அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட நிழற்படத்திற்கான கதையும் கவிதையும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இந்த வாரத்தின் விளம்பரம் : “தீபாவளி வாழ்த்துகள்”
இந்த வாரத்தின் ரசித்த விளம்பரமாக சென்ற வருடத்தின் தீபாவளி சமயத்தில் வெளியிடப்பட்ட விளம்பரம் ஒன்று - உங்கள் பார்வைக்கு! சந்தித்ததும் சிந்தித்ததும் வலைப்பூ வாசகர்கள் அனைவருக்கும் எங்கள் அனைவரின் மனம் நிறைந்த தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள். வாருங்கள் விளம்பரம் பார்க்கலாம்!
மேலே உள்ள சுட்டி வழி பார்க்க முடியவில்லை என்றால் கீழேயுள்ள சுட்டி வழியாகவும் பார்க்கலாம்.
OPPO - #BeTheLight To Spread The Light| Diwali’20| CHROME PICTURES Director: Amit Sharma
******
இந்த வாரத்தின் கவிதை : இறைவி
இந்த வாரத்தின் ரசித்த கவிதையாக, இறைவி எனும் கவிதை. முகநூலில் பார்த்து ரசித்த கவிதை இது.
அருவெறுப்பு பார்க்காமல்
அத்தனையும் வழித்தெறிந்தவள் #அன்னை
மடிஉறங்கும் #பிள்ளை எங்கே
சிறுநீரை அடக்கிவிடுவானோ என
முழுச்சேலை நனையும் வரை
கால்அசைக்காமல் இருப்பாள்
😏😏😏😏
கக்கத்தில் வெக்கை வந்து
வேதனையோடு போராடியவனுக்கு
உப்பு சோப்பும் மஞ்சளும்
அரைச்சு பூசி.......
மறுநாள் பழுத்து அது உடைய
வாசமடிச்ச சீழ் அத்தனையும்
முகஞ்சுளிக்காது வாரிக் கொட்டியவள்
😏😏😏
தள்ளாமையில் வாய்க்கோழையை
வாசலோடு துப்புகிறாள் என
தினம் #மனைவி கூச்சலிட
கையாலாகாத என்னை
கனிவோடு பார்த்து விட்டு
கோயிலோடு போய்விட்டாள்
😏😏😏
ஊர் ஏசியபோதும்
உடனே அழைத்து வரச்சொல்லி
தேளாய் கொட்ட மனைவி
காத்திருந்த போதும் #மறுத்துவிட்டேன்
😔😔😔
#இறைவி
இருக்கட்டும்
ஆலயத்திலேயே 🙏🙏
உங்களுக்குப் பிடித்ததா, படமும் கவிதையும்! பாராட்டுகள் படம் எடுத்தவரையும், கவிதை எழுதியபவரையே சேரும்…
******
பழைய நினைப்புடா பேராண்டி : ராஜா ராணி குடைகள்
2011-ஆம் ஆண்டு எங்களது வலைப்பூவில் இதே நாளில் வெளியிட்ட பதிவு - ராஜா ராணி குடைகள் - இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக! அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
மஹாராஜா மாதோ ராவ் சிந்தியா மற்றும் மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்கள் இருவருக்குமான குடைகள் இவை. ”சத்ரி” என்பது இவ்வுலகில் நல்ல விஷயங்களைச் செய்தவர்களுக்கான சமாதி். இந்த குடைகள் பொதுவாக போரில் வீர மரணம் எய்திய மராட்டிய மஹாராஜாக்களுக்காக கட்டப்பட்டு வந்தன. சிந்தியா ராஜா-ராணிக்காகக் கட்டப்பட்டவையே இந்த மிக அழகிய குடைகள்.
இந்த இடத்தினை நிர்வாகம் செய்துவரும் அறக்கட்டளையின் திரு மோஹிதே அவர்கள் இந்த இடம் முழுதும் எங்களுடன் வந்து அதன் சிறப்பினை விளக்கிச் சொன்னார். அவர் சொன்ன நிறைய விஷயங்கள் அந்த இடத்தின் பெருமையை உணர்த்தியது.
