அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.
இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி. இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள்.
******
இன்றைய எண்ணங்கள் : ஜில் ஜில் ரமாமணி
ஒரு கண் மருத்துவமனை. அங்கே கண் பிரச்சனைகளுக்கு பலர் வந்து போவது வழக்கம் தானே. அங்கே வருபவர்களும் சரி, பணிபுரிபவர்களும் சரி எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது தெரிந்திருந்தால் நல்லது. எந்த மருத்துவமனையாக இருந்தாலும், அங்கே பணிபுரியும் நபர்கள் சலங்கை வைத்த கொலுசு போட்டுக்கொண்டு - முதலிலேயே சொல்லிவிடுகிறேன் - கொலுசு போட்டுக் கொள்வதை தவறென்று சொல்ல வரவில்லை, அது அவரவர் விருப்பம் - மருத்துவமனையில் ஜில் ஜில்லென்று அங்கேயும் இங்கேயும் சென்று கொண்டிருந்தால் ஒருவித எரிச்சல் வருகிறது. மருத்துவமனை என்பது பிரச்சனைகளுக்குத் தீர்வு தரும் இடம். அங்கே அமைதி நிலவினால் தான் நன்றாக இருக்கும். அங்கேயும் ஜில் ஜில் ரமாமணியாக அங்கே பணிபுரியும் பணியாளர் இருந்தால் நன்றாக இராது என்பது என்னுடைய சிந்தனை. சிலர் இதனைத் தவறென்று சொல்லலாம் என்றாலும் என்னுடைய நிலையில் மாற்றமில்லை. என் அலுவலகத்தில் கூட ஒரு பெண்மணி இப்படித்தான் மூன்றாம் மாடியில் அவர் நடந்தால் இரண்டாம் மாடியில் ஜில் ஜில் சப்தம் கேட்கும் அளவுக்கு சலங்கைகள் வைத்து கொலுசு போட்டிருப்பார். அது அவர் விருப்பம் என்று சொல்லி இருக்கிறேன் சக அலுவலரிடம். இடம் பொருள் ஏவல் என்பதெல்லாம் பார்க்க வேண்டும் என்பதில் மாற்றுக் கருத்துக்கு இடமில்லை தானே! இந்த விஷயம் குறித்து நீங்கள் என்ன நினைக்கிறீர்கள் என்று பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
******
ராஜா காது கழுதைக் காது : பெண்ணைப் பார்க்காதே
அதே மருத்துவமனையில் கேட்ட ஒரு விஷயம் தான் இன்றைய பதிவில் ராஜா காது கழுதைக் காது பகுதியாக! என்னதான் நிறைய விஷயங்கள் ராஜாவின் காதுகளில் விழுந்தாலும் ஏனோ எழுதவில்லை. இதோ இன்றைக்கு எழுதி விட்டேன்.
நாற்பது வயதுக்கும் மேல் மதிக்கத்தக்க ஒரு மனிதர். தனது கண்ணில் பிரச்சனை என்று வந்தார். மருத்துவர் பார்ப்பதற்கு முன்னர் கண்களைச் சோதிக்கும் நர்ஸ் அவரது கண்களை அதற்கான கருவி மூலம் பரிசோதித்துக் கொண்டிருந்தார். “தாடையை சரியா வச்சு, கண்ணைச் சரியா அந்த லென்ஸ் ல வச்சுக்கோங்க! உள்ள பச்சை லைட் தெரியுதா, அத நல்லா பாருங்க! நல்லா பாருங்க!” என்று கதறிக் கொண்டிருந்தார். ஆனால் அவர் பார்வை வேறு எங்கோ அலைந்து கொண்டிருந்தது. அப்போது அந்த நர்ஸ், சொன்னது தான் இன்றைய ராஜா காது கழுதைக் காது பகுதி!
“லைட்ட தாங்க பார்க்க சொன்னேன்… மெஷினுக்குப் பின்னாடி இருக்க பொண்ணைப் பார்த்துட்டே இருந்தா எப்படி கண் Check பண்ணறது?”
