அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட கமான்! அப்புசாமி! கமான்! - பாக்கியம் ராமசாமி பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
*******
பனிப்பொழிவு அதிகமிருந்த பாதைகளில் பயணித்து நாங்கள் மண்டல் கிராமத்திற்கு வந்து சேர்ந்தோம். அப்போதே மதியம் ஆகியிருந்தது. காலையில் சாப்பிட்ட பராட்டா பசியை அடக்கி வைத்திருந்தது என்பதால் மதிய உணவு குறித்த சிந்தனைகள் இல்லை. மண்டல் கிராமத்தில் முடிந்த வரை வாகனத்தில் சென்று அங்கே வாகனத்தினை நிறுத்தி விட்டு, Walking Stick கையில் எடுத்துக் கொண்டதோடு, கொஞ்சம் நொறுக்குத் தீனி, தண்ணீர் பாட்டில்கள் போன்ற தேவையானவற்றை சிறு கைப்பைகளில் வைத்துக் கொண்டு நடக்கத் தயாரானோம். எங்கள் வண்டியை நிறுத்திய இடத்தில் இருந்த பதாகை பறவை ப்ரியர்களுக்கு இந்த இடம் ஒரு சொர்க்கபூமி என்ற தகவலையும் அங்கே கிடைக்கும் வழிகாட்டிகள் குறித்த தகவல்களையும் சொன்னது. மண்டல் கிராமத்திலிருந்து நாங்கள் சென்று சேர வேண்டிய இடம் - அதுவும் நடந்து சென்று சேர வேண்டிய இடம் ஐந்தரை கிலோ மீட்டர். அதன் பிறகு மீண்டும் ஐந்தரை கிலோ மீட்டர் நடந்து திரும்ப வேண்டும். நாங்கள் சென்ற இடத்தில் தங்குவதற்கு வாய்ப்பு இல்லை. அதனால் அந்த நாளில் நடையும் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும் என்பதை முன்கூட்டியே நண்பர் Bபிஷ்ட் சொல்லி இருந்தார். எங்கள் குழுவில் நண்பர் Bபிஷ்ட் மட்டுமே இந்த இடத்திற்கு நிறைய முறை வந்திருக்கிறார். மற்ற மூவருக்குமே இந்த இடத்திற்கு வருவது முதல் முறை என்பதால் இயற்கை எழிலை ரசித்ததோடு நிறையவே தகவல்கள் தெரிந்து கொள்ள ஏதுவாக இந்தப் பயணம் இருக்கப் போகிறது என்று மகிழ்வுடன் நடக்க ஆரம்பித்தோம்.
இரண்டு புறமும் விதம் விதமான மரங்கள், செடிகள், மலைச் சிகரங்கள், நடுவே ஓடும் ஓடை, பறவைகளின் ஒலி, இலைகளின் சலசலப்பு, தண்ணீர் ஓடும் சப்தம் என அத்தனை இதமான சூழல். அந்தப் பயணம் எங்களுக்கானதாக மட்டுமே இருக்கப் போகிறது என்பதும் கூடுதல் மகிழ்வைத் தந்தது. ஆம்… அந்த மலைப்பகுதியில் நாங்கள் சென்று கொண்டிருந்த போது எங்களைத் தவிர வேறு யாருமே இல்லை. மொத்த மலைப்பகுதியில் எங்கள் நால்வர் மட்டுமே - எங்களைத் தவிர காட்டிலுள்ள உயிரினங்கள் மட்டுமே! விதம் விதமான செடிகள், கொடிகள் என பார்த்தாலும், எந்த இடத்திலும் எதையும் தொடுவதற்கு எங்களுக்கு தோன்றவில்லை. ஏனேனில் எந்தச் செடி, நல்லது, எது கெட்டது, எது அரிப்பைத் தரும் என்பதெல்லாம் தெரியாது என்பதால் பார்த்துக் கொண்டே தான் சென்றோம். ஒரு சில செடிகளை மட்டும் பார்த்ததுமே நண்பர் Bபிஷ்ட் மட்டும் தகவல்கள் தந்து கொண்டிருந்தார். அந்தப் பாதையில் நிறைய இடங்களில் நாம் மசாலாக்களில் சேர்க்கும் தேஜ் பத்தா (ப்ரிஞ்சி இலை) செடிகள் மண்டிக் கிடந்தன. வரும்போது பறித்துக் கொள்ள வேண்டும் என்று பேசிக் கொண்டே நடந்து கொண்டிருந்தோம்.
