வெள்ளி, 30 ஜூலை, 2010

தலை நகரிலிருந்து – பகுதி 13

தலை நகரிலிருந்து – பகுதி 12 பதிவு செய்த பிறகு, அடுத்த பகுதிக்கு இத்தனை இடைவெளியா என்று எனக்கே தோணிடுச்சு. அதனால - இதோ அடுத்த பகுதி.பார்க்க வேண்டிய இடம்: தில்லி ஹாட் – தில்லியில் இரண்டு இடங்களில் ”தில்லி ஹாட்” இருக்குங்க. இப்போ நாம் பார்க்கப் போறது பீதம்புரா டிவி டவர் அருகில் இருக்கிற தில்லி ஹாட் பத்தி. தில்லில முதலில் ஐ.என்.ஏ பகுதியில் தான் தில்லி ஹாட் ஆரம்பிச்சாங்க. இது இரண்டாவது. இங்கே இந்தியாவில் உள்ள பல மாநிலங்களில் இருந்து கைவினைப் பொருட்கள் செய்யும் கலைஞர்களின் பொருட்களை விற்கிற கடைகள் இருக்கு. அழகான மண் பொம்மைகள், டெரகோட்டா பொம்மைகள், சணலால் செய்யப்பட்ட கைப்பைகள், உடைகள், மரத்தில் செய்யப்பட்ட பொம்மைகள், கரண்டிகள், வளையல் ஸ்டாண்ட் போன்ற பலவித பொருட்களை இங்கே நீங்கள் வாங்க முடியும்.இந்த தில்லி ஹாட்டுக்கு தில்லி மெட்ரோ மூலமும் செல்லலாம். தில்ஷாத் கார்டனிலிருந்து ரிட்டாலா வரை செல்லும் ரெட் லைன்ல இருக்கிற நேதாஜி சுபாஷ் பேலஸ் மெட்ரோ ஸ்டேஷனில் இறங்கி வெளியே வந்தால் 50 மீட்டர் தொலைவிலேயே இருக்கு இந்த தில்லி ஹாட். இங்கே எப்போதும் எதாவது ஒரு விழா நடந்துக்கிட்டே இருக்கும். அதனால வருடத்தின் எந்த நாட்களில் போனாலும் எதாவது ஒரு விழாவில் கலந்துக்கலாம். பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இசை நிகழ்ச்சி போன்றவைகளையும் கேட்டு ரசிக்கலாம். இதன் உள்ளே செல்ல பெரியவர்களுக்கு 10 ரூபாயும், குழந்தைகளுக்கு இரண்டு ரூபாயும் வாங்குவாங்க. மெட்ரோ ரெயிலில் போன மாதிரியும் ஆச்சு, ஒரு இடத்தினைப் போய்ப் பார்த்த திருப்தியும் கிடைக்கும்.சாப்பிட வாங்க: இந்த சீசன்ல எங்க பார்த்தீங்கன்னாலும் மக்காச்சோளம் [ஹிந்தியில் இதன் பெயர் புட்டா (Bhutta)] வைச்சு தணல்ல சுட்டுத் தருவாங்க. மக்காச்சோளத்தின் அளவினைப் பொருத்து அதன் விலை இருக்கும். விக்கறவங்ககிட்ட இருக்கிற சோளத்தில உங்களுக்குப் பிடிச்சத எடுத்துக் கொடுத்தீங்கன்னா, அதை தணலில் சுட்டு, அரை எலுமிச்சம்பழத்தை மசாலா பொடில தொட்டு சோளத்தில அழுத்தி எல்லா பக்கமும் தடவிக் கொடுப்பாங்க. "வாவ் என்ன சுவை!"- ன்னு சொல்லுவீங்க. என்ன ஒரு சின்ன பிரச்சனைன்னா சோளம் சாப்பிடும்போது நிறைய பேருக்கு பல் இடுக்குல மாட்டிக்கும்.

