காசி - அலஹாபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
காசி - அலஹாபாத் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 9 ஜனவரி, 2013

மின்வெட்டும் விபத்தும்



திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 16

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11 12 13 14 15

கடந்த பதினைந்து பகுதிகளாக உங்களையும் காசி மற்றும் அலஹாபாத் அழைத்துச் சென்றதில் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே. இரண்டு நாட்களில் நான் பார்த்த, ரசித்த சில இடங்களையும், மனிதர்களையும் பற்றி இது வரை பதினைந்து பகுதிகளாக எழுதியிருக்கிறேன் [இது கொஞ்சம் ஓவரோ?]. அருங்காட்சியகத்திலிருந்து நாங்கள் வெளியே வரும்போது மாலை நான்கு மணி. தில்லி திரும்ப நாங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் இரவு 09.30 மணிக்குதான். அது வரை என்ன செய்வது என யோசித்து எங்கள் வாகன ஓட்டுனர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டபோது அலஹாபாத் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ஷாப்பிங் மால் கொஞ்சம் வண்ணமயமாக இருக்கும், அங்கே இறக்கி விடுகிறேன், கொஞ்சம் சுற்றி விட்டு நீங்கள் தங்குமிடம் சென்று தயாராகிக் கிளம்ப சரியாக இருக்குமெனச் சொல்ல ஷாப்பிங் மால் சென்றோம்.

 பட உதவி: கூகிள்

ரயில் நிலையம் அருகில் இருக்கும் பகுதிகள் கொஞ்சம் பழமையாகவே அழுக்காக இருக்க, கண்டோன்மெண்ட் பகுதிகளில் நல்ல முன்னேற்றம். சாலைகள் சுத்தமாகவும், அகலமாகவும் இருந்தன. உள்ளே நுழையுமுன் சோதனைகள் செய்த பின்னரே அனுமதித்தனர்.  ஆங்காங்கே 6½ அடி மனிதர்கள் தலைப்பில் தொப்பி, கையில் வாக்கி சகிதம் சுற்றிக் கொண்டிருந்தனர் – Bouncers ஆம். எதற்கு என யோசித்து சில நொடிகள் ஆகவில்லை – அவர்களின் தேவையும் சேவையும் அறிய வாய்ப்பு கிட்டியது.

இரண்டு இளைஞர்கள் நல்ல மப்பில் எதிரே வந்த பெண்களை இடித்துத் தொந்தரவு செய்ய, இந்த 6½ அடி மனிதர்களில் இருவர், குடி-இடி மன்னர்களை குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர். இடிமன்னர்களுக்கு இது தேவை தான் என நினைத்தபடியே கடைகளை நோட்டமிட்டோம். எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது. உள்ளே இருக்கும் திரையரங்கத்தில் ஏதாவது படம் பார்க்கலாமெனில் கைப்பைகள், கேமரா ஆகியவை எடுத்துச்செல்ல அனுமதியில்லை, அவற்றை எதாவது கடையின் பாதுகாப்பு அறையில் வைத்து வாருங்கள் எனச் சொல்லவே ‘படமே பார்க்க வேண்டாம்!என வெளியே வந்து விட்டோம்.

ஏழு மணி வரை நேரம் போவது தெரியாது சுற்றிவிட்டு சில பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அறைக்குத் திரும்பினோம்.  சற்றே இளைப்பாறியபோது, மனதில் அலஹாபாத் இனி எப்போதும் வரப்போவதில்லை என்று தோன்றியது. இரவு உணவு உண்டு, கடைசியாக ஒரு முறை தயிரில் முக்கிய ஜாங்கிரி சாப்பிட்டு எதிரே இருக்கும் ரயில் நிலையத்திற்கு பத்து ரூபாய் கொடுத்து ரிக்‌ஷாவில் சென்றோம். ரயில் எங்களுக்காகவே காத்திருந்த்து போல, அமர்ந்து சில நிமிடங்களில்யே சரியான சமயத்தில் கிளம்பியது. அப்போது தெரியவில்லை – அடுத்த நாள் சரியான சமயத்தில் புது தில்லி சென்று சேராது என!

ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் வரும் வரை உறங்காது காத்திருந்தோம். மொபைலை எடுத்து எஸ்.எம்.எஸ். காண்பிப்பதற்குள், இருக்கை எண்ணை மட்டும் கேட்டு விட்டு சென்று விட்டார் – ஐடி கூட கேட்க வில்லை – முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல! – நிச்சயம் சீட்டு வாங்கியிருப்போமென.  நித்திராதேவி அழைக்க அவள் மடியில் உறங்கச் சென்றுவிட்டேன்.