******
பழைய நினைப்புடா பேராண்டி : [G]கோ ரதமும் ஆண்டாளும்
2013-ஆம் ஆண்டு இதே நாளில் வெளியிட்ட பதிவு - திருவரங்கம் ‘[G]கோ ரதமும் ஆண்டாளும் - அந்தப் பதிவிலிருந்து சில வரிகள் இங்கே.
ஒவ்வொரு வருடமும் திருவரங்கத்தில் சேர்த்தி விழாவின் ஒரு பகுதியாக கோரதம் எனும் தேரோட்ட நிகழ்வு நடக்கிறது. இந்த வருடம் கூட வியாழானன்று (02.04.2026) நடந்தது. அலுவலக நாள் மட்டுமல்லாது காலை பத்து மணிக்கு மேல் தான் தேரோட்டம் என்பதால் செல்ல முடியவில்லை. 2013-ஆம் ஆண்டு சென்று வந்த அனுபவங்களை, அந்த வருடம் இதே நாளில் எழுதி இருக்கிறேன். அந்தப் பதிவு இன்றைய பழைய நினைப்புடா பேராண்டி பதிவாக!
திருச்சி அருகிலிருக்கும் இரண்டாவது திவ்யதேச ஸ்தலமான உறையூரில் கமலவல்லி நாச்சியார் கோவில் இருக்கிறது. இங்கே இருக்கும் கமலவல்லி நாச்சியாருக்கு தனது கணையாழியை அன்பளிப்பாகக் கொடுத்துவிட்டு திருவரங்கம் திரும்புகிறார் நம்பெருமாள். நம்பெருமாளிடம் கணையாழி இல்லாதது தாயாரின் கண்களிலிருந்து தப்பிவிடுமா என்ன? ஆரம்பித்தது பிரச்சனை! அவர் அது பற்றி கேட்க, நம்பெருமாள் சாமார்த்தியமாக, கொள்ளிடக் கரையில் தொலைந்து விட்டது என பொய் சொல்கிறார்.
“தேடிக் கொண்டுவந்தால் தான் ஆச்சு” என நம்பெருமாளை விரட்ட அவரும் தங்கக் குதிரையில் சென்று கொள்ளிடக் கரையில் தேடுவதாக பாவனை செய்துவிட்டு சித்திரை வீதியில் “வையாளி” ஆட்டம்போட்டு வெறும் கையோடு திரும்புகிறார். சும்மா இருப்பாரா தாயார்! மட்டையடி தான். ஒவ்வொரு வருடமும் இது போல் மட்டையால் அடித்து விளாசும் “மட்டையடி உற்சவம்” நடக்கும்.
அதன் பிறகு ஊடல் முடிந்து பக்தர்களுக்கு திருவரங்கத்தில் நம்பெருமாளும் தாயாரும் சேர்ந்து ‘சேர்த்தி’ தரிசனம் தருவார்கள். வருடத்தில் ஒரு முறை தான் “சேர்த்தி” தரிசனம் என்பதால் நிறைய பக்தர்கள் இங்கே கூடுவார்கள். இந்த வருடம் சேர்த்தி அன்று நான் திருச்சியில் இருந்தாலும் திருவரங்கத்தில் இல்லை! அருகே உள்ள வேறு ஒரு ஊருக்குச் சென்று விட்டேன். அது பற்றி வேறொரு பகிர்வில்!
அடுத்த நாள் தான் கோ ரதம்! ”கோ ரதம்” எனச் சொல்லப்படும் பங்குனி மாத ரதத்தில் பெருமாள் வீதிவுலா நடைபெறும். திருவரங்கத்தில் இந்த ரதம் நிறுத்தி வைத்திருக்கும் இடத்தில் ஒரு ‘[G]கோ சாலை’ இருந்ததாலும் இப்பெயர். காலை 06.30 மணிக்கே தேரோட்டம் தொடங்கி இருக்கவேண்டியது. ஏதோ பிரச்சனையால், பொறுமையாக பத்து மணிக்கு தான் ஆரம்பித்தது. அதுவே பிரச்சனையாகவும் ஆனது! என்ன பிரச்சனை என்றால் வெய்யில் தான்!
