Tripura லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
Tripura லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 18 ஜனவரி, 2017

திரிபுரா – Bபை Bபை திரிபுரா – அடுத்தது எங்கே?


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 91

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


தலைமைச் செயலகம் மற்றும் திரிபுரா சட்டசபை பார்த்த பிறகு நாங்கள் அறைக்குத் திரும்பினோம்.  சிறிது நேரம் ஓய்வெடுத்தபிறகு, கொஞ்சம் காலாற நடந்து வருவதோடு, இரவு உணவையும் முடித்துக் கொண்டு வரலாம் என்பது எங்கள் திட்டம்.  எங்களை தங்குமிடத்தில் விட்டுவிட்டு ஓட்டுனர் ஷாந்தனுவும் அவரது வீட்டுக்குச் சென்றுவிட்டார். அடுத்த நாள் காலையில் எங்களை வந்து விமான நிலையம் அழைத்துச் செல்லவேண்டும் என்பது தான் எங்கள் வேண்டுகோள்.  இன்னும் அவருக்குரிய கட்டணமும் தரவேண்டும்!

சாலை சந்திப்பில் 1971 போர் நினைவுச் சின்னம்...

வண்டியிலேயே சுற்றிக் கொண்டிருந்தால், எப்போது தான் காலாற நடப்பது. முழுவதும் விதம் விதமான போக்குவரத்து வசதிகளைப் பயன்படுத்தினால் மட்டும் போதாதே…. அதற்காகவே கொஞ்சம் நடந்து வருவது என முடிவு செய்து, தங்குமிடத்திலிருந்து நடக்க ஆரம்பித்தோம். நாங்கள் இருந்த மோட்டார் ஸ்டாண்ட் ரோடிலிருந்து கால் போன போக்கில் நடந்து ஒரு முக்கிய சாலை சந்திப்பில் இருந்த 1971-ஆம் வருட போரின் நினைவாக வைத்திருந்த ஒரு Army Tank வரை சென்று வந்தோம். 

வெத்தல வெத்தல வெத்தலையோ கொழுந்து வெத்தலையோ.....

வழியெங்கிலும் பான் [வெற்றிலை] விற்கும் கடைகள். இந்தப் பயணத்தில் நாங்கள் சென்ற அனைத்து மாநிலங்களிலும் பான்/குட்கா சாப்பிடுவதை வழக்கமாக வைத்திருக்கிறார்கள் – ஆண்/பெண், வயதானவர்கள்/சிறுவர்கள் எந்தவித வேறுபாடுமின்றி அனைவருமே பான்/குட்கா சாப்பிடுகிறார்கள். பெரும்பாலான இடங்களில் பெண்கள் தான் இந்த பான் விற்பனையில் ஈடுபட்டு இருக்கிறார்கள்.  அகர்தலாவிலும் நாங்கள் அப்படிச் சாலைகளில் நடக்கும்போது பல பான் கடைகளைப் பார்க்க நேர்ந்தது.  அலைபேசியில் ஒரு புகைப்படம் எடுத்திருக்கிறார் நண்பர் – அதை மட்டும் இங்கே பகிர்ந்து இருக்கிறேன். 

வழியில் இருந்த ஒரு கடையில் தேநீர் குடித்து இன்னும் கொஞ்சம் நடந்து ஒரு உணவகத்திற்குச் சென்று இரவு உணவினை முடித்துக் கொண்டோம்.  சப்பாத்தி, சப்ஜி எனக்கும், மற்ற நண்பர்களுக்கு அசைவ உணவும் சாப்பிட்டு தங்குமிடம் திரும்பி உடைமைகளை சரி செய்து வைத்து உறங்கச் சென்றோம். அடுத்த நாள் ஆறாம் சகோதரி மாநிலமான திரிபுராவிற்கு Bபை Bபை சொல்லிவிட்டு வேறு ஒரு மாநிலத்திற்குச் செல்ல வேண்டும்! 

இடது ஓரத்தில் ஓட்டுனர் ஷாந்தனு....


அடுத்த நாள் காலை ஓட்டுனர் ஷாந்தனு வந்து சேர, அவருடன் வாகனத்தில் பயணித்து விமான நிலையம் வந்து சேர்ந்தோம்.  விமான நிலையத்தின் வாயிலில் ஓட்டுனர் ஷாந்தனுவுடன் சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டு அவருக்குக் கொடுக்க வேண்டியதைக் கொடுத்து அவருக்கு விடை கொடுத்தோம்.  எங்கள் விமானத்திற்கான நேரத்திற்கு முன்னரே அங்கே வந்து விட்டோம் – கொஞ்சம் காத்திருந்த சமயத்தில், விமான நிலையத்தில் பராக்குப் பார்த்து, அங்கே 60 ரூபாய்க்கு விற்ற, வாயில் வைக்க முடியாத அளவு இருந்த தேநீரைக் குடித்து, எங்களுக்குள் “இதுக்குக் குடிக்காமலே இருந்திருக்கலாம்!” என்று சொல்லிக் கொண்டோம்! எங்கள் விமானத்திற்கான அழைப்பு வர, நாங்கள் முன்னேறினோம்.

இந்தத் தொடரின் பெயர் ஏழு சகோதரிகள் பயணத் தொடர்!  இது வரை  ஆறு சகோதரி மாநிலங்களுக்கு – அதாவது மணிப்பூர், நாகாலாந்து, அருணாச்சலப் பிரதேசம், அசாம், மேகாலாயா, திரிபுரா ஆகிய ஆறு மாநிலஙக்ளுக்குச் சென்ற போது கிடைத்த அனுபவங்களைப் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.  இனி ஏழாம் சகோதரி மாநிலமான மிசோரம் பற்றி தான் நான் சொல்லப் போகிறேன் என்று நினைத்திருந்தால் அது தவறு! எங்களுடைய இந்தப் பயணத்தில் ஏழு சகோதரி மாநிலங்களில் நாங்கள் பயணிக்காது விட்ட ஒரே மாநிலம் – மிசோரம்!


விமான நிலையத்தில் காத்திருந்தபோது......
யாரை இப்படிப் பார்க்கிறோம்? 
எங்களுடன் வந்த நண்பர் தனியாக உட்கார்ந்து என்னவோ செய்து கொண்டிருக்க அதை வேடிக்கைப் பார்க்கிறோம்!

மிசோரம் மாநிலத்திலும் பார்க்க வேண்டிய இடங்கள் இருந்தாலும், அதற்கென்று நான்கு நாட்களாவது வேண்டும்! ஆனால் எங்களிடம் இருந்தது இரண்டு நாட்கள் மட்டுமே. வேறு வழியில்லை! மிசோரம் மாநிலத்திற்குப் பிறிதொரு சமயத்தில் செல்லலாம் என்று முடிவு செய்து அதைத் தவிர்த்து மற்ற ஆறு மாநிலங்களுக்குப் பயணித்தோம்.  என்றாலும், திரிபுராவிலிருந்து தில்லி/திருவனந்தபுரத்திற்கு நேரடியாக விமானங்கள் இல்லாத காரணத்தினால் அடுத்த மாநிலத்திற்குச் செல்ல முடிவு எடுத்தோம். அந்த, நாங்கள் சென்ற வேறொரு மாநிலம், எந்த மாநிலம், அங்கே என்ன பார்த்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

திங்கள், 16 ஜனவரி, 2017

திரிபுரா – இப்படித்தான் இருக்க வேணும் மாநில முதல்வர்… - மாணிக் சர்க்கார்



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 90

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.



