அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அரசியல் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

வெள்ளி, 19 ஏப்ரல், 2024

ஜனநாயக கடமை!



இம்முறை பூத் ஸ்லிப் முன்பே கிடைத்து விட்டதால் அங்கே தேடிக் கொண்டிருக்காமல் அம்மாவும் மகளும் நேராக பூத்துக்கே சென்று விட்டோம்! மகளுக்கு இது முதல் தேர்தல்! வாக்களிப்பதில் அவளுக்கு மிகுந்த உற்சாகம்! சென்ற முறையே அடுத்த தடவை நானும் உங்கூட வந்து ஓட்டு போடுவேன் இல்லம்மா! என்றாள்…:)

வியாழன், 21 மார்ச், 2024

ராமன் ஆண்டாலும் ராவணன் ஆண்டாலும்…


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நன்நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.  


இதற்கு முன்னர் வெளியிட்ட ரொம்ப நாளாக எனக்கொரு ஆசை - வாரணாசியில் ஒன்பது நாட்கள் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******

ஞாயிறு, 18 டிசம்பர், 2022

தலைநகர் தில்லி - சுற்றுச் சூழல் - பராலி


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   

 

நேற்று வெளியிட்ட பதிவை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 

 

TO BE SUCCESSFUL IN LIFE, ALWAYS FORGET THE PROBLEMS THAT YOU FACED IN LIFE, BUT NEVER FORGET THE LESSONS THAT THOSE PROBLEMS TAUGHT YOU.

 

******

சனி, 3 ஏப்ரல், 2021

காஃபி வித் கிட்டு-105 - வலைச்சரம் - பொய்யும் உண்மையும் - (d)டு(b)புக் - துணுக் துணுக் துன் - மின்னூல் எழுத்து - ஆறிலிருந்து அறுபது வரை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


நேற்று வெளியிட்ட பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 


யார் இதயத்தில் நாம் இருக்கிறோம் என்பதை விட, யார் இதயத்தையும் நாம் காயப்படுத்தாமல் இருக்கிறோம் என்பதே சிறப்பு.


******


வியாழன், 19 ஏப்ரல், 2018

இடிக்கப்பட்ட வீடுகள் - வீதிக்கு வந்த குடும்பங்கள்....




வீதிக்கு வந்த குடும்பம் ஒன்று....


நான் இருப்பது மத்திய அரசுப் பணியாளர்களுக்கான குடியிருப்பு. இந்தக் குடியிருப்புகளின் பராமரிப்பு அரசுத்துறை ஒன்றையே சாரும் என்றாலும், அதற்கான பணியாளர்கள் குறைவானவர்களே என்பதால், தனியார் Contractors மூலம் தான் பல விதமான பரமாரிப்புப் பணிகளைச் செய்வார்கள். இந்த Contractor-களிடம் வேலை செய்வது பீஹார் மாநிலத்தினைச் சேர்ந்த பணியாளர்கள் – பெரும்பாலும் குடும்பத்துடன் வேலைகளைச் செய்ய வந்துவிடுவார்கள். இந்த பணியாளர்களை Contractor-கள் அரசின் காலி இடம் ஒன்றிலேயே தங்க வைத்திருந்தார்கள். சின்னச் சின்னதாக Tent-களாக இருந்த தங்குமிடங்கள், மண்குடிசைகளாக மாறி, செங்கல் சுவர்களோடு, மேலே தகர ஷீட் போட்ட வீடுகளாக மாறி விட்டன. 

ஞாயிறு, 15 ஏப்ரல், 2018

காவிரி – இரண்டு குறும்படங்கள்



காவிரி ஆறு – நீர் பங்கீடு. அரசியலாக்கப்பட்ட ஒரு விஷயம். இதைப் பற்றி ஒன்றும் சொல்வதிற்கில்லை. நதியை வைத்து நன்றாக அரசியல் விளையாட்டு விளையாடுகிறார்கள் - கட்சி பாகுபாடின்றி அனைத்து அரசியல்வாதிகளும்!

செவ்வாய், 29 ஆகஸ்ட், 2017

Bபிரஜா தேவி - விரஜா க்ஷேத்திரம் – நாபி கயா - ஜாஜ்பூர்


அரக்கு பள்ளத்தாக்கு – பகுதி 23

பகுதி 22 படிக்காதவர்கள் படிக்க.....

ராம் மந்திர் – ராஜா ராணி கோவில்


அரக்கு பள்ளத்தாக்கு பயணத்தொடரின் முந்தைய பதிவுகளை படிக்க வலைப்பூவின் இடது ஓரத்தில் “அரக்கு பள்ளத்தாக்கு” என்ற தலைப்பில் ஒரு Drop Down Menu இருக்கிறது. அதில் ஒவ்வொன்றாக க்ளிக்கி படிக்கலாமே…..!


Bபிரஜா தேவி - முக தரிசனம்
ஜாஜ்பூர், ஒடிஷா.


Bபிரஜா தேவி - முழு அலங்காரத்தில்....
ஜாஜ்பூர், ஒடிஷா.

