வியாழன், 7 ஏப்ரல், 2016

ஏரியிலிருந்து பிஷ்ணுபூர் கோவிலுக்கு… கூடவே ஒரு சமையலும்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 8

என்ன நண்பர்களே, லோக்டக் ஏரிக்கரையிலிருந்து புறப்பட உங்களுக்கும் மனமில்லையா?  இருந்தாலும், புறப்படத்தானே வேண்டும்.  நாங்களும் அந்த அமைதியான, இயற்கை அன்னையின் தாலாட்டுப் பாடலைக் கேட்டபடியே இருந்துவிட நினைத்தாலும், புறப்பட்டோம்.  வந்த வழியே திரும்ப வரவேண்டும் என்றாலும், வழியில் மேலும் சில இடங்களையும் பார்த்தபடியே வர வேண்டும் என்பது எங்கள் திட்டம்.  வழியில் கண்ட காட்சிகளையும், இடங்களையும் பற்றி இப்பதிவில் பார்க்கலாமா?


கடைவீதி கலகலக்கும்......

நாங்கள் சென்றபோது காலை நேரம் என்பதால் வழியில் உள்ள ஊர்களில் அத்தனை ஆள் நடமாட்டம் இல்லை.  திரும்பி வரும் போது முன் பகல் என்பதால் ஊரில் உள்ள அனைவருக்கும் துயிலெழுந்து நடமாட ஆரம்பித்திருந்தார்கள்.  கடைத்தெருக்கள் மக்களாலும், வண்டிகளாலும் நிரம்பி இருந்தது.  வித்தியாசமான மனிதர்கள், வித்தியாசமான காய்கறிகள், ராஜபவனி போல அமர்ந்து வர வசதியான உயர ரிக்‌ஷாகள் என அனைத்தையும் கவனித்தபடி வந்தோம். 


ராஜபவனி!

வழியிலே ஒரு கடைத்தெரு – நிறைய மக்கள் நடமாட்டம், ரிக்‌ஷாக்கள், காய்கறிகள் வாங்க வந்திருக்கும் மணிப்பூரி பெண்மணிகள் என இருந்தது.  ஒரு காய் வித்தியாசமாக இருந்தது.  எல்லாக் கடைகளிலும் கொத்துக் கொத்தாக அந்த காய் விற்பனை செய்யப்பட அனைவருமே அவற்றை வாங்கிக் கொண்டிருந்தார்கள்.   அது என்ன வித்தியாசமாக இருக்கிறதே என ஓட்டுனர் ஷரத் இடம் கேட்க, அவர் அந்த காயின் பெயர் யோங்க்சா என்றும் அதைச் சட்னியாக செய்து கருப்பு அரிசி சாதத்துடன் சாப்பிட்டால் எப்படி இருக்கும் தெரியுமா என சப்புக் கொட்டினார்.

அது என்ன யோங்க்சா சட்னி, கருப்பரிசி சாதம் என உங்களில் சிலர் கேட்கக்கூடும் என்பதால் எனது முந்தைய பதிவொன்றிலிருந்து சில வரிகளை உங்களுக்காக இங்கே தருகிறேன்.


யோங்க்சா
இந்த யோங்க்சாக் என்பது பீன்ஸ் வகைகளில் ஒன்றுஇது பெரிய மரத்தில் பட்டை பட்டையாகக் காய்த்துத் தொங்குகிறது. ஒவ்வொன்றும் முழ நீளம் இருக்கிறது! இந்த யோங்க்சாக்-கை அனைத்து மணிப்பூர் வாசிகளும் தினம் தினம் சாப்பிடுவார்கள் போலும்எங்கே பார்த்தாலும் இந்தக் காய்களை கொத்துக் கொத்தாக வைத்து விற்பனை செய்கிறார்கள். அதை இப்பகுதிப் பெண்கள் ரொம்பவும் கவனித்து வாங்குகிறார்கள்காரணம் அதில் புழுக்கள் இருக்கலாம்! புழுக்கள் இல்லாது வாங்குவதில் தான் உங்கள் சாமர்த்தியம் இருக்கிறது! இந்த யோங்க்சா கொண்டு இரண்டு விதமாய் Side dish தயாரிப்பார்களாம். ஒன்று யோங்க்சா இரோம்பா, மற்றொன்று யோங்க்சா ஷிங்க்ஜூஎன்னடா இது வாயில நுழையாத பெயரா இருக்கேன்னு யோசிக்காதீங்க! கவலையும் படாதீங்கசாப்பிடும் போது வாயில் நிச்சயமா நுழைஞ்சுடும்! இந்த Side dish வெறும சாப்பிட முடியுமா? கூட Main dish வேணும்ல! அதுதான் குரங்கு அரிசி! குரங்கு அரிசியாகுரங்கு Mark இல்ல குரங்கு Brand அப்படி எதாவது இருக்குமோன்னு யோசிக்கக் கூடாது!

