வியாழன், 6 ஜூலை, 2023

தினம் தினம் தில்லி - ப்யார் வாலி தாலி - பகுதி மூன்று


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட சதுரகிரிக்கு ஒரு குறும்பயணம்… - பகுதி எட்டு பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


தினம் தினம் தில்லி பதிவுகள் வரிசையில் இது வரை இரண்டு பதிவுகள் வெளியிட்டு இருக்கிறேன்.  முதல் பகுதியில் ஷக்கர் கந்தி மற்றும் CHசோலியா குறித்து பார்த்தோம் என்றால், இரண்டாம் பகுதியில் தலைநகர் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் இருக்கும் Pபெஹல்வான்கள் பயிற்சி பெறுவது பற்றியும் அவர்கள் செய்யும் சிகிச்சைகள் குறித்தும் பார்த்தோம்.  வாருங்கள் இன்றைக்கு “தினம் தினம் தில்லி” பதிவாக வேறு ஒரு விஷயம் குறித்து பார்க்கலாம். 


Pப்யார் வாலி தாலி



Pப்யார் எனும் ஹிந்தி வார்த்தைக்கு காதல் என்று அர்த்தம்.  இந்த ஹிந்தி வார்த்தைக்கு அர்த்தம் நம்மில் பலருக்கும் தெரியும் - ஹிந்தி ஒழிக என்று சொல்லிக் கொண்டே பார்த்த ஹிந்தி படங்களின் தலைப்பில் - மேனே ப்யார் கியா, ப்யார் கியா தோ டர்னா க்யா - என ப்யார் குறித்த படங்களைப் பார்த்தவர்கள் தானே நம்மில் பலரும்!  ப்யார் அதாங்க இந்த காதல் இல்லாமல் யாரும் இல்லை! சரி எதற்காக காதல் பற்றிய தலையங்கம் இன்றைக்கு?  


இரண்டு நாட்கள் முன்னர் ஒரு வேலையாக கரோல் Bபாக்g சென்றிருந்தேன்.  வேலைகளை முடித்துக் கொண்டு திரும்புகையில் பூசா ரோட் மூலையில் ஒரு தள்ளுவண்டி - இந்த தள்ளுவண்டியை ஹிந்தியில் ரே(d)டி என அழைப்பார்கள்.  தள்ளுவண்டியில் உணவுப் பொருட்கள் விற்பனை! இப்படியான உணவு விற்கும் பல தள்ளுவண்டிகளை  இங்கே நீங்கள் பார்க்க முடியும்.  தள்ளுவண்டியைச் சுற்றி பல பதாகைகள் கட்டித் தொங்க விட்டிருந்தார் அந்த தள்ளுவண்டியின் உரிமையாளர்.  இவர்கள் அனைவரும் உழைப்பாளிகள் - பாராட்டுதலுக்குரியவர்கள்.  அந்தப் பதாகைகளில் அவரிடம் கிடைக்கும் உணவுப் பொருட்களின் பெயர்கள் கட்டித் தொங்கவிடப்பட்டிருந்தது - ராஜ்மா (ch)சாவல், மட்டர் பனீர், சோலே (ch)சாவல், ரொட்டி, கடி (ch)சாவல், ராய்தா - என ஒவ்வொரு பதாகையிலும் ஒவ்வொரு பெயர்.  அந்தப் பெயர்களில் ஒரு பெயர் கண்களையும் மனதையும் கவர்ந்தது - அந்தப் பதாகையில் அப்படி என்ன தான் எழுதி இருந்தது?


Pப்யார் வாலி தாலி என்ற பதாகை பார்த்ததும், அது என்னப்பா ”Pப்யார் வாலி தாலி”? என்று தோன்றியது. ஒரு வேளை காதலர்களாக வந்தால் இந்த உணவு தருவாரோ? அப்படி எனில் நான் யாருடன் செல்வது? நம்ம ஜோடியோ ஊரில் அல்லவா? அதுக்குன்னு இங்கே ஒரு ஜோடி தேட முடியுமா என்ன? ”அப்படியே தேடிட்டாலும்”னு உள்ளுக்குள்ளிருந்து ஒரு குரல்! அது என்னுடையதா? அல்லது என்னவளுடையதா? சரி சரி… ஜோடி வேணுமா வேணாமான்னு நாமே எதுக்கு யோசிக்கணும்! ஒழுங்கு மரியாதையா இருந்தா உடம்புக்கு நல்லது.  கடையிலே கேட்டு விடுவது தான் சரியான வழி! 


