புதன், 23 மார்ச், 2011

ஃபட்-ஃபட்டியா!
தலைநகர் தில்லிக்கு 10-15 வருடங்களுக்கு முன் வந்திருந்த நண்பர்களுக்கு இந்த ”ஃபட்-ஃபட்டியா” என்பது என்ன என்று தெரிந்திருக்கும்! மற்றவர்களுக்கு இது தெரிந்திருக்க வாய்ப்பில்லை! இதில் பயணம் செய்வது ஒரு சுகானுபவம்!

தில்லி மற்றும் மற்ற வட இந்திய நகரங்களில் “ஜுஹாட்” [Jugaad] என்ற வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பார்கள். எதற்கும் ஒரு மாற்று ஏற்பாடு செய்வது ஜுஹாட். ஆங்கிலேயர்கள் இந்தியாவிற்கு சுதந்திரம் தந்துவிட்டு தமது நாட்டுக்குச் செல்லும் முன்னர் அவர்கள் வைத்திருந்த ஹார்லே-டேவிட்சன் வாகனங்களை கிடைத்த விலைக்கு விற்றுச் சென்றுவிட்டனர். அப்போதைய இந்தியாவில் இருந்த போக்குவரத்துப் பற்றாக்குறையைச் சமாளிக்க இங்கிருந்த சர்தார்ஜிகள் இந்த இரு சக்கர வாகனங்களை வாங்கி தேவையான மாற்றங்கள் செய்து, பயணிகள் ஏற்றிச் செல்ல வசதியாக உருவாக்கிய ஜுஹாட் வண்டியே இந்த ஃபட்-ஃபட்டியா.

டீசலில் ஓடக்கூடிய இந்த வண்டியை இயக்க, ஜெனரேட்டர்கள் போல, அதற்கான கயிற்றை ஐந்தாறு முறை மெதுவாக இழுத்து, பின்னர் வேகமாக ஒரு இழு இழுத்தவுடன், “ஃபட்-ஃபட்-ஃபட்” என்ற சத்தத்துடன் இயங்க ஆரம்பிக்கும் இந்த வண்டியின் இன்ஜின். அதனால் இந்த வண்டியின் பெயர் ஃபட்-ஃபட்டியா! இன்ஜின் வேலை செய்யத் துவங்கியவுடன் அந்த கயிற்றினை அழகாய் சுறுக்குப் போட்டு வண்டியில் கட்டி விடுவார்கள் – அடுத்த முறை இழுக்க வேண்டுமே!

தில்லியின் பிரதான பகுதியான கன்னாட் ப்ளேஸில் இருந்து சாந்த்னி சௌக் செல்லும் வண்டிகளும், ஷிவாஜி ஸ்டேடியத்திலிருந்து கரோல் பாக் செல்லவும், செங்கோட்டையிலிருந்து காந்தி நகர் செல்வதற்கும் இந்த வண்டிகள் பயன்பட்டன. கட்டணம் 0.50 பைசா, 1 ரூபாய், 2 ரூபாய் என அதிகரித்து கடைசியாக 5 ரூபாய் வரை வசூலித்துக் கொண்டிருந்தனர். இதில் 10 லிருந்து 12 பேர் வரை பயணம் செய்யலாம்!

வண்டியில் இருந்து வரும் ஃபட்-ஃபட் சத்தம் ஏரியா முழுதும் கேட்கும். இந்த ஒலி எப்படி இருக்கும் என்றால், என்ஃபீல்ட் புல்லெட் சாதாரணமாக ஓடினால் வரும் சத்தத்தின் மூன்று-நான்கு மடங்கு எப்படி இருக்குமோ அப்படி. வண்டியில் பயணம் செய்யும்போது ராஜ பவனி வருவது போல ஒரு உணர்வு வரும்! மேலே கூரையிருந்தாலும், இரண்டு பக்கங்களிலும் திறந்திருப்பதால் காற்றாட பயணிக்கலாம். எதிர்ப்புறமாய் வீசும் காற்று முகத்தில் அறைய ஓட்டுனரின் பின்னே உட்கார்ந்து இந்த வண்டியில் செல்வது எனக்கு மிகவும் பிடித்த ஒரு விஷயம்.

இந்த வண்டியை ஓட்டியவர்களில் பெரும்பாலானவர்கள் சர்தார்ஜிகள். சுற்றுப்புறச் சூழல் மாசுபடுகிறது என்று தில்லியில் இது போன்ற வண்டிகளுக்குத் தடை விதித்து சுத்தமாக அப்புறப்படுத்தியபின் சாதாரண மஹிந்த்ரா ஜீப்புகள் ”ஃபட்-ஃபட் சேவா” என்ற பெயரில் இயங்கினாலும் பழைய ஹார்லே-டேவிட்சன் வண்டியில் போவது போன்ற ஆனந்தம் இதில் கிடைப்பதில்லை. ஒரு சில வண்டிகள் பக்கத்து நகரங்களுக்குச் சென்றுவிட்டாலும், பெரும்பாலானவை ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டு பயன்பாடு இல்லாமல் துருப்பிடித்து காயலான் கடைகளுக்குச் சென்று விட்டது என்பதில் எனக்கு மிக மிக வருத்தம்!

