திங்கள், 22 ஜூன், 2026

Lahaul Spiti Circuit Trip - பகுதி ஒன்பது - பீமா காளி மந்திர், சராஹன் - வெங்கட் நாகராஜ்


அன்பின் நண்பர்களுக்கு, இனிய காலை வணக்கம். இந்த நாளில் மீண்டும் ஒரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திப்பதில் மகிழ்ச்சி.   


இதற்கு முன்னர் வெளியிட்ட அழகிய படங்களும் சில வரிகளும் பதிவினை படித்து கருத்துகள் தெரிவித்த அனைத்து வலையுலக நண்பர்களுக்கும் மனம் நிறைந்த நன்றி.  இந்த நாளை நல்லதொரு வாசகத்துடன் தொடங்கலாம் வாருங்கள். 



*******




காலை நேர நடையின் போது...


பனிச்சிகரங்கள்...

இந்தப் பயணத் தொடரின் முந்தைய பகுதிகளுக்கு நீங்கள் அனைவரும் தந்த வரவேற்பிற்கும், கருத்துரைகளுக்கும் மனம் நிறைந்த நன்றி. சென்ற பகுதியில் சராஹன் எனும் இடத்தில் நாங்கள் தங்கிய இடம் குறித்தும், அந்தத் தங்குமிடத்தின் உரிமையாளர் குறித்தும் சில தகவல்களை பகிர்ந்து கொண்டிருந்தேன்.  இரவு உணவிற்குப் பிறகு, நாள் முழுவதும் பயணித்த களைப்பு போக நல்லதொரு உறக்கம்.  காலை சீக்கிரமாகவே எழுந்து விடுவது - அதுவும் பயணத்தில் என்றால் - நிச்சயம் ஐந்து ஐந்தரைக்குள் எழுந்து விடுவேன்.  அன்றைக்கும் அப்படியே எழுந்து விட்டேன்.  நண்பர்களும் எழுந்து தயாராகி விட சராஹன் என்ற அந்த ஊருக்குள் ஒரு உலா வர புறப்பட்டுவிட்டோம்.  சராஹன் - கின்னோர் எனும் மாவட்டத்தின் உள்ளே நுழைவதற்கு முதலில் நாம் இந்த ஊருக்குத் தான் வரவேண்டும் - அதனால் இந்த ஊரை Gateway to Kinnaur Valley என்றும் அழைப்பதுண்டு.  முந்தைய பகுதியில் சொன்னது போல இரண்டாயிரத்திற்கும் குறைவான மக்கள் தொகை கொண்ட ஊர். ஆனாலும் இங்கே பல வசதிகள் இருக்கின்றன.  மருத்துவமனை, பள்ளி (பன்னிரெண்டாம் வகுப்பு வரை!), அரசு அலுவலகங்கள், ATM, வங்கி  என அனைத்தும் இங்கே உண்டு. 



காலை நேரத்தில் ஒரு சுகமான நடை...


நடந்து சென்ற பாதைகளில் ஒன்று...


பூக்களைப் படம் எடுக்கும் நண்பர்...

நெடுஞ்சாலையிலிருந்து ஜியோரி எனும் ஊரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவு பயணித்து இந்த சராஹனுக்கு வந்து சேர வேண்டும் - நெடுஞ்சாலையிலிருந்து ஒதுங்கி இருப்பதால் அழகு இன்னும் அப்படியே இருக்கிறது என்று எனக்குத் தோன்றியது.  மலைச்சிகரங்கள், ஆறு, தியோதார் மரங்கள், 2007-ஆம் ஆண்டு ஹிமாச்சலப் பிரதேசத்தின் மாநிலப் பறவையாக அறிவிக்கப்பட்ட ஜுஜுராணா அதிகமாக இருக்கும் இடம் என பல சிறப்புகளைப் பெற்றது இந்த ஊர்.  அது மட்டுமல்லாது இங்கே இருக்கும் ஒரு ஆலயம் - 51 சக்தி பீடங்களில் ஒன்றாகச் சொல்லப்படுகிறது - உள்ளூர் மக்களால்! - அந்த ஆலயத்தின் பெயர் பீமாகாளி மந்திர்.  அழகான ஆலயம்.  காலை நேரத்திலேயே அந்த ஆலயத்திற்குச் சென்று வரலாம் என்று தான் நாங்கள் புறப்பட்டு இருந்தோம். பக்கத்திலேயே ஒரு மாளிகையும் உண்டு.  அதைத் தவிர மாநிலப் பறவையான ஜுஜுராணா வளர்ப்பதற்கான ஒரு Breeding Centre கூட இங்கே செயல்படுகிறது. நாங்கள் கடைத்தெரு வழியே அப்படியே நடந்து கொண்டிருந்தோம். சிறிய ஊர், காலை வேளை என்பதால் அவ்வளவாக நடமாட்டம் இல்லை. 