ஒடிஷாவின் தலைநகரான புவனேஷ்வரிலிருந்து சுமார் 125 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ஜாஜ்பூர் மாவட்டத்தில் அமைந்திருக்கும் ஒரு கோவில் தான் எங்களுடைய அடுத்த இலக்காக இருந்தது.  ஒடிஷாவில் அமைந்திருக்கும் இந்த ஷக்தி பீடக் கோவில் மிகவும் பழமையானது. தற்போது அமைந்திருக்கும் கோவில் 13-ஆம் நூற்றாண்டில் அமைக்கப்பட்டது என்று சொன்னாலும், அதனினும் பழமையான கோவில் என்றும் பல புராணங்களில் இக்கோவில் பற்றிய குறிப்புகள் உண்டு என்றும் தெரிகிறது. ஷக்தி பீடம் என்பதைத் தவிர இக்கோவிலை நா[B]பி [G]கயா என்றும் அழைக்கிறார்கள்.  வாருங்கள் கோவிலுக்குச் செல்வோம், கூடவே சில கதைகளையும் பார்க்கலாம்! வழக்கம் போல நான் எடுத்த புகைப்படங்களும் ஆங்காங்கே பார்க்கக் கிடைக்கும்!

ஞாயிறு, 30 ஜூலை, 2017

தக்காளி விலை – புதிய காய்கறிகள் வாங்கலாம்!



தக்காளி விலை கிலோ நூறு ரூபாய்க்கு விற்கிறது தலைநகரில். வெங்காயத்தின் விலையும் கொஞ்சம் கொஞ்சமாக ஏறுமுகத்தில்….. அப்போது தான் ஹரியானா நண்பர் சொன்ன ஒரு விஷயம் நினைவுக்கு வந்தது – அது எங்கள் கிராமங்களில் தக்காளிக்கு பதில் காச்ரி என அழைக்கப்படும் காயைப் பயன்படுத்திக் கொள்வோம் என்று சொன்னது! இந்தக் காயைப் பற்றியும், அதில் செய்யப்படும் சட்னி பற்றியும் ஏற்கனவே ஒரு முறை எனது பக்கத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன் – படிக்காதவர்கள் வசதிக்காக இங்கேயும் அப்பகிர்வின் இணைப்பு!

செவ்வாய், 24 ஜனவரி, 2017

வெற்றி நமதே…..



ஜப்பானில் பத்து வயதுப் பையன் ஒருவன் இருந்தான். ஜூடோ சாம்பியனாக வேண்டும் என்பது அவனுடைய கனவு. ஆனால், அவனுக்கு இடது கை கிடையாது. கையும் காலும் வலுவாய் இருப்பவர்களுக்கே ஜூடோ சாம்பியன் ஆவது சிம்ம சொப்பனம். கையில்லாத பையன் என்ன செய்வான்? பல மாஸ்டர்களிடம் போனான். எல்லோரும் அவனை பரிதாபமாய்ப் பார்த்துவிட்டு திருப்பி அனுப்பிவிட்டார்கள். கடைசியில் ஒரு குரு அவனுக்கு ஜூடோ கற்றுத் தர ஒப்புக் கொண்டார்.

பயிற்சி ஆரம்பமானது. குரு ஒரே ஒரு தாக்குதலை மட்டுமே அவனுக்குக் கற்றுக் கொடுத்தார். நாட்கள், வாரங்கள், மாதங்கள் ஓடின. குரு வேறு எதையும் கற்றுக் கொடுப்பதாகத் தெரியவில்லை. பையன் சோர்ந்து போனான். “குருவே.. ஜூடோ சேம்பியன் ஆக இந்த ஒரு தாக்குதல் தெரிந்தால் மட்டும் போதாதே. வேறு எதுவும் சொல்லித் தருவீர்களா?” என்றான்.

“இந்த ஒரே ஒரு தாக்குதலில் நீ வல்லவன் ஆனால் போதும்” என்றார் குரு.

குரு சொல்லிவிட்டால் மறு பேச்சு ஏது? பையனும் பயிற்சியைத் தொடர்ந்தான். சாம்பியன்களுக்கான போட்டி ஆரம்பமானது!

முதல் போட்டி. சர்வமும் கற்றுத் தேர்ந்த எதிராளி. ஒரே ஒரு தாக்குதல் மட்டும் தெரிந்த இந்தப் பையன். போட்டி ஆரம்பமானது. எல்லோரும் ஆச்சரியப் படும் விதமாக பையன் வெற்றி பெற்றான்.

இரண்டாவது போட்டி. அதிலும் அவனுக்கே வெற்றி. அப்படியே முன்னேறி அரை இறுதிப் போட்டி வரை வந்தான். அதிலும் கொஞ்சம் போராடி ஜெயித்து விட்டான்.

