வெள்ளி, 30 டிசம்பர், 2011

எங்கெங்கு காணினும் பூச்சியடா!


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-25]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23 24) 


ஒலி-ஒளிக் காட்சி நடந்து கொண்டு இருக்கும்போதே கால்களில் ஏதோ ஊறுவது போன்ற ஒரு உணர்வு. கொசுவாக இருக்கும் என்று நினைத்துக் கொண்டு கால்களை ஆட்டியபடியே எல்லோரும் பார்த்துக் கொண்டிருந்தோம். நிகழ்ச்சி முடிந்ததும் அங்கிருந்து வெளியேறினோம்.  ஊர் முழுவதும் ஓரிரு விளக்குகள் தவிர அனைத்தும் அணைக்கப்பட்டு இருக்கின்றது. 

உத்தேசமாய் இதுதான் பாதையென்று கருதி நடந்து வந்தோம்.  கோட்டையின் வாயிலில் ஒரு விளக்கு எரிந்து கொண்டிருந்தது.  அதைத் தாண்டும்போது எங்கள் அனைவரின் மேல் திடீரென ஒரு பயங்கரத் தாக்குதல்.  அந்த விளக்கை நோக்கி ஆயிரக்கணக்கில் பூச்சிகள் பறந்து கொண்டு இருக்கின்றன.  அதன் வழியில் செல்லும் எங்கள் மேலெல்லாம் விமானத் தாக்குதல் தான்.  தட்டுத் தடுமாறியபடி வந்து எங்கள் வாகனங்களை அடைந்தோம்.



ஊர் முழுக்க ஒரே இருட்டடிப்பு.  நாங்கள் தங்கியிருந்த பேத்வா ரிட்ரீட் [Betwa Retreat] கூட இருட்டில் மூழ்கியிருக்கிறது.  ஆங்காங்கே மின்மினி பூச்சிகள் போல் சில வெளிச்சம் குறைவாய்த் தரும் விளக்குகள்.  இந்த ஊரில் இருக்கும் பழைய கட்டிடங்கள் போலவே இங்கே இருக்கும் இந்த பூச்சிகள் பிரச்சனையும் மிகவும் புராதானமான ஒன்றாம்.

அதனால் அங்கே மாலை ஆனாலே இப்படி விளக்குகளை அணைத்து விட்டு இரவு 09.00 மணி ஆகக் காத்திருக்கிறார்கள்.  அரசும் இந்த பூச்சித் தொல்லையைத் தடுக்க ஒன்றுமே செய்யவில்லை போல.  நாங்கள் தங்குமிடம் வந்து சேரும்போது 08.00 மணி தான் ஆகியிருந்தது.  அறைக்குச் சென்று கதவைச் சாத்திக்கொண்டு குழல் விளக்குகளைப் போட்டால் கூட கதவு இடுக்குகள் வழியே பூச்சிகள் வந்து விடும் என தங்குமிடத்தின் நிர்வாகி எச்சரிக்கவே ஒரு மணி நேரம் நிலவொளி இருந்த ஒரு பலகணியில் இருந்து பேத்வா நதியைப் பார்த்தபடி அமர்ந்திருந்தோம். 

அப்போது எங்களுக்கென ஒரு கிராமிய நடன நிகழ்ச்சி இப்போது நடைபெறும் என்று அந்த நிர்வாகி சொன்னார்.  இரண்டு வயதான ஆண்கள் பாட, 10-12 வயதுடைய இளம்பெண் பாடலுக்கேற்ப புந்தேலா நகரத்தில் ஆடப்படும் கிராமிய நடனமாடினார்.  நிலவொளியில் பாடலும் பாடலுக்கேற்ற நடனமும் மனதை மயக்கியது.  நடனமாடிய பெண் எங்களில் சிலரையும் கூட நடனமாட அழைத்தார்.  அரை மணி நேரம் பாடலையும், நடனத்தையும் பார்த்து ரசித்த பிறகு அந்த கிராமிய கலைஞர்களுக்கு எங்களால் இயன்ற பண உதவி செய்தபின் இரவு உணவு தயாராகிவிடவே உள்ளே சென்றோம். 

