செவ்வாய், 30 செப்டம்பர், 2014

ஆறு.....






நைல் வடகிழக்கு ஆப்பிரிக்கக் கண்டத்தில் பாயும் மிக முக்கியமான ஆறாகும். இது உலகின் மிக நீளமான ஆறு எனவும் கூறப்படுவதுண்டு. 6650 கி.மீ நீளம் கொண்ட இது, தான்சானியா, உகாண்டா, ருவாண்டா, புருண்டி, காங்கோ, கென்யா, எத்தியோப்பியா, எரித்திரியா, தெற்கு சூடான், சூடான், மற்றும் எகிப்து ஆகிய பதினோரு நாடுகளின் வழியாகப் பாய்ந்து நடுநிலக் கடலில் கலக்கின்றது.



கொலம்பியா நகரில் இருக்கும் Cano Cristales எனும் ஆறு மிகவும் புகழ் பெற்றது.  அப்படி என்ன இதில் சிறப்பு என்று கேட்பவர்களுக்கு, இந்த ஆறு ஒரு வண்ணமயமான ஆறு - ஒன்றல்ல இரண்டல்ல ஐந்து அழகிய வண்ணங்களைக் கொண்டது. திரவ வானவில் என்றும், உலகிலேயே மிகவும் அழகிய ஆறு எனவும் சொர்க்கத்திலிருந்து வந்த ஆறு எனவும் இதை அழைக்கிறார்களாம்! நீங்களே படத்தில் பாருங்களேன். “என்ன அழகு!




சூர்யா, த்ரிஷா நடித்த “ஆறுதிரைப்படம் – இந்தப் பட்த்தின் உரிமை வைத்திருக்கும் தொலைக்காட்சி நிறுவனம் அலுக்காது சலுக்காது, மக்கள் ரசிப்பார்களா என்ற யோசனை கூட இல்லாது, 60 முறைக்கு மேல் ஒளிபரப்பி இருப்பார்கள்! சமீபத்தில் கூட இப்படம் ஓடிக்கொண்டிருந்தது! நானும் ஓடினேன்....  அந்த சேனலை விட்டு அடுத்த சேனலுக்கு!



ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
ஆறு பெருகி வரின் அணை கட்டலாகும்
அன்பின் பாதையில் அணையிடலாமோ?
பேதைமையாலே மாது இப்போதே
காதலை வென்றிட கனவு காணாதே  

வஞ்சிக்கோட்டை வாலிபன் படத்தில் பத்மினி மற்றும் வைஜெயந்தி மாலா ஆகிய இருவருக்கும் நடனத்தில் நடக்கும் போட்டி! – பாடல் – “கண்ணும் கண்ணும் கலந்து” அப்பாடலின் நடுவே வரும் வரிகள்..... 

என்னா பாட்டு டே! என்ன நடனம் டே!என்று சொல்லுபவர்கள் மீண்டும் இங்கே ரசிக்கலாம்!



தமிழ்க் கடவுள் எனக் கருதப்படுபவரான முருகப் பெருமானுக்குச் சிறப்பானவையாகக் கொள்ளப்படும் ஆறு கோயில்கள் - திருப்பரங்குன்றம், திருச்செந்தூர் அல்லது திருச்சீரலைவாய், திருவாவினன்குடி (எ) பழனி, திருவேரகம் (எ) சுவாமிமலை, திருத்தணி அல்லது குன்றுதோறாடல், பழமுதிர்சோலை. 



கவிஞர் கண்ணதாசன் எத்தனை தத்துவார்த்தமான பாடல்களை எழுதி இருக்கிறார் என வியந்து அவரைப் பாராட்டுபவர்கள் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள் – அவர் மறைந்து விட்டாலும் அவரது பாடல்கள் என்றும் றையாது.  அப்படி ஒரு பாடல் - “ஆறு மனமே ஆறு அந்த ஆண்டவன் கட்டளை ஆறு!”  

 என்ன தான் சொல்ல வர!....  ஒண்ணுமே புரியலப்பா!

இந்தப் பதிவில் சம்பந்தமே இல்லாமல் ஆறு விஷயங்களைச் சொல்லி இருப்பது ஏன்என குழப்பம் அடைந்து இருப்பீர்களே!  விம் போட்டு விளக்கி விடுவது நல்லது!

