புதன், 31 டிசம்பர், 2014

சப்பாத்தியுடன் ஐஸ்க்ரீம் – What a combination!கதைமாந்தர்கள் எனும் தலைப்போடு நான் சந்தித்த, சந்திக்கும் மனிதர்கள் பற்றி சில பதிவுகள் எழுதி இருப்பது உங்களுக்குத் தெரியும். அந்த வரிசையில் இன்று ஒரு ஸ்வாரசியமான மனிதர் பற்றி பார்க்கப் போகிறோம். இந்த மனிதர் ஒரு CRPF ஜவான்.  மதுராவினை அடுத்த [B]பர்சானா கிராமத்தினைச் சேர்ந்தவர். வெள்ளந்தியான மனிதர்.  அனைவருக்கும் உதவி செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்.


பட உதவி: இணையம்....

எளிமையான இவருக்கு உணவு உண்பதில் அலாதி பிரியம். சர்வ சாதாரணமாக பல சப்பாத்திகளை எந்தவிதமான சப்ஜிகளோடும் உள்ளே தள்ளுவார். சப்பாத்தி சாப்பிடும் போது இவருக்கு எண்ணிக்கை எல்லாம் ஒரு பொருட்டில்லை. கொண்டு வந்து வைக்கும்போதே தனது கையால் அளந்து ஒரு ஜான் அளவு உயரத்திற்கு சப்பாத்திகள் இருந்தால் அந்த வேளைக்கு அது போதும் என்று சொல்பவர்! தொட்டுக்கொள்ள ஒரு சப்ஜியும் இல்லை எனில், வெங்காயம், ஊறுகாய், தயிர் போன்றவை இருந்தால் கூட போதும்!

ஒரு முறை அலுவலக நண்பர் வீட்டு திருமணத்திற்குச் சென்றிருந்தோம்.  பெரும்பாலான வட இந்திய திருமணங்கள் இரவு நேரத்தில் தானே! [B]பராத் என்று அழைக்கப்படும் மாப்பிள்ளை ஊர்வலம் வந்து சேர்ந்து சில நிகழ்வுகளுக்குப் பிறகு தான் இரவு உணவு.  நாங்கள் அனைவரும் உணவு உண்ணச் செல்லும்போது நள்ளிரவு 12 மணிக்கும் மேல்! பல சப்பாத்திகளை உள்ளே தள்ளிய பிறகு இவருக்குப் பிடித்த அனைத்து சப்ஜிகளும் காலியாகி இருக்க, தொட்டுக்கொள்ள ஒன்றும் இல்லை. ஆனாலும் இவரது பசி அடங்க மறுக்க, ஐஸ்க்ரீம் பார் ஒன்றில் பாதியை ஸ்லைஸ் செய்து அதனைத் தொட்டுக்கொண்டு இரண்டு மூன்று சப்பாத்திகளை உள்ளே தள்ளினார்!

ஒரு நாள் அலுவலகத்தில் சற்றே வியர்த்துக் கொட்டி, படபடவென்று வர இவரை உடனே அருகிலுள்ள அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றார்கள்.  அங்கே மருத்துவர்கள் இவருக்கு இருதய சிகிச்சை செய்து Pacemaker பொருத்தி இருக்கிறார்கள். உணவு முறைகளில் கட்டுப்பாடு தேவை என்று சொல்லி அனுப்ப, ஆனாலும் இவரது உணவு பழக்கங்களில் எந்தவித மாற்றமும் இல்லை.  சிகிச்சை முடிந்து நான்கு வருடங்களாகிவிட்டாலும் அதே அளவு உணவு தான்! எந்தவித தொந்தரவும் இல்லாது உலவுகிறார்.