“பழையன கழிதலும் புதியன புகுதலும் கால வகையினானே” என்பது உண்மையாக இருந்தாலும், இது  போன்ற சிலவற்றை மறக்க முடிவதில்லை!

வேறு ஒரு பதிவில் மீண்டும் சந்திப்போம்.

வெங்கட்.திங்கள், 21 மார்ச், 2011

கிடைத்தாள் கனவு ராணி

தமிழகத்தில் ஏப்ரல் 13 அன்று தேர்தல் நடக்க இருக்கிறது. இந்த நேரத்தில் கிடைக்கப் பெறும் வாக்காளர் அடையாள அட்டைகளில் ஏற்படும் குளறுபடிகள்தான் எல்லோர் நினைவுக்கும் வரும். எனக்கும் வந்தது – பெறுவதில் அல்ல – வழங்குவதில். முன்பே ஒரு பதிவில் வாக்காளர் அடையாள அட்டை வழங்குவதில் உள்ள தொல்லைகள் பற்றி எழுதி இருந்தேன். அதன் தொடர்ச்சியாக இந்த பதிவு.

நான் கொண்டு சேர்க்க வேண்டிய வாக்காளர் அட்டையில் ஒரு பதினெட்டு வயது பெண்ணின் அட்டையும் ஒன்று. அந்த பெண்ணின் பெயர் “சப்னா ராணி”. ஹிந்தியில் ”சப்னா” என்றால் கனவு என்று அர்த்தம். அந்த பெண்ணின் வாக்காளர் அட்டையில் அவள் பெயர், தந்தை பெயர், வயது, மற்றும் முகவரி இருக்கும். அதை வைத்து, அவளது வீட்டில் கொண்டு கொடுக்க வேண்டும்.

ப்ப்பூ! நமக்கு இது ஜூஜூபி வேலை. நேரா அந்த வீட்டுக்கு போய், கனவு ராணியை பார்த்து கொடுத்துட்டு வந்துடுவோம்னு கிளம்பினேன். முகவரி மதர் தெரசா க்ரெசண்ட், புது தில்லி என்று அறைகுறையாகவே கொடுத்திருந்தது. கூகிள் ஆண்டவரின் மேப்பில் தேடினால் மதர் தெரசா க்ரெசண்ட் என்பது தீன் மூர்த்தி பவனிலிருந்து ஆரம்பித்து டாக்டர் ராம் மனோகர் மருத்துவ நிலையம் வரை ராஷ்டிரபதி பவன் பின்னாலே 3-4 கிலோ மீட்டர் செல்லக்கூடிய அரைவட்டத்தில் ஒரு சாலை என்று தெரிந்தது.

அந்த சாலையில் மத்திய மந்திரிகள் மற்றும் நாடாளு மன்ற உறுப்பினர்கள் வசிக்கும் வீடுகளே இருக்கும். நான் தேடும் கனவு ராணி எங்கே இருக்காங்க என்பதே தெரியவில்லை. சில வீடுகளின் நடுவில் சின்னஞ் சிறிய வீடுகளும் இருந்தது. இரண்டு மூன்று வீடுகளில் சென்று கேட்டபோது ”போ போ, இங்க சப்னா இல்லை” என்று கழுத்தைப் பிடித்து தள்ளாத குறைதான்.

பாதி வீடுகளில் நாய் வகைகளில் எத்தனை வகை உண்டோ அவற்றில் ஏதோ ஒன்று, “ நீ ஏண்டா எங்க வீட்டுக்குள்ளே வர்ர, வந்தா குதறிடுவேன்” என்று என்னைப் பார்த்து சொல்வது போல இருந்தது. என்ன செய்வது என்று சிவனேன்னு நின்று கொண்டிருந்தபோது, எதிரே கடவுள் மாதிரி அந்த பீட் தபால்காரர் வந்து கொண்டிருந்தார். அவருக்கு ஒரு பெரிய நமஸ்தே போட்டு, “அண்ணாத்தே, இந்த போட்டாவில இருக்கற கனவு ராணி எங்க இருக்கா, கொஞ்சம் பார்த்து சொல்லுங்க” என்று கேட்டேன்.

கடைசியில் அவர் தான் எனக்கு சரியான வழியைக் காண்பித்துவிட்டு மேலுதவியாக கூடுதலாக ஒரு தகவலையும் சொல்லி விட்டு போனார். அது என்ன தகவல்னா – கொஞ்சம் பொறுங்க, அதை கடைசியில் சொல்றேன்.

