சனி, 30 ஜனவரி, 2016

குடிமகனே[ளே].... பெருங்குடிமகனே[ளே].....

படம்: இணையத்திலிருந்து......

சமீபத்திய நீயா நீனா நிகழ்ச்சியில் பெண்கள் மது அருந்துவது குறித்த ஒரு பெண்ணின் பேச்சு வலையுலகிலும், ஊடகங்களிலும் நிறைய சர்ச்சையைக் கிளப்பியிருக்கிறது. அது பற்றி சில பதிவுகளும் வந்திருக்கின்றன.

இந்த நிகழ்ச்சியினை மட்டுமல்ல, பொதுவாகவே நீயா நானா நிகழ்ச்சிகள் பார்ப்பதில்லை – For that matter, தொலைக்காட்சி நிகழ்ச்சிகள் எதுவுமே பார்க்க முடிவதில்லை – நேரப் பற்றாக்குறை மிக முக்கிய காரணம். கிடைக்கும் கொஞ்ச நேரமும் வலைப்பதிவுகள் படிப்பதற்கும், என்னுடைய பதிவுகள் எழுதுவதற்கும் சரியாக இருக்கின்றன. அதனால் அந்நிகழ்ச்சி பற்றி சொல்வதற்கு ஒன்றுமில்லை. இப்பதிவில் நாம் பார்க்கப் போவது கடந்த இரண்டு வாரங்களில் தமிழகத்தில் இருக்கும்போது பார்த்த சில சாலைக் காட்சிகளைத் தான் இங்கே பார்க்கப் போகிறோம்.

காட்சி-1புதுகை புதிய பேருந்து நிலையம்

பேருந்து நிலையங்களில் இருக்கும் கழிவறைகள் நிலை பற்றி சொல்லவே வேண்டாம் – சுத்தம் என்றால் கிலோ என்ன விலை என்ற நிலை தான் இந்தியா முழுவதுமே......  காசு வாங்கினாலும், கழிவறைகளை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் எனும் எண்ணம் அவற்றை நிர்வகிக்க குத்தகை எடுத்திருப்போர்களுக்குக் கொஞ்சம் கூட இல்லை. கழிவறைகள் இருக்கும் இடத்திலிருந்து 100 மீட்டர்கள் தூரம் வரை அவற்றின் நாற்றம் வரும் நிலை தான். அங்கே இயற்கை உபாதைகளைக் கழிப்பதற்கே பிரம்மப்பிரயத்தனம் செய்ய வேண்டும் – வேறு வழியில்லை என்பதால் தான் அங்கே செல்ல வேண்டியிருக்கிறது. 

அங்கே முகத்தில் கர்ச்சீப் கட்டிக் கொண்டு உள்ளே சென்றபோது பார்த்தால் ஒவ்வொரு இடத்திலும் சாராய பாட்டில்கள்...  மூத்திரம் கழிக்கும்போதே போதை ஏற்றிக்கொள்ளும் குடிமகன்கள் – எப்படித்தான் முடிகிறதோ?  என்னதான் போதைக்கு அடிமையாகிவிட்டாலும் இப்படியா?  ஒரு வேளை இந்த நாற்றத்தினை தவிர்ப்பதற்காகவே குடிக்கிறார்களோ?

தில்லியில் இருக்கும் ஒரு ஹரியானா நண்பர் சொல்வது நினைவுக்கு வருகிறது.....  அந்த நண்பர் எப்போதாவது குடிப்பது வழக்கம்.  அப்படிக் குடித்தால் வீட்டுக்குச் செல்வதற்கு முன்னர் நான்கு பூண்டுப் பற்களை பச்சையாகவே கடித்துத் தின்று விடுவார். பூண்டு வாசனையில் சாராய வாசனை குறைந்து விடும் எனும் நினைப்பு அவருக்கு. அப்படியும் அவர் வீட்டுக்குச் சென்றதும் அவர் மனைவி கண்டு பிடித்துவிடுவாராம். வீட்டுக்குள் நுழைந்ததும் கேட்கும் கேள்வி இன்னிக்கு திரும்பவும் மூத்திரம் குடிச்சுட்டு வந்துட்டியா?

காட்சி-2: திருச்சி மத்தியப் பேருந்து நிலையம்

நேற்று காரைக்குடி வரை செல்ல வேண்டியிருந்தது. அங்கிருந்து திருச்சி மத்தியப் பேருந்து நிலையத்தில் வந்து இறங்கினேன்.  அங்கே நடைமேடையில் ஒருவர் வீழ்ந்து கிடந்தார். மடித்துக்  கட்டிய வேட்டி அப்படி ஒன்றும் அழுக்காக இல்லை. நன்றாகவே உடையணிந்து இருந்தார். வீழ்ந்திருந்த அவர், குடிபோதையில் தன் சுயநினைவில்லாது சிறுநீர் கழித்து ஒரு ஓடையாக ஓடிக்கொண்டிருந்தது. அவ்வப்போது உளறிக் கொண்டிருந்ததால் அவர் உயிருடன் இருப்பது மட்டும் தெரிந்தது.