மேலே உள்ள சுட்டி வழி முழு பதிவையும் படி(பார்)க்கலாமே - இது வரை நீங்கள் படி(பார்)த்திருக்காவிட்டால்!
******
இந்த வாரத்தின் ரசித்த பாடல் : Ishq Ki Umar
சமீபத்தில் பார்த்து ரசித்த ஒரு ஹிந்தி பாடல் - Vadh 2 எனும் படத்திலிருந்து Ishq Ki Umar என்ற பாடல். சஞ்சய் மிஷ்ரா மற்றும் நீனா குப்தா ஆகியோர் நடிப்பில் - அற்புதமான சூழலில் படம் பிடித்திருக்கிறார்கள் - மெல்லிசை நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கலாம் - கேட்டுப் பாருங்களேன்.
******
இந்த வாரத்தின் தகவல் : பெற்றோரின் திருமண நாள்
இன்றைக்கு - 11 ஏப்ரல்! இந்த நாள் எனது பெற்றோரின் திருமண நாள். இரண்டு பேருமே இப்போது இப்பூவுலகில் இல்லை என்றாலும் இந்த நாள் நினைவில் இருக்கிறது! பல முறை மறந்து போயிருக்கிறேன் - பணிச் சுமைகளில் வாழ்த்தாமல் விட்ட நாளில் அப்பா மாலை வரை காத்திருந்து, பிறகு அலைபேசி வழி அழைப்பார் - இன்னிக்கு என்ன நாள் தெரியுமா? என்று கேட்கும்போது தான் அடடா, மறந்து விட்டோமே என்று வருத்தம் தோன்றும். இன்று, எனக்கு நினைவிருந்தாலும் அவர்களுக்கு திருமண நாள் வாழ்த்துகள் சொல்ல நினைத்தாலும் அவர்கள் இருவருமே இல்லை - இது தான் வாழ்வின் நிதர்சனமோ? இன்றைக்கு அவர்கள் இருந்திருந்தால் 60 ஆண்டுகள் திருமண பந்தத்தில் இருந்திருப்பார்கள்….
******
இந்த வாரத்தின் தமிழ் - எல்லாம் தமிழ் :
சமீபத்தில் நெய்வேலி நகருக்குச் சென்ற போது பல இடங்களில் தகவல் பதாகைகள் பார்க்க முடிந்தது. ஒவ்வொரு இடத்திலும் ஆங்கிலம், தமிழ் மற்றும் ஹிந்தி மொழிகளில் எழுதி வைத்திருந்தார்கள் - ஹிந்தி மொழியில் இருப்பது புதிது! - முன்பு ஸ்ட்ரைக் என்ற பெயரில் “ஹிந்தி ஒழிக” என்ற கோஷம் போட்டு கூட்டத்தோடு கூட்டமாக சென்றதும், தபால் நிலையத்தில் இருந்த ஹிந்தி பதாகைகளில் தார் பூசியதும் இப்போதும் நினைவில் இருக்கிறது. இன்றைக்கு பல இடங்களில் மூன்றாம் மொழியாக ஹிந்தியில் எழுதி வைத்திருக்கிறார்கள் - நெய்வேலி நிறுவனத்தில் பணிபுரிபவர்களில் பலரும் வட இந்தியர்கள் தான் என்றும் தெரிந்து கொண்டேன். அது ஒரு புறம் இருக்க, பல பதாகைகளில் எழுதி இருக்கும் தமிழ் புரிவதற்கு தனியே படித்து வர வேண்டும் என்று தோன்றியது! உதாரணத்திற்கு இரண்டு தமிழ் பதாகைகளில் இருந்த தகவல்…
சுண்டாட்ட அரங்கம்
பொறி வண்டிகள் நீரால் சீராக்கும் நிலையம்
என்னதான் சொல்ல வருகிறார்கள் என்பதைச் சொல்லி விட்டால் நல்லது! பக்கத்தில் ஆங்கிலத்தில் எழுதி இருந்ததால் புரிந்தது எனக்கு! உங்களுக்கு புரிந்ததா? சொல்லுங்களேன் பின்னூட்டத்தில்!
