செவ்வாய், 21 ஏப்ரல், 2026

ஒரு கோவில் உலா போகலாமா? - வருத்தங்கள் போக்கும் வாரணபுரீஸ்வரர் - ஆதி வெங்கட்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட மூன்று நாட்கள் மூன்று சிகரங்கள் - அனுசுயா தேவி - ஒரு சிறு கிராமம் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******


ஒரு கோவில் உலா போகலாமா? - 11 ஏப்ரல் 2026:


இன்னிக்கு காலையிலேயே சட்டுன்னு நாம ரெண்டு பேரும் ஒரு கோவிலுக்கு போயிட்டு வரலாமா?? என்று கேட்டார் என்னவர்!


இன்னிக்கு சனிக்கிழமை தானே! ஆஃபீஸ், காலேஜ்னு எதுவும் இல்ல! போயிட்டு வரலாம்! இதோ ரெடியாயிடறேன்! என்று சொல்லித் தயாரானேன்! விடுமுறை தினம் என்பதால் மகள் தூங்கிக் கொண்டிருக்க, டூவீலரில் நாங்கள் இருவரும் ஒரு புராதனக் கோவிலை நோக்கி புறப்பட்டு விட்டோம்!



ஆலயம் வெளிப்புறத் தோற்றம்...

திருவரங்கத்திலிருந்து சுமார் எட்டு கிமீ தொலைவில் அமையப்பெற்ற பழங்கால சிவாலயமாம்! இணையத்தில் பார்த்து தெரிந்து கொண்டதாக தகவலைச் சொன்னார் என்னவர்! இந்தக் கோவில் கோச்செங்கட் சோழனால் எழுப்பப்பட்ட கற்றளி என்று சொல்லப்படுகிறது! 



பெட்ரோல் பம்பில் இருந்த மரமும் பூக்களும்...

கோவிலை நோக்கிய பயணத்தில் வழியில் பெட்ரோல் பங்க் ஒன்றில் வண்டியை நிறுத்திய போது அங்கே பூத்து குலுங்கிக் கொண்டிருந்த மஞ்சள் அரளி மலர்களை காலை நேரத்தில் பார்த்ததும் மனதுக்கு இதமாக இருந்தது! இங்கே நின்னு ஃபோட்டோ எடுத்துக் கொண்டால் நன்றாக இருக்குமே என்றும் தோன்றியது..🙂 சாலையின் எதிர்ப்புறமும் உயரமான மரம் ஒன்றில் மஞ்சள் நிறத்தில் ஏதோ பெயர் தெரியாத மலர்கள் பூத்துக் கிடந்ததையும் பார்க்க முடிந்தது!


பெட்ரோலை நிரப்பிக் கொண்டதும் மீண்டும் எங்கள் பயணத்தை துவக்கினோம்! மதுரையை ‘தூங்கா நகரம்’ என்பது போல் திருச்சியும் ‘உறங்கா நகரம்’ தான்! வழியெங்கும் மக்கள் நடமாட்டத்தால் நிறைந்திருந்தது காலைப்பொழுது!  ஒருபுறம் பேருந்துக்காக நின்று கொண்டிருந்த மக்களும், ஸ்பீக்கர் ஒன்றில் சத்தமாக ‘ஒன்றே குலமென்று பாடுவோம்! ஒருவனே தேவனென்று போற்றுவோம்!’ என்று பாடல் ஒலித்துக் கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது!


பளூர் என்றும் பழூர் என்றும் எழுதப்பட்ட பதாகையை குறிப்பிட்ட பேருந்து நிறுத்தம் ஒன்றில் பார்க்க முடிந்தது! இதில் எது அந்த இடத்தின் பெயராக இருக்கும்?? நாங்கள் சென்று கொண்டிருக்கும் பாதை சமயபுரம் செல்லும் வழி என்பதால் ஒருசிலர் பாதயாத்திரையாக கோவிலுக்கு சென்று கொண்டிருந்ததையும் பார்க்க முடிந்தது!


