திங்கள், 28 நவம்பர், 2011

ஓர்ச்சாவில் ஒலியும் ஒளியும்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது... பகுதி-21]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20)


ஓர்ச்சா நகரம் முழுவதுமே பழமை குடிகொண்டிருக்கிறது. எங்கு பார்த்தாலும் கட்டிடங்கள், அரண்மணைகள், மஹால்கள், சத்ரி என்றழைக்கப்படும் குடைகள்.  அவற்றின் பின்னே பெரும் கதைகள் இருக்க வேண்டும்.  அதையெல்லாம் தெரிந்து கொள்ள ஏதுவாய் அங்கே மாலையில் மத்தியப்பிரதேச சுற்றுலாத்துறை ஒலி-ஒளி மூலம் தினமும் இந்த ஊரின் பின்னே இருக்கும் கதைகளை நமக்குத் தருகிறார்கள். 

ஓர்ச்சா என்றால் ”மறைந்திருக்கும் இடம்” என்ற பொருள்.  ராஜா ருத்ர பிரதாப் ஒரு முறை வனத்தில் வேட்டையாட வந்திருக்கும்போது வழி தவறி, தட்டுத் தடுமாறி வருகிறார்.  தண்ணீர் வேட்கையுடனும் சோர்வுடனும் வந்த போது அவருக்கு வழியிலே ஒரு முனிவரின் இருப்பிடம் தெரிய, அங்கே வந்து அடைக்கலம் ஆகிறார். அந்த இடத்தினைப் பார்த்ததில் அத்தனை ஆனந்தம் அவருக்கு.  


பக்கத்தில் கரை புரண்டு ஓடும் ”பேத்வா” [BETWA] நதி.  சுற்றிலும் நல்ல மரங்கள் என இயற்கை எழில் கொஞ்சும் இடம்.  இந்த இடத்திலேயே ஒரு நகரத்தினை நிர்மாணிக்க வேண்டும் என நினைத்து, அந்த நகரத்திற்கு ஒரு பெயரைச் சூட்டும்படி முனிவரிடம் வேண்ட, “நாளை பார்த்துக் கொள்ளலாம், இன்று படுத்து உறங்குங்கள்” எனச் சொல்லி விட்டாராம். 

அடுத்த நாளை காலையில், திரும்பவும் பெயர் சூட்டல் பற்றி நினைவு படுத்த, " நான் பெயர் வைக்க மாட்டேன், ஆனால் ஒரு விஷயம் சொல்கிறேன், இன்று நீங்கள் வேட்டைக்குச் செல்லுங்கள், செல்லும் வழியில் உங்கள் வாயிலிருந்து வரும் முதல் வார்த்தையை மூலமாக வைத்து நீங்கள் நிர்மாணிக்கும் நகரத்தின் பெயரை வைத்துக் கொள்ளுங்கள் ” என்றாராம். 

அப்படிச் செல்லும் போது வழியில் ஒரு மான் தென்பட, அதைப் பிடிக்க தன்னுடைய வேட்டை நாயை “ஊர்ச்” என்று ஏவினார்.   அதுவே அவர் சொன்ன முதல் வார்த்தை.  அந்த வார்த்தையைக் கொண்டு உருவானது தான் ஊர்ச்சா…  அது மருவி இப்போது “ஓர்ச்சா” என்றாகிவிட்டது. 


ராஜா ருத்ர பிரதாப் சிங் காலத்தில் உருவாக ஆரம்பித்த நகரம், அது முடியும் முன்னரே அவரின் எதிர்பாராத இறப்பினால் சற்று தடைப்பட்டாலும் தொடர்ந்தது.  ஒரு பசுவினை புலியிடம் இருந்து காப்பாற்றும் முயற்சியில் ராஜா ருத்ர பிரதாப் தனது உயிரை இழக்க அடுத்தடுத்த ராஜாக்கள் காலத்தில் நகரம் உருவானது.  பல ராஜாக்கள் நிறைய கட்டிடங்களை நிர்மாணித்தனர். 


