எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, December 15, 2014

ஏற்காடு - ரோஜாப் பூங்காவும் காதல் ராஜாக்களும்ஏழைகளின் ஊட்டி – பகுதி 2


”நீ தான் நீலாம்பரியோ?”

கடந்த திங்கள் அன்று வெளியிட்ட ஏழைகளின் ஊட்டி பயணத்தொடரின் முதலாம் பகுதியான “ஏற்காடு போகலாமா? மினி பயணத் தொடர் படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்!


 ”ரோஜாத் தோட்டத்தில் பூத்த காகிதப்பூ!”

சென்ற பகுதியின் கடைசியில் பொங்கல்-இட்லி-வடை சாப்பிட்டுக் கொண்டிருந்தோம்! நாங்கள் காலை உணவினை சத்தமில்லாது சாப்பிட்டுக் கொண்டிருந்தபோது அங்கே மற்றொரு குடும்பமும் – சற்றே பெரிய குடும்பம் – 10-15 பேர்கள் இருக்கலாம் தங்களது காலை உணவினை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள்.  வீட்டில் பயங்கர மதுரை ஆட்சி போலும்! யார் என்ன உணவு சாப்பிட வேண்டும், எப்படி உட்கார வேண்டும் என்பதிலிருந்து அனைத்தையும் ஒரு பெரியம்மா தான் முடிவு செய்தார்.

 ”மலரே பேசு மௌன மொழி!”

அம்மா, அப்பா, பெண்கள், பிள்ளைகள், அவர்களின் கணவன்/மனைவி, குழந்தைகள் என பெரிய குடும்பம் – அனைவருக்கும் சேர்த்து பெரியம்மா மட்டுமே பேசிக் கொண்டிருந்தார். அவர்களுக்கு உணவு பரிமாறிய பெரியவர் ரொம்பவே தடுமாறினார் – “அது சரியில்லை, இது கம்மியாருக்கு, உப்பு போடவே இல்லை, சாம்பார் தண்ணியாக இருக்கு! என ஏகப்பட்ட குறைகளை அவரிடம் கொட்டிக் கொண்டிருந்தார்.  பத்து வகை உணவு வகைகளைச் சொல்லி அனைத்தையும் ஒரே சமயத்தில் கொண்டு வரச் சொன்னால் அவர் என்ன செய்வார் பாவம் – இருப்பது இரண்டு கைகள் தானே!

 ”ரோஸு ரோஸு ரோஸு அழகான ரோஸூ நீ!”

வீட்டின் தலைவர் தோசை சாப்பிடலாம் என்று சொல்ல, உடனே மதுரை மன்னவளிடம் இருந்து கட்டளை பிறந்தது – “வேண்டாம்!உடனே அவரும் மௌனமானார்! உணவகத்தில் இருந்த அனைவரின் கண்களும் காதுகளும் இவர்கள் பக்கமே இருக்கும்படி பார்த்துக் கொண்டார்கள்! அத்தனை களேபரம்! இந்த களேபரத்தில் என் தட்டில் இருந்த இட்லி காணாமல் போனது கூட எனக்குத் தெரியவில்லை!

  
”ஏனிந்த வெட்கம் ரோஜாப் பெண்ணே! உனை புகைப்படம் எடுக்கும் எனைப்பார்த்து தலையைக் குனிந்து கொண்டாயோ!”

இப்படி இவர்களின் நடவடிக்கைகளை கவனித்தபடியே சாப்பிட்டதால் உணவின் குறைபாடு அத்தனை அதிகமாகத் தெரியவில்லை எங்களுக்கு :) பிறகு ஒரு காஃபியை உள்ளே தள்ளி, உணவகத்திலிருந்து புறப்பட்டோம். ஏற்காடு நகரில் பார்க்க வேண்டிய சில இடங்கள் மட்டுமே இருப்பதால் மெதுவாக ஒவ்வொரு இடத்திற்கும் செல்ல யோசனை.  முதலாக நாங்கள் சென்றது அங்கே உள்ள ரோஸ் கார்டன்.

  
”மரப்பெண்ணுக்கு கூந்தல் பின்னி அழகு பார்க்கும் கொடிப் பெண்”

ரோஜாத் தோட்டம் – ரோஜாத் தோட்டம் உள்ளே நுழைய கட்டணமாக இருபது ரூபாய் வசூலித்த பெண்மணி “பொறுமையா சுத்திப் பாருங்க, நிறைய பூ, மரம், பட்டுப்பூச்சி எல்லாம் இருக்கு என்று சொன்னதோடு, “பாப்பாவுக்கு டிக்கெட் வாங்க வேண்டாம்என்றும் சொன்னார். அவருக்கு நன்றி சொல்லி உள்ளே நுழைந்தோம்.  மே மாதம் என்பதாலோ என்னமோ ரோஜாச் செடிகளில் அத்தனை பூக்கள் இல்லை.  பல வண்ணங்களில் ரோஜாக்களைப் பார்த்துவிட்டு பக்கத்தில் வளர்ந்திருக்கும் நெடிதுயர்ந்த மரங்களையும் அண்ணாந்து பார்த்துக் கொண்டே நடந்தோம்.