யோங்க்சா விற்பனைக்கு....
 மணிப்பூரில் கருப்பு வண்ணத்தில் அரிசி கிடைக்கிறது. அதைத் தான் இவர்கள் Monki rice-ன்னு சொல்றாங்க! Monki[ey]-ன்னா குரங்குன்னு உங்களுக்கு நிச்சயம் தெரிஞ்சுருக்குமே! இந்த மோங்கி ரைசும் யோங்க்சா சட்னியும் இருந்தா போதும்எவ்வளவு வேணும்னாலும் சாப்பிடுவேன் என எங்கள் வாகன ஓட்டுனர் சொன்னார். அது எப்படி தயாரிக்கணும்னு கேட்டேன் – ”வாங்களேன் உங்களை வீட்டுக்கு அழைச்சுட்டுப் போய் சாப்பிடவே தரேனேஎன்று சொல்ல கொஞ்சம் ஜெர்க் அடித்தேன்! – “இல்லைப் பரவாயில்ல! செய்முறை மட்டும் சொல்லுங்க!”.  அவர் பாவம்சமையல் கலைல கொஞ்சம் Weak போல! இல்லை எனக்குத் தெரியாதுன்னு சொல்லிட்டாரு

மணிப்பூர் வாசிகள் கோடைக் காலம் முழுவதுமே இதை விரும்பிச் சாப்பிடுவார்களாம். குளிர் காலத்தில் கிடைப்பதில்லை என்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்! சைவம், அசைவம் என இரண்டுமே தயாரிப்பது உண்டு. இந்த யோங்க்சாவை ஆங்கிலத்தில் Tree Beans என்றும், stinky beans, Smelly beans என்றும் அழைப்பதுண்டு. அதற்கும் காரணம் இருக்கிறது. யோங்க்சா சாப்பிட்டால் நமது சுவாசத்திலும், கழிக்கும் சிறுநீரிலும் ஒரு வித நாற்றம் இருக்குமாம்போலவே இரண்டு நாட்கள் வரை பக்கத்தில் ஒரு பய வரமாட்டான்! – ஏன் எனில் அபான வாயு வெளி வந்து கொண்டே இருக்குமாம்நல்ல வேளை இந்த குரங்கு அரிசியும் யோங்க்சா சட்னியும் நான் சாப்பிடல! பதினைஞ்சு நாள் பயணத்தில் முதல் நாள் தான் மணிப்பூரில்! அப்போதே இப்படி தொடங்கி இருந்தால் என்னாவது!

சாலைக் காட்சிகளைப் பார்த்தபடியே நாங்கள் சென்று சேர்ந்த இடம் பிஷ்ணுபூர் மாவட்டத்திற்குப் பெயர் வரக் காரணமாயிருந்த ஒரு கோவிலுக்கு.  பதினைந்தாம் நூற்றாண்டுக் கோவில் – கோவில் என்றதும் மிகப் பெரிய கோவில் என நினைத்து விட வேண்டாம்.  மிகச் சிறிய கோவில் தான். கோவிலும், கோவிலைச் சுற்றி ஒரு சிறிய பூங்காவும் பராமரித்து வருகிறார்கள்.  மணிப்பூர் நகரில் செங்கற்கள் கொண்டு கட்டப்பட்ட முதல் கோவில் இது என்றும் நம்பப்படுகிறது.  புராதனமான கோவில் என்பதால், இந்திய அரசின் தொல்பொருளியல் துறையின் கீழ் பராமரிக்கப் படுகிறது.  கோவில் எப்படி வந்தது எனும் கதையையும் பார்க்கலாம்…


பிஷ்ணுபூர் - விஷ்ணு கோவில்...

மணிப்பூர் ராஜாவான க்யாம்பாவும் போங் நகர ராஜாவான சாவ்பா கெ கோம்பா என்பவரும் இணைந்து தற்போதைய மியான்மார் பகுதியில் இருக்கும் க்யாங் எனும் நாட்டை கைப்பற்றினார்கள்.  வெற்றியில் மகிழ்ச்சி கொண்ட போங் ராஜா, தன்னுடன் சேர்ந்து போரிட்ட க்யாம்பாவுக்கு ஒரு சிறிய விஷ்ணு சிலையைப் பரிசளித்தாராம்.  அந்தச் சிலை கிடைத்த பிறகு க்யாம்பா விஷ்ணுவின் மீது பக்தி செலுத்த ஆரம்பித்ததோடு, ஒரு கோவில் கட்டச் செய்து அதில் விஷ்ணுவின் சிலையை பிரதிஷ்டை செய்து வழிபட ஆரம்பித்திருக்கிறார்.

விஷ்ணுவின் சிலை இங்கே வந்த பிறகு இந்த இடத்தின் பெயரும் விஷ்ணுவின் பெயராலேயே பிஷ்ணுபூர் என அமைந்துவிட்டது!
என்ன நண்பர்களே, இந்தப் பகுதியில் சொல்லப்பட்ட விஷயங்களை ரசித்தீர்களா?  பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்.


அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..


நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 6 ஏப்ரல், 2016

ஹாலிடே நியூஸ் – சுற்றுலாவின் புதிய தேடல்


தமிழில் மாத இதழ்கள் நிறையவே இருக்கின்றன. பெரும்பாலானவை சினிமாவிற்கே நேர்ந்து விடப்பட்ட நிலையை நம்மால் காண முடிகிறது. பெண்களுக்கு என்றே பல மாத/வார இதழ்கள் வந்து கொண்டிருக்கின்றன. புதிது புதிதாய் புத்தகங்கள் வந்தாலும் தொடர்ந்து வரும் புத்தகங்கள், மக்கள் மனதில் இடம் பிடித்த புத்தகங்கள் மிகக் குறைவே. சுற்றுலா, பயணம் போன்ற விஷயங்கள் மட்டுமே இடம் பெரும் மாத இதழ் இருந்தால், அதுவும் நம் தாய் மொழியாம் தமிழில்  இருந்தால் எப்படி இருக்கும் என நம்மில் பலரும், குறிப்பாக சுற்றுலாப்பிரியர்களாக இருக்கும் என்போன்றவர்களும் நினைப்பதுண்டு.

ஆங்கிலத்தில் National Geographic Traveller India, Lonely Planet Magazine India, Outlook Traveller என சுற்றுலா சம்பந்தப்பட்ட ஆங்கில மாத இதழ்கள் இருந்தாலும், தமிழில் இப்படிப்பட்ட இதழ்கள் இல்லவே இல்லை என ஒரு குறை எனக்குண்டு.  அந்தக் குறையை மதுரையில் இருக்கும் வளர்தமிழ் பப்ளிகேஷன்ஸ் போக்கியிருக்கிறது. 


படம்:  நண்பர் சுரேஷ் குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

இப்படி இருக்கையில் சுற்றுலாவுக்கென்றே ஒரு மாத இதழ், அதுவும் கண்களைக் கவரும் வண்ணப் படங்களுடன் பத்திரிகை வெளி வரும் பட்சத்தில், அதைப் படிப்பவர்களுக்கு எவ்வளவு மகிழ்ச்சி கிடைக்கும். ஹாலிடே நியூஸ் எனும் மாத இதழ் இப்பணியை கடந்த மூன்று வருடங்களாகச் செய்து வந்திருக்கிறது.  பெரிய பெரிய பத்திரிகைகளுக்கிடையே போட்டி போடுவது, ஏஜெண்டுகள் செய்யும் சதி போன்ற காரணங்களால் இதழினை நடத்த முடியாது போக சில மாதங்களுக்கு முன்னர் பத்திரிகை வெளி வருவது நின்றது.

இந்த மாத இதழ் பற்றி நான் முதலில் கேள்விப்பட்டது/படித்தது நண்பர் “கடல் பயணங்கள்” சுரேஷ் அவர்களின் வலைப்பூவில் தான். அவரது பயணக் கட்டுரைகள் “ஹாலிடே நியூஸ்” மாத இதழில் அக்டோபர் 2014 இதழிலிருந்து துவங்கியது என்பதை அவரது பதிவில் படித்த போதிலிருந்தே இதழை படிக்க வேண்டுமென்ற ஆசை உண்டு.  தமிழகத்தினை விட்டு தொலைவில், தலைநகர் தில்லியில், இருப்பதில் இருக்கும் சில குறைபாடுகளில் தமிழ் புத்தகங்கள் வாங்குவதில், தொடர்ந்து கிடைப்பதில் இருக்கும் சிக்கல்களும் ஒன்று. ஹாலிடே நியூஸ் படிக்க ஆசை இருந்தும் படிக்க முடியவில்லை. 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சமீபத்தில் “ஹாலிடே நியூஸ்” மாத இதழின் இணை ஆசிரியர் நண்பர் “கூட்டாஞ்சோறு” செந்தில்குமார் அவர்களிடமிருந்து ஒரு மின்னஞ்சல் வந்திருந்தது.  “ஹாலிடே நியூஸ்” மாத இதழ் இந்த ஏப்ரல் மாதத்திலிருந்து மீண்டும் புத்தம்புது பொலிவோடு வெளி வர இருக்கிறது என்பது தான் அந்த மின்னஞ்சல் சொன்ன செய்தி! அதைப் படித்த போது எனக்கு மகிழ்ச்சி.  இம்முறை எப்படியும் இந்தப் புத்தகத்தினை படிக்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டேன். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

சென்ற வாரத்தில் எனது தில்லி முகவரிக்கு புத்தகம் வந்து சேர்ந்தது.  அனுப்பி வைத்த நண்பர் செந்தில் குமார் அவர்களுக்கு மனம் நிறைந்த நன்றி.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

அட்டை 2 அட்டை வண்ணப் படங்கள் புத்தகத்தினைப் படிக்கும் நம் கண்களைக் கவர்கின்றன.  ஒரு பக்கத்தில் குளு குளு மணாலிக்கு அழைத்துச் சென்றால், இன்னுமொரு பக்கத்தில் வட கிழக்கு மாநிலத்தின் ஷில்லாங் நகரின் சிறப்பான இடங்களுக்கு அழைத்துச் செல்கிறார்கள். உத்திராகண்ட் மாநிலத்தின் ஜிம் கார்பெட், சின்ன பெங்குயின்களின் செல்ல நடை, பாபநாசம் – பாவம் போக்கும் தலங்கள், பட்டதக்கல் – பார்க்க திகட்டாத கலைக்கோவில்கள் என ஒவ்வொரு கட்டுரையும் மனதைக் கவரும் விதமாக எழுதப்பட்டிருக்கிறன. அவற்றுக்கான படங்களும் அற்புதமாக வந்திருக்கிறன.  இந்தியா மட்டுமல்லாது வெளி நாடுகளில் இருக்கும் சுற்றுலாத் தலங்கள், கண்கவர் இடங்கள் பற்றிய தகவல்களும் உண்டு. 


 படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

ஹாலிடே நியூஸ் மாத இதழின் விலை ரூபாய் 50 மட்டுமே.  எப்படி இந்த இதழை உங்கள் இல்லம் தேடி வர வைப்பது, சந்தா உண்டா? போன்ற கேள்விகளுக்கு பதில் வேண்டுமெனில் 94435-71391 என்ற எண்ணுக்கு அழைக்கலாம்.  உங்கள் பங்களிப்புகளையும் அனுப்பி வைக்கலாம்.  எனக்கு பயணக் கட்டுரை எழுதுவது முடியாத விஷயம், ஆனால் எங்கள் படங்களை மட்டும் அனுப்பி வைக்கிறோம் என்பவர்களும் அப்படங்களை myholidayphoto@gmail.com எனும் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைத்தால் புத்தகத்தில் அதற்காக ஒதுக்கப்பட்டிருக்கும் ஒரு பக்கத்தில் வெளியிடப்படும்.


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...


தமிழில் இது மாதிரி சுற்றுலாவிற்கு என்றே ஒரு இதழ் வருவது மிகச் சிறப்பான விஷயம்.  தொடர்ந்து இந்த இதழ் வெளிவருவது வாசகர்களின் கையில்.  எனவே இந்த மாத இதழ் தொடர்ந்து வெளிவர நாமும் உதவுவோம்.  சுற்றுலா தகவல்களைப் படித்து மகிழ்வோம். 


படம்:  நண்பர் செந்தில்குமார் அவர்களின் வலைப்பூவிலிருந்து...

கடைசியாக ஒரு விஷயம் – அடியேனின் ஒரு கட்டுரையும் ஏப்ரல் மாத “ஹாலிடே நியூஸ்” இதழின் 54-55 பக்கங்களில் வெளிவந்திருக்கிறது. என்னுடைய வலைப்பூவில் சில நாட்களுக்கு முன்னர் எழுதிய “முதுகுச் சுமையோடு ஒரு பயணம் கட்டுரை தான்!  வரும் மாத இதழ்களிலும் என்னுடைய கட்டுரை வெளி வரலாம்….  என்னுடைய கட்டுரையை வெளியிட்ட மாத இதழ் ஆசிரியர்களுக்கு, குறிப்பாக நண்பர் செந்தில்குமார் அவர்களுக்கு எனது நெஞ்சம் நிறைந்த நன்றி.

மாத இதழ் வாங்கிப் படித்து விட்டு உங்கள் கருத்துகளையும் சொல்லுங்கள் நண்பர்களே!

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி. 

செவ்வாய், 5 ஏப்ரல், 2016

பிறந்த நாளும் மறதியும் – நானிருக்க பயமேன்…. – நண்பேன்டா!

முகப் புத்தகத்தில் நான் - 5

பிறந்த நாளும் மறதியும் – 31 March 2016

பிறந்த நாள்….  அதுவும் என் பிறந்த நாளே மறந்து விடும் எனக்கு, அடுத்தவர்களின் பிறந்த நாள் நினைவில் இருக்குமா?  பல முறை மறந்து திட்டு வாங்கிக் கொள்வேன் – வேற யாரிடம்! :) 

இது பற்றி எனது மனைவி சென்ற வருடம் எழுதிய முகப்புத்தக இற்றையின் ஒரு பகுதியை அப்படியே இங்கே தருகிறேன்…

”காலைல எழுந்ததிலிருந்து ஏன் என்னையே பார்க்கற….
சுத்தி சுத்தி என் பின்னாடியே வர,
இன்னிக்கு ஆஃபீஸ் உண்டு தெரியுமா?
சமைக்கறதா ஐடியா இருக்கா?
இல்லை கேண்டீன்ல பார்த்துக்கணுமா??
எதாவது சொல்லேன்…...
இன்னிக்கு என்ன தேதி?
ஏய்! நான் என்ன கேட்கிறேன்…. நீயென்ன சொல்ற….
இன்னிக்கு என்ன நாள் தெரியுமா?
இன்னிக்கு என்ன??
கொஞ்சம் யோசிச்சு பாருங்களேன்…...
குட்டிம்மா உங்கம்மாவுக்கு இன்னிக்கு என்ன ஆச்சு???
காலைல வேலையப் பார்க்காம…...
அப்பா, அம்மாவுக்கு இன்னிக்கு ”ஹாப்பி பர்த்டேப்பா…. அது கூட மறுந்துடுத்தாப்பா…..