கடைசிப் போட்டி. எதிரே இருப்பவன் பலமுறை சேம்பியன் பட்டம் பெற்றவன். ஒரு கை இல்லாத எதிராளியைப் பார்த்து அவனுக்கு கொஞ்சம் பரிதாபமும், இளக்காரமும். பையன் சளைக்கவில்லை. போட்டி ஆரம்பமானது. முதல் சுற்றில் பையனை அடித்து வீழ்த்தினான். பையனின் நிலையைக் கண்டு பார்வையாளர்களுக்கு அதிர்ச்சி. போட்டியை நிறுத்திவிடலாமா என்கின்றனர் போட்டி நடத்துபவர்கள். “வேண்டாம்., பையன் சண்டையிடட்டும்” என்கிறார் குரு.

இந்தப் பையனோடு போரிட இனிமேல் பாதுகாப்புக் கவசம் தேவையில்லை என எதிராளி அலட்சியமாய் வந்திறங்கினான். பையன் தனக்குத் தெரிந்த அந்த ஒரே தாக்குதலை பலமாய் நிகழ்த்தினான். எதிராளி வீழ்ந்தான். பையன் சாம்பியனானான்.

பார்வையாளர்கள் நம்ப முடியாமல் பார்த்தார்கள். போட்டியாளர்களுக்கு ஆச்சரியம். அந்தப் பையனுக்கே தனது வெற்றியை நம்ப முடியவில்லை. அன்று மாலை குருவின் பாதங்களில் பணிந்த அவன் கேட்டான்.

“குருவே. நான் எப்படி இந்த போட்டியில் வெற்றி பெற்றேன்? ஒரே ஒரு தாக்குதலை மட்டும் வைத்துக் கொண்டு வெற்றி பெற்றிருக்கிறேனே“ என்றான். புன்னகைத்தபடியே குரு சொன்னார் “உனது வெற்றிக்கு இரண்டு காரணங்கள். ஒன்று ஜூடோவிலுள்ள மிகக் கடுமையான ஒரு தாக்குதலை நீ கற்றுத் தேர்ந்திருக்கிறாய்.  இரண்டாவது இந்தத் தாக்குதலைத் தடுக்க வேண்டுமானால் எதிராளிக்கு ஒரே ஒரு வழி தான் உண்டு. உனது இடது கையைப் பிடிக்க வேண்டும். உனக்குத் தான் இடது கை கிடையாதே!  உன்னுடைய அந்த பலவீனம் தான் பலமானதாய் மாறி உன்னை சாம்பியன் ஆக்கியிருக்கிறது!”

குரு சொல்லச் சொல்ல பையன் வியந்தான். தனது பலவீனமே பலமாய் மாறிய அதிசயத்தை நினைத்து நினைத்து ஆனந்தித்தான்.

நமது மனம் திறமைகளின் கடல். அதில் முத்தெடுப்பதும் நத்தையெடுப்பதும் மூச்சடக்கி நாம் மூழ்குவதைப் பொறுத்தது. ஒவ்வொரு மனிதனுக்கும் வாழ்க்கை தனித் தனித் திறமைகளைக் கொடுத்திருக்கிறது. 

நமக்குள்ள திறமையைப் பயன்படுத்தி தோல்வியைப் பற்றி அஞ்சாது தொடர்ந்து முன்னேறுவோம்…..

மீண்டும் ச[சி]ந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

செவ்வாய், 6 டிசம்பர், 2016

சிரபுஞ்சி – ராமகிருஷ்ணா மிஷன் பள்ளிக்கூடம் – Eco Park….


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 73

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்” என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

ராமகிருஷ்ணா மிஷன்

சென்ற பகுதியில் Noh Ka Likai நீர்வீழ்ச்சி பற்றியும் அதற்கு பெயர்க்காரணமும் பார்த்தோம் – சோகமான பெயர்க்காரணம் தான். அந்த காரணம் கேட்டபிறகு நீர்வீழ்ச்சியின் அழகையோ, இயற்கையின் எழிலையோ ரசிக்க முடியவில்லை என்பது உண்மை.  அந்த நினைவுகளோடு நாங்கள் அடுத்ததாய் சென்றது ஒரு ஆஸ்ரமம்/பள்ளிக்கூடம். ராமகிருஷ்ணா மிஷன் Khகாசி மக்களுக்காக, அவர்களின் பாரம்பரியத்தினைக் காப்பாற்றவும், அவர்களுக்கு படிப்பறிவு சொல்லிக் கொடுக்கவும் ஏற்படுத்திய ஒரு பள்ளிக்கூடம் ஒன்று இருக்கிறது.

எப்போ வருவாரோ… எந்தன் கலி தீர்க்க!
பயணிகளுக்காகக் காத்திருக்கும் கடைக்காரப் பெண்….
இடம்: பூங்கா….