“சந்தித்ததும், சிந்தித்ததும்என்று நான் பதிவுலகில் எழுத ஆரம்பித்தது இதே நாளில்.  ஐந்து வருடங்கள் முடிந்து ஆறாம் ஆண்டில் அடி எடுத்து வைக்கிறேன். 

அவ்வப்போது சில தடங்கல்கள் வந்தாலும் இன்னமும் எழுத உற்சாகப்படுத்துவது தொடர்ந்து நீங்கள் அளித்து வரும் கருத்துகளும், ஊக்கமும் தான்....

இந்த வலைப்பயணத்தில் என்னுடன் தொடர்ந்து பயணித்து என்னை ஊக்கப்படுத்திய அனைத்து நல்லுள்ளங்களுக்கும் மனமார்ந்த நன்றி!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 29 செப்டம்பர், 2014

நடக்க முடியாதவர்களுக்கு.....



மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 4

முந்தைய பகுதிகள்: பகுதி-1 பகுதி-2 பகுதி-3

 படம்: இணையத்திலிருந்து....

சென்ற பகுதியில் சொன்னது போல இந்த நடைப்பயணம் 12 கிலோ மீட்டர்! – அட இவ்வளவு தூரம் நடக்கணுமா என்று மலைத்து நின்று விட்ட நண்பர்களும், நடக்க இயலாத முதியவர்களும், குழந்தைகளும் கவலையே படவேண்டியதில்லை. அதற்கும் இங்கே சில வசதிகள் உண்டு.  முதல் வசதி – கச்சர் [KACHAR]/[G]கோடா என அழைக்கப்படும் குதிரைகள்.  மொத்த தொலைவினை இரண்டு/மூன்று பகுதிகளாக பிரித்து வெவ்வேறு குதிரைகளில் சவாரி செய்யலாம் – Darshani Darwaza விலிருந்து Adhkuari ஒரு பகுதியாகவும், அங்கிருந்து Bhavan என அழைக்கப்படும் கோவில் வளாகம் வரை ஒரு பகுதியாகவும் குதிரைச் சவாரி செய்யலாம்.

 ”நான் ரெடி.... நீங்க ரெடியா?” - காத்திருக்கும் குதிரைகள்

Shri Mata Vaishno Devi Shrine Board [SMVDSB] இந்த சவாரிக்கான கட்டணத்தினை ஆங்காங்கே எழுதி வைத்திருக்கிறார்கள். இருந்தாலும், பல குதிரைக்காரர்கள் மொழி தெரியாதவர்களை ஏமாற்றுவது எல்லா இடங்களைப் போலவே இங்கேயும் நடக்கிறது. சுமந்து செல்வது குதிரைதான் எனினும், குதிரைக்காரரும் கூடவே நடந்து வர வேண்டும். நாளொன்றுக்கு ஒரு முறை அல்லது இரண்டு முறை மேலும் கீழும் பயணிக்கிறார்கள் – நடுவில் கொஞ்சம் ஓய்வு எடுத்துக்கொண்டு!

 பால்கி, டோலி....  

போலவே “[D]டோலி என அழைக்கப்படும் வசதியும் உண்டு – ஒரு இருக்கை – அதன் இரு பக்கங்களிலும் வலுவான குச்சிகள் கட்டப்பட்டு இருக்க, பக்தர்களை அந்த இருக்கையில் உங்களை அமரவைத்து, இரண்டு அல்லது நான்கு மனிதர்கள் தூக்கிச் செல்வார்கள். இதற்கான கட்டணமும் கோவில் நிர்வாகம் நிர்ணயித்து வைத்திருக்கிறது.

 பேட்டரி வண்டிகள்...

சமீப காலத்தில் மேலும் சில வசதிகள் ஏற்படுத்தி இருக்கிறார்கள் – அதாவது பேட்டரி மூலம் இயங்கும் சிறு வாகனங்கள். இந்த வாகனங்கள் நடைபாதையில் செல்லாது வேறு வழியாக வருகின்றன. பாதைகள் அமைக்க, இயற்கையை அன்னையை ஆங்காங்கே செதுக்கிக் கொண்டிருக்கிறார்கள் – மலையை வெட்டி, அங்கிருக்கும் மரங்களையும் வெட்டி பாதை அமைத்திருக்கிறார்கள்!