இந்த வார ஹிந்தி: சென்ற பகுதியில் சில காய்கறிகளின் ஹிந்தி பெயர்கள் பார்த்தோம். இந்த வாரம் இன்னும் சில – தக்காளி – டமாட்டர், பீட்ரூட் – சுக்கந்தர் [CHUKANDAR], முட்டைக்கோஸ் – பந்த் கோபி [Bandh Gobi] இல்லைன்னா பத்தா கோபி, குடைமிளகாய் – ஷிம்லா மிர்ச், பச்சை பட்டாணி – மட்டர்; கேரட் – காஜர் [Gajar], முள்ளங்கி – மூலி. அடுத்த பகுதியில இன்னும் கொஞ்சம் காய்கறிகளோட ஹிந்தி பெயர்களை பார்க்கலாம்.

இன்னும் வரும்…

புதன், 28 ஜூலை, 2010

ரசனைசாப்பாடு விஷயத்தில ஒரு சிலருக்குத்தான் மிகுந்த ரசனை இருக்கும். “ருசிக்கு சாப்பிடறவங்களை விட பசிக்கு சாப்பிடறவங்க”தான் பெரும்பாலோர். பசிக்கும் போது எந்த சாப்பாடு கிடைச்சாலும் நல்லாத் தானே இருக்கும்!

அந்தந்த வேளையில சாப்பிட்டு முடிச்சா ஒரு வேலை முடிஞ்சது பாருங்க! சாப்பாட்டை நல்லா ருசிச்சு சாப்பிடற அளவுக்குக் கூட இப்போதெல்லாம் நிறைய பேருக்கு நேரம் கிடைப்பதில்லை – அவ்வளவு ஓட்டமும் நடையுமா இருக்காங்க.

ஆனா இப்ப நான் சொல்லப்போறது இந்த மாதிரி ரசனை இல்லாத ஆளுங்கள பத்தி இல்லவே இல்லை. சாப்பாட்டு மேல ரசனை உள்ள – அதுவும் கொஞ்சம் அதிகமாவே ரசனை உள்ள ஒருவரைப் பத்தி.

நெய்வேலியில் நாங்க இருந்தபோது, எங்கப்பா கூட வேலை பார்த்த ஒருத்தரு எங்க வீட்டுக்கு சில சமயம் வருவாரு. அன்னிக்கு எங்க வீட்டுல அம்மா இட்லி செஞ்சிருந்தாங்கன்னா போச்சு! அவர் சாப்பிடாமல் போனதாக சரித்திரமில்லை.

சாப்பிடுங்கன்னு தட்டை வைத்ததும் அவரு சொல்வாரு – ”இரண்டு இட்லி போட்டு, அந்த இரண்டு இட்லிக்கு தகுந்த மாதிரி கொஞ்சமா இட்லி மிளகாய் பொடியும் எண்ணையும் விடுங்கன்னு”. அதை பொறுமையா ரசிச்சு சாப்பிட்ட பிறகு, அம்மாகிட்ட “இன்னும் இரண்டு இட்லியும் கொஞ்சம் சர்க்கரையும் போடுங்க!” ன்னு சொல்லி ருசிக்க ஆரம்பிச்சுடுவாரு.

சாப்பிட்டு முடிச்சப்பறம் அடுத்த இரண்டு இட்லி – பொட்டுக்கடலை போட்ட தேங்காய் சட்னியோட. அடுத்த இரண்டு இட்லியை ஒரு சின்னக் கிண்ணத்தில போட்டு அது மேல சாம்பார் விட்டு, சாம்பார் இட்லியா சாப்பிடுவார்.

வீட்டுல நானும் சகோதரிகளும் ரெண்டும் ரெண்டும் நாலு, நாலும் ரெண்டும் ஆறு, ஆறும் ரெண்டும் எட்டுன்னு காத்துலேயே கணக்கு வைச்சுட்டு இருப்போம்.

சாம்பார் இட்லி சாப்பிட்டதும், வேற ஒரு சின்னக்கிண்ணத்தில ரசம் விட்டு [அதுவும் கலங்கலா இருக்கக்கூடாது, மேலாக எடுத்து விடணும்] அதுல ரெண்டு இட்லியை போட்டு சாப்பிட ஆரம்பிப்பார். அதுக்குள்ள அம்மாவும் கொஞ்சமா வெங்காயம்-தக்காளி சட்னி தயார் செய்ய ஆரம்பிச்சிடுவாங்க.