தன் நிலை மறந்து இப்படி விழுந்து கிடக்கும் அளவிற்கு குடிப்பது அவசியமா? அவருடன் சேர்ந்து குடிக்க வந்த நண்பர்கள் அவரை இப்படி நடுவீதியில் விட்டுச் சென்றால் அவர்களது நட்பின் ஆழமா? இப்படி பல குடிமகன்களைக் காண்பதால் யாரும் அவரைப் பற்றி கவலை கொள்வதில்லை. அவரைக் கடக்கும்போது அவரை விட்டு விலகி நடந்து சென்று கொண்டிருக்கிறார்கள்.....  மனதிற்குள் நிச்சயம் அம்மனிதரைப் பற்றி கேவலமாக நினைத்துக் கொண்டுதான் கடந்திருப்பார்கள்.

காட்சி-3: திருச்சி டவுன் பஸ் ஒன்றில் பயணிக்கும் போது

நான் அமர்ந்திருந்த இருக்கைக்குப் பின்னிருக்கை. அமர்ந்திருந்தது இரண்டு இளைஞர்கள். தங்களது வீரப் பிரதாபங்களைப் பற்றியும் சொத்து விவரங்களைப் பற்றியும் சத்தமாகப் பேசிக் கொண்டிருந்தார்கள். நடுநடுவே அவர்கள் எங்கெங்கே குடித்தார்கள், எவ்வளவு குடித்தார்கள் என்பது பற்றியும். அதில் ஒருவர் முதன் முதலில் குடிக்க ஆரம்பித்தது பற்றியும் சொன்னார். நானு, புலம்பல் பாண்டியன், அஃப்சல், பீட்டர் என அனைவரும் ரூமில் இருந்தோம். அவங்க மூணு பேரும் தண்ணி அடிக்க, நான் மட்டும் சும்மா இருந்தேன்.

அவங்க மூணு பேரும் என்னை ரொம்பவே கிண்டல் பண்ணாங்க, உடனே கோவம் வந்து, விஸ்கி பாட்டில் எடுத்தேன், மடக் மடக்குன்னு தண்ணி/சோடா எதுவும் கலக்காம ராவா குடிச்சு பாட்டில கீழே வைச்சேன். அதுக்கப்புறம் கொஞ்சம் தண்ணியை மேலாக குடிச்சேன். ஆடிப் போயிட்டாங்க மூணு பேரும்..... இதுக்குத் தான் இத்தனை கிண்டலான்னு தோணிச்சு.  கொஞ்சம் நல்லாவும் இருந்துச்சு. அதிலேருந்து குடிக்க ஆரம்பிச்சிட்டேன்.  இப்பல்லாம் வீட்டுல இருக்கும்போது வீட்டுக்குத் தெரியாம தண்ணி சொம்புல சரக்க மிக்ஸ் பண்ணி குடிச்சுடறேன்! சரி சரி, சத்திரம் பஸ் ஸ்டாண்டுக்கு புலம்பல் பாண்டியன் வரன்னு சொல்லி இருக்கான். அங்கே இறங்கி மூணு பேரும் சரக்கு அடிச்சுட்டு அப்புறமா மத்த வேலையப் பார்க்கலாம்.......

இப்படி நிறைய சாலைக் காட்சிகளை சொல்லிக் கொண்டே போகலாம்....  2015-ஆம் ஆண்டின் கடைசி நாள் – அன்று தில்லி நகரே கோலாகலமாக இருக்கும். இரவு எட்டு மணிக்கு அலுவலகத்திலிருந்து வீடு திரும்பிக் கொண்டிருந்தேன். நடந்து வந்து கொண்டிருக்கும்போது என்னை உரசும்படி ஒரு மகிழ்வுந்து வந்து நின்றது. கண்ணாடிக் கதவுகள் கீழிறங்க, மகிழ்வுந்தில் நான்கு பெண்கள் – எனைக் கேட்ட கேள்வி – இங்கே பக்கத்துல Pub எங்கே இருக்கு?

இப்படி ஆணோ, பெண்ணோ மது அருந்துவது அவர்கள் உரிமை என்று சொன்னாலும், தொடர்ந்து மது அருந்தி தன்னை அழித்துக் கொள்வதோடு மட்டுமல்லாது தன்னை நம்பி இருக்கும் குடும்பத்தினரையும் அழித்து விடுகிறார்களே....  எப்போது உணர்ந்து கொள்ளப் போகிறார்களோ? மதுவெனும் அரக்கனை ஆண் அருந்தினாலும், பெண் அருந்தினாலும், அவை ஏற்படுத்தும் பாதிப்பு இருவருக்குமே உண்டு.  இதில் ஆண் என்ன பெண் என்ன?