ராஜா பீர் சிங் தியோ காலத்தில் நிறைய மாளிகைகள் உருவாக்கப்பட்டன.  ஷீஷ் மஹால் [முந்தைய பகுதியில் பார்த்தது], ஜான்சி கோட்டை என பல கட்டிடங்கள் கட்டப்பட்டன.  ஜஹாங்கீர் மஹால் என்பது முகலாய மன்னர் ஜஹாங்கீர் இந்த இடத்திற்கு விஜயம் செய்த போது அவரை வரவேற்று தங்க வைப்பதற்காகக் கட்டப்பட்ட ஒன்று.  இரண்டு வாயில்கள். ஒரு வாயிலில் பிரம்மாண்டமான மரக் கதவுகளின் மேல் இருக்கும் இடத்தில் இரண்டு யானைகளின் சிலைகள் அழகாய் இருக்கின்றன. 


புந்தேல்கண்ட் ராஜா-ராணிகளின் சத்ரிகள் [குடைகள்] என சொல்லப்படும் சமாதிகள் நகரம் முழுவதும் பாழடைந்த நிலையில் இருக்கின்றன.  எல்லாவற்றின் பின்னாலும் இருக்கும் கதைகள் நிறைய.  அவற்றை எல்லாம் சொல்ல இன்னும் பல பதிவுகள் தேவை என்பதால் சுருக்கமாகவே சொல்லியிருக்கிறேன்.   


சொல்லிக் கொண்டு வந்த கதைகளில் ஒரு முக்கிய விஷயமாக ராய் ப்ரவீன் மஹால் உருவான கதையை எல்லோரும் ரசித்தார்கள்.  இந்த மஹால் இப்போது இருக்கும் நிலையைப் பார்த்தால் “எப்படி இருந்த நீ்  இப்படி ஆயிட்டேயே” என்று தோன்றியது உண்மை.  அப்படி என்ன அதற்குப் பெருமை என்று கேட்பவர்களுக்கு அடுத்த பகுதி வரை காத்திருங்கள்.  நிச்சயம் உங்களுக்கு பதில் கிடைக்கும். 

ராம் மந்திர் உருவான கதை, புந்தேலா மன்னர்களின் ராஜாங்கம் எப்படி இருந்தது என்று எல்லா விஷயங்களையும் ஒலி-ஒளி மூலம் நம் கண் முன்னே கொண்டு நிறுத்துவது ஆச்சரியம். 

நன்றாக இருந்த அந்த காட்சிகளை ரசித்து முடித்து அங்கிருந்து கிளம்பினோம்.  ஒலி-ஒளி மூலம் சொல்லப்பட்ட கதையில், ராய் ப்ரவீன் மஹால் உருவான கதை, ராம் ராஜா மந்திர் உருவான கதை ஆகியவற்றை மட்டும் அடுத்த இரு பகுதிகளில் பார்க்கலாம்.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட்.

வெள்ளி, 25 நவம்பர், 2011

சொல்லுக சொல்லிற்...


சொல்லுக சொல்லிற் பயனுடைய சொல்லற்க
சொல்லிற் பயனிலாச் சொல்.

இந்த திருக்குறளுக்கு மு. வ. அவர்கள் தந்த பொருளுரை - சொற்களில் பயன் உடைய சொற்களை மட்டுமே சொல்ல வேண்டும், பயன் இல்லாதவைகளாகிய சொற்களை சொல்லவே கூடாது.


நாம் சொல்லும் சொற்களில் மட்டுமல்ல, எழுதும் போதும் அதைப் படிப்பவர்களுக்கு ஏதாவது பயன் இருக்க வேண்டும் என நினைப்பவன் நான்.  இது வரை எழுதிய பதிவுகள் அப்படிப்பட்டவையாகவே  இருந்திருக்கும் என நம்புகிறேன். 