நான் இருந்த இடத்தில் இருந்து ஒரு கிலோ மீட்டர் தூரத்தில் இருந்தது கனவு ராணியின் வீடு. " வந்தாள் மகாலக்ஷ்மியே " என்ற பாடல் ஸ்டைலில் "கிடைத்தாள் கனவு ராணியே" என்று மனதுக்குள் பாடிக்கொண்டே தில்லியில் நடந்த காமன்வெல்த் போட்டிகளுக்காக தோண்டிப் போடப்பட்டிருக்கும் குழிகளையும், சீரற்ற நடைபாதைகளையும் தாண்டி அந்த கட்டிடத்தின் அருகில் செல்லவே 15 நிமிடம் பிடித்தது.

அந்த கட்டிடத்தின் அருகில் சென்ற பிறகுதான் பார்த்தேன், நம்முடைய முன்னோர்கள் பலர் மரத்துக்கு மரம் தாவிக்கொண்டு இருந்தனர். கீழேயும் சிலர் விளையாடிக்கொண்டு இருந்தனர். அவர்களை ஒரு பயத்துடன் தாண்டும்போது ஒருவர் கிர்ர்… என்று குரல் கொடுக்க, நான் ஒரு அலறலுடன் அவரைத் தாண்டினேன்.

தபால்கார அண்ணாச்சி சொன்ன அடையாளங்கள் கொண்ட வீட்டின் ஒலிப்பானை அழுத்தியதும் தான் விபரீதம் தொடங்கியது. ”சப்னா ராணி” வருவதற்கு பதில் வீட்டிலிருந்து நான்கு-ஐந்து நாய்கள் குரைக்கும் சத்தம்தான் முதலில் வந்தது. பிறகு வந்த சப்னா ராணியின் பின்னால் ஒரு டாபர்மேன், ஒரு பொமரேனியன், ஒரு புல்டாக் என வகைக்கு ஒன்றாக ஐந்து நாய்கள் குலைத்தபடி வந்தன.

சிறிதாகத் திறந்த கதவு சந்து வழியே கைகள் நடுங்க வாக்காளர் அட்டையை அந்த கனவு ராணியின் கைகளில் திணித்துவிட்டு அங்கிருந்து “விடு ஜூட்!”.

"சரி சரி, அந்த தபால்கார அண்ணாச்சி என்ன சொன்னார்னு தானே கேட்கறீங்க?, 'அங்க நாய் இருக்கும்'- "ன்னு சொன்னாரு. சரி ஒரு நாய்தானே இருக்கும்னு போனா அங்கே ஒரு நாய் கூட்டமில்ல இருந்துச்சு!.

மீண்டும் சந்திப்போம்…

வெங்கட் நாகராஜ்

வியாழன், 17 மார்ச், 2011

அறுபத்தி ஆறு – தொண்ணூத்தி ஒன்பது [மனச் சுரங்கத்திலிருந்து]
நமது தாய் தந்தையருக்கு நம்மை வளர்ப்பதில் எவ்வளவு ஈடுபாடும் உழைப்பும் இருக்கிறதோ அதே அளவு உழைப்பும் ஈடுபாடும பள்ளி ஆசிரியர்களுக்கும் இருந்தது ஒரு காலத்தில். தங்களால் கற்பிக்கப் படும் பாடங்கள்/விஷயங்கள் மாணவனுக்கு புரிய வேண்டும், அவன் மனதில் ஆழப் பதிய வேண்டும் என்பதில் அவர்கள் அதிக அக்கறை எடுத்துக் கொண்டனர். அதனால் தானே தாய் தந்தைக்குப் பிறகு குருவிற்கு இடம் கொடுத்து இருக்கிறோம். அதன் பின்னர் தான் இறைவனே வருகிறார். அப்படிப்பட்ட ஒரு ஆசிரியரைப் பற்றியே இந்த பகிர்வு.

நான் ஒன்பது-பத்தாவது வகுப்புகள் படித்த போது எனக்கு ஆங்கிலம் சொல்லிக் கொடுத்த ஆசிரியர் BYS என்று சுருக்கமாய் அழைக்கப்பட்ட திரு B.Y. சுந்தரராஜன் அவர்கள். அவர் ஆங்கிலம் சொல்லிக் கொடுக்கும் விதமே அலாதியானது. அதிலும் ஆங்கில இலக்கணம் சொல்லிக்கொடுக்கும்போது அத்தனை பொறுமையாக எல்லா மாணவர்களுக்கும் புரியும்படி சொல்லிக் கொடுப்பார். நான் படித்தது தமிழ் வழிக் கல்வி என்பதால் ஆங்கிலத்தில் அது வரை எனக்குத் தகராறு தான். ஏதோ படித்துத் தேறிவிடுவேன். அவர் வகுப்பு எடுக்க ஆரம்பித்த பிறகுதான் எனக்கும் ஆங்கிலத்தில் ஒரு பிடிப்பு வந்தது என்று சொல்வேன்.