மறப்பது மட்டுமல்ல, திருமண நாளும், பிறந்த நாளும் ஒரு குழப்பம் – இரண்டையும் மாற்றி சொல்லி அசடு வழிந்ததும் உண்டு! இப்போதெல்லாம் அலைபேசியில் Reminder Set செய்து வைத்துக் கொள்கிறேன். இந்த முறை மனைவியின் பிறந்த நாள் அன்று ஹிமாச்சல் பிரதேசத்தின் மணாலியில் இருந்தேன்.  அங்கிருந்து வாழ்த்துச் சொல்லி விட்டேன். 

இந்த முறை மறக்காமல் இருக்க வேண்டுமே என வருடத்தின் ஆரம்பத்திலேயே அனைவரது பிறந்த நாளையும் Reminder Set செய்து வைத்தேன்.  நான் மறந்தாலும், என் மகள் மறப்பதில்லை. மகள் அம்மாவின் பிறந்த நாளுக்கு அளித்த வாழ்த்து அட்டை பற்றி சொன்னார்! அந்த வாழ்த்து கீழே….


நானிருக்க பயமேன் – 1 April 2016


ஹோலி, சனி, ஞாயிறு என தொடர்ந்து நான்கு நாட்கள் விடுமுறை – எங்கேயாவது பயணிக்கலாம் என முன்பே முடிவு செய்து இருந்தேன்.  நண்பர்கள் மற்றும் அவர்களது குடும்பத்தினரோடு ஹிமாச்சலப் பிரதேசத்தின் குல்லூ, மணாலி மற்றும் மணிகரன் ஆகிய இடங்களுக்குச் செல்ல முடிவு செய்தோம்.  கொட்டிக் கிடக்கும் பனியும், பொங்கி ஓடும் பியாஸ் நதியும் ஆஹா…  எத்தனை இன்பம்….. பயணம் பற்றிய கட்டுரைகள் பிறகு! இப்போது இன்றைய விஷயத்திற்கு வருவோம்.

எப்படி நமது மாநிலத்தில் தேனிலவு என்றால் ஊட்டி, கொடைக்கானல் என பயணிப்பார்களோ, வடக்கில் தேனிலவு என்றால் ஷிம்லா, குஃப்ரி, மணாலி என பயணிப்பது வழக்கம்.  குல்லூ – மணாலியிலும் நிறைய தேனிலவு ஜோடிகளை பார்க்க முடிந்தது.  பியாஸ் நதி சுழித்து ஓடிக் கொண்டிருக்க, அங்கே நின்று கால்களை நனைத்தவாறு நதியின் போக்கினையும் இயற்கையையும் படம் எடுத்துக் கொண்டிருந்தேன்.  பியாஸ் நதியின் படுகையில் பெரிய பெரிய கற்களும் பாறைகளும் உண்டு! நான் நின்று கொண்டிருந்த இடத்தில் நதியின் உள்ளே ஒரு பெரிய பாறை…  அதைச் சுற்றிலும் தண்ணீர் ஓடிக் கொண்டிருந்தது!அங்கே ஒரு இளம் ஜோடி….  சீக்கியரும் அவரது மனைவியும் கரையோரத்தில் நின்றிருக்க, அந்தப் பெண் நதியில் கால் வைத்து உள்ளே சென்று அந்தப் பாறையின் மேல் ஜோடியாக நின்று செல்ஃபி எடுத்துக் கொள்ள ஆசைப்பட்டார்.  தண்ணீரின் வேகத்தினைப் பார்த்த ஆண்மகனுக்கு தயக்கம்.  “என்னய்யா இப்படி பயப்படற….  நானிருக்க பயமேன்!” என்றுச் சொல்லிச் சொல்லியே உசுப்பேத்தி விட அந்த இளைஞர் முதலில் மெதுவாக பாறையின் மேல் சென்று விட்டார்.  அந்தப் பெண்ணும் சிறிது நேரத்தில் அங்கே செல்ல, புகைப்படங்கள் எடுக்கப்பட்டன!

நதியின் பிரவாகம் மிக அதிகம். ஒரு நொடி தடுமாறினாலும் ஆளை அடித்துச் செல்லும் வேகம் – உள்ளூர் மக்களே அந்த வெள்ளத்தைக் கண்டு பயப்பட, வெளி ஊர்களிலிருந்து வந்திருந்த பலரும் நதியின் போக்கு தெரியாது உள்ளே இப்படி வருவதைப் பார்க்க முடிந்தது.  பாறை மேல் ஒருவரை ஒருவர் கட்டிப் பிடித்துக் கொண்டு தன்னிலை மறந்திருந்த அந்த இளம் ஜோடியைப் பார்த்து வேகமாக ஓடிவந்த ஒரு உள்ளூர் பெண்மணி, அவர்களை ”முதலில் கரைக்கு வாங்க, விழுந்தா உடம்பு கூட கிடைக்காது!” என்று திட்டிக் கொண்டிருந்தார்…….

அந்தப் பெண்ணோ “நானிருக்க பயமேன்!” என்ற எண்ணத்தினை பிரதிபலித்துக் கொண்டிருந்தார்!