நிறைய மின்விளக்குகள் இருந்தாலும், மெழுகுவர்த்தி ஒளியில் சில பெரிய உணவகங்களில் உணவு பரிமாறுவார்கள்.  அதுபோல் இங்கேயும் மின்விளக்குகள் இருந்தும் அதைப் பயன்படுத்த முடியாத நிலை.  மங்கிய ஒளியில், அதுவும் வாயின் உள்ளே செல்வது உணவா, பூச்சியா என்று தெரியாத நிலையில் இரண்டொரு சப்பாத்தியை விடுவிடுவென உள்ளே தள்ளிவிட்டு எழுந்தோம்.



ஒன்பது மணிக்கு மேலாகிவிட்டபடியால் இனி பூச்சிகள் தொல்லையிராது, நீங்கள் சென்று உங்கள் அறைகளில் ஓய்வெடுங்கள் நாளை காலை சீக்கிரம் கிளம்பலாம் என்று பயணம் ஏற்பாடு செய்த பட்நாகர் சொன்னார்.  நானும் என்னுடன் இந்த முழு பயணத்திலும் என்னறையில் தங்கிய கேரள நண்பர் பிரமோதும் அறைக்குச் சென்றோம்.  நாங்கள் அறையை விட்டு அகலும்போது எல்லா விளக்குகளையும் அணைத்து விட்டுச் சென்றதால் ஓரிரு பூச்சிகள் தான் குளியலறையில் இருந்தது.  அவற்றை தண்ணீர் விட்டு ஜலசமாதி செய்தோம். 

மறுநாள் காலை எழுந்தபோது தான் தெரிந்தது மற்ற அறைகளில் நடந்த கூத்துகள்.  அவர்கள் அறைகளில் விளக்குகளை அணைக்காமல் விட்டுவிட்டதால் அறை முழுக்க ஆயிரக்கணக்கில் பூச்சிகள்... தரை, படுக்கை, நாற்காலிகள், குளியலறை என்று எங்கெங்கு காணினும் பூச்சியடா!  இரவு முழுவதும் எல்லாவற்றையும் பெருக்கி, ஒரு மூலையில் குவித்து மொத்தமாய் ஹிட் அடித்து மயக்கமடையச் செய்து வாரி வெளியில் கொட்டியிருக்கிறார்கள்.  மொத்த அறையையும் De-bug செய்து முடிக்கவே இரவு இரண்டு மணி ஆகிவிட்டதாம். 

வெளியே ஒவ்வொரு விளக்குக் கம்பத்தின் கீழும் ஆயிரக்கணக்கில் செத்துக் கிடந்த பூச்சிகள்.  மேலும்  பூமியில் ஆங்காங்கே இருக்கும் சிறு துவாரங்களில் நிறைய பூச்சிகள் உயிருடன்…

நாங்களும், இன்னும் இரு நண்பர்களும் சீக்கிரமாகவே எழுந்து விட்டபடியால் தயாராகி வெளியே நகர்வலம் செய்து அப்படியே இங்கிருக்கும் சத்ரிகளைப் பார்க்கச் சென்றோம்.  அவை பற்றி அடுத்த பகிர்வில்…..

மீண்டும் சந்திப்போம்….

வெங்கட்
புது தில்லி.

டிஸ்கி-1: பூச்சியின் புகைப்படம் போட்டு உங்களை பயமுறுத்த விரும்பவில்லை :)

உங்கள் அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். 


திங்கள், 26 டிசம்பர், 2011

தடுப்பது மேல்.....

மகப்பேறு மருத்துவமனையின் வரவேற்பு அறையில் காத்திருந்தனர் அந்த தம்பதி.  அவர்களுக்கு முன் சென்றிருந்த பெண் வெளிவர எப்படியும் நேரம் எடுக்கும்.  அதற்குள் அந்தத் தம்பதியினரை கவனிப்போம். 

