ஞாயிறு, 11 ஜூலை, 2010

உலக மக்கள்தொகை தினம் – 11, ஜூலைஉலக மக்கள் தொகை கணக்கில் சீனாவிற்கு அடுத்து இரண்டாவது இடத்தில் இருக்கும் நமது தேசத்தின் தற்போதைய மக்கள் தொகை சுமார் 119 கோடி. உலகிலேயே மக்கள் தொகையை கட்டுப்பாடுக்குள் வைக்க 1952-லியே திட்டமிட்ட ஒரே நாடு இந்தியா. ஆனாலும் 1952-ஆம் வருடம் 36 கோடியாக இருந்த நம் மக்கள் தொகை வளர்ந்து இப்போது 119 கோடியாக உள்ளது.

தற்போதைய வளர்ச்சி விகிதத்தில் தொடர்ந்தால் இன்னும் சில வருடங்களிலேயே சீனாவினை நாம் முந்திவிடும் அபாயம் உள்ளது. இது ”ஹய்யா… நான் முதலிடத்துக்கு வந்துட்டேனே!” என்று சந்தோஷப்படாமல் வருத்தப்பட வேண்டிய விஷயம். இது பற்றிய சில தகவல்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ளலே இந்த இடுகையின் முக்கிய நோக்கம்.

உலகின் மொத்த நிலப்பரப்பில் இந்தியா 2.4 விழுக்காடு மட்டுமே. ஆனால் உலகின் மொத்த மக்கள் தொகையில் 16.87 விழுக்காடு உள்ளோம்.

நம் தாய்த் திருநாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக உள்ள பல விஷயங்களில் முதன்மையானதாக இருப்பது கட்டுப்பாட்டுக்குள் இல்லாத நமது மக்கள் தொகை. ஆகவே மிக முக்கியமாக கவனிக்க வேண்டிய பிரச்சனைகளுள் இது மிகவும் தலையாய ஒன்று.

இப்போதைய இந்திய மக்கள் தொகையில் பெரும்பாலானவர்கள், அதாவது 51 சதவிகித மக்கள் இனப்பெருக்கம் செய்யக்கூடிய வயது வரம்பில் உள்ளவர்கள். இது மக்கள் தொகை பெருக்கத்திற்கு ஒரு முக்கிய காரணம்.

பிறப்பு விகிதம் [22.8/1000] குறைந்து வரும் அதே நேரத்தில் இறப்பு விகிதமும் [7.4/1000] குறைந்து கொண்டு இருக்கிறது.

இந்தியாவின் மக்கள் தொகை அதிகமாவதில் 42 சதவிகிதக் காரணி – இரு குழந்தைகளுக்கு மேல் உள்ள குடும்பத்தில் உண்டாகும் குழந்தைப் பிறப்பு.

வட மாநிலங்களில் பெரும்பாலான இடங்களில் சட்டப்படி திருமணத்திற்கான வயது என்ன என்பதே தெரியாமல் இருக்கிறார்கள்.

இந்தியாவில் நடக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 98% பெண்களுக்கே நடக்கிறது. குடும்பத்தைக் கட்டுப்பாடுடன் வைக்க ஆண்களின் பங்களிப்பும் முக்கியமாக இருக்கவேண்டும். ஆனால் இல்லை என்பதே வருத்தமான உண்மை.

இந்தியாவில் தோராயமாக இரண்டு நிமிடத்திற்கு ஒரு குழந்தை பிறக்கிறது. தில்லியில் ஒரு சில இடங்களில் மக்கள் தொகையை தோராயமாக சொல்லும் ஒரு கடிகாரம் நிறுவப்பட்டுள்ளது. அக் கடிகாரம் மூலமாக ஒவ்வொரு நிமிடமும் மக்கள் தொகை எவ்வளவு என்பதை தெரிந்து கொள்ளலாம். இந்தியாவின் தற்போதைய உத்தேசிக்கப்பட்ட மக்கள் தொகை எவ்வளவு என்பதைத் தெரிந்துகொள்ள இங்கே செல்லுங்கள்.

