செவ்வாய், 28 ஜூன், 2011

காதறுந்த ஊசியும் எவர்சில்வர் லோட்டாவும்…

"காதறுந்த ஊசியும் வாராது காண் கடைவழிக்கே.  இது நம்மில் நிறைய பேர் கேள்விப்பட்ட ஒரு வாக்கு.  திருவெண்காடர் என்ற இயற்பெயர் கொண்ட பட்டினத்தாரின் மகன்மருதப்பிரான்தனது தந்தைக்கு விட்டுச் சென்ற ஒரு பெட்டியில் ஒரு காதற்ற ஊசியும், ஒரு ஓலை நறுக்கும் இருந்ததாம்.  ஓலையில் எழுதி இருந்த வாசகமே மேலே சொல்லி இருப்பது.  அது கண்ட பிறகே திருவெண்காடர் துறவறம் பூண்டு பட்டினத்தார் என்ற பெயரில் நிறைய பாடல்களை நமக்காக விட்டுச் சென்றார் என்றெல்லாம் நாம் படித்திருக்கிறோம்

தன்னுடைய தாயாருக்குத் தகனக் கிரியை செய்கையில் பாடிய பத்து பாடல்களில் பொதிந்து கிடக்கும் உண்மையை  யாரால் மறுக்க இயலும்.

முதல் பாடல்

     ”ஐயிரண்டு திங்களாய் அங்கமெலாம் நொந்துபெற்றுப்
     பையலென்ற போதே பரிந்தெடுத்துச்செய்ய இரு
     கைப்புறத்தி லேந்திக் கனகமுலை தந்தாளை
     எப்பிறப்பிற் காண்பேன் இனி.”

பொருள்:  பத்து மாதங்கள் ஐயோ என்னுமாறு சுமந்து கால் முதல் தலையளவுள்ள உறுப்புகள் அனைத்தும் வருத்தமடைந்து பிரசிவித்து, ஆண் குழந்தையென அருகிலுள்ளோர் கூறக் கேட்டவுடனே விரும்பிக் கையில் எடுத்துச் செவ்விய இரண்டு கையிடத்தில் தாங்கி பொன்னணி பூண்ட மார்பகங்களிலுள்ள பாலை உண்ணுமாறு அளித்த அன்னையை இனி எந்தப் பிறப்பிற் காணப் போகின்றேன்?

பள்ளிப் பருவத்தில் இது போன்ற பாடல்களைப் படித்திருந்தாலும் நம்மில் எத்தனை பேர் இதனை வாழ்க்கையில் பயன்படுத்துகிறோம்.  “காதறுந்த ஊசி…” படித்தும் மாய்ந்து மாய்ந்து தேவைக்கு அதிகமாகவே பொருள் தேடுகிறோம்.  தேடிய பொருளைக் காக்கவும் பலவித செயல்களைச் செய்கிறோம்

சில வருடங்களுக்கு  முன்பு நண்பர்களுடன் ரிஷிகேஷ் சென்றிருந்தேன்.  பிரவாகமாக தங்குதடையின்றி அங்கே ஓடிக்கொண்டு இருந்த  கங்கையில் நாங்கள்  நீராடிக் கொண்டிருந்த  போது அங்கே ஒரு பெரியவரும் கையிலிருந்த லோட்டாவில் தண்ணீர் எடுத்து நீராடிக் கொண்டிருந்தார்.  கங்கையின் பிரவாகத்தில் கையிலிருந்த லோட்டா அடித்துக் கொண்டுச் செல்ல, பெரியவர் செய்வதறியாது திகைத்தார்

பக்கத்திலேயே நீராடிக்கொண்டு இருந்த அவரது மகன் இதனைப் பார்த்தவுடன், “இவ்வளவு வயசாச்சு, ஒரு லோட்டாவைக்  கூட பத்திரமா வச்சுக்க முடியாதா?” என்பது போன்ற சொற்களால் சுட, அந்தப் பெரியவர் வாயடைத்து நின்று கொண்டிருந்தார்அவர் இப்படித் திட்டத்திட்ட நாங்கள் கூட ஏதோ நவரத்தினங்கள் பதித்த தங்க லோட்டாவைத்தான் விட்டுவிட்டாரோ என நினைத்து, அந்த பெரியவரின் மகனிடம் கேட்டே விட்டோம்

தங்கமோ வெள்ளியோ அல்ல, சாதாரண எவர்சில்வர் லோட்டாஎன்று கூறிய அந்த மகன், “எதுவா இருந்தா என்ன?” என்று எங்களையும் சுட்டெரித்து, ”ஒரு பொறுப்பு வேண்டாம்…” என்று திட்டுவதைத் தொடர்ந்தார்.

மெத்தப் படித்து, பெரிய பொறுப்பில் நிறைய பணம் சம்பாதித்துக் கொண்டிருக்கிறாராம்  அவர். எத்தனை படித்து, எவ்வளவு பணம் சம்பாதித்து என்ன, “எதைக் கொண்டு வந்தோம்கொண்டு செல்ல…..” என்பது புரியவில்லையே அவருக்கு.

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கிறேன்

வெங்கட்.
  