1924-ஆம் ஆண்டு ஸ்வாமி விவேகாநந்தரின் சீடர்களுள் ஒருவரான கேதகி மஹாராஜ் என்பவர் Khகாசி மக்களின் முன்னேற்றத்திற்காக, ஷெல்லா கிராமத்தில் ஒரு ஆரம்பப் பள்ளிக்கூடமும் ஒரு சுகாதார மையமும் ஆரம்பித்தார். ராமகிருஷ்ணா மிஷன் சார்பில் ஆரம்பிக்கப்பட்ட அந்தப் பள்ளி தொடர்ந்து khகாசி மலைப் பகுதி கிராமங்களில் பல முன்னேற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டது.  அங்கே கல்வி நிறுவனங்கள், சுகாதார மையம், ஆஸ்ரமம் என பலவும் தொடங்கப்பட்டது. சிரபுஞ்சியில் அமைக்கப்பட்ட ராமகிருஷ்ணா மிஷன் 1934-ஆம் ஆண்டு துவங்கப்பட்டது. அங்கே தான் நாங்கள் சென்றிருந்தோம்.


பூங்கா – ஒரு பகுதி…

கடந்த 90 வருடங்களுக்கும் மேலாக இந்தப் பகுதியில் கல்வி, சுகாதாரம் ஆகிய பணிகளில் ராமகிருஷ்ணா மிஷன் தொடர்ந்து ஈடுபட்டு வருகிறது.  அங்கே ஒரு சிறிய அருங்காட்சியகமும் உண்டு. அங்கே சென்று khகாசி பழங்குடி மக்களின் பாரம்பர்யம், அவர்களது நடவடிக்கைகள் ஆகிய பற்றிய காட்சிப்பொருட்களையும், ராமகிருஷ்ணா மிஷன் பற்றிய வரலாற்றுக் குறிப்புகளையும் கண்டோம்.  அங்கேயும் சில கடைகள் உண்டு. அப்பகுதி மக்கள் தங்கள் கைவினைப் பொருட்களையும், உணவுப் பொருட்களையும் விற்பனை செய்கிறார்கள்.

பூங்கா – கூழாங்கற்களால் அறிவிப்பு….

பூங்காவிலிருந்து ஒரு காட்சி…..

பிறகு அங்கிருந்து அடுத்த இடம் நோக்கி பயணித்தோம்.  அந்த இடம் சிரபுஞ்சி Eco Park - மேகாலயா அரசாங்கத்தினால் 14 ஹெக்டேர் பரப்பளவில் உருவாக்கப்பட்ட இந்தப் பூங்கா இங்கே வரும் சுற்றுலாப் பயணிகள் பசுமை மலைக்கணவாய் கண்டு ரசிக்க ஏதுவாய் அமைக்கப்பட்ட ஒரு பூங்கா. இந்த பூங்காவினுள் சென்று ரசிக்க, நுழைவுக்கட்டணம், காமிரா கட்டணம் என வாங்குவார்கள். அவற்றைக் கொடுத்து ரசீது வாங்கிக் கொண்டு உள்ளே சென்றால் சோஹ்ரா என அழைக்கப்படும் இந்த சிரபுஞ்சி பகுதியில் உள்ள இயற்கை அழகை ரசிக்க முடியும். சில நீர்வீழ்ச்சிகளும் இங்கே உள்ள View Point-ல் நின்று ரசிக்க முடியும்.  இந்தப் பூங்காவின் பெயர் – மாஸ்மாய் நோங்க்திமாய் எகோ பார்க்!  Nasal voice-ல படிச்சுப் பாருங்க!

பூங்கா ஓரத்திலிருந்து மலைப்பகுதி….

பங்க்ளாதேஷ் சாலை ஒன்று….

பூங்காவின் உள்ளேயே சிறு நீரோடை ஒன்றும் அதனைக் கடக்க பாலமும் உண்டு.  பூங்காவின் உள்ளே இருக்கும் மரங்கள், பூச் செடிகள் என அனைத்தையும் கண்டு ரசித்தவாறே பூங்காவின் ஓரத்திற்குச் சென்றால், அங்கே இருந்து பங்க்ளாதேஷ் கிராமங்களையும், சில சாலைகளையும் பார்க்க முடியும்.  இரவு நேரத்தில் சென்றால், அந்த ஊர்களை ஒளிவிளக்கில் பார்க்கமுடியும். பூங்காவில் சிறுவர்களுக்காக சறுக்கு மரம், ஊஞ்சல் போன்ற விளையாட்டு வசதிகளும் உண்டு.


சறுக்கு மரத்தில் விளையாடும் சிறுமி…. 
சிறுமியின் முகத்தில் தெரியும் எதிர்பார்ப்பு பிடித்திருக்கிறதா?

சில நிமிடங்கள் அங்கே இருந்த பிறகு அங்கேயிருந்து புறப்பட்டோம்.  அதற்கு அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் மிக அருமையான இடம்.  இந்த இரண்டு இடங்களுக்குச் சென்றதற்கு பதிலாக அடுத்த இடத்திற்கு முன்னரே சென்றிருந்தால் இன்னும் அதிக நேரம் அங்கே இருந்திருக்கலாம் என்று தோன்ற வைத்த இடம் அடுத்த இடம்…..  அது எந்த இடம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்.

மீண்டும் ச[சி]ந்திப்போம்....