 குதிரையில் சவாரி செய்யும் முதியவர்

பேட்டரி வண்டிகள் வந்தால் குதிரைக்காரர்களின்/[D]டோலி வாலாக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்ற தகராறுகளும் அவ்வப்போது வந்து போகிறது. இவர்களைத் தவிர “பிட்டூஎன்றழைக்கப்படும் மனிதர்களும் இங்கே இருக்கிறார்கள். பல பக்தர்கள் குழந்தைகளோடு வருவார்கள். குழந்தைகளையும் சுமந்தபடி நடக்கக் கஷ்டப்படுபவர்கள் இந்த “பிட்டூக்களை பயன்படுத்துகிறார்கள் - இவர்கள் சிறு குழந்தைகளையும் உடமைகளையும் முதுகில் தூக்கிக் கொண்டு நடப்பவர்கள். தூளி மாதிரி முதுகிலோ முன் பக்கத்திலோ கட்டி அதில் குழந்தையை அமர்த்திக்கொண்டு முதுகில் பயணிகளின் உடமைகளைக் கட்டிக்கொண்டு உங்களுடனே நடந்து வருவார்.  இவர்கள் பற்றி முன்பே ஒரு முறை எழுதி இருக்கிறேன். அந்த பதிவு படிக்காதவர்கள் இங்கே படிக்கலாம்!


 சாஞ்சி சத்த் ஹெலிபேட்

கோவில் சில மணி நேரங்கள் மட்டுமே மூடி இருக்கும் என்பதால், இரவு பகல் பாறாது பக்தர்கள் நடந்த வண்ணமே இருப்பார்கள் – இரவில் நடப்பதும் ஒரு வித சுகம் தான்! நாம் நடந்தாலும், நடக்க முடியாதவர்களுக்கென்றே இந்த தகவல்களை தர எண்ணி இந்த விவரங்களைத் தந்தேன்.  மேலும் என்ன வசதி இருக்கிறது என்று கேட்டால் ஹெலிகாப்டர் வசதி! கட்ராவிலிருந்து சாஞ்சி சத் [SANJHI CHHAT] என்று சொல்லக்கூடிய இடம் வரை ஹெலிகாப்டர் மூலம் பயணிக்கலாம். அங்கிருந்து பவன் [கோவில்] வரை இரண்டரை கிலோமீட்டர் தொலைவு மட்டுமே நடக்க வேண்டும்.

 தரையிறங்கும் ஹெலிகாப்டர்...

எட்டு நிமிடத்தில் உங்களை கட்ராவிலிருந்து சாஞ்சி சத் வரை விட்டு விடும் இந்த ஹெலிகாப்டர் – ஒரு சுற்றில் ஆறு பேர் வரை பயணிக்கும் வசதியுடைய இந்த ஹெலிகாப்டர் நாள் முழுவதும் பயணித்துக் கொண்டே இருக்கும். இரவு நேரங்களில் இந்த வசதி கிடையாது. ஒரு வழி பயணத்திற்கு நபர் ஒருவருக்கு 1039/- கட்டணம் வசூலிக்கிறார்கள். இந்தப் பயணத்திற்கு முன்பதிவும் செய்து கொள்ளலாம்.

 முதுகில் குழந்தையை சுமந்தபடி பிட்டூ.  
படம்: இணையத்திலிருந்து....

நடக்க முடியாத நபர்களுக்கான வசதிகளை இதுவரை பார்த்தோம். இப்போது கொஞ்சம் கதையையும் பார்க்கலாம்.   

வைஷ்ணவிபிறந்தது முதலே ஞான மார்க்கத்தில் நிறைய ஈடுபாடுடன் இருந்தார். த்யானமும் தவமும் மட்டுமே தன்னை இறைவனை நோக்கி அழைத்துச் செல்லும் எனப் புரிந்து தனது லௌகீக வாழ்க்கையை விட்டு காட்டுக்கும் தவம் செய்யச் சென்றுவிட்டார். பதினான்கு வருட வனவாசத்தில் இருந்த ராமரைச் சந்தித்த வைஷ்ணவி, ராமர் ஸ்ரீவிஷ்ணுவின் அவதாரம் என்பதைப் புரிந்து கொண்டு தன்னை அவருடைய பாதாரவிந்தத்தில் அழைத்துக் கொள்ள வேண்டும் என வேண்டுகொள் விடுத்தாள்.

