கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
கலை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 19 ஆகஸ்ட், 2020

You Tube Channel – சில அறிமுகங்கள்

 


அனைத்து நண்பர்களுக்கும் இனிய காலை வணக்கம். இன்றைய பதிவை, நல்லதொரு வாசகத்துடன் ஆரம்பிக்கலாம். 

கற்றலை ஒருபோதும் நிறுத்த வேண்டாம்; ஏனென்றால் கற்பிப்பதை வாழ்க்கை ஒருபோதும் நிறுத்துவதில்லை! 

செவ்வாய், 2 அக்டோபர், 2018

ஞாயிறு, 17 டிசம்பர், 2017

கத்புத்லி – ஹேமமாலினி நடனம் – புகைப்படங்களும் காணொளியும்



சென்ற ஞாயிற்றுக்கிழமை திடீர் பயணம் – ஹரியானாவில் உள்ள ஜஜ்ஜர் எனும் மாவட்டத்தில் உள்ள ஒரு கிராமத்திற்கு! அங்கே சென்ற போது பார்த்த கத்புத்லி என்று இங்கே அழைக்கப்படும் பொம்மலாட்டம் பார்க்க முடிந்தது. அப்போது நான் எடுத்த புகைப்படங்களும், குழுவில் இருந்த நண்பரின் மகள் எடுத்த காணொளியும் இந்த ஞாயிறில் உங்கள் பார்வைக்கு.


ஞாயிறு, 12 பிப்ரவரி, 2017

இலை அடை – லிட்டி சோக்கா – ஹுனர் ஹாட்!



ஹிந்தியில் हुनर என்ற வார்த்தை ஒன்று உண்டு. ஆங்கிலத்தில் இதற்கு ஈடாக Art, Skill, Talent, Merit என்று பல வார்த்தைகள் உண்டு.  கலை, திறமை என தமிழிலும் அர்த்தம் சொல்லலாம்… நேற்றிலிருந்து தலைநகர் தில்லியில் हुनर हाट என்ற பெயரில் சில நாட்களுக்கு உணவு மற்றும் கலைப்பொருட்களின் திருவிழா! हाट என்ற ஹிந்தி சொல்லுக்கு Mart/அங்காடி என்ற அர்த்தம்.  மத்திய அரசின் Ministry of Minority Affairs முன்னின்று உணவு மற்றும் கலைத்திறமைகளை பரவச் செய்ய இந்த மாதிரி அங்காடிகளை தலைநகரில் சில நாட்களுக்கு நடத்துகிறார்கள்.

நேற்று தான் துவங்கியது என்றாலும், அலுவலக நாட்களில் அங்கே செல்வது முடியாத விஷயம் என்பதால் நேற்றே நானும், நண்பர் பத்மநாபனும் சென்று அங்கே இருக்கும் அங்காடிகள் அனைத்தையும் பார்த்து வந்தோம்.  நிறைய உணவு வகைகள், விதம் விதமான கலைப் பொருட்கள், என இந்தியாவின் பல மாநிலங்களிலிருந்தும் திறமைசாலிகள் வந்திருந்து இங்கே கடை வைத்திருக்கிறார்கள்.  பெரும்பாலான உணவு வகைகள் அசைவ உணவு தான் என்றாலும், சைவ உணவுகள் சிலவும் இருந்தன.  அப்படிச் சாப்பிட்ட இரண்டு உணவு வகை – பீஹார் மாநிலத்தின் லிட்டி சோக்காவும், கேரளத்தின் இலை அடையும்! 

