தமிழ்மணம் நட்சத்திர வாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தமிழ்மணம் நட்சத்திர வாரம் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

ஞாயிறு, 16 அக்டோபர், 2011

என்றும் இருபத்தி எட்டு




தில்லி வந்த முதல் நாள் என்னை அலுவலகத்திலிருந்து கரோல் பாக் அழைத்துச் சென்றவர் பத்மா. பத்தொன்பது வருடங்கள் கழிந்திருந்தாலும், அன்று எப்படி இருந்தாரோ அப்படியே இன்றளவும் இருக்கிறார். என் மேல் அபரிமிதமான அன்பை பொழிந்து பாசத்தைக் கொட்டும் ஒரு நல்ல உள்ளம்.

பக்த  பிரகலாதனுக்கு மார்க்கண்டேயனுக்கு  வயது எப்படி என்றும் பதினாறோ, அது போலவே பத்மாவிற்கு இடுப்பளவு என்றும் இருபத்தி எட்டு. அவரது உடலில் எந்த மாற்றமும் இல்லை. அவர் கல்லூரியில் படித்த காலத்தில் தைத்த உடைகள் இன்றும் அவருக்கு கச்சிதமாக பொருந்துகிறது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! எங்கள் அலுவலகத்தில் அவரைப் பார்த்தால் பொறாமைப் படாதவர்களே கிடையாது!.

நான் அவரை விட சிறியவனாக இருந்தும், அன்று பென்சில் போல இருந்தவன், இன்று தொப்பையும் தொந்தியுமாக காணப்படுகிறேன். அவரோ "அன்று பார்த்த கண்ணுக்கு அழிவில்லாமல் அப்படியே இருக்கிறார்". இத்தனைக்கும் இந்த கால கட்டத்தில் பத்மாவிற்கு திருமணம் முடிந்து ஒரு குழந்தையும் பிறந்து, அக்குழந்தையே இன்று எட்டாம் வகுப்பில் படிக்கிறது! . பொதுவாக கல்யாணம் ஆனவர்கள் சந்தோஷத்தில் குண்டாகி விடுவார்கள் என்று சொல்வது போல் இல்லாமல், இப்போதும் அப்படியே இருக்கிறார்.

மற்றவர்கள் பொறாமைப்படும்படியாக இருப்பவர் "உடம்பெல்லாம் அப்படியே இருந்து என்ன பண்றது? தலயிலே இருந்த முடியெல்லாம் கொட்டி 'சொட்டையாகி' விட்டதே!" என்று ஒரேயடியாக கவலைப்படும் பத்மா என்று எங்களால் செல்லமாக அழைக்கப்படும் பத்மநாபன் [என்னுடைய பகிர்வுகளில் ஈஸ்வரன் என்ற பெயரில் கருத்துகள் இடுபவரும் இவரே!] அண்ணாச்சியை என்னத்தைச் சொல்லி தேற்றுவது?

அதனால் தான் என்னுடைய முந்தைய பதிவான மஞ்சள் மகிமை-க்கு அவர் இப்படி பின்னூட்டம் போட்டுள்ளார்!


"அண்ணாச்சி! இந்த Fevicol - தலையில் தேய்க்க முடியுமான்னு ஒண்ணு கேட்டு சொல்லுதேளா! நமக்கும் தலையில முடி முளைச்ச மாதிரி ஆச்சுல்லா!"
மீண்டும் சந்திப்போம்

வெங்கட்
புது தில்லி.


பின் குறிப்பு:  இன்று ஞாயிறு மாலை.  தமிழ்மணம் இந்த வார நட்சத்திரம் என்று என்னைத் தெரிந்தெடுத்து கடந்த 10.10.2011 திங்கள் முதல் இன்று வரை இந்த ஏழு நாட்களில், காலையில் ஒரு புதிய பகிர்வும், மாலையில் ஒரு மீள்பதிவும் ஆக 14 இடுகைகள் போட்டு இருக்கிறேன்.  இந்த வாரம் முழுவதும் என் பக்கத்திற்கு வந்து பதிவுகளைப் படித்த, கருத்தளித்த, வாக்குகள் அளித்த அனைவருக்கும் மிக்க நன்றி. இனி வழக்கம்போல் வாரத்திற்கு ஒன்றோ இரண்டோ பகிர்வுகள் தொடரும். 

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்


கூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?



சில நாட்களுக்கு முன் தில்லியில் நடந்த ஒரு நிகழ்ச்சிதான் மேலே கேட்டகூட்டுக் குடும்பத்தை இழந்தோமா?” என்ற கேள்வியை என் மனதில் எழுப்பியது.  இன்றைய கால கட்டத்தில் பொருள் ஈட்டுவதற்காக சொந்த மண் விட்டு தேசத்தினுள் எந்த மூலைக்கும், ஏன் தேசத்தை விட்டு வெளி தேசத்திற்கும் சென்று விடுவது எல்லோருக்கும் தெரிந்தது தான்


அப்படிச் செல்லும் போது பொதுவாக நாம் மட்டுமோ அல்லது மனைவி-மக்கள் ஆகியோர் கூடவோதான் செல்கிறோம்.   அப்பா-அம்மா நம்முடன் வர இயல்வதில்லை.  ஆங்காங்கே தனித் தனிக் குடும்பங்களாக மாறி விட்டோம்

