சாதாரணமா ஒரு ஆண் ஒரு
பெண்ணை பார்த்து விசிலடித்தால் பிரச்சனை தான். அதே மாதிரி ஒரு பெண் ஆணைப் பார்த்து
விசிலடித்தாலும் பிரச்சனை தான்!
கல்லூரி நாட்களில்
கோவை-கேரளா சுற்றுலா சென்றபோது எங்கள் கல்லூரி பெண் ஒருவர் எங்கள் பேருந்தினை ஒரு
லாரி கடக்க முயன்றபோது விசிலடிக்க, கிட்டத்தட்ட பாலக்காடு முதல் கோவை வரை, எங்கள்
பேருந்திற்கும் அந்த லாரிக்கும் ஒரு ஹாட் ரேஸே நடந்தது! ஒவ்வொரு முறையும் அந்த
லாரி முன்னேற, அந்த தோழி விசிலடிக்க, லாரி பின்னே செல்லும்!
விசில் என்றாலே தவறான
கண்ணோட்டத்தோடு பார்வையிடும்போது அந்த விசிலோசை வைத்து கர்நாடக பாடல்கள், சினிமா
பாடல்கள் என்று வாசித்தால்!
பொதிகை தொலைக்காட்சியில் தினமும்
வரும் ”காலைத்தென்றல்” நிகழ்ச்சியின்
ஒரு பகுதி ‘நம் விருந்தினர்’. சென்ற
வாரத்தில் ஒரு நாள் அந்த நிகழ்ச்சியில் விசிலோசை மூலம் கர்நாடக பாடல்களை இசைக்கும்
“விசிலோசை” திரு
ஆர். பத்மநாபன் என்பவரை நேர்காணல் கண்டார்கள். ஒரு வாய்ப்பாட்டுக்காரரான இவர்
பலருக்கு இசை பயிற்றுவிக்கிறார். கோவை
வாசியான இவர் சிறு வயது முதலே விசிலோசையை பழகி வருகிறார்.
சிறு வயதில்
அவரது அம்மா ‘விசிலடிக்காதே’ என்று கண்டித்தாலும், விசில் மூலம்
கீர்த்தனை, ராகம் போன்றவற்றை தொடர்ந்து பயிற்சி செய்து வாசிக்கிறார். விசில் வாசிப்பதில் – காற்றினை உள்வாங்குவது,
வெளியே அனுப்புவது என சில வகைகள் இருக்கின்றன என்று சொன்னார். ஒவ்வொரு நாளும்
சாதகம் செய்து வரும் இவர், நேர்காணலின் போது புல்லாங்குழலுக்கும் விசிலோசைக்கும்
இருக்கும் வித்தியாசத்தினையும் சொன்னார்.
புல்லாங்குழலில்
மூச்சுக்காற்றினை செலுத்தி புல்லாங்குழலில் உள்ள துளைகளில் விரல்கள் கொண்டு
அடைத்தும், திறந்தும், ராகத்தினை வெளிப்படுத்துகிறார்கள். ஆனால் விசிலோசை என்பது
முழுக்க முழுக்க மூச்சு மட்டுமே. அதாவது
மூச்சினை மட்டுமே இசையாக மாற்றுவது. இதற்கு கடுமையான மூச்சுப் பயிற்சி அவசியம்.
விசிலோசை மூலம் கர்நாடக சங்கீதம் மட்டுமல்லாது சினிமா பாடல்களும் பாடிக்
கண்பித்தார். நிகழ்ச்சியின் போது பாரதியாரின்
”எண்ணிய
முடிதல் வேண்டும்” பாட்டினை
வாய்ப்பாட்டாகவும், விசிலோசையாகவும் வாசித்துக் காண்பித்தார். நாட்டை ராகத்தில்
ஸ்ருதியோடு வாசித்தது ரசிக்கும்படி இருந்தது.
கச்சேரிகளில் வாய்ப்பாட்டு,
வயலின், மிருதங்கம், கடம் என்று இருக்கும்போது கூடவே விசிலோசை மூலமும் கச்சேரிகள்
நடத்தி இருப்பதாகச் சொன்னார் திரு பத்மநாபன். தொடர்ந்து மூன்று மணி நேரம் விசிலோசை
மூலம் கச்சேரிகள் நடத்தி இருப்பது ஆச்சரியம் தான்.
தொலைக்காட்சி நிகழ்ச்சியின்
போது அவர் பாடிய இரண்டு சினிமா பாடல்கள் – அக்னி நக்ஷத்திரம் படத்திலிருந்து
“தூங்காத விழிகள் இரண்டு” மற்றும் பச்சை விளக்கு படத்திலிருந்து
“கேள்வி பிறந்தது அன்று”.
நிகழ்சியின் போது இன்னுமொரு தகவலையும் சொன்னார். வாய்ப்பாடல் சொல்லித்தரும்
இவர் விசிலோசையையும் பயிற்றுவிக்கத் தயாராக இருக்கிறார். ஆனால் கற்றுக்கொள்ள
ஆர்வமும், கொஞ்சமாவது விசிலடிக்கும் திறமையும் இருந்தால் நீங்களும் கற்றுக்
கொள்ளலாம்!
விசிலோசை
வாசிக்கும் இவர்கள் Indian Whislters Association என்ற ஒரு
அமைப்பினையும் வைத்திருக்கிறார்கள். இந்தியா முழுவதும் பல நிகழ்ச்சிகளை நடத்தி
வரும் இந்த அமைப்பில் நானூறுக்கும் மேற்பட்டவர்கள் உறுப்பினர்களாக இருக்கிறார்கள்.
இந்த அமைப்பில் தமிழகத்திலிருந்து மட்டுமே 100 பேர் உறுப்பினர்களாம் – திரு
பத்மநாபன் மற்றும் ஒய். ஜி. மகேந்திரன் ஆகியோரும் இதில் Elite
Members. இந்த அமைப்பிற்கு ஒரு இணைய தளம் கூட இருக்கிறது.
சென்ற வருடம் சென்னையில்
விசிலோசை மூலமாகவே எஸ்.பி. பாலசுப்ரமணியன் அவர்களது பாடல்களை தொடர்ந்து வாசித்து
இருக்கிறார்களாம். 19 ஃபிப்ரவரி 2012 அன்று நடந்த WHISTLING
TRIBUTE TO DR. S.P. BALASUBRAMANIAM என்ற
நிகழ்ச்சியில் 19 விசிலோசை வாசிப்பவர்கள் சேர்ந்து நடத்திய
நிகழ்ச்சியில் விசிலோசை வாசித்ததில் திரு பத்மநாபன் அவர்களுக்கு மட்டில்லா
மகிழ்ச்சி!
இந்த அமைப்பு 48
நபர்களைக் கொண்டு வாசித்து LIMCA BOOK OF RECORDS-ல் இடம் பெற்றுள்ளார்கள்
– விசிலோசை மூலம் வாசித்த பாடல் என்ன தெரியுமா – ‘சாரே ஜஹான் சே அச்சா,
ஹிந்துஸ்தான் ஹமாரா’ – இதன் காணொளி கீழே!
என்ன நண்பர்களே
இனிமே யாராவது விசிலடிச்சா, தப்பா நினைக்காதீங்க! விசிலோசைக்கு பயிற்சி செய்யறதா
நினைச்சுக்கோங்க!
மீண்டும் வேறொரு
பதிவில் சந்திக்கும் வரை....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.