சனி, 15 ஜூலை, 2023

காஃபி வித் கிட்டு - 177 - அடாது மழை பெய்தாலும் - துங்க்நாத் - யாருக்கும் சொந்தமில்லை - விடைபெறுகிறேன் - காமராஜர்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட தினம் தினம் தில்லி - Boot Polish பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


இந்த வாரத்தின் பயணம் : அடாது மழை பெய்தாலும்… 


ஜூன் மாதக் கடைசியில் ஒரு நாள் விடுமுறை எடுத்தால் நான்கு நாட்கள் கிடைக்கும், அதில் உத்திராகண்ட் அல்லது ஹிமாச்சலப் பிரதேசம் செல்லலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன். நண்பர் ஒருவரும் கூட வருவதாகச் சொல்ல பயணம் கிட்டத்தட்ட முடிவாகியிருந்தது.  ஆனால் கடைசி வாரத்தில் மலைப்பிரதேசங்களில் மழை அதிக அளவு இருக்கும் என வானிலை அறிக்கைகள் வெளியானபோது கொஞ்சம் மாற்றி யோசிக்க வேண்டியிருந்தது.  சரி மலைப்பகுதிக்குச் செல்ல வேண்டாம், ராஜஸ்தான் பக்கம் போகலாம் என யோசித்துக் கொண்டிருந்தேன்.  ஆனால் போகவில்லை. எங்கே பார்த்தாலும் மழை - ஆகவே பயணம் செய்ய வேண்டாம் என விட்டுவிட்டேன்.  சரி நான் விட்டாலும், பயணம் என்னை விடாது என்று புரிந்து கொள்ள வைத்தது செவ்வாய் அன்று கிடைத்த அலுவலகக் கட்டளை ஒன்று! இதோ இந்தப் பதிவு வெளியாகும் வேளையில் நான் இருப்பது உத்திராகண்ட் தலைநகர் டேராடூனில்!  புதன் கிழமையிலிருந்து (12-ஆம் தேதி) ஞாயிறு வரை டேராடூனில் தான்! ஆனால் ஒன்று எங்கேயும் சுற்றிப் பார்க்க முடியாது என்றே தோன்றுகிறது - நிறைய வேலைகள் இருக்கின்றன. ஆனாலும் மாலை நேரங்களில், கொஞ்சம் ஓய்வு கிடைத்தால் அப்படியே எங்கேயேனும் சென்று விடுவேன் என்று தோன்றுகிறது. அப்படிச் சென்றால் இங்கே சில விஷயங்களை பகிர்ந்து கொள்வேன்! 


******


இந்த வாரத்தின் ரசித்த பயணம்: துங்க்நாத்…


இந்த வாரத்தின் ரசித்த பயணமாக உத்திராகண்ட் மாநிலத்தில் உள்ள ஒரு இடம் - துங்க்நாத்! இந்த துங்க்நாத் எனும் இடம் பஞ்ச் கேதார் என வழங்கப்படும் ஐந்து கேதார்களில் மிகவும் உயரமானது! ஆனால் நடக்க வேண்டிய தூரம் நான்கு கிலோமீட்டர் மட்டுமே.  குளிர் நாட்களில் இங்கே சென்று வந்தது குறித்து சொல்லி இருக்கிறார் இந்தப் பயணி! தகவல்களையும் காட்சிகளையும் பார்த்து ரசிக்கலாமே!


மேலே உள்ள காணொளியைக் காண முடியவில்லை எனில் கீழே உள்ள சுட்டி வழி பார்க்கலாமே!


TUNGNATH : The Highest Shiva Temple in World । Chopta Tungnath Trek in March 2022 | Tungnath Temple - YouTube


******


இந்த வாரத்தின் ரசித்த கவிதை : யாருக்கும் சொந்தமில்லை…


முகநூல் நட்பான மோகன் அவர்களின் ஒரு மொழிபெயர்ப்பு கவிதை, ரசித்த கவிதையாக, இந்தப் பகுதியில், அவருக்கு நன்றியுடன்…


ஒரு லத்தீன் அமெரிக்கக் கவிதை

--------------------------------------------------------------

This life belongs to no one !