சரி என்னை யோசிக்க வைத்த அந்த நிகழ்ச்சிக்கு வருகிறேன்.  அலுவலகத்தில் இருக்கும் ஒரு சக ஊழியர், தனது உத்திரப் பிரதேச கிராமத்தினை விட்டு, மனைவி மற்றும் ஒன்றரை வயது சிறு மகனுடன் தில்லி வந்து வசித்துக் கொண்டிருக்கிறார்.  அவரது தாய்-தந்தை கிராமத்தில் இருக்கிறார்கள்

சென்ற மாதத்தில் ஒரு ஞாயிறு அன்று மனைவி வழக்கம் போல் சில காலை வேலைகளை செய்து  விட்டு துவைத்த துணிகளை  காயப் போட்டு அதற்கு கிளிப் போடாமல் சமையல் வேலை செய்யப் போய் இருக்கிறார்.  ஹாலில் இப்போது தான் தவழ்ந்து போய்  எதையாவது பிடித்து எழுந்து நிற்கத் தொடங்கிய தன்னுடைய குழந்தையுடன் விளையாடிக் கொண்டிருந்திருக்கிறார் நண்பர்

அப்போது மனைவி சமையலறையிலிருந்துவெளியில் காற்று பலமாக அடிக்கிறது, கிளிப் வேறு போடவில்லை, நீங்கள் கொஞ்சம் போட்டு விடுங்கள்என்று கணவரிடம் சொல்ல, அவரோ குழந்தை விளையாடிக்கொண்டு தானே இருக்கிறான் என்று  வெளியே சென்று கிளிப் போட்டுக்கொண்டிருக்க, சில வினாடிகளில் வீட்டினுள் இருந்து பலமான சத்தம்.  உள்ளே விரைந்து வந்து பார்த்தால்

ஹாலில் இருந்த குழந்தை தவழ்ந்து போய் அங்கிருந்த தொலைக்காட்சி வைத்திருந்த சக்கரங்கள் வைத்த மேஜையினைப் பிடித்துக் கொண்டு எழ முயற்சிக்க என்ன நடந்ததோ தெரியவில்லை, குழந்தை அப்படியே கவிழ்ந்து விழ, தொலைக்காட்சிப் பெட்டி குழந்தையின் மேல் விழுந்து சுக்கு நூறாகியது.  குழந்தைக்கு வெளிப்புறம் ஒன்றும் அடிபடவில்லை எனிலும் உள்காயம் பட்டு காது வழியே ரத்தம் கசிந்து இருக்கிறது.  உடனே மருத்துவமனைக்கு குழந்தையை எடுத்துச் சென்று எல்லா பரிசோதனைகளும் செய்து பார்த்து சிகிச்சைகள் செய்தும் பலனில்லாது இறந்து விட, யாரை நோவது என்று தெரியாமல் ஆழ்ந்த கவலையில் இருக்கிறார்கள் அந்த நண்பரும் அவரது மனைவியும்

நடந்ததற்கு என்ன காரணம்?  இது தெரியாமல் நடந்து விட்ட விபத்தா, வீட்டில் பெரியவர்கள் இருந்தால் குழந்தையுடன் எப்போதும் இருந்திருப்பார்களே என்று நினைப்பதா, குழந்தையைத் தனியே விட்டுச் சென்றது அத்தந்தையின் தவறோ, என்றெல்லாம் யோசித்தாலும் போன குழந்தையின் உயிர் திரும்பி வரப்போவதில்லை என்ற உண்மை நெஞ்சை அறைகிறது.

இப்போதெல்லாம் அப்பா-அம்மா, சித்தப்பா-சித்தி, அண்ணன்கள், தம்பிகள் அவர்களது குடும்பங்கள் என்று கூட்டுக் குடும்பமாக இருந்த காலமெல்லாம் மாறிப் போய் எல்லோரும் தனித் தனி தீவுகளாக மாறி விட்டோம்கூட்டுக் குடும்பம் என்ற ஒன்றே இல்லாது போய்விட்டதுஅப்படி மாறி விட்டதுதான்  தவறோ


குடும்பம் என்றால் என்ன என்று இப்போது கேட்டால் நிறைய பேர் இப்படி பதில் சொல்லக்கூடும் – “நான், என் மனைவி, மகன்/மகள்”.  தன்னைப் பெற்ற தாய்-தந்தை கூட இப்போது குடும்பத்தில் வருவதில்லை நிறைய வீடுகளில் என்பது வருத்தமான ஒரு விஷயம் என்பது என் கருத்து. நீங்கள் என்ன நினைக்கிறீர்கள்?

எது எப்படி இருந்தாலும், குழந்தையை இழந்த அந்த தாய்-தந்தையை என்ன சொல்லித் தேற்றுவது என்று புரியாமல் முழித்துக்கொண்டிருக்கிறோம் நானும் சக ஊழியர்களும்

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.

இந்த வார தமிழ்மணம் நட்சத்திரப் பகிர்வுகள்