ஆங்கில இலக்கணத்தில் படிப்படியாக செய்ய வேண்டியதை அழகாய் சொல்லி எங்களுக்குப் புரிய வைப்பார். அப்படி Direct – Indirect Speech சொல்லிக் கொடுக்கும் போது அதற்கான முதல் படி– ”அறுபத்தி ஆறு – தொண்ணூத்தி ஒன்பதை நீக்குக” என்பது தான். “Inverted Comma” என்று ஆங்கிலத்தில் சொல்லாமல் இப்படித் தான் எங்களுக்குச் சொல்லிக் கொடுப்பார். இது போல விதவிதமான வகைகளில் எங்களுக்குப் புரியும்படி சொல்லிக் கொடுப்பதில் அவர் ஒரு வித்தகர்.

நெற்றி நிறைய விபூதி பூசி தலையில் சிறிய குடுமியுடன் மாணவர்களுக்கு அழகாய் பாடம் எடுத்த அவரிடம் நிறைய திறமைகள் இருந்தது. மிருதங்கம் நன்றாக வாசிப்பார். அதில் வித்வான் ஆக வேண்டும் என்ற ஆசையிருந்தும் குடும்பச் சூழ்நிலை காரணமாக ஆசிரியராக வந்தது பற்றி உள்ளுக்குள் வருத்தம் இருப்பினும், ஏற்றுக் கொண்ட பணியினைச் செவ்வனே செய்தவர். தான் ஆசைப்பட்டதை தனது மகன் மூலம் நிறைவேற்றிவிட்டார். ஆம் அவரது மகன் இன்று ஒரு பிரபல மிருதங்க வித்வான். பல பிரபல பாடகர்களுக்கு மிருதங்கம் வாசித்துக் கொண்டு இருக்கும் அவர் நெய்வேலி ஸ்கந்த சுப்ரமணியன்.

அப்படிப்பட்டவரிடம் இருந்த ஒரே கெட்ட பழக்கம் வாய் நிறைய கும்பகோணம் வெற்றிலை போடுவது மட்டுமே! கவுளி-கவுளியாய் வெற்றிலை போட்டு வாய் முழுவதும் அப்படி ஒரு சிவப்பு. அவர் பாடம் எடுக்கும்போது முதல் வரிசையில் அமரவே எல்லோரும் பயப்படுவார்கள். பயம் அவர் மேல் அல்ல – அவர் மாணவர்களின் வெள்ளைச் சட்டையில் வெற்றிலைச் சாற்றால் போடும் சிவப்பு புள்ளி கோலத்திற்குத் தான்! நான் முதல் வரிசையில் அமராத காரணத்தினால் என் சட்டை தப்பித்தது. ஆனால் அவர் சொல்லிக் கொடுத்த பாடங்கள் இன்றும் மனதில் நிற்கிறது.

பள்ளியில் படிக்கும்போது நாம் எந்த ஒரு ஆசிரியருக்கும் நன்றி சொல்லி இருக்க மாட்டோம்! இந்த பகிர்வு மூலம் அந்த சிறந்த ஆசிரியருக்கு எனது நன்றி கலந்த நமஸ்காரங்கள்.

மனச் சுரங்கத்திலிருந்து என்ற எனது பகிர்வுகளில் வேறு சில ஆசிரியர்கள் பற்றியும் அவ்வப்போது எழுத நினைத்திருக்கிறேன் – உங்கள் ஆதரவு கிடைக்கும் என்ற நம்பிக்கையில்.

மீண்டும் வேறு பதிவில் சந்திப்போம்!

வெங்கட் நாகராஜ்

திங்கள், 14 மார்ச், 2011

தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன்!

சில நாட்கள் முன்பு “"ரிஜப்சன்"-ன்னா என்னாபா?” என்ற பதிவில் தில்லிவாழ் தமிழர்களின் ரிசப்ஷன் பற்றி பிறகு எழுதுகிறேன் என்று சொல்லியிருந்தேன். இங்கே நடக்கும் அப்படிப்பட்ட ஒரு ரிசப்ஷனை உங்கள் கண்முன்னே கொண்டுவர முயற்சிக்கிறேன்.

தில்லியிலேயே பலகாலம் தங்கிவிட்ட தமிழர்கள் தனது பெண்ணோ, பையனோ கல்யாண வயதிற்கு வந்துவிட்டால் பெரும்பாலும் தில்லி வாழ் மணமகன்/மகளையே தேடுகின்றனர். அதற்கு அவர்கள் சொல்லும் காரணம் எங்களுக்கு தமிழகத்தின் பழக்கவழக்கங்கள் ஒத்து வராது என்பது தான்! என்னமோ பல தலைமுறைகளாக இங்கேயே தங்கி விட்டது போல் பேசுவார்கள். அப்படிப்பட்ட கல்யாணங்கள் பெரும்பாலும் தில்லியிலேயே நடந்து விடுவதால், சிலரை முதல் நாள் மாலை ரிசப்ஷனுக்கும் உறவினர்களை மட்டும் திருமணத்திற்கும் அழைப்பார்கள்.