அடுத்த ரெண்டு இட்லி, வெங்காயம்-தக்காளி சட்னியோட, இன்னும் ரெண்டு இட்லிக்கு ஊறுகாய், மேலும் இரண்டு இட்லிக்குத் தயிர் அப்படின்னு விதவிதமா கேட்டு வாங்கி அவர் சாப்பிட்டு முடிக்கும் போது, எங்களுக்கு கணக்கு சுத்தமா மறந்து போய், அம்மா கிட்ட போய் “ஏம்மா அந்த மாமா சுமாரா எவ்வளவு சாப்பிட்டு இருப்பாரு?” ன்னு கேட்போம்.

அதுக்கு அம்மா சொல்ற பதில் – இட்லி சாப்பிட்டு முடிச்ச உடனே அப்பாவின் அந்த நண்பர் விட்ட ஏப்பத்துல மறைஞ்சிடும். அதுக்கு மேல ஒரு ஃபில்டர் காப்பி குடிச்சுட்டுத்தான் அவரோட வீட்டுக்கு கிளம்புவாரு.

அவரோட இந்த சாப்பாட்டு ரசனைய இன்னிக்கு நினைச்சாலும் அதிசயமா இருக்கும். ஒருவேளை அவரோட மனைவி ஒழுங்கா இட்லி செய்யமாட்டாங்களோ?

வெள்ளி, 16 ஜூலை, 2010

இம்சை அரசனும் அரசியும்நாங்கள் தற்போது இருக்கும் அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு தம்பதியினர் வாடகைக்குக் குடி வந்தனர். கல்யாணம் ஆகி சில மாதங்களே ஆகியிருந்த ஒரு இளம் ஜோடி அது.

வந்த அன்றே என் வீட்டுக் கதவைத் தட்டி தண்ணீர் வேண்டும், பால் எங்கே கிடைக்கும் என பாதி ஆங்கிலத்திலும் பாதி ஹிந்தியிலும் கேட்டபோதே புரிந்துவிட்டது அவர்கள் தமிழர்கள் என்பது. பிறகு தமிழிலேயே பேசி அவர்களுக்கு வேண்டிய உதவிகள் செய்து கொடுத்தேன். புதிதாக வந்து இருக்கிறார்களே என்று தேனீர் கொடுத்து உபசரித்தோம்.

அவர்கள் ஹைதையிலிருந்து வேலை மாற்றமாகி வந்திருந்ததால் வீட்டுப்பொருட்கள் அங்கிருந்து வர சில நாட்கள் தாமதமாகியது. தினமும் காலையில், ”சார் வெளியே எங்கேயும் தேனீர் கிடைக்கல, எங்களுக்கு அது இல்லாமல் முடியாது” என்று சொல்லியே தினமும் தேனீர் கேட்க ஆரம்பித்து விட்டார்கள்.

அடுத்த வாரத்திலிருந்து அவர்களது தொல்லைகள் எங்களுக்கு ஆரம்பமாகின. காலை ஆறு மணிக்கு அழைப்புமணியை அழுத்தி “சார் பால் வந்துடுச்சா?” எனக் கேட்பதில் ஆரம்பிக்கும் தொல்லை, இரவு பத்துமணி வரை எதாவது ஒரு வகையில் தொடர்ந்து கொண்டே இருக்கும். நாங்களும் ”என்னடா இது சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொண்டோமோ” என நினைக்கும் அளவுக்கு இருக்கும் அவர்களது தொந்தரவு.

அதிலும் அந்த பெண்ணின் தொல்லை சொல்லி மாளாது. எப்போது பார்த்தாலும், நுனி நாக்கு ஆங்கிலத்தில் ஐநூறு, ஆயிரம் நோட்டா இருக்கு, பத்து ரூபா கொடுங்க, அப்பறம் தரேன் என்பார் பல நாட்கள். ஒரு முறை கூட அவராக திருப்பிக் கொடுத்தது இல்லை.

ஒரு நாள் கதவை தட்டி, ”என் செருப்பு அறுந்து போச்சு, உங்க செருப்பை கொடுங்க, கொஞ்சம் வெளியே போயிட்டு வந்துடறேன்” என்று பேருக்கு சொல்லிவிட்டு என் சம்மதத்தை எதிர்பார்க்காமல் அவராகவே செருப்பை மாட்டிக்கொண்டு சென்றுவிட்டார். அவ்வப்போது இருவரில் ஒருவர் "ஒரு வெங்காயம் கொடுங்க, ரெண்டு தீக்குச்சி கொடுங்க, மூணு அப்பளம் கொடுங்க!", என்று எதற்காகவாது கதவைத் தட்டுவார்கள்.