அவளது வேண்டுகோளை கேட்ட ஸ்ரீராமபிரான் தான் வனவாசம் முடிந்து வரும்போது மீண்டும் வருவதாகவும், அப்போது வைஷ்ணவி தன்னை அடையாளம் கண்டுகொண்டுவிட்டால் தன்னுடன் ஐக்கியப்படுத்திக் கொள்வதாகவும் சொல்லி விடைபெற்றார். திரும்பி வரும் நேரத்தில் ஒரு வயதானவரின் தோற்றத்தில் ஸ்ரீராமபிரான் வர அவரை வைஷ்ணவியால் அடையாளம் காண முடியவில்லை. அதனால் மனமுடைந்த வைஷ்ணவிக்கு, திரிகூட மலைக்குச் சென்று ஆஸ்ரமம் அமைத்து த்யானமும், தவமும் செய்து பக்தர்களுக்கு அருள் புரியச் சொல்லிவிட வட இந்தியாவியை நோக்கிய கடும் பயணத்தினை மேற்கொண்டார். திரிகூட மலையின் அடிவாரத்தில் தனது ஆஸ்ரமத்தினை அமைத்து தியானம் செய்ய ஆரம்பித்தார்.    

கதையை அடுத்த வாரமும் தொடரலாம்!

இந்த வாரத்தில் நடந்து கொண்டே, வேறு சில விஷயங்களையும் பார்த்தோம். வரும் வாரங்களில் நடக்கும்போது நமக்கு கிடைக்கும் பல்வேறு அனுபவங்களையும், நிகழ்வுகளைகளையும் பார்க்கலாம்... 

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 26 செப்டம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 107 – பூனம் ஷ்ருதி – 2/10 = 2? – இரண்டு காக்கைகள்



இந்த வார செய்தி:

பூனம் ஷ்ருதி – படித்த படிப்பு – B.Com., MBA [Finance], Post Graduate Diploma in Personal Management – இத்தனை படித்தபின் நிச்சயம் பூனம் ஒரு நல்ல வேலை கிடைத்து, ஏதோ ஒரு MNC-ல் பணி புரிந்து கொண்டிருப்பார் என நினைக்கலாம். ஆனால் இத்தனை படித்திருந்தும், எத்தனையோ நேர்முகத் தேர்வுகளில் பங்குபெற்றும் அவருக்கு வேலை கிடைக்கவில்லை. ஒவ்வொரு நேர்முகத் தேர்விலும் பங்குபெறும் சமயத்தில் அவர்கள் சொன்ன பதில் – ஒரு படத்தில் வடிவேலுவைப் பார்த்து சிங்கமுத்து “இந்த வேலைக்கு நீ சரி வர மாட்டஎனச் சொல்வாரே அந்த மாதிரி தான்!

நல்ல திறமையிருந்தும், வேலை கொடுப்பதற்கு நிறுவன்ங்கள் தயங்கிய காரணம் பூனம் அவர்கள் இரண்டடி உயரம் தான் இருந்தார். அவருக்கு  Osteogenesis Imperfecta (OI),  எனும் உடல் கோளாறு.  சுலபமாக உடைந்து விடக்கூடிய எலும்புகள் – தனது உடல் பற்றி சொல்லும்போது நகைச்சுவையாக – “என் உடம்பில் எலும்புகளை விட அவை உடையாமல் காக்க வைத்த Plate-கள் அதிகம்!என்று சொல்கிறார்.

பல தோல்விகளுக்குப் பிறகு அவருக்கு வேலை கிடைத்தது. உடலில் பிரச்சனை இருந்தாலும், மற்ற அலுவலர்களைப் போலவே அவருக்கும் Target, Goal என அனைத்தும் உண்டு. முடியாத நேரத்தில் வீட்டிலிருந்தும் பணிபுரியலாம் என்பது மட்டுமே அவருக்கு கொடுக்கப்பட்ட சலுகை. ஆறுவருடம் அந்தப் பணியில் இருந்தபிறகு இன்னமும் ஏதாவது சாதிக்க வேண்டும் என்ற எண்ணத்தோடு, அதுவும் தன்னைப் போன்றவர்களுக்கு எதையாவது செய்ய வேண்டும் என்று அந்த வேலையை உதறித் தள்ளினார்.

