புதன், 9 ஜனவரி, 2013

மின்வெட்டும் விபத்தும்திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 16

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11 12 13 14 15

கடந்த பதினைந்து பகுதிகளாக உங்களையும் காசி மற்றும் அலஹாபாத் அழைத்துச் சென்றதில் உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே. இரண்டு நாட்களில் நான் பார்த்த, ரசித்த சில இடங்களையும், மனிதர்களையும் பற்றி இது வரை பதினைந்து பகுதிகளாக எழுதியிருக்கிறேன் [இது கொஞ்சம் ஓவரோ?]. அருங்காட்சியகத்திலிருந்து நாங்கள் வெளியே வரும்போது மாலை நான்கு மணி. தில்லி திரும்ப நாங்கள் முன்பதிவு செய்திருந்த ரயில் இரவு 09.30 மணிக்குதான். அது வரை என்ன செய்வது என யோசித்து எங்கள் வாகன ஓட்டுனர் அப்துல் கலாம் அவர்களிடம் கேட்டபோது அலஹாபாத் கண்டோன்மெண்ட் பகுதியில் இருக்கும் ஷாப்பிங் மால் கொஞ்சம் வண்ணமயமாக இருக்கும், அங்கே இறக்கி விடுகிறேன், கொஞ்சம் சுற்றி விட்டு நீங்கள் தங்குமிடம் சென்று தயாராகிக் கிளம்ப சரியாக இருக்குமெனச் சொல்ல ஷாப்பிங் மால் சென்றோம்.

 பட உதவி: கூகிள்

ரயில் நிலையம் அருகில் இருக்கும் பகுதிகள் கொஞ்சம் பழமையாகவே அழுக்காக இருக்க, கண்டோன்மெண்ட் பகுதிகளில் நல்ல முன்னேற்றம். சாலைகள் சுத்தமாகவும், அகலமாகவும் இருந்தன. உள்ளே நுழையுமுன் சோதனைகள் செய்த பின்னரே அனுமதித்தனர்.  ஆங்காங்கே 6½ அடி மனிதர்கள் தலைப்பில் தொப்பி, கையில் வாக்கி சகிதம் சுற்றிக் கொண்டிருந்தனர் – Bouncers ஆம். எதற்கு என யோசித்து சில நொடிகள் ஆகவில்லை – அவர்களின் தேவையும் சேவையும் அறிய வாய்ப்பு கிட்டியது.

இரண்டு இளைஞர்கள் நல்ல மப்பில் எதிரே வந்த பெண்களை இடித்துத் தொந்தரவு செய்ய, இந்த 6½ அடி மனிதர்களில் இருவர், குடி-இடி மன்னர்களை குண்டுகட்டாகத் தூக்கி வெளியேற்றினர். இடிமன்னர்களுக்கு இது தேவை தான் என நினைத்தபடியே கடைகளை நோட்டமிட்டோம். எல்லாக் கடைகளிலும் மக்கள் கூட்டம் இருந்து கொண்டே தான் இருந்தது. உள்ளே இருக்கும் திரையரங்கத்தில் ஏதாவது படம் பார்க்கலாமெனில் கைப்பைகள், கேமரா ஆகியவை எடுத்துச்செல்ல அனுமதியில்லை, அவற்றை எதாவது கடையின் பாதுகாப்பு அறையில் வைத்து வாருங்கள் எனச் சொல்லவே ‘படமே பார்க்க வேண்டாம்!என வெளியே வந்து விட்டோம்.

ஏழு மணி வரை நேரம் போவது தெரியாது சுற்றிவிட்டு சில பொருட்களை வாங்கிக் கொண்டு அங்கிருந்து அறைக்குத் திரும்பினோம்.  சற்றே இளைப்பாறியபோது, மனதில் அலஹாபாத் இனி எப்போதும் வரப்போவதில்லை என்று தோன்றியது. இரவு உணவு உண்டு, கடைசியாக ஒரு முறை தயிரில் முக்கிய ஜாங்கிரி சாப்பிட்டு எதிரே இருக்கும் ரயில் நிலையத்திற்கு பத்து ரூபாய் கொடுத்து ரிக்‌ஷாவில் சென்றோம். ரயில் எங்களுக்காகவே காத்திருந்த்து போல, அமர்ந்து சில நிமிடங்களில்யே சரியான சமயத்தில் கிளம்பியது. அப்போது தெரியவில்லை – அடுத்த நாள் சரியான சமயத்தில் புது தில்லி சென்று சேராது என!