திரிபுரா தலைமைச் செயலகம்
படம்: நன்றி, திரு பிரமோத், கேரளா....

சேபாஹிஜில்லா விலங்குகள் சரணாலயத்தினைத் தொடர்ந்து நாங்கள் சென்றது திரிபுராவின் தலைநகர் அகர்தலாவிற்கு. தலைநகர் அகர்தலாவில் பார்த்த அரண்மனை அருங்காட்சியகம் பற்றி எழுதும்போது திரிபுரா மாநிலத்தின் சட்டசபை/மாநில அரசு அந்த அரண்மனையிலிருந்து தான் முன்னர் செயல்பட்டது என்று எழுதி இருந்தது நினைவில் இருக்கலாம். அந்த அரண்மனையை அருங்காட்சியகமாக மாற்ற முடிவெடுத்தபிறகு, சட்டசபை மற்றும் மாநில அரசின் தலைமைச் செயலகத்திற்கு தனி இடம் வேண்டுமே என ஒரு இடத்தினை தேர்ந்தெடுத்து அங்கே புதிதாய் கட்டிடங்கள் கட்டினார்கள். 

திரிபுரா சட்டசபை
படம்: இணையத்திலிருந்து....

அந்த கட்டிடங்களும் அரண்மனை போலவே மிகவும் சிறப்பாகவும் அழகாகவும் கட்டி இருக்கிறார்கள். திரிபுரா பற்றிய செய்திகள் அதிகமாக வெளியே வருகிறதோ இல்லையோ, திரிபுரா மாநிலத்தின் முதல்வரான திரு மாணிக் சர்க்கார் பற்றியும், அவரது எளிமை பற்றியும், எந்தவித ஊழலிலும் சிக்காத நேர்மை பற்றியும் நிறையவே செய்திகள் வருவதுண்டு. முடிந்தால் நேரில் சென்று அவரைச் சந்திக்கவும் நினைத்திருந்தோம். மாநிலத்தின் முதல்வர் - அவருக்கு எத்தனையோ வேலைகள் இருக்கும் என்பதால் நேரில் சந்திக்கும் எண்ணத்தினைக் கைவிட்டு, அரசு இயங்கும் இடங்களைப் பார்க்கலாம் என்று திரிபுராவின் தலைமைச் செயலகம் இருக்கும் பகுதிக்குச் சென்றோம். 

திரு மாணிக் சர்க்கார், திரிபுரா முதலமைச்சர்,
படம்: இணையத்திலிருந்து....

தலைமைச் செயலகம் செல்லும்போதே முதல்வர் மாணிக் சர்க்கார் பற்றியும் கொஞ்சம் பார்க்கலாம்.  22 ஜனவரி 1949-ஆம் வருடம், தையல் தொழில் செய்த திரு அமுல்யா சர்க்கார் என்பவருக்கும், அரசுத்துறையில் பணிபுரிந்த அஞ்சலி சர்க்கார் என்பவருக்கும் மகனாகப் பிறந்தார்.  ஆமாம் இதே மாதம் தான், இன்னும் 6 நாட்களில் அவரது பிறந்த நாள்! வணிகவியல் துறையில் பட்டம் பெற்றவர் இவர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் சேர்ந்து திரிபுரா மக்களின் நலனுக்காக உழைப்பவர்.  1998-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று திரிபுராவின் முதலமைச்சராகப் பொறுப்பேற்றவர் – இன்று வரை அதே பொறுப்பில் மிகவும் சிறப்பாகவும் திறமையாகவும் பணிபுரிந்து வருபவர். கடந்த 2013-ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் வென்று தொடர்ந்து நான்காம் முறையாக முதலமைச்சர் பதவியில் இருப்பவர்.

கிட்டத்தட்ட 19 வருடங்களாக முதலமைச்சர் பணியில் இருக்கிறாரே, நிறைய சொத்து சேர்த்திருப்பார் என நினைக்கலாம்… ஆனால் கடந்த தேர்தலில் தனது வங்கி இருப்பாக இவர் காண்பித்தது வெறும் 16000/- ரூபாய். இன்னமும் ஒரு சொந்த வீடோ, மகிழ்வுந்தோ இவருக்குக் கிடையாது. அவரது அம்மா இறந்த போது கிடைத்த ஒரு வீட்டையும், சொந்தக்காரர் ஒருவருக்குக் கொடுத்தவர் திரு மாணிக் சர்க்கார். எந்த விதமான ஊழல் வழக்குகளிலும் சிக்காதவர்.  அரசாங்கம் முதலமைச்சர் பதவியில் இருப்பதால் கொடுக்கும் அரசு ஊதியத்தினையும் கட்சியின் விதிகள் படி, கட்சிக்குக் கொடுத்துவிட்டு, கட்சியிலிருந்து தரும் மாதத்திற்கு வெறும் 5000 ரூபாயைப் பெற்று வருபவர் இவர். இந்தியாவில் இருக்கும் அனைத்து முதலமைச்சர்களிலும் மிகவும் குறைவான மாத வருமானம் பெறுபவர் இவர் மட்டுமே என்றும் சொல்லலாம்.

சரி இவர் தான் இப்படி இருக்கிறார், இவரது வீட்டினர் பதவியை, துர்பிரயோகம் செய்வார்கள் என நினைத்தால் அதுவும் தவறு. 2011-ஆம் ஆண்டு வரை மத்திய அரசுத் துறையில் பணிபுரிந்து ஓய்வு பெற்ற திரு மாணிக் சர்க்கார் அவர்களின் மனைவி, தனது சொந்த உபயோகத்திற்காக, அரசாங்க வாகனங்களைப் பயன்படுத்துவதில்லையாம். அவருக்கு தனியாக பாதுகாப்பு அதிகாரிகள் கூட கிடையாது! ஜாடிக்கேற்ற மூடி! அவரது மனைவியின் வங்கிக் கணக்கில் இருக்கும் பணமும், ஓய்வு பெற்ற போது, அரசாங்கத்திலிருந்து கிடைத்த தொகை மட்டுமே. இந்த தம்பதியினருக்குக் குழந்தைப் பேறு இல்லை.

திரிபுரா மாநில முதல்வரைப் பற்றி படிக்கும்போதே நம் மனதுக்குள் மற்ற மாநிலங்களின் முதல்வர்களும், அவர்களது அளவிடமுடியாத சொத்து விவரங்களும், படை பலங்களும் நினைவில் வந்து தொலைக்கிறது! இப்படி லட்சத்தில் ஒருவர் மட்டுமே இருக்க முடியும் என்று மனதைச் சமாதானப்படுத்திக் கொண்டு தொடரலாம் என்பதைத் தவிர வேறு ஒன்றும் செய்வதற்கில்லை!