கடந்த இரண்டு வருடத்திற்கும் மேலாக இந்த வலைப்பூவில் என்னால் முடிந்த அளவிற்கு நல்ல விஷயங்களையே பகிர்ந்து கொள்ள முயன்றிருக்கிறேன். அதில் வெற்றி பெற்றிருக்கிறேனா என நீங்கள் தான் சொல்ல வேண்டும்.

அலுவலகம், வீடு என்ற இரண்டு பெரிய பொறுப்புகளுக்கு நடுவில் எனது எண்ணங்களுக்கு வடிகாலாக இந்த வலைப்பூவும் அதன் மூலம் கிடைக்கும் நட்பு வட்டமும் இருந்திருக்கிறது என்றால் அது மிகையில்லை.  கிடைக்கும் நேரத்திலே சில பதிவுகள் எழுதி வந்ததில் இன்று இத்தனை பதிவுகள் எழுதி நிறைய நண்பர்கள், அக்டோபர் 10-16 தேதிகளில் தமிழ்மணம் நட்சத்திரப் பதிவர் என்று இந்த பயணம் சுகமாகத்தான் சென்று கொண்டிருக்கிறது. 

கிடைக்கும் நேரத்தில் என்றவுடன் ஒரு வலைப்பக்கம் எனது மனக்கதவினைத் தட்டி “என்னை நினைவில் இல்லையா?” என்று கேட்கிறது.  அந்த வலைப்பக்கம் வேறு யாருடையதும் அல்ல, என் துணைவியுடையது.  நான் எழுத ஆரம்பித்ததிலிருந்து என்னுடைய பதிவுகளைப் படித்து, முதல் விமர்சனம் செய்து வந்த என் துணைவியும் தனக்கென்றே ஒரு வலைப்பூ ஆரம்பித்து எழுதி வருகிறார்.  அவர் எழுத ஆரம்பித்த பிறகு, எனக்கு கணினி கிடைக்கும் நேரம் குறைந்துவிட்டது என்று சொல்ல மாட்டேன்…..:) அது தான் மகளும் மனைவியுமாகச் சேர்ந்து ஏற்கனவே “வலைராஜா” என்று சொல்லிவிட்டார்களே….

”சரி எதுக்கு இந்த பீடிகை எல்லாம்!” என்று கேட்கும் வலைப்பூ உலக நட்பு வட்டத்திற்கு, மேலே சொன்ன திருக்குறள் எத்தனையாவது திருக்குறள் என்பது தெரிந்தால் புரிந்துவிடும். மேலே எழுதிருப்பது 200-வது குறள். இந்த பதிவு எனது 200-வது பதிவு.

இந்த 200-வது பதிவினை பதிவிடும் இந்த நேரத்தில், எனது இப்பயணத்தில் கூடவே பயணம் செய்த அனைத்து பதிவுலக நண்பர்களுக்கும், பெரியவர்களுக்கும், சிறியவர்களுக்கும் எனது அன்பு கலந்த நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

இப்பயணத்தினைத் தொடங்கக் காரணமாக இருந்த பதிவர் திரு ரேகா ராகவன் அவர்களுக்கும், அவ்வப்போது திருத்தங்கள் சொல்லி என் எழுத்தினை மேம்படுத்திய பதிவர் மற்றும் எழுத்தாளர்  திரு கே.பி.ஜனார்த்தனன் அவர்களுக்கும் எனது சிரம் தாழ்ந்த வணக்கங்கள். 

பதிவுகள் தொடர்ந்து எழுத உற்சாகம் தரும் விதத்தில் பெரும்பாலான பதிவுகளுக்கு தங்களது கருத்தினைத் தொடர்ந்து பதிவு செய்து வரும் அனைவருக்கும் எனது இதயபூர்வமான நன்றி.   

தொடர்ந்து சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.