நல்ல கோடையாக இருந்தாலும் உடல் சிலிர்க்கும் குளிராக இருந்தாலும் மணமகனுக்கு ஜிகுஜிகுவென ஜொலிக்கும் ஒரு ஷெர்வானி! மணமகளுக்கு ராஜஸ்தானிய/குஜராத்தி/பஞ்சாபி முறைப்படி ஒரு காக்ரா/சோளிதான் உடையாக இருக்கும்!

மாலை 07.00 மணிக்கு ஆரம்பிக்குமென்றால் 04.30 மணிக்கே மணப்பெண்ணும் மணமகனும் ஏதாவது ஒரு ப்யூட்டி பார்லர் சென்று பழைய வண்டியை டிங்கரிங் செய்து டெண்டிங், பெயிண்டிங் செய்வது போல முகத்தினை டிங்கரிங் செய்து வருவார்கள். கண்டிப்பாக மணப்பெண் தலைமுடியை கட்டியிருக்க மாட்டார் – தலைவிரி கோலம்தான்! அதிலும் ஆங்காங்கே சில பல முடிகளில் மட்டும் கோல்டன் அல்லது சில்வர் கலரிங் உண்டு. பின்னே வீடியோ எடுப்பதற்காக போடும் விளக்குகளில் பளபளக்க வேண்டாமா!

சரி மணப்பெண்/மணமகன் என்பதால் அவர்களை விட்டுவிடலாம். வீட்டில் உள்ள எல்லா பெண்மணிகளும் கண்டிப்பாக ப்யூட்டி பார்லருக்குப் போய் அட்லீஸ்ட் ஒரு ப்ளீச்சிங் செய்து, கொஞ்சம் அதிகமாகவே அலங்காரம் செய்துகொண்டு குறுக்கும் நெடுக்கும் நடந்து செல்வார்கள் – ஏதோ அவர்கள் தலைமையில்தான் அந்த நிகழ்ச்சியே நடப்பது போல!

நடுங்கும் குளிராக இருந்தாலும் பட்டுப் புடவை சரசரக்க வருவார்கள், ஆனால் ஸ்வெட்டர் எல்லாம் போட்டுக் கொள்ளாமல் தோளில் அங்கவஸ்த்ரம் போல ஒரு ஷாலை மடித்துத் தொங்க விட்டுக் கொள்வார்கள் – ஸ்வெட்டர் போட்டால் – போட்டிருக்கும் நகை நட்டெல்லாம் எப்படி அடுத்தவர் கண்களுக்குத் தெரியும் என்ற நியாயமான கவலைதான் – அப்படி குளிரில் ஏதாவது ஜூரம் வந்தால் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்ற எண்ணத்துடன் இருப்பார்கள்.

கண்டிப்பாக டிஸ்கோ ஜாக்கி உண்டு. கண்ணைப் பறிக்கும் விளக்குகள் அங்கும் இங்கும் ஒளியைச் சிதற, 10 X 10 அளவில் ஒரு பெரிய தரைமேடை இருக்கும். அங்கே இருக்கும் டிஸ்கோ ஜாக்கி புதிய புதிய பஞ்சாபி பாட்டுகளையும், ஹிந்தி மொழி சினிமா பாடல்களையும் போட கண் மண் தெரியாமல் ஆட வேண்டும்! பாடல் வரிகள் கண்டிப்பாகப் புரியாது – அதிகமான இரைச்சலான இசையில் கை கால் சுளுக்கிக் கொண்டது போல ஆட்டிக்கொண்டு இருப்பார்கள். தமிழ்ப் பாட்டுக்கு – டப்பாங்குத்தாக இருந்தாலும் கண்டிப்பாக “நோ நோ” தான் – ”மதராஸி கானா மத் லகாவ் யார்!” என்று சுத்தத் தமிழன் ஒருவர் அலறுவார்!

அதுவும் கடந்த மூன்று-நான்கு மாதங்களில் நான் சென்ற சில ரிசப்ஷன்களில் “ஷீலா, ஷீலா கி ஜவானி!” மற்றும் “முன்னி பத்நாம் ஹுயி டார்லிங் தேரேலியே” போன்ற கருத்தாழமிக்க பாடல்களுக்கு ஏதோ தாங்கள் ஜென்மம் எடுத்ததற்கான பலனே இதுதான் என்பது போல ஆண்களும் பெண்களும் நடனம் ஆடுவதை கண்டிருக்கிறேன்.

தமிழர்களின் சிறப்புச் சிற்றுண்டியான இட்லி, வடை, தோசை போன்றவை இருந்தாலும், பெரும்பாலும் நம் ஆட்கள் நான், சப்பாத்தி என்று பிய்த்துப் பிராண்டிக்கொண்டு இருப்பார்கள்! இட்லி, வடை தோசை போன்றவற்றை வட இந்தியர்கள் மட்டுமே ஒரு கட்டு கட்டுவார்கள் – இரண்டு இட்லி, ஒரு வடைக்கு அரை பக்கெட் சாம்பாருடன்!