அழகாக அலங்காரம் செய்து, கன்னத்தில் திருஷ்டிப் பொட்டு வைத்து அழகிய உடை அணிந்திருந்த தன்   குழந்தையை “கண்ணே, மணியே, முத்தாரமே” என்றெல்லாம் கொஞ்சிக் கொண்டு இருந்தார் கணவன்.  மனைவியின் முகத்தில் நிறைய கவலை ரேகைகள், ஒருவித கலக்கமும் தெரிகிறது. 

உள்ளே சென்றிருந்த பெண் வெளியே வந்து விட்டார்.  அடுத்தது இவர்கள் தான் என்பதால் உள்ளே சென்ற அவர்களைத் தொடர்ந்து நாமும் செல்வது நாகரிகம் அல்ல! இருந்தாலும் கட்டுரைக்காக கவனிப்போம்... உள்ளே டாக்டருக்கும் அந்த தம்பதிக்கும் நடந்த உரையாடல்:-

டாக்டர்: ம்...சொல்லுங்க…


பெண்: எப்படிச் சொல்றதுன்னு தெரியல….  இது எங்களுடைய முதல் குழந்தை.  பிறந்து பதினோறு மாதம் தான் ஆகிறது.  இப்போது நான் திரும்பவும் கர்ப்பம்.  45 நாட்களுக்கு மேல் ஆகிவிட்டது.  அதற்குள் அடுத்த குழந்தை வேண்டாமென  நாங்கள் நினைக்கிறோம்.  முதல் குழந்தைக்கே ஒரு வயது ஆகாத நிலையில் இன்னுமொரு குழந்தை என்றால், என்னால் இருக்கும் குழந்தையையும் பார்த்துக்கொண்டு, என் உடலால் இன்னுமொரு பிரசவத்தினைத் தாங்க முடியுமா என்று புரியவில்லை.  அதனால் இந்த கர்ப்பத்தினைக் கலைக்கலாம் என முடிவெடுத்து உங்களிடம் வந்திருக்கிறோம்.


டாக்டர்:  சரி, வாம்மா, பார்க்கலாம்…  [சிறிது நேரத்திற்குப் பின்], "ம்ம்ம்…  கொஞ்சம் கஷ்டம் தான்.  உங்க பிரச்சனை ஒரு குழந்தை ஏற்கனவே இருக்கும்போது அதையும் பார்த்துக்கொண்டு இன்னுமொரு குழந்தையை வயிற்றுக்குள் வளர்த்து பெற முடியாது என்பதுதானே.  வயிற்றுக் குழந்தையை இப்போது ஒன்றும் செய்ய முடியாது, அதாவது அதை அழிக்க முடியாது.  வேண்டுமானால் ஒன்று செய்யலாம், ஏற்கனவே பிறந்த இந்த குழந்தையை வேண்டுமானால் அழித்து விடலாம். அது கொஞ்சம் சுலபம்... அப்புறம் நீங்கள் உங்கள் வயிற்றில் வளரும் குழந்தையை பிறந்த பின் பொறுமையாக வளர்க்கலாம் இல்லையா!”


தம்பதி:  என்ன டாக்டர் சொல்றீங்க! உங்களுக்கு என்ன ஆச்சு!  பிறந்த குழந்தையை, என் செல்லத்தை அழிக்க சொல்றீங்க!  மூளை குழம்பிப் போச்சா என்ன….


டாக்டர்:  உங்களுக்குப் பிறந்த குழந்தை வெளியே இருக்கு.  இப்ப கருவுற்றிருக்கும் குழந்தை வயிற்றுனுள் இருக்கிறது.  வித்தியாசம் வேறொன்றும் இல்லையே.  அதற்கும் வளர்ச்சி இருக்கு.  அதை அழிக்கணும்னு  சொன்னா எப்படி இருக்கும்னு பாருங்க!  ஒரு குழந்தை வயிற்றுக்குள் எப்படி எல்லாம் வளருதுன்னு உங்களுக்குத் தெரியுமா… இந்த காணொளியைப் பாருங்க, புரியும்.