Uddip Social Welfare Society என்ற இயக்கத்தில் இணைந்து தன்னைப் போன்ற பலருக்கு ஒரு முன்னுதாரணமாக இருந்து அவர்களது வாழ்க்கையில் பல நல்ல மாற்றங்களை உருவாக்க ஆரம்பித்திருக்கிறார். அவர் செய்யும் பல நல்ல விஷயங்களைப் பற்றி முழுவதும் இங்கே படிக்கலாம்!

திருக்குறள் இரண்டடி தான் – ஆனாலும் அவை நமக்குச் சொல்லித் தரும் பாடங்கள் எத்தனை எத்தனை. அதே போல போபால் நகரினைச் சேர்ந்த பூனம் அவர்களும் பலருக்கு நல்ல விஷயங்களைக் கற்றுத் தருகிறார். 

இந்த வாரப் பூங்கொத்து பூனம் அவர்களுக்கு!
  
இந்த வார முகப்புத்தக இற்றை:

தலைப்பில் 2/10 = 2 அப்படின்னு எழுதி இருக்கே அது தான் இந்த வார முகப்புத்தக இற்றை! Prove 2/10 = 2 அப்படின்னு ஒரு கணக்கு. ஜப்பான் மாணவன் – இது தப்பான கேள்வி என்று சொல்ல, அமெரிக்க மாணவன் – வினோதமா இருக்கே, இது எப்படி சாத்தியம்என்று கேட்டான்!  ஆனா நம்ம ரஜினி அண்ணாத்த சுலபமா இதை நிரூபித்து விட்டார்! எப்படி....  பாருங்களேன்! :)


இந்த வார குறுஞ்செய்தி:

WE ALL MAKE MISTAKES IN OUR LIFE.  BUT WIFE AND BOSS ONLY HAS THE ART OF FINDING IT, REMEMBERING IT AND REMINDING IT EVERY NOW AND THEN!

                SENT BY: MRS.SARASWATI

ரசித்த காணொளி:

என்கிட்ட மோதாதே...  :) சிகரெட் பிடிக்காதே என்று சொன்ன பிறகும் சிகரெட் பிடித்தால் இப்படி நடக்கலாம்! பாருங்களேன்!




ரசித்த பாடல்:

பசங்க படத்திலிருந்து ஒரு வெட்கம் வருதே வருதே!பாடல் இந்த வார ரசித்த பாடலாக!




இந்த வார புகைப்படம்:



“Hello, Excuse me!” உயரமானவரே, கொஞ்சம் குனிஞ்சு போங்க! என்று சொல்லுமோ இந்த யானை!

படித்ததில் பிடித்தது:



அரசன் ஒருவன் சகுனங்களில் ஆழ்ந்த நம்பிக்கை உடையவன். அரண்மணை சோதிடர் இந்த நம்பிக்கை மேல் குளிர் காய்ந்து கொண்டிருந்தார். ஒரு நாள் இப்படித்தான் 'அரசே, அதிகாலை எழுந்தவுடன் இரண்டு காக்கைகளை ஒன்றாகப் பார்த்தால் நாள் சிறக்கும்' என்று நம்பிக்கை ஊட்டினார்.

மன்னன் சேவகனை அழைத்தான். காலையில் எங்காவது இரண்டு காக்கைகள் தென்பட்டால் உடனே தனக்குத் தெரிவிக்க வேண்டும் என்று கட்டளையிட்டான்.

அதன் பின் தினமும் பொழுது விடியும் முன்பே சேவகன் தெருவில் அலையத் தொடங்கி விடுவான்.

ஒரு நாள் அரண்மனக்குப் பக்கத்துத் தெருவில் இரண்டு காக்கைகள் ஒன்றாக அமர்ந்திருப்பதைக் கண்டான். "அடடா! நல்ல சகுனம், இன்று மன்னர் நமக்கு நிச்சயம் பதவி உயர்வு கொடுப்பார் என்று மகிழ்ச்சி மிகுதியுடன் மூச்சிரைக்க ஓடி வந்து மன்னரிடம் விபரம் சொன்னான்.

