வியாழன், 9 ஏப்ரல், 2026

நெய்வேலிக்கு ஒரு பயணம் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட திருச்சி பறவைகள் பூங்கா பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


கடந்த மாதம் 25-ஆம் தேதி அன்று நெய்வேலி நகரில் அமைந்திருக்கும் மிகவும் பழமையான வில்லுடையான்பட்டு ஆலயத்தில் கும்பாபிஷேக விழா நடைபெற்றது.  மிகவும் பழமையான ஆலயம் அது.  ஒவ்வொரு வருடமும் பங்குனி உத்திரம் அன்று, நெய்வேலி நகரின் பல ஆலயங்களிலிருந்தும் பக்தர்கள் காவடிகளைச் சுமந்து இந்த வில்லுடையான்பட்டு முருகன் கோவிலுக்குச் சென்று வணங்குவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள்.  ஆயிரக்கணக்கில் காவடிகள் எடுத்துச் செல்வதை இந்த நாளில் பார்க்க முடியும். விதவிதமான காவடிகள், பால் குடங்கள், அலகுக் காவடிகள் என எத்தனை எத்தனை வகைகள் - பார்க்கவே பிரமிப்பாக இருக்கும். இந்த வருடமும் பங்குனி உத்திர திருவிழா சிறப்பாக நடந்தது.  கும்பாபிஷேகம், பங்குனி உத்திரம் ஆகிய இரண்டு விழாக்களுமே அலுவலக வேலை நாளில் இருந்ததால் செல்ல நினைத்தாலும் சென்று வர இயலவில்லை.  முடிந்தால் மண்டல பூஜை நடக்கும் 48 நாட்களுக்குள் ஏதோ ஒரு நாள் சென்று வரலாம் என்று யோசித்திருந்தேன்.  



அகலமான சாலைகள்....


முந்திரி காய்க்க ஆரம்பித்திருக்கிறது....


முந்திரி மரம்...


நான் அடிக்கடிச் சென்ற நூலகம்....


TA Office எனும் Township Administration Office....


புதியதாய் விவேகாநந்தர் சிலை....


அழகான சாலைகள்....


பாழடைந்த நிலையில் ஒரு பேருந்து நிறுத்தம்....


தெப்போற்சவம் நடக்கும் வில்லுடையான்பட்டு கோவிலின் குளம்...


கும்பாபிஷேக ஏற்பாடுகள்....

ஞாயிற்றுக் கிழமை காலையிலேயே வீட்டை விட்டு புறப்பட்டு சத்திரம் பேருந்து நிலையம் சென்று கடலூர் செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.  தொழுதூர் வரை தேசிய நெடுஞ்சாலை - அதன் பிறகு இருக்கும் சாலை கொஞ்சம் கரடு முரடானது தான் - திட்டக்குடி, பெண்ணாடம், விருத்தாச்சலம் என்று பயணிக்க வேண்டியிருக்கும்.  பெரும்பாலான பேருந்துகள் இப்போது நெய்வேலி நகருக்குள் செல்வதில்லை.  மந்தாரக் குப்பம் பகுதியில் இறங்கிக் கொண்டு வேறு பேருந்தில் தான் நகருக்குள் செல்ல வேண்டியிருக்கிறது.  நாங்கள் இருந்த வீடுகள், ஊருக்குள் இருந்த கடைகள் என பலவும் இடிக்கப்பட்டு விட்டன.  எட்டு ரோடு எனப்படும் இடத்தில் இறங்கிக் கொண்டு எங்கள் வீடு இருந்த பகுதி வரை நடந்து சென்றேன்.



சாலைகள் வழி நடந்தபோது....



பாப்பான்குளம் கிராமத்துச் சாலையில் பயணித்தபோது....