”இந்தக் குழந்தை உருவாகக் காரணம் நீங்க இரண்டும் பேரும் தானே.  அதை இப்ப நீங்களே அழிக்கணும்னு சொன்னா எப்படி…  வரு முன் காத்திடாமல், வந்த பின்பு இப்படி அழிக்கணும்னு வரீங்களே….  எத்தனையோ வழிமுறைகள் இருக்கும் இந்தக் காலத்தில் இப்படி இருக்கக் கூடாது நீங்க.  அதை புரிய வைக்கதான் உங்கள் கிட்ட அப்படி பேசினேன். 

மனதில் ஒரு தெளிவுடன் தம்பதியினர் வெளியேறினர் மகப்பேறு மருத்துவமனையிலிருந்து….  நாமும் தான். 

என்ன டாக்டர் சொல்வது சரிதானே!  வேண்டாம் எனில் வருமுன் தடுப்பது தானே நல்லது! வந்தபின் அழிக்க யோசிப்பது, கொலைக்குச் சமம்…. 

மீண்டும் சந்திப்போம்…

நட்புடன்

வெங்கட்.

டிஸ்கி-1:  இது முகப் புத்தகத்தில் ஆங்கிலத்தில் வந்த ஒரு செய்தியைத் தமிழ்ப்படுத்தி, கொஞ்சம் விஷயங்கள் சேர்த்து எழுதியது. 

டிஸ்கி-2: இந்த வருடத்தின் நூறாவது பதிவு!

வெள்ளி, 23 டிசம்பர், 2011

டவுசர் பாண்டி ...


[மனச்சுரங்கத்திலிருந்து…]

நெய்வேலி நினைவுகளைப் பற்றி "மனச்சுரங்கத்திலிருந்து" பக்கங்களில் அவ்வப்போது பகிர்ந்து வருகிறேன். எங்கள் வீட்டிலிருந்த பல மரங்கள் பற்றியும் அதில் இருந்து கிடைத்த காய்-கனிகள் பற்றியெல்லாம் சில பதிவுகளில் எழுதியிருக்கிறேன்.  இந்தப் பகிர்வில் நாவல் பழம் பறிக்கப்போய் நடந்த அமர்க்களங்களைப் பற்றி சில சுவையான விவரங்களை உங்களுடன் பகிர்ந்துகொள்ளப் போகிறேன்.

எங்கள் வீட்டில் மூன்று பேர் – நான், அக்கா, தங்கை.  இடது பக்க வீட்டில் [வலப்பக்க வீட்டில் இருந்தது டிரைவரூட்டம்மா] ஒரு மலையாளி.  அவர்களுக்கு மூன்று குழந்தைகள் – பிரசாத், ஒரு அக்கா மற்றும் முரளி. அவர்களுக்கு பக்கத்து வீட்டில் ஒரே ஒரு அக்கா. ஆக மொத்தம் ஏழு பேர்.  எங்களோட எல்லா விஷமமும் அரங்கேறுவது எங்கள் தோட்டங்களில் தான். 



எங்கள் வீட்டிலும், முரளி வீட்டிலும் பல மரங்கள் இருந்தாலும், நாவல் பழ மரம் மட்டும் மூன்றாவதாக  இருக்கும் அக்கா வீட்டில் தான் இருந்தது.  ஒரு நாவல் பழ சீசனில் எங்கள் எழுவர் படை அந்த நாவல் மரத்தின் அருகே முற்றுகையிட்டது.  கீழே விழுந்திருந்த பழங்களை எல்லாம் எடுத்துப் பார்த்தால் ஆங்காங்கே அடிபட்டு தூசி படிந்திருந்தது. அவற்றை உண்ண மனசு இடம் தரவில்லைஎப்படித் தரும், மேலே மரம் முழுவதும் பெரிய பெரிய முழு நாவல் பழங்கள் எங்களைவா, வாஎன்று அழைக்கும் போது?