எங்கள் ஓட்டுனர் ஷாந்தனுவும் தனது மாநில முதல்வர் மிகவும் நல்லவர், மக்களுக்காகவே பாடுபவர் என்று தனது அனுபவங்களையும் சொல்லிக் கொண்டே எங்களை தலைமைச் செயலகம் அருகே அழைத்துச் சென்றார். வண்டியில் சென்றபடியே சில படங்களை எடுத்துக் கொண்டு அங்கிருந்து தங்குமிடத்திற்கு வந்து சேர்ந்தோம்.  தங்குமிடத்தில் சற்றே ஓய்வெடுத்த பிறகு என்ன செய்தோம் என்பதை அடுத்த பதிவில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

புதன், 11 ஜனவரி, 2017

திரிபுரா – சேபாஹிஜில்லா – வனவிலங்கு சரணாலயம் – கண்ணாடி போட்ட குரங்கு!


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 89

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

நுழைவாயில்.... 

இயற்கைக் காட்சிகள், கோவில்கள் என சென்ற பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது. நாங்கள் அடுத்ததாய் பயணித்தது ஒரு வனவிலங்குச் சரணாலயத்திற்கு! திரிபுரா மாநிலத்தின் தலைநகர் அகர்தலாவிலிருந்து உதைப்பூர் சாலையில் சுமார் 25 கிலோமீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த சேபாஹிஜில்லா வனவிலங்கு சரணாலயம்.  இங்கே இயற்கைச் சூழலில் அமைந்திருக்கும் சரணாலயத்தில் விலங்குகள் பாதுகாக்கப்படுவது செயற்கைக் கூண்டுகளில்! இந்த வனவலிங்கு சரணாலயம் மிகவும் அழகாய் இருக்கும், நிச்சயம் பார்க்க வேண்டிய இடம் என்றெல்லாம் பார்த்து வைத்திருந்ததால் அங்கே சென்றோம்.


இந்தப் பகுதிக்குச் செல்லும் பாதைகள் வெகு அழகு. நிறையவே மரங்களும், செடிகளும் இருப்பதால் இயற்கையான சூழலில் பயணிக்கும் ஒரு உணர்வு ஏற்பட்டது.  இன்னும் இங்கே மரங்களை வெட்டி, கட்டிடங்களை கட்ட ஆரம்பிக்கவில்லை என்பது ஆறுதல் தந்த விஷயம்.  நாங்களும் சரணாலயத்திற்குச் சென்று இப்பகுதியில் மட்டுமே பார்க்கக் கிடைக்கும் ஒரு வகை குரங்கினைப் பார்க்கலாம் என நினைத்தோம்.  அது என்ன வகை குரங்கு? கொஞ்சம் பொறுங்கள். சொல்கிறேன்!

கட்டணங்கள்!

வனவிலங்குச் சரணாலயம், அதுவும் அரசாங்கத்தின் பராமரிப்பில் இருக்கிறது எனும்போதே எங்களுக்கு ஒரு எச்சரிக்கை மணி அடித்தது – பராமரிப்பு அத்தனை சுகமாய் இருக்காது என்ற எண்ணத்துடன் தான் நாங்கள் அங்கே சென்றோம்.  எங்கள் எண்ணம் சரியானது தான் என்று அங்கே சென்றபோது தெரிந்து கொண்டோம். நுழைவுக்கட்டணம், புகைப்படக் கருவிக்கான கட்டணம், வீடியோ கருவிகளுக்கான கட்டணம், வண்டிகள் நிறுத்தக் கட்டணம் என அனைத்திற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள்! நுழைவாயில் அருகே கட்டணங்கள் எழுதி இருந்தது – VDO என்பது வீடியோ என்பதைக் கொஞ்சம் யோசித்தபின் தான் புரிந்து கொள்ள முடிந்தது!

நல்ல உறக்கம்! தூங்கும்போது கூட ஸ்டைல்!
கரடியின் குரல்: ஃபோட்டோ எடுக்காத...  ஃபோட்டோ எடுக்காத
டேய் தூங்கும்போது கூட விடமாட்டீங்களா ) 

தேவையான கட்டணங்களைச் செலுத்தி அதற்கான சீட்டுகளைப் பெற்றுக் கொண்டு அவற்றை சரிபார்த்துக் கொண்டிருந்தவரிடம் காண்பித்து உள்ளே நுழைந்தோம்.  மற்ற அரசு வனவிலங்கு சரணாலயங்களை விட பராமரிப்பு மோசமாகவே இருந்தது. இத்தனைக்கும் இங்கேயும் நிறைய சுற்றுலாப் பயணிகளும், இங்கே வருகிறார்கள். இந்த வனவிலங்குச் சரணாலயத்தில் கிட்டத்தட்ட 150 வகையான பறவைகள், வனவிலங்குகள், படகுத்துறை, யானைச் சவாரி என அனைத்தும் இருக்கிறது.  என்றாலும் நாங்கள் சென்ற சமயத்தில் யானைச் சவாரி வசதி இருக்கவில்லை. படகுத்துறையில் இருந்த படகில் பராமரிப்பு வேலைகள் இருக்கிறது என அந்த வசதியையும் தற்காலிகமாக நிறுத்தி வைத்திருந்தார்கள்!

Gibbon Monkey! இது ஹூக்கூ... ஹூக்கூ என சத்தமிடுவது அழகு!

கரடி, கிப்பன் குரங்குகள், முள்ளம்பன்றி, பறவைகள் என பலதையும் பார்த்த பிறகு, இந்தப் பகுதியில் மட்டும் பார்க்க முடிகின்ற ஒரு வித குரங்கான Spectacled Monkey என அழைக்கப்படும் குரங்குகளைப் பார்க்கச் சென்றோம். ரப்பர் மரங்களின் இலைகளை மிகவும் விரும்பி உண்ணும் இந்த வகைக் குரங்குகள் அரிய வகைக் குரங்குகள். Endangered Species என்ற வகையில் இதைச் சேர்த்திருக்கிறார்கள். மிகவும் குறைவான அளவிலேயே இக்குரங்குகள் இப்போது இருக்கின்றன.  எதற்கு இந்தக் குரங்கிற்கு இந்த பெயர் என்ற கேள்விக்கு பதில் இந்த குரங்கினைப் பார்த்தாலே தெரிந்துவிடும்!

Spectacled Monkey....
படம்: இணையத்திலிருந்து....

கருத்தரித்தால் ஒரே ஒரு குட்டி மட்டுமே ஈனும் இந்த குரங்குகள் இப்போது கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருகிறது என்பது தான் சோகம். ஒரு கூட்டமாக வாழும் இந்தக் குரங்கினம் தங்களுக்குள் ஒற்றுமையாக இருந்து, குட்டிக் குரங்குகளை மாற்றி மாற்றித் தூக்கிக் கொண்டு, அதை மிகவும் பத்திரமாகப் பார்த்துக் கொள்ளுமாம்! எல்லா விலங்குகளைப் போல, குட்டிகள் அருகே யாராவது வந்து விட்டால் அவற்றுக்கு கோபம் அதிகம் வந்துவிடுகிறது! நாங்கள் சென்றபோது கூண்டில் தான் இந்த கண்ணாடிக் குரங்கு ஒன்றினைப் பார்க்க நேர்ந்தது. 

