விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விளையாட்டு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

சனி, 18 ஏப்ரல், 2026

காஃபி வித் கிட்டு - 235 - மாதொருபாகன் - அசிங்கம் - உமையாள் - Lajai Lagyo - ப்ராப்பர்டி - ஒரு குழந்தையாக - முதல் வார்த்தை


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - மண்டல் கிராமம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

சனி, 17 ஆகஸ்ட், 2024

காஃபி வித் கிட்டு - 198 - ஒலிம்பிக் - ம்யூச்சுவல் ஃபண்ட் - போதையில் மிமிக்ரி - Zangbeto - ஒரு நிமிஷம் - Berrymuch


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அயோத்யா ஜி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



******

வெள்ளி, 29 டிசம்பர், 2017

லாலுவுக்கும் புதிருக்கும் சம்பந்தம் - புகைப்படப் புதிர் – இரண்டு – விடைகள்….



நேற்று காலை நான்கு புகைப்படங்களை வெளியிட்டு அவை பற்றிய கேள்வியைக் கேட்டிருந்தேன். அந்த படங்களில் இருப்பவை என்ன என்பதை இப்போது பார்க்கலாம்!


புதிர் படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

விடை: இந்த இயந்திரத்திற்குப் பெயர் chசாரா குட்டி! வட இந்திய கிராமங்களின் பெரும்பாலான வீடுகளில் இந்த இயந்திரத்தினை பார்க்க முடியும். chசாரா, Bபூசா என அழைக்கப்படும் மாடுகளுக்கு வழங்கும் புல், வைக்கோல் ஆகியவற்றை சிறு சிறு துண்டுகளாக்க இந்த இயந்திரத்தினை பயன்படுத்துவார்கள். புல்/வைக்கோலை அதற்கான இடத்தில் வைத்து, சக்கரத்தினைச் சுற்ற, சிறு சிறு துண்டுகளாக்கும் இந்த இயந்திரம். இப்போதெல்லாம் மின்சார மோட்டார் கொண்டும் இயக்கப்படுகிறது என்றாலும் கொஞ்சம் அபாயமானது – கிராமத்தில் பலருக்கும் கை விரல்கள் வெட்டுப்பட்டிருக்கின்றன! இந்த chசாரா Gகோட்டாலா [Fodder Scam]-ல் தான் லாலு பிரசாத் யாதவ் குற்றம் செய்தவர் என நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது!


புதிர் படம்-2: இது என்ன?



விடை: பார்ப்பதற்கு வழிபாட்டுத் தலம் போல இருந்தாலும், இது அப்படி அல்ல! கிணற்றின் மேலே நான்கு பக்கங்களிலும் இப்படிச் சுவர் எழுப்பி, அதில் நான்கு புறத்திலும் தண்ணீர் எடுத்துக்கொள்ள வழி செய்திருப்பார்கள். முதலில் கொடுத்த படம் தவிர, தண்ணீர் எடுக்க வசதி செய்திருக்கும் படமும் கொடுத்திருக்கின்றேன்.



புதிர் படம்-3: இந்த இடம் என்ன இடம், எங்கே இருக்கிறது. ஒரு Clue – முன்னரே இப்படம் எனது பதிவில் வந்திருக்கலாம்!

விடை: கோனார்க் என சிலர் பதில் சொல்லி இருந்தாலும் இது கோனார்க் அல்ல! ஆனால், இதுவும் சூரியனார் கோவில் தான்! குஜராத் மாநிலத்தில் உள்ள Modhera எனும் இடத்தில் உள்ள சூரியனார் கோவில் இது. முன்பு பிரம்மாண்டமாக இருந்திருந்தாலும், இப்போது இருப்பது இவ்வளவு தான்! இந்த இடம் பற்றி விரைவில் எழுதுகிறேன்.



படம்-4: இந்த முதியவரின் பக்கத்தில் ஒரு கருவி இருக்கிறது... அது என்ன கருவி!

விடை: இந்த மாதிரி கருவியை நம் ஊரில் நிச்சயம் பார்த்திருக்க முடியாது! இந்த கருவியின் பெயர் DHதூனி. இயக்குபவர் DHதூனியா! வட மாநிலங்களில் குளிர் அதிகம் என்பதால் ரஜாய் பயன்படுத்துவது வழக்கம். ரஜாயில் இருக்கும் பஞ்சை சுத்தம் செய்ய, மீண்டும் பயன்படுத்தத் தகுந்த வகையில் ஆக்குவதற்கு இந்தக் கருவி பயன்படுகிறது! குளிர் காலங்களில் இக்கருவியைச் சுமந்து கொண்டு வருவார்கள். இந்தக் கருவியில் இருக்கும் String-ஐ மீட்ட வித்தியாசமான ஒரு இசை வெளியாகும்! அந்த String எதிலிருந்து செய்கிறார்கள் என சமீபத்தில் கேள்விப்பட்டேன் – அது ஆட்டுக் குடலிலிருந்து செய்யப்படுகிறது என்பது தான் அந்த விஷயம்! கருவியை எப்படி இயக்குவார்கள் என பார்க்க விரும்பினால் இங்கே பார்க்கலாம்!