பட உதவி: கூகிள்


ரயில் செல்லும் சலனமே இல்லாதது போல உணர, சரி எதாவது ரயில் நிலையமாக இருக்குமென நினைத்தேன். அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருப்பது போலத் தோன்றவே எழுந்து பார்த்தால், அதே இடத்திலேயே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக நின்று கொண்டிருப்பதாக பயணச் சீட்டு பரிசோதகர் சொன்னார். என்ன காரணம் என்று தெரியவில்லை எனவும் சொன்னார்.

பொழுதும் புலர்ந்தது. தில்லியிலிருக்கும் நண்பரிடமிருந்து அழைப்பு – “என்னய்யா, எங்கே நின்னுட்டு இருக்கு வண்டி?ஐந்தரை மணிக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பதைச் சொன்னபோது இன்னும் கூட நேரமாகலாமெனச் சொல்லி, மொத்த வட இந்தியாவிலும் Power Grid Failure எனும் செய்தியைச் சொன்னார். ரயிலை விட்டு இறங்கி சாலை வழி வரலாமெனில் ரயில் நின்றுகொண்டிருந்த்து அத்வானக் காட்டில். அங்கிருந்து சாலைக்குச் செல்ல வழியில்லை. எனவே வெளியே பார்வையை ஓட்டினேன். அருகிலிருந்து மரமொன்றில் தூக்கணாங்குருவிகள் பல கூடுகளைக் கட்டி ஒற்றுமையாக வசிப்பதைப் பார்க்க முடிந்த்து – அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு போலும்!

மீண்டும் நண்பரின் அழைப்பு – தமிழ்நாடு விரைவு வண்டியில் தீ விபத்து. முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு”. செய்தி கேட்டவுடன் பதைபதைப்பு. என்னுடைய நண்பர் ஒருவரும் அதே வண்டியில் சென்று கொண்டிருந்தார். உடனே அவருக்கு அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தேன். நல்ல வேளை அவருக்கு ஒன்றும் ஆக வில்லை.

என்ன தான் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், இன்னும் இந்திய இரயில்வே துறை பாதுகாப்பிற்கும், சுத்தத்திற்கும், பயணிகள் சௌகரியத்திற்கும் நிறையவே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.  ஒரு வழியாக மின்சாரம் வந்து வண்டி கிளம்பியது. ஆனாலும் சரியான வேகத்தில் வராது மிகவும் மெதுவாக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்று, தில்லி வந்து சேர்ந்த போது மதியம் மணி 12.30.  வீட்டிற்குச் சென்று குளித்து தயாராகி அலுவலகம் சென்றேன்.

பயணத்திற்கான முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், இரண்டு தினங்களில் காசி – அலஹாபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்க்ளில் சில இடங்களைக் கண்டு வந்தாயிற்று. உங்களுடன் இப்பயணத் தொடரின் மூலம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. 

மீண்டும் வேறொரு பயணத் தொடரில் விரைவில் சந்திக்கலாம் – அது இந்தியாவின் தென்பகுதிப் பயணமாக்க் கூட இருக்கலாம்! :)

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


புதன், 26 டிசம்பர், 2012

அலஹாபாத் அருங்காட்சியகம்



திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 15

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11 12 13 14



அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து மூன்று கிலோ மீட்டர் தொலைவில், சந்திர சேகர் ஆசாத் பூங்காவிற்கு மிக அருகில் அமைந்திருப்பது அலஹாபாத் அருங்காட்சியகம். சென்ற பகுதியில் சென்றது மோதிலால் நேரு அவர்களின் ஆனந்த பவன் – ஸ்வராஜ் பவன். அங்கிருந்து கிளம்பி நாங்கள் அடுத்ததாய்ச் சென்றது இந்த அருங்காட்சியகத்திற்குத் தான்.

 
வளாகத்தின் வெளியிலேயே சந்திர சேகர ஆசாத் அவர்களின் சிலை ஒன்று அமைக்கப்பட்டு இருக்கிறது. எதிரே புல்வெளி ஒன்றும் பராமரித்து வருகிறது இந்த நிர்வாகம். நுழைவுச் சீட்டு வாங்கிக் கொண்டு உள்ளே செல்லும் வழியில் பலவிதமான, புராதனமான சிற்பங்களும் நம்மை வரவேற்கின்றன. வாருங்கள் அழைப்பினை ஏற்று உள்ளே செல்வோம்.



