செவ்வாய், 25 ஜூலை, 2023

நீ இல்லாமல் நானேது… - சிறுகதை - கதை மாந்தர்கள்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட டப்கேஷ்வர் மந்திர், டேராடூன் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******


”அடியே, உனக்க்கென்ன நாலு பெத்து இருக்க! அதுவும் நாலும் ஆம்பள சிங்கம்! சாகும் வரைக்கும் உன்ன வச்சு காப்பாத்துவாங்க!”  


சகுந்தலாவின் தோழிகள் எப்போதும் சொல்லும் விஷயம் இது தான்.  ஆமாம் பெத்தது நாலும் ஆம்பள சிங்கம்! சகுந்தலாவும் கணவர் சேகரும் பார்த்துப் பார்த்து வளர்த்த சிங்கக்குட்டிகள்! நாலு பேருமே நல்லா படிச்சு நல்ல வேலைக்குப் போய் அவங்கவங்க கல்யாணம் காட்சி எல்லாம் ஆகி பேரக்குழந்தைகள் மட்டுமல்லாது அவர்களுக்கும் கல்யாணம் ஆகி குழந்தைகள் பிறந்தாச்சு.  சகுந்தலாவுக்கு வயசு 93! சேகருக்கு வயசு 100! சமீபத்தில் தான் 100 வயசு ஆனதுக்கு குடும்பத்தில இருக்கற அத்தனை பேருமா சேர்ந்து பெரிய விழாவா கொண்டாடினாங்க! 


ஊர் உலகத்துல எல்லாருமே சகுந்தலாவையும் சேகரையும் பார்த்து பொறாமை கூட படுவாங்க! “உனக்கென்னமா! எல்லாருமே நல்ல நிலைல இருக்கீங்க! இத்தனை வயசு வரை உங்களை உங்க பிள்ளைகள் எல்லோரும் தாங்கு தாங்குன்னு தாங்கறாங்க” என்றெல்லாம் சொல்வார்கள்! ஆனாலும் உள்ளுக்குள் கொஞ்சம் கலங்கித்தான் போயிருந்தார் சகுந்தலா! காரணம் இல்லாமல் இல்லை! 




சகுந்தலாவிற்கே 93 வயசு என்றால் அவர் பெற்ற சிங்கக்குட்டிகளுக்கும் சின்ன வயசா என்ன! அதுவும் மாமியார் மாமனாரைப் பார்த்துக்கறதே கஷ்டம்னு சொல்ற இந்த நாள்ல, தாத்தா பாட்டியை யார் பார்த்துக்கப் போறாங்க! கொஞ்ச நாளாவே இந்தக் கவலை சகுந்தலாவிற்கு இருந்தது! காது கொஞ்சம் மந்தமாகி இருந்தாலும் நாலு பிள்ளைகள் வீட்டிலும் மாற்றி மாற்றி இருக்கும்போது கேட்கும் சில விஷயங்கள் இந்தக் கவலையை அதிகரிக்க வைத்திருந்தது. 


நாலு பிள்ளைகளுமா சேர்ந்து ஒரு முடிவுக்கு வந்திருந்தார்கள் - அவர்களுக்கு, அவரவர் பிள்ளைகள்/பெண்கள் சொல்வதைக் கேட்டே ஆகவேண்டிய நிலை! - சகுந்தலாவிடமும் சேகரிடமும் சொன்ன முடிவு - “அம்மா, அப்பா, எங்களுக்கும் வயசாடிச்சு. நாங்களே எங்க பசங்கள நம்பி, அவங்களை எதிர்பார்த்து இருக்கும்படியாக இருக்கோம். பண ரீதியாக இல்லைன்னாலும், உடல் ரீதியா அவங்களை எதிர்பார்த்து இருக்கோம். எங்களாலயும் ஒண்ணும் பண்ண முடியல! அதனால உங்க ரெண்டு பேரையும் ஒரு முதியோர் இல்லத்துல சேர்த்துடலாம்னு இருக்கோம்.  எல்லா வசதியும் இருக்கற முதியோர் இல்லம் அது! பணம் கட்டிடலாம்! உங்களுக்குன்னு ஒரு இடம், டீவி, எல்லா வசதிகளும் இருக்கும். அப்பப்ப டாக்டரும் வந்து பார்த்துப் போவார்.” 


சகுந்தலா இந்த முடிவினை எதிர்பார்த்தே இருந்தார் என்றாலும் சேகருக்கு இந்த முடிவினை எதிர்கொள்ள மனதில் தெம்பு இல்லை.  கொஞ்சம் தளர்ந்து தான் போனார்.  அந்த நாளும் வந்தது.  மூத்த பையன் கார் வைத்துக் கொண்டு முதியோர் இல்லத்தில் கொண்டு போய் விட்டு விட்டு, அவ்வப்போது வந்து பார்த்துச் செல்வதாகச் சொல்லி போய் மூணு மாசம் ஆச்சு.  “அவ்வப்போது” என்று சொன்னதன் அர்த்தம் எத்தனை நாளுக்கு/மாதத்திற்கு ஒரு முறைன்னு புரியல! 