அலிகர் நகரத்தின் புகழ்மிகு பூட்டுகள் – வித்தியாசமான வடிவங்களில், ராஜஸ்தானின் மீனாகரி மாலைகள், ராஜஸ்தானின் லாக் வேலைப்பாடுகள், உத்திரப் பிரதேசத்தின் பித்தளை வேலைப்பாடுகள், கண்ணாடி பொம்மைகள் என பலவும் இங்கே காணக் கிடைத்தது. ஒவ்வொன்றிலும் கலை நுணுக்கமும், வேலைப்பாடும் காணும்போது நமது தேசத்தின் எண்ணிலடங்கா திறமைகளை நினைத்து பூரிப்படைந்தாலும், அவற்றில் பல அழிந்து வரும் கலைகள் என்பதை நினைக்கும் போது வருத்தம் தான் மிஞ்சுகிறது. புகைப்படங்களாகவது இருக்கட்டுமே என அங்கே எடுத்த புகைப்படங்களை சேமித்து வைத்திருக்கிறேன்.

ஹுனர் ஹாட் சென்ற போது அலைபேசியில் எடுத்த சில புகைப்படங்கள் மற்றும் ஒரு காணொளி இந்த ஞாயிறில் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி…..


வித்தியாசமான பூந்தொட்டிகள் மற்றும் கலைப்பொருட்கள் பார்வைக்கு....


தண்ணீர் எடுத்து வரும் பாவை.... 


வித்தியாசமான பூட்டுகள்....


சிங்கம் மற்றும் ஆமை வடிவ பூட்டுகள்.....


ஒட்டக வடிவிலும் ஒரு பூட்டு...


கண்ணாடி பார்க்கும் பாவை - ஆனால் கண் மட்டும் மேல்நோக்கி இருப்பது சற்றே இடிக்கிறது.....


Lamp Shades and Domes...


கண்ணாடியில் உருவங்கள்.....


மீனாகரி என அழைக்கப்படும் கைவேலைப்பாடுகள்....


மெழுகுவர்த்தி ஸ்டாண்ட்.....


துணியில் ஓவியம்.....


குஜராத்திலிருந்து தாமிர மணிகள்....


ராஜஸ்தானின் துணி பொம்மைகள்.....


தயாராகும் லிட்டி.....


லிட்டி சோக்கா - சுடச் சுட, கார சாரமாய்! எடுத்துக்கோங்க!


கோலாட்டம் - துணி ஓவியமாக!


லாக் வேலைப்பாடு செய்த ஒரு பொருள்.....  இது என்ன என பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்...  நாளை மாலை விடை சொல்லுகிறேன்!


இரும்பு வாணலியைத் திருப்பிப் போட்டு அதில் செய்யப்படும் ரொட்டி!

என்ன நண்பர்களே புகைப்படங்கள்/காணொளியை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்…

மீண்டும் ச[சி]ந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

சனி, 7 ஜனவரி, 2017

திரிபுரா – நீர்மஹல் – தமிழர்கள் கைவண்ணம்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 87

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நீர்மஹல், திரிபுரா

சென்ற பகுதியில் சொன்னது போல இன்றைக்கு நாம் திரிபுராவிலும் தனது திறமையைக் காட்டிய தமிழர்கள் பற்றியும் அங்கே இருக்கும் ஒரு அற்புதமான இடம் பற்றியும் பார்க்கப் போகிறோம். திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ருத்ரசாகர் ஏரி.  இந்த பெரிய ஏரியின் நடுவே இருக்கும் ஒரு தீவில் அமைந்துள்ளது நீர்மஹல் என அழைக்கப்படும் ஒரு அழகிய திரிபுராவை ஆண்ட ராஜாவின் கோடை வாசஸ்தலம்.

நீர்மஹல், திரிபுரா - வேறு ஒரு படம்....

மஹாராஜா bபீர் bபிக்ரம் கிஷோர் மாணிக் என்பவர் கோடைக் காலத்தினைக் கழிக்க அமைத்த ஒரு அற்புதமான இடம் தான் இந்த நீர்மஹல். 1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹலுக்கு, படகில் தான் செல்ல வேண்டும். ருத்ரசாகர் ஏரியில் பயணம் செய்யும்போது பல பறவைகளும் அழகிய பூக்களும் பார்த்து பரவசம் அடைய முடியும். ஹிந்து முஸ்லீம் கட்டிடக் கலைகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக கட்டியிருக்கிறார் அந்த மஹாராஜா.  Marble மற்றும் Sandstone பயன்படுத்தி அழகாய் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தினை கட்ட அவர் தேர்ந்தெடுத்தது Martin and Burn Co. என்ற நிறுவனம். பெயரிலிருந்தே வெளிநாட்டு நிறுவனம் என்பது புரியும்.

