சனி, 29 மார்ச், 2014

ஒண்ணேகால் ரூபாய் கல்யாணம்!
சில நாட்களுக்கு முன் அலுவலக நண்பர் ஒருவர் வீட்டில் திருமணம். எனக்கும் அழைப்பு வந்திருந்தது. அழைப்பில் ஒரு குறிப்பு – “எந்த வித அன்பளிப்பும் கொண்டுவந்தால் ஏற்றுக் கொள்ள மாட்டோம்”.  நண்பரிடம் கேட்ட போதும் கண்டிப்பாக ஏற்றுக் கொள்ள மாட்டோம் என்று சொல்லி விட்டார். கேட்டதற்கு திருமணத்திற்கு வந்து பாருங்கள் உங்களுக்கே புரியும்என்று சொல்லி விட்டார்.

நண்பர் ஒரு சர்தார்ஜி. அதிலும் நாம்தாரி எனும் வகுப்பினைச் சேர்ந்தவர்.  இவர்களின் குருவான சத்குரு ராம் சிங் ஜி இவர்களுக்குச் சொல்லிய முக்கியமான கட்டளைகளில் ஒன்று எளிமை. வாழ்க்கையில் கடைபிடிக்க வேண்டிய முக்கியமான விஷயங்களில் எளிமையைச் சொன்ன அவர், திருமணங்களையும் மிகவும் எளிமையாகவே நடத்தும்படி அறிவுறுத்தி இருக்கிறார்.


படம்: இணையத்திலிருந்து....


நாம்தாரி வகுப்பினைச் சேர்ந்தவர்கள் அசைவ உணவு உண்பதில்லை. அகிம்சை வழியில் வாழ்வதை விரும்புவர்கள். இவர்கள், ‘ஆனந்த் கரஜ்என அழைக்கும் திருமணத்திற்காக செலவு ஏதும் செய்வதில்லை. வரதட்சிணை வாங்குவதும் கொடுப்பதும் அறவே தடை செய்யப்பட்ட ஒன்று. கல்யாண ஊர்வலங்கள், மற்றும் விதம் விதமான சடங்குகள் அனைத்தையும் மாற்றி மிகவும் எளிமையான திருமண விதிகளை இந்த வகுப்பினரின் குரு 1863-ஆம் ஆண்டிலேயே ஏற்படுத்திக் கொடுத்து விட்டார்.

ஒரே சமயத்தில் பல ஜோடிகளுக்குத் திருமணங்கள் நடத்துவதன் மூலம் உணவுச் செலவும் குறைந்து விடும் என ஒரே சமயத்தில் 50 அல்லது 100 ஜோடிகளுக்கு திருமணம் செய்து வைப்பதும் இவர் வழக்கத்திற்குக் கொண்டு வந்தாராம். திருமணத்தின் போது பெண்களை விலை பேசுவது போல வரதட்சணை கொடுப்பதும், பெண் குழந்தைகளை கருவிலேயே அழிப்பதும் நிச்சயம் தடுக்கப்பட வேண்டும் என போதித்து இருக்கிறார் இவர். 

இப்பவும் இந்த வகுப்பினர் தங்களது குரு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர் என்பதை நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்றபோது கவனிக்க முடிந்தது.

திருமணம் அவர்களது வழிபாட்டுத் தலமான குருத்வாராவில் தான் நடந்தது.  இந்து திருமணங்களில் இருப்பது போல அக்னியை ஏழு முறை வலம் வருவது இவர்களது முறையில் நான்காக குறைக்கப்பட்டு இருக்கிறது. மணமகள்-மணமகன் ஆகியோருக்கான உடை என்ன நிறம் தெரியுமா? வெள்ளை.  வெள்ளை குர்தா-பைஜாமாவில் மணமகனும், வெள்ளை சல்வார்-கமீஸில் பெண்ணும் இருக்க, நான்கு முறை அக்னியை வலம் வந்தபின் குருத்வாராவில் கிடைக்கும் அம்ருத் பானியை இருவரும் குர்பானி எனும் அவர்களது வழிபாட்டு மந்திரங்களைச் சொல்லி அருந்துகிறார்கள்.