******
இந்த வாரத்தின் நகைச்சுவை - வெண்டைக்காய் :
சமீபத்தில் படித்த ஒரு நகைச்சுவை!
ரோட்'ல ஒருத்தர் வெண்டக்காய் முனையை ஒடிச்சு போட்டுக்கிட்டே போனார்.
அதைப் பார்த்த இன்னொருத்தர், ஏன் சார் இப்படி ஒடிச்சு போட்டுக்கிட்டே போறீங்க?ன்னு கேட்டார்.
அதுக்கு அவர், என்னங்க பண்ணுறது, கடைல ஓடிச்சா கடைக்காரர் திட்டுறார், ஒடிக்காம வீட்டுக்குப் போனா, ஏன் ஒடிச்சுப் பாக்காம வாங்கி வந்தீங்கன்'னு வீட்ல திட்டுறாங்க, அதான்ங்க...!
******
இந்த வாரத்தின் காஃபி வித் கிட்டு பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டம் வாயிலாக சொல்லுங்களேன். மீண்டும் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…
நட்புடன்
வெங்கட் நாகராஜ்
திருவரங்கம்
11 ஏப்ரல் 2026


வாசகம் நன்று.
பதிலளிநீக்குதலைப்பில் ஜில்ஜில் ரமாமணி என்ப்தைப் பார்த்ததுமே டக்கென்று நினைவுக்கு வந்தவர் ஆச்சி மனோரமா தில்லானா மோகனாம்பாள் கதாபாத்திரம். என்ன ஒரு அழகான படைப்பு அது!
கீதா
வாசகம் உங்களுக்கும் பிடித்ததில் மகிழ்ச்சி கீதா ஜி.
நீக்குஜில் ஜில் ரமாமணியாக மனோரமா - மறக்க முடியாத கதாபாத்திரம் தான்.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி.
நினைத்தேன் ஜில் ஜில் ரமாமணிக்கு உங்கள் அனுபவம் ஏதேனும் இருக்கும் என்று...அதே போல...டிட்டோ உங்கள் சிந்தனைக்கு.
பதிலளிநீக்குநோயாளிகளுடன் கூட வருபவர்களையும் பார்த்திருக்கிறேன் என்னவோ கல்யாணத்துக்குப் போவது போன்ற உடையில் நகைகளுடன்...ஆச்சரியமாக இருக்கும் எனக்கு.
ஆனால் பொதுவாகவே மருத்துவமனையில் இவை எல்லாமே தடா இல்லையோ?
மகன் பணியாற்றும் இடத்தில் ரொம்பவே கட்டுப்பாடுகள்.
கீதா
ஒரு சிலர் இப்படித்தான் - இடம் பொருள் ஏவல் என்ற சிந்தனை இல்லாமல் இருப்பது அவர்களுக்கு வழக்கமாக இருக்கிறது.
நீக்குஇங்கே தடா என்றால் அதைத் தான் முதலில் செய்ய நினைப்பதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் நம் மக்கள். வெளிநாட்டு கட்டுப்பாடுகள் இங்கே செல்லுபடியாவதில்லை என்பது நிதர்சனம். சுயமாகவே எது சரி என்பது தெரிந்திருந்தாலும், தன் வேலை மட்டுமே பிரதானமாக வைத்திருப்பது நம் மக்களுக்கு கைவந்த கலை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
ராகாககா - சிரித்துவிட்டேன்!!!
பதிலளிநீக்குகீதா
ராகாககா - ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.