தொடர்ந்து சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்

திருவரங்கத்திலிருந்து......

வெள்ளி, 29 ஜனவரி, 2016

ஃப்ரூட் சாலட் – 156 – நம்பிக்கை – தமிழில் பேசு... - சொன்னா கேட்டாத்தானே!

நம்பிக்கை:

முகப் புத்தகத்தில் இதைப் படித்தவுடன் நம்பிக்கையுடன் இருக்கும் இந்தச் சிறுவனைப் பற்றி இந்த வார ஃப்ரூட்சாலட்-ல் பகிர்ந்து கொள்ள சேமித்து விட்டேன்.....  நம்பிக்கையோடு இருக்கும் இச்சிறுவனுக்கு நல்லதோர் எதிர்காலம் அமையட்டும்....  வாழ்த்துகளும் பாராட்டுகளும்....



போனவாரம் ஸ்ரீரங்கம் போயிருந்தப்போ கோயில் முகப்புல இந்த சிறுவனை பார்க்க நேர்ந்தது.

பச்சை வேர்க்கடலை விற்றுக்கொண்டிருந்தான். வாங்கிக் கோங்க என்று என் மகளிடம் கெஞ்சிக் கொண்டிருந்தான். என் மகள் வேணாம்டா என்று சொல்லிக் கொண்டே இருந்தார். அவனும் விடுவதாக இல்லை. அக்கா வாங்கிக்கோங்க என்று வற்புறுத்தவே வேர்க் கடலை வேணாம் 10 ரூபாய் தர்றேன் வாங்கிக்கோ என்றார். அவன் வாங்க மறுத்து, என் குடும்ப சூழ்நிலை காரணமா பள்ளி முடிச்சுட்டு சாயந்திரத்தில இந்த வேர்க்கடலை வியாபாரம் பண்றேன். ஒரு பாக்கெட் 20 ரூபாய்க்கு வித்தா எனக்கு 5 ரூபா கிடைக்கும். 30 பாக்கெட் வித்துடுவேன். 150 ரூபாய் கிடைக்கும். நான் பிச்சை எடுக்க விரும்பல. என்னை இதுமாதிரி இலவசமா பணம் கொடுத்து சோம்பேறியா ஆக்க முயற்சிக்காதீங்க. ஒரு வாட்டி நான் இப்படி வாங்கிட்டா நாளடைவிலே அதுவே எனக்கு பழகிப் போயிடும். வியாபாரம் செஞ்சு சம்பாதிக்க நினைக்கிறேன். வேணும்னா காசு கொடுத்துட்டு வாங்கிக்கோங்க. இல்லைன்னா விடுங்கன்னு சொல்லிட்டு விறு விறு என நடக்க ஆரம்பித்தான். என் மகளுக்கு 'பொளேர்' என்று கன்னத்தில் அறைந்தது போலிருந்தது..

20 ரூபாய் கொடுத்து ‍வேர்க்கடலை வாங்கினார் என் மகள். விடியற்கலை எழுந்து எங்க போய் வாங்கறான், அத எப்படி பொட்டலம் போடறான்கிற விவரங்களை சொல்லிக் கொண்டே வந்தான். அவன் நிறைய விஷயங்கள் பேசப்பேச என் மகள் பிரமித்துப்போய் கேட்டுக்கொண்டே வந்தார். சரி வா ஏதாச்சும் வாங்கித் தர்றேன் சாப்பிட்டுட்டு போ என்றார். அதற்கும் மறுத் தான். அக்கா நான் இதுலேயும் ரொம்ப கட்டுப்பாடோட இருக்கேன். யார் எது வாங்கிக் கொடுக்கனும்னு முயற்சி செஞ்சாலும் வேணாமுன்னு சொல்லிடுவேன்னான். ஏண்டா அப்படின்னு கேட்டா, ஒரு முறை யாராச்சும் வாங்கிக் கொடுத்து சாப்பிட ஆரம்பிச்சா அதுவும் நாளடைவில பழகிப்போய் எந்த வேலையும் செய்யாம யாராச்சும் வாங்கிக்கொடுப் பாங்களாங்கிற என்கிற எண்ணம் வந்துடும். இதுவும் ஒரு வகையான சோம்பேறித்தனத்திற்கான வழிதான் என்றான்.

அரசு பள்ளியில் 7ம் வகுப்பு படிக்கின்றான். அம்மா கோவில் வாசலில் பூ வியாபாரம். அவரைப் காண்பித்தான். பாவம் உடலெல்லாம் ஒட்டிப்போய் ஈனஸ்வரத்தில் யாருடனோ பேசிக்கொண்டிருந்தார்.