ரயிலில் பயணச்சீட்டு பரிசோதகர் வரும் வரை உறங்காது காத்திருந்தோம். மொபைலை எடுத்து எஸ்.எம்.எஸ். காண்பிப்பதற்குள், இருக்கை எண்ணை மட்டும் கேட்டு விட்டு சென்று விட்டார் – ஐடி கூட கேட்க வில்லை – முகத்தில் எழுதி ஒட்டியிருக்கும் போல! – நிச்சயம் சீட்டு வாங்கியிருப்போமென.  நித்திராதேவி அழைக்க அவள் மடியில் உறங்கச் சென்றுவிட்டேன்.


பட உதவி: கூகிள்


ரயில் செல்லும் சலனமே இல்லாதது போல உணர, சரி எதாவது ரயில் நிலையமாக இருக்குமென நினைத்தேன். அரை மணி நேரத்திற்கும் மேலாக அங்கேயே இருப்பது போலத் தோன்றவே எழுந்து பார்த்தால், அதே இடத்திலேயே கிட்டத்தட்ட ஐந்து மணி நேரமாக நின்று கொண்டிருப்பதாக பயணச் சீட்டு பரிசோதகர் சொன்னார். என்ன காரணம் என்று தெரியவில்லை எனவும் சொன்னார்.

பொழுதும் புலர்ந்தது. தில்லியிலிருக்கும் நண்பரிடமிருந்து அழைப்பு – “என்னய்யா, எங்கே நின்னுட்டு இருக்கு வண்டி?ஐந்தரை மணிக்கு மேலாக ஒரே இடத்தில் இருப்பதைச் சொன்னபோது இன்னும் கூட நேரமாகலாமெனச் சொல்லி, மொத்த வட இந்தியாவிலும் Power Grid Failure எனும் செய்தியைச் சொன்னார். ரயிலை விட்டு இறங்கி சாலை வழி வரலாமெனில் ரயில் நின்றுகொண்டிருந்த்து அத்வானக் காட்டில். அங்கிருந்து சாலைக்குச் செல்ல வழியில்லை. எனவே வெளியே பார்வையை ஓட்டினேன். அருகிலிருந்து மரமொன்றில் தூக்கணாங்குருவிகள் பல கூடுகளைக் கட்டி ஒற்றுமையாக வசிப்பதைப் பார்க்க முடிந்த்து – அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு போலும்!

மீண்டும் நண்பரின் அழைப்பு – தமிழ்நாடு விரைவு வண்டியில் தீ விபத்து. முப்பதிற்கும் மேற்பட்டவர்கள் உயிரிழப்பு”. செய்தி கேட்டவுடன் பதைபதைப்பு. என்னுடைய நண்பர் ஒருவரும் அதே வண்டியில் சென்று கொண்டிருந்தார். உடனே அவருக்கு அலைபேசியில் அழைத்து நலம் விசாரித்தேன். நல்ல வேளை அவருக்கு ஒன்றும் ஆக வில்லை.

என்ன தான் மிகப்பெரிய நிறுவனமாக இருந்தாலும், இன்னும் இந்திய இரயில்வே துறை பாதுகாப்பிற்கும், சுத்தத்திற்கும், பயணிகள் சௌகரியத்திற்கும் நிறையவே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.  ஒரு வழியாக மின்சாரம் வந்து வண்டி கிளம்பியது. ஆனாலும் சரியான வேகத்தில் வராது மிகவும் மெதுவாக, ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் நின்று, தில்லி வந்து சேர்ந்த போது மதியம் மணி 12.30.  வீட்டிற்குச் சென்று குளித்து தயாராகி அலுவலகம் சென்றேன்.

பயணத்திற்கான முன்னேற்பாடுகள் இல்லாவிட்டாலும், இரண்டு தினங்களில் காசி – அலஹாபாத் மற்றும் அதன் சுற்றுப்புறங்க்ளில் சில இடங்களைக் கண்டு வந்தாயிற்று. உங்களுடன் இப்பயணத் தொடரின் மூலம் பகிர்ந்து கொண்டதில் மிக்க மகிழ்ச்சி. உங்களுக்கும் மகிழ்ச்சியாகத் தான் இருக்குமென்பதில் சந்தேகமில்லை. 