எங்கள் ஏழு பேரில் – “டவுசர் பாண்டி” யாக இருந்த நான், பிரசாத், முரளி மூன்று பேருமே மரம் ஏறுவது என்றும் நாவல் பழங்களைப் பறித்து ட்ரவுசர் பாக்கெட்டில் போட்டுக் கொண்டு கீழே இறங்கி வந்து எல்லோரும் பகிர்ந்து உண்ணுவது என்றும் எழுவர் படையில் – பெரும்பான்மையாக இருந்த மகளிர் அணி முடிவு செய்தது.   


சரி என்று நாங்கள் மூவரும் நாவல் மரத்தில் ஏறினோம். அணில், பறவைகள் கடிக்காமல் முழுமையாக இருந்த நாவல் பழங்களைப் பறித்து பாக்கெட்டில் போட்டுக் கொள்ள ஆரம்பித்தோம். இரண்டிரண்டு பாக்கெட்டுகள் நிரம்பி வழியும் அளவுக்கு எடுத்து கீழே இறங்க ஆயத்தமாகும்போது தான் அந்த எதிர்பாராத நிகழ்ச்சி... 

கீழே இருந்து அண்ணாந்து பார்த்தபடி எங்கள் மூவரையும் உற்சாகப்படுத்திக் கொண்டு இருந்த மகளிர் அணி திடீரென அலற ஆரம்பித்தது.  ”டேய் அங்க பாரு, மரத்துல பாம்பு…!” என அலறல் சத்தம் கேட்ட உடனே நானும் பிரசாத்தும் சரசரவென பாம்பை விட வேகமாக இறங்க ஆரம்பிக்க, முரளியோ "ஆ... பாம்பா?" என்று  பயத்தில் அலறியபடியே பூமியில் இருந்து பனிரெண்டு அடி மேலேயே இரண்டு கையையும் விட்டு அங்கிருந்து அப்படியே கீழே விழ அப்போது ஆரம்பித்தது பிரச்சனை.

கீழே விழுந்தாலும் முரளி எழுந்து எங்களுடன் ஓடி வர, அதற்குள் எங்கள் அம்மாக்கள் வீட்டிலிருந்து மகளிர் அணி போட்ட சத்தத்தில் ஓடி வர, பாம்பு விஷயம் தெரிந்தது மட்டுமல்லாது, முரளி கீழே விழுந்தது முதல் ஆதியோடு அந்தம் வரை எல்லா விஷயமும் கேட்டு – யார் யாரை அடிக்கிறோம் என்பது கூடத் தெரியாமல் அடித்துக் கொண்டு இருந்தார்கள்.  முரளி கீழே விழுந்ததில் கூட அவ்வளவு அடிபட்டிருக்காது – அவன் அம்மா அடித்ததில் தான் நிறைய அடிபட்டு இருக்குமோ என்று எங்களுக்கு தோன்றும் அளவுக்கு அடி... எங்களுக்கும் தான்.

இத்தனை நடந்தாலும், மகளிர் அணி காரியத்தில் கண்ணாய் இருந்தார்கள் – எங்களைப் பார்த்து ஜாடையாகக் கேட்டுக் கொண்டு இருந்தனர் – பாக்கெட்டில் இருக்கும் நாவல் பழம் பத்திரம் தானே!  நாங்களும் அடி வாங்கியபடியே பதில் கொடுத்துக் கொண்டு இருந்தோம்.  பத்திரமாக இருக்கு!