மொத்தம் இவனுடன் சேர்த்து 6 பிள்ளைகள். இவனுக்கு 2 தங்கைகள், இரண்டு அக்கா ஒரு அண்ணன். அப்பா நோய் வாய்ப்பட்டு 2 வருஷத்துக்கு முன்னாடியே இறந்து போயிட்டாராம். குடும்பத்துக்கு மாசம் எவ்வளவு செலவாகுதுன்னு பட்ஜெட் போட்டு பார்த்து இவங்க வங்க இவ்வளவு சம்பாதிக்கனும்னு கணக்கு போட்டு சம்பாதிச்சுகிட்டு பள்ளிக்கும் சென்று கொண்டு எல்லாருமே ஏதோ ஒரு வியாபாரம் செய்து குடும்பத்தின் செலவுகளை கவனித்துக்கொள்கின்றார்களாம்..

படிப்பு எப்படிடா எனக் கேட்டாள் மகள். 3 ரேங்குக்குள்ள வந்துடுவேன்க்கா என்றான். கடைசியாக உன் பெயர் என்னடா என என் மகள் வினவ ரங்கநாதன் என்றான்.. அவன் போனபின்னர் அந்த ரங்கநாதனே வந்து எனக்கு நிறைய விஷயங்களை கற்றுக்கொடுத்து சென்றதுபோல் ஒரு உணர்வு ஏற்பட்டுள்ளது என்றார் என் மகள்..

வறுமையில் வாடும் ஒரு சிலர் குடும்ப சூழ்நிலை காரணமாக வாழ்க்கையில் உழைக்க சோம்பல் பட்டுக் கொண்டு பிச்சைக்காரர்களாக மாறிவிடுகின்றார்கள். அவர்கள் வாழ்க்கைச் சக்கரம் அதிலேயே உழன்று முடிந்து போய்விடுகின்றது. திறமையைும் ‍உழைப்பும் இருந்து யாசகம் கோராமல் எதையாவது செய்து சம்பாதிக்க வேண்டும் என்று கருதும் இதுபோன்ற சிலருக்கு ஆதரவு என்ற வகையில் இந்த சமுதாயம் பரிதாபப்பட்டு எதையாவது கொடுத்து அவர்களை பிச்சைக்காரர்களாக மாற்ற முயற்சிக்கின்றது. இது சமுதாயத்திற்கு தெரியாமலேயே பரிதாபம் உதவி என்ற பெயரில் நடந்துபோகும் விஷயம் தான். இதில் சிக்காமல் ஒரு சிலர் அதிலிருந்து தப்பித்து ஒரு குறிக்கோளுடன் உழைத்து வெற்றி பெறுகின்றார்கள்.

இந்தச் சிறுவனது பேச்சில் ஒரு நம்பிக்கையும் தெளிவும் இருந்தது. கண்களில் ஒரு பிரகாசம் தெரிகின்றது.இவன் வாழ்க்கையில் உழைத்து வெற்றி பெறுவான் என்ற நம்பிக்கை இருக்கின்றது.. பாராட்டுவோம்...

@உதய குமார்

பாடம்.....

உங்களுக்குக் கற்றுக் கொள்ளும் மனமிருந்தால், நீங்கள் முட்டாள்களிடமிருந்து கூடப் பாடம் கற்றுக்கொள்ள முடியும். அந்த மனம் இல்லாவிட்டால் உங்களால் புத்தனிடமிருந்து கூட எதையும் கற்றுக்கொள்ள முடியாது – ஓஷோ....

கல்யாணம்... கல்யாணம்!:



மனைவி: உங்களை நேர்ல பாக்காமலே கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்.....

கணவன்:  உன்னை நேர்ல பார்த்த பிறகு கூட கல்யாணத்துக்கு சம்மதிச்சது என்னோட உயர்ந்த குணம்!

தமிழா பேசு.....  தமிழில் பேசு:

நல்லதோர் குறும்படம்....  பாருங்களேன்!


Posted by Balaiya Kalidhasan on Saturday, January 9, 2016


சொன்னா கேட்டாத்தானே...

ராஜா காது கழுதைக் காது பகுதி எழுதி ரொம்பவே நாளாச்சு! இதை எழுதாம இருக்கவும் முடியல!