புகைப்படங்களைப் பார்த்து புதிர்களுக்கு விடை சொல்ல முயற்சித்த அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றியும் வாழ்த்துகளும்.

முடிந்த போது வேறு சில புகைப்படங்களுடன் வருவேன் – உங்களுக்கும் விருப்பமிருந்தால்!

மீண்டும் ச[சி]ந்திப்போம்...

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.


வியாழன், 28 டிசம்பர், 2017

புகைப்படப் புதிர் – இரண்டு – கண்டுபிடிங்க பார்க்கலாம்….


சில நாட்களுக்கு முன்னர் ”படமும்புதிரும் – எங்கள் பிளாக்குப் போட்டியா?” என்ற தலைப்பில் ஐந்து படங்களைத் தந்து அவை பற்றி கேள்விகள் கேட்டிருந்தேன். பங்கு கொண்ட நண்பர்கள் அனைவருக்கும் மனம் நிறைந்த நன்றி. இப்போது மீண்டும் ஒரு புகைப்படப் புதிர்! இந்த முறை நான்கு படங்கள்.



படம்-1:  இது ஒரு இயந்திரம். என்ன இயந்திரம் என்று சொல்ல முடியுமா?

செவ்வாய், 26 டிசம்பர், 2017

மீண்டும் குழந்தைகளாவோம் – பிரதாப்கட்[ர்], ஹர்யானா…





மீண்டும் குழந்தைகளாவோம்....


மீண்டும் குழந்தைகளாவோம்....

தலைநகர் வாழ்க்கை கொஞ்சம் சவாலான விஷயம். பெரும்பாலான நேரம் போக்குவரத்தில் மாட்டிக்கொண்டு வீட்டிலிருந்து அலுவலகம் சென்று சேரவும், அலுவலகத்திலிருந்து வீடு சேரவும் நான்கு மணி நேரத்திற்கும் மேலாகும். எனக்கு அந்தப் பிரச்சனை இல்லை என்றாலும் – அலுவலகம் மூன்று கிலோமீட்டர் தூரம் தான் – நேரடி பேருந்து இல்லை! பெரும்பாலான நாட்களில், நடை, பேருந்து, நடை என இருக்குமென்பதால் 15 நிமிடம் முதல் 25 நிமிடம் வரை ஆகிவிடுகிறது. வீடு, சமையல், அலுவலகம், வீடு திரும்பி மீண்டும் சமையல், மற்ற வேலைகள், தூக்கம் என Routine and Boring Schedule இந்த தலைநகர வாழ்க்கை.

திங்கள், 20 நவம்பர், 2017

எழில் கொஞ்சும் கிரிக்கெட் ஸ்டேடியம் - தரம்ஷாலா


இரண்டாம் தலைநகரம் – பயணத் தொடர் – பகுதி 10

முந்தைய பகுதிகளை படிக்காதவர்கள் வசதிக்காக - பகுதி-1 2 3 4 5 6 7 8  9


பின்புலத்தில் பனிச்சிகரங்களும் அழகிய கிரிக்கெட் விளையாட்டு அரங்கும்...

நெய்வேலியில் பள்ளியில் படித்துக் கொண்டிருந்தபோது வீட்டில் தொலைக்காட்சி பெட்டி கிடையாது. ரேடியோ – அதுவும் வால்வு ரேடியோ மட்டும் தான். அதில் தான் பாடல்கள், நாடகங்கள், திரைப்படங்களின் வசனங்களை ஒலி பரப்புவார்கள். கிரிக்கெட் போட்டிகள் என்றால் ஹிந்தியிலும், ஆங்கிலத்திலும் Running Commentary கேட்பதுண்டு. சென்னையில் போட்டிகள் நடக்கும் போது மட்டும் தமிழில் ஒலிபரப்புவார்கள். அப்படி தெரிந்து கொண்டது தான் கிரிக்கெட் விளையாட்டு. வெளியே சென்று விளையாடியது கிடையாது. பள்ளியில் Hand Cricket என வகுப்புக்குள்ளேயே விளையாடி இருக்கிறோம்.

திங்கள், 21 மார்ச், 2016

மேரி கோம் – மணிப்பூர் விளையாட்டு அரங்கில்

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 6

சென்ற பகுதியில் மணிப்பூர் நகரில் இருக்கும் வைஷ்ணவர்களின் மிக முக்கிய வழிபாட்டுத் தலம் ஸ்ரீ ஸ்ரீ கோவிந்தாஜி கோவில் மற்றும் ISKCON நிர்வகித்து வரும் ஸ்ரீ ஸ்ரீ ராதா கிருஷ்ணசந்த்ரா கோவில் ஆகிய இரண்டு வழிபாட்டுத் தலங்கள் பற்றி பார்த்தோம்.  அதன் பிறகு தேநீர் அருந்தி விட்டு நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது நகரில் அமைந்திருக்கும் ஒரு விளையாட்டு அரங்கம் நோக்கி தான்.