Spectacled Monkey...
படம்: இணையத்திலிருந்து....

இந்தக் குரங்குகள் மட்டுமல்லாது இது போன்று பல உயிரங்கள் கொஞ்சம் கொஞ்சமாக அழிந்து வருவது சோகமான விஷயம். இயற்கைக்கு மாறாக மனிதர்கள் கொஞ்சம் கொஞ்சமாக செயல்புரிந்து வர இயற்கையாக இருக்கும் பல விஷயங்கள் அழிந்து வருவது மன்னிக்க முடியாத குற்றம் என்று தான் எனக்குத் தோன்றுகிறது.  இயற்கையான சூழலில் இருக்க வேண்டிய இந்த விலங்குகளைக் கூண்டுகளில் அடைத்து வைத்து, அவற்றை துன்புறுத்துவதும் நிறுத்தப் பட வேண்டும் என்று தான் தோன்றியது.  கூடவே இவற்றைப் பார்க்க வரும் மனிதர்களும் கூண்டில் இருக்கும் விலங்குகளைச் சீண்டுவதும், துன்புறுத்துவதும் நிறுத்தப்பட வேண்டும்.

புதிதாய் ஒரு குரங்கினத்தினையும் வேறு சில மிருகங்களையும் பார்த்த பிறகு எங்கள் பயணம் தொடர்ந்தது.  அடுத்ததாய் நாங்கள் சென்றது எங்கே, என்ன அனுபவம் கிடைத்தது என்பதை வரும் பகுதியில் எழுதுகிறேன். 

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

திங்கள், 9 ஜனவரி, 2017

திரிபுரா – கமலா சாஹர் – வங்க எல்லையில் மதிய உணவு


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 88

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.

கருமமே கண்ணாயினார்....
இளநீர் வியாபாரி - நீர்மஹல், திரிபுரா

நீர்மஹல் பார்த்த பிறகு மீண்டும் கரை நோக்கிய படகுப் பயணம். கரையில் படகுக்கான கட்டணம் வசூலிக்கும் இடத்தில் ஒரு வண்ணத் தொலைக்காட்சி – அதில் அன்றைய தினம் நடந்த ஏதோ ஒரு கிரிக்கெட் போட்டியின் நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்க, அதைப் பார்க்க நிறைய பேர்! எங்கள் குழுவிலும் சிலர் போட்டியின் போக்கு பற்றித் தெரிந்து கொள்ள சில நிமிடங்கள் நின்றார்கள்.  நாங்கள் அதற்குள் வாசலில் அமர்ந்திருந்த பெரியவரிடம் இளநீர் தரச் சொன்னோம். எப்போதும் போல பேச்சுக்கொடுக்க, அவர் கருமமே கண்ணாயினாராய் இளநீர் வெட்டுவதில் மும்மரமாயிருந்தார்! சரி இவர் குறைவாகத் தான் பேசுவார் போலும் என இளநீர் குடித்து ருத்ரசாகர் ஏரியின் கரையில் நின்று சில புகைப்படங்கள் எடுத்துக் கொண்டோம்.  அந்தப் பெரியவரிடமே கொஞ்சம் நிலக்கடலை வாங்கிக் கொண்டு புறப்பட்டோம் – மதிய உணவு உண்ணும் முன்பு கொஞ்சம் கொறிக்க!

பச்சைப் பசேலென வயல்கள்....

ருத்ரசாகரிலிருந்து கமலாசாகருக்குச் செல்லப் போகிறோம்.  கமலா சாகர் இருக்கும் இடமும் வங்க தேச எல்லை தான். அகர்தலாவிலிருந்து சுமார் 30 கிலோமீட்டர் தொலைவில் இருக்கிறது இந்த கமலா சாகர்.  சாகர் என்ற வடமொழிச்சொல்லுக்கு கடல் என்று அர்த்தம் என்றாலும் இங்கே சாகர் என்பது ஏரிதான்.  செல்லும் வழியெங்கும் அழகிய கிராமங்கள் – பச்சைப் பசேலென இருக்கும் நிலங்கள், கிராமங்கள், எளிய கிராமிய மக்கள், என பயணம் செய்யும் போதே பார்த்துக் கொண்டு பயணிக்கிறோம். நம் ஊர் நிலங்கள் எல்லாம் வீடுகளாக மாற்றப்பட்டு வருவதை நினைக்காமல் இருக்க முடியவில்லை.  

கமலா சாகர்....

கமலா சாகர் – இதோ வந்து விட்டோம். அகர்தலாவில் முதலில் பார்த்த வங்க எல்லை போல கொடி இறக்கமோ, சாலையோ கிடையாது.  நிலம் தான் – நிலங்களுக்கு நடுவே ஒரு பெரிய கம்பி வலை வேலி – இந்தப் பக்கம் இந்தியா அந்தப் பக்கம் வங்க தேசம். இங்கே இந்திய விவசாயி பயிரிட அப்பக்கம் வங்க விவசாயி பயிரிடுகிறார்.  அவர்களைப் பிரிப்பது ஒரு கம்பி வலை வேலி மட்டும்! இந்தியப் பகுதியில் இரண்டு எல்லையோரக் காவல் படை வீரர்கள் இருக்க, அப்பக்கத்தில் விவசாயி மட்டுமே!

அந்தப் பக்கம் வங்க தேசம்....

கமலா சாகர் ஏரிக்கரையில் சில நிமிடங்கள் நின்று சுத்தமான காற்றைச் சுவாசித்து முடிக்கையில் வயிறு ஏதாவது சாப்பிடக் கொடு எனக் கதற ஆரம்பித்தது.  திரிபுர சுந்தரி கோவில் அருகே காலையில் சில பூரி சாப்பிட்டது. நடுவில் இளநீர், நிலக்கடலை என்று உள்ளே சில விஷயங்கள் உள்ளுக்குள் தள்ளியிருந்தாலும் சாப்பாடு எனச் சாப்பிடவில்லை.  கமலா சாகரிலிருந்து அடுத்ததாய் பார்க்கப்போகும் இடத்திற்குச் செல்லும் வழியில் சாப்பிடலாம் என்றால் தாங்காது. சரி கமலா சாகர் அருகே என்ன கிடைக்கும் எனப் பார்க்க, ஒரு சிறிய உணவகம் இருந்தது. அங்கே சென்று கேட்க, கடை வைத்திருந்த பெண்மணி வங்க மொழியில் மட்டுமே பேசுகிறார்!


மரத்தில் தகவல் - Do not go ahead!....
அந்தப் பக்கம் இருப்பது வங்க தேசம்....