திருச்சியிலிருந்து புதுக்கோட்டை செல்ல 1 to 1 பேருந்தில் அமர்ந்திருந்தேன். “புதுக்கோட்டை மட்டும் ஏறு, புதுக்கோட்டை, புதுக்கோட்டைஎன்று கதறிக்கொண்டிருந்தார் பேருந்தின் நடத்துனர். மத்தியப் பேருந்து நிலையத்திலிருந்து வெளியே வந்து சில நிமிடங்கள் ஆன பிறகு தான் அனைவருக்கும் பயணச் சீட்டு கொடுக்க ஆரம்பித்தார்.  எனது இருக்கைக்கு அருகே வந்த போது பக்கத்தில் இருந்த மூன்று சீட்டுகளில் இருந்த ஒருவர் “கீரனூருக்கு 3 டிக்கட் கொடுங்க”, என்று கேட்டவுடன், கண்டக்டர் “கரடியாக் கத்தினேனே, புதுக்கோட்டை மட்டும் ஏறுன்னு என்று சொல்லி, கீரனூர் போகாதுங்க, TVS Toll Gate-ல இறங்கி வேற பஸ்ஸுல போங்க! என்று சொல்லி விட்டார்.  அதன் பிறகு நடந்தது.....

3 டிக்கட் கேட்டவரின் மனைவி சொன்னார்: பஸ்ஸுல ஏறும்போதே சொன்னேனே, கீரனூர் போகுமான்னு கேட்க சொன்னேனே, கேட்டீங்களா? எங்க நாங்க சொல்றத எப்ப கேட்டு இருக்கீங்க! கேட்டா இப்படி நடந்து இருக்குமா? என்று ஏகப்பட்ட அர்ச்சனைகள்.  TVS Toll Gate-ல் இறங்கிய பிறகு பேருந்து புறப்பட, அர்ச்சனையும் தொடர்ந்தது!

என்ன அழகு எத்தனை அழகு..... 

நீ கொள்ளை அழகுடா செல்லம்.....


Awww Adorable <3
Posted by Filmygyan Videos on Thursday, January 21, 2016


இதுவும் துறவு தான்.
------------------------

ஆஹா..
என்ன அருமையான துறவு இது!

காசிக்குச் சென்று
கஷ்டப் பட்டு துறக்க வேண்டாம்.

தாய்மை அடைந்தால் போதும்.
தாலாட்டி மகிழத் தாயானால் போதும்.
குழந்தைக்காக துறப்பதெல்லாம்
பெற்றதை மகிழ்வுடன் வளர்க்கத்தானே!
அன்புத் துறவு; ஆசைத் துறவு; இன்பத் துறவு.
என்றெல்லாம் போற்றச் சொல்லும் தாயன்பு.

குழந்தையின் நலன் கருதி
கர்ப்பத்திலும்; பிள்ளை பெற்ற பின்னும்
ஆசைப் பண்டங்கள் பலவற்றை
மகிழ்வுடன் ஒதுக்கி பாசம் வளர்க்கும்
அன்னையர்கள் அனைவரும் துறவிகளே!
தன்னலம் துறந்த தனிப்பிறவிகளே!

-    பரிமேலழகர் பரி....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை….
நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....

வியாழன், 28 ஜனவரி, 2016

சக்கரக்காலன் அல்லது பயணக் காதலன் – ஷாஜஹான்



பேருந்து முழுக்க காலியாகவே இருந்தாலும்
பேருந்து நிறுத்தத்திலேயே பயணி நின்றிருந்தாலும்
ஒரு பக்கமாகச் சாய்ந்து
இடது கை தரையைத் தொடுமளவுக்கு
விந்தையாய் சரிந்து நின்று கைகாட்டினாலும்
நிற்காமல் போவது தான் அரசுப் பேருந்து.
- அதிகாலை 5 மணி அனுபவம்.

அதிகாலை ஐந்து மணிக்கு அரசுப் பேருந்துக்காக காத்திருக்கும் அனுபவம் உங்களுக்கு உண்டா? நாம் காத்திருக்க, நம்மை ஒரு பொருட்டாக மதிக்காது கடந்து போகும் பேருந்து....  பேருந்து ஓட்டுனரையும் நடத்துனரையும் நிச்சயம் நாலு திட்டு திட்டி இருப்போம்! இவர் கவிதை எழுதி இருக்கிறார்!

ஊளையிட்டவாறே விரையும்
எதிர்த்திசை ரயில்களுக்குத் தெரிவதில்லை
இங்கே திடுக்கிட்டு விழித்தெழும்
குழந்தைகளை.

எதிர்த்திசை ரயிலை ஓட்டும் அந்த ஓட்டுனர் எப்போதாவது இப்படி யோசித்திருப்பாரா?

கருத்த முகமும்
இறுக்கிக் கட்டிய
இரட்டைச் சடையும்
மின்னும் விழிகளும்
பள்ளிச் சீருடையுமாய்
இறங்கிச் சென்ற
கிராமத்துச் சிறுமி
அறிந்திருக்க மாட்டாள்
இன்றைய என் தினத்தை
இனியநாளாய் அவள்
ஆக்கிவிட்டுப் போனதை....