படம்: இணையத்திலிருந்து.....

மேரி கோம் – இவரை அறியாதவர் யார்? குத்துச் சண்டை விளையாட்டு வீரரான இவர்   மணிப்பூரைச் சேர்ந்தவர் தான். மணிப்பூர் நகரில் கால்பந்து தான் முக்கியமான இக்கால விளையாட்டாக இருந்து வந்திருக்கிறது. மேரி கோம் ஒலிம்பிக் போட்டிகளிலும் மற்ற பன்னாட்டுப் போட்டிகளிலும் கலந்து கொண்டு பரிசுகளையும், பதக்கங்களையும் பெற்ற பிறகு எங்கே பார்த்தாலும் மேரி கோம் படங்களையும் அவரின் புகழையும் பார்க்க முடிந்தது. 

மேரி கோம் – மணிப்பூரின் ஒரு சாதாரண கிராமத்தில் “கோம்” எனும் பழங்குடியில் பிறந்தவர்.  மிகவும் ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தவர் – பத்தாவது வகுப்பினைக் கூட முடிக்காதவர் – குத்துச் சண்டை விளையாட்டில் பயிற்சி பெற்று முன்னேற வேண்டும் என்ற வெறியில் படிப்பை விட்டவர் – பெண்களுக்கான விளையாட்டே இல்லை என்று அவர் பெற்றோர்களும் மற்றவர்களும் தடுத்தாலும் விடாது குத்துச் சண்டையில் பயிற்சி பெற்றவர்.  மணிப்பூரில் நடைபெற்ற ஒரு குத்துச் சண்டையில் பங்குகொண்டு முதன் முறையாக பரிசு பெற்று அந்த செய்தி நாளிதழில் வந்தபோது அவரது தந்தை மிகக் கடுமையாக கடிந்து கொண்டாராம். 


படம்: இணையத்திலிருந்து.....


என்றாலும் விடாது பயிற்சி பெற்று பல பதங்கங்களையும், கோப்பைகளையும் வென்றவர் – பத்தாவது படிப்பை நிறுத்திய பின்னர் போட்டிகளில் பங்கு கொண்ட பிறகு மீண்டும் தனிப்பட்ட முறையில் படிக்க ஆரம்பித்து பட்டம் பெற்றார்.  இந்திய அரசு அளிக்கும் அர்ஜுனா விருது, பத்ம பூஷன், பத்ம ஸ்ரீ போன்ற பல பட்டங்களையும் வென்றார்.  மணிப்பூர் முழுவதும் எங்கே சென்றாலும் மேரி கோம் படங்களையோ, அவர் பற்றிய பதாகைகளையோ பார்க்க முடிந்தது.


படம்: இணையத்திலிருந்து.....


Magnificient Mary என்று மணிப்பூர் மக்களால் அழைக்கப்படும் மேரி கோம் தனது மாநிலத்தில் குத்துச் சண்டை பயிற்சி தருவதற்காகவே ஒரு பயிற்சி நிலையம் அமைத்து பலருக்கும் குத்துச் சண்டை பயிற்சி அளித்து வருகிறார்.  அவரது முழுப் பெயர் மாங்தே சுங்நேய்ஜங் மேரி கோம் என்பதாகும். எங்களது வாகன ஓட்டி ஷரத் அவர்களுக்கு தங்கள் மாநிலத்தின் பெருமையான மேரி கோம் பற்றி சொல்லும்போதே அத்தனை மகிழ்ச்சியும் குதூகலமும் அவருக்கு. ஷரத் தனது மகளையும் குத்துச் சண்டை பயிற்சி நிலையத்திற்கு பயிற்சிக்கு அனுப்புவதாகவும் சொல்லி அவருடைய மகிழ்ச்சியை பகிர்ந்து கொண்டார்.

எங்களது குழுவில் இருந்த சில நண்பர்களுக்கும் குத்துச் சண்டை மிகவும் பிடித்தமான விளையாட்டு என்று சொல்ல உடனேயே மேரி கோம் பிறந்த ஊரைச் சென்று பார்க்கலாமா என்று கேட்டார் ஷரத்.  இன்றைக்கு நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று அவரே சொல்லி விட்டு, அதற்கு பதிலாக இம்ஃபால் நகரில் இருக்கும் முக்கிய விளையாட்டு அரங்கமான குமான் லம்பக் விளையாட்டு அரங்கத்திற்கு எங்களை அழைத்துச் சென்றார்.

பல மணிப்பூர் இளைஞர்களும் இளைஞிகளும் அங்கே கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு இருந்தார்கள்.  ஓட்டமும் பயிற்சிகளும் எங்களையும் அப்பக்கம் கொஞ்சம் இழுத்தது. மாலை நேரம் என்பதால் நாங்களும் அரங்கத்தினை ஒரு சுற்றாவது ஓடி வரலாம் என முடிவு செய்தோம். ஓடியும் வந்தோம்! இரண்டு சுற்று ஓடி வர, எங்களில் நால்வருக்கு மூச்சு வாங்கியது! உடற்பயிற்சி செய்யாமல் அலுவலகம் வீடு என இருப்பவர்களுக்கு கொஞ்சம் கஷ்டம் தான்!

