ஞாயிறு, 31 மார்ச், 2013

இயற்கைப் பாலங்கள்


தற்போதைய காலகட்டத்தில் ஒவ்வொரு ஆற்றின் குறுக்கேயும், நகரங்களில் ஆங்காங்கேயும் கான்க்ரீட் பாலங்கள் கட்டப்படுவதை நாம் தினமும் கவனிக்கிறோம். இயற்கையே கட்டுவித்த சில பாலங்களை இந்த நாளில் பார்க்கலாமா. 

இந்தியாவின் வடகிழக்கு மாநிலங்களில் இது போன்ற பல பாலங்கள் இருக்கின்றன என்கிறார்கள். இங்கே கொடுத்திருக்கும் சில படங்கள் சீரபுஞ்சியிலும் ஜப்பானிலும் இருக்கும் பாலங்கள்.

இதோ படங்கள் உங்கள் ரசனைக்காய்…..



















என்ன நண்பர்களே படங்களை ரசித்தீர்களா? மீண்டும் அடுத்த வாரம் வேறு சில புகைப்படங்களோடு உங்களைச் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

சனி, 30 மார்ச், 2013

அன்னம் விடு தூது – 5 – ஸ்ரவாணி


அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் முதல் கதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். தமிழ் கவிதைகள் தங்கச்சுரங்கம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் சகோதரி ஸ்ரவாணி எழுதிய கதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.

அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் இதுவரை நான்கு கவிதைகள் வந்திருக்கின்றன.  இதோ முதலாவது கதை!

சந்திரவதனி!


பட உதவி: சுதேசமித்திரன் 1957

" தண்டை ஒலியினால் கெண்டை மிரண்டு ஓடிற்றாம் 
சிலம்பொலியின் சிணுங்கலினால் சிவந்த மேனியனும் 
மெய் சிலிர்த்தானாம்  " 

பாடல் ஒலி அரண்மனை நந்தவனத்தில் பலமாகக் கேட்டது.

அடி பூங்கொடி ! இந்தா  இப்பந்தைப் பிடி பார்க்கலாம் 
என்றவாறே அந்த அழகான பூப்பந்தை கோணலாக வீசி 
எறிந்தாள் சந்திரவதனி. சேர நாட்டுப் பைங்கிளி .
பெயருக்கேற்றார் போலவே  மதி முகமும் கிளிப் பேச்சும் கொண்டவள் .
உனக்கு அனைத்துமே அம்மானை ஆடுவது போல் விளையாட்டுத் தானாம்மா ?
சரியான விளையாட்டுப் பெண்ணம்மா நீ என்று மன்னர் 
பெருஞ்சேரலாதர் அடிக்கடி கடிந்து கொள்வது உண்டு தம் 
ஆசை மகளை.

" மெய் சிலிர்த்தவன் தங்கள் மேனி சிலிர்க்கச் செய்யும் 
நாள் தான் எதுவோ ? சிவப்புடன் மஞ்சளும் கலக்கும் 
பொழுதும் எதுவோ ? "

இப்படி எதிர்ப்பாட்டு பாடியவாறே பூங்கொடியும் பந்தைக் 
கச்சிதமாகப் பிடித்து விளையாடினாள்.

போதும் பூங்கொடி ! இதே விளையாடி அலுத்துக் களைத்து 
விட்டது. சற்றே  ஏரிக்கரைப் பக்கம் சென்று காற்று வாங்கிக் 
கொண்டே கொஞ்சம் ஊஞ்சலாட்டம் ஆடுவோமா ?

சரி இளவரசி ! அப்படியே ஆகட்டும் .

பொன் ரதத்தில் குதித்தோடி ஏறிய சந்திரவதனி தன்  பக்கத்தில் 
ஆசைத் தோழியையும் அமர்த்திக் கொண்டாள் . ரதம் விரைந்து 
சென்றது காற்றென .குதிரையின் குளம்பொலியும் பேச்சொலியும் 
காற்றிலே கலந்து சுழன்றது அங்கே.

இங்கே சலசலவென பேச்சு துவங்கியது அவர்களிடம்.