பேருந்து பயணத்தில் பார்த்த பள்ளிச் சிறுமி பற்றி எழுதிய கவிதை ஒன்று. அச்சிறுமி இக்கவிதை பற்றி அறிந்திருப்பாளா?

திருப்பூரில் உடுமலைக்குச் செல்லும் பஸ்சில் ஏறி உட்கார்ந்து கண்டக்டரிடம் திருப்பூர் என்று டிக்கெட் கேட்க, அவர் எங்கே போகணுங்க என்று கேட்க, மீண்டும் திருப்பூர் என்று நான் சொல்ல, இதாங்க திருப்பூர் என்று அவர் சொல்ல....  ஒர் நிமிடம் “நான் எங்கே இருக்கேன்என்று ப்ளாங்க் ஆகி..... “சாரி சார்.... ஊர் ஊரா சுத்திட்டே இருக்கிறதுல குழப்பமாயிடுச்சுஎன்று அசட்டுச் சிரிப்பு சிரிக்க....  இதுபோன்ற அனுபவங்கள் உங்களுக்கும் கிடைத்திருக்கும் தானே?

ஊர் சுற்றிக் கொண்டே இருந்தால் இப்படி நடக்கும் வாய்ப்பு உண்டு.  எனக்கும் நடந்திருக்கிறது! :)

மேலே படித்த அனைத்தும் எங்கே படித்தது என்பதைத் தெரிந்து கொள்ளும் ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.....  அதைப் பற்றி தான் இப்போது சொல்லப் போகிறேன்!

சமீபத்தில் நண்பர் கஸ்தூரி ரெங்கன் அவரது முகப்புத்தக இற்றையொன்றில் திரு ஷாஜஹான் அவர்களின் சக்கரக்காலன் அல்லது பயணக்காதலன்புத்தகம் வெளிவந்திருக்கிறது என்று தெரிவிக்க, தில்லி நண்பரான திரு ஷாஜஹான் அவர்களின் முதல் புத்தகம் வெளிவந்ததில் மகிழ்ச்சி என்று சொன்னதோடு, தில்லியில் அவரைச் சந்தித்து புத்தகம் வாங்கிக் கொள்ள வேண்டும் என்று எழுதி இருந்தேன். இந்த ஞாயிறில் புதுக்கோட்டை சென்றிருந்தபோது நண்பர் கஸ்தூரிரெங்கன் இப்புத்தகத்தினை நினைவுப் பரிசாகக் கொடுத்து விட்டார். 

அடுத்த நாளே சக்கரக்காலனை வாசிக்க ஆரம்பித்து விட்டேன்.  மாலைக்குள் படித்தும் விட்டேன்.  கிட்டத்தட்ட நான்கு ஆண்டுகளில் அவர் செய்த பல பயணங்களைப் பற்றி முகப்புத்தகத்தில் பகிர்ந்து கொண்ட பல இற்றைகளைத் தொகுத்து மிகச் சிறப்பாக வெளியிட்டு இருக்கிறார். நான்கு வருடங்களில் செய்த பல பயணங்கள் – இரயிலில், விமானத்தில், பேருந்துப் பயணம் என ஒவ்வொன்றிலும் கிடைத்த அனுபவங்கள், பயணத்தின் போது எழுதிய கவிதைகள் என பல சுவாரஸ்யமான விஷயங்களை புத்தகத்தில் பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

பயணம் செய்வது யாருக்குத் தான் பிடிக்காது? சிலருக்கு பயணம் செய்யப் பிடிக்காது என்றாலும், அடுத்தவர்களுக்கு பயணத்தில் கிடைக்கும் அனுபவங்களை படிப்பது நிச்சயம் பிடிக்கும். ஷாஜஹான் அவர்களின் பயணத்தில் அவர் சந்தித்த நண்பர்கள், அங்கே கிடைத்த பல வித அனுபவங்கள் ஆகியவற்றினை மிகச் சிறப்பாக தொகுத்து வெளியிட்டு இருக்கிறார். புத்தகம் படிக்க எடுத்தால், நிச்சயம் முடித்து விட்டு தான் அடுத்த வேலைக்குப் போவீர்கள். 

புத்தகத்தின் முன்னுரையில் ஷாஜஹான் அவர்களே குறிப்பிட்டிருப்பது போல “வாழ்க்கையே ஒரு பயணம் தான். வாழ்வின் ஊடான பயணங்கள் பெரும்பாலும் இலக்கை நோக்கியே என்றாலும், வாழ்க்கைப்பயணம் மட்டும் எல்லாருக்கும், இலக்கு நோக்கியதாக வாய்த்து விடுவதில்லை. பெரும்பாலோருக்கு, நீரோடையில் மிதந்து செல்லும் சருகினைப் போல இழுப்பின் போக்கில் பயணப்பட நேர்கிறது, சேர்ந்த இடமே இலக்காய் மாறுகிறது.

