ஞாயிறு, 16 ஜூலை, 2023

கதம்பம் - வேர்க்கடலை - மல்லிகை மகள் - ஸ்வீட் காரம் காப்பி - ஓவியம்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட காஃபி வித் கிட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


வேர்க்கடலை




அம்மா! ப்ளீஸ் மா! உரிச்சு குடேன்!!


உன்ன விட சின்னவன் அவனே உரிச்சு திங்கறான் பாரு!


அம்மா! எனக்கு வரவே மாட்டேங்கறது பாரு!! என்று சிணுங்க…


இதோ பாரு! இப்படி வெச்சு அழுத்தினா வெளிய வந்துடப் போறது! அதை எடுத்து வாயில போட்டுண்டா அதை சாப்பிட்டு முடிக்கிறதுக்குள்ள அடுத்ததை பிரிச்சிடலாம்! இப்படி பொறுமையா சாப்பிட்டா தான் ஜீரணமும் ஆகும்! என்ன புரியறதா??


'இந்தா இத வாங்கிக்கோ' என்று சர்ப்ரைசாக நாலு கடலையை உரித்து தருவாள் அம்மா!


கோவையின் சில்லென்ற மாலைப்  பொழுதினில் பள்ளி விட்டு வீடு திரும்பிய பிள்ளைகளுக்காக சுடச்சுட கடலை வேகவைத்து தருவாள் அம்மா. சில நேரம் மணலில் இட்டு வறுத்தும் தருவாள். எதுவாக இருந்தாலும் அவை நான்கு பங்காக பிரிக்கப்படும்! 


இந்தாடி உன்னோட பங்கு! இந்தாடா உன்னோடது இங்கேயே சாப்பிட்டுட்டு தான் விளையாடப் போகணும் என்ன!  டிராயர்ல போட்டுண்டு ஓடலாம்னு பார்க்காத! ரெண்டு பேரும் சூடா சாப்பிடுங்கோ! அப்பாவோடத எடுத்து வெக்கறேன்! ஆஃபீஸ்ல இருந்து வந்ததும் தரேன்! 


டேய்! இங்க பாரு! எங்கிட்ட இருக்கிறதுல மூணு கடலை இருக்கு பார்த்தியா!


நான் ஒரு விடுகதை கேக்கட்டுமா??


பெட்டியைத் திறந்தா கிருஷ்ணன் பிறந்தான்! அது என்ன??


ஆ! உன் வாயில இருக்கிற கடலை...🙂


______________________ 

வாரச்சந்தையில் மூணு கா(ல்)ப்படி 50ரூ என்று கட்டி வைத்திருந்த கடலையை வாங்கி வந்து உப்பு சேர்த்து குக்கரில் நான்கு விசில் விட்டு வைத்தேன். தேநீருடன் சூடான கடலையை கொறித்துக் கொண்டே பசுமையான இளம்பிராயத்து நினைவுகளுடன் மாலைப்பொழுது கழிந்தது!


*&*&*&*&*&*&


மல்லிகை மகள்!:



மாத இதழாக வெளிவரும் மல்லிகை மகளை இம்முறை தான் முதல்முறையாக வாசித்தேன். ஒரு பல்சுவை கதம்பமாக மல்லிகை சரத்தின் இடையே மரிக்கொழுந்தும், கனகாகாம்பரமும் சேர்ந்து கட்டியது போன்று கண்களுக்கு விருந்தாகவும் வாசிக்க ஸ்வாரஸ்யமாகவும் இருந்தது என்று சொல்லலாம்! நமக்கு நன்கு அறிமுகமான எழுத்தாளுமைகளின் எழுத்தை இங்கு வாசிப்பது என்பது கூடுதல் மகிழ்வைத் தந்தது!


இந்த மாதம் துவங்கியுள்ள சரித்திர திரில்லரான காலச்சக்கரம் நரசிம்மா சாரின் 'சாரதாவின் சூடாமணி'யை வாசிக்க மிகவும் ஆர்வம் கொண்டிருந்தேன். பார்வதி தன் தோழிகளுடன் விளையாட ஒரு நந்தவனம் அமைத்துத் தருமாறு சிவபெருமானிடம் கேட்கவே தன் கேசத்திலிருந்து ஒரு முடியை எடுத்து ஊதி விடுகிறார். அது விழுந்த இடத்தில் ஒரு நந்தவனமாக மாறியதாம். அதுவே 'காஷ்மீர்' என்றும் ஆனதாம். இப்படித்தான் ஸ்வாரஸ்யமாக துவங்கியிருக்கிறது 'சாரதாவின் சூடாமணி'! கலைகளின் பிறப்பிடமாக அங்கு அமைந்த சாரதா பீடத்தைப் பற்றிய கதை இது!


