அப்படி என்ன எனக்கு அதிக வயசாயிடுச்சு
எனக்கு கையில குச்சி கொடுத்துட்டீங்களே ராசா?’
 


’ஹலோ... உங்களுக்கு ஒரு ரகசியம் சொல்லட்டா?
எனக்கு வெல்வெட் மேனி’


 ’எனக்கு கொஞ்சம் வெட்கம் அதிகம்! 
அதான் தலை குனிந்து நிக்கறேன்!


என்ன நண்பர்களே, இந்த வாரம் பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா? அடுத்த ஞாயிறன்று வேறு சில புகைப்படங்களைப் பார்க்கலாம்.மீண்டும் சந்திக்கும் வரை....நட்புடன்.....வெங்கட்.

புது தில்லி.


சனி, 29 மார்ச், 2014

ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்!
சில நாட்களுக்கு முன் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டில் திருமணம். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. அழைப்பில் ஒரு குறிப்பு – “எந்த வித அன்பளிப்பும் கொண்டுவந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்”.  நண்பரிடம் கேட்ட போதும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டார். கேட்டதற்கு திருமணத்திற்கு வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும்என்று சொல்லி விட்டார்.

நண்பர் ஒரு சர்தார்ஜி. அதிலும் நாம்தாரி எனும் வகுப்பினைச் சேர்ந்தவர்.  இவர்களின் குருவான சத்குரு ராம் சிங் ஜி இவர்களுக்குச் சொல்லிய முக்கியமான கட்டளைகளில் ஒன்று எளிமை. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் எளிமையைச் சொன்ன அவர், திருமணங்களையும் மிகவும் எளிமையாகவே நடத்தும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.


படம்: இணையத்திலிருந்து....


நாம்தாரி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் அசைவ உணவு உண்பதில்லை. அகிம்சை வழியில் வாழ்வதை விரும்புவர்கள். இவர்கள், ‘ஆனந்த் கரஜ்என அழைக்கும் திருமணத்திற்காக செலவு ஏதும் செய்வதில்லை. வரதட்சிணை வாங்குவதும் கொடுப்பதும் அறவே தடை செய்யப்பட்ட ஒன்று. கல்யாண ஊர்வலங்கள், மற்றும் விதம் விதமான சடங்குகள் அனைத்தையும் மாற்றி மிகவும் எளிமையான திருமண விதிகளை இந்த வகுப்பினரின் குரு 1863-ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.

ஒரே சமயத்தில் பல ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடத்துவதன் மூலம் உணவுச் செலவும் குறைந்து விடும் என ஒரே சமயத்தில் 50 அல்லது 100 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தாராம். திருமணத்தின் போது பெண்களை விலை பேசுவது போல வரதட்சணை கொடுப்பதும், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதும் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும் என போதித்து இருக்கிறார் இவர். 

இப்பவும் இந்த வகுப்பினர் தங்களது குரு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர் என்பதை நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்றபோது கவனிக்க முடிந்தது.

திருமணம் அவர்களது வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் தான் நடந்தது.  இந்து திருமணங்களில் இருப்பது போல அக்னியை ஏழு முறை வலம் வருவது இவர்களது முறையில் நான்காக குறைக்கப்பட்டு இருக்கிறது. மணமகள்-மணமகன் ஆகியோருக்கான உடை என்ன நிறம் தெரியுமா? வெள்ளை.  வெள்ளை குர்தா-பைஜாமாவில் மணமகனும், வெள்ளை சல்வார்-கமீஸில் பெண்ணும் இருக்க, நான்கு முறை அக்னியை வலம் வந்தபின் குருத்வாராவில் கிடைக்கும் அம்ருத் பானியை இருவரும் குர்பானி எனும் அவர்களது வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லி அருந்துகிறார்கள்.

இன்னும் சில சின்னச் சின்னதான சமாச்சாரங்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில்.  திருமணம் நடந்த பின் மணமகள் வீட்டினரோ அல்லது மணமகன் வீட்டினரோ கண்டிப்பாக பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ளக் கூடாது. மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் தெரிந்தவர்களும் பரிசுப் பொருட்கள் தரக் கூடாது.  வந்திருக்கும் அனைவருக்கும் குருத்வாராவில் அளிக்கும் ‘லங்கர்’-ல் உணவு இலவசமாகவே வழங்கப்படும்.