ரிசப்ஷன் ஒரு பக்கத்தில் நடந்து கொண்டிருக்க – இன்னொரு பக்கத்தில் கண்டிப்பாக தீர்த்தவாரி உண்டு. அப்படி தீர்த்தவாரி கண்டவர்கள் டோல் மேளத்திற்கு ஆடுவது போல ஆடிக்கொண்டு இருப்பார்கள்!

இப்படியெல்லாம் நடக்கும் தலைநகர தமிழரின் ரிசப்ஷனுக்கு எனக்கு அழைப்பு வந்தாலே வேறு வழியில்லாமல் மனதுக்குள் நடுக்கத்துடன் தான் செல்கிறேன்!

தேவையற்ற ஒரு ஆடம்பரமாக ரிசப்ஷனுக்கு என்று அனாவசியமான செலவுகள் செய்வதற்கு பதில் ஏதாவது ஒரு அனாதை ஆசிரமத்திற்கோ அல்லது ஏழைக் குழந்தைகளின் படிப்புக்காகவோ உதவி செய்தால் நன்றாக இருக்கும் என்பது எனது கருத்து! இதில் உங்களுக்கும் ஒத்த கருத்து இருக்கும் என நினைக்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போம்!

வெங்கட் நாகராஜ்புதன், 9 மார்ச், 2011

பாம்பு பீ[பே]தி!


நெய்வேலியில் இருந்த போது எங்கள் வீட்டைச் சுற்றி மரம், செடி, கொடிகள் இருந்ததால் நிறைய ஜந்துக்களை நாங்கள் பார்த்திருக்கிறோம். தென்னை மர வண்டிலிருந்து, தேள், பூரான், போன்ற எல்லாமும் தைரியமாய் வளைய வரும். அவ்வப்போது பாம்புகளும் எங்கள் கண்ணில் தென்படும். நெய்வேலியிலிருந்த பெரும்பாலான தனி வீடுகளுக்கு இது பொருந்தும்.

“பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்”னு சொல்லுவாங்க. ஒரு பெரிய படையே நடுங்கும்போது நாமெல்லாம் எம்மாத்திரம்? ஒரு முறை எனது அம்மாவின் அத்தை, இரவு எல்லா வேலையையும் முடித்து விட்டு வந்து பார்த்தால், தூங்கிக்கொண்டிருக்கும் எனது தங்கையின் தலைமாட்டில் ஒரு பாம்பு படமெடுத்துக்கொண்டு அவளையே பார்த்துக் கொண்டிருந்திருக்கிறது.

இந்தக் காட்சியைப் பார்த்த அத்தைப்பாட்டி, தூங்கிக்கொண்டு இருந்த மற்றவர்களை எழுப்பக் கூட குரல் வராமல் சிறிது நேரம் “பா….பா....” என்றே சொல்லிக்கொண்டு இருந்திருக்கிறார். அதற்குள் ஆள் அரவம் கேட்ட பாம்பு, தானாகவே கதவின் கீழ் இருந்த சந்தின் வழியே வெளியே சென்று விட்டிருக்கிறது. அதன்பின் குரல் கொடுத்து எல்லோரையும் எழுப்பி, நடந்ததைச் சொன்னார். தலைமாட்டில் படமெடுத்தப் பாம்பு பற்றி இப்போதும் கூட என் அம்மா சொல்லிக்கொண்டிருப்பார்.

இதில் ஒன்றுமே இல்லாதது போல வேறு ஒரு முறை நடந்த நிகழ்ச்சிதான் மிகவும் சுவாரசியமானது. ஒரு நாள் நான் முற்றத்தில் குளித்துக்கொண்டிருந்தபோது தோட்டத்துக் கதவு வழியே, ஒரு பாம்பு உள்ளே வந்து விட்டது. உள்ளே வந்த அதுக்கு “ஒன் பாத்ரூம்” வந்து விட்டதோ என்னமோ, நேராக கழிப்பறையினுள் சென்று விட்டது. தோட்டத்திலிருந்து ஒரு குச்சியை எடுத்து வந்து அதை அடிக்கப் போக, அதற்கு வாகுவாக இல்லாமல் உள்ளே சென்று சுருண்டு படுத்துவிட்டது.

எவ்வளவு முயன்றும் வெளியே வராமல் அழிச்சாட்டியம் பண்ண அந்த பாம்பினை, ஜலசமாதி செய்துவிடும் எண்ணத்தோடு, பக்கெட் பக்கெட்டாக தண்ணீர் எடுத்து கழிப்பறையில் விட்டுக்கொண்டிருந்தோம். வீட்டின் பின்னே இருக்கும் பாதாள சாக்கடையின் மூடியைத் திறந்து பாம்பு வருகிறதா என்று ஒரு கூட்டமே ஆவலுடன் கூடிய திகிலுடன் பார்த்துக் கொண்டிருந்தது.