செவ்வாய்க்கிழமைகளில் “பாலாஜிஎன்று அழைக்கப்படும் ஆஞ்சனேயருக்கு வட இந்தியாவில் லட்டு படைப்பது வழக்கம். அலுவலகத்தில் ஒவ்வொரு செவ்வாயும் எங்கள் அறையிலேயே ஒருவர் லட்டு கொண்டு வந்து ஆஞ்சனேயருக்கு படைத்துவிட்டு அனைவருக்கும் லட்டு தருவார்.  இவர் ஒரு தீவிர ஆஞ்சனேய பக்தர்.  தான் படைக்கும் லட்டுகளில் ஆஞ்சனேயர் படத்திற்கு முன் வைக்கும் நான்கைந்து லட்டுகளும் உண்ண இந்த ஜவானைத் தான் அழைப்பார்! அவரும் சர்வ சாதாரணமாக அனைத்து லட்டுகளையும் சில நொடிகளில் கபளீகரம் செய்து விட, பக்தருக்கு ஆஞ்சநேயரே நேரே வந்து சாப்பிட்ட மகிழ்ச்சியோடு இருப்பார்.

குடும்பத்தினர் அனைவரும் அவரது கிராமமான [B]பர்சானாவில் இருக்க, இவர் மட்டும் இங்கே இருக்கிறார். தில்லியின் ஒரு காவல் நிலையத்தின் அருகே இருக்கும் காவலாளிகளுக்கான கொட்டகையில் இரவு நேரப் படுக்கை. அங்கேயே கிடைக்கும் உணவு தான். அலுவலக நேரத்தில் அலுவலக உணவகத்தில் தான். ஒரு நாள் மாலை, இவரது மேலாளர் இவரிடம் இரவு நேர உணவுக்கு உணவகத்தில் சொல்லச் சொல்ல, இவர் சொன்னது இருபத்தி ஐந்து சப்பாத்தி மற்றும் சப்ஜி. மேலாளர் அதைக் கேட்டு மயங்காத குறையாக, எதுக்கு இத்தனை என்று கேட்க, உங்களுக்கு மூன்று, மற்றவை எனக்கு! என்று சொல்லி அதிர்ச்சிக்குள்ளாக்கியவர் இவர்!

எப்போது எங்களது அறைக்கு வந்தாலும், கைகளைப் பிடித்து, ஒவ்வொரு விரலாக மஸாஜ் செய்து விடுவார். பத்து நிமிடத்தில் கைகள் இரண்டிலும் புத்துணர்ச்சி தந்துவிடுவார்! வாரத்தில் ஒரு நாளாவது இவரிடம் இப்படி கைகளை நீட்டி விடுவது எனக்கும் வழக்கமாகிவிட்டது!

எத்தனை வெயிலடித்தாலும், குளிர் அடித்தாலும், ஒரு சட்டை மட்டுமே அணிவார். பனியன் போடும் பழக்கமே இல்லை.  தில்லியின் கடும் குளிர் நாட்களில் மட்டுமே ஒரே ஒரு ஸ்வெட்டர் மேலே அணிந்து கொள்வார். அதுவும் அலுவலகம் வந்தபின்னர் கழற்றி வைத்துவிடுவார். குளிரும் வெயிலும் இவரை ஒன்றுமே செய்வதில்லை!

அலுவலகத்திற்கு வருவதும் திரும்புவதும் நடைப்பயணம் தான்! பேருந்துகளைப் பயன்படுத்துவதில்லை.  வழியெங்கும் இருக்கும் போக்குவரத்து/காவல் துறையினர் அனைவரும் இவருக்கு நண்பர்கள். அனைவருக்கும் வணக்கம் சொல்லி, அவர்களிடம் அளவளாவியபடியே செல்வது இவரது வழக்கம்.

சமீபத்தில் அலுவலகத்தில் வேலை செய்து கொண்டிருக்கும்போதே ஒருவருக்கு நெஞ்சு வலி வர அவரை அப்படியே அலாக்காகத் தூக்கிக் கொண்டு வாயில் வரை வந்து இருந்த வாகனத்தில் ஏற்றிக்கொண்டு அவரை மருத்துவமனையில் உரிய நேரத்தில் சேர்த்து காப்பாற்றினார். சமயோசிதமாகச் செயல்பட்ட இவருக்கு அலுவலகத்தில் Cash Award கொடுத்து பாராட்டுகளும் வழங்கினார்கள்.