அருங்காட்சியினுள் நுழைந்தவுடன் நம்மை வரவேற்பது கிருஷ்ணரும் அர்ஜுனனும். யானைத் தந்தத்தில் செய்யப்பட்ட இச்சிலை இருப்பது சந்தனத்தில் செய்த ஒரு தேரில். மிக அழகாக இருக்கும் இதை ஒரு கண்ணாடிப் பெட்டியினுள் பத்திரப்படுத்தி இருக்கிறார்கள். வரும் மக்கள் அதைத் தொட்டுப் பார்த்து, I Love You darling என எழுதி விடுவார்களோ என்ற பயம் காரணமாக இருக்கலாம்!

இந்தியாவின் தேசிய அளவிலான அருங்காட்சியகங்களில் இதுவும் ஒன்று. பறவைகள் மற்றும் விலங்குகளின் சிற்பங்களோடு சிறிய அளவில் 1931 ஆம் ஆண்டு அலஹாபாத் நகராட்சியில் தொடங்கப்பட்ட இந்த அருங்காட்சியகம் தற்போது செயல்படும் இடம் 1947 ஆம் ஆண்டு அடிக்கல் நாட்டப்பட்டது. 1952 – ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்ட இந்த இட்த்தில் பலவிதமான புராதனமான சிற்பங்கள், டெரக்கோட்டா வகை கலைப் பொருட்கள் என எண்ணிலடங்கா விஷயங்கள் இருக்கின்றன.



உலக அளவில் நிறைய பொருட்களைக் கொண்ட அருங்காட்சியகங்களில் இதையும் சொல்லலாம். இண்டஸ் வேலி, தொல்பொருட்கள், கைவினைப் பொருட்கள், வெண்கல முத்திரைகள், நாணயங்கள் [தங்கம் மற்றும் வெள்ளி], மிகச் சிறிய ஓவியங்கள், புத்தர் கால திரைச்சீலை ஓவியங்கள், உடைகள், தளவாடங்கள், ஆயுதங்கள் என இங்கிருக்கும் பொருட்களைச் சொல்லிக் கொண்டே போகலாம்.



நேரு அவர்கள் தனது பங்காக அவரிடம் இருந்த பல அரிய பொருட்களையும் இந்த அருங்காட்சியகத்திற்கு அன்பளிப்பாகக் கொடுத்திருக்கிறார்.



இந்த அருங்காட்சியகத்தில் இருபத்தி ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட புத்தகங்களைக் கொண்ட ஒரு சிறப்பான நூலகமும் இருக்கிறது. அருங்காட்சியகத்திற்கு வரும் நபர்கள் நேரமிருந்தால் அங்கேயும் சென்று பார்க்கலாம்.



புராதன சிற்பங்கள், ஓவியங்கள் மட்டுமல்லாது சமகால படைப்புகளையும் ஆங்காங்கே வைத்திருந்தார்கள்.  இந்த அருங்காட்சியகத்தில் மொத்தம் 18 காட்சியகங்கள் இருக்கின்றன. இவற்றில் வைக்கப்பட்டுள்ள பொருட்கள் தவிரவும் செல்லும் வழியெங்கும் கூட கலைப் பொருட்கள் வைக்கப்பட்டு இருக்கின்றன. பழமையை விரும்பும் நபர்களுக்கு இந்த இடம் நிச்சயம் ஒரு வரப் பிரசாதம்.



சுதந்திரப் போராட்டத்தினைப் பற்றிய குறிப்புகளுக்கும் செய்திகளுக்கும் கூட இங்கே இடமுண்டு. மகாத்மா காந்தியின் வாழ்க்கையும் அவரது சாதனைகளும் புகைப்படங்கள் மூலமாக விவரிக்கப் பட்டிருக்கின்றன. பல வெளி நாடுகளால் மகாத்மா காந்தியின் நினைவாக வெளியிடப்பட்ட அரிய தபால் தலைகள், நாணயங்கள் ஆகியவற்றையும் இங்கே காட்சிக்கு வைத்திருக்கிறார்கள்.

சிறப்பான இந்த இடத்திற்குச் செல்ல நுழைவுச் சீட்டு என்று சொல்லிவிட்டு எவ்வளவு கட்டணம் என்று சொல்லாமல் விடுவதா? பெரியவர்களுக்கு ஐந்து ரூபாய், பன்னிரெண்டு வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு இரண்டு ரூபாய். எல்லா இடங்கள் போலவே, வெளிநாட்டவர்களுக்கு 100 ரூபாய்! புகைப்படங்கள் எடுக்க விரும்பினால் ரூபாய் 25 கொடுத்து ஒரு சீட்டு வாங்க வேண்டும் – எடுக்கும் புகைப்படங்களை தவறாகப் பயன்படுத்த மாட்டேன் எனும் உத்திரவாதம் எழுதியும் தரவேண்டும்! வருடம் முழுவதும் [திங்கள், இரண்டாம் ஞாயிறு மற்றும் அரசு விடுமுறைகள் நீங்கலாக] காலை 10.30 மணி முதல் மாலை 04.45 வரை இந்த அருங்காட்சியகம் திறந்திருக்கும்.