இதைக் கேட்டு துள்ளி எழுந்த மன்னன் சேவகனுடன் அந்த இடத்திற்கு ஓடினான். அதற்குள் ஒரு காக்காய் 'வாக்கிங்' போய் விட்டது.

மன்னனுக்கு மூக்கின் மேல் கோபம் வந்து விட்டது. தளபதியை அழைத்து 'இந்தப் பொறுப்பற்ற சேவகனுக்குப் பத்து கசையடி கொடு' என்று உத்தரவிட்டான்.

சேவகன் சிரிக்க ஆரம்பித்து விட்டான். 'இடுக்கண் வருங்கால் நகுக' என்று படித்துப் புரிந்து வைத்திருந்தவன் போலும். மன்னனுக்கு ஆத்திரம் இன்னமும் அதிகமானது. 'நீ சிரித்ததற்கு சரியான காரணம் சொல்லாவிட்டால் இன்னமும் பத்து கசையடி' என்று உறுமினான்.

சேவகன் சொன்னான். 'மகா மன்னரே. இன்று நான் மட்டும்தான் அதிகாலையில் இரட்டைக் காக்கைகளைப் பார்த்தேன். கை மேல் பலன் கிடைத்து விட்டது அல்லவா?' என்றான்.

மன்னருக்கு சுருக்கென்று ஏதோ உரைத்தது. சோதிடர் கூட 'எஸ்கேஏஏஏஏ..ப்' ஆகிவிட்டார் என்று கேள்வி!!!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.


புதன், 24 செப்டம்பர், 2014

ஓஹோஹோ... கிக்கு ஏறுதே!



படம்: இணையத்திலிருந்து....

நேற்று மாலை ஏழரை மணி அளவில் அலுவலகத்திலிருந்து வீடு நோக்கி திரும்பிக் கொண்டிருந்தேன். வழியில் ஒரு குடிமகன் ஓட்டுனர் உரிமம் பெற எட்டு போடுவது போல, நடந்து வரும்போதே எட்டு போட்டுக் கொண்டிருந்தார். அவர் தள்ளாடுவதில் என் மேல் முட்டிக் கொள்வாரோ என்று சற்றே ஒதுங்கினேன்... “என்னவே.... குடிச்சிருக்கியா? தள்ளாடற! என்று என்னைக் கேட்டுவிட்டு குப்பைக்கூடையின் அருகில் இருந்த நாயிடம் பேசினார்! “இவன் கிடக்கான் குடிகாரன்.....  நீ வாடா செல்லம், உனக்கு லெக் பீஸ் வாங்கித்தரேன்!

போதையில் என்ன செய்கிறோம் என்று தெரியாத அளவிற்கு சரக்கடித்திருப்பார் போல!

எத்தனை விதமான போதைகள்! விதம் விதமாய் கண்டு பிடிக்கிறார்கள் இங்கே. வீட்டை விட்டு ஓடி வரும் சிறுவர்கள், தில்லியின் பல பகுதிகளில் நடைபாதையில் குடியிருக்கும் நாடோடிகள் என இவர்களது போதைப்பழக்கம் அளவிடமுடியாதது. குப்பைக்கூடைகளில் இருந்து பிளாஸ்டிக் பேப்பர்களை எடுத்து, அதை விற்று வரும் பணத்தில் உணவுக்கு செலவழிப்பதை விட போதைக்கு அதிகம் செலவழிக்கிறார்கள்.

அதிலும் சில சிறுவர்கள் போதைக்கு அடிமையாகி, White Fluid [Eraze-Ex] கூட வரும் Thinner-ஐ ஒரு துணியில் நனைத்து அதை நுகர்ந்து போதை ஏற்றிக் கொள்கிறார்கள்.  சில இடங்களில் இதன் விற்பனை தடை செய்யப்பட்டிருந்தாலும், Stationary கடைகளில் இப்போதும் கிடைக்கிறது. விற்பனையும் அமோகமாக இருக்கிறது.  அதன் முதல் தேவையை விட போதை ஏற்றிக்கொள்ள வாங்குபவர்கள் தான் அதிகம் என்கிறது ஒரு கணக்கெடுப்பு!