தட்டுத் தடுமாறி கொஞ்சம் புரியவைக்க, சாதமும் பொரித்த மீனும் இருப்பதைச் சொன்னார். நண்பர்கள் நான்கு பேரையும் சாப்பிடச் சொல்லி, நான் கொஞ்சம் உலாத்தினேன்.  இங்கே இன்னுமொரு விஷயத்தினையும் சொல்ல வேண்டும். இந்த இடத்தில் 15-ஆம் நூற்றாண்டில் மஹாராஜா தன்ய மாணிக்ய பகதூர் அவர்களால் இந்த கமலா சாகர் தோற்றுவிக்கப்பட்டாலும், இந்த ஏரிக்கரையில் ஒரு கோவில் கட்டப்பட்டது 17-ஆம் நூற்றாண்டில் தான். ஆமாம் இந்த ஏரிக்கரையில் ஒரு அழகிய கோவிலும் உண்டு! கமலா சாகர் காளி கோவில்….


கமலா சாகர் காளி கோவில்...
வெளிப்புறத் தோற்றம்

கஸ்bபா காளி கோவில் என்றும் அழைக்கப்படும் இக்கோவிலில் பத்து கைகளோடு காளி உருவச் சிலை இருக்கிறது. காளியின் காலடியில் ஒரு சிவலிங்கமும் உண்டு.  நாங்கள் சென்ற நேரம் மதிய நேரம் என்பதால் கோயில் மூடியிருக்க வெளியிலிருந்து பார்க்க முடிந்தது.  நண்பர்கள் சாப்பிட்டுக் கொண்டிருந்த நேரத்தில் நான் மட்டும் உலாத்திய போது இக்கோவிலை வெளியிலிருந்து பார்த்தேன்.  கோவில் பக்கத்திலும் சில உணவகங்கள் இருக்க, அங்கேயும் என்ன கிடைக்கும் என விசாரித்தால் மீன் மட்டுமே எங்கும் நிறைந்திருந்தது.  சைவ உணவு என ஒன்றும் கிடைக்கவில்லை!

திரிபுரா சுற்றுலாத் துறையினரின் ஒரு தங்குமிடமும் உணவகமும் இருக்க, அங்கே சென்று பார்த்தால், அங்கேயும் சைவ உணவு ஒன்றும் இல்லை. சரி சாதமும் தயிரும் மட்டுமாவது கிடைத்தால் நல்லது எனக் கேட்க, தயிர் இல்லை என்று சொல்லிவிட்டார் அந்த உணவகத்தின் நிர்வாகி.  சரி இன்றைக்கு சமாளிக்க வேண்டியது தான் என அங்கே கிடைத்த Flavoured Milk- ஐ இரண்டாக வாங்கி உள்ளே தள்ளினேன்! சைவ உணவு மட்டுமே சாப்பிடுபவர்களுக்கு ஏதாவது கிடைத்தால் நல்லது. திரிபுரா மற்றும் வங்க தேசத்தவர்கள் மட்டுமே இங்கே வருவதில்லை என்பதைப் புரிந்து கொள்ளாதவர்கள்…. 

இப்படியாக தனியாகச் சுற்றி நான் திரும்பி வரும்போது நண்பர்கள் நால்வரும் மீன்கறியும், இறைச்சியும் சாப்பிட்டு முடித்து பல்குச்சிகளால் பல்லை நோண்டியபடி வந்தார்கள்! சரி அவர்களாவது நல்லபடியாகச் சாப்பிட்டார்களா என்று விசாரிக்க, சாப்பாடு அத்தனை ருசியாக இல்லை என்று சொல்ல, உங்களுக்குப் பரவாயில்லை – ருசியாக இருந்ததோ, இல்லையோ, சாப்பாடு கிடைத்ததே என மனதுக்குள் நினைத்துக் கொண்டேன்!

ஓட்டுனர் ஷாந்தனுவும் தயாராக அந்த வங்க தேச எல்லைக் கிராமத்திலிருந்து அடுத்த இடம் நோக்கிப் பயணித்தோம்.  நாங்கள் அப்படிச் சென்ற இடம் எது, அங்கே என்ன பார்த்தோம் என்பதை வரும் பகுதியில் சொல்கிறேன்……

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

சனி, 7 ஜனவரி, 2017

திரிபுரா – நீர்மஹல் – தமிழர்கள் கைவண்ணம்


ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 87

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


நீர்மஹல், திரிபுரா

சென்ற பகுதியில் சொன்னது போல இன்றைக்கு நாம் திரிபுராவிலும் தனது திறமையைக் காட்டிய தமிழர்கள் பற்றியும் அங்கே இருக்கும் ஒரு அற்புதமான இடம் பற்றியும் பார்க்கப் போகிறோம். திரிபுராவின் தலைநகரான அகர்தலாவிலிருந்து சுமார் 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது ருத்ரசாகர் ஏரி.  இந்த பெரிய ஏரியின் நடுவே இருக்கும் ஒரு தீவில் அமைந்துள்ளது நீர்மஹல் என அழைக்கப்படும் ஒரு அழகிய திரிபுராவை ஆண்ட ராஜாவின் கோடை வாசஸ்தலம்.

நீர்மஹல், திரிபுரா - வேறு ஒரு படம்....

மஹாராஜா bபீர் bபிக்ரம் கிஷோர் மாணிக் என்பவர் கோடைக் காலத்தினைக் கழிக்க அமைத்த ஒரு அற்புதமான இடம் தான் இந்த நீர்மஹல். 1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹலுக்கு, படகில் தான் செல்ல வேண்டும். ருத்ரசாகர் ஏரியில் பயணம் செய்யும்போது பல பறவைகளும் அழகிய பூக்களும் பார்த்து பரவசம் அடைய முடியும். ஹிந்து முஸ்லீம் கட்டிடக் கலைகளைப் பயன்படுத்தி மிகச் சிறப்பாக கட்டியிருக்கிறார் அந்த மஹாராஜா.  Marble மற்றும் Sandstone பயன்படுத்தி அழகாய் கட்டப்பட்ட இந்த கட்டிடத்தினை கட்ட அவர் தேர்ந்தெடுத்தது Martin and Burn Co. என்ற நிறுவனம். பெயரிலிருந்தே வெளிநாட்டு நிறுவனம் என்பது புரியும்.

நீர்மஹலுக்குச் செல்ல படகு தயார்.....

பூப்பூக்கும் ஓசை...  அதைக் கேட்கத்தான் ஆசை...
நீர்மஹல், திரிபுரா.....

இந்த நீர்மஹலுக்குச் செல்ல, ருத்ரசாகர் ஏரியின் கரையிலிருந்து படகில் பயணிக்க வேண்டும்.  எங்கள் ஐந்து பேர் தவிர வேறு ஒரு குழுவினர் அந்தச் சமயத்தில் வர அவர்கள் தனிப்படகிலும் நாங்கள் தனிப்படகிலும் புறப்பட்டோம். ஏரியின் பெரும்பகுதிகளில் கொடிகள் படர்ந்து, பூக்களும் பெரிய பெரிய இலைகளும் மிதக்க, அவற்றுக்கு நடுவே படகில் பயணித்தது ஒரு அற்புத அனுபவம்.  படகு செல்லச் செல்ல, பறவைகள் பறக்க, இலைகள் தண்ணீருக்குள் நடனமாட, தூரத்தில் பார்க்கும்போது நீர்மஹலின் பிரம்மாண்டம் நம்மை வசீகரிக்க அற்புதமான பயணமாக இருந்தது.

