சனி, 22 ஜூலை, 2023

காஃபி வித் கிட்டு - 178 - வாழப் பிடிக்கவில்லை… - கொஞ்சம் இடம்…. - கொல்லி மலை - என்ன ஆனாலும் விடமாட்டேன்! - பெரிய சார் - அஹல்யா - குட்டி கிருஷ்ணா


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - சாந்த்னி சௌக் ஜலேபி வாலா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் எண்ணங்கள்: வாழப் பிடிக்கவில்லை…


எங்கள் அலுவலகத்தில் ஒரு சிப்பந்தி - ஒப்பந்த அடிப்படையில் பணிபுரிபவர். தில்லியில் பல வருடங்களாக வாழ்ந்து வரும் தமிழர். பிறந்ததே தில்லியில் என்பதால் தமிழில் பேசும்போது தடுமாற்றம் வரும்.  அவருக்கு காலில் ஒரு பிரச்சனை - ஒரு காலின் நீளமும் மற்ற காலின் நீளமும் வேறு வேறு அளவு. அதற்கான காலணிகள் இப்போது இருக்கின்றது என்றாலும் ஏனோ அதனை பயன்படுத்துவதில்லை. சமீப நாட்களாக அதிகம் கால் வலிக்கிறது என்று சொல்லிக் கொண்டிருந்தார்.  மருத்துவரை கலந்து ஆலோசிக்கச் சொல்லி, ஒரு தெரிந்த மருத்துவரிடம் அனுப்பி வைத்தோம்.  கூடவே வேறு ஒரு பணியாளரையும் அனுப்பி வைத்திருந்தோம்.  மருத்துவர் பார்த்தபிறகு காலணி பரிந்துரைத்ததோடு, ஒரு சிறு அறுவை சிகிச்சையும் செய்யத் தேவையிருக்கும் என்று சொல்ல, அவரிடம் “வாழவே பிடிக்கவில்லை” என்று சொல்லியிருக்கிறார். மருத்துவர் அவருக்கு நிறைய அறிவுரைகள் சொல்லி அனுப்பியதோடு சில மருந்து மாத்திரைகளைத் தந்து, மீண்டும் அறுவை சிகிச்சைக்கு வர சொல்லி அனுப்பி இருந்தார்.  நாங்கள் அனுப்பியதால், அந்த மருத்துவர் எங்களையும் அலைபேசியில் அழைத்து, அந்த நபருக்கு நல்ல அறிவுரைகள் சொல்லுமாறு சொல்ல, எங்களுக்கும் மருத்துவர் போலவே அதிர்ச்சி.  வாழப் பிடிக்கவில்லை என்று சொல்லும் நிறைய பேரை இப்போது சந்திக்க நேர்கிறது! கடந்த சில மாதங்களில் இப்படியாக நான் கேட்பது இது நான்காம் முறை…  


பிரச்சனைகள் இல்லாத வாழ்க்கை இங்கே யாருக்கு தான் அமைகிறது. பெரிய பெரிய பணக்காரராக இருந்தாலும் பிரச்சனை - பணமே இல்லாமல் அன்றாடங்காய்ச்சியாக இருந்தாலும் பிரச்சனை! பிரச்சனை இல்லாமல் யாருமே இல்லை! அனைவருமே வாழப்பிடிக்கவில்லை என்று சொன்னால் முடிவே இல்லை!  வாழ்க்கையில் எத்தனை கஷ்டங்கள் வந்தாலும் சமாளிக்கத் தான் வேண்டியிருக்கிறது அல்லவா?  அந்த நபரிடம் சில நாட்களாக தொடர்ந்து பேசிக் கொண்டிருக்கிறோம். இத்தனைக்கும் அத்தனை ஒன்றும் வயதாகிவிடவில்லை.  அவரை விட அதிக பிரச்சனைகள் இருக்கும் நபர்கள் கூட வாழ ஆசைப்படும்போது ஏன் இப்படி நினைக்க வேண்டும் என்றெல்லாம் அவருக்குச் சொல்லிக் கொண்டிருக்கிறோம்.  ஏன் இந்த எதிர்மறை எண்ணங்கள்?  நேர்மறை எண்ணங்கள் இல்லாமல் பல விஷயங்களில் எதிர்மறை எண்ணங்களே பலரிடம் இருக்கிறது என்று தோன்றுகிறது! எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்க என்ன செய்யலாம் - உங்கள் எண்ணங்களையும் பின்னூட்டத்தில் பகிர்ந்து கொள்ளுங்களேன்!


******


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரம் : கொஞ்சம் இடம்….


இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக HP Printers-இன் ஒரு விளம்பரம் உங்கள் பார்வைக்கு.  ஒன்பது மாதங்களுக்கு முன்னர் வெளியான விளம்பரம் என்றாலும் இப்போதும் பார்த்து ரசிக்கலாம்! பாருங்களேன்.

மேலே உள்ள காணொளியைக் காண முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


Iss Diwali, Thodi si Jagah Bana lo - YouTube


******


இந்த வாரத்தின் ரசித்த பயணம்: கொல்லி மலை…



கொல்லி மலை குறித்து பல முறை கேள்விப்பட்டாலும் இதுவரை செல்ல வாய்ப்பு அமையவில்லை. தில்லியில் இருக்கும் எங்களது ஆஸ்தான ஓட்டுனர் ஜோதி அவர்கள் கூட இந்த கொல்லி மலை அடிவாரக் கிராமம் ஒன்றைச் சேர்ந்தவர் தான். அவரும் ஒவ்வொரு முறை தமிழகம் செல்லும்போதும் கொல்லிமலைக்குச் சென்று வாருங்கள் என்று சொல்வார். அவர் ஊருக்குப் போகும்போதெல்லாம், நான் கொல்லிமலையில தான் இருக்கேன் நீங்களும் வாங்களேன் என்றும் அழைப்பார். ஆனால் ஏனோ இது வரை அங்கே சென்று வர வாய்ப்பே அமையவில்லை.  அதிலும் அந்த ஊசிமுனை வளைவுகளைப் படங்களில் பார்க்கும்போதே அங்கே சென்று வரும் ஆசை அதிகரித்துவிடும். ஆனாலும் எப்போது அங்கே செல்ல முடியுமோ? சமீபத்தில் கல்கி ஆன்லைனில் கொல்லி மலை குறித்த ஒரு கட்டுரை படித்தேன்.  அதிக அளவு விவரங்கள் இல்லை என்றாலும் கட்டுரையை நீங்களும் படித்து ரசிக்கலாம்.  படித்துப் பாருங்களேன்… அதற்கான சுட்டி கீழே!


சம்மர் தொடங்கிடுச்சா? அப்போ கொல்லி மலைக்கு ஒரு ட்ரிப் போகலாமா? (kalkionline.com)


******


பழைய நினைப்புடா பேராண்டி : என்ன ஆனாலும் விடமாட்டேன்!


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - என்ன ஆனாலும் விடமாட்டேன்! - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


உணவுக்குழாயில் கேன்சர். சில மாதங்களாகவே அவருக்கு சிகிச்சைகள் நடந்து கொண்டிருந்தது. இப்போது ரொம்பவே முடியாது போக, அவரை மருத்துவமனையில் சேர்த்து சிகிச்சை செய்ய தொடங்கியிருந்தார்கள்.


அடாடா...  இப்படியும் ஒரு சோதனையா...  கேன்சர்னா சும்மாவா? இன்னும் எத்தனை நாளோ, தெரியலையே என்ற மனக்கலக்கத்தோடு அவரைப் பார்க்கச் சென்றேன். உள்ளே சென்றபோது அவரது மனைவி, மற்றும் மகள் உடனிருந்தார்கள்.  அவரை பார்த்து எப்படி இருக்கீங்க என்ற போது அறுவை சிகிச்சை செய்த காரணத்தால் அவரால் முன்போல பேச முடியவில்லை. கொஞ்சம் சிரமப்பட்டே பேசினார். அவரை பேச வேண்டாம் எனச் சொல்லி, அவரின் மனைவியிடம் ”இப்ப எப்படி இருக்கு? மருத்துவர் என்ன சொல்றார்?” என்று விசாரித்தேன்.


“உணவுக்குழலில் புற்று நோய் என்பதால் அதை அகற்றி விட்டார்கள். மருந்து மாத்திரைகள், சிகிச்சை எனத் தொடர்கிறது. இனிமேல் ஆண்டவன் தான் காப்பாற்றணும்” என்று சொல்லி ஒரு குழாய் வைத்து அதன் மூலம் தான் திரவ உணவு கொடுத்துக் கொண்டு வருவதாகவும் சொன்னார். ”கொஞ்சம் நேரம் பார்த்துக்கோங்க, மருந்து மாத்திரை வாங்கணும், நான் வாங்கிட்டு வந்துடறேன்” எனச் சொல்லி வெளியே சென்றார்.


நானும் பரிதாபமாக முகத்தினை வைத்துக்கொண்டு அவர் அருகில் அமர்ந்து இருந்தேன். சைகை செய்து அழைக்க, அவர் அருகே சென்றேன். அப்போது அவர் கேட்டது.......