உலக மக்கள் தொகை தினம் ஆகிய இன்று சற்றே சிந்திப்போம்!

9 கருத்துகள்:

 1. மிகவும் சிந்திக்க வேண்டிய விசயம். ஆனால் கவலை தரும் விசயமும் அதுவே.

  பதிலளிநீக்கு
 2. //hmm enna pannalam

  ஒண்ணும் பண்ணக் கூடாது!//

  ஆமாமா. சரியாச் சொன்னீங்க. ஆனா எத்தனை நாளைக்குன்னு சொல்லவே இல்லையே!

  பதிலளிநீக்கு
 3. //இந்தியாவில் நடக்கும் குடும்பக் கட்டுப்பாடு அறுவை சிகிச்சைகளில் 98% பெண்களுக்கே நடக்கிறது.//

  ஓரளவு வற்புறுத்தவும் படுகிறார்கள் :-((.

  பதிலளிநீக்கு
 4. அய்யா வெங்கட் அவர்களே,
  "எல்லோரும், இதற்கு என்ன செய்யலாம் எப்படி செய்யலாம் என்று பேசியே காலத்ததை கடத்தினால் நாம் சீனாவை மிஞ்சுவதற்கு 2050 வரை காத்திருக்க வேண்டம், இலக்கை 2025 லேயே எட்டிவிடுவோம்.!!

  சுயக்கட்டுப்பாடு, புலன்களை அடக்கி ஆளுதல் இவையெல்லாம் நமது நாட்டுக்கு ஒத்து வராது. சைனாவைப் போல் இதற்கு கடுமையான சட்டங்களை கொண்டு வருவது ஒன்றே இதற்கு நிரந்தர தீர்வு தரும். ஆனால், ஓட்டு வங்கியை ஆதரிக்கும் நமது ஆட்சியாளர்கள் இதைப்பற்றி சிந்திப்பார்களா
  என்பதே தலையாய கேள்வி!!

  மந்தவெளி நடராஜன்.

  பதிலளிநீக்கு
 5. ஒரு சில குறிப்பிட்ட சமுதாய/மத மூடநம்பிக்கையாளர்களைத் தவிர பெரும்பான்மையோர் தற்போது சிந்திக்கிறார்கள். தன் குழந்தையும் நன்கு படிக்க வேண்டும். உயர்ந்த நிலைக்கு வர வேண்டும் என்று எண்ணும் பலரும், குறைந்த பட்சம் தனது பொருளாதார நிலையை கருத்தில் கொண்டாவது, சிறு குடும்பம் என்கிற கான்செப்ட்-ஐ பின்பற்ற தொடக்கி விட்டனர். ஆனாலும் என்ன செய்வது! நமது முந்தைய தலைமுறையின் "நாம் இருவர் - நமக்கு (குறைந்தது) அறுவர்" என்ற கொள்கை பெரிய damage - ஐ இந்தியாவிற்கு செய்துள்ளது என்பதை மறுக்க முடியாது. அதை சமன் படுத்தவே வருங்கால ஒன்று அல்லது இரண்டு தலை முறையினர் "நாம் இருவர் - நமக்கு ஒருவர்" அல்லது "நாம் இருவர் - நமக்கு ஏன் ஒருவர்" என்ற கொள்கையினை கடைபிடித்தாக வேண்டும்.

  (குறைவாக பிள்ளை பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொல்ல எவ்வளவு பெரியதாக எழுத வேண்டியிருக்கிறது)

  பதிலளிநீக்கு
 6. குறைஞ்ச பட்சம் 5 அதிக பட்சம் 10 ந்னு கொஞ்ச காலம் மு்னன இருந்ததால் ஏற்பட்டது, சமன் பட காலம் ஆகிறது.

  பதிலளிநீக்கு
 7. இந்த இடுகையைப் படித்து தங்களது கருத்துக்களை எழுதிய அத்தனை நல்ல உள்ளங்களுக்கும், தமிலிஷ்-இல் வாக்களித்து பிரபலப்படுத்தியவர்களுக்கும் எனது மனமார்ந்த நன்றி.

  பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....