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வியாழன், 24 செப்டம்பர், 2015

காந்தி பிறந்த மண்ணில்....

பஞ்ச் துவாரகா - பயணக் கட்டுரை பகுதி 8

முந்தைய பகுதிகள் – 1 2 3 4 5 6 7

நாங்கள் சோம்நாத்திலிருந்து துவாரகா பயணித்தபோது வண்டி ஓட்டி அசதியின் மிகுதியால் தூக்கத்தில் ஆழ்ந்து விடும் அபாயம் இருந்தமையால் நடு இரவில் தங்க தேர்ந்தெடுத்த இடம் போர்[b]பந்தர்! இந்திய சுதந்திரப் போராட்டத்தில் பங்கு கொண்டு, இந்தியர்கள் சுதந்திர காற்றை சுவாசிக்க முக்கியமான காரணம் வகித்த பலரில் ஒருவரான நமது தேசப் பிதா மஹாத்மா காந்தி அவர்களின் பிறந்த ஊரான போர்[b]பந்தரில் தான் நாங்கள் அந்த இரவினைக் கழித்தோம். 


காந்தி நினைவில்லம் - நுழைவாயில்

விடிகாலையில் எழுந்து எங்கள் பயணத்தினை தொடர தயார் ஆனோம்.  நாங்கள் தங்கியிருந்த இடத்தின் வெகு அருகிலேயே மஹாத்மா காந்தி பிறந்த வீடு இருப்பதைத் தெரிந்து கொண்டு அங்கே சென்று அதன் பிறகு துவாரகா நோக்கி பயணிக்கலாம் என முடிவு செய்தோம்.  அந்த காலை நேரத்திலேயே போர்பந்தர் கடைகளில் சில திறந்திருந்தன. பெரும்பாலும் பூக்கடைகள்! காந்தி மஹான் பிறந்த வீட்டில் அஞ்சலி செலுத்த பூக்கள் வாங்குபவர்களைப் பார்க்க முடிந்தது. காந்தி பிறந்த வீடு பற்றிய சில செய்திகளையும், படங்களையும் இங்கே பார்க்கலாம்.


கீர்த்தி மந்திர் - ஒரு தோற்றம்....

காந்தி பிறந்த இந்த வீட்டினை 1777-ஆம் ஆண்டு அவரது முப்பாட்டன் காலத்தில் வாங்கி இருக்கிறார்கள்.  திரு ஹரிவன்ஜி ராஹிதாஸ்ஜி காந்தி அவர்கள் மன்[B]பாய் என்பவரிடம் வாங்கிய இவ்வீட்டினை காந்தியின் தாத்தா உத்தம்சந்த்ஜி அவர்கள் காலத்தில் சில மாற்றங்களைச் செய்து ஒரு மாடியும் கட்டி இருக்கிறார்கள். 1869-ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 2-ஆம் தேதி காந்தி பிறந்த சமயத்தில் இவ்வீட்டில் தரைத் தளம் தவிர இரண்டு மாடிகளும், 22 அறைகளும் இருந்ததாக இங்கே இருக்கும் சில குறிப்புகள் தெரிவிக்கின்றன.


அண்ணல் காந்தியும் அன்னை கஸ்தூரிபாவும்

காந்திஜியின் நினைவாக காந்தி பிறந்த வீட்டிற்கு அருகே கீர்த்தி மந்திர் என்பதை நிர்மாணிக்க முடிவு செய்து 1947-ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. காந்திஜி இருக்கும்போதே அவரிடமிருந்தும் அவரது மற்ற உறவினர்களிடமிருந்தும் இவ்வீட்டினை சேட்ஜி நான்ஜிபாய் காளிதாஸ் மேஹ்தா என்பவர் வாங்கி இருக்கிறார்.  ”கீர்த்தி மந்திர்” என்ற பெயரில் மஹாத்மா காந்தியின் நினைவில்லமும் பக்கத்திலேயே கட்டப்பட்டது. இந்தியாவின் இரும்பு மனிதர் என்று அழைக்கப்பட்ட சர்தார் வல்லபாய் படேல் அவர்கள் 27-05-1950 அன்று திறந்து வைத்திருக்கிறார் என்பதை இங்கே இருக்கும் குறிப்புகளில் இருந்து தெரிந்து கொள்ள முடிந்தது. சாலையிலிருந்து உள்ளே நுழையும் போது ஒரு பெரிய வாயில்.  அதில் கதவுகள் சற்றே மூடி ஒரு சின்ன வாயில் வழியே தான் நாங்கள் உள்ளே நுழைய முடிந்தது. மக்கள் அதிகம் வரும் நாட்களில் பெரிய கதவுகளையும் திறப்பார்கள் போலும்!