பனமங்கலம் பழைய ரோடு! என்ற பதாகையை கடந்ததும் சாலையிலிருந்து பார்க்கும் தூரத்தில் ஒரு கோவில் தென்பட்டது! வண்டியை அந்த கோவிலுக்கு வெளியே நிறுத்தி விட்டு உள்ளே சென்றோம்! சில படிகள் ஏறிச்சென்றால் வாரணபுரீஸ்வரர் என்ற திருநாமத்தில் இங்கு சுயம்புத் திருமேனியாக ஈசன் காட்சி தருகிறார்! தென்னாடுடைய சிவனே போற்றி! எந்நாட்டவர்க்கும் இறைவா போற்றி போற்றி!



சுற்றுப் பிராகாரத்தில் நர்த்தன கணபதி...


ஆலயம் - மற்றொரு நிழற்படம்...


முதல் நாள் அலங்காரத்தில் கால பைரவர்...



அம்பாள் சன்னதி - வெளிப்புறத் தோற்றம்...



அம்பாள் - வெளிப்புறத்திலிருந்து எடுத்த படம்...



சுற்றுப் பிராகாரத்தில் இருந்த விஷ்ணுதுர்க்கை...




சண்டிகேஸ்வரர்....




வள்ளி தெய்வானையுடன் சுப்ரமணியர்...


சாலையிலிருந்து ஆலயம் - ஒரு நிழற்படம்...

எந்த தள்ளுமுள்ளும் இல்லாத இடமாக அமைதியாக இருந்தது! ஈசனை மனதார வேண்டி நின்றோம்! இவர் வருத்தங்களை போக்கும் வாரணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார்! கோவில் குருக்கள் தீபாராதனை காண்பிக்க கண்குளிர தரிசித்தோம்! நமசிவாய வாழ்க! நாதன் தாள் வாழ்க! இமைப்பொழுதும் என் நெஞ்சில் நீங்காதான் தாள் வாழ்க! என்று சிவபுராணத்தை வாய் உச்சரித்துக் கொண்டிருக்க மனதில் அமைதி குடிகொண்டது!


ஈசனின் சன்னிதியை விட்டு வெளியே வந்து சில படிகளை இறங்கி பிரகாரத்தை வலம் வந்தால் நர்த்தன கணபதி உயரமான ஒரு இடத்திலும், பால கணபதி தனிச் சன்னிதியிலும் காட்சித் தர, வள்ளி தேவசேனா சமேத சுப்ரமணியன் அழகுற தனிச் சன்னிதியில் அருள் பாலிக்க, சுற்று பிரகாரத்தில் அம்பாள் வடிவாம்பிகை தனிச் சன்னிதியிலும், விஷ்ணு துர்க்கை, பிரம்மா இருவரும் உயரமான ஒரு இடத்திலும், சண்டிகேஸ்வரர், கால பைரவர், நவக்கிரகங்கள் என தனித்தனியே சன்னிதிகளில் அழகுற வீற்றிருக்கின்றனர்! 


ஆதித்யாயச சோமாய மங்களாய புதாயச குரு சுக்ர சனிப்யஸ்ச்ச ராகவே கேதவே நம: .. எனும் ஸ்லோகத்தை அப்பா சொல்லித் தந்த நாட்கள் நினைவுக்கு வந்தது! ஆதித்யாயச சோமாய…உதடுகள் ஸ்லோகத்தை உச்சரித்துக் கொண்டிருக்க சனிக்கிழமை என்பதால் ஒன்பது முறைகள் நவக்கிரகத்தை வலம் வந்தோம்!


கோவிலை வலம் வந்து உப சன்னிதிகளை எல்லாம் தரிசித்ததும் அங்கே நின்று கொண்டிருந்த குருக்கள் இந்தக் கோவிலை பற்றி எங்களிடம் சில தகவல்களை சொல்லத் துவங்கினார்! இந்தக் கோவில் 1500 வருடங்கள் பழமையானது என்றும், கோ செங்கட் சோழன் ‘யானை புகா வண்ணம் கோவில்களை கட்டியதில் இந்தக் கோவிலும் ஒன்று எனவும், இப்படி 72 கோவில்களை அவர் எழுப்பியிருப்பதாகவும் சொன்னார்! 