அந்தப் பாதையில் மீண்டும் சென்ற போது விசாரித்தேன் - Pப்யார் வாலி தாலி - வேறு ஒன்றும் இல்லை - நாம் எப்போதும் போல சாப்பிடும் உணவு தான் - தாலி என்ற ஹிந்தி வார்த்தைக்கு தட்டு என்ற அர்த்தம்.  தட்டில் நான்கு ரொட்டி, நீள வாக்கில் வெட்டிய வெங்காயம் (மேலே கொத்தமல்லி, புதினா, தயிர் சேர்த்து அரைத்த சட்னி), பச்சை மிளகாய் ஊறுகாய், கொஞ்சம் சாதம் (ஜீரா ரைஸ்), ஒரு பனீர் சப்ஜி (ஷாஹி பனீர்/கடாய் பனீர்), கூடவே வேறு ஒரு சப்ஜி (ராஜ்மா/சோலே/தால்), பூந்தி ராய்தா மற்றும் ஒரு பாப்பட் எனும் அப்பளம்!  அவ்வளவு தாங்க! இந்த உணவின் விலை ரூபாய் 80/- மட்டும்.  சரி இதுக்கு எதுக்குப்பா Pப்யார் வாலி தாலி-ன்னு பேர் வைச்சீங்க? என்று கேட்டால், நம் வீட்டில் அம்மா/மனைவி/சகோதரி என மூவரில் யாரோ ஒருவர் பாசத்துடன்/காதலுடன் தரும் உணவு போலவே பாசத்தோடு தயாரித்து, அன்போடு தருவாராம்! அவ்வளவு தாங்க விஷயம்!  


அட இதுக்கு தான் இவ்வளவு பில்டப்பா? டேய் ஏண்டா இப்படி படுத்துற என்று நீங்கள் கேட்க நினைப்பது போலவே நானும் கேட்டுக் கொண்டேன்! ஓவர் Bபில்ட் அப் உடம்புக்கு ஆகாதுன்னு அவரிடம் யார் சொல்வது?


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


14 கருத்துகள்:

  1. பியார் பிரேமா காதல் என்னும் பெயரில் ஒரு தமிழ்ப்படமே வந்திருக்கிறியாது தெரியுமோ?!!  அதேபோல நம்மூர் ஹோட்டல்களில் நார்த் இந்தியன் தாலி, டெல்லி தாலி, மும்பை தாலி எல்லாம் பிரசித்தம்!  ரேடி என்கிற சொல் கற்றுக்கொண்டேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. ஒரு புதிய ஹிந்தி வார்த்தையை உங்களுக்குச் சொல்லிக் கொடுத்ததில் மகிழ்ச்சி ஸ்ரீராம். நம்மூரில் இப்படி ஹிந்தி வார்த்தைகள் நிறையவே கலந்து விட்டது உண்மை - அதிலும் தற்போது திருமண வழக்கங்களில் கூட நிறைய வட இந்திய விஷயங்கள் புகுந்து விட்டன - எடுத்துக்காட்டு சங்கீத் எனும் நிகழ்ச்சி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  2. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  3. Pப்யார் வாலி தாலி நிஜமாகவே காதல் கொள்ளச் செய்துவிட்டது! பரவாயில்லையே விலை ரூ 80 தான் இத்தனை இருக்கிறதே.

    ரே(d)டி - தில்லி சென்றிந்த போது அறிந்தது. அப்ப என் தங்கை, "சரி சாயந்திரம் வீட்டு பக்கத்துல இருக்கற ரே(d)டி ல உனக்கு ஒண்ணு வாங்கித்தரேன்" என்று சொன்னதும் . "என்னடி வீட்டுக்குள்ள இருக்கற ரேழி இப்பல்லாம் தெருவுக்கு போய்டுச்சா?" (எனக்கு அப்படித்தான் முதலில் கேட்டது) என்று கேட்டதும் தங்கை, ஹையோ இவளோட .....அது ரே(d)டி என்று சொன்னாள். ready food என்பதால் அப்பெயரோ என்று நினைத்தேன். ஹிந்தியில் ஆங்கிலச் சொற்களை கொஞ்சம் இழுத்து உச்சரிப்பார்கள் இல்லையா அப்படி நினைத்தேன்.

    வேறு ஒரு வார்த்தையும் சொன்னாள். dhதக்கா Gகாடி அதுதான் என்று...

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. dhதக்கா Gகாடி - இப்படியும் சொல்வதுண்டு. பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி கீதா ஜி.

      நீக்கு
  4. எப்படியோ தள்ளுவண்டிக்காரர் திரும்பி பார்க்க வைத்து விடுகிறாரே...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. இப்படியும் ஒரு வியாபார யுக்தி - சிறப்பு தான் கில்லர்ஜி. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  5. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. இன்றைய வாசகமும் அருமை. தில்லி உணவு மெனு நன்றாக உள்ளது. 80 ரூபாய்க்கு இவ்வளவு உணவு கிடைக்கிறதே..! அந்தப் பெயர் காரணமும் அருமை. பதிவோடு தொடர்கிறேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
    2. நிர்மலா ரெங்கராஜன்7 ஜூலை, 2023 அன்று 11:59 AM

      வாசகம் 👍
      ப்யார் வாலி தாலி க்கு சரியான விளக்கம் தான்.
      நானும் அந்த வழியாக செல்லும் போது பார்த்துள்ளேன்👍

      நீக்கு
    3. வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி நிர்மலா ரெங்கராஜன் ஜி.

      பதிவு குறித்த தங்களது கருத்துரையை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....