ஒரு சில இடங்களில் சரியான பாதைகள் அமைக்கப்பட்டிருந்தாலும் பல இடங்களில் சீரான பாதைகளாக இல்லாமல் கரடு முரடான பாதைகள் தான். அந்தப் பாதையில் தொடர்ந்து நடந்து கொண்டிருந்தால் வழியில் ஒரு கிராமம் உண்டு. அந்த கிராமத்தினர் பாதையில் ஒரு சில இடங்களில் சிறிய கடைகளை நடத்தினாலும் அங்கே பெரிதாக ஒன்றும் கிடைக்காது. எல்லா பொருட்களுமே மண்டல் கிராமத்திலிருந்து எடுத்துச் செல்லப்பட வேண்டும் என்பதால் மிகவும் அத்தியாவசியமான பொருட்கள் மட்டுமே கிராமத்திலும் வழியிலும் கிடைக்கும் என்பதை நினைவில் வைத்துக் கொள்ள வேண்டும். நண்பர் Bபிஷ்ட் இந்தப் பாதையிலும் பகுதியிலும் நிறைய பயணித்தவர் என்பதாலும், உத்திராகண்ட் மாநிலத்தினைச் சேர்ந்தவர் என்பதாலும் ஆங்காங்கே சில நட்புகளைப் பேணி வருகிறார். அதனால் போகும் வழியில் அவர்களைப் பார்த்து, திரும்பி வரும்போது உணவு தேவை என்பதையெல்லாம் முன்கூட்டியே சொல்லிவைத்து விடுகிறார். அதனால் திரும்பி வரும்போது வீட்டு உணவு நமக்குக் கிடைத்து விடும். இப்படியான ஒரு நபர் நம்முடன் வருவது மிகவும் வசதியான விஷயம் அல்லவா!
வழியில் பார்த்த கடையில் இருந்த ஒருவர் நண்பரைப் பார்த்ததும் பழைய நினைவுகளில் ஆழ்ந்து விட்டார். அவர் கடையில் சிறிது நேரம் அமர்ந்து இருந்தோம். எங்களுக்காக தேநீர் தயாரித்ததோடு உடன் சாப்பிட உள்ளூர் பிஸ்கெட் ஒன்றும் எடுத்துத் தந்தார். கைகளால் தயாரிக்கப்பட்ட பிஸ்கெட் என்றாலும் நல்ல சுவையுடன் இருந்தது அந்த பிஸ்கெட். அவர் கடைக்கு அருகிலேயே சின்னச் சின்னதாய் செடிகள் - Bபாங்க் என்று அழைக்கப்படும் கஞ்சா செடிகள்! அதிலிருந்து இலைகளை எடுத்து Chillum என அழைக்கப்படும் மண் குழாய்களில் அவற்றை ஒன்றிரண்டு நிரப்பி, பற்ற வைத்து இழுக்க இழுக்க இன்பம் இறுதி வரை என புகைப்பது சிலருக்கு பழக்கம். ஒரு சிலரோ அந்த இலைகளைக் கொண்டு பகோடா செய்து சாப்பிடுவார்கள். அவர் அந்த Chillum புகைத்துக் கொண்டிருந்ததால் நிறையவே கதைகள் பேசிக் கொண்டிருந்தார். நிறைய விஷயங்களும் தெரிந்து கொள்ள முடிந்தது. திரும்பி வரும்போது வாருங்கள் Bபாங்க் பகோடா செய்து வைக்கிறேன் என்றார் சிரித்தபடியே! ஒரு இழுப்பு இழுத்துத் தான் பாருங்களேன் என்று அந்த Chillum குழாயையும் நம் பக்கம் நீட்டினார்! எங்கள் யாருக்குமே இந்தப் பழக்கம் இல்லை என்று சொல்லி தேநீரையும் பிஸ்கெட்டையும் சுவைத்து திரும்பி வரும்போது வருகிறோம் என்று சொல்லி நடையைத் தொடர்ந்தோம்.
பாதையில் இருக்கும் சில இடங்கள் புராண காலங்களுக்குத் தொடர்புடையதாகச் சொல்லப்படும் இடங்களாக இருக்கின்றது. நம்பிக்கை குறித்து முன்னரே பல இடங்களில் எழுதி இருக்கிறேன். இப்போதும் சொல்கிறேன் - நம்பிக்கை தனிப்பட்ட விஷயம். அவரவர் நம்பிக்கைகளில் தலையிடுவதற்கு அடுத்தவர்களுக்கு உரிமையில்லை. மற்றவர்களை பாதிக்காத வரை நம்பிக்கை குறித்த எந்தச் சச்சரவும் இருக்கப் போவதில்லை. அடுத்தவர்கள் விஷயத்தில் தலையிடும்போது தான் பிரச்சனைகளும் சர்ச்சைகளும் உருவாகின்றன. போகும் வழியில் உள்ள பாறைகளில் செல்லும் பாதை குறித்த தகவல்களும், எத்தனை தூரத்தில் என்ன இடம் வரும் என்பதையும் எழுதி வைத்திருக்கிறார்கள். புதிதாக வரும் பயணிகளுக்கு இந்தப் பதாகைகள் மிகவும் பயன் தரும் விஷயமாக இருக்கும். எத்தனை தூரம் நடக்க வேண்டும் என்று தெரிவது ஒரு விதத்தில் நல்லதாக இருந்தாலும், இன்னும் இத்தனை தூரம் நடக்க வேண்டுமா என்ற எதிர்மறை எண்ணத்தினையும் உருவாக்கி விடக்கூடும்! ஆனால் அந்தத் தகவல்களால் எங்களுக்கு பிரச்சனை இல்லை - உதவியாகவே இருந்தது.