நண்பேன்டா! – 2 April 2016

அலுவலகத்தில் இருக்கும் Coffee Board சென்று, தினமும் ஒரு காபியாவது குடிக்காமல் இருந்தால் எனக்கு அன்றைய பொழுது புலர்ந்ததற்கு அர்த்தம் இல்லாத மாதிரித் தோன்றும். அங்கே இருக்கும் நாராயணன் எனும் பெயர் கொண்ட கன்னடக்காரர் தேனீயைப் போல உழைத்துக் கொண்டே இருப்பார். அதிகாலையில் வந்தால் வீடு திரும்புவது ஏழரை மணிக்கு மேல் தான்.  அத்தனை சுறுசுறுப்பு, எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்வது மட்டுமல்லாது, முகத்தில் எந்தவித அலுப்போ, சலிப்போ என்றைக்குமே பார்த்ததில்லை. அவ்வப்போது அவரிடம் பேச்சுக் கொடுப்பதுண்டு.

இன்றைக்கு அவர் கையில் கன்னடத்தில் பச்சை குத்தியிருந்ததைப் பார்த்து அது என்ன எழுதி இருக்கிறது என்று கேட்டேன் – அப்போது அவர் சொன்ன விஷயம் தான் இன்றைக்கு சொல்லப்போவது.  அவர் கையில் ”[B]போரையா” என்று பச்சை குத்தி இருக்கிறதாம். அது அவருடைய பால்ய கால நண்பனின் பெயர். நண்பரின் பெயரை இவர் பச்சை குத்திக் கொள்ள, அந் நண்பர் அவரது கையில் “நாராயணன்” என இவரது பெயரை பச்சை குத்திக் கொண்டாராம். அத்தனை இணை பிரியாத நட்பு! அதுவும் பத்து வயதில்…. அதைச் சொன்ன பிறகு அவரது முகத்தில் சற்றே கலக்கமும் ஒரு சோகமும்…..  சோகத்திற்கான காரணத்தையும் அவரே சற்று நேரத்தில் சொன்னார்.

நண்பர் போரையா வீட்டில் நான்கு சகோதரர்கள். ஒரு தீபாவளி சமயம்.  சகோதரர்கள் அனைவரும் அவர்கள் வீட்டில் இருந்தபோது பட்டாசு வெடித்துச் சிதற வீட்டில் தீப்பிடித்து விட, அனைவரும் ஒருவரை ஒருவர் கட்டிக் கொண்டு வெளியே ஓட முயற்சித்து இருக்கிறார்கள் – பாதுகாப்பாக இருக்க வேண்டும் என நினைத்து அனைவரும் கட்டிக் கொள்ள, ஒருவரும் உயிர் பிழைக்கவில்லை.  கட்டிப்பிடித்த நிலையில் கருகிய சடலங்களைத் தான் மீட்க முடிந்ததாம். என் பெயர் பச்சை குத்திக் கொண்ட நண்பன் இறந்து விட்டான். அவன் மறைந்து விட்டாலும், அவன் நினைவு என் கைகளில் மட்டுமல்ல நெஞ்சிலும் பதிந்து விட்டது என்று சொல்லி, பனித்த கண்களை துடைத்துக் கொண்டார்.

இத்தனை வருடங்கள் கழித்தும் அந்த நண்பரை, அவரது நினைவுகளை மறக்க முடியவில்லை நாராயணன் அவர்களால்…..  அவர்களது நட்பு பற்றி கேட்ட எனக்கு அதைப் பற்றி சிந்திக்காது இருக்கமுடியவில்லை…..

என்ன நண்பர்களே, எனது சமீபத்திய முகப் புத்தக இற்றைகளை ரசித்தீர்களா?

நாளை வேறொரு பகிர்வில் சந்திக்கும் வரை….

நட்புடன்

வெங்கட்

புது தில்லி.

திங்கள், 4 ஏப்ரல், 2016

மிதக்கும் தீவுகள்…

ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் – பகுதி 7


மிதக்கும் தீவுகள்

சென்ற பகுதியில் மணிப்பூர் நகரின் புகழ் பெற்ற குத்துச் சண்டை வீராங்கனை மேரி கோம் பற்றியும் அங்கே இருக்கும் விளையாட்டு அரங்கம் பற்றியும் பார்த்தோம். அதன் பிறகு தங்கும் இடம் சென்று இரவு உணவு முடித்து அன்றைய நாளின் அசதியைப் போக்க உறங்கி திரும்ப வருவதாய்ச் சொல்லி முடித்திருந்தேன். இதோ வந்து விட்டேன். உறக்கம் கழிந்து ஐந்து பேரும் தயாராக இருந்தோம்.  நாங்கள் ஷரத்-ஐ அழைக்கலாம் என அலைபேசியை எடுத்தபோது அவரிடமிருந்து அழைப்பு – தங்குமிடத்தின் வாயிலில் தான் காத்திருப்பதாகச் சொன்னார். கீழே வந்தோம். 


மீன் பிடிக்க வாரீயளா?