இவரைப் பற்றி எழுதிக்கொண்டே போகலாம்! இருந்தாலும் இவரது மகன் திருமணம் பற்றிய ஒரு விஷயத்தினை மட்டும் சொல்லி முடிப்பது சரியாக இருக்கும் என்பதால் அதைச் சொல்லி முடிக்கிறேன்! மகனுக்கு திருமணத்திற்காக பெண் பார்த்துக் கொண்டிருந்தார்.  அவருக்கு பெண் வீட்டார் கார் கொடுக்கப் போவதாய்ச் சொல்ல, கிராமத்தில் கார் எதற்கு, அதற்கு பதிலாக ட்ராக்டர் கொடுங்கள், வயல் வேலை செய்ய தோதாக இருக்கும் என்று ட்ராக்டர் வாங்கிக் கொண்டார்!

இப்போதும் அலுவலக விடுமுறை நாட்களில் தனது வயலில் கடுமையாக உழைக்கும் இவருக்கு, எத்தனை சாப்பிட்டாலும் சுலபமாக ஜீரணித்துவிடுவது ஆச்சரியம் இல்லை!

இப்படி ஒரு கதைமாந்தரை உங்களுக்கு அறிமுகம் செய்து வைத்ததில் எனக்கு மகிழ்ச்சி.  உங்களுக்கு?

மீண்டும் சந்திப்போம்!

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

திங்கள், 29 டிசம்பர், 2014

ஏற்காடு – இயற்கை தரும் பகோடா!ஏழைகளின் ஊட்டி – பகுதி 4  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2 3

சென்ற வாரத்தில் ஏற்காடு நகரின் பெண்கள், ஆண்கள் மற்றும் குழந்தைகள் இருக்கை பற்றிய தகவல்களை பார்த்தோம். இந்த வாரம் நான் உங்களுக்கு சுவை மிகுந்த பகோடா தரப் போகிறேன். ஆஹா, எங்கே எங்கே, நல்ல பசி நேரத்தில் சொல்லிவிட்டீர்களே, நல்லது என எதிர்பார்ப்புடன் ஆசைப்பட்டு விட்டீர்களா?

எதிர்பார்ப்புகள் இருந்து, அவை நடக்காவிட்டால் ஏமாற்றமே மிஞ்சும்.  ஆதலால், எதிர்பார்ப்புகளை குறைத்துக் கொள்வது நல்லது! அதே வகையில் நான் இப்பதிவில் உங்களுக்கு தின்பண்டமான பகோடா தான் தரப்போகிறேன் என்ற எதிர்பார்ப்புடன் இங்கே வந்தால் உங்களுக்கு ஏமாற்றம் தான் கிடைக்கும்!


 மேகமூட்டத்துடன் அழகிய காட்சி.....

இன்றைக்கு நாம் பார்க்கப் போவது ஏற்காடு நகரில் இருக்கும் “PAGODA POINT” பற்றி தான்! ஏற்காடு நகரில் இருக்கும் தலைச்சோலை ஊராட்சியில் இருக்கும் ஒரு பகுதி தான் இது. ஆங்கிலத்தில் பகோடா என்றால் நான்கைந்து கூரை இறக்கங்கள் கொண்ட கோபுரம் என்று அர்த்தம். ஒரு காலத்தில் இவ்விடத்திலும் கற்களாலான ஒரு கோபுரம் இருந்திருக்கக்கூடும். ஆனால் இன்றைக்கு இருப்பதோ, சமீபத்தில் கட்டப்பட்ட ஒரு கட்டிடம் தான்.

 தற்போது இருக்கும் கட்டிடம்......