நடக்க நடக்க நிறைய மாற்றங்கள் கண்களுக்குப் புலப்பட்டன - பல கட்டிடங்கள் மாறி இருக்கின்றன.  புதியதாக சிலைகளும் வந்திருக்கின்றன.  முன்பு ஊர் எல்லையில் தான் முந்திரி மரங்கள் இருக்கும் என்றால் இப்போது ஊரின் உள்ளேயே சில சாலைகளின் ஓரங்களில் கூட முந்திரி மரங்கள் பார்க்க முடிந்தது. எங்கள் வீட்டிலிருந்து நானும் தாத்தாவுமாக நடந்து சென்ற பாதை, அவர் என்னை அழைத்துச் சென்ற நூலகம் என ஒவ்வொரு இடமாகப் பார்க்கும்போது அப்படியே பின்னோக்கிச் சென்று, படங்களில் வரும் Flashback போல நிறைய காட்சிகளை மனதுக்குள் ஓட்டிப் பார்த்துக் கொண்டேன்.  நூலகம் வரை தாத்தாவின் கைபிடித்து நடந்து திரும்பினால் அவர் சில சமயங்களில் வாங்கித் தந்த சூட மிட்டாயின் சுவை இன்னமும் நாவில் நர்த்தனமாடுவது போல ஒரு உணர்வு.  


நண்பர்/உறவினர் வீட்டிற்குச் சென்று அங்கே அவர்கள் தந்த பருப்பு கொழக்கட்டை, இனிப்பு, காப்பி என ஒரு பிடிபிடித்து, அங்கிருந்து அவர்களின் வண்டியில் நேராகச் சென்றது வில்லுடையான்பட்டு கோவில் தான்.  இன்னமும் நிறைய வேலைகள் மீதி இருந்தாலும் ஏனோ அவசர கதியில் கும்பாபிஷேகம் நடந்தது போலத் தெரிந்தது.  ஆனாலும், அந்த ஆலயத்தின் உள்ளே சென்று முருகனை தரிசித்து சற்றே சில நொடி பிரார்த்தனை - “எல்லோரையும் நல்லபடியா வையப்பா!” என்ற பிரார்த்தனையுடன் அவனை நோக்கிச் சில கணங்கள் One to One சம்பாஷணை.  பூவும், விபூதியும் பிரசாதமாகக் கிடைக்க அங்கிருந்து வெளியே வந்து மற்ற சன்னதிகளிலும் தரிசனம் கண்டேன்.  புதிதாக விதானத்தில் அழகிய ஓவியங்கள் வரைந்திருக்கிறார்கள்.  வெளியே தெப்போற்சவம் நடக்கும் குளத்திலும் நிறைய தண்ணீர் இருந்தது.  கும்பாபிஷேகம் நடந்த சுவடுகள் நிறையவே இருக்கிறது. படங்கள் பெரிதாக எடுக்கத் தோன்றவில்லை - மனதில் இருந்த ஆலயத்தின் நினைவுகள் அப்படியே இருக்கட்டும் என்ற எண்ணமோ என்னமோ தெரியவில்லை.  


அங்கிருந்து நேராக பதினாறாம் பிளாக் பகுதியில் இருக்கும் நடனசபாபதி - நடராஜர் ஆலயத்திற்குச் சென்று அங்கேயும் சில நிமிடங்கள் அமர்ந்து பிரார்த்தனை.  அங்கிருந்து சாலைகளில் உலா வந்து நேரடியாக நண்பர் வீட்டிற்குத் திரும்பினேன்.  மதியம் உணவிற்குப் பிறகு எனது கல்லூரி நண்பர்களைச் சந்திக்கலாம் என்று நினைத்திருந்தேன்.  சில பல காரணங்களால் யாரையும் சந்திக்க இயலாமல் போனது.  ஏனோ ஒரு வித வெறுமை உணர்வு - எப்படி இருந்த ஊர், எப்படி ஆகிவிட்டதே என்ற வெறுமை.  ஏனோ பழைய நினைவுகளை மறக்கக் கூடாது என்று தோன்றிவிட்டது.  பல வீடுகள் இடிபாடுடன் இருந்தன.  நாங்கள் இருந்த காலத்தில் இருந்த பேருந்து நிறுத்தங்களில் கரையான் பிடித்துக் கொண்டு மண்மேடுகள் போல காட்சியளித்தன.  முன்பு மனிதர்கள் நிறைந்திருந்த சாலைகளில் இப்போது எங்கே பார்த்தாலும் வெற்றிடம் போல தோன்றியது.