காலை உணவு கொஞ்சமாக ப்ரெட் டோஸ்ட், பராட்டா என எதாவது கிடைக்குமா எனக் கேட்க, உணவகத்தில் ஒரு மணி நேரம் ஆகும் என்ரு சொன்னார்கள்.  மணிப்பூர் வாசிகள் இத்தனை காலையில் உணவகத்திற்கு வரமாட்டார்கள் போலும்.  சரி வழியில் பார்த்துக் கொள்ளலாம் என புறப்பட்டோம்.  வழியில் மக்கள் நடமாட்டம் ஆரம்பித்திருந்தது. குறிப்பாக சிறு சிறு கடைகள் – காய்கறி, பால் போன்ற பொருட்களை விற்பவர்களைத் தான் அதிகம் பார்க்க முடிந்தது.  பால் விற்பனை சற்றே வித்தியாசமாக!


போக்குவரத்து வாகனம்....

தரையில் ஒரு பாலீதின் ஷீட் போட்டு அதில் பால் பாக்கெட்டுகளை குவித்து வைத்து விற்றுக் கொண்டிருந்தார் ஒரு பெண்மணி. இது வித்தியாசமாக இருக்கிறதே என யோசிக்கும்போதே பல பெண்கள் இப்படி பால் விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.  எங்கிருந்தோ பாலை வாங்கிக் கொண்டு வந்து இப்படி தரையில் போட்டு விற்பனை செய்வதை நான் வேறு எங்கும் பார்த்ததில்லை! பயணிகள் பயணிக்கவும், பொருட்களை எடுத்துச் செல்லவும் சிறிய வாகனங்களைத் தான் பயன்படுத்துகிறார்கள்.  ஆட்டோக்களில் கூட எங்கிருந்து எங்கே வரை செல்லலாம் என்பதை எழுதி வைத்திருக்கிறார்கள். 


ஏரிக்குச் செல்லும் பாதை.....  வழியிலே மோய்ராங்க் எனும் மாவட்டமும் வரும்!

வழியில் பல காட்சிகளைப் பார்த்தபடியே பயணம் செய்து கொண்டிருந்தோம். ஓட்டுனர் ஷரத் வழக்கம் போல அந்தந்த ஊர்களைப் பற்றி அவருக்குத் தெரிந்ததைச் சொல்லிக் கொண்டிருந்தார்.  சாலைகளில் அத்தனை மனித நடமாட்டம் இல்லை என்பதால் வாகனம் விரைவாகவே சென்று கொண்டிருந்தது. விரைவிலேயே சுமார் 50 கிலோமீட்டர் தொலைவில் உள்ள லோக் டக் ஏரிக்குச் சென்று சேர்ந்தோம். இந்த ஏரி மணிப்பூர் மாநிலத்தின் மிக முக்கியமான ஏரி. மாநிலத்தின் பல பகுதிகளுக்கு இந்த ஏரியில் இருந்து தான் குடிநீர் விநியோகம்.


கரையோர வீடும்  மிதக்கும் தீவுகளும்...

தில்லியிலிருந்து விமானத்தில் வரும்போது மணிப்பூரின் விமான நிலையத்தில் தரையிறங்கு முன்னர் ஒரு பறவைப் பார்வையாக இந்த ஏரியைக் கண்டு ரசிக்க முடியும். பெரிய ஏரியில் ஆங்காங்கே பசுமையான தீவுகளைப் பார்க்க முடியும்.  இந்த தீவுகளில் ஒரு சிறப்பு இவை மிதக்கும் தீவுகள்…  ஃபும்டி என அவர்களது மொழியில் அழைக்கப்படும் இந்த மிதக்கும் தீவுகள், மண், செடிகள் என பலவற்றை தன்னுள் கொண்டது.  இந்த தீவுகளில் வீடுகளைக் கட்டிக் கொண்டு வாழும் பழங்குடியினரும் உண்டு. 


தனியே தன்னந்தனியே நான் மீன் பிடிக்கச் சென்றேன்......

அவர்களது முக்கியமான தொழிலே மீன் பிடிப்பது தான். சின்னச் சின்ன படகுகளில் தனியாளாக நின்று கொண்டு, கையில் நீண்ட குச்சியை வைத்து படகை ஓட்டியவாறே, தண்ணீரின் மேற்பரப்பில் அவ்வப்போது குச்சியால் அடித்துக் கொண்டு மீன்பிடிக்கும் அவர்களைப் பார்த்தபடியே நின்றிருந்தோம். நாங்கள் சென்ற நேரம் காலை என்பதால் அங்கே மக்கள் நடமாட்டமே இல்லை.  அங்கே இருக்கும் உணவகம் ஒன்றில் வேலை செய்பவர்களும், சில தொழிலாளிகளும் மட்டுமே இருந்தார்கள். 


பூப் பூக்கும் ஓசை அதைக் கேட்கத் தான் ஆசை....

உணவகத்திற்குச் செல்லும் பாதை ஓரங்கள் முழுவதும் பூச்செடிகள் இருக்க, அவற்றில் இருந்த பூக்களையும் கேமிராவிற்குள் சிறை பிடித்தோம்.  உணவகத்திற்குச் சென்று அங்கே காலை உணவினை முடித்துக் கொள்ளலாம் என்றால் அங்கே அப்போது எதுவும் கிடைக்காது என்றும், தயாராக ஒரு மணி நேரத்திற்கும் மேலாகும் என்று சொல்லி விட்டார் ஒரு சிப்பந்தி.  உணவகத்தின் உள்பக்கமும், வெளிபக்கமும் மிக அழகாய் வேலைப்பாடுகள் இருந்தன.  அனைத்தும் மூங்கிலால் செய்யப்பட்டவை.  அவற்றையும் புகைப்படம் எடுத்துக் கொண்டு இயற்கையை ரசித்துக் கொண்டிருந்தோம். 