இன்னும் சில சின்னச் சின்னதான சமாச்சாரங்கள் மட்டுமே இவர்களது திருமணத்தில்.  திருமணம் நடந்த பின் மணமகள் வீட்டினரோ அல்லது மணமகன் வீட்டினரோ கண்டிப்பாக பரிசுப் பொருட்களை பரிமாறிக்கொள்ளக் கூடாது. மணமக்களை வாழ்த்த வந்திருக்கும் தெரிந்தவர்களும் பரிசுப் பொருட்கள் தரக் கூடாது.  வந்திருக்கும் அனைவருக்கும் குருத்வாராவில் அளிக்கும் ‘லங்கர்’-ல் உணவு இலவசமாகவே வழங்கப்படும்.

கல்யாணத்திற்கான கட்டணமாக ஒரு ரூபாய் இருபத்தி ஐந்து பைசா மட்டுமே வசூலிக்கப்படும். அதுவும் குருத்வாராவின் உண்டியலில் சேர்க்கப்படும். இன்றளவும் இந்த கட்டணம் ஒன்றே கால் ரூபாய் மட்டுமே! கல்யாணம் முடிந்த பின் மணமகள் நேராக மணமகனின் வீட்டிற்குச் செல்வார். அங்கே குறைந்தது பதினைந்து தினங்களாவது இருந்த பிறகு தான் தன்னுடைய வீட்டிற்கு கணவனுடன் சென்று வருவார். இப்போதைய திருமணங்களின் வழக்கமான ‘வரவேற்புசமாச்சாரங்களும் கண்டிப்போக இல்லை!

இப்படி ஒரு எளிமையான திருமணம் நமது ஊரில் எங்காவது கேள்விப்பட்டதுண்டா? சீர்திருத்த திருமணம் என்ற பெயரில் நடக்கும் திருமணங்களிலும் செலவுகள் நிறையவே.....  ஒவ்வொரு திருமணத்திலும் நடக்கும் செலவுகள், பண விரயம் இவற்றை எல்லாம் பார்க்கும்போது இந்த ஒன்றேகால் ரூபாய் திருமணம் மிகவும் நல்லதாகத் தோன்றுகிறது!

இயக்குனர் விசு அவர்களின் ஒரு படத்தில், மிகவும் கஷ்டப்பட்டு பணம் சேர்த்து மகளின் திருமணத்தினை நடத்தி முடிப்பார். பார்க்கும் எல்லாமே அவருக்கு வீணாகப் போன காசாகத் தெரியும். அதிலும் திருமணத்திற்கு வந்தவர்கள் பந்தியில் அமர்ந்து சாப்பிடும்போது மீதி வைத்துப் போகும் உணவுப் பொருட்கள் எல்லாமே இலையில் கொட்டிய காசாக அவருக்குத் தெரியும்.

இந்த திருமணத்தின் முறைகளைப் பார்த்தபோது எனக்கு மேலே சொன்ன படத்தின் காட்சிகள் மனத்திரையில் ஓடிக் கொண்டிருந்தது.  விதம் விதமான பல மனிதர்கள்....  விதம் விதமான பழக்க வழக்கங்கள்...... எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது எனத் தோன்றியது எனக்கு! உங்களுக்கு?

தொடர்ந்து சந்திப்போம்........

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

60 கருத்துகள்:

 1. எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது //

  ஆம், நல்லது தான்.
  திருமண முறை மிக நன்றாக இருக்கிறது.
  பகிர்வுக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோமதிம்மா...

   நீக்கு
 2. கண்டிப்பாக இந்த எளிமையை நாமும் கடைபிடிப்போம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரீகன் ஜோன்ஸ்.

   நீக்கு
 3. //எங்கே நல்ல விஷயம் இருந்தாலும் எடுத்துக் கொள்வது நல்லது// இநத நாளில் இப்படி ஒரு எளிமையான திருமணமா? தகவல் ஆச்சர்யம் அளித்தது! பகிர்விற்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   நீக்கு
 4. நாம்தாரி வகுப்புத் திருமணத்தைக் கண்முன்னே கொண்டுவ்ந்து நிறுத்திட்டீங்க. ஆடம்பரமில்லா எளிய திருமணங்கள் வரவேற்கத்தக்கதே.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தர்.

   நீக்கு
 5. இப்பவும் இந்த வகுப்பினர் தங்களது குரு சொன்ன வார்த்தைகளுக்குக் கட்டுப்படுகின்றனர் என்பதை நண்பரின் இல்லத் திருமணத்திற்குச் சென்றபோது கவனிக்க முடிந்தது./

  நல்ல விஷயங்களை கவனித்துப் பகிர்ந்தமைக்குப் பாராட்டுக்கள்..!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி.