இயற்கை எழில் கொஞ்சும் பல இடங்களை இங்கிருந்து பார்வையிட முடியும்.  இங்கே உயரமான இடத்திலிருந்து மலைகளையும் பள்ளத்தாக்கில் இருக்கும் சில கிராமங்களையும் கண்டுகளிக்க ஒரு பெரிய மேடையும் கட்டப்பட்டு இருக்கின்றது. அங்கிருந்து நின்று பார்த்தால், கீழே தெரியும் கிராமத்தினையும், தூரத்தில் இருக்கும் சேலம் நகரினையும் பார்க்க முடியும்.

 கீழே தெரியும் கிராமம் - ஒரு கழுகுப் பார்வை....

கிராமத்து மக்கள் ஒரு அழகிய இராமர் கோவிலையும் கட்டியுள்ளார்கள். அக்கோவிலையும் கிராமத்தினையும் கழுகுப் பார்வைகொண்டு நீங்கள் பார்க்கலாம்! நீங்கள் விரும்பினால் நேரிலும் அங்கே செல்லலாம். எனது முந்தைய ஏற்காடு பயணத்தில் நான் அங்கே சென்றதுண்டு. 


பூவே.... உந்தன் பெயர் தெரியாவிட்டாலும் நான் உன்னை காதலிக்கிறேன்!

 பூத்துக் குலுங்கும் சரகொன்னை.....

அழகிய சரகொன்னை மரங்களும், சிவப்பு வண்ணத்தில் பூ பூக்கும் மரங்களையும் பார்த்து நாங்கள் ரசித்தோம். அவற்றை நீங்களும் ரசிக்க சில படங்கள் இப்பதிவில்....எங்க இரண்டு பேரையும் உங்களுக்குப் பிடிச்சுருக்கா? கண்களால் கேட்கிறார்களோ?என்னை ஃபோட்டோ எடுக்காதீங்க என்று சொல்கிறதோ பின்னால் இருக்கும் குழந்தை!

அவ்விடத்திற்கு வந்திருந்த மற்றொரு குடும்பத்தின் குழந்தைகள் மிகவும் அழகாய் பாறைகளின் மேலமர்ந்து கொண்டிருக்க, அவர்களை புகைப்படம் எடுத்துக் கொண்டிருந்தார்கள். நானும் அக்குழந்தைகளை எனது கேமராவிற்குள் சிறைபிடித்தேன். முன்னரே இக்குழந்தைகளின் படம் ஒன்றினை பகிர்ந்திருந்ததாய் நினைவு – இருந்தாலும், அழகை மீண்டும் ரசிப்பதில் தயக்கமென்ன! அதனால் இங்கே அக்குழந்தைகளை மீண்டும் பகிர்ந்து கொள்கிறேன்!இது போன்ற சுற்றுலாதலங்களுக்கு வருபவர்களுக்கான கழிப்பறை வசதிகள் செய்து தருவது நல்லது. இல்லையெனில் அசிங்கம் தான்! அதைத் தடுக்க, மேலே கண்ட ஒரு விளம்பரத்தினை பாறையொன்றில் வரைந்து வைத்திருந்தார்கள்.  அதிலும் சிலர் கிறுக்கிவைத்திருந்தார்கள் – நல்ல வேளை I love you” எழுதாது விட்டார்கள்!இயற்கையின் எழிலை ரசித்து அமர்ந்திருப்பதில் நேரம் போவதே தெரியாது என்பது உண்மை தான்.  இயற்கை எழில் கொஞ்சும் PAGODA POINT விட்டு அகல எங்களுக்கு மனமே இல்லை என்றாலும், பார்க்க வேண்டிய இடங்கள் இன்னும் இருக்கிறதே என்பதால் அங்கிருந்து அகன்றோம். அங்கிருந்து நாங்கள் சென்றது ஏற்காடு நகரின் பேருந்து நிலைத்திற்கு அருகே இருக்கும் ஒரு இடம்.