அண்ணலின் பெற்றோர்கள்

நினைவில்லம் பற்றிய குறிப்புகளைப் படித்து உள்ளே நுழைந்தால், எதிரே பெரிய அளவு புகைப்படங்களில் அண்ணல் காந்தியும் அவரது துணைவியும் நம்மை நோக்கி புன்னகைக்கிறார்கள்.  புகைப்படத்தின் கீழே ”சத்ய” என்றும் “அஹிம்சா” என்ற இரு வார்த்தைகளும் ஒன்றன் கீழ் ஒன்றாய் எழுதி வைத்திருக்கிறார்கள். இந்த இரண்டு வார்த்தைகள் தான் அண்ணலுக்கு மிகவும் பிடித்தவை என்பதால் இங்கே எழுதி வைத்திருக்கிறார்கள் போலும்!




 அண்ணல் காந்தி பிறந்த அறை

அவர்களது புகைப்படத்தினை பார்த்து விட்டு முன்னேறினால், அண்ணல் காந்தி பிறந்த அறை, அவர் படிக்கும் அறை, வீட்டின் சமையல் அறை என பல அறைகளை நாம் காண முடிகிறது.  பழைய கால வீடு என்பதால், மாடிகளுக்குச் செல்ல மரப்படிக்கட்டுகள் தான் அமைத்திருக்கிறார்கள்.  குறுகலான படிகளுக்கு பச்சை வண்ணம் அடித்திருக்கிறார்கள் என்றாலும், நடந்து நடந்து பல இடங்களில் தடம் பதிந்து வண்ணம் மறைந்திருக்கிறது.  படிகளில் செல்லும்போது பிடிமானத்திற்காக ஒரு தடிமனான கயிற்றையும் கட்டி தொங்க விட்டிருக்கிறார்கள்!


இந்த அறையில் தான் காந்திஜி படித்துக் கொண்டிருப்பாராம்! - அங்கே நிழலாய் நானும்!

சமையல் அறையில் பார்த்தால் அந்த காலத்திலேயே மேலே விடப்படும் தண்ணீர் கீழே சென்று சேரும் வழியாக அமைத்திருக்கிறார்கள்.  சின்னச் சின்ன கதவுகள், ஜன்னல்கள் என பழையகால வீட்டினை அப்படியே வைத்திருக்கிறார்கள். என்றாலும் முகப்பு மற்றும் மாடிகளில் சில மாற்றங்கள் செய்திருப்பார்கள் போலும்!  ஒவ்வொரு அறையாக பார்த்துக் கொண்டே கீழே வந்து சேர்ந்தோம்.  கீர்த்தி மந்திர் என்று அழைக்கப்பட்டாலும் இது கோவில் அல்ல.


மரப்படிக்கட்டுகளும், பிடித்துக் கொள்ள கயிறும்!


மாடி அறை ஒன்றின் பின்பக்க கதவு - ஆனால் வெளியே கால் வைத்தால் நேராக கீழே விழ வேண்டியது தான்!


சின்னதாய் Shelf ஒன்று - கதவுகளுடன்!


அக்காலத்து பலகணி!

கீர்த்தி மந்திர் வடிவமைத்த கட்டிடக் கலைஞரான திரு புருஷோத்தம் மிஸ்திரி இதில் ஆறு விதமான அதாவது இந்து, பார்சீய, ஜெயின், புத்த, கிறிஸ்துவம், முஸ்லீம் கட்டிட வடிவங்களை ஒருங்கிணைத்து அமைத்ததாகவும் சொல்கிறார்கள். இதன் அருகிலேயே ஒரு நூலகமும் அருங்காட்சியகமும் அமைத்திருக்கிறார்கள். கீர்த்தி மந்திரின் மொத்த உயரம் 79 அடிகள் – அண்ணல் காந்தி இப்பூவுலகில் வாழ்ந்த ஆண்டுகள் 79 என்பதால் இந்தக் கணக்கு! காந்திஜியின் புத்தகங்களும், அவரைப் பற்றி பலரும் எழுதிய புத்தகங்களும் இங்கே உண்டு. 

போர்பந்தர் நகரின் பழைய [B]பாட்டியா பஜார் என அழைக்கப்படும் இடத்தில் கஸ்தூரிபா சாலையில் அமைந்திருக்கும் இந்த கீர்த்தி மந்திர் தினமும் காலை 07.30 மணி முதல் மாலை 07.00 மணி வரை திறந்திருக்கும். போர்பந்தர் நகருக்கு அம்தாவாத், ராஜ்கோட், மும்பை போன்ற இடங்களிலிருந்து ரயில் வசதிகளும் உண்டு.  மேலும் குஜராத் மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களிலிருந்து பேருந்து வசதிகளும் உண்டு.

இப்படியாக, இரவில் பயணித்து துவாரகா சென்றடைய நாங்கள் நினைத்திருந்தாலும், நடுவே காந்தி பிறந்த மண்ணில் சில மணித்துளிகள் தங்கி, கீர்த்தி மந்திரையும் தரிசிக்க வேண்டும் என இருக்கும் போது அதை மாற்றவா முடியும்!  இங்கே இருக்கும் புகைப்படங்களையும் தகவல்களையும் பார்த்துவிட்டு, சில புகைப்படங்களையும் எடுத்துக் கொண்ட பிறகு வெளியே வந்தோம்.  கொஞ்சம் தேநீர் அருந்தி சுறுசுறுப்புடன் துவாரகை நோக்கிய பயணத்தினை துவங்கினோம்.  பயணம் எப்படி இருந்தது, வழியில் பார்த்த விஷயங்கள் என்ன என்பவற்றை அடுத்த பதிவில் பார்க்கலாமே!