பலருடைய புத்தகங்களை வடிவமைத்துத் தரும் நண்பர் ஷாஜஹான் இதுவரை தன்னுடைய ஆக்கங்களை இதுவரை புத்தகமாக வெளியிடவில்லை. பலருடைய கேள்விகளுக்கு பதில் இருந்தாலும், “புத்தகம் போடறதால கிடைக்கிற வருமானத்தை நீங்க கல்வி உதவிக்காகப் பயன்படுத்தலாமேஎன்ற ஒரே ஒரு கேள்வி தான் இப்புத்தகம் வெளிவரக் காரணம்..... இந்த ஒரு காரணத்திற்காகவே புத்தகம் வாங்கிப் படிக்க வேண்டும்....

முகப்புத்தகத்தில் இருக்கும் நண்பர்கள் பலருக்கும் ஷாஜஹான் அவர்கள் செய்து வரும் பல்வேறு நல்ல விஷயங்கள் தெரிந்திருக்கும்.  சமீபத்திய சென்னை வெள்ளத்தின் போது அவர் ஆற்றிய சீரிய பணிகள் பலப்பல.....

புத்தகம் வெளியீடு: New Century Book House Pvt. Ltd., Chennai.  விலை: ரூபாய் 240.

புத்தகத்தின் வாசிப்பனுபவம் உங்களுடன் பகிர்ந்து கொள்வதில் மகிழ்ச்சி. நிச்சயம் உங்களுக்கும் பிடிக்கும்.  படித்துப் பாருங்களேன்!

மீண்டும் வேறொரு பதிவில் சந்திக்கும் வரை....

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து....

புதன், 27 ஜனவரி, 2016

வண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி


நுழைவு வாயில்.....

வாயிலில் இருக்கும் அறிவிப்பு பலகை....

ஒவ்வொரு முறை திருவரங்கம் வரும்போதும் இங்கே ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா இருக்கிறது, போக வேண்டும் என்று மகள் சொல்வாள்.  ஆனாலும் அங்கே போக முடிந்ததில்லை. எங்கே இருக்கிறது என சிலரிடம் விசாரித்தால் யாருக்கும் தெரியவும் இல்லை.  ஆனால் இம்முறை தான் திருவரங்கத்தில் சில இடங்களில் “வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழிஎன்ற பதாகைகளைக் காண முடிந்தது. பிறகு தான் தெரிந்தது ஒரு விஷயம் – இரண்டு வருடம் முன்னரே இது அமைப்பதற்கான அறிவிப்பு வந்தாலும், இரு மாதங்களுக்கு முன்னரே இப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள் என்பது!

பூங்காவினுள்ளே சென்று எடுத்த சூரியன் படம்!

பூங்கா திறக்கப்பட்ட விஷயம் இம்முறை தெரிந்து கொண்டதும் அங்கே சென்று வந்தோம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவரங்கம் என்று சொன்னாலும், இது இருப்பது திருவரங்கம் தாலுகாவில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் தான்.  திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக சென்றால் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் 25 ஹெக்டேர் அளவு பரப்பளவில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் பாதி இடத்திற்கு மேல் வேலைகள் முடிக்கவில்லை என்றாலும் வேலை முடிந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. 

வண்ணத்துப்பூச்சி மாதிரி....

பூச்செடிகளும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்களும், வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்களைக் காண்பிக்கும் மாதிரிகளும், பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி மாதிரிகளும், வண்ணத்துப் பூச்சி வளர்க்க உள் அரங்குகளும் அமைத்திருக்கிறார்கள்.  செயற்கை நீருற்றுகள், நக்ஷத்திர மற்றும் ராசி வனங்களும் இங்கே உண்டு.  செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். 

செயற்கை மரம்....

இப்பூங்காவிற்கு நுழைவுக்கட்டணம் உண்டு! பெரியவர்களுக்கு பத்து ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கிறார்கள்.  கேமராவிற்கு இருபது ரூபாயும், வீடியோ கேமரா என்றால் ரூபாய் நூறும் கட்டணம்.  வாகனம் நிறுத்துவதற்கும் தனி கட்டணம் உண்டு.   நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான் – அதிலிருந்து வரும் பணத்தில் பூங்காவினை பராமரிக்கும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.

செயற்கை நீருற்று...

பூங்காவினைப் பற்றிய சில தகவல்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டாலும் உங்களை முறையே உள்ளே அழைத்துச் செல்வது தானே நல்லது.  தமிழ்நாடு வனத்துறை அமைத்திருக்கிற இப்பூங்காவின் வாயிலில் ஒரு செயற்கை நுழைவு வாயில் வடிவமைத்திருக்கிறார்கள். அதன் உள்ளே நுழைந்தால் நீர் சலசலத்து விழும் ஓசை – ஆமாம் நுழைவு வாயிலின் பின்புறத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி....  அதன் எதிரே ஒரு வட்ட வடிவ மேஜையில் மிகப் பெரிய செயற்கை பட்டாம்பூச்சி.....  39 வகை பட்டாம்பூச்சிகள் இப்பூங்காவில் இருப்பதாகத் தெரிகிறது.