ஊஞ்சலாட்டத்தை விட இளவரசிக்குப் பிடித்த விளையாட்டு 
ஒன்று இருப்பதை நான் அறிவேன். 

அது என்ன நான் அறியாத அப்படி ஒரு விளையாட்டோ ?

அது தான் ' அன்னம் விடு தூது ' இளவரசி அவர்களே .
இந்த விளையாட்டு தாங்கள் அறியாததா என்ன ?

சரி , நீயே ஞாபகப் படுத்தி விட்டாய் . அன்னத்திடம் சென்று 
இன்று என் எண்ணத்தைப் பற்றி பேசி  விட வேண்டியது தான் .

எல்லாம் தங்கள் சுயம்வரம் பற்றித் தானே இளவரசி ?
என்னிடம் ஓலை அளித்தால் நான் நிமிடத்தில் சென்று , அன்று 
விருந்தினர் மாளிகையில் தங்கி தங்கள் மனத்தைக் கொள்ளை 
அடித்தவரிடம் சென்று சேர்ப்பிக்க மாட்டேனா ?
இதற்காகவெல்லாம் போய் அந்த ஹம்சத்தைக் கெஞ்சுவதும் , கொஞ்சுவதும் ....
என்னை விட அது தான் தங்களுக்கு உயிர்த் தோழி  போலுள்ளது.  க்கும் .

ஏதேது பூங்கொடி , இன்று என் மேல் நீ தீராத பகை கொண்டு என் 
மனத்தை வாடச் செய்கிறாய் . என்ன இருந்தாலும் அந்த அன்னப்பறவை 
என் மனம் அறிவதில் உனக்கு இணை  ஆகுமா ? அதற்கு எல்லாம் 
விஸ்தீரணமாகச் சொல்ல வேண்டுமே . இருப்பினும் தான் என்ன ,
அதன் பால் போன்ற வெண்ணிற மேனியில் எனக்கொரு மயக்கம் . நான் சொல்லுவதை 
உடனே பறந்து சென்று அவ்விடம் சொல்லாதோ ? உனக்கும் ஒரு ஓலை 
தயார் செய்து வைத்து இருக்கிறேன் . நாளை தருகிறேன். 
அன்னம் சற்று முன்னமே செல்லட்டுமே ....

சரி , சரி , உங்கள் ஆசையை நான் ஏன் கெடுப்பானேன் ?
பத்திரமாகக் கொடுத்து விட்டுப் போகிறேன் . ஆனால் 
இப்போது என் எண்ணம் எல்லாம் அன்று நடந்ததையே எண்ணி வட்டமிடுகிறது 
இளவரசி.

அம்மா தாயே  , அன்று அப்படி என்ன தான் நடந்தது என்று கொஞ்சம் 
விளக்கமாகத் தான் சொல்லேன் .... கேட்கிறேன்.

இன்று போல் அன்றும் ,மதி  மயக்கும் மாலை வேளையிலே  தேரேறி ஏரிக்கரை சென்று கொண்டு இருந்தோமா !

 இருந்தோம். 

வண்டி குடை சாய்ந்து விட்டதா ?

ம்ம்ம்..சாய்ந்து விட்டது. அப்புறம் ...

அந்த குதிரை வீர வணிகர் வந்து உதவியதும் ..காப்பாற்றியதும் ...

அப்படியா ? பிறகு ?

அவர் கையில் இருந்த ராஜமுத்திரை பதித்த கணையாழியும் தேகக்கட்டும் அவர் 
ஒரு வணிகர் அல்ல என்பதும் , விருந்தினர் மாளிகையில் தங்க வைக்கப் பட்ட போது 
அவர் மாறு வேடத்தில்வந்திருந்த  காஞ்சியின் இளவரசர் சூர்யவர்மர் என்று நீங்கள் கண்டுபிடித்ததும் ...

பிறகு நான் அவர் பக்கம் குடை சாய்ந்ததும் தான் ... உனக்குத் தெரிந்தது தானே 
என்று கூறி சந்திரவதனியும் ,பூங்கொடியும் கலகலவென சிரிக்கவும் 
ஜில்லென்று குளிர் காற்று வீசியதும் ஏரிக்கரை வந்து விட்டதை உணர்த்தியது .