மஹாராணி சாக்ய ராஜே சிந்தியா அவர்களின் அமர்ந்த நிலையில் உள்ள முழு உருவச் சிலை இருக்கிறது. அந்த இடத்தின் எதிரே ஒரு பெரிய மண்டபம். அதில் தினமும் காலை நேரத்தில் பிரசங்கங்கள் நடைபெறுகின்றன. மாலையில் வாத்திய இசையுடன் கூடிய பாடல்களை இசைக்கிறார்கள்.
மத்தியப் பிரதேசம் அழைக்கிறது என்ற பெயரில் நான் எழுதிய முதல் பயணத்தொடரிலிருந்து ஒரு பகுதி இது. முழு பதிவினையும் மேலே உள்ள சுட்டி வழி படித்துப் பாருங்களேன் - இது வரை நீங்கள் அந்தப் பதிவினை படித்திருந்தாலும், படிக்காவிட்டாலும்! 😀
******
இந்த வாரத்தின் வாகன வாக்கியங்கள் : மகிழ்ச்சி
சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் வாகன வாக்கியம் ஒன்று - சமீபத்தில் இரு சக்கர வாகனம் ஒன்றில் பார்த்தது. வாசகம் நிறைய யோசிக்க வைத்தது என்று சொன்னால் அது மிகையாகாது. அலுவலகத்திற்கு இரு சக்கர வாகனத்தில் பயணிக்கும் போதோ, அல்லது திரும்பும்போதோ இப்படியான வாசகங்களைப் பார்க்க நேரிட்டால், சாலையில் கவனம் இருப்பதோடு, அந்த வாசகங்கள் குறித்த எண்ணங்களும் மனதில் ஓடிக்கொண்டிருப்பதைத் தவிர்க்க முடிவதில்லை. சமீபத்தில் பார்த்த பார்த்த வாசகம்…
“Wife Happy Tho Life Happy”
இதில் “தோ” என்பது ஹிந்தி வார்த்தை! அதாவது மனைவி மகிழ்ச்சியுடன் இருந்தால் வாழ்க்கை மகிழ்ச்சியாக இருக்கும் என்று சொல்ல வருகிறார்! எந்த ஒரு குடும்பமாக இருந்தாலும் உறுப்பினர்கள் அனைவரும் மகிழ்வுடன் இருந்தால் கொண்டாட்டம் தான். ஆனால் இவர் சொல்ல வருவது மனைவி மகிழ்ச்சியாக இருந்தால் குடும்பமே மகிழ்ச்சியாக இருக்கும் என்பது போல இருக்கிறது. இது உண்மையா பொய்யா? உங்கள் கருத்தென்ன? பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
******
இந்த வாரத்தின் நகைச்சுவை துணுக்கு - டாக்டர் :
இன்றைக்கும் டாக்டர் நோயாளி நகைச்சுவை துணுக்குகளுக்கு வரவேற்பு இருக்கிறதா என்று தெரியவில்லை. மருத்துவர்களை வைத்து செய்யும் பல துணுக்குகள் வருவதுண்டு. மருத்துவமனை என்பது ஒரு புனிதமான இடம் என்பது மாறி வியாபார ஸ்தலமாக மாறி பல காலம் ஆகிவிட்டது. மருத்துவமனை என்பது “காசு மேலே காசு வந்து கொட்டுகின்ற” இடமாகிவிட்டது. இந்த விஷயம் குறித்து நிறையவே எழுதலாம்! எழுத எழுத தொடரும் விதமாக நிறைய விஷயங்களை தினம் தினம் கேள்விப்படுகிறோம், நமக்கும் அனுபவங்கள் கிடைக்கின்றன. அம்மா, அப்பா என இருவருடனும் மருத்துவமனையில் இருந்த நாட்கள் எத்தனை மோசமாக இருந்தன என்பதை நான் பெரிதாக வெளியில் சொல்லிக் கொள்ளவை என்றாலும் என்னுள்ளே இன்னமும் கனன்று கொண்டிருக்கும் அனலாகவே இருக்கிறது. சரி அந்த விஷயத்தினை விட்டுவிடுவோம்…. சமீபத்தில் முகநூலில் பார்த்த மருத்துவர் நகைச்சுவை துணுக்கு ஒன்று கீழே. ஆனால் சிரிப்பு தான் வரவில்லையோ?