அதென்ன யானை புகா வண்ணத்தில் கோவில்?? என்றால் திருவானைக்காவல் கோவிலின் வரலாறு நமக்கெல்லாம் தெரியும் தானே! யானையும் சிலந்தியும் மாற்றி மாற்றி ஈசனுக்கு தொண்டு புரிந்தது என்றும் சிலந்தி பின்னிய வலையை யானை அழித்ததால் யானை மேல் கோபம் கொண்ட சிலந்தி யானையின் துதிக்கையில் புகவே இரண்டும் மடிந்து மோட்சம் பெற்றதாக வரலாறு!


சிலந்தி மறுபிறவியில் கோ செங்கட் சோழனாக பிறவி எடுத்து முற்பிறவியின் நினைவால் யானை புகவே முடியாத வண்ணம் மாடக்கோவில்களை எழுப்பியதாக சொல்லப்படுகிறது! சுற்று பிரகாரங்கள் பின்னாளில் நிறுவப்பட்டிருக்கிறது! ஆனால் சிவனின் சன்னிதி கோ செங்கட் சோழனால் நிறுவப்பட்ட கற்றளி தான்!


இத்தனை வருடங்களானாலும் கோவில் நல்ல முறையில் தூய்மையாக பராமரிக்கப்படுகிறது என்பது மனதிற்கு நிம்மதியைத் தருகிறது! இங்கு பங்குனி உத்திர விழா, தேய்பிறை அஷ்டமி என்று பூஜைகளும் பனமங்கல கிராமத்து பொதுமக்களால் சிறப்புற நடத்தப்படுகிறது என்று சொல்லி முருகப்பெருமானின் பிரசாதம் என்று அழகான வேல் ஒன்றும் மஞ்சள் குங்குமப் பிரசாதமும் எங்களுக்கு தந்தார்!


நேற்றைய நாளில் (11.04.2026) பழமையான சிவாலயம் ஒன்றை பார்த்ததில், நிதானமாக மனம் ஒன்றி தரிசிக்க முடிந்ததில் எங்களுக்கும் மகிழ்ச்சியைத் தந்தது! நீங்களும் வாய்ப்புக் கிடைத்தால் இங்கு சென்று நிதானமாக தரிசித்து ஈசனின் அருளைப் பெறலாம்.


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


ஆதி வெங்கட்

திருவரங்கம்

21 ஏப்ரல் 2026


5 கருத்துகள்:

  1. படத்தின் கீழே குறிப்பாக பெட்ரோல் பங்க்கில் என்று வருவதற்கு பதில் பம்ப்பில் என்று வந்திருக்கிறது!

    பதிலளிநீக்கு
  2. கோ செங்கட் சோழன் என்றதுமே அவரைப் பற்றிய முன்ஜென்ம வரலாறு நினைவுக்கு வந்தது.  நாச்சியார் கோவில் கூட அவர் கட்டியதுதான்.

    பதிலளிநீக்கு
  3. பழமையான ஆலயம் ஒன்றிற்கு சென்று வந்தது மனா நிம்மதியைத் தந்திருக்கும்.  கோவில் மிகச் சிறியதாக இருக்கிறது.  படங்களை பார்க்கும்போது கோவிலின் பழமை தெரியவில்லை.

    பதிலளிநீக்கு
  4. ஆலயம் படங்கள் விளக்கங்கள் மற்றும் உங்கள் அனுபவங்கள் எல்லாம் நன்றாக விரிவாகச் சொல்லியிருக்கீங்க ஆதி!

    பழமையான கோயில் ஆஹா ! இப்ப சமீபத்தில் புதுப்பித்திருக்கிறார்களோ அல்லது பழைய கோயிலைச் சீர்ப்படுத்தி இருக்காங்களோ? புதுசா இருப்பது போல் இருக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு
  5. பெட்ரோல் பங் பூக்கள் bright அழகு!

    சன்னதியின் உட்பக்கம் பார்க்கறப்ப சிலவற்றில் தரை பழமையைச் சொல்கிறது.

    வாரணபுரீஸ்வரர்! அழகான பெயர் - வாரணம் என்றால் யானை - கவசம். யானை வழிபட்டதாலும், பக்தர்களைக் கவசமாகக் காப்பதாலும் வாரணபுரீஸ்வரர் என்று அழைக்கப்படுகிறாரோ?

    அம்பாள் வடிவாம்பிகை?

    வாக்கம் யோசிக்க வைக்கிறது

    கீதா

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....