அடித்து ஓய்ந்த பின் அவரவர் உள்ளே செல்ல, மகளிர் அணி காரியத்தில் இறங்கிற்று. எல்லா நாவல் பழங்களையும் தண்ணீரில் சுத்தம் செய்து, உப்பு,மிளகாய்த்தூள் தூவி கலக்கி, ஏழு பங்கு பிரித்தனர். முரளிக்கு மட்டும் கொஞ்சம் அதிகம் -- பாவம், கீழே விழுந்ததால்! எல்லோருமாக நாவல் பழங்களைச் சுவைத்தோம்.

குப்புற விழுந்தாலும் நாவல் பழத்தை சுவைக்காமல் விடுவோமா என்ன... தில்லியில் நாவல் பழத்தை எப்போது பார்த்தாலும் அந்த நினைவுகள் வந்து கொண்டேயிருக்கும்.  உடனே பக்கத்து வீட்டு முரளியை அலைபேசியில் அழைத்து விடுவேன்.  ஏனெனில் முரளியும் தில்லியில் தான் தாமசம் கேட்டோ! [மலையாளம்…!]

மீண்டும் ”மனச்சுரங்கத்திலிருந்து…” பகுதியில் வேறொரு நினைவுடன் சந்திக்கிறேன்…

நட்புடன்

வெங்கட்.


திங்கள், 19 டிசம்பர், 2011

ஓவியமாய் ஒரு மாளிகை – ராஜ்மஹால்


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-24]
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22 23) 



சென்ற பதிவான ராம் ராஜா மந்திர்-ல் பார்த்த கிருஷ்ண பக்தர் ராஜா மதுகர் ஷா அவர்களால் கட்டப்பட்ட அழகிய மாளிகை தான் ராஜ்மஹால்.  இந்த மாளிகையில் ”சுவர் சார்ந்த சித்திரங்கள்” எனப்படும் mural சித்திரங்கள் நிறைய இருக்கின்றன.  அவற்றில் பல இப்போதும் பொலிவுடன் காணப்படுகின்றன. 

என்னுடைய எழுத்தில் சொல்வதை விட ஓவியங்கள் சொல்வது அதிகம்.  அதனால் இந்த பகிர்வில் ராஜ்மஹாலில் இருந்த சுவர் சார்ந்த சித்திரங்களை நான் எடுத்த புகைப்படங்களை கீழே கொடுத்துள்ளேன் ஒரு காணொளியாக. 



இந்த மஹாலில் நான் பார்த்து அதிசயித்த இன்னும் ஒரு விஷயம் அங்கே இருந்த குளிர்சாதன வசதி.  ஜன்னல்கள் இல்லாத ஒரு அறையில் மேலிருந்து வரும் ஒரு பெரிய இடைவெளி வழியாக அப்படி ஒரு குளிர்ந்த காற்று வருகிறது.  ஒன்றரை டன் ஏ.சி. கூட அந்த அளவுக்குக் குளிர்ந்த காற்று தருமா என்பது சந்தேகம்.  அந்த காலத்திலேயே நிறைய முன்னேறியிருக்கிறார்கள் என்பதை நினைக்கும்போது மனதில் மகிழ்ச்சி.    




ராஜ்மஹால் முழுவதையும் தரிசித்த பிறகு ஓர்ச்சா நதியில் ராஃப்டிங் செய்ய ஏற்பாடு செய்திருந்தார்கள்.  ஆனால் எங்களது துரதிர்ஷடம் பேத்வா நதியின் நடுவே இருக்கும் ஒரு நான்கு அடி அகலப் பாதை மூழ்கும் அளவுக்கு தண்ணீர் கரைபுரண்டு ஓடிக்கொண்டிருந்தது.  அதனால் இப்படி இருக்கும் போது ராஃப்டிங் செய்வது அவ்வளவு உகந்ததல்ல, ஆபத்து அதிகம் என்று சொல்லி விட்டார்கள் L

இந்த பகுதியில் இருந்த ஓவியமான மாளிகை பற்றிய செய்திகள் படித்து மகிழ்ந்திருப்பீர்கள் என நினைக்கிறேன்.  அடுத்த பகுதியில் ஒரு படையெடுப்பு பற்றி எழுத இருக்கிறேன்.  காத்திருங்கள்.