கல்யாணத்திற்கான கட்டணமாக ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா மட்டுமே வசூலிக்கப்படும். அதுவும் குருத்வாராவின் உண்டியலில் சேர்க்கப்படும். இன்றளவும் இந்த கட்டணம் ஒன்றே கால் ரூபாய் மட்டுமே! கல்யாணம் முடிந்த பின் மணமகள் நேராக மணமகனின் வீட்டிற்குச் செல்வார். அங்கே குறைந்தது பதினைந்து தினங்களாவது இருந்த பிறகு தான் தன்னுடைய வீட்டிற்கு கணவனுடன் சென்று வருவார். இப்போதைய திருமணங்களின் வழக்கமான ‘வரவேற்புசமாச்சாரங்களும் கண்டிப்போக இல்லை!

இப்படி ஒரு எளிமையான திருமணம் நமது ஊரில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் நடக்கும் திருமணங்களிலும் செலவுகள் நிறையவே.....  ஒவ்வொரு திருமணத்திலும் நடக்கும் செலவுகள், பண விரயம் இவற்றை எல்லாம் பார்க்கும்போது இந்த ஒன்றேகால் ரூபாய் திருமணம் மிகவும் நல்லதாகத் தோன்றுகிறது!

இயக்குனர் விசு அவர்களின் ஒரு படத்தில், மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து மகளின் திருமணத்தினை நடத்தி முடிப்பார். பார்க்கும் எல்லாமே அவருக்கு வீணாகப் போன காசாகத் தெரியும். அதிலும் திருமணத்திற்கு வந்தவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது மீதி வைத்துப் போகும் உணவுப் பொருட்கள் எல்லாமே இலையில் கொட்டிய காசாக அவருக்குத் தெரியும்.

இந்த திருமணத்தின் முறைகளைப் பார்த்தபோது எனக்கு மேலே சொன்ன படத்தின் காட்சிகள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.  விதம் விதமான பல மனிதர்கள்....  விதம் விதமான பழக்க வழக்கங்கள்...... எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது எனத் தோன்றியது எனக்கு! உங்களுக்கு?

தொடர்ந்து சந்திப்போம்........

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 28 மார்ச், 2014

ஃப்ரூட் சாலட் – 86 – பஞ்சரத்னா – குக்கூ பாடல் – சிகரெட்....இந்த வார செய்தி:1995-ஆம் வருடம். ரமா தேவி எனும் பெண்மணிக்கு ஒரே பிரசவத்தில் ஐந்து குழந்தைகள் – நான்கு பெண்கள், ஒரே ஒரு ஆண். உத்திரம் நாளில் பிறந்ததால், அந்த குழந்தைகளுக்கு உத்ரா, உத்ரஜா, உத்ரஜன், உத்தாரா, உத்தமா என பெயர் வைத்தார்கள் குழந்தையின் பெற்றோர்கள். அவர்கள் இருந்த வீடு பஞ்சரத்னா என அழைக்கப்பட்டது. பள்ளியில் அவர்கள் சேர்ந்தபோதும், அவர்கள் சபரிமலை பயணம் சென்ற போதும் அதை நாளிதழ்களில் எழுதினார்களாம்!

குழந்தைகள் பிறந்த ஏழாம் வருடம் – குழந்தையின் தந்தை தற்கொலை செய்து கொண்டுவிட, தாய் ரமாதேவி ஒரு இதய நோயாளியாக இருந்தும், தனது வாழ்க்கையில் பிடித்தம் வைத்திருக்க ஒரே காரணம் – தனது குழந்தைகள். தெரிந்தவர்கள் சிலர் செய்த உதவிகளினால் குழந்தைகளை வளர்த்து வந்தார். மாவட்ட கூட்டுறவு வங்கியில் வேலை கிடைக்க அவருக்கு பண உதவி செய்தவர்கள் அனைவரும் பணத்தினைத் திரும்பிக் கேட்க, அனைவருக்கும் திருபித்தந்து விடுவதாக பத்திரம் எழுதிக் கொடுத்திருக்கிறார். கிட்டத்தட்ட நான்கு லட்சம் கடனையும் திருப்பிக் கொடுத்து விட்டார். 