 ”மைதிலியை பிரபு காதலிப்பது எனக்குப் பிடிக்கவில்லை! என்று அதன் மேலேயே வேறொருவர் கிறுக்கியிருப்பாரோ!”

அழகான தோட்டம் – நீண்டு வளர்ந்திருந்த மரங்களுக்கு தனது இலைகளாலேயே பின்னல் போட்டிருந்தன சில கொடிகள். ஒரு சில பலா மரங்களில் அவற்றின் காய்களை பார்த்ததும் நெய்வேலி வாழ்க்கையும் அங்கே சாப்பிட்ட கணக்கிலடங்கா பலாச்சுளைகளும் அதுவும் பலாச்சுளையில் இருக்கும் கொட்டையை விலக்கி, அந்த வெற்றிடத்தில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு சாப்பிட்ட சுவையும் நாவில் நீர் ஊறச் செய்தன! ம்ம்ம்ம்...  இங்கே பார்க்க மட்டும் தான் முடியும். பலா மரத்தில் ஏறி கயிறு கட்டி பலாக்காயை பறித்து விட வேண்டும் என்று கைகள் பரபரத்தன!  அடங்கு அடங்கு என சொல்லியபடி நகர்ந்தேன். 

 ”சிலைப்பெண்”

அங்கே ஒரு பெண்ணின் சிலையை வைத்து மேற்கூரையோடு ஒரு மேடையும் கட்டி இருந்தார்கள்.  நிச்சயம் அப்பெண் சிலையை விட அழகாகவே இருந்திருக்க வேண்டும்! அம்மேடையிலும் நிறைய இளைஞர்கள் அம்பு விட்டு தங்கள் காதலை வெளிப்படுத்தி இருந்தார்கள்! காதலிக்கும் பெண்ணிடம் காதலைச் சொல்ல தைரியம் இருந்ததோ இல்லையோ இப்படி எழுதி வைக்கும் தைரியம் இவர்களுக்கு நிறையவே இருப்பது இந்தியாவின் பல பாரம்பரியமான சுற்றுலா தளங்களில் இருக்கும் இச்சின்னங்களைப் பார்க்கும் போது புரிந்தது.


 ”நினைவுகளை மீட்டெடுத்த பலா!”

மே மாதம் என்றாலும் கொஞ்சம் குளிர் காற்றும் அடித்துக் கொண்டிருந்தது. அங்கே வேலை செய்து கொண்டிருந்த அனைவரும் ஸ்வெட்டர், மஃப்ளர் என்று இருக்க, தில்லி குளிரில் வாழ்ந்து பழக்கப்பட்ட எனக்கு குளிர் தெரியவில்லை!  குளிரே இல்லையே இவங்க எதுக்கு ஸ்வெட்டர் போட்டு இருக்காங்களோ?என்று கொஞ்சம் சத்தமாகவே சொல்லி விட்டேன் போலும்! “நீங்க எந்த ஊரு? உங்களுக்கு குளிர் விட்டுப் போச்சோ?” என்று சிரித்தபடியே கேட்டர் ஒரு பெண்மணி. 

 ”எத்தனை எத்தனை மரங்கள் இங்கே.....  இவற்றையாவது வெட்டாமல் விடுவோம்!”

“நான் தில்லில இருக்கேங்க, அங்க இருக்க குளிருக்கு முன்னால இது ஒண்ணும் இல்ல!என்று சொல்ல, நாங்க எங்க அதைக் கண்டோம்! எங்களுக்கு சேலம் போறதே பெரிய விஷயம்!என்று சொல்ல, நீங்க வாங்க, நான் உங்களை டெல்லிக்கு அழைச்சுட்டுப் போறேன்!என்று சொன்னேன்! சக பணியாளர்களிடம் “நான் டெல்லிக்குப் போறேன் டெல்லிக்குப் போறேன்நு சந்தோஷமா சொல்லியபடியே தனது வேலையைக் கவனிக்க ஆரம்பித்தார்!

 ”எங்களைத் தொடரும் மழை! ?”