சேகர் தான் ரொம்பவே உடைந்து போயிருந்தார்.  சகுந்தலாவிற்கு இப்போது இருக்கும் கவலையெல்லாம், தான் போய் விட்டால், கணவரின் கதி? அந்த இழப்பை அவரால் தாங்கவே முடியாதே?  தான் விதவை என்று பேர் எடுத்தாலும் பரவாயில்லை, அவருக்கு முன்னாடி நான் போயிடக்கூடாது என்று வேண்டிக்கொண்டே இருந்தார்.  


முதியோர் இல்லம் சென்று ஐந்து மாதம் தான் ஆகியிருந்தது.  ஒரு காலை நேரம் - என்னதான் பிரார்த்தனைகள் செய்தாலும், ஆண்டவன் கட்டளை வேறாக இருப்பது சகஜம் தானே! இரவு தூங்கிய சகுந்தலா விழிக்கவில்லை! தூக்கத்திலேயே மரணம்! சேகர் கலங்கிப் போயிருந்தாலும் வெளியே காண்பித்துக் கொள்ளவேயில்லை.  


சகுந்தலாவின் மரணத்திற்குப் பிறகான காரியங்கள் நடந்து கொண்டிருந்தன.  ஒவ்வொரு நாளும் ஒரு யுகமாகக் கழிந்தது போல இருந்தது சேகருக்கு.  சரியாக பத்தாவது நாள் காலை… 


பிள்ளைகள் நான்குபேரும் பத்தாம் நாள் காரியத்திற்கு அப்பாவை அழைத்துச் செல்ல முதியோர் இல்லம் வந்தார்கள்.  வந்து அறையில் பார்த்த போது சேகர் மீளாத் துயிலில்! 


நீ இல்லாமல் நானேது” என்று சொல்லாமல், செயலில் புரிய வைத்திருந்தார் சேகர்! 


******


இந்த நாளின் பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன்.  மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

புது தில்லியிலிருந்து….


20 கருத்துகள்:

  1. சுருக்கமாக ஒரு அன்புக்கதை, சோகக்கதை.  நெகிழ்வு.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்குய் நன்றி ஸ்ரீராம்.

      நீக்கு
  2. மிகச்சிறப்பு! இதுதான் இன்றைய யதார்த்த நிலை

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது முதல் வருகையோ? மகிழ்ச்சி நண்பரே.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  3. வணக்கம் சகோதரரே

    பதிவு அருமை. வாசகம் அருமை. கதை மிகவும் உருக்கமாக இருக்கிறது. இது கதையானாலும், இது போன்ற இயல்பான இவ்வுலக நடைமுறை வாழ்விலும், வாழ்விலும் சாவிலும் ஒன்றினைந்து பிரியாது இருக்கும் அந்த தம்பதியினர் போன்றோரை வணங்குவோம். பகிர்வுக்கு மிக்க நன்றி.

    நன்றியுடன்
    கமலா ஹரிஹரன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. வணக்கம் கமலா ஹரிஹரன் ஜி.

      பதிவு உங்களுக்கும் பிடித்ததாக அமைந்ததில் மகிழ்ச்சி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு
  4. 65 வயது ஆகிவிட்டால், நூறு ஆண்டுகள் வாழணும் என்று யாரேனும் வாழ்த்தினால் பளார்னு அடிக்கத்தான் தோன்றும். உறவினர் ஒருவர் இல்லத்தில் மாதம் 20,000 கொடுத்து 98 வயது முதியவரைப் பார்த்துக்கொள்ள ஆள் வைத்திருக்கிறார்கள்.

    Uncertaintly of death makes life கவலைகளின் உறைவிடம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கடைசி வரி யதார்த்தம்.

      பதிவு குறித்த தங்களது கருத்துக்களை பகிர்ந்து கொண்டதற்கு நன்றி நெல்லைத்தமிழன்.

      நீக்கு
  5. மனம் கனக்க வைத்தது கதையின் தீர்வு.

    இன்றைய எனது நிலைப்பாடும் இதுதான் - கில்லர்ஜி

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பலரின் இன்றைய நிலை இப்படித்தான் கில்லர்ஜி.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

      நீக்கு
  6. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி தனபாலன்.

      நீக்கு
  7. மனதை நெகிழ வைத்துவிட்டது. மனமும் கொஞ்சம் கனத்துப் போனது. இதில் யாரையும் குறை சொல்வதிற்கில்லை.

    என் பாட்டி 92 வயது வரை....என் அப்பாவும் நானும், என் தம்பியும் பார்த்துக்கொண்டோம். அப்பாவின் வயதும் அப்போது 80 தை நெருங்கிக்கொண்டிருந்தது. என் மாமியார் 95 - வரை.....
    இக்கதையை வாசித்ததும் எனக்கு சட்டென்று நினைவுக்கு வந்தவர் நம் பதிவர் சென்னை பித்தன் சந்திரசேகரன் ஸார். தன் அம்மாவை கடைசிவரை பார்த்துக் கொண்டவர்!!! அவருக்கு என் நமஸ்காரங்களை மானசீகமாகத் தெரிவித்துக்கொண்டே இருப்பேன்.