“வார்ட் பாய்கிட்ட சொல்லி ஒரு க்வாட்டர் வாங்கித்தரியா? என்னால குடிக்காம இருக்க முடியல!”


முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதை : பெரிய சார்…


இந்த வாரத்தின் ரசித்த சிறுகதையாக சொல்வனம் தளத்திலிருந்து, ஸிந்துஜா அவர்கள் எழுதிய “பெரிய சார்” என்ற சிறுகதையிலிருந்து சில வரிகள் உங்கள் பார்வைக்கு! 


ஜெரோமின் முறை வந்த போது மணி பனிரெண்டாகி விட்டது. அவனும் அம்மாவும் குறிப்பிட்ட இடத்துக்குச் சென்றார்கள். அந்த அறையின் வாசலில் “கே. பத்மநாபன்  எம்.ஏ., ஹெட் மாஸ்டர்” என்ற பழுப்பு நிற போர்டில் வெள்ளை எழுத்துக்கள் மின்னின. உள்ளேயிருந்தவர் வெளியே வந்ததும் அவர்கள் இருவரும் உள்ளே சென்றார்கள்.


பெரிய மேஜைக்குப் பின்னால் இருந்த நாற்காலியிலிருந்து சற்றுஉயரமான மனிதர் தலையை நிமிர்த்தி வாருங்கள் என்று சொல்லும் பார்வையை அவர்கள் மீது செலுத்தினார். மேஜையின் இந்தப் பக்கம் அவரை நோக்கும்படி இரு நாற்காலிகள் போடப்பட்டிருந்தன. அவர் குனிந்து கையில் இருந்த ஒரு தாளைப் பார்த்துக் கொண்டிருந்தார். அவர்கள் இருவரும் அவர் பேசுவதற்காகக் காத்திருந்தார்கள். அறையில் ஓடும் மின்விசிறி எழுப்பிய ஒலியைத் தவிர வேறு சத்தம் எதுவும் கேட்கவில்லை. அவர் தலையை நிமிர்த்தாமலே ஒரக் கண்ணால் தன்னை ஒரு முறை பார்த்தது போல ஜெரோமுக்குத் தோன்றியது.இவ்வளவு நேரத்துக்கு நேற்று சிவகுரு வேலை  முடிந்து திரும்பிப் போய்விட்டானோ என்று அவன் வயிறு சற்றுக் கலங்கியது.


முழுக்கதையும் கீழே உள்ள சுட்டி வழி படிக்கலாம்!


பெரிய ஸார் – சொல்வனம் | இதழ் 298 |09 ஜூலை2023 (solvanam.com)


******


இந்த வாரத்தின் ரசித்த ஓவியம்: அஹல்யா 



ராஜா ரவிவர்மா அவர்களின் ஓவியங்களை ரசிக்காதவர்கள் யார்? அவரது ஓவியம் ஒன்று - அஹல்யா - முனிவர் கௌதமரின் மனைவி. அஹல்யாவின் ஓவியம் - ராஜா ரவிவர்மா அவர்கள் வரைந்த ஓவியங்களில் ஒன்று இந்த வாரத்தின் ரசித்த ஓவியமாக - உங்கள் பார்வைக்கு!


******


இந்த வாரத்தின் ரசித்த நிழற்படம்: குட்டி கிருஷ்ணா



இந்த வாரத்தின் ரசித்த நிழற்படமாக குட்டி கிருஷ்ணா படம்! குழந்தைகளை பல விதங்களில் அழகுப்படுத்திப் பார்ப்பது ரசனையான விஷயம் தான். ஆனால் பல சமயங்களில் அந்தக் குழந்தை படும் கஷ்டங்கள் நினைத்து கொஞ்சம் வருத்தம் வரும் எனக்கு! உங்களுக்கு?


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


13 கருத்துகள்:

  1. பிரச்னை என்று நினைப்பவர்களுக்கு எல்லாமே பிரச்னையாகத்தான் தெரியும்.  மாற்ற முடியாது!  பிரச்னை இல்லாவிட்டால் வாழ்க்கை போர் அடித்து விடும்!

    பதிலளிநீக்கு
  2. பிரிண்டர் விளம்பரம் - ஒரு அழகிய சிறுகதை.

    பதிலளிநீக்கு
  3. பழையநினைப்பு பதிவில் என் கமெண்ட் இல்லை என்பதால் அப்போது படிக்கவில்லை என்று தெரிகிறது.  அதில் அருணா செல்வம் அவர்கள் கமெண்ட்டை நான் ஆதரித்து வழிமொழிகிறேன்!