அங்கே இருந்த சில இளைஞர்களிடம் பேசி அவர்களது பிடித்தமான விளையாட்டு பற்றியும் கேட்டு அவர்களோடு சில மகிழ்வான நிமிடங்களைக் கழித்தோம். எங்களுடன் வந்திருந்த ஓட்டுனர் ஷரத்திற்கும் மிக்க மகிழ்ச்சி. அங்கே இருந்து புறப்பட்டு நாங்கள் தங்கியிருந்த Hotel Bheigo விற்கு வந்து சேர்ந்தோம்.  காலையில் எங்களது இருப்பிடங்களிலிருந்து புறப்பட்டது. தொடர்ந்து பயணித்துக் கொண்டே இருப்பதால் சற்றே ஓய்வெடுத்து விட்டு இரவு உணவு தேட வேண்டும்.  ஓட்டுனர் ஷரத்   நாங்கள் தங்குமிடத்திலேயே வட இந்திய உணவும் கிடைக்கும் எனச் சொல்லி புறப்பட்டார்.

நாளை காலை விரைவில் வரச் சொல்லி அவருக்கு விடை கொடுத்தோம்!  சற்று நேரம் ஓய்வெடுத்து அதன் பிறகு உணவகத்திற்குச் சென்றோம். நானும் நண்பர் பிரமோத்-உம் ஒரு அறையில் தங்க, சுரேஷ், சசி மற்றும்  நாசர் ஆகிய மூவரும் மற்ற அறையில் தங்கினார்கள்.  இங்கே இரண்டு விஷயங்களைச் சொல்ல வேண்டும் – முதல் விஷயம் முதல் பகுதியில் சொன்னது போல என்னைத் தவிர மற்ற நான்கு நண்பர்களும் அசைவ உணவு சாப்பிடுபவர்கள். நான் சாப்பிடுவதில்லை என்றாலும் மற்றவர்கள் என்னுடன் அமர்ந்து சாப்பிட்டால் எனக்கு பிரச்சனை இல்லை!

இரண்டாம் விஷயம் – என்னையும் நண்பர் பிரமோத்-ஐயும் தவிர்த்த மற்ற மூவரும் இப்படி பயணிக்கும் போது ஒன்றிரண்டு கோப்பை மதுபானம் அருந்துவது வழக்கம் என்பதையும் தெரிந்து கொண்டேன். அந்தப் பழக்கம் எப்படி எல்லாம் தொடரப் போகிறது என்பதை போகப் போகச் சொல்கிறேன்!  இப்போதைக்கு இரவு உணவு பற்றிய விஷயத்திற்கு வருவோம்.

உணவகத்திற்கு சென்று என்ன இருக்கிறது எனக் கேட்க, வரிசையாக அசைவ உணவுகளாகவே சொல்லிக் கொண்டிருந்தார் அங்கே இருந்த சிப்பந்தி. கடைசியாக போனால் போகிறது என ஆலு மட்டர் [உருளைக்கிழங்கும் பட்டாணியும்], ஆலு கோபி [உருளைக்கிழங்கும் காலிஃப்ளவரும்] இருக்கிறது எனச் சொன்னார்.  நாங்கள் சப்பாத்தி, ஆலு கோபி, ஆலு மட்டர், சிக்கன் ஜிஞ்சர், எக் ஃப்ரைட் ரைஸ், ப்ளைன் ரைஸ், சப்பாத்தி என எங்கள் தேவையைச் சொல்லி காத்திருந்தோம்….

”காத்திருந்து காத்திருந்து காலங்கள் போகுதடி!” என்று பாடாத குறை தான். கிட்டத்தட்ட அரை மணி நேரத்திற்குப் பிறகு தான் நாங்கள் சொன்ன உணவு வந்தது! அதற்குள் பசி எங்களைத் தின்றிருந்தது! எதிர் புறத்தில் அமர்ந்திருந்த மூன்று நண்பர்கள் அருந்தியிருந்த சுரா பானம் அதன் வேலையைக் காட்டத் துவங்கி இருந்தது! சிரிப்பும் பேச்சுமாக அவர்கள் தங்கள் பராக்கிரமங்களைச் சொல்லியபடியே உணவு உண்ண நானும் என்னுடைய பங்குக்கு சைவ உணவைச் சாப்பிட்டு முடித்தேன்!

பொதுவாக இரவு நேரம் உணவு சாப்பிட்ட பிறகு அப்படியே கொஞ்சம் நடப்பது வழக்கம்.  என்றாலும் அன்றைக்கு ஏனோ நடக்கத் தோன்றவில்லை.  அனைவரும் தங்குமிடத்திற்குத் திரும்பி உறக்கத்தைத் தழுவினோம் - நாளைய நாள் எங்களுக்குத் தரப் போகும் அனுபவங்களை மனதில் நினைத்தபடியே…..