சந்திர சேகர ஆசாத் பூங்கா
அல்ஹாபாத் சென்றால் பார்க்க வேண்டிய இடங்களில் இதையும் ஒன்றாக குறித்துக் கொள்ளலாம். இடங்களைச் சுற்றிப் பார்த்து கொஞ்சம் களைப்பாயிருக்கிறதா? அருங்காட்சியகத்தின் எதிரே தான் சந்திர சேகர ஆசாத் பூங்கா! அங்கே சற்றே இளைப்பாருங்களேன்! நான் அதற்குள் அடுத்த பகுதியை எழுதி முடிக்கிறேன்.

மீண்டும் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 19 டிசம்பர், 2012

A 2 B – நேருவின் ஜாதகம்



திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 14

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11 12 13




இன்று உங்களை அழைத்துச் செல்லப்போவது ஆனந்த பவனுக்கு. அடையார் ஆனந்த பவனுக்கு இல்லை அலஹாபாத் ஆனந்தபவனுக்கு. 1900-களில் மோதிலால் நேரு ஒரு சிறந்த வழக்குரைஞர். இலண்டனுக்கும் இந்தியாவிற்கும் அடிக்கடிச் சென்று வந்து கொண்டிருந்தவர். தனது ஊரான அலஹாபாதின் சர்ச் ரோடில் இருந்த ஒரு வீட்டையும் அதைச்சுற்றிய தோட்டத்தினையும் வாங்கினார். பெரிய் வீடு தான் ஆனால் மோசமாக இருந்த வீடு.

வீட்டினை வாங்கி அதை புனர்நிர்மாணம் செய்ய ஆரம்பித்தார்.  பத்து வருடங்களுக்கு மேல் இந்த வேலை நடந்ததாம். ஒவ்வொரு முறை இலண்டன் செல்லும்போதும் அங்கே இருந்து தனக்குப் பிடித்த வகையில் அறைகலன்களையும் பொருட்களையும் வாங்கி வந்து தனது மாளிகையில் வைத்தாராம் மோதிலால் நேரு. ஆங்கிலேயர்களின் வீடுகளைப் போல வசதிகள் கொண்டு கட்டுவதில் முனைப்பாக இருந்திருக்கிறார். 



இரண்டு மாடிகளைக் கொண்ட இந்த ஆனந்த பவன் சர் சையத் அஹமது கான் என்பவரிடமிருந்து 19000 ரூபாய்க்கு வாங்கப் பட்டதாம்! இப்போது இந்த இடத்தின் மதிப்பு கோடிகளில்!  பக்கத்திலேயே இன்னோர் வீடும் விலைக்கு வர, அதையும் வாங்கி தான் தங்குவதற்கு வைத்துக் கொண்டு, இந்த வீட்டினை 1930 – ஆம் ஆண்டு, இந்திய தேசிய காங்கிரஸ் கட்சிக்கு அன்பளிப்பாக்க் கொடுத்து விட்டாராம் மோதிலால் நேரு. கட்டிடத்தின் பெயரை ஸ்வராஜ் பவன் என்று மாற்றி விட்டு, தான் வாங்கிய அடுத்த வீட்டின் பெயரை ஆனந்த பவன் ஆக்கினார். காங்கிரஸ் கட்சியின் பல முக்கியமான கூட்டங்கள் இங்கே தான் நடத்தப்பட்டது. பல சிறப்பான திட்டங்கள் தீட்டியதும், சுதந்திரத்திற்கான முயற்சிகள் எடுத்ததும் இங்கிருந்து தான்.



இதே வீட்டில் பிறந்த இந்திரா காந்தி, 1970-ஆம் ஆண்டு இவ்வீட்டினை இந்திய நாட்டிற்கு அர்ப்பணித்தார்.  அவரின் விருப்பப்படியே, இன்று அங்கே ஒரு அருங்காட்சியகம் ஏற்படுத்தப்பட்டு, மோதிலால் நேரு, ஜவஹர் லால் நேரு மற்றும் இந்திரா காந்தி ஆகியோர்கள் பயன்படுத்திய பொருட்கள், புத்தகங்கள், பரிமாறிய கடிதங்கள், இந்திய விடுதலை இயக்கம் பற்றிய விவரங்கள், புகைப்படங்கள் என பல அரிய பொக்கிஷங்களை தன்னகத்தே கொண்டுள்ளது.