படகில் இருந்தபடியே ஒரு குளியல்....
நீர்மஹல், திரிபுரா....

 மீன் பிடிக்க வாரீயளா....
நீர்மஹல், திரிபுரா....

பெரும்பாலான படகோட்டிகள் வங்க தேசத்தவர்கள். படகோட்டுவதும், சிறு படகுகளில் சென்று ருத்ரசாகர் ஏரியில் மீன்பிடிப்பதும் தான் அவர்களுக்கு பிரதான தொழில். ஒரு படகோட்டி, படகை நடுவில் நிறுத்தி, குளித்துக் கொண்டிருந்தார்! பறவைகளையும் இயற்கைக் காட்சிகளையும் ரசித்தபடியே நீர்மஹல் அமைந்திருக்கும் தீவிற்க்குச் சென்று சேர்ந்தோம்.  படகுப் பயணத்திற்குத் தனிக் கட்டணம் வாங்கிக் கொண்ட பிறகு, நீர்மஹல் சுற்றிப் பார்ப்பதற்கும் கட்டணம் வசூலிக்கிறார்கள். 

ருத்ரசாகர் ஏரியில் ஒரு பறவை....
நீர்மஹல், திரிபுரா.....

இலைகள்... படகுகளாய்.....
நீர்மஹல், திரிபுரா....

சுமார் 5.3 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் அமைந்திருக்கும் ஏரியின் நடுவே அமைந்திருக்கும் தீவில் இந்த நீர்மஹல் கட்டப்பட்டது. இதை கட்டிமுடிக்க அப்போது ஒன்பது வருடஙக்ள் ஆனதாம். இந்த மாளிகையில் ராஜகுடும்பம் தங்குவதற்கு 15 அறைகள், தாழ்வாரம், சதுரங்கம் விளையாட ஒரு அறை தவிர மக்களைச் சந்திக்க ஒரு பெரிய கூடமும் அமைக்கப்பட்டிருக்கிறது.  அழகாய் வடிவமைத்து இருக்கிறார்கள் இந்த நீர்மஹலை! நீர்நிலைக்கு நடுவே அமைந்திருப்பதால் நீர்மஹல்!

கும்பகோணம் சிற்பிகளில் ஒருவர்....
நீர்மஹல், திரிபுரா...

 எல்லா மீனையும் பிடிச்சுட்டாங்களோ....
நீர்மஹல், திரிபுரா....

அதெல்லாம் சரி, பதிவின் தலைப்பில் தமிழர்களின் கைவண்ணம் என எழுதிவிட்டு தமிழர்கள் பற்றி, இதுவரை ஒன்றுமே சொல்லவில்லை என நீங்கள் கேட்பதற்குள் நானே சொல்லி விடுகிறேன்.  1930-ஆம் வருடம் கட்டப்பட்ட இந்த நீர்மஹல் தனது பொலிவினை இழந்து பல இடிபாடுகள் உருவாக, திரிபுரா அரசாங்கம் இதனை மீண்டும் பொலிவூட்ட நடவடிக்கைகள் எடுக்க, இந்த நீர்மஹலை புனரமைக்கும் பணி, நமது தமிழகத்தின் கும்பகோணம் பகுதியைச் சேர்ந்த சிற்பிகளுக்குக் கிடைத்திருக்கிறது. 

பூக்களும் பறவையும்....
நீர்மஹல், திரிபுரா....


நாங்களும் நால்வர் அணி தான்!
நீர்மஹல், திரிபுரா....

நாங்கள் சென்ற சமயத்தில் தமிழகத்திலிருந்து வந்திருந்த சுமார் 50 சிற்பக் கலைஞர்கள் நீர்மஹலைப் புனரமைக்கும் பணியில் ஈடுபட்டிருந்தார்கள்.  அவர்கள் கைவண்ணத்தில் மிக அழகாகவே புனர்நிர்மாணப் பணிகள் நடந்து கொண்டிருந்ததைப் பார்க்க முடிந்தது. நாங்கள் சென்றபோது பணிகள் முடிவடையாத நிலையில் தான் பார்க்க முடிந்தது.  மீண்டும் ஒரு முறை சென்று பார்க்க வாய்ப்பு அமையுமா என்பது சந்தேகம் தான்.

நான் பறக்கப்போறேன்... பறக்கப் போறேன்!
நீர்மஹல், திரிபுரா....

நீர்மஹல் அருகே இருக்கும் அழகிய பூந்தோட்டத்தினை ரசித்து அங்கே வந்திருந்த தமிழ் சிற்பிகளிடம் பேசிவிட்டு அங்கிருந்து மீண்டும் படகில் பயணித்து கரை வந்து சேர்ந்தோம்.  அங்கே என்ன செய்தோம், அங்கிருந்து எங்கே பயணித்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்.

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

திங்கள், 26 டிசம்பர், 2016

திரிபுரா – எல்லைக் காட்சிகளும் இரவு உணவும்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 84

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


எல்லைக்கு அப்பால் வங்க தேசம்....

இந்திய எல்லையில் அமைக்கப்பட்ட முள்கம்பி வேலிக்கருகே சென்று சிறிது தூரம் நடந்தபடியே இந்திய வீரர்களிடம் பேசினோம். ஹரியானாவினைச் சேர்ந்த ஒருவர் தில்லியிலிருந்து நான் அங்கே வந்திருப்பது தெரிந்து என்னிடம் வந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்தார். அது என்னவோ, அவருக்கு தானே தில்லி வந்த உணர்வு. தலைநகர் வந்தால் உங்களைச் சந்திக்க வருவேன் என்று சொல்லி தொடர்புக்கு தொலைபேசி எண்களை வாங்கிக் கொண்டார். நானும் அவரது எண்களை வாங்கிக் கொண்டேன்.

வங்க தேச வீரர்களும் எங்களுடன் முகமன்களை பரிமாறிக்கொண்டு சில விஷயங்களைப் பேசினார்கள்.  இந்திய எல்லை அகர்தலாவில் இருக்க, வங்க எல்லைப் பகுதியில் சில கிலோமீட்டர் தூரம் வரை கிராமங்கள் எதுவும் இல்லை. பொருட்களை எடுத்து வரும் லாரிகள் தான் அங்கிருந்து வருகின்றன.  எதாவது வாங்க வேண்டுமென்றால் சில கிலோமீட்டர் தொலைவு சென்று தான் வாங்க வேண்டியிருக்கிறதாம் அந்த வங்க தேச வீரர்களுக்கு!

வங்க தேச எல்லையில் வரவேற்பு அறை....

கொடியிறக்க விழா நடந்த பிறகும் அங்கே இருந்து சில நிமிடங்கள் பேசிக் கொண்டிருந்த பிறகு தான் நாங்கள் புறப்பட்டோம்.  பல வருடங்கள் கழித்து பார்த்துக் கொண்ட நண்பர்களுக்கு பிரிய மனதில்லை.  எல்லைப் பகுதியில் பார்த்த நண்பர், எங்களுடன் வந்த நண்பர் சசியை சில மாதங்கள் கழித்து திருவனந்தபுரத்தில் வந்து பார்த்திருக்கிறார் என்பதையும் இங்கே சொல்லி விடுகிறேன்!  தொடர்ந்து நட்பில் இருக்கும் அவர்களுக்கு வாழ்த்துகள்… நட்பு தொடர்வது தானே அனைவருக்கும் மகிழ்ச்சி.