இந்த பயணத்தில் முதல் நாள் நாங்கள் பார்த்த இடங்கள், கிடைத்த அனுபவங்கள் இப்பகுதியோடு முடிந்தன! அடுத்த பகுதியிலிருந்து இரண்டாம் நாள் அனுபவங்கள்! படிக்கத் தயாராக இருங்கள்…. நான் சற்றே உறங்கி விட்டு வருகிறேன்!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.



புதன், 31 அக்டோபர், 2012

கார்கில் டு கன்யாகுமரி




இந்த ஆண்டின் தொடக்கத்தில் ஓடு கண்ணா ஓடு என்ற தலைப்பில் எனது நண்பர் திரு அருண் பரத்வாஜ் பற்றி நான் எழுதிய பகிர்வு உங்களுக்கெல்லாம் நினைவில் இருக்கலாம்.  இல்லையெனில் இங்கே கிளிக்கிடுங்கள்.  இப்போது மீண்டும் அவரைப் பற்றிய ஒரு செய்தியோடு உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சி.

கார்கில் என்றதும் நம் எல்லோருக்கும் நினைவுக்கு வருவது கார்கில் போரும், அதில் உயிரிழந்த சக மனிதர்களும். கூடவே அங்குள்ள பனி படர்ந்த மலைகளும் தான்.  கடல் மட்டத்திலிருந்து சுமார் 2676 மீட்டர் உயரத்தில் இருக்கும் கார்கிலிலிருந்து இந்தியாவின்  தென்கோடியில் இருக்கும் கன்யாகுமரி வரையுள்ள தூரம் சற்றேறக்குறைய 4000 கிலோ மீட்டர். 

ஒரு வாகனம் மூலம் சாலை வழிப் பயணம் செய்தால் சுமார் மூன்று அல்லது நான்கு நாட்களில் இந்த்த் தொலைவினை நீங்கள் கடக்க முடியும்.  ரயில் மூலம் என்றால் ஜம்மு வரை சாலை வழி வந்து அங்கிருந்து ரயில் மூலம் சென்னை வழியாக கன்யாகுமரி வந்தடையலாம்.  அதுவே உங்களை மொத்த தூரத்தினையும் ஓடிக் கடக்கச் சொன்னால் உங்களது பதில் நிச்சயம் வேற வேலை இல்லை?’ என்பதாகவோ,என்னால முடியாதுப்பா’ என்றோ இருக்கலாம். 



கொல்கத்தாவினைச் சேர்ந்த திரு ஆதிராஜ் சிங், இதே கேள்வியை நண்பர் அருண் பரத்வாஜ் அவர்களிடம் கேட்டபோது, உடனே, சற்றேனும் யோசிக்காது, சரி என்று சொல்லி விட்டார். ஜம்மு காஷ்மீர் சாலை ஒன்றில் இருந்த ஒரு விளம்பரப் பலகையில்கார்கிலிலிருந்து கன்யாகுமரி வரை ஒரே இந்தியா” என்று எழுதியதைப் பார்த்தவுடன் இந்த ஓட்ட்த்திற்கான வித்து தோன்றியது.  விளம்பரதாரர்கள், ஏற்பாடுகள் எல்லாம் செய்து முடித்து, இந்த அக்டோபர் மாதத்தின் முதல் தேதியில் கார்கிலிலிருந்து ஓட ஆரம்பித்து விட்டார் அருண். 

நடுங்க வைக்கும் குளிர் பிரதேசமான கார்கிலில் பிராண வாயு பற்றாக்குறை, நடுங்கும் குளிர் என்ற பிரச்சனைகள் இருந்தாலும், அக்டோபர் மாதம் முதல் தேதியில் தனது ஓட்டத்தினை ஆரம்பித்த அருண், லே-லடாக் போன்ற பகுதிகளைக் கடந்து, கடந்த திங்கள் கிழமை [22.10.2012] அன்று தில்லி வந்து சேர்ந்தார். 

திங்கள் அன்று மதியம் இந்தியா கேட் பகுதியில் அவரைச் சந்தித்துப் பேசியபோது அறுபது நாட்களுக்குள் நிச்சயம் கன்யாகுமரியைச் சென்றடைந்து விடுவேன் என்று நம்பிக்கையோடு கூறினார்.  பயணத்தின் போது இவருக்குத் துணையாக வரும் வாகனங்களில் ஒன்று உறைந்து போன தண்ணீரால் பழுதாகிவிட, “எதுவும் அருணின் முயற்சியைத் தோற்கடிக்கக் கூடாது” என்று தொடர்ந்து சென்றிருக்கிறார்கள்.  நிறைய தண்ணீர் குடித்தபடியே பயணத்தினைத் தொடர்ந்து கொண்டிருக்கிறார் அருண்.