என்ன இடம் அது எந்த இடம் என்பதை அடுத்த பகுதியில் பார்க்கலாம்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 23 டிசம்பர், 2014

ஏற்காடு – பட்டுப்பூச்சியும் பெண்கள் இருக்கையும்

ஏழைகளின் ஊட்டி – பகுதி 3  

ஏழைகளின் ஊட்டி – பகுதி 1 2

சென்ற வாரத்தில் ரோஜாத் தோட்டம் பற்றி பார்த்தோம் அல்லவா? அத்தோட்டத்திலேயே பட்டுப்பூச்சிகள் வளர்க்கும் பண்ணையும், பூச்செடிகள் விற்பனை நிலையமும் இருக்கின்றது.  பட்டுப்பூச்சிகள் வளர்ப்பதை நீங்கள் அங்கே காண முடியும்.  நாங்கள் சென்ற நேரம் காலை நேரம் என்பதால் அங்கே வேலையாட்கள் சுத்திகரிப்பு வேலையில் ஈடுபட்டு இருந்தார்கள். அதனால் எங்களுக்கு பட்டுப்பூச்சி வளர்ப்பு முறைகளை பார்வையிட வாய்ப்பில்லாது போயிற்று.

நெய்வேலி நகரம் போல தோட்டம் இருந்திருந்தால் அங்கிருந்து பூச்செடிகளை வாங்கி வந்து பராமரிக்கலாம் – இருப்பது தில்லியின் அடுக்கு மாடி குடியிருப்பு. பூந்தோட்ட ஆசையெல்லாம் எங்கே!
 
 ”Gent's Seat பகுதியிலிருந்து எடுத்து படம்”

ரோஜாத் தோட்டத்திலிருந்து வெகு அருகில் இருக்கும் ஓர் இடம் Lady’s Seat என்று அழைக்கப்படும் இடம். ஆங்கிலேயர்களின் ஆட்சிக்காலத்தில் ஒரு பெண்மணி இங்கே அமர்ந்து மலைமுகட்டில் சூரியன் மறையும் அழகிய காட்சியைப் பார்த்து ரசித்துக் கொண்டிருந்ததாகவும் அதனால் இந்த இடத்திற்கு Lady’s Seat என்ற பெயர் வந்ததாகவும் செவிவழிக் கதைகள் சொல்கின்றன.  எது எப்படியோ இப்போது அங்கே இருப்பது சிமெண்ட் கொண்டு கட்டப்பட்ட ஒரு இருக்கை தான்.  அங்கிருந்து பல அழகிய காட்சிகளைக் காண முடியும்.


 ”மற்றொரு படம் - இரண்டு இருக்கைகள்”

Lady’s Seat மட்டும் தானா, எங்களுக்கென்று ஒன்றும் இல்லையா என ஆண்களும் குழந்தைகளும் கேட்டுவிடுவார்களோ என தமிழக அரசு, இவ்விடத்தில் மேலும் இரண்டு இருக்கைகளை அமைத்து அதற்கு Gent’s Seat மற்றும் Children’s Seat என்ற பெயர் வைத்து விட்டார்கள்! தவிரவும் இங்கே மரத்தினால் செய்யப்பட்ட ஒரு மேடையும் உண்டு.  அதன் மேலே செல்ல நிறைய படிகள் இருக்கின்றன.  அவற்றின் வழியே மேலே ஏறிச் சென்று அழகான காட்சிகளைக் காண முடியும்.  எனக்கேனோ மைக்கேல் மதனகாமராஜன் பட Climax காட்சி மனதில் வந்து போனது! ஆனாலும் அதன் மேல் ஏறி நின்று சில காட்சிகளை படம் பிடித்தேன். 