சதங்கை , கைவளை  குலுங்க இருவரும் இறங்கி நடந்து சென்று 
அந்த பசுமையான மரத்தில் கொடியினால் கட்டப் பட்ட அந்த ஊசலில் 
சென்று இளவரசி அமர்ந்து கொள்ள , பாட்டு பாடியவாறே பூங்கொடி 
ஊசலை முன்னும் பின்னும் அசைத்தாள் . அதுவும் இளவரசியின் 
மனம் போலவே உயர்ந்தது. தாழ்ந்தது. பறவையினங்கள் இன்னிசை 
பொழிந்தன.

சற்று நேரம் சென்ற பிறகு , பூங்கொடி நீ சிறிது இங்கேயே ஊஞ்சலாடிக் 
கொண்டு இரு . நான் சென்று என் பிரியத் தோழி அன்னத்தை சந்தித்து 
அளவளாவி விட்டு வருகிறேன். என்ன ?


ஏரியின் பளிங்கு போன்ற தண்ணீரில் ஆம்பல்களும் 
செந்நிற தாமரைகளும் ஆங்காங்கே பூத்திருந்தன.
கெண்டைகள் துள்ளி விளையாடின. தண்டை ஒலி  கேட்டு அவை 
தலை தூக்கிப் பார்த்தன இளவரசியைக் காண ஆவலுடன்.

சந்திர வதனி அன்ன நடை இட்டு அங்கே ஏரிக்கரையில் ஆனநதமாய் 
தன்  துணையுடன் நீந்திக் கொண்டு இருந்த ஹம்சத்தின் அருகே சென்று அமர்ந்தாள் .

தடாகத்தில் பூத்து இருந்த தாமரை மலர்களின் இடை இடையே வளைநது வளைந்து 
நீந்தி சென்றுக் கொண்டிருந்த அன்னம் இவள் வரவைக் கண்டவுடன் நீந்துவதை 
நிறுத்தி அங்கேயே நின்று இவளை உறுத்துப் பார்த்தது .

பால் போன்ற என் அன்னமே , என் சுவர்ணமே !
நலமா ? சுகமா ? என்றாள் .

நாங்கள் நலமே , சுகமே ! நீங்கள் தான் சென்ற முறைக் 
கண்டது காட்டிலும் சுகவீனமாகக் காணப்படுகின்றீர்கள் .
பசலை நோய் காரணமோ ? என்று வினவியது பால் அன்னம்.

அதெல்லாம் ஒன்றும்  இல்லை. முதலில் நீ ஒன்றை எனக்குக் கூறுவாயாக.
உனக்கு நீரையும் பாலையும் பிரித்து உண்ணக் கூடிய மாய 
வித்தையைக் கற்றுத் தந்தது யார் ?

அது இறைவன் எமக்களித்த வரம் இளவரசி ... இப்போது ஏன் 
அதைப் பற்றி கேட்கின்றீர்கள் ?

இல்லை. அந்த வித்தையை உன்னிடம் இருந்து கற்றுக் கொண்டால் 
ஒருவேளை எனக்கு பொய்க்காதல் , மெய்க்காதல் என்று பகுத்து 
அறியத் தெரியுமோ என்னவோ ?

ஏன் ? என்னவாயிற்று இளவரசி ?

பிறகென்ன , விரைவில் என் கழுத்தில் மங்கல  நாண் பூட்டுவேன் 
என்று சொல்லி விட்டு சென்றவர் , இரு திங்களாகியும் வரவில்லையே ...
அங்கே தந்தையார் அவரை அழைக்காமலே சுயம்வரத்திற்கு எல்லா ஏற்பாடுகளையும் 
செய்து விட்டார். எல்லாம் அந்த மதி கெட்ட மந்திரி மதிவாணனால் 
வந்த வினை.