தீவில் தொடங்கி 

தேசங்கள் கடந்த 

நெடுந்தூரப் பயணத்தில் 

உழைத்துக் களைத்து 

கடைசியில் நீங்கள் உங்கள் அறையின் மையத்தில் 

வந்து நிற்கிறீர்கள் 

எப்படி அங்கு வந்து

சேர்ந்தீர்கள் என்பது 

உங்களுக்கே தெரியாமல் 

விழிக்கும் போது 

உங்களைச் சுற்றிய குரல்கள் ஏதேதோ கிசுகிசுக்கின்றன 

பாறைகள் பிளந்து சரிகின்றன பறவைகள் கூச்சலிடுகின்றன 

மரங்கள் அவிழ்கின்றன 

உங்களைச் 

சுற்றியிருக்கும் எதுவும் உங்களுடையதில்லை 

என்பதை அறிவிக்கும் நிகழ்வுகளேயன்றி வேறில்லை . 

கரை தழுவித் திரும்பும் 

கடலலை போல 

காற்று உங்களிடமிருந்து 

விடைபெறும்போது 

சுவாசிக்க முடியாமல் திணறுகிறீர்கள் . 

இப்போதாவது 

தெரிந்து கொள்ளுங்கள் . 

இந்த வாழ்க்கை யாருக்கும் சொந்தமில்லை என்று !

.

© மோ


******


பழைய நினைப்புடா பேராண்டி : விடைபெறுகிறேன்.....


2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - விடைபெறுகிறேன்..... - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.  


இத்தனை வருடங்களாக உங்களுடன் ஒருவராகவே இருந்து தகவல் பரிமாற்றங்கள் செய்து வந்திருக்கிறேன். இனிமேல் அப்படிச் செய்ய முடியாது. நானே நினைத்தாலும், முடியாது. ஏனெனில் அபாய சங்கு ஒலித்து விட்டது. இனிமேல் நான் யாருக்கும் பயன்படப் போவதில்லை. அதனால் நான் விடைபெறுகிறேன் நண்பர்களே.


இத்தனை வருடங்களில் என்னால் பயனடைந்தவர்கள் நிறையவே என எனக்குத் தெரியும். புள்ளிவிவரங்கள் எல்லாம் நான் இங்கே கொடுக்கப் போவதில்லை. நான் சொன்ன சில செய்திகள் சில வேதனைகளைக் கொடுத்திருந்தாலும் பல நல்ல செய்திகளையும் அவ்வப்போது சுமந்து வந்திருக்கிறேன். தகவல் பரிமாற்றம் எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம். என் மூலம் சிலராவது பயனைப் பெற்றிருப்பார்கள் என நினைக்கும்போது மனதில் ஒரு ஆனந்தம். அந்த மகிழ்ச்சியோடே விடைபெறப் போகிறேன்.


திடீரென இப்படி ஒரு முடிவு ஏன்! இந்த நவீன யுகத்தில் என்னால் பயனேதுமில்லை. இந்த அவசர யுகத்தில் தகவல் பரிமாற்றங்களுக்கு பல விதமான வழிகள் இருக்கிறது. நானும் சில தகவல் பரிமாற்றங்களுக்கு உதவி இருந்தாலும், எனக்கு வயதாகிவிட்டது. இனிமேல் என்னால் பலனில்லை. என்னை கவனிப்பாரும் யாருமில்லை. ”ஓரமாக ஒதுங்கிப் போ!” என ஒதுக்கியபின் எனக்கான இடம் வேறு என ஆகிவிட்டது. அதனால் இனிமேல் உங்களால் என்னைக் காணவோ, என்னால் நீங்கள் பயன்பெறவோ முடியாது என்பதில் எனக்கு வருத்தமே. இருந்தாலும் விடைபெறத்தான் வேண்டும்.....



முழுப்பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படிக்கலாமே!