ஒரு எழுத்தாளர் மற்றொரு எழுத்தாளரின் கதையைப் பற்றியும், எழுத்தைப் பற்றியும் சிலாகித்துக் கூறுவது என்பது என்னை மிகவும் ஆச்சரியப்படுத்தியது! மிகவும் மகிழ்வாகவும் இருந்தது! பல  வருடங்களுக்கு முன் தான் வாசித்த ஒரு கதையைப் பற்றியும் அந்தக் கதைக்கருவுடன் தொடர்புடைய நிஜத்தைப் பற்றியும் நம்ம வித்யா சுப்ரமணியம் மேம் 'கதையும் நிஜமும்' என்ற பகுதியில் எழுதியுள்ளார். அவர் சிலாகித்துக் கூறிய அந்த எழுத்தாளுமை நம்ம ரிஷபன் சார் அவர்கள்!


'பாரதம் போற்றும் பாத்திரங்கள்' என்ற தலைப்பில் திருப்பூர் கிருஷ்ணன் சார் புதிய தொடரைத் துவங்கியுள்ளார்! குந்தியின் மன ஓட்டத்தில் தன் வாழ்வைக் குறித்த நியாயங்களையும் தர்மங்களையும் ஆராய்ந்து கொண்டிருக்க நாமும் சற்று மகாபாரதக் கதைக்குள் வலம் வருவதாக இருக்கிறது!


இயக்குனர் வசந்த பாலனின் 'அம்மாவின் கைகளில்' என்ற தலைப்பில் பகிர்ந்து கொண்டுள்ள வாழ்வியல் அனுபவம் மனதை நெருடியது. தன் பிள்ளைகளுக்காக வாழும் அம்மாக்களின் பாசத்திற்கு நிகர் தான் ஏது!! தன்னுடைய வலிகளையும், வேதனைகளையும் மறைத்துக் கொண்டு பிள்ளைக்கு முகம் மலர பரிமாறும் ஆப்பமும் தேங்காய்ப் பாலும் தான் எத்தனை சுவை!!


இப்படி பக்கத்திற்கு பக்கம் நாட்டுநடப்பு, துணுக்குகள், தொடர்கதை, சமையல் என்று பலவிதமான செய்திகளை கொட்டிக் கொடுக்கும் இந்த இதழை வாசித்ததில் எனக்கு மகிழ்ச்சியே! வாய்ப்புக் கிடைத்தால் நீங்களும் வாசித்துப் பாருங்களேன்.


*&*&*&*&*&*&


Sweet kaaram coffee!:





நேற்று அமேஸான் ப்ரைமில் பார்த்த வெப் சீரீஸ்! மொத்தம் எட்டு எபிசோடுகள்! நடிகை லஷ்மி மாமியாராகவும் மதுபாலா மருமகளாகவும் மதுபாலாவின் மகளாக ஒரு பெண்ணும் என இந்த  மூன்று பேரும் தான் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்!


அன்றாட வாழ்வின் நெருக்கடியிலிருந்து சற்றே மாறுதலாக வெளியே செல்ல நினைக்கின்றனர் மூவரும்! ஒவ்வொருவருக்கும் ஒரு காரணம்! லஷ்மிக்கு பல வருடங்களுக்குப் பின்  ஒரு குறிப்பிட்ட நபரை கண்டுபிடித்து பார்த்தே ஆக வேண்டும் என்ற குறிக்கோள்! 


மதுபாலாவுக்கு கணவனும் குழந்தைகளும் தன்னை புறக்கணிப்பதாகவும், தான் ஒரு பொம்மை போன்று அந்தக் குடும்பத்தில் உழைத்துக் கொண்டிருப்பதாகவும் அவர்களை விட்டு பிரிந்திருந்தால் தான் தன்னைப் பற்றி அவர்களுக்குத் தெரியும் என்று நினைக்கிறார்!