உயரங்களில் தினம் ஒன்றுக்கு 50 கிலோ மீட்டரே ஓட முடிந்திருக்கிறது.  ஆனால் ஞாயிறு அன்று ஒரே நாளில் 83 கிலோ மீட்டர் ஓடி சாதனை புரிந்திருக்கிறார்.  தினமும் வீட்டினருகே இருக்கும் பூங்காவில் மூன்று நான்கு சுற்று சுற்றுவதற்கே மூச்சிரைக்கும் என் போன்றவர்களுக்கு இடையில் இப்படியும் ஒரு சாதனை மனிதர்.

இவரைப் பார்த்து ஏளனம் செய்யும் மனிதர்களுக்கு, ‘என் குழந்தைகளுக்கு நல்லதொரு மாதிரியாக இருக்கிறேன்’ அது போதும் என்கிறார். இது வரை பல குழந்தைகளை ஓட்டப் பந்தயங்களில் ஓட பயிற்சி செய்யச் சொல்லி உற்சாகம் தந்திருக்கிறார்.  இந்தப் பயணத்தின் போது சந்தித்த பல குழந்தைகளுக்கு ஓட்டத்தின் முக்கியத்துவம் பற்றி விளக்கி வந்ததாகச் சொல்லும் இவருக்கு ஒரு வருத்தமும் இருக்கிறது.  ஓடுவதையே ஒரு கேரியராகச் செய்ய இந்தியாவில் வழியில்லை போதிய ஸ்பான்ஸர்ஸ் கிடைப்பதில்லை என்றும், வாழ்க்கை ஓடுவதற்கு, ஓடுவதைத் தவிர பணி செய்வதும் அவசியம் என்று சொல்கிறார், இந்தியாவின் திட்டக் கமிஷனில் பணி புரியும் அருண் பரத்வாஜ்.

பாராட்டுக்குரிய இந்த நண்பர், தனது 43-வது வயதில் இன்னமும் இளமையாக இருப்பதற்குக் காரணமே தனது 31- வயதில் ஆரம்பித்த இந்த ஓட்டம் தான் எனச் சொல்கிறார்.  சிறு வயதில் புற்று நோய் வந்து பத்திற்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சைப் பெற்ற இவரை பாராட்டுவோம். 

நவம்பர் மாத இறுதியில் கன்யாகுமரி வந்தடையும் இவரை நமது தமிழக மக்களின் சார்பில் வாழ்த்துவோம்.

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 7 செப்டம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 11 – ஒலிம்பிக் வெள்ளி – கல்யாண கவிதை



சென்ற மாதம் லண்டனில் நடந்த ஒலிம்பிக்ஸ்-ல் இந்தியா ஆறு பதக்கங்கள் வென்றது.  ஊடகங்களிலும் செய்தித் தாள்களிலும் இந்தப் போட்டிகள் பற்றி நிறைய செய்திகள் வந்த வண்ணமே இருந்தது.  பதக்கங்கள் வென்று திரும்பிய விளையாட்டு வீரர்களுக்கு, பல முதலமைச்சர்கள், அரசியல்வாதிகள், நிறுவனங்கள் போட்டிபோட்டுக்கொண்டு பணமும், பொருளும் கொடுத்துக் கொண்டிருக்கிறார்கள்.  ஆனால் நான் இங்கே சொல்லப்போவது அதைப் பற்றி அல்ல.



இந்த மாதம் ஒன்பதாம் தேதி முடிவடையும் மாற்றுத்திறனாளிகளுக்கான ஒலிம்பிக் போட்டியில் இந்தியாவிலிருந்து 10 வீரர்கள் போட்டியிடுகின்றனர்.  இதில் கடந்த செவ்வாய் அன்று உயரம் தாண்டுதல் போட்டியில்  1.74 மீட்டர் அளவு தாண்டி இந்தியாவிற்கு வெள்ளிப் பதக்கத்தினை தந்திருக்கிறார், 24 வயதான கிரிஷா ஹோசனகரா நாகராஜேகவுடா என்னும் கர்நாடகத்தினைச் சேர்ந்த இளைஞர்.

இடது காலில் பிரச்சனையுள்ள திரு கவுடாவும் தங்கப் பதக்கம் வென்ற நபரும் ஒரே அளவு உயரத்தினைத் தாண்டியிருந்தாலும், குறைவான முயற்சிகளில் வென்றதற்காக தங்கம் மற்றவருக்குச் சென்று விட்டது.  இந்த இளைஞர் பதக்கம் வென்றது பற்றி பல நாளிதழ்களில் வெறும் பெட்டிச் செய்தியே வந்தது.  சென்ற மாதம் நடந்த ஒலிம்பிக் போட்டிகளில் பதக்கம் வென்றவர்களுக்கு கோடியில் பண மழை பொழிந்து கொண்டிருக்க, இவருக்கு லட்சங்களில் பணம் கொடுக்கக் கூட யோசிக்கிறார்கள். 