******
இந்த வாரத்தின் எண்ணங்கள் : சிறுவர்களாகவே இருந்துவிட்டால்…
நேற்றைக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். எனக்கு முன்னால் ஒரு ஆட்டோ - அதில் சுமார் பத்து பெண் குழந்தைகள் - பள்ளியிலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருக்கிறார்கள். கடக்கும் வாகனங்கள், சாலையோரம் அமர்ந்திருக்கும் நபர்கள், சிறுவர்கள், பெரியவர்கள் என அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லி மகிழ்வுடன் பயணித்துக் கொண்டிருந்தார்கள். அவர்கள் பயணிக்கும் ஆட்டோ செல்லும் வேகத்தில் வாழ்த்து சொல்லப்பட்டவர்களுக்குக் கேட்டிருக்குமோ கேட்காதோ என்ற கவலை எல்லாம் இல்லை - சத்தமாக சிரித்துக் கொண்டும், வாழ்த்துகளைச் சொல்லிக் கொண்டும் சென்ற அவர்களைப் பார்த்து நானும் புன்னகைத்தபடியே வண்டியை அந்த ஆட்டோவின் பின்னாலேயே செலுத்திக் கொண்டிருந்தேன். நான் சிரிப்பதைப் பார்த்து விட்ட அந்தப் பெண்களில் ஒருவர், எனக்கும் தீபாவளி வாழ்த்துகளைச் சொல்லி புன்னகையைச் சிதறவிட்டார். என்ன ஒரு மகிழ்ச்சி அந்தக் குழந்தைகளிடம் - தீபாவளிக்கு செலவுக்கு என்ன செய்வது போன்ற பெரியவர்களின் கவலை அவர்களிடத்தில் இல்லை. முழுக்க முழுக்க மகிழ்ச்சி தான். அந்தச் சிறு வயதில் பெரிதாகக் கவலைகள் இல்லையே! சாதாரணமான பணியில், மாதத்திற்கு பத்தாயிரம் சம்பளம் வாங்கும் ஒருவர் தீபாவளி செலவுக்கு என்ன செய்யறது என்று கேட்டுக் கொண்டிருந்ததையும் இன்றைக்கு பார்க்க முடிந்தது. இரண்டையும் சேர்த்து யோசிக்கும்போது - குழந்தைகளாகவே இருந்து விட்டால்…. என்ற எண்ணம் வராமல் இல்லை! ஆனால் அப்படி குழந்தைகளாகவே யாராலும் இருக்க முடியாதே!
******
இந்த வாரத்தின் முகநூல் இற்றை - பைத்தியங்கள் :
இந்த வாரம் பார்த்த முகநூல் இற்றை - ஒரு படம் தான்! பைத்தியங்கள் என்று சொல்வது சரியாக இருக்குமா என்று தெரியவில்லை. ஆனால் நிறைய மனிதர்கள் இப்படித்தான் இருக்கிறார்கள். ஒவ்வொரு நாளும் சாலைகளில் நாம் பார்க்கும் மனிதர்கள் விதம் விதமான செயல்களைச் செய்கிறார்கள் - தான் மட்டுமே விரைவாகச் செல்ல வேண்டும் என்று வாகனத்தினை காட்டுத்தனமாக இயக்கும் நபர்கள், சாலையில் செய்யும் வீர தீர பராக்கிரமங்கள், வித்தைகள் என பார்க்கும்போது இந்த இற்றையில் சொல்வது போல பைத்தியங்கள் என்று சொல்வது கூட தவறில்லையோ? உங்கள் கருத்துக்களைச் சொல்லுங்களேன் - பின்னூட்டத்தில்!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
7 நவம்பர் 2026




கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....