வெள்ளி, 24 ஜூன், 2011

உதவும் கரம்தில்லியில் உள்ள பாபா கரக் சிங் சாலையில் இந்தியாவின் பெரும்பாலான மாநிலங்களின் பேரங்காடிகள் அமைந்துள்ளன.  இந்த அங்காடிகளில் அந்தந்த மாநிலங்களின் சிறப்பு அம்சங்களாக, கலைப் பொருட்கள், கைவினைப் பொருட்கள், துணிகள் ஆகியவை பார்வைக்கும் விற்பனைக்கும் வைக்கப்பட்டு இருக்கும்தில்லியில் நிறைய மக்கள் சில அற்புதமான பரிசுப் பொருட்கள் வாங்க விரும்பி நாடுவது இந்த அங்காடிகளைத் தான்

அந்தந்த மாநிலங்களின் அங்காடிகள் தவிர பொதுவாக Rajiv Gandhi Handicrafts Bhavan என்ற ஒரு அரங்கமும் இரண்டாவது மாடியில் அமைந்துள்ளது.  வருடம் முழுவதும் ஏதாவது ஒரு மாநிலத்தினை மையக் கருவாய் வைத்து சில நாட்கள்ஷில்பி ஹாட்என்ற பெயரில் கண்காட்சியும் நடத்துவார்கள்
  
தற்போது அங்கே மேற்கு வங்காள மாநிலத்தினை மையமாய்க் கொண்ட "ஷில்பி ஹாட்" நடைபெறுகிறது.  வீட்டுக்கு அருகில் இருப்பதால் சென்ற ஞாயிறன்று இந்த கண்காட்சிக்கு சென்றோம்பெயர் மட்டும் தான் ஷில்பி என்று இருக்கிறதே தவிர, அங்கே சிற்பங்களை விட மற்ற கைவினைப் பொருட்கள் தான் அதிகம் இருந்தன.  பெங்கால் காட்டன் புடைவைகள், அதே பருத்தியில் நெய்த சுடிதார் துணிகள், தைத்த சுடிதார்கள், பெண்களுக்கான தோல் கைப்பைகள், சிறு சிறு பொம்மைகள், சணலினால் செய்யப்பட்ட மாலை மற்றும் தோடுகள் என பலவித பொருட்கள் காட்சிக்கும் விற்பனைக்கும் வைத்திருந்தனர்.  

துணியில் வரையப்பட்ட அழகான, வண்ணமயமான காட்சிகள், காளி மாதாவின் உருவம், பல்வேறு வடிவங்கள் என்று இரண்டு மூன்று இடங்களில் விற்பனைக்கு வைத்திருந்தனர். பெங்காலியில்படோசித்ரஎன்று அழைக்கப்படும் அந்த சித்திரங்களைப் புகைப்படம் எடுக்கலாம் என கேமராவினை எடுத்தவுடன், அந்த புகைப்படங்களை வரைந்த அம்மணியோ, “போட்டோ துல்பே நா, போட்டோ துல்பே நாஎன்று அலற புரியாத நான் கேமராவினை ஆன் செய்ய, பிறகு அந்த பெண்மணி அபியயம் மூலமாய் எனக்கு விளக்க, ஒரு வழியாய் எனக்குப் புரிந்து அங்கிருந்து புகைப்படம் எடுக்காமல் நகர்ந்தேன்.   


இது போன்ற கண்காட்சிகள், நிச்சயமாய் மாநிலங்களில் இருக்கும் நலிந்த கைவினைப் பொருட்கள் தயாரிக்கும் நபர்களுக்கு உதவும் கரம் ஆக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.  

உதவும் கரம் என்றவுடன் நினைவுக்கு வருகிறது.  இந்த கண்காட்சியில் நிறைய கடைகளில் உதவும் கரம் [Helping Hand] என்ற மரத்தினால் ஆன ஒரு பொருளையும் சத்தமாய் விற்றுக் கொண்டு இருந்தனர்.  அந்த பொருள் என்ன என்று ஆர்வத்துடன்  பார்த்தால் மரத்தினால் ஆன ஒரு குச்சியின் முனையில் பிளாஸ்டிக்-ஆல் ஆன ஒரு கை இருக்கிறது.  என்ன இது என்று கேட்டால், அதை வைத்து முதுகை சொறிந்து காட்டுகிறார் அந்த கடைக்காரர்.  


நிறைய பொருட்கள் இருந்தாலும் அங்கே உள்ள பொருட்கள் சற்றே விலை அதிகமாக இருப்பதாகச் சொல்லிக் கொண்டு வந்தார் சகதர்மிணி.   ஆனாலும், காதணியுடன் கூடிய ஒரு கழுத்தணி, வளையல்கள் போன்றவை வாங்கிக் கொடுத்தேன். [பின்னே  சும்மா வந்துட முடியுமா?] 
நாங்கள் ரசித்த அந்த கண்காட்சியில் எடுத்த சில புகைப்படங்கள் உங்கள் காட்சிக்காய் ஆங்காங்கே சேர்த்திருக்கிறேன்.  "படோசித்ர” படம் மட்டும் கூகிளாண்டவரிடம் இருந்து அபேஸ் செய்தது... 

மீண்டும் வேறு ஒரு பகிர்வில் சந்திக்கும் வரை...

நட்புடன்..

வெங்கட்.