செல்லும் வழியில் ஒரு இடத்தில் ஒரு சிறு இடத்தில் ஐந்து கல் உருவங்கள் - பஞ்ச பாண்டவர்களாக வழிபடப்படுகின்ற ஐந்து உருவங்கள் இருக்கின்றன. அவற்றை ஒரு வழிபாட்டுத் தலமாக வைத்திருக்கிறார்கள். வழமை போலவே இதற்கும் கதை உண்டு - அதே கதை தான் - யாருக்கும் தெரியாமல் இருக்க வேண்டிய கால கட்டங்களில் பஞ்ச பாண்டவர்களும் பாஞ்சாலியும் இந்த வனப் பகுதியில் இருந்தார்கள் என்ற நம்பிக்கைக் கதை தான் அது. எது எப்படியோ, வணங்குதலுக்குரிய விஷயங்களாக இருந்தால் பெரிய பெரிய ஆலயங்கள், விஸ்தாரமான கூடங்கள், மண்டபங்கள், வசதிகள் என எதுவுமே தேவையில்லை. சிறு கற்களைக் கூட இறைவனாகப் பாவித்து வணங்க முடியும் என்பதற்கு இது போன்ற இடங்கள் இன்றைக்கும், என்றைக்கும் சாட்சியாக இருந்து கொண்டிருக்கின்றன. மிகச் சாதாரணமாக இடமாகக் காட்சியளிக்கும் அந்த இடத்தினை உள்ளூர்வாசிகள் மிகுந்த பயபகத்தியுடன் கொண்டாடும் இடமாக வைத்திருக்கிறார்கள். அவர்களிடம் பேசும்போது அந்த இடம் குறித்த அவர்களின் மதிப்பு எத்தனை புனிதமானது என்பதைப் புரிந்து கொள்ள முடியும்.
இயற்கையை ரசித்தபடியே குறுகிய பாதைகளில் மேலும் தொடர்ந்து நடந்தால் நாம் காணக் கிடைப்பது ஹிந்தி மொழியில் ஷிலாலேக் என்று சொல்லப்படும் கல்வெட்டுகள். அனுசுயா தேவி மற்றும் ருத்ரநாத் ஆலயங்களுக்குச் செல்லும் மலைப்பாங்கான பாதையின் வலப்பக்கம் இருக்கும் பாறைகளில் சமஸ்க்ருதம் மற்றும் வட இந்திய ப்ராமி மொழிகளில் செதுக்கப்பட்ட ஏழு வரிகள். மஹாராஜாதிதாஜ பரமேஸ்வர சரவர்மன் என்பவரின் காலத்தில் க்ஷத்ரிய நரவர்மன் என்பவரால் இந்தப் பகுதியில் ஒரு நீர்த்தேக்கமும், சிவன் கோவிலும் கட்டப்பட்டது என்பதையும், அவரது பெற்றோர்களின் நினைவாகவும், அவரது நினைவாகவும் கட்டப்பட்டதைச் சொல்லும் கல்வெட்டு என்று தொல்லியல்துறை பதாகை தகவல் சொல்கிறது. ஆறாம் நூற்றாண்டைச் சேர்ந்த அரசராக இருக்கக் கூடும் என்பதும் கூடுதல் தகவல். அந்த இடத்திலும் ஒரு மேடையும் மேற்கூரை வசதியும் செய்திருக்கிறார்கள். இது போன்ற இடங்களைப் பாதுகாத்து வைக்க வேண்டியதும் நம் கடமை. ஆனால் ஒன்று - இந்தப் பகுதிகளில் வெளி மனிதர்கள் வருவது குறைவு என்பதால் இன்னும் இந்தப் பகுதிகளில் கல்வெட்டுகள் மேலே ராஜு ❤️சுமதி என்றெல்லாம் செதுக்கி வைக்காமல் இருக்கிறார்கள்! அந்த விதத்தில் மகிழ்ச்சியே! மேலும் தொடர்ந்து பயணத்தில் கிடைத்த அனுபவங்களை வரும் பகுதிகளில் பகிர்ந்து கொள்கிறேன் நண்பர்களே…
*******
இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
17 ஏப்ரல் 2026














கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....