ஒரு நாள் நான் நன்றாகத் தூங்கிக்கொண்டு இருந்தபோது கதவைத் தட்டி, “ரெண்டு தீக்குச்சி கொடுங்க!” என்று கேட்டார். தூக்கம் கலைந்த கோபத்தில் நான் தீக்குச்சியெல்லாம் இல்லை என்று சொல்லி சொல்லி கதவை மூட முயன்றேன். ”தீக்குச்சி இல்லைன்னா கேஸ் லைட்டராவது கொடுங்க!” என்றார் விடாக்கண்டன் கொடாக்கண்டனாக. நானும் கேஸ் லைட்டரும் ரிப்பேர் என்று சொல்லி கதவை மூடும்போது “அப்ப நீங்க கேஸ் அடுப்பு பத்த வைக்க என்ன செய்வீங்க?” என்ற கேள்வி வேறு.

கணவன் மனைவி இருவருமே சரியான மறதி பேர்வழிகள். தினமும் அவங்க அலைபேசியை வீட்டுல எங்காவது வைத்துவிட்டு எங்க வீட்டுக் கதவைத்தட்டி, அவங்க அலைபேசிக்கு ஒரு அழைப்பு விடுக்கச் சொல்லுவாங்க.

எங்களுக்கு தினம் தினம் இதுபோன்ற பற்பல தொல்லைகள் . என்னடா இது உதவி செய்யப்போய் ரொம்ப உபத்திரவமா போச்சே என்று நாங்கள் நொந்து போனோம். சில நேரங்களில் நேரடியாகவுமே அவ்வப்போது மறைமுகமாக சொல்லியும் அவர்கள் திருந்துவதாயில்லை.

எப்போதடா இத்தொல்லைகளிலிருந்து நமக்கு விடிவுகாலம் என இருந்தபோது நல்ல வேளையாக அவர்களுக்கு தில்லியில் இருந்து மீண்டும் மாற்றல் வந்து விட்டது.

இந்த அனுபவம் எங்களுக்கு ஒரு படிப்பினையாக இருந்தது. இப்போதெல்லாம் யாருக்கும் உதவி செய்வதென்றால் ஒரு முறைக்கு இரு முறை யோசிக்க வேண்டியிருக்கிறது.

புதன், 14 ஜூலை, 2010

நாடக நாயகி

நெய்வேலி ஜவஹர் அறிவியல் கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது ”ஜூனியர் ஜேசீஸ் க்ளப்”பில் நான் சேர்மன் பொறுப்பிலும் மற்ற கல்லூரி நண்பர்கள் உறுப்பினர்களாகவும் இருந்தோம். கல்லூரியில் அவ்வப்போது நடக்கும் நிகழ்ச்சிகள் அனைத்திலும் நானும் நண்பர்களும் பங்கெடுத்துக்கொள்வோம்.

ஒரு முறை ஒரு நிகழ்ச்சியில் நானும் மற்றும் சில நண்பர்களும் சேர்ந்து ஒரு நாடகம் போட முடிவு செய்தோம். நாடகத்தில் மொத்தமாகவே ஆறு கதாபாத்திரங்கள்தான். கதாநாயகன், நாயகி மற்றும் நான்கு நண்பர்கள்.

நிகழ்ச்சி நடைபெறும் நாளும் வந்தது. மாலை ஆறு மணி நிகழ்ச்சிக்கு நான்கு மணியிலிருந்தே நாடகத்தின் கதாபாத்திரங்கள் அனைவரும் ஒப்பனை செய்துகொண்டு ஐந்து மணிக்குள் தயாராகிவிட்டோம். கதாநாயகி சந்தன நிறத்தில் தங்க நிற ஜரிகை பார்டர் போட்ட புடவை-ஜாக்கெட்டில், உதட்டுச்சாயம், வளையல், காதணி, கழுத்துக்குச் சங்கிலி என தகதகவென ஜொலித்துக்கொண்டிருந்தார்.