என்னையும் தான் மறந்தானோ 
அல்லது மனதிலிருந்து தான் எறிந்தானோ 
என்னையும்  தான் வெறுத்தானோ 
அன்றி வேறொரு பெண்ணைக்  கலந்தானோ 
என்னையும் தான் துறந்தானோ 
போர்க்களம் ஏதும் தான் புகுந்தானோ 
சொன்ன சொல்லானது துஞ்சும் 
கல்லானதோ  அவன் நெஞ்சம் 
ஏதும் தெரியவில்லையே 
அவனின்றி  நான் வாழ்வது எங்ஙனம் 
இனி வேரோடு வீழ்வது தான் திண்ணம் ....

கலக்கமடையாதீர்கள் தேவி !என்று தங்கள் சுயம்வர கோலாகலம் ?

வரும் முழுமதி நாளில் தான் என் தங்கமே .. எனக்கு என்ன செய்வது என்று 
தெரியவில்லை ...

 நீ தான் சிரமம் பாராது உடன் பறந்து தூது  சென்று 
இச்செய்தியை காஞ்சித் தலைவனிடம் சேர்ப்பிக்க வேண்டும்.
எனக்காக இதை செய்வாயோ என் சுவர்ணமே ?!

இந்தத் தடாகத்தில் மலர்ந்து இருக்கும் தாமரை மலரை ஒத்த
 கண்களை உடைய கமலக்கண்ணியே ! இளவரசியே ! 
கலங்காதிரு ! உன் மனநிலை நான் அறிவேன்.
காதல் மணாளனைக் காணாது எவ்வளவு துயருற்று இருப்பாய் 
என எனக்குப் புரிகிறது. நான் உடன் விரைந்து சென்று 
சூர்யவர்மரிடம் இச்செய்தியை கூறி உம்மைக் கவர்ந்து 
செல்லச் சொல்கிறேன். நீங்கள் இருவரும் தங்கள் விருப்பம் 
போல் மணம் புரிந்து கொண்டு இதே ஏரிக்கரையில் 
முழுமதி நாளில் நிலவொளியில் அலங்கரிக்கப்பட்ட படகில் 
ஏரி முழுதும் எம்மைப் போலவே பவனி வருவீர்களாக. 
அப்போது நான் உங்களை இனம் கண்டு இனிய குரல் 
எழுப்பி மகிழ்வேன் என்றது அன்னம். 

ஆஹா , என் எண்ணமும் அதுவே ..... 
நீ சொன்னது மட்டும் பலித்து விட்டால் உனக்குப் 
பொற்கிண்ணத்தில் நீர் கலக்கா பால் தருவேன்.
அப்போது பருகி மகிழ் , இப்போது நீந்தி மகிழ் ....

என்று அன்னத்தைக் காலம் கழிவது தெரியாமல் 
கொஞ்சி மகிழ்ந்தாள் அந்த சேரஇளவஞ்சிக்கொடி.

- ஸ்ரவாணி.


என்ன நண்பர்களே கதையினை ரசித்தீர்களா? கதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கதை எழுதிய ஸ்ரவாணி அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!



அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 29 மார்ச், 2013

ஃப்ரூட் சாலட் – 39 – பலியான ஜேம்ஸ் – குறும்பு - தமிழ் மொழி


இந்த வார செய்தி:

தில்லியில் இருக்கும் ப்ரீதி வர்மா என்பவருக்கு சிங்கப்பூரில் வேலை கிடைக்க, தன்னுடனேயே ஜேம்ஸையும் அழைத்துச் செல்ல அவருக்கும் சேர்த்து பயணச்சீட்டினை பதிவு செய்திருக்கிறார். ஜேம்ஸ் என்பது அவருடைய செல்ல பூனைக்குட்டி. அவருக்கான தனி கூண்டில் நல்ல பூட்டினைப் போட்டு கட்டியது மட்டுமல்லாது ஒரு கம்பியைக் கொண்டும் கட்டி வைத்திருக்கிறார்.

தனது பயணத்தினைத் தொடங்கும் நேரத்தில் அவருக்குக் கிடைத்த அதிர்ச்சியான செய்தி – ரன்வேயில் ஒரு வண்டியில் அடிபட்டு ஜேம்ஸ் இறந்துவிட்டது என்று. ஒரு கூண்டில் பூட்டு போட்டு வைத்திருந்த பூனை எப்படி ரன்வேயில் ஓடியது, யார் திறந்து விட்டார்கள் என்பதெல்லாம் தெரியாது ப்ரீதி வர்மா அதிர்ச்சியில் சிசி டிவீ பார்க்க அனுமதி கேட்டிருக்கிறார். 