 ”மர வீட்டிலிருந்து எடுத்த படம்”

இந்த Lady’s Seat பகுதியில் தமிழக அரசின் சுற்றுலாத் துறை ஒரு தொலைநோக்கியையும் அமைத்திருக்கிறது.  மிகக் குறைந்த கட்டணத்தில் தொலைநோக்கி வழியாக சேலம் நகரினையும், மேகமூட்டம் இல்லாதிருந்தால் மேட்டூர் அணையைக் கூட இத்தொலைநோக்கி மூலம் பார்க்க முடியும் என்றும் சொல்வதுண்டு.  நாங்கள் சென்ற சமயத்தில் மேகமூட்டமும், மழையும் சேர்ந்து கொண்டதால், தொலைநோக்கி வசதியை அப்போதைக்கு மூடி வைத்திருந்தார்கள்.

 ”பந்தா காட்டும் அப்பாடக்கர்களுக்கான எச்சரிக்கை அறிவிப்பு”

சில கம்பி வலைத் தடுப்புகள் இருந்தாலும் அதையும் தாண்டி அந்த பாறையின் மேல் நின்று இயற்கை எழிலை ரசிக்க முற்பட்டு விபத்துகள் அதிகம் உண்டாவது வழக்கமாகிவிட்டது. அதனால் அருகே இருந்த ஒரு பெரிய பாறையில் பந்தா காட்டும் இளைஞர்களுக்காகவே ஒரு அறிவிப்பு எழுதி வைத்திருந்தார்கள் – ஏற்காட்டில் ஒரே ஒரு மருத்துவமனை மட்டுமே ஆனால் மூன்று மயானங்கள்!

 ”எங்களுக்கும் இங்கே இடமுண்டு!”

 ”என் குட்டிச் செல்லத்துக்கு குளிருது! யாராவது ஒரு போர்வை கொடுக்க மாட்டாங்களா!”

சற்றே நின்றிருந்த மழையும் மீண்டும் நான் உங்களை மகிழ்விக்க வந்துவிட்டேன் என்று சொல்லியபடியே பொழிய ஆரம்பித்தது. Lady’s Seat மேடையிலேயே சற்று நேரம் காத்திருந்தோம்.  மழையில் நனைந்துவிட்டதால், சில குரங்குகள் தங்களது குடும்பத்தோடு அங்கே ஒண்டிக்கொண்டன.  பக்கத்திலேயே மனிதர்கள் இருந்தாலும் ஒன்றும் செய்யாது பார்த்துக் கொண்டிருந்தன.  அது எனக்கும் வசதியாக படம் எடுக்க உதவிற்று.

 ”சப்புக் கொட்ட வைக்கும் மாங்காய்! என்னைக் கொஞ்சம் தின்னேன்!”


”குடும்ப பாரத்தைச் சுமக்க தந்தைக்குத் தோள் கொடுக்கும் தனயன்!”
 
மழை சற்றே குறைய அங்கிருந்து வெளியே வந்தோம். சுற்றுலாத்தலங்களுக்கே உரிய மாங்காய், சுண்டல், தின்பண்டங்கள் அங்கே அணிவகுத்திருக்க, அவற்றை பார்க்க மட்டுமே முடியும் என்று புகைப்படம் எடுத்துக் கொண்டேன்! பக்கத்திலே ஒரு சிறுவன் தனது தந்தையின் தொழிலில் அவருக்கு உதவிக் கொண்டிருந்தார்.  பலூன்களை தட்டியில் கட்டி வைத்திருக்க, பலரும் அதை துப்பாக்கி கொண்டு வெடிக்க வைத்தார்கள்.  பல பெண்கள் Revolver ரீட்டாக்களாகவும், Gun Fight காஞ்சனாக்களாகவும் மாறி இருந்தார்கள். எதற்கு வம்பு என்று சற்றே ஒதுங்கி நின்று கொண்டேன்!

 ”மர வீடு - மைக்கேல் மதனகாம ராஜன் வீட்டினை நினைவு படுத்தியது!”