தொட்டியில் இருந்த தண்ணீர் முழுதும் தீர்ந்த பிறகு ஒரு விதக் கலக்கத்துடன் எட்டிப் பார்த்தால், கழிப்பறையின் உள்ளே பாம்பாரைக் காணவில்லை. வெளியேயும் வரவில்லை.

மூலைமுக்கு விடாமல் தேடி விட்டோம். அது எங்குமே இல்லை. சரி போய் விட்டது என்ற தீர்மானத்தில் வெளியாட்கள் எல்லோரும் சென்றுவிட்டனர். ஆனாலும் இரண்டு மூன்று நாட்கள் வரை வீட்டில் உள்ள அனைவருமே அந்தக் கழிப்பறைக்குள் செல்லத் தயங்கியது அக்மார்க் உண்மை. அந்த பாம்பு எங்கே சென்றது என்ற குழப்பம் இன்றுவரை தீரவில்லை. பாம்புக்கு ஆயுள் எத்தனை வருடங்கள் என்று யாருக்காவது தெரியுமா?

மீண்டும் சந்திப்போம்!


வெங்கட் நாகராஜ்திங்கள், 7 மார்ச், 2011

பேரைச் சொல்லவா!ஏற்கனவே இரண்டு மூன்று தொடர் பதிவுகளுக்கு சில பதிவுலக நண்பர்கள் அழைத்திருந்தார்கள். இப்போது நண்பர் ஆர்.வி.எஸ். பெயர்க்காரணம் பற்றிய ஒரு தொடர் பதிவுக்கு என்னை அழைத்திருக்கிறார். முன்பு வந்த அழைப்புக் கானவைகளையே இன்னும் முடிக்கவில்லை. இந்த “Wanted” பட்டியலில் இன்னுமொன்றை சேர்க்க வேண்டாமே என்று உடனே [ஒரு வாரம் கழித்து எழுதி விட்டு, “உடனே”ன்னு வேற போட்டுக்கிறயா?" என்று யாரோ முணுமுணுப்பது எனக்கு கேட்கலைங்க!] எழுதி விட்டேன்.

பெயர் வைப்பதில் நிறைய பழக்கங்கள். என் அக்கா கணவரின் வீட்டில் மாற்றி மாற்றி இரண்டு பெயர்கள் தான் வரும். ஆண்களுக்கு – கணபதி சுப்ரமணியன் – கைலாஸ்! ஆண் குழந்தைக்குத் தாத்தாவின் பெயர்தான். அதனால் மாற்றமின்றி பல தலைமுறைகளாக இதே பெயர்தான் எனக் கேட்டிருக்கிறேன். தில்லி சக பதிவர் கலாநேசன் கூட ஒரு பகிர்வில் ஒரு ஊரில் உள்ள வித்தியாசமான பெயர் வைக்கும் முறை பற்றி எழுதியிருந்தார். எத்தனை குழப்பங்கள் நேர்ந்திருக்கும் என நினைக்கத் தோன்றுகிறது.

என்னுடைய அப்பா-அம்மா எனக்கு வைத்த பெயர் வெங்கட்ராமன். அதன் முன் அப்பா பெயரும் சொந்த ஊரின் பெயரும் சேர்த்து வி.நா. வெங்கட்ராமன் – அதாவது விழுப்புரம் நாகராஜன் வெங்கட்ராமன் – அப்பாடா! அடிச்சு முடிக்கறதுக்குள்ள கை வலிக்குது – படிச்சு முடிக்கறதுக்குள்ளே உங்க கண் அசதியாகப் போகுது – அதனால வெங்கட்ராமன் அப்படின்னே தொடரலாம்.

பொதுவா ஒரு குழந்தை பிறந்தால் நம்ம ஊர்ல மூணு பேரு வைப்பாங்களாம். ஒரு பெயர் தான் எனக்கு வைச்சாங்க! ம்… எதற்காக எனக்கு இந்த பெயர் வைச்சாங்கன்னு எங்க அப்பாகிட்ட நேத்திக்கு கேட்டேன். உடனே அவர் கேட்டது – “ நீ பிறந்து 39 வருஷம் கழிச்சு ஏண்டா இப்படி ஒரு சந்தேகக் கேள்வி?” ["அய் வயசு தெரிஞ்சு போசச்சே"ன்னு யாரும் சந்தோஷப் படவேண்டாம்! நாங்க எப்பவுமே ரொம்ப வெளிப்படையான ஆளு!]

சரி காரணத்துக்கு வருவோம்! எங்க அக்கா முதல் குழந்தையா பிறந்ததுக்கப்புறம் திருப்பதி வெங்கடாஜலபதிகிட்ட எங்க அப்பா ஒரு டீல் போட்டுட்டாரு! ”இரண்டாவதை பையனா பொறக்க வையுங்க ஏழுமலையானே, அப்படி பொறந்தா அந்த பையனுக்கு உங்க பேரையே வைக்கறேன்” என்பது தான் அந்த டீல்! சொன்ன சொல்லைக் காப்பாத்தணுமில்லையா, இது தான் நான் “வெங்கட்ராமன்” ஆன கதை!!!