ஆலயம் முன்னர் நாங்கள் - செல்ஃபி டைம்...


ஆலய வளாகம் - ஒரு குறுக்குப் பார்வையில்...


ஆலய நுழைவாயில் - காவலருடன் நான் பேசிக் கொண்டிருந்தபோது...

நாங்கள் சென்று கொண்டிருந்த போது ATM கண்ணில் பட, தேவையான பணத்தினை எடுத்து வைத்துக் கொண்டோம். ஸ்பித்தி செல்லச் செல்ல அலைபேசி இணைப்பு கிடைப்பது கடினம் என்பதால் செயலிகள் வழி எந்த பரிமாற்றமும் செய்ய இயலாது என்பதால் பணமாக எடுத்து வைத்துக் கொள்ள வேண்டிய அவசியம் இருந்தது. மலைப்பகுதிகளுக்குச் செல்லச் செல்ல அலைபேசி மொத்தமாக வேலை செய்யாது - அழைப்புகள் கூட வராது என்று தெரிந்ததால் இப்படி ஒரு முன்னேற்பாடு.  நண்பர்கள் பணம் எடுக்கும் வேளையில் நான் வெளியே நின்று காட்சிகளை ரசித்துக் கொண்டிருந்தேன்.  அப்போது ஒரு சிறு பெண் - பள்ளிக்குச் செல்லும் பெண் - எதிரே வந்தார். எங்களைப் பார்த்ததும் - வணக்கம் என்று சொல்லி, எங்கிருந்து வந்திருக்கிறீர்கள் என்று விசாரித்தார். அவரை நான் எங்கே, என்ன படிக்கிறீர்கள் என்று கேட்க +2 படிப்பதாகச் சொல்ல, அவரது மேல்படிப்பு எங்கே, எப்படி போன்று கேட்டுக் கொண்டிருந்தேன். நண்பர்களும் சேர்ந்து கொள்ள அனைவரிடமும் பேசி எங்கள் பயணம் சிறக்க வாழ்த்தினார். நாங்களும் அவரது படிப்பில், வாழ்க்கையில் முன்னேற வாழ்த்தினோம். 



பனிச்சிகரங்கள்...



ஆலயத்தின் முன்னர் நாங்கள் - இன்னுமொரு செல்ஃபி...


இடப்பக்கத்தில் இருப்பதில், இரண்டாம் மாடியில் தான் பீமாகாளி வாசம்...

நாங்கள் கேரளா/தமிழகத்திலிருந்து வருகிறோம் என்று சொல்ல, இத்தனை தொலைவிலிருந்து எங்கள் ஊரைப் பார்க்க வந்திருக்கிறீர்களே என்று ஆச்சரியம் அவருக்கு. எங்கள் ஊர் பிடித்திருக்கிறதா? ஆகஸ்ட் - செப்டம்பர் சமயத்தில் வந்தால் ஆப்பிள் அறுவடை காலம் - அந்த நேரம் ஊர் இன்னும் அழகாக இருக்கும் - இன்னொரு முறை அந்த நாட்களில் வாருங்கள் என்று அழைப்பும் விடுத்தார். இன்னும் சிலரும் எங்களிடம் வணக்கம் சொல்லி புன்னகையுடன் கடந்தார்கள். சிறிய ஊர்களில் இது போல நிறைய நான் அனுபவம் பெற்றிருக்கிறேன். வெளியிலிருந்து வந்து அங்கே இருக்கும் அழகை ரசிக்க வருவது அவர்களுக்குப் பிடித்திருந்தாலும் எல்லோரும் இந்தப் பெண் போல, அல்லது வேறு சிலரைப் போல Receptive ஆக இருக்க மாட்டார்கள் என்பதால் கொஞ்சம் கவனமும் தேவை. குறிப்பாக சில சுற்றுலாப் பயணிகள் அவர்களது ஊரின் அழகைக் கெடுத்து விடுகிறார்கள் என்று கொஞ்சம் கோபத்துடன் பேசுவதுண்டு.  