    பதிலளிநீக்கு
  4. ரவிவர்மா ஓவியம் என்று நிறைய போலிகளும் உலவுவதாக கேள்வி! குட்டி கிருஷ்ணா அபாரம்.

    பதிலளிநீக்கு
  5. எதிர்மறை எண்ணங்கள் இல்லாமல் இருக்க, புதிய எண்ணங்களில் ஆர்வத்தோடு ஈடுபட வேண்டும்...

    பதிலளிநீக்கு
  6. இன்றைய வாழ்வில் பலரும் வெறுமையோடுதான் பேசுகின்றனர்.

    இதன் அடிப்படை பொருளாதாரம் பற்றாக்குறை விலைவாசி உயர்வால் இந்த வாழ்க்கை.

    இதன் மூலம் அரசாங்கம்தான் நாம்தானே தேர்வு செய்தோம் அதன் பலனை இப்பொழுதுதான் ஆரம்பிக்கிறோம்.

    பதிலளிநீக்கு
  7. எதிர்மறை எண்ணங்கள் சிலருக்கு இயல்பு. எனக்கு இயல்பாகவே எதைப் படிக்கும்போதும் அதில் உள்ள குறைகள்/தவறுகள் பளிச் என்று கண்ணுக்குத் தெரியும் (அதனாலேயே ஃப்ரூஃப் ரீடிங்கை விரும்பி ஏற்றுக்கொள்வேன். அப்படியும் குறைகள் கண்டுபிடிக்கப்படாமல், நீ ஒண்ணும் பெரிய பிஸ்தா இல்லை என்று இயற்கை குட்டு வைக்கும்). எதிர்மறைச் சிந்தனை மற்றும் நெகடிவ் ஆகப் பேசுபவர்களை என் கிட்டக்கவே நெருங்கவிடமாட்டளன், ஆலோசனைக் கூட்டங்களுக்கு அழைக்க மாட்டேன்.

    வாழ்கையில் கஷ்டப்படாதவர்களே, அவமானப்படாதவர்களே, தலைகுனியாதவர்களே கிடையாது. அம்பானி அதானி பிரதமர் போல சாதனைகள் புரிந்திருந்தாலும் (அதாவது, சில்வர்ஸ்பூனாக இல்லாமல்), போற வர்ற சாதிக்காத சாதரணவங்க வாயல விழவேண்டியிருக்கு இல்லையா? அதனால. வாழப் பிடிக்கலை என்பவர்களால் ஒரு வேலையையும் பார்க்க முடியாது. நாலு கஷ்டம் பட்டு, நாலு பேர் வாயில் விழுந்துதான் தொடர்ந்து உழைத்து ஒருவன் முன்னேற முடியும். சூரியனாகவே ஆனாலும் குரைப்பதற்கைப் பல நாய்கள் இருக்கும் அல்லவா?

    பதிலளிநீக்கு
  8. காணொளி அருமை. பல வருடங்கள் முன்பு கொல்லிமலையில் சாரின் அண்ணா இருந்தார்கள், இரண்டு வருடம் அழைத்து கொண்டே இருந்தார்கள் போக முடியவில்லை. அவர்களுக்கு மாற்றல் ஆகி கல்கத்தா போய் விட்டார்கள். மிக நன்றாக இருக்கும். போய் வந்த என் சகோதரி சொன்னாள்.

    பதிலளிநீக்கு
  9. வாசகம் மிக அருமை.

    அதுவே முதல் பகுதிக்குப் பொருத்தமாகிப் போகிறது என்றாலும் எதிர்மறை எண்ணங்கள் வருவது பற்றியும் சமாளிப்பது பற்றியும் சொல்ல நிறைய இருக்கு ஜி. அவர் அப்படிச் சொல்வதற்கு இது மட்டும்தான் காரணமா இருக்குமா? தெரியவில்லை. சுருக்கமா சொல்லணும் என்றால் மனதை நிறைய divert பண்ண வேண்டும். தன்னம்பிக்கை ஊட்டும் மனிதர்கள் சாதித்தவர்கள் - எய்ட்ஸ், கான்சருடன் வாழ்பவர்கள் கூட சாதிக்கிறார்கள் தங்களை உற்சாகமாக வைத்துக் கொண்டு - பற்றி வாசிக்கலாம். ஆனால் அவர் தான் தான் தன் எண்ணம் எதிர்மறை என்பதை உணர வேண்டும்.