மீண்டும் சந்திப்போம்….

நட்புடன்

வெங்கட்
புது தில்லி



சனி, 10 டிசம்பர், 2011

ராம் ராஜா மந்திர்:


[மத்தியப்பிரதேசம் அழைக்கிறது…. பகுதி-23] 
(மத்தியப்பிரதேசம் அழைக்கிறது தொடரின் பகுதி  1   2   3   4   5     7     9   10   11   12 13 14 15 16 17 18 19 20 21 22) 


சாதாரணமான கணவன் – மனைவிக்குள் மட்டும்தான் கருத்து வேறுபாடு இருக்குமா?    சிவபெருமானுக்கும் பார்வதிக்குமே கருத்து வேறுபாடுகள் இருந்தது பற்றி நாமெல்லாம் திருவிளையாடல் படத்தில் பார்த்திருக்கிறோம் இல்லையா? அப்படி இருக்கும்போது ராஜா – ராணி மட்டும் விதிவிலக்கா என்ன?  அப்படி ஒரு ராஜா-ராணிக்குள் ஏற்பட்ட கருத்து வேறுபாடின் காரணமாய் தோன்றியது தான் இந்த ராம் ராஜா மந்திர்.

சென்ற பகுதியில் புந்தேலா ராஜாங்கம் பற்றி சொல்லியிருந்தேன்.  அந்த ராஜாங்கத்தில் பதினாறாம் நூற்றாண்டில் இருந்த ஒரு ராஜா மதுகர் ஷா.  தீவிரமான கிருஷ்ண பக்தர்.  வருடா வருடம் மதுரா சென்று கிருஷ்ணபகவானை தரிசிப்பதை வழக்கமாகக் கொண்டு இருந்தவர்.  எது தவறினாலும் தவறும் ராஜா மதுகர் ஷா மதுரா செல்வது மட்டும் தவறாது.
ராணி கணேஷ் குவா[ன்]ரி ராம பக்தை.  வருடம் ஒருமுறையாவது அயோத்யா செல்ல வேண்டும் என நினைத்து அதைக் கடைப்பிடித்தும் வருபவர்.   மதுரா செல்வதை விட அயோத்யா செல்வதையே விரும்புபவரும் கூட. 

இப்படி ராஜா-ராணி இருவரும் இரு துருவங்களாக இருக்க, ஒரு முறை ராஜா மதுரா கிளம்ப யத்தனிக்கும்போது ராணியையும் தன்னுடன் வரும்படி அழைக்கிறார்.  எப்போதும் போலவே ராணி மறுத்து தான் ராஜாவுடன் மதுரா வர விரும்பவில்லையென்றும் அயோத்யா செல்ல விரும்புவதாகவும் சொல்கிறார். 

ராஜாவுக்கு பயங்கர கோபம். அவருடைய வார்த்தையை வேறு யாராவது கேட்காமல் இருந்திருந்தால் நிச்சயம் சிரச்சேதம் செய்யச் சொல்லியிருப்பார்.  ஆனால் சொன்னது பட்டத்து ராணியாயிற்றே.  இருந்தாலும் எதாவது தண்டனை தரவேண்டும் என்று நினைத்தவர் ”நான் மதுரா செல்கிறேன்.  நீ அயோத்யா செல்! திரும்ப வரவேண்டும் என நினைத்தால் உன்னுடைய ஆத்ம தெய்வம் ராமனுடன் திரும்பி வா!” என்று கோபமாக சொல்லிவிட்டு மதுரா சென்று விட்டார்.