இப்படி இனிமையான இயற்கைக் காட்சிகளை கண்ட பிறகு அங்கிருந்து புறப்படத் தயாரானோம்! அடுத்ததாய் எங்கு செல்ல உத்தேசம்? என்று என்னவள் கேட்க, அதற்கு நான் சொன்ன பதில் – சற்றே பொறுத்திருந்து பார்!  - அதே பதில் தான் உங்களுக்கும் – அடுத்த பதிவில் சொல்லி விடுகிறேன்.  அது வரை சற்றே பொறுத்திருங்கள்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


வெள்ளி, 19 டிசம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 119 – தன்னம்பிக்கை – இன்னும் தேவை – காதல்

இந்த வார செய்தி  :இரண்டு நாட்களாக இந்த காணொளி இணையத்தில் அதிகம் பேரால் காணப்பட்டு வருகிறது. உத்திரப் பிரதேச மாநிலத்தின் [B]புலந்த்ஷஹர் மாவட்ட ஆட்சியாளர் சந்திரகலா அதிகாரிகளை மக்கள் முன்னரே அவர்களது வேலையில் இருக்கும் குறைகளை, ஒரு மழைக்கும் தாங்காத நடைபாதைகளை அமைத்த விதத்தினை எப்படிச் சாடுகிறார் என்பதைப் பாருங்களேன்!  ஹிந்தி புரியாதவர்கள் இந்த சுட்டியில் சென்று ஆங்கிலத்தில் எழுதி இருப்பதைப் பார்க்கலாம்!இந்த வார முகப்புத்தக இற்றை:

மரணம் உன்னை விடப் பெரியது தான் – ஆனாலும் அது உன்னை ஒரே ஒரு முறை தான் ஜெயிக்க முடியும்; ஆனால் நீ வாழும் ஒவ்வொரு நொடியும் மரணத்தை ஜெயித்துக் கொண்டிருக்கிறாய் என்பதை மறந்து விடாதே!

இந்த வார குறுஞ்செய்தி:

தோல்வி வரும்போது அதற்கு இதயத்தில் இடம் கொடுக்காதே....
வெற்றி வரும்போது அதற்கு தலையில் இடம் கொடுக்காதே!

இந்த வார ரசித்த பாடல்:

மௌன ராகம் படத்திலிருந்து சின்னச் சின்ன வண்ணக் குயில்பாடல் இந்த வார ரசித்த பாடலாக – எத்தனை முறை கேட்டாலும் இனிக்கும் பாடல்.....  இதோ உங்கள் ரசிப்பிற்கு!
இந்த வார காணொளி:

Tony Meléndez – நிகாராகுவா-வில் பிறந்தவர்.  தனது 16 வயதில் கிடார் வாசிக்கக் கற்றுக்கொள்ள ஆசைப்பட்டார் – இது முடியாத வேலை என அனைவரும் சொல்ல, தன்னம்பிக்கையோடு கற்றுக் கொள்ள ஆரம்பித்தார்.தனது முயற்சியில் வெற்றியும் பெற்றார்.  அவர் வாசித்த “Let it be!” பாடல் இந்த வாரத்தின் காணொளியாக!
இந்த வார புகைப்படம்:

மூன்று வாரங்களுக்கு முன்னர் இங்கே சென்றிருந்தேன்... இவ்விடம் தில்லியில் தான் உள்ளது. என்ன இடம் என்று படம் பார்த்து சொல்ல முடிந்தால் சொல்லுங்களேன்!படித்ததில் பிடித்தது:அழகை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
அழகில்லாதவர்கள் காதலிக்க முடியாது...!!!

பணத்தை பார்த்து வருவதுதான் காதல் என்றால்
ஏழைகளுக்கு காதல் வராது...!!!

உண்மையில் காதல் என்பது என்ன?

அன்பிற்காக ஏங்கிகொண்டிருக்கும் ஒரு
இதயத்திற்கு உண்மையான அன்பு எங்கிருந்து 
பெறப்படுகிறதோ அங்கு உருவாகும் ஒரு 
உன்னதமான காதல்...!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.