ஆலயத்தின் தோற்றம் - பின்புறத்தில்...


ஆலயத்தின் தோற்றம் - வெளிப்பக்கத்திலிருந்து...


ஆலயம் வேறொரு கோணத்தில்...

பீமாகாளி மந்திர் இருக்கிறது என்று சொல்லிவிட்டு அதனைப் பற்றி ஒன்றுமே இதுவரை சொல்லவில்லையே…  சொல்கிறேன். ராம்பூர் புஷஹர் பகுதியை ஆண்ட மன்னர்கள் அமைத்த ஆலயம் தான் இந்த பீமாகாளி மந்திர். மரத்தினால் கட்டப்பட்ட இந்த ஆலயத்தில் மிக அழகான வேலைப்பாடுகள் உண்டு. இரண்டு பெரிய கட்டிடங்கள் - அவற்றில் ஒன்றில் பீமாகாளி குடிகொண்டிருக்கிறாள். மரத்தினால் செய்யப்பட்ட இந்த ஆலயத்தில், மரத்தில் படிக்கட்டுகள் சுற்றிச் சுற்றிச் செல்ல, குனிந்தபடி மேலே இரண்டு தளங்களைக் கடந்தால் மேல் மாடியில் பீமாகாளி நமக்கு தரிசனம் தருகிறார்.  அமைதியான அழகான ஆலயம்.  காலை வேளை என்பதால் அதிகம் கூட்டமில்லை. நாங்கள் மட்டுமே அந்த வேளையில் ஆலயத்தில் இருந்தோம்.  இந்த ஆலயத்திற்கு வெளியே இருந்த காவலரிடம் அனுமதி பெற்று, உள்ளே நுழைந்தோம். ஹிமாச்சலப் பிரதேச காவல் துறையைச் சேர்ந்தவர் அவர். ஆலயத்திற்கு உள்ளே செல்ல அனுமதிக்கும்போது பெரிதாக பேசவில்லை என்றாலும் திரும்பி வரும்போது அவரிடம் நிறைய பேசினோம்.



கதவில் இருக்கும் வளையம்...


ஆலயத்தில் இசைக்கப்படும் வாத்தியம்...


ஆலயம் மற்றொரு படம்...

அதற்கு முன்னர் எங்களது அலைபேசி, தோலில் செய்யப்பட்ட பர்ஸ், பெல்ட் போன்றவற்றையும் கழற்றி வைத்து விட்டு தான் இங்கே இருக்கும் ஆலயங்களுக்குச் செல்ல அனுமதி கிடைக்கும். அதைப் போலவே ஹிமாச்சலப் பிரதேசத்தின் ஆலயங்களுக்குள் செல்ல வேண்டுமெனில் நிச்சயம் தலையை மூடி இருக்க வேண்டும் - ஆண்கள் எனில் தொப்பி அணிய வேண்டும் - பெண்கள் எனில் அவர்களது சேலைத் தலைப்பு அல்லது துப்பட்டாவினால் தலையை மூடிக் கொள்ள வேண்டும்.  தலை மூடாமல் ஆலயத்திற்குள் செல்ல அனுமதி இல்லை - அதே போல தோல் பொருட்கள் அணிந்து/எடுத்துக் கொண்டு செல்லவும் அனுமதி இல்லை. மாடிப்படிகளில் கவனமாகச் செல்ல வேண்டியிருந்தது. சில இடங்களில் என் உயரத்தின் காரணமாக அதிக கவனத்துடன் சென்றேன் என்றாலும் கூரை இடித்தது. சுற்றிச் சுற்றிச் செல்லும் படிகளில் மேலே செல்ல, கண்களுக்கெதிரே பீமாகாளி தரிசனம்.  சில நிமிடங்கள் அப்படியே அமர்ந்து தேவியைப் பிரார்த்தனை செய்து கொண்டோம்.  நாங்கள் சென்ற போது ஆலயத்தின் பூஜாரி இல்லை. பிரசாதமாக சர்க்கரை உருண்டைகள் வைத்திருக்க அவற்றில் கொஞ்சம் எடுத்து, வெளியே வந்து வாயில் போட்டுக் கொண்டோம். 