உணவகத்தின் மேற்கூரையில் மூங்கில் வேலைப்பாடுகள்....

இந்த லோக் டக் ஏரி பற்றி இன்னுமொரு விஷயமும் சொல்ல வேண்டும். இந்த ஏரியில் மிதக்கும் தீவுகளில் மிகப் பெரிய தீவு ஒன்றில் உலகின் ஒரே ஒரு மிதக்கும் தேசியப் பூங்கா அமைந்திருக்கிறது. கைபுல் லம்ஜாவ் தேசியப் பூங்கா என அழைக்கப்படும் இப்பூங்காவில் பல அரிய வகை விலங்குகள் வசிக்கின்றன.  இப்பூங்காவிற்குச் செல்ல ஆசை இருந்தாலும் கூட வந்திருந்த சில நண்பர்களுக்கு அங்கே செல்வதில் விருப்பமில்லை என்பதால் அந்த எண்ணத்தை நானும் பிரமோத்-உம் கைவிட்டோம். 


இந்தப் பூவிடம் என்ன சொன்னீர்கள்....  இவ்வளவு வெட்கப்படுகிறதே!

இந்த தேசியப் பூங்காவில் சாங்காய் என அழைக்கப்படும் மான்கள், சாம்பார் வகை மான்கள், மலைப்பாம்புகள், நரி, எலிகள் என பல உயிரினங்கள் உண்டு.  பறக்கும் நரிகள் என அழைக்கப்படும் ஆந்தைகள், காட்டுப் பூனைகள், விதம் விதமான பறவைகள் என பலவும் உண்டு. இவற்றைப் பார்த்து ரசிக்கவே ஒரு முறை வர வேண்டும் என நினைத்துக் கொண்டேன்.


நாங்க ஒரே குடும்பம்.....

சமீப காலங்களில் ஆகாயத் தாமரை படர்ந்து ஏரியின் பல பகுதிகளில் பரவி ஏரியினை அழித்து விடும் அபாயமும் இருப்பதாகத் தெரிகிறது.  போலவே ஃபும்டிக்களில் வீடு கட்ட எடுத்துச் செல்லப்படும் கட்டுமானப் பொருட்களாலும் ஏரியில் பல இயற்கைப் பேரழிவுகள் ஏற்பட அரசாங்கம் இப்போது தான் முழித்துக் கொண்டிருக்கிறது.  ஏரியைச் சுத்தமாக வைத்துக் கொள்ள சில முயற்சிகளை ஆரம்பித்து இருக்கிறார்கள். 


இப்படிக்கா உக்காந்து இயற்கையை ரசிப்போம் வாங்க!

ஆனாலும் ஏரியின் கரையோரத்தில் பல கட்டுமானப் பணிகள் நடந்து கொண்டிருப்பதைப் பார்க்க முடிந்தது.  பெரும்பாலான சுற்றுலாத் தலங்கள் போலவே இங்கேயும் சுற்றுலா வருபவர்களுக்கான அடிப்படை வசதிகள் இல்லாதிருப்பது சோகம்.  ஆங்காங்கே சில மேடைகளும், வட்ட வடிவ குடிசைகளும் கட்டி வைத்திருக்கிறார்கள்.  அவற்றில் அமர்ந்து கொண்டு ஏரியின் அழகை ரசித்துக் கொண்டிருக்கலாம்.  நாங்களும் அப்படி அமர்ந்து ஏரியின் அமைதியையும் இயற்கையையும் ரசித்துக் கொண்டிருந்தோம்.


 மரத்தில் இருந்த அழகிய கூடுகள்.....  எத்தனை திறமை இந்தப் பறவைகளுக்கு!

ஏரியின் ஓரத்தில் சில மரங்கள் – இலைகளில்லா மரங்கள்.  அவற்றின் கிளைகளில் சில கூடுகள் – மண் கொண்டு கட்டப்பட்டது போல! பறவைகளுக்கும் உயிரினங்களுக்கும் எத்தனை திறமை என்று வியக்காமல் இருக்க முடிவதில்லை.  அத்தனை நேர்த்தி அந்த கூடுகளில்….. 

காலை நேரம், மக்கள் நடமாட்டமும் இல்லை என்பதால் இயற்கையை ரசிப்பதில் எந்தவித தடங்கலும் இல்லை.  நாங்கள் இன்னும் கொஞ்சம் அச்சூழலில் இருந்து ரசிக்கிறோம்.  நீங்களும் மனக்கண்ணில் அவ்விடங்களைக் கண்டு இயற்கையின் எழிலில் மகிழ்ந்திருங்கள்.  விரைவில் அடுத்த பகுதியில் சந்திப்போம்….

அடுத்த பதிவில் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.