திங்கள், 21 நவம்பர், 2011

ஓர்ச்சா என்றொரு நகரம்…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி 20]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19)


மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் [Tikamgarh] மாநிலத்தில் அமைந்திருக்கும் ஒரு ஊரின் பெயர் தான் ஓர்ச்சா. ஹிந்தியில் ஓர்ச்சா என்றால் ”மறைந்துள்ள” என்று அர்த்தம்.  இந்த ஊர் “பேத்வா” [Betwa] ஆற்றின் கரையில் அமைந்துள்ளது. 

புந்தேலா [Bundela] ராஜாக்களின் தலைநகராகத் திகழ்ந்த ஒரு இடம் தான் இது.  Bundelkhand என்று மத்தியப் பிரதேசம் மற்றும் உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் இருக்கும் சில பகுதிகளைச் சேர்த்து தனி மாநிலம் கேட்கிறார்களே அதற்கெல்லாம் முன்னோடி நகரம் தான் இது.  1501-ஆம் வருடம் புந்தேலா ராஜாவான ருத்ர பிரதாப் சிங் அவர்களால் உருவாக்கப்பட்ட நகரம் இது. இந்த நகரத்தில் பலப்பல பழமையான கட்டிடங்கள் இருக்கின்றன.  அரண்மனைகள், கோவில்கள், சத்ரி [இறந்த ராஜா-ராணிகளுக்கென கட்டப்பட்ட சமாதிகள், மற்றும் நாட்டியமாடும் ஒரு கவிதாயினிக்கு என கட்டப்பட்ட ”ராய் ப்ரவீன் மஹால்” என ஊர் முழுவதும் புராதனமான கட்டிடங்கள் இருக்கின்றன.  ஒவ்வொரு கட்டிடங்களிலும் அவர்கள் வாழ்ந்த வாழ்க்கையின் பலவிதமான ரகசியங்களும் ஒளிந்திருக்கின்றன. 


நாங்கள் சென்ற அன்று முதலில் பார்த்த இடம் ”ஷீஷ் மஹால்”.  இந்த இடம் 18ஆம் நூற்றாண்டின் ஆரம்பத்தில் ராஜா ”உதைத் சிங்” அவர்கள் தங்குவதற்கென கட்டப்பட்ட எழில் மிகு கட்டிடம்.  ஆனால் இப்போது அந்த கட்டிடத்தின் பல புராதனச் சின்னங்கள் அழிந்து போய் விட்டது.  மிச்சம் இருக்கும் இடத்தில் மத்திய பிரதேச மாநிலத்தின் சுற்றுலாத் துறை நடத்தும் ஒரு தங்குமிடம்/உணவகம் இருக்கிறது.  நாங்கள் அனைவரும் அங்கு சென்று அறைகளையும், மற்ற இடங்களையும் சுற்றிப் பார்த்தோம். 


இந்த மஹால், ராஜ் மஹால் மற்றும் ஜெஹாங்கீர் மஹால் ஆகியவற்றிற்கு இடையில் இருக்கிறது.  இந்த இடங்களுக்கெல்லாம் செல்லலாம் என்று நினைத்தால் அது முழுவதற்கும் இன்று நேரம் இருக்காது, நாளை செல்லலாம் என்று எங்களுடன் வந்த ரோஹித் பட்நாகர் அவர்கள் சொல்லவே இன்றைய பொழுதின் அடுத்த நிகழ்ச்சி என்ன என்று கேட்டோம்.

மாலை 07.00 மணிக்கு ஒலி-ஒளி மூலம் இந்த ஓர்ச்சா நகரத்தின் பழமையை விளக்கிச் சொல்லும் காட்சி இருக்கிறது என்று சொல்லி, அது வரை பக்கத்தில் இருக்கும் ராம் ராஜா மந்திர் சென்று பார்த்து விட்டு, அப்படியே அந்த ஊரின் முக்கிய கடை வீதியைப் பார்த்து வாருங்கள் என்று சொன்னார். 