நட்புடன்


வியாழன், 5 பிப்ரவரி, 2015

இடைத்தேர்தல் மற்றும் தேர்தல்



படம்:  நன்றி - இணையம்.

கடந்த சில நாட்களாகவே அரசியல் பக்கம் மீண்டும் சூடு பிடித்திருக்கிறது.  சமீபத்தில் தமிழகம் குறிப்பாக திருவரங்கம் வந்த போது இடைத்தேர்தலுக்கான ஆயத்தங்கள் தொடங்கி விட்டன.  ஒவ்வொரு கட்சியும் வெற்றிக்கனியை பறிக்க பலத்த முஸ்தீபுகளில் இறங்கி விட்டார்கள். திருவரங்கம் முழுவதுமே கரை வேட்டிகளாலும், அவர்கள் வந்திறங்கும் SUV வண்டிகளாலும் நிறைந்திருக்கிறது. 

ஒவ்வொரு பகுதியிலும் கட்சிகள் போட்டி போட்டுக்கொண்டு தங்களது தற்காலிக அலுவலகங்களை, காலியாக இருக்கும் இடங்களிலும், வீடுகளிலும் அமைத்து இருக்கிறார்கள்.  எங்கே பார்த்தாலும் கைகளில் வாக்காளர் பட்டியலை வைத்துக் கொண்டு வீடு வீடாக அலைவதைப் பார்க்கும் போது இந்த கும்பல் எல்லாம் இன்னும் சில நாட்கள் தான் இருக்கும் என்பது கண்கூடாக தெரிகிறது.

சென்ற தேர்தலிலேயே கட்சிகள் பணப் பட்டுவாடா செய்தது என்ற குற்றச்சாட்டுகளை கேட்க முடிந்தது.  ஆங்காங்கே பல லட்சம் மதிப்புள்ள ரூபாய் நோட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டது. இம்முறையும் பல வகைகளில் ஓட்டுகளை வாங்கும் முயற்சி நடந்து கொண்டிருக்கிறது. வந்த வரை லாபம் பார்க்கலாம் என்ற எண்ணத்துடன் பல வாக்காளர்கள் இருப்பதையும் பார்க்க முடிந்தது. 

வாக்கு ஒன்றிற்கு ரூபாய் 200 முதல் 500 வரை வழங்குவார்கள் என ஒரு கட்சியின் அடிப்பொடி சொல்லிக் கொண்டிருக்க, அங்கிருந்த மற்றொருவர் “இந்த வாட்டி நாங்க ஏமாற மாட்டோம்....  வீட்டுக்கு ஒரு லட்சம் ரூபாய் யார் தர்றாங்களோ அவங்களுக்கு தான் நாங்க ஓட்டு போடப் போறோம்” என்று சொன்னதைக் கேட்டபோது, அதிர்ச்சி அதிகரித்தது! அந்நபர் மீது நான் வைத்திருந்த மரியாதை குறைந்தது! 

நேற்று கூட ஒரு பன்மாடிக் குடியிருப்பில் அனைத்து வீடுகளுக்கும் இலவச வேட்டி-புடவை கொடுத்து இருக்கிறதாகக் கேள்விப்பட்டேன். இப்படி பணம் வாங்கிக் கொண்டு ஓட்டு போடுவதை விட சும்மா இருக்கலாம்! பணம், பொருட்கள், சாராயம் என்று எதையாவது கொடுத்து வாக்குகளை அள்ளி விட அனைத்து கட்சிகளும் முயற்சி செய்து கொண்டிருக்கின்றன. வெற்றி பெற்று விட்டால், செலவு செய்த பணத்தினை பல மடங்காக திரும்பப் பெறலாம் என்ற பேராசையில் அனைவரும் மூழ்கியிருக்கின்றனர். 

தமிழகத்தின் மொத்த அமைச்சரவையே திருவரங்கத்தில் இருப்பது போலத் தோன்றியது. அப்பப்பா எத்தனை எத்தனை வாகனங்கள், கரை வேட்டி மனிதர்கள்.  சாதாரணமாகவே சுற்றுலாப் பயணிகளால் நிறைந்திருக்கும் திருவரங்கம் இந்த அசாதரணமான தாக்குதலால் திக்கு முக்காடிக் கொண்டிருக்கிறது. எல்லா இடங்களிலும் இருக்கும் வாகன நெரிசலைப் பார்த்தால் ”ஏதேது.... நாம் இருப்பது திருவரங்கத்திலா இல்லை தலைநகரிலா?” என்றும் தோன்றியது.