மீண்டும் வேறொரு பயணத் தொடரில் விரைவில் சந்திக்கலாம் – அது இந்தியாவின் தென்பகுதிப் பயணமாக்க் கூட இருக்கலாம்! :)

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


38 கருத்துகள்:

 1. நீங்கள் இந்தப்பயண கட்டுரையை ஆரம்பித்த போது சில பதிவுகள் படித்தேன்.நடுவில் படிக்க முடியவில்லை. நேரம் கிடைக்கும் பொழுது விடுபட்ட பதிவுகளை படிக்கிறேன் வெங்கட்.

  நீங்க குறிப்பிட்டுள்ள மாதிரி இரயில்வே துறையில் இன்னும் முன்னேற்றம் வர வேண்டும். முக்கியமாக சுகாதாரம், பாதுகாப்பு. நல்ல அனுபவ பயணம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. முடிந்த போது படியுங்கள் ரமா ரவி. நானும் கடந்த மூன்று வாரங்களாக பலரின் பக்கங்களைப் படிக்க வில்லை! மெதுவாக எல்லாவற்றையும் படிக்க வேண்டும்.. பார்க்கலாம்...

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி .....

   நீக்கு
 2. தூக்கணாங்குருவிகள் பல கூடுகளைக் கட்டி ஒற்றுமையாக வசிப்பதைப் பார்க்க முடிந்த்து – அவர்களின் அடுக்கு மாடி குடியிருப்பு போலும்!

  எதிர்பாராத காட்சியல்லவா ..?? ரசிக்கவைத்தது ..
  பல இன்னல்களுக்கு மத்தியிலும் ...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!....

   நீக்கு
 3. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் ரசிப்பிற்கும் மிக்க நன்றி பழனி. கந்தசாமி ஐயா.....

   நீக்கு
 4. இந்திய இரயில்வே துறை பாதுகாப்பிற்கும், சுத்தத்திற்கும், பயணிகள் சௌகரியத்திற்கும் நிறையவே ஏற்பாடுகள் செய்ய வேண்டும் எனத் தோன்றியது.
  உண்மை தான் என்றாவது ஒரு நாள் பயணம் என்று கிளம்பும் எங்களுக்கே வருத்தமாக இருக்கும் சில இன்னல்கள். தினமும் பயணிப்பவர்களை நினைத்தால் கஷ்டமாகத்தான் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!.....

   நீக்கு
 5. ரயில் பயணங்கள் பாதுகாப்பாக இருப்பதில்லை என்பதற்கு இந்த சம்பவம் ஒரு சின்ன உதாரணம்தான். இன்னும் என்னவெல்லாமோ நடந்து கொண்டுதான் இருக்கிறது சார்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பூந்தளிர்.....

   நீக்கு
 6. பயணத்தொடரை நான் முழுமையாகப் படிக்க இயலாவிடினும் அவ்வப்போது உங்களுடன் பயணம் செய்து வந்தேன். பயணம் சுவார‌சியமாகவே இருந்தது. எந்த சுகமான அனுபவ‌த்திலும் எதிர்பாராத இடைஞ்சல்கள் நிறைய வரும். தூக்கணாங்குருவியை ரசித்து அந்த இடைஞ்சலான அனுபவத்தையும் ரசனையான அனுபவமாக ஏற்றுக்கொண்டதற்கு இனிய வாழ்த்துக்கள்!!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மனோ மேடம்......

   நீக்கு
 7. ரயில் பயணம் இனிமையானதுதான்.. அது ஓடிக்கொண்டிருக்கும் வரையில்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமைதிச்சாரல்.....

   நீக்கு
 8. தங்கள் பயணக் கட்டுரைகள் அனைத்தும் மிக மிக அருமை
  படங்களுடன் விளக்கங்கள் நேரடியாகப் பார்ப்பதைப் போன்ற
  உணர்வினை ஏற்படுத்தி போகின்றன.பகிர்வுக்கு மனமார்ந்த நன்றி
  தென்னக பயணத்தில் சந்திக்க முடிந்தால் மகிழ்வேன்
  வாழ்த்துக்களுடன்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. இம்முறையும் மதுரை வர இயலவில்லை ரமணி ஜி! அடுத்த முறை நிச்சயம் வரவேண்டும்.....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரமணி ஜி!.....

   நீக்கு
 9. நாங்கள் ஒரு முறை சென்னை போகும் ரயிலில் இதுபோல மாட்டிக் கொண்ட நினைவு வந்தது.
  ரயில் நிர்வாகம், முன்பதிவு தளம் எல்லாமே முன்னேற வேண்டும். ஆசியாவின் மிகப் பெரிய ரயில் தொடர்பு என்று பெருமை பேசினால் போதுமா?
  மின்வெட்டால் எங்களுக்கு ஒரு சுவாரஸ்யமான பதிவு கிடைத்தது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா.....