அதனால் என் நண்பரிடம் என்னைக் கொண்டு பேருந்து நிலையத்தில் விட்டு விடுங்கள் - நான் திருச்சி திரும்ப வேண்டும் - சீக்கிரம் போனால், நாளை அலுவலகத்திற்குச் செல்ல சுலபமாக இருக்கும் என்று புறப்பட்டுவிட்டேன்.  நேரடி பேருந்து கிடைக்கவில்லை என்றாலும் ஊரை விட்டு உடனே விலகி விட வேண்டும் என்று தோன்றி விட, கிடைத்த பேருந்தில் - விருத்தாச்சலம் வரை செல்லும் பேருந்தில் ஏறிக் கொண்டேன்.  ஏறிய பிறகு தான் தெரிந்தது - அது சுற்று வழியில் செல்லும் பேருந்து - மந்தாரக்குப்பம் வழி செல்லாமல் பாப்பான்குளம் எனும் கிராமம் வழிச் செல்லுமாம்! இது வரை அப்படி ஒரு ஊர் இருப்பதே எனக்குத் தெரியாது! பேருந்து ஏதேதோ குறுகிய சாலைகளில் முந்திரி, பலா தோப்புகள் வழியே அங்கொன்றும் இங்கொன்றுமாய் இருக்கும் வீடுகள் என சென்று கொண்டிருந்தது.  பல இடங்களில் சாலையின் இருபுறமும் இருக்கும் முட்செடிகளில் உராய்ந்தபடி பேருந்து முன்னேறியது.  சாதாரண பேருந்து எடுக்கும் நேரத்தை விட அதிக நேரம் எடுத்து விருத்தாச்சலத்தில் என்னைக் கொண்டு சேர்த்தது.  


விருத்தாச்சலத்தில் சிறிது நேரத்திற்குப் பிறகே திருச்சி வரை செல்லும் பேருந்து கிடைத்தது.  ஏறி அமர்ந்து கொண்டு பழைய நினைவுகளிலும், ஊர் தற்போது இருக்கும் நிலை குறித்த சிந்தனையிலும் நேரம் போனது. பொதுவாக இது போன்ற பயணங்களில் தொடர்ந்து முகநூலில் எதையாவது எழுதி, பயணம் குறித்த கதைகளை எழுதி வெளியிடுவதுண்டு.  ஆனால் இந்தப் பயணத்தில் எதையுமே எழுதத் தோன்றவில்லை.  மனது எனது முந்தைய நெய்வேலி வாழ்வினை - எனது இருபது வயது வரையான வாழ்க்கையையும் அந்த பசுமையான நினைவுகளையும், அப்போதைய நெய்வேலி நகரையும் எண்ணியபடியே இருந்தது.  எதற்காக Planned City ஆக இருந்த நெய்வேலி நகருக்கு இந்த நிலை? கொஞ்சம் கொஞ்சமாக அந்த தொழில் நகரம் இப்படி மாறியதற்கு என்ன காரணம்? என்னதான் நிலக்கரி கிடைப்பது குறைவென்றாலும், ஒரு பெரிய நிறுவனம் - பல இடங்களில் அடுத்தடுத்த முன்னேற்ற ஏற்பாடுகள் இருக்க, ஆரம்ப காலத்தில் இருந்த நகரை, அதன் கட்டுமானங்களை ஏன் அழிய விடுகிறார்கள் என்ற கேள்வி எழுந்தது.  


என்னவோ போடா மாதவா? இந்த நிகழ்வுகளுக்குப் பின்னால் என்ன காரணம் என்று யார் நமக்குச் சொல்லப் போகிறார்கள் என்ற சிந்தனைகளுடன் வீடு திரும்பினேன்.  நெய்வேலி பயணத்தில் எடுத்த படங்களும் காணொளிகளும் உங்கள் பார்வைக்கு இங்கே இணைத்திருக்கிறேன்.  பார்த்து உங்கள் கருத்துக்களையும் சொல்லுங்களேன்.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

9 ஏப்ரல் 2026


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....