    கீதா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. யாரையும் குறை சொல்வதற்கில்லை - உண்மை தான் கீதா ஜி.

      சென்னைப் பித்தன் ஐயா அவர்கள் எப்போதும் நினைவில் இருப்பவர். அவரது அன்னையையும் ஒரு முறை அவர் வீட்டிற்குச் சென்று பார்த்து வந்தேன்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.

      நீக்கு

  8. ”நீ இல்லாமல் நானேது” என்று சொல்லாமல், செயலில் புரிய வைத்திருந்தார் சேகர்! //

    கதை படிக்க மனது நெகிழ்வு. இதை போல நடக்க மாட்டேன் என்கிறதே!
    என் மாமியார் மாமனாருக்கு பின் தான் போக வேண்டும் என்று நினைத்தார்கள் அது போலவே நடந்தது. இந்த கதையில் சகுந்தலாவால் அவர் நினைத்தபடி போக முடியவில்லை. எல்லோருக்கும் இப்படி அமையாதே! இறைவன் விதிக்கப்பட்ட நாள் வரை வாழ்ந்து தானே ஆக வேண்டும்.

    இப்போது பிள்ளைகள் கொண்டு விட வேண்டும் என்று இல்லை பெற்றோர்களே சொந்தவீட்டை பராமரிக்க முடியவில்லை, சமைக்க முடியவில்லை மருத்துவரிடம் தனியாக போகமுடியவில்லை என்று பலகாரண காரியங்களை சொல்லி சீனியர் சிட்டிசன் ஹோமுக்கு போய் விடுகிறார்கள். (பணவசதி இருக்கும் பெற்றோர்கள்.)

    சீனியர் சிட்டிசன் ஹோம் வித விதமாக அவர்களின் விருப்பங்களுக்கு ஏற்ற்மாதிரி உள்ளதை தேர்வு செய்து கொள்கிறார்கள். பலவித வசதிகளை சொல்லும் இடங்களை பார்த்து தங்கி கொள்கிறார்கள்.

    தனியாக இருப்பதற்கு அது எவ்வளவோ மேல். தன் வயது ஒத்தவர்களுடன் பேச முடிகிறது, அடுக்கு மாடி குடியிருப்பில் இருக்கும் பிள்ளைகள் பெற்றோர்களை தனியாக விட்டு போகிறார்கள். காலை போனால் இரவுதான் வருகிறார்கள். அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் நன்றாக பழகினால் ஆச்சு இல்லையென்றால் அவர்களுக்கு என்ன நேர்ந்தாலும் தெரியாது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. பதிவு குறித்த தங்களது விரிவான கருத்துரைக்கு நன்றி கோமதிம்மா.

      நீக்கு
  9. //அவரவர் பிள்ளைகள்/பெண்கள் சொல்வதைக் கேட்டே ஆகவேண்டிய நிலை! //

    இந்த மாதிரி காசு கொடுத்து சகல வசதிகளுடன் இருக்கும் ஹோமில் பெற்றொர்கள் இருப்பதால் கவலை இல்லாமல் அவர்கள் பெற்ற குழந்தைகள் பெற்ற குழந்தைகளை பார்த்து கொள்ள வெளிநாடுகளுக்கு போகிறார்கள். நம் நாட்டில் இருக்கும் குழந்தைகளே பெற்றோர்களை தங்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள அழைக்கிறார்கள்.
    இருவருக்கும் வேலைக்கு போகிறார்கள் குழந்தையை பார்த்து கொள்ள வேண்டும்.
    என் மருமகள் மகன் பெரியவன் ஆனபின் வேலைக்கு போனாள் . அதனால் நாங்கள் குழந்தையை பார்த்து கொள்ள போகவில்லை.

    எங்கள் உறவினர்கள் குழந்தைகளை பார்த்து கொள்ள பெண்ணின் பெற்றோர் ஆறுமாதம் , அடுத்து ஆணின் பெற்றோர் ஆறுமாதம் என்று முறை வைத்து போய் வருகிறார்கள்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கோமதிம்மா.

      நீக்கு
    2. இன்றைய சூழ்நிலையை தத்ரூபமாக தெரிவித்திருந்த அன்பரை பாராட்டுகிறேன். நாமும் நமது பிள்ளைகளும் இந்த கதையில் வருகின்ற வாழ்ந்த முதியவர்களை முன்னுதாரணமாக கொண்டு வாழ வேண்டும். கதையின் முடிவில் என்ன வாழ்க்கை என்று தோன்றியது.

      நீக்கு
  10. சிறிய கதையில் இன்றைய நிலமையை பற்றிய அழகான தகவல்.வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....