நிகழ்ச்சி நடக்கும் அரங்கம் வீட்டிலிருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அலங்கரிக்கப்பட்ட அந்த அழகுப் பெட்டகத்தை என்னுடைய மிதிவண்டியின் கேரியரில் உட்கார வைத்து அரங்கத்தை நோக்கிச் செல்லும் போது வழி நெடுகிலும் பல ஜோடி கண்கள் இருவரையும் மொய்த்துக் கொண்டிருந்தது.

முக்கிய சாலையில் வந்து சுற்றிலும் பார்த்தபடியே வேக வேகமாக மிதிவண்டியை செலுத்திக் கொண்டிருந்தேன். பிறந்ததிலிருந்து அதே ஊரில் இருந்ததால் சாலையில் செல்லும் பெரும்பாலானவர்கள் என்னை அறிந்தவர்களாக இருந்தனர். அனைவரது பார்வையிலும், ”என்ன இது, நாகராஜன் சார் பையன் ஒரு அழகிய பெண்ணை இவ்வளவு வேகமாக சைக்கிளில் அழைத்துச் செல்கிறானே?” என்ற கேள்விக்குறி!

என் வயதொத்த நண்பர்கள் வேறு ஆங்காங்கே சேர்ந்து எங்களை பின் தொடர ஆரம்பித்தார்கள். என் பின்னால் உட்கார்ந்திருந்த அழகு தேவதையோ குனிந்த தலை நிமிராமல், கையால் என்னை இடித்தவாறு “சீக்கிரம் போங்க, சீக்கிரம் போங்க!” என்று குரல் கொடுத்துக்கொண்டிருந்தது. அது சைக்கிள் செல்லும் வேகத்தில் ”என்னைக் காப்பாத்துங்க, காப்பாத்துங்க!” என்ற அபலைக் குரலாக மற்றவர்களுக்கு கேட்டிருக்குமோ என்னவோ?

அவர்கள் அனைவரிடமிருந்தும் காப்பாற்றும் எண்ணத்தோடு காற்றைக் கிழித்துக்கொண்டு மிதிவண்டியை அதிவேகமாக செலுத்தி நிகழ்ச்சி நடக்கும் அரங்கத்தின் பின் உள்ள அறையினுள் சென்ற பின்னர்தான் எனக்கு உயிரே வந்தது.

நாடகம் தொடங்குவதற்கு முன் பார்த்தால் எங்களைத் துரத்தி வந்த நண்பர்கள் அனைவரும் நான் நாடகத்தில் நடிக்கப் போவதைப்பற்றித் தெரிந்துகொண்டு மேடையை பார்த்தபடி உட்கார்ந்திருந்தனர். நாடகம் ஆரம்பித்தவுடன், ”யாருடா அந்த பொண்ணு?” என்று கத்தியதுடன் நில்லாமல் அரங்கமே அதிரும்படியான விசில் சத்தம் வேறு. அத்தனை சத்தங்களுக்கிடையே நாடகத்தினை நல்லபடியாக முடித்து அனைவரது பாராட்டினையும் பெற்றோம்.

கதாநாயகி பாத்திரத்தில் நடிப்பதற்கு கல்லூரித் தோழிகளிடம் கேட்காமல் நண்பர்களில் ஒருவருக்கே கதாநாயகி வேடத்தினைக் கொடுத்துவிட்டோம். நண்பரும் எந்தவித சங்கடமுமின்றி ஒத்துக்கொண்டு விட்டார். அதில் அவரை விட அவரது அம்மாவுக்கு அதிக ஆர்வம் வந்து விட நண்பருக்கு ஒப்பனைகள் செய்ய நான்கு நாட்களுக்கு முன்னிருந்தே எல்லாவிதமான தயாரிப்பு ஏற்பாடுகளில் இறங்கி நண்பரை ஒரு அழகான பெண்ணாக மாற்றியிருந்தார்.

பெண்ணாக நடித்த நண்பருக்கு நல்ல கைத்தட்டல். நாடகம் முடிந்து நண்பரும் வேடம் கலைத்து ஆணாக வந்த பின்னர், எங்களைத் துரத்திய அத்தனை நண்பர்களின் முகத்திலும் லிட்டர் லிட்டராக அசடு வழிந்தது.

இரவு வீடு திரும்பி டிபனை சாப்பிட்டுவிட்டு படுத்த போது நிஜமாகவே ஒரு பெண்ணை கயவர்களிடமிருந்து காப்பாற்றிய ஒரு உணர்வு எனக்குள் ஏற்பட்டது என்னவோ நிஜம்.