    கீதா

    பதிலளிநீக்கு
  10. விளம்பரம் பார்த்ததும் என் கண்ணில் என்னை அறியாமல் நீர் துளிர்த்தது. அட்டகாசமான விளம்பரம். ஒரு பிரிண்டருக்கு இப்படி அழகான கதையாகக் குறும்படம் போல ஒரு விளம்பரம்!!! ரசித்தேன்.

    கொல்லிமலை - ஆஹா! ரொம்பப் பிடித்த இடம். மூன்று முறை சென்றிருக்கிறேன். ஆகாயகங்கை அருவியில் குளித்திருக்கிறேன் (றோம்) மகனும் நானும். மூன்று முறைகளில் ஒன்றில் எங்கள் குடும்பம் முழுவதும் மாமனார் மாமியார் கணவர் பக்கம் குடும்பம் அத்தனை பேரும் ஒரு பெரிய வேன் வைத்துக் கொண்டு அங்கு ஒரு நாள் தங்கியும் இருந்தோம். கொல்லிமலைக்குத் தனி வாசம் உண்டு. மூலிகைகள் நிறைந்த மலை. அங்கு சிவப்புக் கொய்யா, அண்ணாசிப்பழம் செம சுவையாக இருக்கும். கிராம்பு, ஏலக்காய், பட்டை, மிளகு போன்ற சில மசாலா சாமான்கள் நல்ல மணமுடன் இருக்கும். போகும் வழிகளில் கொண்டை ஊசி வளைவுகள் - வளைந்து நெளிந்து போகும் பாதை - என்பது போல் இருக்கும்....அழகான காட்சிகள்.

    கொல்லி மலையின் மற்றொரு பக்கம் வழியாகவும் மலையேற்றம் செய்யலாம் என்று சொல்வதுண்டு அது திருச்சி - புளியஞ்சோலை வழி கொல்லிமலை. ஐயாறு ம் வழியில்...இந்த வழி குறித்து வைத்து செல்ல வாய்ப்பு கிடைக்கவில்லை.

    கீதா

    பதிலளிநீக்கு
  11. பழைய பதிவு - திருந்தாத ஜென்மங்கள். தன்னைச் சுற்றி உள்ள மனைவி குழந்தைகள் அதுவும் இப்படி மருத்துவமனையில் சேர்த்து பார்த்துக் கொள்ளும் வீட்டாரைக் கூட நினைத்துப் பார்க்காத ஆளு....எப்படி மனைவி குழந்தைகள் இவரை ஏற்றுக் கொள்கின்றனரோ என்ற வியப்பு எனக்கு எப்போதும் உண்டு. பாண்டிச்சேரியில் இருந்தப்ப இப்படி இறந்த ஒருவருக்கு படையலில் பாட்டில் வைக்கிறாங்க! எனக்கு அது அதைவிட ஆச்சரியம். இருக்கும் போதும் சரி இறந்த போதும் இப்படியான்னு!! இருக்கும் போதுதான் மனைவியால் சமாளிக்க முடியலை திருத்த முடியலை....இறந்த பிறகாவது படையலில் வைக்காமல் இருக்கலாமே! என்ன நம்பிக்கையோ? நான் வேற ஏதாச்சும் சொல்லிடப் போறேன். அதுக்குள்ள இந்தப் பகுதியிலிருந்து அடுத்த பகுதிக்குத் தாவிடறேன்.

    அங்கு பப்பு அண்ணாச்சியின் கருத்து பார்த்து burst out laughing!!!

    கீதா

    பதிலளிநீக்கு
  12. சொல்வனம் கதையை வாசிக்கிறேன் ஜி..

    குட்டிக் கிருஷ்ணர் செம Cute!

    ஓவியம் மிக அழகு. ஆனால், ராஜா ரவிவர்மா தன் படங்களில் தன் signature பதியாம விட்டுவிட்டாரே! இது அவர் வரைந்ததா என்று கொஞ்சம் குழப்பம்... பெண்ணின் முகம் வடிவம்...

    கீதா

    பதிலளிநீக்கு
  13. எதிர்மறை என்னங்களை வெல்வது சவாலானதே.
    அவரின் தனித்திறன்களை அடையாளம் கண்டு வெளிப்படுத்தும் சாத்தியங்களை உருவாக்குவது பெரும்பாலும் பயனளிக்கும்.
    கொல்லிமலை குறித்து பல யூட்டியூப் காணொளிகளைக் கண்டிருக்கிறேன்.
    ஆகாய கங்கை செல்லவேண்டும் என்ற ஆர்வம் வெகுகாலம் உண்டு.
    ஒரு நாள் செலவு செய்து இரங்கி ஏருவதை என்னினால்தான் பயமாக இறுக்கிறது.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....