இப்போது அந்த ஐந்து குழந்தைகளும் பத்தாம் வகுப்பில் நல்ல மதிப்பெண் பெற்று தேறி விட்டார்கள். ரமா தேவியின் ஒரே வருத்தம் தனது குழந்தைகளை சுற்றுலா கூட்டிச் செல்ல முடியவில்லையே என்பது தான்! வருடம் ஒரு முறை குருவாயூர் கோவில் செல்வதைத் தவிர வேறெங்கும் போக முடியவில்லையாம்!

தனது குடும்பத்தினை நல்ல விதமாகக் காப்பாற்ற முடியாது என்று தற்கொலை செய்து கொண்ட தகப்பனை விட, தனது உடல் நிலை சரியில்லாவிட்டாலும் குழந்தைகளுடைய நல்ல எதிர்காலத்திற்காக போராடும் தாய் ரமாதேவிக்கு நமது பாராட்டுகள்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

பெண்ணின் நெற்றியில் இருக்கும் பொட்டு,
ரெகார்ட் பட்டனைத்தான் நினைவுபடுத்துகிறது.

பத்து வருஷ, இருவது வருஷ பஞ்சாயத்து எல்லாம் கரெக்டா ஞாபகத்தில் இருக்கு இவங்களுக்கு.


இந்த வார குறுஞ்செய்தி:

உங்களிடம் என்ன இல்லை என்பதைப் பற்றி யோசிக்காதீர்கள்; உங்களிடம் இருப்பதையும் அதை எப்படி பயன்படுத்துவது என்பது பற்றியும் யோசியுங்கள்.


இந்த வார ரசித்த புகைப்படம்:Excuse me…..  என்னையா ஃபோட்டோ புடிக்கறீங்க! நான் இன்னும் ட்ரஸ்ஸே போடலை...... 

இந்த வார ரசித்த பாடல்:

குக்கூபடத்திலிருந்து ஒத்த நொடியில தான்”....  பாடல்.  முதல் முறை கேட்கும்போதே பிடித்த பாடல்.....  இனிமையான இந்த பாடலை நீங்களும் ரசிக்க....
ரசித்த கார்ட்டூன்:படித்ததில் பிடித்தது:

சிகரெட் ஒரு அபத்தமான பழக்கம். இதைச் சொல்லுவதற்கு என்னை விட தகுதியுள்ளவர்கள் வேறு எவரும் இல்லை. நான் கதாசிரியன். நான் எழுதுவதற்கும், சிந்திப்பதற்கும், சிகரெட் உதவி செய்கிறது என்று பொய்யாக நம்பி வந்தேன். சிகரெட் என்னுடைய மனோநிலையைச் சமன் செய்கிறது என்று இன்னொரு அசட்டு நம்பிக்கையும் எனக்குள் இருந்தது. இவை எல்லாமும் பொய். கலப்படமற்ற பொய்.

சிகரெட் என்ற கொடிய பழக்கத்தை நான் ஏற்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், அதிகப்படுத்திக் கொள்ளாமல் இருந்தால், இன்னும் ஆரோக்கியமாக இன்னும் தெளிவாக, இன்னும் அமைதியாக இருந்திருப்பேன்.

உங்களில் எவருக்கேனும் இந்தப் பழக்கம் இருந்தால், உடனடியாக அதை அறுத்தெறியும் வேகத்தை மேற்கொள்ளுங்கள். சட்டென்று விடுதலை பெறும் எண்ணத்தை வளர்த்துக் கொள்ளுங்கள். செயலாக்குங்கள். ஒவ்வொரு இந்தியனுக்கும் கௌரவமும், கம்பீரமும் ஐம்பது வயதிற்கு மேல் தான் கிடைக்கின்றன. அந்த எண்ணிக்கையைத் தாண்டாமல் நீங்கள் இறந்து போவீர்கள் எனில், இதைவிட துரதிர்ஷ்டம் வேறு எதுவும் இல்லை. எனவே, சிகரெட்டிலிருந்து உடனடியாக விடுதலை பெறுங்கள்.

இதைச் சொன்னது நான் இல்லீங்க்ணா! இதைச் சொன்னவர் பாலகுமாரன்..... 

என்ன நண்பர்களே, இந்த வார ஃப்ரூட்சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.