நீக்குசலங்கை போட்டு நடமாடுவது என்னை பாதிக்காது.
பதிலளிநீக்குராஜா காது பக்கென்று சிரிக்க வைத்து விட்டது!
பழைய நெனப்பு...திருவிழா என்றாலே ஜாலிதான். ஆண்டாளின் உற்சாகம் நமக்கும் தொற்றிக் கொள்கிறது. பாவம் அதன் இடுப்பில் காயம்.
பாடல் கேட்டேன் ரசித்தேன். அது ஏதோ ஓரிரு பாடலை நினைவு படுத்தியது.
பெற்றோரின் திருமணநாள் நெகிழ்ச்சி. இருக்கும்போது மனதில் இருப்பதில்லை. இல்லாதபோது நினைவு வருகிறது.
சுண்டாட்டம் கேரம்போர்டா? அடுத்து வாட்டர் வாஷா?
நகைச்சுவையை மீண்டும் ரசித்தேன்.
சலங்கை போட்டு நடமாடுவது - பொதுவாக பாதிப்பதில்லை - அது அதீதமாக இருக்கும்போது எரிச்சல் வருகிறது.
நீக்குராகாககா - ரசித்தமைக்கு நன்றி.
பதிவின் மற்ற பகுதிகள் குறித்த தங்கள் எண்ணங்களை இங்கே பகிர்ந்து கொண்டதற்கு நன்றி ஸ்ரீராம்.
சுண்டாட்டம் - கேரம் தான். இரண்டாவதும் சரியே.
திருவரங்கம் என்றாலே வருடம் முழுவதுமே கோலாகலம் தான். தினமுமே கோவிலுக்குள் ரங்கநாதர் வரை செல்ல முடியலைனாலும் சுற்றுப் பிராகாரம் அதற்கடுத்த பிராகாரம் என்று சுற்றி வந்தாலே மகிழ்ச்சியாக இருக்கும் என்று எனக்குத் தோன்றும்.
பதிலளிநீக்குநான் பார்க்காத வாசிக்காத பதிவென்று நினைத்து சுட்டிக்குச் சென்றால் அதே! ஆண்டாளைப் பார்ப்பதே சந்தோஷம். அந்தக் காணொளியில் ஆண்டாளின் தோலில் ஏதோ பிரச்சனை இருப்பது போல் தெரிந்தது. நான் அதன் பின் 5/6 வருடங்கள் கழித்து போன போது ஆண்டாளைப் பார்த்தேனே அப்போது எதுவும் தெரியவில்லை. காணொளியும் எங்கள் தளத்தில் போட்டிருந்தேன்.
திருவரங்கத்திற்கு எல்லாம் வந்தால் வேறு எந்த நிகழ்வுகளையும் கோர்த்துக் கொண்டு வரக் கூடாது. திருவரங்கத்திற்கென்றே வரவேண்டும் அப்போதுதான் நம் விருப்பங்களைச் செயல்படுத்த முடியும். பதிவை வாசித்தேன். அதனால் வந்த எண்ணங்கள்.
காணொளியும் விவரங்களும் படங்களும் சூப்பர். அது சரி மட்டையடி , சேர்த்து சேவை நேற்று நடந்திருக்கும் என்று நினைக்கிறென் அபப்டித்தான் கேள்விப்பட்டேன் அங்கு வந்திருந்தப்ப.
கீதா
உண்மை தான். திருவரங்கத்தில் கொண்டாட்டங்களுக்கு குறைவே இல்லை. எதோ ஒரு திருவிழா, கொண்டாட்டம் நிகழ்ந்த வண்ணமே இருக்கின்றது. நமக்குத் தான் பார்க்க நேரமும் விருப்பமும் இருக்க வேண்டும். ஒரு வருடம் இங்கேயே தங்கி எல்லா நாட்களின் நிகழ்வுகளையும் பார்த்து ரசிக்க சில வெளிநாட்டவர் வந்து விடுவது வழக்கமாக இருக்கிறது.