கடை வீதி என்று சொன்னவுடன் ஏதோ பெரிய கடை வீதி, நிறைய கடைகள் இருக்கும் என்று எண்ணிவிடவேண்டாம்.  இப்போது இந்த புந்தேலா தலைநகரத்தில் இருப்பது இந்த கட்டிடங்களைத் தவிர வேறு ஒன்றும் இல்லை.  சில கடைகள் இருக்கின்றன.  ஜான்சியிலிருந்து கஜுராஹோ செல்லும் வழியில் இந்த இடம் இருப்பதால் நிறைய வெளிநாட்டவர்களைப் பார்க்க முடிகிறது.  அதனால் இங்கு விற்கும் பொருட்களின் விலையும் டாலரின் அளவிற்குத் தான் இருக்கிறது. 

அப்படியே நடந்து சென்ற போது இந்த இடத்தின் பின்னடைவு கண் கூடாகத் தெரிந்தது.  மொத்த ஊரின் மக்கள் தொகையே இருபதாயிரத்திற்கு மேல் இருக்காது.   இருக்கும் எல்லா மக்களும் சுற்றுலா வரும் பயணிகளை நம்பியே இருக்கிறார்கள்.  எங்களுடன் வந்த வண்டி ஓட்டுனர் திரு ராஜு அவர்களின் ஊராம் இது. 


ஊர் பற்றிய நிறைய விஷயங்களை வருத்தத்துடன் சொல்லிக் கொண்டு வந்தார்.  இருக்கும் சிலரும் ஜான்சி, குவாலியர் போன்ற அடுத்த நகரங்களை நோக்கிச் சென்று விட்டதாகவும் சொன்னார்.  ராம் ராஜா மந்திர் சிறப்பு பற்றியும் சொன்னார்.  சரி கோவிலையும் பார்த்து விடலாம் என்று சென்றபோது கோவில் மூடியிருந்தது.  இரவு 08.30 மணிக்கு தான் திறப்பார்கள் என்று சொல்லவே அப்படியே நடந்து விட்டு திரும்பினோம். 

07.00 மணிக்கு நாங்கள் கண்ட ஒலியும்-ஒளியும் எப்படி இருந்தது என்பதை அடுத்த பகிர்வில் சொல்கிறேன். அதுவரை காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.


வியாழன், 17 நவம்பர், 2011

என்ன விலை அழகே…


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறதுபகுதி 19]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18)


இப்போதெல்லாம் மூலிகைகளால் தயாரிக்கப்பட்ட அழகு சாதனங்களும், மருந்துகளும் நமக்கு கடைகளில் கிடைக்கின்றன. இவையெல்லாம் எப்படி தயாரிக்கப்படுகின்றன, இவற்றுக்கு என்ன மூலப் பொருள் என்று என்றாவது சிந்தித்துப் பார்த்திருப்போமா நாம்? இதற்கான உங்களின் பதில்"நிச்சயமாக இல்லை" என்பதாகத்தான் இருக்கும்.

இந்தியாவில் நிறைய மருந்துகள் வெளிநாட்டிலிருந்து தருவிக்கப்படுகிறது.   Herbal Products என்ற பெயரில் விற்கும் மருந்துகளை, வெளிநாட்டு நிறுவனங்களால் விற்கப்படும் பொருட்களையும், மருந்துகளையும் வாங்குபவர்கள் நம்மில் எத்தனை எத்தனை பேர்இவற்றுக்கெல்லாம் மூலப் பொருட்கள் எங்கிருந்து கிடைக்கின்றன?


நம் நாட்டில் நிறைய மூலப் பொருட்களை   தயார் செய்து அவற்றை வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்கிறோம்அந்த மூலப் பொருட்களைக் கொண்டு மருந்துகள், பொருட்கள் தயாரித்து அவற்றினை மீண்டும் இந்தியாவிற்கு கொண்டு வந்து விற்கிறார்கள்அதை நாமும் வாங்கிஎன்ன இருந்தாலும் வெளி நாட்டுக் காரன் வெளிநாட்டுக்காரன் தான்அவன் திறமையே திறமைஎன்று மெச்சிக் கொள்கிறோம்.