அது என்ன மாயமோ மந்திரமோ புரியவில்லை, நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது இயற்கைக்கும் பிடிப்பதில்லை! இங்கே சென்றிருந்த போதும் மழை...  மழைச்சாரலும், மேக மூட்டங்களும் சூழ்ந்துகொள்ள அரை மணிக்கும் மேலாக அத்தோட்டத்திலேயே காத்திருக்க வேண்டியிருந்தது. ஆனாலும் அந்த ரம்மியமான சூழலில் அந்த பகுதியில் இருந்ததும் நன்றாகத் தான் இருந்தது!

மழை நிற்க நாங்கள் காத்திருந்தோம்! நீங்களும் அடுத்த பகுதியில் என்ன விஷயம் என்று தெரிந்து கொள்ள காத்திருங்கள்!

மீண்டும் சந்திப்போம்....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

42 comments:

 1. நல்லோர் ஒருவர் உளரேல் அவர் பொருட்டு
  எல்லார்க்கும் பெய்யும் மழை
  என்பார்கள். அதனால்தான் தாங்கள் சென்றவுடன்
  மழையும் வந்திருக்கிறது
  வாழ்த்துக்கள் ஐயா
  படங்கள் ஒவ்வொன்றும் அழகோ அழகு

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 2. தமிழ் மணத்தில் இணைத்துவிட்டேன்
  தம 1

  ReplyDelete
  Replies
  1. தமிழ் மணத்தில் இணைத்து முதலாம் வாக்களித்தமைக்கு மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 3. படங்களும் அதற்கான கம்மென்ட்டகளும் நச். ஏற்காடு குளிர் எனக்கும் தொற்றிக் கொண்டது

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி முரளிதரன்.

   Delete
 4. இயற்கை எழில் ஒவ்வொரு படத்திலும் தெரிகிறது. பனித்துளியுடன் உள்ள ரோஜாக்கள் அழகு.

  ஹும் .....பெரியம்மா மட்டுமே பேசிக்கொண்டிருந்த இடத்தில், எப்படி களேபரம் வந்தது ?

  அதானே, பிரபு போன்றவர்களின் கைவண்ணம் இல்லாத நம்மூர் சுற்றுலா தளமா? பதிவில் பலா மரத்தைக் காட்டி எனக்கும் எங்க வீட்டில் வெட்டப்பட்ட பலா மரங்கள் நினைவுக்கு வருகின்றன.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா.

   Delete
 5. // நீண்டு வளர்ந்திருந்த மரங்களுக்கு தனது இலைகளாலேயே பின்னல் போட்டிருந்தன சில கொடிகள்.//

  நீங்கள் பார்த்தவை ஆண்டு முழுதும் வளரக்கூடிய 10 அல்லது 12 அடிஉயரம் வரை மரங்கள் அல்லது ஏதேனும் அருகில் உள்ள கொம்புகளை பற்றி வளரக்கூடிய மிளகு கொடிகள். படங்களும் விளக்கங்களும் அருமை. தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

   மேலதிகத் தகவலுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete
 6. படங்கள் அனைத்தும் என்னே அழகு...!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
  2. "//நான் எனது குடும்பத்துடன் சுற்றுலா செல்வது இயற்கைக்கும் பிடிப்பதில்லை! இங்கே சென்றிருந்த போதும் மழை... //"

   நீங்கள் ஏன் இப்படி நினைக்க வேண்டும். மழையும் உங்களோடு சேர்ந்து ரசிக்கிறது என்று நினைக்கலாமே...

   Delete
  3. அப்படியும் நினைக்கலாம்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சொக்கன் சுப்ரமணியன்.

   Delete
 7. படங்களும், அதற்கான கமெண்ட்களும் ஜோர். பலாச்சுவை என் நாவிலும் ஏறியது!

  தொடர்கிறேன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 8. டூர்போன இடத்திலும் காதை கொஞ்சம் நீட்டி கவனித்து இருந்தாலும் பகிர்வு சுவாரஸ்யம்! படங்கள் அழகு! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 9. மரப்பெண்ணுக்கு கூந்தல் பின்னி அழகு பார்க்கும் கொடிப் பெண்”
  மிக அழகு..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி இராஜராஜேஸ்வரி ஜி!

   Delete
 10. ஆஹ்ஹா....அழகா ரோஜா மலர்கள்..குழுமையான சூழல் ...இங்கும் இப்போது குளிர்...உங்கள் படம் மேலும் குளிரைத்தந்து விட்டது சகோ...
  தம 7

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி உமையாள் காயத்ரி.

   Delete
 11. ரொம்ப ரொம்ப சுவாரசியமா சொல்லிருகீங்க அண்ணா!! அடுத்த பதிவுக்காக ஆவலாய் காத்திருக்கலாம் போல!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

   Delete
 12. வணக்கம் சகோதரரே!