நீர்மஹலுக்குச் செல்ல படகு தயார்.....

பூப்பூக்கும் ஓசை...  அதைக் கேட்கத்தான் ஆசை...
நீர்மஹல், திரிபுரா.....

இந்த நீர்மஹலுக்குச் செல்ல, ருத்ரசாகர் ஏரியின் கரையிலிருந்து படகில் பயணிக்க வேண்டும்.  எங்கள் ஐந்து பேர் தவிர வேறு ஒரு குழுவினர் அந்தச் சமயத்தில் வர அவர்கள் தனிப்படகிலும் நாங்கள் தனிப்படகிலும் புறப்பட்டோம். ஏரியின் பெரும்பகுதிகளில் கொடிகள் படர்ந்து, பூக்களும் பெரிய பெரிய இலைகளும் மிதக்க, அவற்றுக்கு நடுவே படகில் பயணித்தது ஒரு அற்புத அனுபவம்.  படகு செல்லச் செல்ல, பறவைகள் பறக்க, இலைகள் தண்ணீருக்குள் நடனமாட, தூரத்தில் பார்க்கும்போது நீர்மஹலின் பிரம்மாண்டம் நம்மை வசீகரிக்க அற்புதமான பயணமாக இருந்தது.

படகில் இருந்தபடியே ஒரு குளியல்....
நீர்மஹல், திரிபுரா....

 மீன் பிடிக்க வாரீயளா....
நீர்மஹல், திரிபுரா....

பெரும்பாலான படகோட்டிகள் வங்க தேசத்தவர்கள். படகோட்டுவதும், சிறு படகுகளில் சென்று ருத்ரசாகர் ஏரியில் மீன்பிடிப்பதும் தான் அவர்களுக்கு பிரதான தொழில். ஒரு படகோட்டி, படகை நடுவில் நிறுத்தி, குளித்துக் கொண்டிருந்தார்! பறவைகளையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே நீர்மஹல் அமைந்திருக்கும் தீவிற்க்குச் சென்று சேர்ந்தோம்.  படகுப் பயணத்திற்குத் தனிக் கட்டணம் வாங்கிக் கொண்ட பிறகு, நீர்மஹல் சுற்றிப் பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

ருத்ரசாகர் ஏரியில் ஒரு பறவை....
நீர்மஹல், திரிபுரா.....

இலைகள்... படகுகளாய்.....
நீர்மஹல், திரிபுரா....

சுமார் 5.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரியின் நடுவே அமைந்திருக்கும் தீவில் இந்த நீர்மஹல் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க அப்போது ஒன்பது வருடஙக்ள் ஆனதாம். இந்த மாளிகையில் ராஜகுடும்பம் தங்குவதற்கு 15 அறைகள், தாழ்வாரம், சதுரங்கம் விளையாட ஒரு அறை தவிர மக்களைச் சந்திக்க ஒரு பெரிய கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.  அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள் இந்த நீர்மஹலை! நீர்நிலைக்கு நடுவே அமைந்திருப்பதால் நீர்மஹல்!

கும்பகோணம் சிற்பிகளில் ஒருவர்....
நீர்மஹல், திரிபுரா...

 எல்லா மீனையும் பிடிச்சுட்டாங்களோ....
நீர்மஹல், திரிபுரா....