   நீக்கு
 6. இந்த எளிமை இங்கு வருவது மிக மிக மிக சிரமம்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 7. னாடம்பர செலவு வீண் என்பது உண்மைதான். எப்போ நம்ம மக்கள்ஸ் உணருவார்களோ? :(((((

  ஃபிஜி குஜராத்தியர்கள் கல்யாணத்துக்கு நெருங்கிய சொந்தம் தவிர மற்றவர்கள் அளிக்கும் மொய்ப்பணம், குடும்பத்துக்கு ரெண்டேகால் டாலர் மட்டுமே! அதுக்கு மேல் மொய் எழுத அனுமதி இல்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   ஃபிஜி குஜராத்திகள் கல்யாணத்தில் ரெண்டே கால் டாலர் மொய்ப்பணம்... இது கூட நல்லாத் தான் இருக்கு...

   நீக்கு
 8. இந்த மாதிரி எளிமையாக திருமணம் நடத்த முயற்சித்தால் - முதலில் நம்மவர்களே - நம்மை ஏளனமாகப் பேசுவார்கள்..

  ஆடம்பரமில்லாத எளிய திருமணங்கள் நிகழ வேண்டியது காலத்தின் கட்டாயம்!...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ.

   நீக்கு
 9. இப்படி நம் ஊரிலும் திருமணம் நடந்தால் பொண்ணை பெத்தவங்க நிம்மதி பெருமூச்சு விடுவாங்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராஜி.

   நீக்கு
 10. புதிய தகவலை பகிர்ந்தமைக்கு நன்றி! எளிமையான முறையில் திருமணம் செய்யவேண்டும் என சொல்பவர்கள் கூட அவர்கள் வீட்டுத் திருமணத்தில் அதை கடை பிடிப்பதில்லை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 11. ரசித்தேன். இம்மாதிரி திருமணங்கள் வரவேற்கத்தக்கவை.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.

   நீக்கு
 12. நல்லதொரு தகவல் வீணான ஆடம்பரச் செலவுகளைத் தவிர்த்தால்
  மனதிற்கும் அமைதியைக் கொடுக்கும் இது போன்ற திருமணங்களை
  வரவேற்பதே அதற்குரிய மிகச் சிறந்த யுக்தி .நல்லன எங்கெல்லாம்
  இருக்கிறதோ அதைத் தேடிக் கற்றுக் கொள்ளலும் வழி நடத்தலுமே
  மிகச் சிறப்பான வாழ்விற்கு வழி வகுக்கும் .வாழ்த்துக்கள் சகோதரா
  தங்கள் தேடல்கள் மென்மேலும் சிறப்பாகத் தொடரட்டும் .த .ம.5

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அம்பாளடியாள்.

   நீக்கு
 13. புதிய தகவல்! இதே பொண்ற திருமணங்கள் நடந்தால் நாட்டில் பல இழப்புக்க்களைத் தவிர்க்கலாம்! நம்மூரில் இது சாத்தியமா? சந்தேகமே! வந்தால் நன்றாகத்தான் இருக்கும்! பெண்ணைப் பெற்றொரின் வயிற்றில் பால் வார்த்தது போன்று இருக்கும்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   நீக்கு
 14. அறியாத தகவல்! எளிமையான திருமணம் வரவேற்கப்பட வேண்டிய ஒன்று! குறைந்த பட்சம் வெட்டிச்செலவுகளையாவது நம்மவர்கள் குறைக்கலாம்! நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்

   நீக்கு
 15. இந்த மாதிரி எல்லோரும் செய்ய முன்வரவேண்டும். சாப்பாடு வீணாவது அநியாயம். அதுவும் நம்நாட்டில் பல்லாயிரக்கணக்கான மக்கள் உணவின்றி வாட, நாம் கல்யாணத்திற்குப் போய் சாப்பாடை வீணடிப்பது மிகப்பெரிய குற்றம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.

   நீக்கு
 16. ஆச்சரியமான அருமையான திருமணம்
  படிக்கவே சந்தோஷமாக இருக்கிறது
  இதனைப் பதிவாக்கி அனைவரும்
  அறியத் தந்தமைக்கு நல்வாழ்த்துக்கள்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி.