அங்கிருந்து ஓட்டுனர் ஷாந்தனு வண்டியுடன் நின்று கொண்டிருந்த இடத்திற்கு வந்து அங்கிருந்து புறப்பட்டோம்.  மதியமே ஒழுங்காக சாப்பிட முடியாததால் அறைக்குச் சென்று கொஞ்சம் ஓய்வெடுத்த பிறகு இரவு உணவு சாப்பிட வேண்டும் என முடிவு எடுத்தேன்.  ஷாந்தனுவிடமும், தங்கிய இடத்தின் நிர்வாகியிடமும் இரவு உணவு பற்றிக் கேட்க, சைவ உணவுக்கென்று தனி உணவகங்கள் இங்கே கிடைப்பது கடினம் என்று சொன்னார்கள்.  சரி சப்பாத்தி கிடைக்குமா என கேட்க, பக்கத்திலேயே Foodies என ஒரு உணவகம் இருப்பதைச் சொல்லி அங்கே சாப்பிடச் சொன்னார்.  வட இந்திய உணவு நன்றாக இருக்கும் என்பதையும் சொல்ல, அங்கே தான் இரவு உணவு!


அகர்தலா மார்க்கெட் பகுதியில்.....

தவா ரொட்டி, ஆலு ஜீரா, வெஜ் ராய்த்தா என எனக்கு நான் உணவினைச் சொல்ல, நண்பர்கள் சப்பாத்தியுடன் அசைவ உணவு வாங்கிக் கொண்டார்கள்.  தங்குமிட நிர்வாகி சொன்ன மாதிரியே உணவு நன்றாகவே இருந்தது. மதியம் ஒழுங்காகச் சாப்பிடாததால் இரண்டு ரொட்டி அதிகம் உள்ளே போயிற்று! வயிறும் கொஞ்சம் வாழ்த்தியது! என்னதான் Adjust செய்து கொள்ளலாம் என்றாலும் சில நாட்களில் முடிவதில்லை!

நாங்கள் தங்கிய இடமும், சாப்பிட்ட உணவகமும் இருந்த சாலையின் பெயர் கொஞ்சம் வித்தியாசமாக இருந்தது – Motor Stand Road! எதற்காக அந்தப் பெயர் வந்தது என்று பார்த்தால், அந்தப் பகுதியில் தான் பேருந்து நிலையம் – முன் நாட்களில் சிற்றுந்ந்துகள் நிற்குமிடம் இருந்திருக்கிறது. அகர்தலாவின் Motor Stand Road ரொம்பவே பிரபலமாம்!

இரவு உணவு சாப்பிட்ட பிறகு அகர்தலா நகரின் சாலைகளில் சில நிமிடங்கள் நடந்து கொண்டிருந்தோம்.  கடைத் தெருக்கள், உணவகங்கள் என பார்த்துக்கொண்டு ஆங்காங்கே கிடைக்கும் காட்சிகளை பார்த்தபடியே சென்று திரும்பினோம். அன்றைய தினம் பார்த்த இடங்களைப் பற்றி பேசியபடியே தங்குமிடம் திரும்பினோம்.  அடுத்த நாள் அகர்தலாவின் மற்ற இடங்களைப் பார்க்க வேண்டும் – அதனால் கொஞ்சம் சீக்கிரமாகவே உறங்கி சீக்கிரமாகவே எழுந்திருக்க எண்ணம்.  கொஞ்சம் தூங்கிவிட்டு வருகிறோம். அது வரை காத்திருங்கள்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.

வியாழன், 22 டிசம்பர், 2016

திரிபுரா – பகோடா – நண்பர்கள் சந்திப்பும் மகிழ்ச்சியும்….



ஏழு சகோதரி மாநிலங்கள் பயணம் பகுதி 83

இந்தப் பயணக் கட்டுரையின் முந்தைய பகுதிகளைப் படிக்கவில்லையா.....  இதோ உங்களுக்காகவே அந்தப் பகுதிகளின் சுட்டிகளுக்கான ஒரு Drop Down Menu, வலைப்பூவின் வலது ஓரத்தில் “ஏழு சகோதரிகள்என்ற தலைப்பின் கீழே இருக்கிறது.


படம்-1: அகர்தலா - வங்க தேச எல்லையில் கொடியிறக்கம்...

அகர்தலாவில் உள்ள வங்க தேச எல்லையில் மாலை நேரத்தில் நடக்கும் கொடி இறக்க விழாவினைக் காணச் சென்ற போது எங்கள் குழுவில் வந்திருந்த நண்பரைப் பார்த்த உடனே “நீ சசி தானே?” என்று கேட்டார் அங்கே இருந்த கேரளத்தினைச் சேர்ந்த BSF வீரர் ஒருவர்!  அவர் அப்படிக் கேட்டவுடன் எங்களுக்கு மட்டுமல்ல நண்பர் சசிக்கும் அதிர்ச்சி. முகத்தில் கொஞ்சம் பயமும் கூட! இவருக்கு என்னை எப்படித் தெரியும் என்ற கேள்வி அவர் மனதிலும் இருக்க, கேட்டுவிட்டார். நாங்களும் அந்த வீரர் என்ன பதில் சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ளக் காத்திருந்தோம்.

படம்-2: அகர்தலா - வங்க தேச எல்லையில் இரு நண்பர்கள்...

நண்பர் சசி பற்றி அவருடைய கேரள நண்பர்களுக்கே தெரியாத விஷயம் ஒன்று அந்த எல்லைப் பகுதிக்குச் சென்ற போது தெரிந்து கொள்ள முடிந்தது. அந்த விஷயம், நண்பர் சசி தன்னுடைய இள வயதில் சில மாதங்கள் – அதாவது இரண்டு மாதங்கள் BSF-ல் பணி புரிந்தது. கேரள அரசாங்கத்தில் பணி கிடைப்பதற்கு முன்னர் இங்கே இருந்தாராம். அவருக்கு பயிற்சி கொடுக்கப்பட்ட இடம் ஹரியானாவில்! கேரளத்திலிருந்து ஹரியானா வந்த சசிக்கு மொத்தமாய் இந்த வேலை பிடிக்காமல் போக, எப்படியாவது வேலையை விட்டுவிட்டுப் போக வேண்டும் என்று புலம்பிய காலம் அது!

 படம்-3: அகர்தலா - வங்க தேச எல்லை - மீசைக்கார நண்பா......