அதெல்லாம் சரி, பதிவின் தலைப்பில் தமிழர்களின் கைவண்ணம் என எழுதிவிட்டு தமிழர்கள் பற்றி, இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை என நீங்கள் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன்.  1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹல் தனது பொலிவினை இழந்து பல இடிபாடுகள் உருவாக, திரிபுரா அரசாங்கம் இதனை மீண்டும் பொலிவூட்ட நடவடிக்கைகள் எடுக்க, இந்த நீர்மஹலை புனரமைக்கும் பணி, நமது தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிற்பிகளுக்குக் கிடைத்திருக்கிறது. 

பூக்களும் பறவையும்....
நீர்மஹல், திரிபுரா....


நாங்களும் நால்வர் அணி தான்!
நீர்மஹல், திரிபுரா....

நாங்கள் சென்ற சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த சுமார் 50 சிற்பக் கலைஞர்கள் நீர்மஹலைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  அவர்கள் கைவண்ணத்தில் மிக அழகாகவே புனர்நிர்மாணப் பணிகள் நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்றபோது பணிகள் முடிவடையாத நிலையில் தான் பார்க்க முடிந்தது.  மீண்டும் ஒரு முறை சென்று பார்க்க வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம் தான்.

நான் பறக்கப்போறேன்... பறக்கப் போறேன்!
நீர்மஹல், திரிபுரா....

நீர்மஹல் அருகே இருக்கும் அழகிய பூந்தோட்டத்தினை ரசித்து அங்கே வந்திருந்த தமிழ் சிற்பிகளிடம் பேசிவிட்டு அங்கிருந்து மீண்டும் படகில் பயணித்து கரை வந்து சேர்ந்தோம்.  அங்கே என்ன செய்தோம், அங்கிருந்து எங்கே பயணித்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

திங்கள், 14 நவம்பர், 2016

வாவ்… என்ன அழகு…. – பேப்பர் கூழ் பொம்மைகள்



பேப்பர் கூழ் பொம்மைகள்

சமீபத்தில் தில்லியில் நடந்த இரண்டாவது கலாச்சாரத் திருவிழா பற்றி இதுவரை சில பதிவுகளில் எழுதி இருக்கிறேன் – குறிப்பாக கச்சி கோடா நடனம் பற்றி ஒரு பதிவே எழுதி இருக்கிறேன். மற்ற விஷயங்களும் அவ்வப்போது ஃப்ரூட் சாலட் பகுதிகளாக வெளியிட்டு இருப்பதையும் நீங்கள் பார்த்திருக்கலாம். இன்றும் அந்த திருவிழாவில் பார்த்த ஒரு விஷயம் தான் பதிவாக. இன்று நாம் பார்க்கப் போவது பேப்பர் கூழ் பொம்மைகள்.

நமது வீடுகளில் முன்பெல்லாம் கிடைக்கும் காகிதங்களை ஊறவைத்து, ஆட்டுரலில் அரைத்து அதை ஏதாவது ஒரு பாத்திரத்தின் பின் பக்கத்தில் பூசி காய வைத்து கூடைகள் செய்வதைப் பார்த்திருக்கலாம்.  எங்கள் வீட்டில் அம்மா/அத்தைப் பாட்டி செய்வார்கள். அதற்கு பேப்பர்கள் கொடுத்து, அதனை ஊற வைத்து, ஊறிய பின் ஆட்டுரலில் அரைக்கவும் செய்திருக்கிறேன்.  இட்லி, தோசைக்குக் கூட சுலபமாக அரைத்து விடலாம், ஆனால் இந்த பேப்பர் கூழ் அரைப்பது மிகவும் கடினம் என்றாலும் அதை வைத்து கூடை செய்வதைப் பார்க்க ரொம்பவே ஆசை என்பதால் அரைத்துக் கொடுத்திருக்கிறேன். இப்போது கேட்டால் செய்வேனா என்பது தெரியாது!