மேலும் இந்த ஒலிம்பிக் போட்டிகளைக் காரணம் காட்டி அலுவலகர்கள் தன்னுடைய சொந்தங்களையே லண்டனுக்கு அழைத்துச் சென்றிருக்கிறார்கள்.  10 மாற்றுத்திறனாளிகளை கவனித்துக் கொள்ள இரண்டே இரண்டு உதவியாளர்கள்! 

என்னேரமும் கிரிக்கெட்டையே கட்டி அழும் நிறுவனங்களும் கவுடா போன்றவர்களுக்கு உதவி செய்யலாமே!  மேலும் மக்களும் இவர்கள் போன்றவர்களையும் பாராட்டலாம் இல்லையா.  ”என்று நடக்கும் இதெல்லாம்?” என்ற ஆதங்கம் தான் மிஞ்சுகிறது.


இன்று செப்டம்பர்  7. இதே நாள், 1986-ஆம் வருடம் தெற்கு ஆப்பிரிக்காவின் கேப்டவுன் நகரத்தின் ஆர்ச் பிஷப் பதவியை திரு தேஷ்மாண்ட் டுடு பெற்றார். தனது இன மக்களை ஒதுக்கி வைத்ததற்கு எதிராய் அமைதியான முறையில் போராடியதற்கு, நோபல் பரிசு பெற்றவர் இந்த தேஷ்மாண்ட் டுடு.



இவர் எனது நினைவில் இன்றுவரை நிற்பதற்கு வேறொரு காரணமும் உண்டு!!.  எங்கள் கல்லூரியில் முதலாமாண்டு சேரும்போது ஒரு பெண்ணும் சேர்ந்தார் – சில நாட்களிலிலேயே வேறொரு கல்லூரியில் இடம் கிடைத்ததால் கல்லூரியை விட்டு விலகிச் சென்றார் – அந்தப் பெண்ணுக்கு நாங்கள் வைத்த பெயர் – தேஷ்மாண்ட் டுடு…  :)







Forget your own sadness by creating a little happiness for others.  Because when you are good to others, you are best to yourself.



”திருமணங்கள்
சொர்க்கத்தில்
நிச்சயிக்கப்படுகின்றனவாம்
அப்படியானால்
என் கண்ணே
நம் திருமணம் மட்டும்
ஏன்
செட்டிப்பாளையத்தில்
நிச்சயிக்கப்பட்டது?”

இக்கவிதையை எழுதியது சக்திகனல்.  படித்தது கணையாழியின் கடைசிப் பக்கங்கள் புத்தகத்தில்…

அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-உடன் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி. 

திங்கள், 30 ஜனவரி, 2012

ஓடு கண்ணா ஓடு...


தலைப்பைப் பார்த்தவுடன் படிக்காம ஓடிடாதீங்க மக்களே நிச்சயம் நல்ல விஷயம் உங்களுக்குக் கிடைக்கும். முழுதும் படிங்க!

ஒரு மாத காலம் பயிற்சி எனவும் அதில் ஐயா ரொம்ப கவனம் செலுத்துவதாகவும் கொஞ்சம் அதிகமாகவே முன்பு கொட்டியது உங்களுக்கு நினைவிருக்கும்இந்தப் பயிற்சியில் என்னுடன் பயின்ற மாணவர் மிகவும் பிரபலமான ஒருவர்ஓடியே சாதித்தவர்.   அவரைப் பற்றிய பகிர்வு தான் இது.


நம்மில் யாரையாவது ஓடச் சொன்னால் ஒரு நாளில் எத்தனை கிலோ மீட்டர் தூரம் ஓட முடியும்அதிகபட்சம் 2 முதல் 5 கி.மீ ஓடுவோமா? திரு அருண் பரத்வாஜ்ஒவ்வொரு நாளும் ஒரு நெடுந்தொலை ஓட்டம் [மாரத்தான்] அதாவது 42.195 கி.மீ சர்வ சாதாரணமாக ஓடிவிடுவார். இந்தியாவின் திட்டக் கமிஷனில் [Planning Commission] வேலை செய்யும் அருண், 41-வயது இளைஞர்.

மூன்று குழந்தைகளுக்குத் தகப்பன்மூன்றாவது குழந்தை பிறந்த பிறகு, அதாவது அவரது முப்பதாவது வயதில். தான் மாரத்தான் ஓட்டம் ஓட ஆரம்பித்தது, தனது பெண் குழந்தைக்கு ஒரு நல்ல உதாரணமாக இருக்க வேண்டும் என்ற எண்ணத்தினால் என்று சொல்கிறார்.   அதற்கு முன்னர், சதுரங்கம், பளுதூக்குதல் என்று முயன்று பிறகுதான் ஓட்டத்தில் மனதையும் காலையும் பதித்து இருக்கிறார்அதை சோதித்துப் பார்க்க, ஹரித்வார் நகரிலிருந்துபா[B]க்பத் நகருக்கு ஒரே நாளில், அதாவது 24 மணி நேரத்தில், ஓடியே செல்வது என முடிவு செய்திருக்கிறார்.