தனது செல்ல பூனைக்குட்டி இறந்து போனது மட்டுமல்லாது விமான நிலையத்தில் அவரை ஊழியர்கள் கிண்டல் செய்யவே அதிர்ச்சியில் ஆழ்ந்த ப்ரீதி முறையீடு செய்த பின், அவருக்கு ஒரு குறுஞ்செய்தி அனுப்பியிருக்கிறது நிர்வாகம்.

சாதாரணமாகவே உடமைகளை அனுப்புவதிலேயே நிறைய குளறுபடிகள் இருக்க, இது போன்ற செல்லப் பிராணிகளை அனுப்புவதிலும் குழப்பங்கள். செல்லப் பிராணிகள் வளர்ப்பவர்களுக்கு, தங்களது செல்லங்களை இது போல இழக்கும்போது ஏற்படும் அதிர்ச்சியும் வலியும் மிகவும் அதிகமே.

பாவம் ஜேம்ஸ்…. ப்ரீதி வர்மாவும் தான்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

DON’T BELIEVE ANYTHING YOU HEAR. THERE ARE ALWAYS THREE SIDES TO A STORY – YOURS, THEIRS AND THE TRUTH.

இந்த வார குறுஞ்செய்தி

DIFFERENCE BETWEEN TRUTH AND LIE. TRUTH IS A DEBIT CARD, PAY FIRST AND ENJOY LATER. WHILE LIE IS A CREDIT CARD, ENJOY FIRST AND PAY LATER.

ரசித்த புகைப்படம்: 



என்ன ஒரு குறும்பு!

ராஜா காது கழுதை காது:

மார்ச் மாதம் கூட இன்னும் முடியவில்லை. அதற்குள்ளாகவே கோடையின் தாக்கம் அதிகரித்து விட்டது தமிழகத்தில். இந்த வாரம் திருவானைக்கோவில் சென்ற போது அங்கிருந்த ஒரு பொது தண்ணீர் குழாயில் தண்ணீர் பிடித்து தனது முகத்தினைக் கழுவி, நிறைய நீரை அருந்திய வயதான ஆண் புலம்பியது – ‘’என்னா வெயில்… பாழாப்போன வெயில்… ஆளை அடிச்சுக் கொல்லுதேப்பா!”

ரசித்த பாடல்:

இங்கேயும் ஒரு கங்கை படத்திலிருந்து இளையராஜாவின் ஒரு பாடல் இன்றைய ரசித்த பாடல். ”சோலைப் புஷ்பங்களே என் சோகம் சொல்லுங்களேன்” இதோ.




படித்ததில் பிடித்தது:

நமது தமிழ்மொழி ஒரு அரியமொழி. அதன் சொற்களைப் பிரித்துப் பார்க்கத் தெரிந்தாலே போதும். நமக்கு பொருள் தானாகத் தெரிய வந்துவிடும். வெறும் சப்தமாக நமது தமிழில் சொற்கள் இருந்ததே இல்லை. உதாரணமாக மா, பலா, வாழை என்கிற முக்கனிகளை எடுத்துக்கொண்டால் அதன் பெயரிலேயே அதன் பொருள் புதைந்திருப்பது தெரிய வரும். மாம்பழம் என்றால் பெரிய பழம் என்று ஒரு பொருள். அன்னையைப் போல கருணை உடையது என்று இன்னொரு பொருள். இந்த இரண்டுமே அந்தப் பழத்துக்குப் பொருந்தும். தாய்க்குப் பிறகு தாய்ப்பாலின் சக்தியை தன்னுள் கொண்டு தன்னை உண்பவர்களுக்குத் தருவது மாம்பழமே. ‘மாம்பழம் தின்றால் சூடு’ என்று சிலர் கூறுவர். அளவறிந்து உண்டால் சூடும் இல்லை. குளிர்ச்சியும் இல்லை. மாம்பழம்தான் எல்லா ஊட்டச்சத்தும் தரவல்லது.