அப்படிப்பட்ட பேப்பர் கூழ் கொண்டு பொம்மைகள் தயாரிப்பார்கள் என்பதும் பின்னர் தான் தெரிந்து கொள்ள முடிந்தது.  சமீபத்தில் நடந்த இந்த கலாச்சாரத் திருவிழாவில் நாக்பூரில் இருந்து வந்திருந்த திருமதி ஒய். ரமணி எனும் பெண்மணி, இந்த பேப்பர் கூழ் பொம்மைகளை வைத்து ஒரு கடை வைத்திருந்தார்.  ஆஹா எத்தனை அழகான பொம்மைகள்.  பேப்பர் கூழில் பொம்மைகள் செய்து, அதற்கு இயற்கை வண்ணங்கள் பூசி, அதன் பிறகு உடைகளும், நகைகளும் அணிவித்து அழகிய பொம்மைகளை உருவாக்குகிறார் இவர்.  ஒவ்வொரு பொம்மையும் அத்தனை அழகு!

இந்திய நடன வகைகள் [பரதம், கதக்களி, குச்சிப்புடி, மணிப்பூரி], பாரம்பரிய நாட்டுப்புற நடனங்கள், இந்தியாவின் பல மாநில மணப்பெண்கள், நாட்டுப்புற மக்கள், பல மாநில/நாட்டு ஆண், பெண் உருவங்கள், கிராமிய மனிதர்கள், புராணங்களில் வரும் கதாபாத்திரங்கள் என பலவற்றையும் இந்த பேப்பர் கூழ் பொம்மைகளில் வடித்து விடுகிறார்கள். நவராத்த்ரி கொலுவிற்கும் இந்த பொம்மைகளை விற்பனை செய்கிறார்கள். 

இந்த பொம்மைகளைத் தயார் செய்வதற்கு முக்கிய மூலப் பொருள், நியூஸ் பேப்பர்கள், கருவேல மரத்தின் பிசின் மற்றும் மார்பிள் துகள்கள் ஆகியவை தான்.  GI wire கொண்டு பொம்மை உருவத்தினை வடித்து அதன் மேல் பேப்பர் கூழ் கலவையைப் பூசி அதனை காய வைத்து, வண்ணங்கள் பூசி, உடை, நகைகள் அணிவித்து அழகுபடுத்தி, இந்த பொம்மைகளை தயாரிப்பதற்கு நிறையவே பொறுமை வேண்டும்.


காயத்ரி தேவி….

ஐந்து சிரங்களும், எட்டு திசைகள் மற்றும் பூமி ஆகாயம் ஆகியவற்றைப் பார்க்கும் பத்து கண்களும் பத்து கரங்களில் விஷ்ணுவின் எல்லா ஆயுதங்களையும் வைத்துக் கொண்டு சிவப்பு தாமரைப் பூவில் அமர்ந்திருக்கும் காயத்ரி தேவியின் பொம்மை ஒன்றைப் பார்த்தபோது நம்ம வீட்டு கொலுவில் வைக்கலாமே என்று தோன்றியது.  புகைப்படங்கள் எடுத்தபடியே அதன் விலையைக் கேட்க, ரூபாய் மூன்றாயிரம் என்று சொன்னார்.  கலைக்கு விலையேது? இருந்தாலும் என் பாக்கெட்டுக்கு ஒத்து வராது என்பதால் புகைப்படம் மட்டும் எடுத்துக் கொண்டேன். 



இத்தனை நுணுக்கமான வேலைப்பாடுகள் இருக்கும்போது விலையும் சற்று அதிகமாகவே இருக்கும் என்பதும் தெரிந்தது. தசாவதார செட் கூட கிடைக்கிறது – 4, 6, 8, 12, 18, 30 இஞ்ச் அளவுகளில் பொம்மைகள் தவிர, ஆளுயர பொம்மைகள் கூட பேப்பர் கூழில் செய்கிறார்கள்.  11 இஞ்ச் தசாவதார செட் ஒன்றின் விலை – இருபதாயிரம் ரூபாய்! இப்படி நிறைய பொம்மைகள் பேப்பர் கூழில் தயாரித்து விற்பனை செய்கிறார்கள்.  விருப்பம் இருப்பவர்கள் மின்னஞ்சல் மூலம் விசாரித்து, பொம்மைகள் வேண்டுமெனில் வாங்கிக் கொள்ளலாம்.