பள்ளியிலும் – V.N. VENKATRAMAN என்று தான் பெயர் இருந்தது பத்தாவது படிக்கிற வரை! ஆனா, பத்தாவது மார்க் ஷீட் கொடுத்த போது எனக்கு ஒரு “A” Certificate குடுத்துட்டாங்க! அதாவது மார்க் ஷீட்டை டைப் செய்த ஆசாமி அப்போ என்ன நினைப்புல இருந்தாரோ தெரியல, என் பெயருடன் ஒரு “A” சேர்த்து, V.N. VENKATARAMAN ஆக்கிட்டாரு! இப்படி கூடுதலா ஒரு ”A” சேர்த்ததால, என் பேரு வெங்கடராமன் ஆகி, அது வெங்காயராமன் ஆனது பத்தி முந்தியே பெயர்க் குழப்பங்கள் என்ற தலைப்பில் இங்கே எழுதியிருக்கேன்.

அப்பா-அம்மா என்ன பேரு வைச்சாலும் நம்ம கூட படிக்கிற நண்பர்கள் எப்படியும் நமக்கு பட்ட பேரு வைக்காம விடமாட்டாங்களே! என்னோட உயரத்துக்கு தகுந்த மாதிரி Orient Longman, லம்பு [ஹிந்தியில] அப்படின்னு எல்லாம் நமக்கு பேர் வைச்சிருந்தாங்க! ஒரு நாள் யாருக்கும் தெரியாம நான் வெல்லத்தை எடுத்து [திருடி!] சாப்பிடறதை பார்த்துவிட்டு எங்க பாட்டி“வெல்லம் திருடி வெங்கட்ராமா"ன்னு கூப்பிட ஆரம்பிச்சுட்டாங்க! இதையெல்லாம் தூக்கிச் சாப்பிடற மாதிரி எங்கம்மா என்னை பாசத்தோடு கூப்பிடும் “ டேய் டில்லி எருமை!” தான் நான் மிகவும் ரசிப்பது. ஒழுங்கா என் பெயரைச் சொல்லிக் கூப்பிட்டாலே திரும்பாத நான், இப்படிக் கூப்பிட்ட உடனே திரும்பி ”என்னம்மா?” என்பேன்.

கல்லூரி காலத்தில் சக மாணவிகள் நிறைய பட்டங்கள் எல்லாம் குடுத்திருப்பாங்க! – அது எல்லாமே எனக்குத் தெரியாது, தெரிஞ்சாலும் எழுத முடியாது… [சொந்த செலவில் சூனியம் வைத்துக்கொள்ள ஆசை இல்லைன்னு தப்பிச்சுடலாமே! ]

தொடர் பதிவுக்கு அழைத்த நண்பர் ஆர்.வி.எஸ் அவர்களுக்கு நன்றி சொல்லி, இந்த தொடர் பதிவினை யார் தொடர விரும்புகிறார்களோ அவர்களை தொடர அன்புடன் அழைக்கிறேன்.

மீண்டும் வேறு ஒரு பதிவில் சந்திப்போமா?


வெங்கட் நாகராஜ்.புதன், 2 மார்ச், 2011

தன்னம்பிக்கை – I Love Living Life… I am happy

தோல்வியைக் கண்டு துவள்பவர்கள் நம்மில் எத்தனை பேர்? தன்னம்பிக்கை கொண்டு மீண்டும் மீண்டும் முயற்சி செய்து தான் விரும்பிய இலக்கை அடையும் நபர்கள் எத்தனை?

பெரும்பாலும் தம்மிடமிருக்கும் சிறு குறையைக் கூடக் கண்டு துவண்டு விடுபவர்கள்தான் அதிகம். பதிவர் ரேகா ராகவன் அவர்கள் தனக்கு எழுத்தாளர்-பதிவர் திரு கே.பி. ஜனார்த்தனன் அவர்கள் அனுப்பியிருந்த மின்னஞ்சலை எனக்கு பார்வர்ட் செய்திருந்தார். அவரனுப்பிய மின்னஞ்சலில், தன்னம்பிக்கை ஊட்டும் ஒரு " YOU TUBE " காணொளி இருந்தது. அது கீழே:இந்த காணொளியிலிருக்கும் Nick Vujicic’s என்ற நபரைப் பற்றிய மற்றுமொரு காணொளியும் கிடைத்தது. அது கீழே.அவரின் இணையதளம்.

இவைகளைப் பற்றி நான் எழுதி நீங்கள் படிப்பதைவிட நீங்களே காணொளிகளையும், அந்த இணைய தளத்தினையும் பாருங்கள். என் வார்த்தைகளைவிட அவைகள் சொல்வது அதிகம்!

மீண்டும் சந்திப்போம்!

வெங்கட் நாகராஜ்