ஞாயிறு, 11 ஜூலை, 2010

உலக மக்கள்தொகை தினம் – 11, ஜூலைஉலக மக்கள் தொகை கணக்கில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் நமது தேசத்தின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 119 கோடி. உலகிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாடுக்குள் வைக்க 1952-லியே திட்டமிட்ட ஒரே நாடு இந்தியா. ஆனாலும் 1952-ஆம் வருடம் 36 கோடியாக இருந்த நம் மக்கள் தொகை வளர்ந்து இப்போது 119 கோடியாக உள்ளது.

தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களிலேயே சீனாவினை நாம் முந்திவிடும் அபாயம் உள்ளது. இது ”ஹய்யா… நான் முதலிடத்துக்கு வந்துட்டேனே!” என்று சந்தோஷப்படாமல் வருத்தப்பட வேண்டிய விஷயம். இது பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலே இந்த இடுகையின் முக்கிய நோக்கம்.

உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடு மட்டுமே. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 16.87 விழுக்காடு உள்ளோம்.

நம் தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பல விஷயங்களில் முதன்மையானதாக இருப்பது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நமது மக்கள் தொகை. ஆகவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் இது மிகவும் தலையாய ஒன்று.

இப்போதைய இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், அதாவது 51 சதவிகித மக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வயது வரம்பில் உள்ளவர்கள். இது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

பிறப்பு விகிதம் [22.8/1000] குறைந்து வரும் அதே நேரத்தில் இறப்பு விகிதமும் [7.4/1000] குறைந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாவதில் 42 சதவிகிதக் காரணி – இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்தில் உண்டாகும் குழந்தைப் பிறப்பு.

வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் சட்டப்படி திருமணத்திற்கான வயது என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 98% பெண்களுக்கே நடக்கிறது. குடும்பத்தைக் கட்டுப்பாடுடன் வைக்க ஆண்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கவேண்டும். ஆனால் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

இந்தியாவில் தோராயமாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தில்லியில் ஒரு சில இடங்களில் மக்கள் தொகையை தோராயமாக சொல்லும் ஒரு கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது. அக் கடிகாரம் மூலமாக ஒவ்வொரு நிமிடமும் மக்கள் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் தற்போதைய உத்தேசிக்கப்பட்ட மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

உலக மக்கள் தொகை தினம் ஆகிய இன்று சற்றே சிந்திப்போம்!

வியாழன், 8 ஜூலை, 2010

மாம்பழம் சாப்பிட வாங்க!தில்லி சுற்றுலா கழகம் ஜூலை 2-3 தேதிகளில் 22வது மாம்பழ விழாவினை ஏற்பாடு செய்திருந்தனர். இந்த விழாவானது பீதம்புரா பகுதியில் அமைந்துள்ள ”தில்லி ஹாட்” வளாகத்தில் வெகு விமரிசையாகக் கொண்டாடப்பட்டது.

ரகம் ரகமாக எத்தனை மாம்பழங்கள்? இங்கே எழுபத்தைந்துக்கும் மேற்பட்ட மாம்பழ வகைகளை வெறும் காட்சிப்பொருளாக மட்டுமே வைக்கப்பட்டு இருந்தது. முக்கியமான சில வகைகள், மல்லிகா, கரேலா, பப்புகோஷா, பாதாம், குலாப்ஜாமுன், அல்ஃபோன்சா, தோதாபரி மற்றும் பல.

அமைதிச்சாரல் வலைப்பூவில் குறிப்பிடப்பட்டிருந்த ”சச்சின்” வகை மாம்பழத்தினையும் காட்சியில் வைத்திருந்தனர்.
ஒரு சில விற்பனைக்கூடங்கள் இருந்தாலும், அவற்றில் தில்லியில் பொதுவாகக் கிடைக்கும் ”தசேரி, லங்க்டா, சோசா” வகை மாம்பழங்களே விற்பனை செய்யப்பட்டது வருத்தமாக இருந்தது.

மாம்பழ விழாவினை முன்னிட்டு மேஜிக் ஷோ, ஆண்களுக்கும் பெண்களுக்கும் தனித்தனியாக மாம்பழம் சாப்பிடும் போட்டி, மற்றும் பாரம்பரிய இசைக்கலைஞர்களின் இசை போன்றவையும் ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது.