   நீக்கு
 17. கேள்விப் பட்டிருக்கேன். நாம்தாரி திருமணம் குறித்து. பார்த்தது இல்லை. மஹாராஷ்டிரத் திருமணங்களும் எளிமையாக இருக்கும்னு என் கணவர் சொல்லி இருக்கார். பிள்ளை பக்கம் பத்துப் பேர், பெண் பக்கம் பத்துப் பேர் மட்டும் கலந்துப்பாங்களாம். ஆனால் பரிசெல்லாம் கொடுக்கிறாங்க.துணி வாங்கறது, சாப்பாடு கிராண்டா ஏற்பாடு செய்யறதுனு எல்லாம் இல்லை. பருத்தி ஆடை தான் பெண்ணுக்கும், பிள்ளைக்கும். கருகமணிச் சரம் தான் தாலி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   நீக்கு
 18. இந்த எளிமையான திருமணங்கள் அன்று முதல் இன்று வரை கடைபிடிக்கப்படுகிறது என்பது மிகவும் ஆச்சர்யமான செய்தியாக உள்ளது. பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 19. ”ஓ அப்படியா .!” என்று வியந்துவிட்டுநாம் செய்வதைத் தொடர்ந்து செய்வோம் காஞ்சி பரமாச்சாரியரின் ஆசிகளுடன் என்று திருமணப் பத்திரிக்கை அடித்துவிட்டு அவர் எதிர்ப்பு தெரிவித்திருந்த பட்டுச் சேலையிலும் வேட்டியிலும் தக தகப்போம். அறியாத விஷயம் பதிவில் நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி GMB சார்.

   நீக்கு
 20. நாட்டில் எத்தனையோ சத்குருக்கள் ,ஆனால் இவர்களின் குரு ராம் சிங் ஜி மட்டும்தான் உண்மையான சத்குருவாக இருக்கிறார் ,மற்றவர்கள் சத்ருக்கள் போலிருக்கிறகிறார்கள் !
  த ம +1

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 21. தாங்கள் குறிப்பிடும் திருமணம் வியப்பினை அளிக்கிறது ஐயா.
  இதுபோன்ற திருமணங்கள் தமிழகத்தில் நடைபெறுவது எந்நாளோ-
  ஏக்கம்தான் மிஞ்சுகிறது

  பதிலளிநீக்கு
 22. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

  பதிலளிநீக்கு
 23. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கோவை ஆவி.

   நீக்கு
 24. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உஷா சித்தி.

   நீக்கு
 25. எளிமை இல்லை, ரொம்ப ரொம்ப எளிமை.

  இந்தியாவைல் இன்னும் 25 பைசா உள்ளதா என்ன?. எப்படி 1.25 ரூபாய்?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது முதல் வருகை யாசிர்.... மிக்க மகிழ்ச்சி.

   அரசைப் பொருத்தவரை 25 பைசா நாணயம் செல்லாக் காசு! ஆனாலும் இன்னும் மக்களிடம் இருக்கத்தான் செய்கிறது!

   நீக்கு
 26. சென்ற வாரம் தினப்பத்திரிகைகளில் வந்த செய்தி - “திருமணத்தில் மட்டன் பிரியாணிக்குப் பதில் சிக்கன் பிரியாணி போட்டதால் திருமணத்தை நிறுத்திய மணமகன் வீட்டார்.” வந்த கோபத்தைத் தணித்தது உங்கள் ஒண்ணேகால் ரூபாய் கல்யாணச் செய்தி. மணமக்கள் இனிதே வாழ்க.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடடா.... ஒரு பிரியாணி இவர்கள் வாழ்க்கையை விளையாட்டாக்கி விட்டதே!

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பத்மநாபன் அண்ணாச்சி...

   நீக்கு
 27. புதிய தகவல். பாராட்டப்பட வேண்டிய விஷயம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்....

   நீக்கு
 28. ஆச்சர்யமாக இருந்தது, புதிய தகவலுக்கு நன்றி.....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்க்கும் மிக்க நன்றி மஹேஷ் பிரபு.

   நீக்கு
 29. இங்கு திருமணங்கள் பெருமை பேச வேண்டும் என்பதற்க்காக மட்டுமே விரிவாக ஆடம்பரத்துடன் நடைபெறுகிறது.பல நமக்கு வர வேண்டிய வரவை வசூலிக்கவும் நடைபெறும் .அந்த எளிமையை ஏற்றுக் கொள்வது மிகச்சிரமம் .

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீனிவாசன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....