******


இந்த நாள் இனிய நாள் : பிறந்த தினம்… 


இன்றைக்கு பெருந்தலைவர் காமராஜர் அவர்களின் பிறந்த தினம். இவரது பிறந்த தினத்தினை கல்வி வளர்ச்சி நாளாக நம் தமிழகத்தில் கொண்டாடுகிறார்கள். கல்வி வளர்கிறதா இல்லை கல்வித் தந்தைகள் என்ற பெயரில் இருக்கும் அரசியல்வாதிகள் வளர்கிறார்களா என்று கேள்வி அர்த்தமற்றதாகவே தெரிகிறது.  அவரது பிறந்த நாளிலாவது அவரை மறக்காமல் இருந்தால் சரி. 


******


இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


12 கருத்துகள்:

  1. கல்வி வளர்கிறதா இல்லை கல்வித் தந்தைகள் வளர்கிறார்களா? நல்ல கேள்வி. தந்தி மற்றும் பிற பகுதிகளையும் (கவிதை படிக்கலை) ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
  2. கவிதை சிறப்பான வரிகள் ஜி

    மற்ற தகவல்களும் அருமை

    பதிலளிநீக்கு
  3. விடை பெறுகிறேன் வருத்தமான விடயம் ஜி

    பதிலளிநீக்கு
  4. வாசகம் உண்மை...அந்த சந்தோஷத்தை தான் வெளியில் தேடிk கொண்டு எல்லோரும்!

    தந்தி யின் வருத்தம் நம்மையும் தொற்றி க்கொள்ளும் உங்கள்.எழுத்து!

    கீதா

    பதிலளிநீக்கு
  5. கல்வி வளர்கிறதா இல்லை கல்வித் தந்தைகள் என்ற பெயரில் இருக்கும் அரசியல்வாதிகள் வளர்கிறார்களா என்று கேள்வி அர்த்தமற்றதாகவே தெரிகிறது. //

    சூப்பர் கேள்வி. கண்கூடாகத்த் தெரிந்தாலும் ஒன்றும் செய்ய முடியலையே...

    கவிதை நல்லாருக்கு.

    கீதா

    பதிலளிநீக்கு
  6. துங்kநாத். வார்த்தைகள் இல்லை ஜி....ரசித்துப் பார்த்தேன் ஏக்கத்துடன்!

    கீதா

    பதிலளிநீக்கு
  7. நீங்கள் திட்டமிட்ட பயணம் விரைவில் அமைய வாழ்த்துகள் ஜி....

    கீதா

    பதிலளிநீக்கு
  8. இதில் என்ன சந்தேகம் ? க. தந்தைகள் மட்டுமே வளர்கின்றனர் :-(

    துளசி கோபால்

    பதிலளிநீக்கு
  9. வரும் புதிய கல்விக்கொள்கையால் கல்வியும் வளரும் என நம்புவோம். சார்.
    தந்தியின் இடத்தைப் பிடித்துள்ள சமூக ஊடகங்கள் போலிச் செய்திகளையும் காள்ப்புகளையும் மட்டுமே கொட்டுவது வேதனையான விஶயம்.
    அதுவும் தந்தியின் ஆங்கிலப் பெயரால் ஓடும் டெலகிராம் என்ற சமூக ஊடகம், திருட்டு மென்பொருள்களையும் நூ்களையும் திரைப்படங்களையும் பகிர்வது சோகமயமானது.
    தங்களின் டேராடூன் பயணம் பாதுகாப்பானதாக வெற்றியடைய வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  10. இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு நன்றாக இருக்கிறது.
    துங்க்நாத்! காணொளி அருமை.
    கவிதை, தந்திவிடைபெறும் பதிவு படிக்கும் போது வருத்தம் ஏற்படுகிறது.
    கல்வி தந்தை பெருந்தலைவர் வாழ்க!

    பதிலளிநீக்கு
  11. ஆடிட்டிங்குக்கு மாறு விட்டீர்களா என்ன?

    தந்தி மேட்டர் எனக்கு என் பேஸ்புக் மெமரிஸ்ல் வந்தது!

    இனி வரும் காலம் காமராஜரைப் போல ஒரு தலைவரைப் பார்க்குமா?

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....