இது இப்படி இருக்க, நண்பர் ஒருவர் தனது தம்பியின் போதைப்பழக்கம் பற்றி சில நாட்கள் முன்னர் சொல்லிய விஷயம் மனதில் ஒட்டிக் கொண்டிருக்கிறது. அதையும் உங்களுக்குச் சொல்லி விடலாம்! அவர் சொன்னதைக் கேட்டதும் எனக்கு அதிர்ச்சி....  உங்களுக்கும் அதிர்ச்சி ஏற்படலாம்....  கவனமாகப் படியுங்கள்!

 படம்: இணையத்திலிருந்து....

நண்பரின் தம்பி - அவருக்கு வயது 45. குடிப் பழக்கத்திற்கு அடிமையாகி, ஒவ்வொரு நாளும் ஒரு அத்தா[adhdha] அதாவது Half இல்லாது இருக்க முடியாது.  தினமும் இப்படி குடித்து விட்டு வீட்டில் தகராறு செய்வாராம். வீட்டிலுள்ளவர்கள் எத்தனை அறிவுரை கூறினாலும் அதனை கவனத்தில் கொள்ளாது குடிப்பழக்கத்தினை தொடர்ந்திருக்கிறார்.

குடிப்பழக்கமும் அதனால் வரும் தகராறுகளும், தொல்லைகளும் அதிகரிக்க, அவரின் குடிப்பழக்கத்தினை மறக்கடிக்க, சிகிச்சைகள் அளிக்கத் துவங்கியிருக்கிறார்கள்.  தில்லி நகரிலுள்ள ஒரு De-addiction Centre-க்கு அழைத்துச் சென்று சிகிச்சை அளிக்க அங்கேயே தங்க வைத்திருக்கிறார்கள்.  சிகிச்சை நடந்து கொண்டிருக்கும்போது குடிக்க முடியாது ரொம்பவே கஷ்டப்பட்டிருக்கிறார். போதை ஏற்றிக்கொள்ள ஏதாவது செய்தே ஆகவேண்டும் என திட்டமிட்ட அவர் செய்த விஷயம் என்ன தெரியுமா? தனக்கு ஜலதோஷம் பிடித்திருப்பதாகச் சொன்னது!

ஜலதோஷம் பிடித்திருக்கிறது என்றும் அதனால் Vicks Vaporub வேண்டும் என்று கேட்டிருக்கிறார்.  ஆறுவிதமான தொல்லைகளிலிருந்து நிவாரணம் என அவர்கள் விளம்பரம் செய்ய, இவர் ஏழாவதாக அதற்கு ஒரு பயனைக் கண்டுபிடித்திருக்கிறார்.  காலை உணவாக தரும் bread இல் jam-க்குப் பதிலாக Vicks Vaporub-ஐத் தடவி அதை உட்கொண்டிருக்கிறார்.  ஒரே நாளில் ஒரு Vicks Vaporub காலியாக, அடுத்த நாளும் கேட்டிருக்கிறார். மூன்றாவது நாளும் கேட்க, சந்தேகம் வந்து அவரை கவனித்தால் அவர் அதை Jam போல உபயோகிப்பது தெரிந்திருக்கிறது.

எப்படியெல்லாம் போதை ஏற்றிக் கொள்ளத் தோன்றுகிறது அவருக்கு. சாதாரணமான ஒரு இச்சையாக தொடங்கிய போதை ஆசை, கொஞ்சம் கொஞ்சமாக அதிகமாகி அவரை அடிமையாக்கி விட்டதே....

இவரது போதைப் பழக்கத்திலிருந்து இவரை எப்படியும் மீட்க வேண்டும் என அவரது குடும்பத்தினர் போராடி வருகிறார்கள். எப்படியாவது போதை ஏற்றிக்கொள்வதை தடுக்க இப்போது கண்கொத்திப் பாம்பாக அவரையே கவனித்து வருகிறார்களாம். இப்போது காட்டும் கவனத்தினை, ஆரம்பத்திலேயே செலுத்தியிருந்தால் குடிபோதைக்கு அடிமையாகி இருக்க மாட்டாரோ எனத் தோன்றினாலும், சுயபுத்தி இல்லாத போது என்ன சொல்லி என்ன பயன் என்றும் தோன்றுகிறது!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.