  அழகான நிறங்களை கொண்ட மலர்களையும், பனி சூழ்ந்த மரங்களையும், நெடிந்துயர்ந்த மரங்களையும் தாங்கள் எடுத்திருந்த புகைப்படங்கள் கண்ணுக்கு விருந்து. அதற்கு தகுந்தாற்போல், எழுதிய வாசகங்கள் அதை விடச்சிறப்பு. மொத்தத்தில் நாங்களும் ஏற்காடை சுற்றிப் பார்த்த நிறைவு.
  இரண்டாம் நாளான இன்றைய பதிவும் அருமையாக இருந்தது.

  தொடருங்கள் நாங்களும் தொடர்கிறோம்.

  நன்றியுடன்,
  கமலா ஹரிஹரன்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கமலா ஹரிஹரன் ஜி!

   Delete
 13. ஏற்காட்டிற்கு சென்றுள்ளேன். இருப்பினும் தங்களது பதிவும் புகைப்படங்களும் என்னை மறுபடியும் அங்கே அழைத்துச்சென்றுவிட்டது. தமிழகத்தில் பார்க்கவேண்டிய முக்கியமான இடங்களில் ஒன்று ஏற்காடு. உங்களின் பகிர்வால் பலருக்கு அங்கு செல்ல ஆசை வந்திருக்கும்.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 14. சென்னையில் இருப்பவர்களுக்கு துளி குளிர் காற்று என்றாலே நடுக்கம் தான். பெங்களூரிலிருந்து தான் நாங்கள் ஏற்காடு போனோம். அந்த சூழலை மிகவும் ரசித்தோம். புகைப்படங்கள் எல்லாம் கவிதை!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரஞ்சனிம்மா....

   Delete
 15. ஏற்காடு படங்கள் அருமை...
  என்ன காமிரா ?

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

   என்னிடம் இருப்பது Canon DSLR 600 D.

   Delete
 16. படங்கள் கமென்ட்ஸ் எல்லாமே அருமையோ அருமை! சுவாரஸ்யமான நடை! ஏற்காடு சென்றதுண்டு என்றாலும் தங்களது விவரணம் இன்னும் நினைவுகளுக்கு மெருகேற்றியது. பலப்பழம்...ஸ்ஸ்ச்ச் நாவில் நீர் ஊறியது....

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன் ஜி!

   Delete
 17. இரசித்தேன் நண்பரே! சென்ற ஆண்டு சென்று வந்தோம்! தங்களின் புகைப்படத்தில் ஒரு தனித்தன்மை தென்படுகிறது! நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சேஷாத்ரி.

   Delete
 18. படங்களோடு ரசித்துப் படித்தேன்.

  (இங்கு கடந்த 5 நாட்களாக, எங்கள் பகுதியில் நெடுஞ்சாலைத் துறையினர் சாலைகளில் பள்ளங்கள் தோண்டியதில், B.S.N.L நெட்வொர்க் முழுதும் காலி. எனவே எனது மகனிடம் லேப்டேப்பில் இருக்கும் TATA நெட்வொர்க்கை அவ்வப்போது இரவலாக வாங்கி பயன்படுத்த வேண்டி இருக்கிறது. இதனால் வலைப்பக்கம் அதிகம் வர முடியவில்லை. இதுவே தாமதத்திற்கு காரணம். BSNL சரியாகும் வரை இந்த பிரச்சினைதான். தங்கள் வலைப் பக்கம் வரவில்லை என்று நினைக்க வேண்டாம். மன்னிக்கவும். )
  த.ம.9

  ReplyDelete
  Replies
  1. இரண்டு நாட்களாக MTNL தரும் எனது தொலைபேசி/இணைய இணைப்பிலும் பிரச்சனை. யாருடைய தளத்திற்கும் வந்து படிக்க முடியவில்லை..... சில சமயங்களில் இப்படித்தான் நடக்கிறது.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   Delete
 19. படங்கள் அழகு அண்ணா...
  ரசிக்க வைத்தது.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

   Delete
 20. //வீட்டின் தலைவர் தோசை சாப்பிடலாம் என்று சொல்ல, உடனே மதுரை மன்னவளிடம் இருந்து கட்டளை பிறந்தது – “வேண்டாம்!” உடனே அவரும் மௌனமானார்! //

  ஹைய்யோ!!! சிரிச்சு மாளலை:-))))))

  இந்தப்பதிவு எனக்கு ரொம்பவே பிடிச்சுப்போச்சு.

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசி டீச்சர்.

   உங்களுக்குப் பிடித்தது என்று தெரிந்து எனக்கும் மகிழ்ச்சி!

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....