ஹரித்வார்-பா[B]க்பத் இடையே இருக்கும் 180 கி.மீ தொலைவினை 23 மணி 25 நிமிடங்களில் கடந்து முடித்த அருண் அவர்கள் தனது வாழ்க்கையின் முக்கிய குறிக்கோளாக மாரத்தான் ஓட்டத்தினை தேர்ந்து எடுத்த பின் திரும்பிப் பார்க்கவே இல்லைபயிற்சி..பயிற்சி.. மேலும் கடினமான பயிற்சிதான்.

மாரத்தான் ஓட்டம் என்பதே கடினம் என நினைக்கும் பலர் உண்டு. ஆனால் அருண் அப்படி இல்லை.  Ultra Marathon என்று சொல்லப்படும் ஓட்டம் அதைவிட அதிக தூரத்தினை தொடர்ந்து ஓடும், அதாவது சில நாட்கள் வரை தொடர்ந்து ஓடி கடக்கும் தூரங்கள் இதில் உண்டு. இந்தியாவின் ஒரே Ultramarathon ஓடுபவர் அருண் தான்பயிற்சியாக தினம் தினம் 40 கி.மீ தூரத்தினை சர்வசாதாரணமாக ஓடிக்கொண்டிருக்கிறார்.

இவரது விடாமுயற்சியை நிச்சயம் பாராட்டியே தீர இன்னும் ஒரு காரணமும் இருக்கிறதுபடிக்கும் காலத்தில் அதாவது 8-ஆவது முதல் 10-ஆவது படிக்கும்வரை கழுத்தில் புற்று கட்டி வந்து அதற்காக அறுவை சிகிச்சை செய்து கொண்டு இப்போது முற்றிலும் குணம் பெற்றுவிட்டவர் தொடர்ந்து ஓடிக்கொண்டு, இந்தியாவிற்கு பல நெடுந்தொலை ஓட்டப்போட்டிகளில் பெருமை சேர்த்துக் கொண்டு வருகிறார்.

இதுவரை பல நாடுகளில் நடந்த Ultramarathon ஓட்டப் போட்டிகளில் கலந்து கொண்டுடிருக்கிறார்ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்று சொல்வது போல ஒரு உதாரணம் மட்டும் சொல்ல விழைகிறேன்.



Badwater Ultramarathon உலகத்தின் மிகக் கடினமான ஓட்டம். கடக்க வேண்டிய மொத்த தூரம் 217 கி.மீகடல்மட்டத்திலிருந்து 282 அடி கீழே இருக்கும் Badwater Basin [கலிஃபோர்னியா] என்ற இடத்திலிருந்து கடல் மட்டத்திலிருந்து 8360 அடி மேலிருக்கும் Whitney Portal [கடினம் தானே அதுவும் கடினமான வெயில் 49 டிகிரி இருக்கும் இடத்தில் இருந்து 10 டிகிரி குளிர் பிரதேசம் வரை] என்ற இடம் வரை ஓட வேண்டிய இந்த ஓட்டத்தில் சென்ற வருடம் 41 மணி 6 நிமிடத்தில் வெற்றிகரமாக ஓடி முடித்திருக்கிறார்அவரது இந்த ஓட்டம் பற்றிய டைரிக்குறிப்பு  இங்கே படிக்கலாம்.


அருண் அவர்களிடம் இந்த ஒரு மாதப் பயிற்சி காலத்தில் பேசிக்கொண்டிருந்தபோது அவரது விடாமுயற்சியும் தன்னம்பிக்கையும் என்னை பிரமிக்கச் செய்ததுஅவரது உணவு முறைகளைப் பற்றிக் கேட்ட போது இன்னும் ஒரு விஷயத்தினையும் சொன்னார்அது அவர் ஒரு சைவ உணவு உண்பவர் என்பதுவெளி நாடுகளுக்கு  செல்லும்போது அங்கு கிடைக்கும் அசைவ உணவுகளை சாப்பிடாமல் அரிசி, பீன்ஸ், காய்கறிகள், பழங்கள் எனத் தேடித் தேடி சாப்பிடுவாராம்.

நிச்சயம் இந்தக் கட்டுரை படித்தபின் நம்மில் சிலருக்காவது, அடுத்த தெருவில் இருக்கும் கடைக்குச் செல்வதானால் கூட, வண்டியை நாடுவது குறைந்தால், நிச்சயம் மகிழ்ச்சி தான்.

நான் கூட இனி தினமும் கொஞ்சம் ஓட ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்நீங்க என்ன சொல்றீங்க? அட இருங்க நானும் வர்ரேன் ஓட என்கிறீர்களா?

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

டிஸ்கி: ஒரு மாத பயிற்சி வெற்றிகரமாக முடிந்தது. இப்போது திரும்பவும் அலுவலகம் செல்லப் போவதை  நினைத்தால் சற்று   வருத்தம் தான். பதிவுகள் பொருத்தவரை இனித் தொடர்ந்து வரும் என்று மகிழ்வுடன் சொல்லிக்கறேன் மக்களே :)