மாதா தராததை மாம்பழம் தரும் என்பார்கள்.

அதே போல் தான் பலா… ‘பல சுளைகளை தன்னிடம் உடையது’ என்பதே மருவி பலா என்றானது. வாழையும் இப்படித்தான்… இது வாழ்ந்தபடியே இருக்கும். வாழையை நட்டுவைத்தால் எவர் தயவுமின்றி அதை நாம் பல தலைமுறைகளுக்குப் பயிரிட்டுக் கொண்டு இருக்கலாம். ஒரு வாழை குலை தள்ளியவுடன் ஒரு குட்டி வாழையைத் தந்துவிட்டே மடியும். வாழ்வாங்கு வாழ்வது வாழை. அப்படியே இந்த சொற்காரணங்களோடு ‘சிற்பம்’ என்கிற சொல்லிடம் வந்தால் அதனுள் சிறப்புடைய விஷயங்களைக் கொண்டது என்றும் பொருள் இருக்கக் காணலாம். அல்பம் என்றால் அகலுதல் கொண்டது. அகலுதலில் உள்ல ‘அ’வும் இறுதி எழுத்து ‘ல்’லும் சேர்ந்து அல்பம் ஆகியிருக்கக் காணலாம். ‘அற்பம்’ என்றும் உரைப்பர்… அதில் ‘அற்றுப்போதல்’ என்னும் பொருள் இருக்கும். இப்படிச் சொல்லிலேயே பொருள் கொண்ட மொழி நமது மொழி.

- ’கல்லுக்குள் புகுந்த உயிர்’ என்னும் நாவலில் இந்திரா சௌந்தரராஜன்.

என்ன நண்பர்களே இந்த ஃப்ரூட் சாலட்-ஐ ரசித்தீர்களா? மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 28 மார்ச், 2013

அன்னம் விடு தூது – 4 – திரு சுப்புரத்தினம்



அன்பின் நண்பர்களுக்கு, 20.03.2013 அன்று வெளியிட்ட கவிஞர்களுக்கு/கதாசிரியர்களுக்கு ஒரு அழைப்பு! எனும் பதிவின் அழைப்பினை ஏற்று, வந்திருக்கும் நான்காம் கவிதையை இன்று இங்கே பகிர்ந்துள்ளேன். சுப்புரத்தினம் எனும் வலைப்பூவில் எழுதி வரும் திரு சுப்புரத்தினம் எழுதிய கவிதையினை இன்று பகிர்ந்துள்ளேன்.



இதோ அன்னம் விடு தூது பகிர்வுகள் வரிசையில் நான்காவது கவிதை!



பட உதவி: சுதேசமித்திரன் 1957



நிலவு வந்த நேரத்திலே
இலவு காத்த கிளி போல
இரவெல்லாம் வாடி நின்றேன்.
இனியவனைக் காணோமே...


அன்னமே ! நீ அருகில் வாராய் !!
நின் சேதிகளை உடனே சொல்வாய் !.
என் கண்ணன் அவன் ஏதேனும்
புன்னகையாள் பின்னே ஒரு
கண்ணசைப்பில் மறைந்தானோ !!
என்னையுமே மறந்தானோ !!

மா தவத்தில் நான் இருக்க‌
மாதவி பின் சென்றானோ !!
காதலி நான் காத்திருக்க
கருமுகிலில் மறைந்தானோ !!

வெளிர்த்துப்போய் வாடிப்போய்
வேதனையில் விரகத்தில்
மயங்கிய அந்த தமயந்தி போல்
நானில்லை என்று நீ அந்த
நளனிடம் சொல்.

நாளைக்குள் வரச்சொல் . என்
நா வறளும் முன்
நயனங்கள் சோருமுன்
நல்ல சேதி சொல்லச் சொல்.



என்ன நண்பர்களே கவிதையினை ரசித்தீர்களா? கவிதைக்கான பாராட்டுகளுக்கு உரியவர் ஆசிரியர் மட்டுமே! கவிதை எழுதிய திரு சுப்புரத்தினம் அவர்களுக்கு ஒரு பூங்கொத்து!





அடுத்த பதிவில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.