   நீக்கு
 10. நடுவில் இடுகைகளைக் காணவில்லையே வெங்கட். அலஹாபாத் பயணம் இனிதே முடிந்தது சந்தோஷம்.
  மால்கள் இல்லாத இடமே இல்லை போலிருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தமிழகம் - கேரளம் வந்திருந்தேன் வல்லிம்மா..... அதனால் தான் பதிவுகள் இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி .....

   நீக்கு
 11. ஒரு முறை தயிரில் முக்கிய ஜாங்கிரி//

  நல்லாச் சுண்டக் காய்ச்சிய பாலில் கூட ஊற வைச்சுச் சுடச் சுடத் தருவாங்களே! :))))

  பயண அனுபவம் நல்லா இருந்தது. அப்துல் கலாமே வண்டி ஓட்டி இருக்காரே. :))))))பவர் கிரிட் போனப்போதான்போனீங்களா? சரிதான். இம்மாதிரி ரயில் பயண அனுபவங்கள் நம்ம கிட்டே ஏராளமா இருக்கு. :))))

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பால்/தயிர் ஜாங்கிரி இரண்டுமே கிடைக்கும்!

   உங்கள் அனுபவங்களையும் சொல்லுங்களேன்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.....

   நீக்கு
 12. சிறப்பான தொடர். தகவல்களும் அனுபவங்களும் பலருக்கும் பயனாகும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி! .....

   நீக்கு

 13. சிறப்பான தொடர். என்னால் பார்க்க முடியாத இடங்களை உங்கள் கண்கள் வழியே கண்டு ரசித்தேன்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தொடர்ந்து என்னுடன் பயணித்தமைக்கு மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 14. அங்கேயும் மால் இங்கேயும் மால்.

  பயணப்பதிவுகள் அருமை. ரசித்தேன். நேரில் காசி போக இன்னும் வாய்க்கலை. எல்லாம் நண்பர்கள் உங்கள் பதிவின் மூலம்தான்.

  அடுத்த பயணம் எப்போ?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. அடுத்த பயணம் சென்று வந்தாயிற்று! :) விரைவில் கட்டுரைகள் வரலாம்! வராமலும் இருக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   நீக்கு
 15. நம்ப வெங்கட் அண்ணாவுக்கு அப்துல்கலாமே வண்டி ஒடியிருக்கார்தை பார்க்கும் போது அண்ணாச்சி டில்லில பெரிய்ய்ய்ய்ய ஆள் தான் போலருக்கு! :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. டில்லில இல்ல, எல்லா இடத்திலேயும் பெரிய ஆள் தான் - 6 அடி 1 அங்குலம் உயரம் இல்லையா அதச் சொன்னேன்! :)

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தக்குடு!

   நீக்கு
 16. நார்த் இந்தியாவில் எப்போதும் ரயில்கள் சொன்ன நேரத்திற்கு வருவதோ,போவதோ இல்லை. காத்து கிடந்து தான் ஒரு இடத்திலிருந்து போக வேண்டியதாய் இருக்கிறது.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நார்த் மட்டுமல்ல, இந்தியா முழுவதுமே இப்படித்தான்! :(

   வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அமுதா கிருஷ்ணா.

   நீக்கு
 17. அப்போது தெரியவில்லை – அடுத்த நாள் சரியான சமயத்தில் புது தில்லி சென்று சேராது என!//

  அவஸ்த்தைப் பட்ட அனுபவங்கள் பிற்பாடு பகிர்ந்து கொள்வதில் எட்டிப் பார்க்கும் ஹாஸ்யம்.

  இப்படியான பிரயாணங்களுக்கு சிற்சில சிரமங்கள் இருந்தாலும் இரயில் பயணமே உசிதம்.

  அத்துவானக் காட்டிலும் கூட்டின் இதம் சுகம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //இரயில் பயணமே உசிதம்//. பலருக்குப் பிடித்ததும் கூட. எனக்கு ரயில், சாலை வழி பயணம் இரண்டுமே பிடிக்கும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிலாமகள்.

   நீக்கு
 18. //நித்திராதேவி அழைக்க அவள் மடியில் உறங்கச் சென்றுவிட்டேன்.// ;)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....