நேருவின் ஜாதகம்: இந்த இடத்தில் நேரு பயன்படுத்திய பல பொருட்களை வைத்திருக்கிறார்கள். பல பத்திரிகைகளில் வந்த சித்திரங்களையும், செய்திகளையும் புகைப்படங்களின் அருகே ஒரு புகைப்படத்தில் ஹிந்தியில் ஏதோ எழுதி வைத்திருக்க அருகில் சென்று படித்தால், அது நேருவின் ஜாதகம்! அதை ஒரு புகைப்படம் எடுத்து வந்தோம். நீங்களும் பார்க்கத்தான்!

காந்தி அலஹாபாத் வரும்போதெல்லாம் இங்கே தான் தங்குவாராம்.  அவர் தங்கிய இடத்தில் காந்தி பற்றிய நினைவுகளை அமைத்திருக்கிறார்கள். அங்கிருந்து அழகிய தோட்டத்தினை பார்க்க முடியும்.



இந்த அருங்காட்சியகத்தின் வெளியே ஒரு ஹாலில் ஒரு கோளரங்கமும் இருக்கிறது. தினமும் ஆங்கிலத்திலும் ஹிந்தியிலும் நீங்கள் Light and Sound Show பார்க்க வசதிகளும் செய்திருக்கிறார்கள்.



இந்த அருங்காட்சியகம், திங்கள் தவிர்த்து மற்ற எல்லா நாட்களிலும் திறந்து இருக்கும்.  09.30 மணி முதல் 05.00 மணி வரை திறந்திருக்கும் இங்கு செல்ல அனுமதிச் சீட்டு வாங்க வேண்டும் – அதன் கட்டணம் இந்தியர்களுக்கு 10 ரூபாய், வெளிநாட்டவர்களுக்கு 50 ரூபாய்!

நாங்கள் முழுவதும் சுற்றி விட்டு, சில புகைப்படங்கள் எடுத்த பின் வெளியே அமர்ந்திருந்தோம். அலஹாபாத் செல்லும் அத்தனை பயணிகளும் இங்கே செல்கிறார்கள். நிறைய சுற்றுலாப் பயணிகளைக் காண முடிந்தது. கங்கைக் கரையில் கண்ட “உலகம் சுற்றும் வாலிபனைஇங்கேயும் காண முடிந்தது. அது தவிர சில தெலுங்கு மக்களையும் பார்த்தோம். வேலூரைச் சேர்ந்த ஒரு தம்பதிகளைப் பார்த்தபோது, அந்தப் பெண்மணிக்கு உள்ளே சென்று சுற்றிப் பார்க்க ஆசை. ஆனால் கணவருக்கோ கால் வலி! மனைவிக்கு, கணவனை விட்டு உள்ளே செல்லவும் பிடிக்காது, செல்லாமல் இருக்கவும் முடியாது தவிக்க, நீ போயிட்டு வாம்மா, நான் இங்கேயே தம்பி பக்கத்துல உட்கார்ந்துக்கறேன்என்று என்னருகில் உட்கார்ந்தார். 

என்னருகில் அமர்ந்த அவரிடம் தமிழில் பேச, அவருக்கு மிகுந்த சந்தோஷம். அட இந்த ஊர்லயா இருக்கீங்க, தமிழ் நல்லா பேசறீங்களே?என்றார். அவர் பயணம் பற்றி கேட்டபோது வேலூரிலிருந்து கிளம்பி பதினெட்டு நாட்கள் ஆகிவிட்டது என்றார். இன்னும் இரண்டு நாட்கள் சுற்றிவிட்டு தில்லி வந்து அங்கிருந்து ரயிலில் செல்லப்போவதாகக் கூறினார். தொடர்ந்து பயணம் செய்வதில் பலருக்கு உடல் நிலை சரியில்லை எனவும் ‘எப்படா வீட்டுக்குப் போய் அக்கடான்னு சாய்வோம்னு இருக்கு எனவும் சொன்னார். 

பயணம் இனியது தான் ஆனால் தொடர் பயணம் நிச்சயம் இனிக்காது இல்லையா! இப் பயணத் தொடரின் பதினான்ாம் பகுதி இது.  இன்னும் இரண்டு பகுதிகளில் பயணத் தொடர் முடியும்.

பயணத் தொடரின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.