நீக்குமட்டையடி, சேர்த்தி - பங்குனி உத்திர விழாவின் சிறப்பல்லவா அது. மிகவும் சிறப்பாக இருக்கும் அந்த விழா. அதீத மக்கள் கூட்டம் இருக்கும் என்பதால் அங்கே அந்த நாளில் செல்ல முடியவில்லை.
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
பெற்றோர் இருவரும் இந்த நாளில் மேலுலகில் இறைவனின் நேரடி ஆசியில் !!!
பதிலளிநீக்குகீதா
பெற்றோர் இருவரும் இந்த நாளில் இறைவனின் நேரடி ஆசியில் - உண்மை. அப்படி மனதைத் தேற்றிக் கொள்ள வேண்டியது தான்.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
வீடியோ காட்சிப்படுத்தலும் இசையும் மிக அமைதியாகக் காட்சிகளுக்கு ஏற்ப இரண்டும் அழகாக இணைந்து ....ஒரு வயதிற்கு மேலாக எந்தவிதப் பரபரப்பும் இல்லாமல் இயற்கையோடு ஒன்றிய அமைதியான வாழ்க்கையைச் சொல்லும் விதமாக.......ஒரு கவிதையாக...காட்சிகளையும் இசையையும் மிகவும் ரசித்தேன் ஜி!
பதிலளிநீக்குஎனக்குப் பிடித்த ஒரு விஷயம் இப்படி இயற்கையோடு இருப்பது.!!!!!
கீதா
இயற்கையோடு இயைந்து, பரபரப்பில்லாமல் வாழ்வது - ஆனந்தம் தருவதாகவே இருக்கிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
தமிழ், ஆங்கிலம் ஹிந்தி மூன்றிலும் இருக்கும் பதாகைகள் நல்லதுதான். ஆனால் தமிழ்ப்படுத்துகிறேன் என்று புரியாத வகையில் இருந்தால் ம்ம்ம்ம் ..
பதிலளிநீக்குசுண்டாட்ட அரங்கம், பொறி வண்டிகள் நீரால் சீராக்கும் நிலையம்...ம்ஹூம்....
கீதா
ஸ்ரீராம் பதில் சொல்லி இருக்கிறார். தமிழ் என்ற பெயரில் படுத்துவதாகவே எனக்குப் படுகிறது.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி கீதா ஜி.
நகைச்சுவை புன்சிரிப்பை வரவழைத்தது.
பதிலளிநீக்குகீதா
நகைச்சுவையை ரசித்தமைக்கு நன்றி கீதா ஜி.
நீக்குஜில் ஜில் ரமாமணிகள் கடுப்புதான். இருந்தாலும் அதைவிட எனக்கு கொலைவெறி வருவது (ச்சும்மாத்தான்), அலற விட்டுக்கொண்டு யூடியூப் மொபைல் பாடல்கள் காணொளி பார்ப்பவர்கள். இவர்களுக்கு குருவிக்கு உள்ள மூளை கூட கிடையாது என்று நினைத்துக்கொள்வேன். அதிலும் இரயிலில் இரவு பத்து மணிக்கு மேல் இந்த மாதிரி சீரியல்கள் கேட்டுக்கொண்டு வருபவர்களுக்கு இபிகோ சட்டத்தில் தூக்குத் தண்டனை, இரட்டை ஆயுள் தண்டனைலாம் கிடையாதா என்று வக்கீலிடம் கேட்க ஆசை.
பதிலளிநீக்குகோயில்களில் தீர்த்தத்திறாக வரிசையில் நிற்கும்போது 'நீ முன்னால போற நான் பின்னால வாரேன்' போன்ற காலர் டியூன்கள் அலறுவதைக் கேட்டிருக்கிறீர்களா?
மொபைல் காணொளிகள் - எரிச்சல் தான் - அதிலும் எந்த இடத்திற்கு வருகிறோம் என்ற விவஸ்தை இல்லாமல் பாட்டை அலறவிடும் நபர்கள் - வயது வித்தியாசம் இல்லாமல் எல்லா வயதினர்களும் இப்படி இருக்கிறார்கள்.