இரு கட்சியினரும் பக்கத்துப் பக்கத்து வீடுகளில் தற்காலிக அலுவலகங்கள் அமைத்துக் கொண்டிருக்க, அவ்வப்போது சிற்சில மோதல்களும் முறைப்புகளும் பார்க்கும்போது “எப்படா இந்த தேர்தல் முடியும்?” என்ற எண்ணம் திருவரங்கவாசிகளுக்கு வந்திருக்கும்!

திருவரங்கத்தின் இடைத் தேர்தல் இப்படி இருக்க, தலைநகர் தில்லியிலும் தேர்தல் ஜூரம் அதிகரித்து விட்டது. வாக்கு சேகரிக்க இன்று தான் கடைசி நாள்.  ஒவ்வொருவரும் மற்றவரை சரமாரியாக தாக்கிக் கொள்வதைப் பார்க்கும் போது ”என்னம்மா...  ஏம்மா இப்படி பண்றீங்க!” என்று தொலைக்காட்சியில் சொல்வதைப் போலத் தான் சொல்லத் தோன்றுகிறது. 

எப்படியும் ஜெயிக்க வேண்டும் என்று ஒவ்வொரு கட்சியும் போட்டி போட்டுக் கொண்டு களத்தில் இறங்கி இருக்கிறார்கள்.  தேர்தல் சமயத்தில் மட்டுமே நடக்கும் பல வேலைகள் இப்போது மீண்டும் நடந்து கொண்டிருக்கிறது.  இத்தனை நாளாக இல்லாத கூத்தாக, தினமும் புது தில்லி மாநகராட்சியின் வண்டி ஓலமிட்டபடி எல்லாத் தெருக்களிலும் வந்து கொண்டிருக்கிறது – “குப்பைகளை தெருவில் போடாதீர்கள். உங்கள் வீட்டு வாசலுக்கு எங்கள் வண்டி வருகிறது. அதில் மட்டுமே குப்பை போடவும்” என்று வண்டியோடு அலைகிறார்கள். இத்தனை வருடங்களாக இம்மாதிரி ஒரு சேவையை நான் பார்த்ததில்லை.

Jhuggi-Jhopri என்று ஹிந்தியில் அழைக்கப்படும் தற்காலிக குடிசைகள் இருக்கும் பகுதியில் ஓட்டுக்காக உற்சாக பானம் சாதாரண தண்ணீர் போலவே பாட்டில் பாட்டிலாக விநியோகம் நடந்து கொண்டிருக்கிறது. நேற்று ஒரு கட்சியின் நிர்வாகியிடம் 5000 பாட்டில்கள் பறிமுதல் செய்திருக்கிறது காவல் துறை.

தில்லியைப் பொறுத்த மட்டில், எந்த கட்சி ஆட்சிக்கு வந்தாலும் அவர்கள் சந்திக்க இருக்கும் சவால்கள் எண்ணிக்கையில் அதிகம். கட்டுக்கடங்காத மக்கள் தொகை – தினம் தினம் வெளி மாநிலங்களிலிருந்து வேலை தேடி வந்து குவியும் மக்கள், தண்ணீர் பிரச்சனை, விலைவாசி ஏற்றம், மின்சாரப் பற்றாக்குறை, பெண்களுக்கான பாதுகாப்பு என பிரச்சனைகளும் சவால்களும் நிறைந்த இடம். கற்பழிப்பு சம்பவங்கள் நடக்காத நாட்களே குறைவு எனச் சொல்லிவிடலாம்.

முக்கிய கட்சிகளில் ஒரு கட்சி முன்னாள் பெண் காவல்துறை அதிகாரியை முக்கியமந்திரியாக நிறுத்த மற்றொரு கட்சி பெண்களுக்கு பாதுகாப்பு தருவோம் என்றும், லஞ்சம் ஒழிப்போம் என்றும் சொல்லிக் கொண்டிருக்கிறது.  யார் ஜெயிக்கப் போகிறார்கள் என்பது வரும் 10-ஆம் தேதி தெரிந்து விடும்..... பார்க்கலாம் என்ன நடக்கப் போகிறது என!


இடைத்தேர்தலோ, முழுத் தேர்தலோ, இப்படி அரசியல்வாதிகள் தரும் சொல்ப பணத்திற்கோ, இலவசங்களுக்கோ ஆசைப்பட்டு தம்மை விலைப் பொருளாக மாற்றிக் கொள்ளாமல் இருக்கப் போகிறார்களோ என்ற எண்ணம் மனதில் வருகிறது.
 
இடைத் தேர்தல் முடிவுக்கு 16-ஆம் தேதி வரை காத்திருக்க வேண்டும்.  தலைநகர் வாசிகள் கொஞ்சம் மூச்சு விட்டுக் கொள்ளலாம்! 10ஆம் தேதியே முடிவு தெரிந்து விடும். திருவரங்க வாசிகள் இந்த தேர்தல் தொல்லைகளை இன்னும் சில நாட்கள் அனுபவித்துத் தீர வேண்டும்...... வேறு வழியில்லை.

நாளை வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.