ஆங்காங்கே ”மாம்பழங்களை தொடாதீர்கள்” என ஆங்கிலத்திலும், ஹிந்தியிலும் எழுதி வைக்கப்பட்டிருந்தாலும், அங்கே வந்திருந்த ஒரு பெண்மணி காட்சிக்கு வைக்கப்பட்டிருந்த ஒவ்வொரு வகை மாம்பழத்தினையும் கையில் எடுத்து வாசனை பார்த்து எல்லோரையும் படுத்திக்கொண்டு இருந்தார். மாவடு அளவு இருந்த ஒரு மாம்பழத்தினை எடுத்து தனது மகனுக்கு காண்பிக்க வீட்டுக்கு எடுத்துச் செல்லவா என்றும், ”தேங்காய்-மாங்காய்” என்ற ஒரு வித மாம்பழத்தை பார்த்து, ”இதை உடைத்தால் தண்ணீர் வருமா?” என்றும் காட்சியாளர்களை கேட்டது தான் அதன் உச்ச கட்டம் .

பல வகை மாம்பழங்களை பார்த்து ரசித்தால் மட்டும் போதுமா என்ன? அதுவும் வளாகத்தின் வெளியிலேயே அழகான படங்கள் – “Can You Resist It?” என கேட்கும்போது? அதனால் கிடைத்த மாம்பழ வகைகளில் எல்லாவற்றில்லும் ஒரு கிலோ வாங்கி வந்தேன். இந்த வாரம் எனது வீட்டில் “மாம்பழ வாரம்ம்ம்ம்ம்!”

திங்கள், 5 ஜூலை, 2010

ஒன்றல்ல இரண்டு பிறந்த நாள் பரிசுகள்.

என் பிறந்த நாளை முன்னிட்டு எனக்கு இரண்டு பரிசுகள் கிடைத்தது. இரண்டுமே மிக முக்கியமான நபர்களிடமிருந்து கிடைத்த பரிசுகள்.

முதலாவது எனது மகள் தானே ஒரு படம் வரைந்து அதை பரிசாக எனக்குக் கொடுத்தது. எனக்கு அவள் பூக்கள் கொடுப்பது போன்ற ஒரு படம்.

அதில் அவளாகவே மேலே தனது பெயரை எழுதிய பின் அம்மாவிடம் சொல்லி, “HAPPY BIRTHDAY APPA” என்று அவள் சொல்வது போலவும் நான் அதற்கு “THANK YOU CHELLAM” என்று பதிலளிப்பது போலவும் எழுதிவாங்கி எனக்குக் கொடுத்தாள்.
இன்னொரு பரிசும் இந்தப் பிறந்த நாளுக்கு எனக்குக் கிடைத்தது. அதுவும் சந்தோஷமளிக்கும் மிக முக்கியமான ஒரு பரிசு.

அது எனது தந்தையிடமிருந்து வந்த ஒரு காசோலை. மற்ற காசோலைகளைப் போல அது எத்தனை ரூபாய்க்கு என்பதை வைத்து அதன் மதிப்பை அளவிட முடியாது.

நாம் என்னதான் ஆயிரம் சம்பாதித்தாலும், நம் தந்தை நம்முடைய பிறந்த நாளுக்காகக் கொடுக்கும் காசு என்னும்போது அதன் மதிப்பு பல மடங்கு அதிகமாகிவிடுகிறது என்பதை நாம் மறுப்பதிற்கில்லை.

அந்த வகையில் எனது இந்த பிறந்த நாள், எனது மகள் எனக்குக் கொடுத்த ஓவிய பரிசாலும், என் தந்தை எனக்கு அனுப்பிய பரிசினாலும் மறக்கமுடியாத ஒன்றாக அமைந்துவிட்டது.

எனது பிறந்த நாளைப் பற்றி நானே சொல்லிக்கொள்ள ஆசைப்படாவிட்டாலும் [!] இவ்விரு பரிசுகளும் என்னை இந்த இடுகை எழுத வைத்து விட்டது.

எல்லாம் வல்ல அந்த இறைவன் இவ்விருவருக்கும் நீண்ட ஆயுளையும் சந்தோஷத்தையும் அளிக்கட்டும்.