ஒரு சிறு காணொளி - நடையின் போது...


மற்றுமொரு காணொளி...


இயற்கை... காலை நேர நடையில் எடுத்த ஒரு காணொளி...

மிகவும் பழமையான ஆலயம். பல வருடங்களுக்கு முன்னர் கட்டப்பட்டது என்றாலும், இன்னமும் பழமை மாறாமல், சிறப்பாகவும், சுத்தமாகவும் பராமரித்து வருகிறார்கள்.  சில கட்டுமானங்கள் வியக்க வைத்தன.  குறிப்பாக மரத்தில் வேலைப்பாடுகள்…  கதவில் இருந்த பெரிய வளையங்கள், மேலேயிருந்து கீழே வரை தொங்கிக் கொண்டிருந்த சங்கிலிகள் என ஒவ்வொன்றும் பிரமிக்க வைத்தன.  சங்கிலிகள் எதற்காக இப்படித் தொங்கிக் கொண்டிருக்கின்றன என்பது புரியவில்லை என்பதால் வெளியே இருந்த காவலரிடம் கேட்க வேண்டும் என்று நினைத்துக் கொண்டு, அங்கே சில நிழற்படங்களை எடுத்துக் கொண்டோம்.  நாங்கள் வெளியே வரும் நேரம் ஒரு டெம்போ ட்ராவலர் முழுக்க மலையாளிகள் ஆலயத்திற்கு வந்தார்கள்.  மலையாளமும் ஹிந்தியுமாக அவர்கள் பேசியதில் அவர்களும் சுற்றுலாவாக தில்லியிலிருந்து வந்ததைப் புரிந்து கொள்ள முடிந்தது. அப்படியே நடந்து ஆலயத்தினை பிரமிப்புடன் பார்த்துக் கொண்டிருந்த பிறகு வாசலில் இருந்த காவலருடன் பேச்சுக் கொடுத்தோம். அவருடன் பேசியதில் நிறைய தகவல்கள் தெரிந்து கொள்ள முடிந்தது. அவற்றில் ஒன்று - சங்கிலி குறித்த தகவல்… மற்ற தகவல்களும் வெகு ஸ்வாரசியம் தான். அவர் சொன்ன தகவல்கள் என்ன, வேறு என்ன விஷயங்களை அவர் எங்களுக்குச் சொன்னார் போன்ற தகவல்களை அடுத்த பகுதியில் சொல்கிறேன். அதுவரை பயணத்தில் இணைந்திருங்கள் நண்பர்களே.  


*******


இன்றைய பதிவு குறித்த தங்களது எண்ணங்களை பின்னூட்டத்தில் சொல்லுங்கள். விரைவில் வேறொரு பதிவுடன் உங்கள் அனைவரையும் சந்திக்கும் வரை…


நட்புடன்


வெங்கட் நாகராஜ்

திருவரங்கம்

22 ஜூன் 2026


1 கருத்து:

  1. முன்யோசனையுடன் ATM ல் பணம் எடுத்து வைத்துக் கொள்ள உதவியது உங்கள் அனுபவம்!

    இடங்கள் அழகு என்பதால் படங்கள் அழகு!  காணொளிகளை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....