ஷிவ்புரி மாநிலத்தில் இப்படி மூலிகைகளிலிருந்து, மரங்களின் பட்டைகளிலிருந்து, பூக்களில் இருந்து என்று  இயற்கையாக நம் வனங்களில் கிடைக்கும் பலதரப்பட்ட பொருட்களை எடுத்து சுத்தப்படுத்தி வெளிநாட்டிற்கு ஏற்றுமதி செய்யும் ஒரு தொழிற்சாலையினை நாங்கள் பார்வையிட்டோம்.

இயற்கையாக நமக்குக் கிடைக்கும் பொருட்களை எடுத்து அவற்றினை எப்படி பதப்படுத்துகின்றனர், அதில் என்னென்ன விஞ்ஞான முறையில் கலந்து பொடிகள் செய்கிறார்கள் என்பதையெல்லாம் எங்களால் பார்க்க முடிந்ததுநம் நாடு சுதந்திரம் பெறுவதற்கு முன்பே ஆரம்பிக்கப்பட்ட இந்த தொழிற்சாலையில் நிறைய மூலிகைப் பொருட்கள் தயார் செய்து பல்வேறு நாடுகளுக்கு ஏற்றுமதி செய்கிறார்கள்.

இவர்களின் தயாரிப்பு பல மருந்துகளின், அழகுப் பொருட்களின் மூலப் பொருள்அஷ்வகந்தா, இஞ்சி, சீயக்காய், மேத்தி இன்னும் பலப்பல மூலிகை மரங்கள்/செடிகளின் வேர்கள், பழங்கள், மரப்பட்டைகள், இலைகள் என்று எல்லாவற்றிலிருந்தும் மருந்து செய்வதற்கான பொருட்களை பிரித்தெடுத்து, அவற்றை பொடியாக்குகிறார்கள்

அவற்றையெல்லாம் பார்த்த போதுஇந்தியாவில் இத்தனை வளங்கள் இருக்கும் போது அவற்றை வைத்து மருந்துகளை நாமே தயாரிக்கலாமே, ஏன் வெளிநாட்டிற்கு அனுப்ப வேண்டும்பிறகு அவர்களிடமிருந்து வாங்கவேண்டும்என்று எனக்கு மனதில் தோன்றியதுஅதற்கு பதிலும் உடனே தோன்றியது

நமக்கு என்றுமே வெளிநாட்டுப் பொருட்கள் மீது மோகம் அதிகம்ஒரு பொருள் நம் நாட்டிலேயே தயாரித்து கிடைத்தாலும் அது வெளிநாட்டில் தயாரித்தது என்றாலோ, வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்பட்டது என்றாலோ தான் அதற்கு என்ன விலையென்றாலும் கொடுத்து வாங்குகிறோம்

தொழிற்சாலையின் உள்ளே ஆங்காங்கே உள்ள பூச்செடிகளிலிருந்தும், இயற்கையான மூலிகைகளின் ஒருசேரக் கலந்திருக்கும் வாசமும் அங்கிருந்த மரங்களின் தயவால் காற்றின் மூலம் நாசியை வந்தடைகிறது

இந்த எண்ணங்களுடனே அந்த தொழிற்சாலையில் இருந்து வெளியே வந்து எங்களுடைய அடுத்த இலக்கானஓர்ச்சாஎனும் இடத்திற்கு வந்தோம்ஓர்ச்சா எனும் மிகவும் பழமையான நகரம், அங்கிருக்கும் கோட்டைகள், ராம்ராஜா கோவில், வித்தியாசமான ஒரு படையெடுப்பு போன்ற விஷயங்களை அடுத்து வரும் பதிவுகளில் நாம் காண இருக்கிறோம்காத்திருங்கள்….

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்.