நீக்குஒருமுறை மயானத்தில் Casket இறக்கி வைத்துக் கொண்டிருக்கும் போது சத்தமாக “ஷீலா, ஷீலா கி ஜவானி” பாடல் ஒலிக்க, பாதிரியார் பாவம் Confuse ஆகி பைபிள் படிப்பதை நிறுத்தி விட்டார்! வழிபாட்டுத் தலங்களுக்கு வரும்போது ஒன்று ஒலியை குறைத்து வைக்க வேண்டும் - இல்லையேல் Vibration Mode-இல் வைக்க வேண்டும் - இதை எல்லாம் சொன்னால் நம்மை Boomer Uncle என்று சொல்லி விடுவார்கள்!
தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
யாருக்காக தமிழ் பலகை என்பது தெரிந்தாலே இந்த மாதிரி யாருக்கும் புரியாத தமிழில் எழுத மாட்டாங்க. அதீத பைத்தியக்காரங்க என்று தோன்றும். தங்களுக்கு என்று வரும்போது மாத்திரம் புரியும் பாஷையில் பேசுவாங்க (பஸ் வந்துருச்சா, சோப்பு எங்க கிடைக்கும்? பேஸ்ட் காலியாயிடுச்சா? இன்னைக்கு நைட்டு ஃபுட்பால் மேட்சுல்ல?)
பதிலளிநீக்குபலர் இப்படித்தான் பேச்சுத் தமிழ் இருக்க, சுத்தத் தமிழ் என்ற பெயரில் கொலை செய்து கொண்டிருக்கிறார்கள். ஒன்றும் சொல்வதற்கில்லை.
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வெண்டைக்காய் ஒடிப்பது - மிகவும் ரசித்தேன். எனக்கு வெண்டை போன்றவற்றை ஒடிப்பது பிடிக்கவே பிடிக்காது. கொஞ்சம் அமுக்கிப் பார்த்து வேணா வாங்கலாம். ஒடிச்சா,மறுநாள் அழுக ஆரம்பிச்சுடும்.
பதிலளிநீக்குஐம்பதில் ஒன்றிரண்டு முத்தலாக இருந்தால் தான் என்ன என்று எனக்கும் தோன்றும். வெண்டைக்காய் உடைக்கும்போது அதற்கு வாயிருந்தால் கதறும் என்று தோன்றும்!
நீக்குதங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மனம் நிறைந்த நன்றி நெல்லைத் தமிழன்.
வாசகம் அருமை.மருத்துவமனைக்கு வருபவர்கள், அங்கு பணிபுரிபவர்கள் சத்தம் இல்லா கொலுசு அணிந்து வருவது நல்லதுதான். ஜல் ஜல் சத்தம் எரிச்சலை ஏற்படுத்தும் தான்.
பதிலளிநீக்குபெண்ணைப் பார்க்காதே ரசித்தேன்.
திருவரங்கத்தில் சேர்த்தி விழா படித்தேன். இறைவன் பொய் சொல்வதும் தாயார் மட்டையடி அடிப்பதும் பிறகு மன்னிதல், சேர்த்தி நல்லா இருக்கு.
ஹிந்தி பாடல் மிக அருமை. இயற்கை அழகு , இருவரின் நட்பு, அன்பு, பாசம், நேசம் எல்லாம் படத்தை பார்க்க தூண்டுகிறது.
உங்கள் பெற்றோரின் திருமண நாள் வணங்கி கொள்கிறேன்.
வெண்டைக்காய் நகைச்சுவை அருமை.
தொகுப்பு சுவாரஸ்யம். அவரவர் விருப்பம் எனினும் பொது இடங்கள், அலுவலகங்களில் ஜில்ஜில் சத்தம் மற்றவருக்குத் தொந்திரவே.
பதிலளிநீக்கு