அவரின் மகளுக்கோ மனதில் பலவித குழப்பங்கள்! கிரிக்கெட் தான் தனக்கான வாழ்க்கைப் பாதை என்று நினைக்கும் அவள், ஒருவேளை தன் கனவைத் தொலைத்து அம்மாவைப் போன்று குடும்பத் தலைவியாக மாறி விடுவோமோ என்று பயப்படுகிறாள்!


இப்படி மூவரின் எண்ணங்களும் வேறுவேறாக இருக்க ஒருநாள் இரவு வீட்டை விட்டு புறப்பட்டு விடுகிறார்கள்! போகும் பாதை கேள்விக்குறியாக இருக்க அதில் ஒவ்வொரு நாளும் கிடைக்கும் அனுபவங்களும், மூவருக்கும் இடையேயான புரிதல்களும் தான் கதை! முற்றிலும் எதிர்பாராத திருப்பங்கள் நிறைந்த சீரிஸாக இருந்தது!


நடிகை லஷ்மியும் மதுபாலாவும் இதில் சிறப்பாக நடித்திருந்தார்கள்! இதுபோன்ற வெப் சீரிஸ் பார்க்கும் போது தான் மாறிப் போன நமது வாழ்க்கை முறையைப் பற்றி தெரிந்து கொள்ள முடிகிறது! எங்கே சென்று கொண்டிருக்கிறோம்! என்று நினைக்க வைக்கிறது! எதிர்காலத்தை எண்ணி சற்றே பதட்டமாகவும் இருக்கிறது!


வாய்ப்பு கிடைத்தால் நீங்களும் பாருங்களேன்!



*&*&*&*&*&*&


மகள் வரைந்த ஓவியம் ஒன்று:


மகள் சமீபத்தில் வரைந்த ஓவியம் ஒன்று உங்கள் பார்வைக்கு! 




******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்


7 கருத்துகள்:

  1. கடலை - சுவையான நினைவுகள்.  

    மல்லிகை மகள் என்றொரு புத்தகம் வருவதை அறிந்தேன்!

    அமேசானில் அந்த சீரிஸை பார்க்க இன்னும் நேரம் கிடைக்கவில்லை!

    ரோஷ்ணி ஓவியம் அருமை.

    பதிலளிநீக்கு
  2. அவித்த கடலை எனக்கு மிகவும் பிடிக்கும். கதம்பம் நன்று

    பதிலளிநீக்கு
  3. ஓவியம் அழகு...

    வெப் சீரீஸ் பார்க்க வேண்டும்...

    பதிலளிநீக்கு
  4. கடலை மலரும் நினைவுகளை தந்தது மகிழ்ச்சி. அருமையான மலரும் நினைவுகள்.
    ரோஷ்ணி ஓவியம் மிக அருமை.
    நானும் Sweet kaaram coffee! பார்த்து கொண்டு இருக்கிறேன்.
    வாழ்க்கை பயணத்தில் ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு அனுபவம். அனுபவங்களை பகிர்ந்து கொள்வதை கேட்கும் காதுகளும், புரிந்து கொள்ளும் உறவும் இருந்தால் வாழ்க்கை நன்றாக இருக்கும்.

    பதிலளிநீக்கு
  5. வேக வைத்த கடலையும் நீங்காத நினைவுகளுமாய் சுவாயான அனுபவம்.
    வெந்த கடலை ரொம்பப் பிடிக்கும்.

    ரோஷிணி ஒவியம் ரொம்ப நல்லாருக்கு. வாழ்த்துகள்!

    மல்லிகை இதழைக் கடைகளில் பார்த்திருக்கிறேன். ரயில்வே நிலையத்தில். ஆனால் வாங்கியது இல்லை.

    வெப் சீரீஸ் - No Chance!

    கீதா

    பதிலளிநீக்கு
  6. ரோஷ்ணி ஓவியம் அருமை...

    கதம்பம் அழகு..

    பதிலளிநீக்கு
  7. ரோஷணி ஓவியம் அருமை.
    அவித்த நிலக்கடலையும் சூடான ரீயும் சாயந்தர வேளைக்கு சுவையாக இருக்கும்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....