ராணிக்கு தனது ராமனின் மேல் ஆழ்ந்த நம்பிக்கை. நிச்சயம் தன்னுடன் அவர் ஓர்ச்சா வந்து விடுவார் என்ற நம்பிக்கையில் தோழிகள் புடை சூழ தன்னுடைய மாளிகையிலிருந்து ரதத்தில் கிளம்பி அயோத்யா வந்து சேருகிறார்.  அங்கே ராமனை தரிசித்து தன்னுடன் ஓர்ச்சா வந்துவிடும்படி சொல்ல, அதற்கு பதிலேதுமில்லை.  ஆனாலும் துவண்டு போய்விடாமல் அயோத்யா நகரின் சரயு நதிக்கரையில் ராமனை நோக்கி தவம் இருக்க ஆரம்பித்து விட்டார்.

நாட்கள் ஓடின .  ராமனின் தரிசனம் கிடைத்தபாடில்லை. நீண்ட காலம் தவமிருந்தும் ராமன் பிரத்யட்சமாய் தரிசனம் தராததால் தன்னுடைய உயிரை மாய்த்துக்கொள்ள முடிவு செய்கிறார் ராணி கணேஷ் குவா[ன்]ரி.  ஆர்ப்பரித்து ஓடிக்கொண்டிருக்கும் சரயு நதியில் பாய்ந்து விட எத்தனிக்கும்போது ராமன் ஒரு சிறுவன் வேடம்பூண்டு ராணியின் முன் தரிசனம் தருகிறார். 

தரிசனம் தந்ததுடன் நில்லாமல் சிறுவன் உருவத்திலேயே ஓர்ச்சாவில் கோவில் கொள்ளவும் சம்மதிக்கிறார் – ஒரு சிறிய நிபந்தனையோடு.  அது – 'ஓர்ச்சா சென்றபின் எங்கு முதலில் அமர்கிறேனோ  அங்கேயே கோவில் கொள்வேன்' என்பது தான்.  ராமன் தன்னுடன் வரச் சம்மதம் சொன்னவுடன் ராஜா மதுகர் ஷாவிற்கு முன்தகவல் அனுப்பி ராம்ராஜாவிற்கான கோவிலை தயார் செய்யச் சொல்கிறார்.  ராஜாவும் “சதுர்புஜ் மந்திர்” என்ற கோவிலை நிர்மாணிக்கிறார். 

ராணி கணேஷ் குவா[ன்]ரி ஓர்ச்சா நகரத்தினை வந்தடையும் போது சதுர்புஜ் மந்திரில் இன்னும் ஒரு நாள் வேலை பாக்கி இருந்திருக்கிறது.  ஆகவே ராணி தன்னுடைய அரண்மனையிலேயே சிறுவன் ராமனை உட்கார வைக்கிறார் – அவரின் நிபந்தனையை மறந்து. அடுத்த நாள் சதுர்புஜ் மந்திர் தயாராகிவிடவே அவரை அங்கே பிரதிஷ்டை செய்ய நினைக்க, சிறுவன் ராமனை அசைக்கவே முடியவில்லை.

அதனால் தன்னுடைய அரண்மனையையே ராமனுக்கு ”ராம்ராஜா மந்திர்” என்ற கோவிலாக்கி விட்டு வேறு மாளிகைக்குக் குடியேறுகிறார் ராணி.  இன்றைக்கு இந்த ராம் ராஜா மந்திர் மத்தியப் பிரதேசத்தின் டிகம்கர் மாநிலத்தில் உள்ள முக்கியமான கோவில்.  சுற்றுப்புறத்தில் இருக்கும் அத்தனை கிராமங்களிலும் இருந்து சாரிசாரியாக வண்டி கட்டிக்கொண்டு வருகிறார்கள்.  ஓர்ச்சாவின் பேத்வா நதியில் நீராடி ராம்ராஜாவினை தரிசித்து அவன் அருள் பெற்றுச் செல்கிறார்கள். நீங்களும் இந்தப் பதிவின் மூலம் ராம்ராஜா அருள் பெறுவீர்களாக!

மீண்டும் ஒரு ஓவியப் பகிர்வில் சந்திப்போம்.

நட்புடன்

வெங்கட்