அந்த இரண்டு மாத காலம் சசியும் நாங்கள் சந்தித்த BSF வீரரும் ஒரே பிரிவில் இருந்திருக்கிறார்கள். அதை இன்னமும் நினைவில் வைத்திருந்து அந்த வீரர் இவரைப் பார்த்த உடனே கண்டுபிடித்திருக்கிறார்! அவர் ஒவ்வொரு விஷயமாக எடுத்துவிட எங்கள் அனைவருக்குமே ஆச்சரியம். அந்த விஷயங்கள் நடந்தது பல வருடங்களுக்கு முன்னர்! அத்தனை விஷயங்களையும், இரண்டே மாதம் ஒன்றாய் ஒரு பிரிவில் பணி புரிந்ததையும் நினைவு வைத்திருந்தார் அந்த வீரர்.

படம்-4: அகர்தலா - வங்க தேச எல்லை - நிகழ்வினைப் பார்க்க நின்று கொண்டிருக்கும் வங்க தேச மக்கள்...

எல்லையில் BSF நடத்தும் அந்தச் சிறிய கடையினை பார்த்துக் கொண்டிருந்தார் அந்த வீரர். பணியை வேறு ஒருவரிடம் ஒப்படைத்துவிட்டு எங்களிடம் பேசிக் கொண்டிருந்தார். அதற்குள் நிறைய வீரர்கள் – தமிழகம், கேரளம், ஹரியானா, பஞ்சாப் என எல்லா மாநில வீரர்களும் அடக்கம் – அனைவரிடமும் நண்பரையும் எங்களையும் அறிமுகம் செய்து வைத்து எங்களுக்கு இன்னும் ஒரு முறை தேநீர் கொடுத்து உபசரித்தார். 

படம்-5: அகர்தலா - வங்க தேச எல்லையில்... 
இரு தேச வீரர்கள் சந்திப்பு..

அதற்குள் கொடியிறக்க விழாவும் துவங்க, நாங்கள் இந்தியப் பகுதியில் நின்று கொண்டு [உட்காரும் வசதி வெகு குறைவு – வா[g]கா அளவு இங்கே நடக்கும் விழா அத்தனை பிரபலம் இல்லை என்பதால் வசதிகள் குறைவு] கொடி இறக்க விழாவினைப் பார்த்தோம். வீரர்கள் நடப்பதும், கொடியை இறக்குவதும், BSF Band இசைப்பதும் அத்தனை அழகு. நமது வீரர்களிடம் இருந்த மிடுக்கும், கம்பீரமும் ஏனோ வங்க வீரர்களிடம் இல்லை என்று தோன்றியது! நமது வீரர் ஒருவருடைய மீசை இந்தியப் பகுதியில் இருந்த பலருக்கும் பிடித்திருந்தது!

படம்-6: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
இந்திய வீரர்கள் அணிவகுப்பு...

கொடியிறக்கத்திற்குப் பிறகு கொடியினை அழகாக மடித்து ஒரு வீரர் அதிகாரியிடம் கொடுக்க, இரண்டு பக்க வீரர்களும் இனிப்புகளைப் பகிர்ந்து கொள்ள, இரண்டு பக்கத்திலிருந்தும் மக்களும் மகிழ்ச்சியையும் வாழ்த்துகளையும் பரிமாறிக் கொண்டு விழா இனிதே முடிந்தது. அதிகாரிகள் சென்ற பிறகு வங்க தேச வீரர்களிடமும் இந்திய வீரர்களிடமும் நாங்கள் பேசினோம். எல்லைப் பகுதி என்றாலும் பாகிஸ்தான் எல்லை போல, இங்கே அத்தனை பதட்டமோ, கெடுபிடிகளோ இல்லை. ஆனாலும், இந்த எல்லை வழியாகவும் நிறைய ஊடுருவல்கள் – வேலை தேடி வருபவர்கள் உண்டு!

படம்-7: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
சிங்க நடை போட்டு சிகரத்தில் ஏறு!...

எல்லைப் பகுதி பற்றியும், வீரர்களின் அன்றாட வாழ்வு பற்றியும், அவர்களது பிரச்சனைகள் பற்றியும் சிறிது நேரம் பேசிக் கொண்டிருந்தோம்.  எல்லையில் இருப்பதால் பல சமயங்களில் தொடர்ந்து கவனமாக இருக்க வேண்டியிருக்கிறது. பணியும் ரொம்பவே கடினமான ஒன்று. எந்த நேரத்தில் என்ன நடக்கும் என்பதைச் சொல்ல முடிவதில்லை. பாகிஸ்தான் எல்லையை விட இந்த எல்லைப் பணி கொஞ்சம் சுலபமானது என்றாலும் அதிக வருடங்கள் இங்கே இருக்க முடியாது. ஒன்றிரண்டு வருடங்களுக்கு மேல் ஒரு இடத்தில் இருக்க மாட்டார்கள் இவர்கள் – பணிமாற்றம் ஆகிவிடும்.

படம்-8: அகர்தலா - வங்க தேச எல்லையில்....
தொப்பி...  தொப்பி....

அந்த வீரர் மற்றும் வேறு சில வீரர்களிடம் பேசிக் கொண்டிருந்த பிறகு, நாங்கள் புறப்படுவதற்கான நேரமும் வந்து விட்டது.  பல வருடங்கள் கழித்துப் பார்த்த அந்த கேரள நபரிடம் அலைபேசி எண்களை பரிமாறிக் கொண்ட பிறகு அங்கிருந்து புறப்பட்டோம்.  அதெல்லாம் சரி தலைப்பில் பகோடா என எழுதிவிட்டு, அதைப் பற்றி ஒன்றுமே சொல்லவில்லையே என்று நீங்கள் கேட்பதற்குள் சொல்லி விடுகிறேன்! அந்த வார்த்தை ஒரு ஹிந்தி வார்த்தை!

படம்-9: அகர்தலா - வங்க தேச எல்லையில்.... 
தேசியக்கொடி அதிகாரியிடம் கொடுக்கப்படுவதற்கு முன்பு...

ராணுவம், பாதுகாப்புப் படைகள் ஆகியவற்றில் வேலைக்குச் சேர்ந்த பிறகு அது பிடிக்காமலோ அல்லது அதன் கடுமையான உழைப்பு தரும் அயர்ச்சியாலோ, சிலர் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவது வழக்கம்.  அப்படி ஓடிவிடுபவர்களைக் குறிக்க பயன்படுத்தும் வார்த்தை – [B]பகோ[D]டா! Baagnaa என்றால் ஓடுவது – அதிலிருந்து உருவான வார்த்தை தான் இந்த பகோடா! நண்பர் சசியைப் பார்த்தவுடன் அந்த கேரள வீரர் சொன்ன வார்த்தை தான் பகோடா! 

படம்-10: அகர்தலா - வங்க தேச எல்லையில்...
வங்கதேச வீரர்கள்...

ஏதோ, வங்க தேச எல்லையில் நாங்கள் வெங்காய பகோடாவோ, காலி ஃப்ளவர் பகோடாவோ சாப்பிட்டதாக எண்ணியிருந்தால் கம்பெனி பொறுப்பேற்க முடியாது! சரி நண்பர்களே, அடுத்ததாய் நாங்கள் சென்ற இடம் என்ன, என்ன செய்தோம் என்பதை அடுத்த பகுதியில் சொல்கிறேன்!

தொடர்ந்து பயணிப்போம்.....

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.