அதிகம் எடை இல்லாத, கைகளால் மட்டுமே தயாரிக்கப்படும் இந்தப் பேப்பர் கூழ் பொம்மைகள் தயாரிப்பவர்களின் முகவரி – Artefakt Mrs. Y. Ramani, A-12, Shreenath Sainagar, Near Omkar Nagar, Ring Road towards Manewada, Nagapur – 400027, Maharashtra.  e-mail: ramani.y17@gmail.com மற்றும் yvasudevrao@gmail.com.

One who works with his hands are labourer. One who works with his hands and head is craft person. One who works with his hands, head and heart is an Artist! எனச் சொல்லுவார்கள்.  இந்த பேப்பர் கூழ் பொம்மை செய்பவர்களும் Artist தான் சந்தேகமில்லை…

உங்கள் ரசனைக்காக, விழா சமயத்தில் காட்சிக்கு வைத்திருந்த பேப்பர் கூழ் பொம்மைகளை, நான் எடுத்த சில புகைப்படங்களையும் இங்கே இணைத்துள்ளேன். பொம்மைகள் பற்றியும், பதிவு பற்றியுமான உங்கள் கருத்துகளை பின்னூட்டத்தில் சொல்லுங்கள்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

ஞாயிறு, 13 நவம்பர், 2016

இரண்டாவது தேசிய கலாச்சாரத் திருவிழா – சில புகைப்படங்கள்


சமீபத்தில் தலைநகர் தில்லியில் நடந்த தேசிய கலாச்சாரத் திருவிழா பற்றியும் அங்கே சென்றபோது கிடைத்த அனுபவங்கள் பற்றியும் சில பதிவுகள் தொடர்ந்து வெளியிட்டு வருவது உங்களுக்குத் தெரிந்ததே.  இந்த ஞாயிறில் அத் திருவிழா சமயத்தில் நான் எடுத்த சில புகைப்படங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.  அங்கே இன்னும் நிறைய புகைப்படங்கள் எடுத்திருக்கிறேன். அவற்றையும் வரும் தினங்களில், பதிவாக வெளியிடுகிறேன். 

இன்றைக்கு சில புகைப்படங்கள் உங்கள் பார்வைக்கு…..


படம்-1: அரங்கு ஒன்றின் வெளியே பிரம்மாண்ட படகு…..


படம்-2: டெரகோட்டா டைல்ஸ்….


படம்-3: டெரகோட்டா டைல்ஸ்….


படம்-4: டெரகோட்டா டைல்ஸ்….


படம்-5: டெரகோட்டா டைல்ஸ் பிள்ளையார்.


படம்-6: ஒரு அரங்கின் நுழைவாயிலில் ஆளுயர சிலை.


படம்-7: புத்தம் சரணம் கச்சாமி….


படம்-8: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை


படம்-9: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை


படம்-10: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை


படம்-11: திரிபுராவிலிருந்து வந்திருந்த கலைஞர்கள், மரவேர்களில் வடித்த சிலை


படம்-12: அரங்கம் ஒன்றின் வெளியே அலங்காரச் சிலை – கொஞ்சம் பயமுறுத்தும் விதமாய்…


படம்-13: அரங்கம் ஒன்றின் வெளியே அலங்காரச் சிலை…


படம்-14: பானைகள் கொண்டு அலங்காரம்…..


படம்-15: சின்னச் சின்னதாய் Flower Pots…. கலைநயம் மிக்கவை…. விலை ஒவ்வொன்றும் 150/-க்கு மேல்!

என்ன நண்பர்களே, இன்றைக்கு இங்கே பகிர்ந்து கொண்ட புகைப்படங்களை ரசித்தீர்களா? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.