மரமும் பூச்சிகளும் - செயற்கையாக....

புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகிறது.  இரண்டு பாதைகள் தெரிய எப்புறம் செல்வது என்று சற்றே குழப்பம். இடது புறம் திரும்பினோம். பூங்காவில் வழிகாட்டிகள் அமைத்தால் நல்லது. ஆங்காங்கே சில பதாகைகள் – பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சி வகைகள், அவற்றின் பெயர்கள் என பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இடமாகப் பார்த்து ரசித்தபடி சென்று கொண்டிருக்கிறோம்.

பள்ளிச் சிறுவர்களும் அவர்களின் ஆசிரியர்களும்...

எதிரே ஏதோ ஒரு பள்ளியிலிருந்து குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க வந்த வண்ணத்துப் பூச்சிகள்.... எத்தனை குதூகலம் அவர்கள் முகத்தில்... அவர்களைப் பார்த்ததில் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது குதூகலமும் மகிழ்ச்சியும்.  “வரிசையா போ, ஒரு இடத்தில உட்காரு, “பிஸ்கெட் சாப்பிடலாமா? என்று கேட்ட சிறுவனிடம் “நான் சொன்னப்பறம் தான் சாப்பிடணும், சும்மா சும்மா கேட்கக் கூடாதுஎன்று கட்டளைகள் இட்ட சிடுசிடு ஆசிரியர், குழந்தைகளை கவனிக்காது தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்ட மூத்த ஆசிரியர், ஒவ்வொரு குழந்தைகளையும் பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்ற சில ஆசிரியர்கள் என பார்த்துக் கொண்டே பூக்களையும் ரசித்தோம்.

வண்ணத்துப்பூச்சி மாதிரி...

ஆங்காங்கே குடில்கள் அமைத்திருக்க, அதிலே அமர்ந்து ஓய்வு எடுத்த சிலர், அங்கேயும் அலைபேசியில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிலர் என பார்த்தபடியே நகர்ந்தால், “பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவு – பறிக்காதீர்கள்என்ற அறிவிப்பினைப் படித்தபடியே பூவைப் பறிக்க முயற்சிக்கும் சில பெண்கள்! 37 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகச் சொன்னாலும் இருப்பவை வெகுசில மட்டுமே.  சமீபத்து மழையில் பல வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போனதாக பராமரிப்பில் இருந்த ஒரு பெண்மணி சொன்னார். கேட்கவே கஷ்டமாக இருந்தது.

வண்ணவண்ண தோட்டம்....

நக்ஷத்திர வனம், ராசி வனம் என்று பெயருடன் இருந்த இடத்தின் வெளியே ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் என்ன மரம், பன்னிரெண்டு ராசிகளுக்கும் என்ன மரம் என்ற விவரங்கள் எழுதப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்தால், ஒவ்வொரு நக்ஷத்திரப் பெயரும், அதற்கான மரமும் பார்க்க முடிந்தது. அப்படியே பன்னிரெண்டு ராசிகளுக்கும்.  பெயர் எழுதியவர் பாவம் - அவருக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறார்.  மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை!

நுழைவு வாயில் அருகே செல்ஃபி எடுத்துக்கொள்ள ஓரிடம்....

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட புழுக்களின் வடிவத்தினுள் நுழைந்து செல்லும் குழந்தைகள் ஒலி எழுப்ப, எதிரொலி ரீங்காரம் கேட்டு, இன்னும் அதிகமாய் ஒலி எழுப்பும் குழந்தைகள்....  நமக்கும் ஒலி எழுப்பத் தோன்றுகிறது – நானும் கொஞ்சம் கத்தினேன்! ஆங்காங்கே சில செயற்கை நீர் நிலைகள், அவற்றைக் கடக்க தொங்கு பாலங்கள், அந்த நீர்நிலைகளில் வரிசை மாறாது செல்லும் வாத்துகள்....  செயற்கை மரங்களில் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள்.....

விளையாட ஆசை தோன்றுகிறதா உங்களுக்கும்....

ஊஞ்சல்களில் விளையாடும் சிறுவர்கள்/சிறுமிகளைப் பார்த்த உடன் நமக்கும் ஊஞ்சலாட ஆசை வருகிறது.  சில பெண்கள் ஊஞ்சலில் உட்கார, “குழந்தைகளுக்கு மட்டும் தாங்க, நீங்கல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் உடைந்து விடும்!என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள்! ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரிஆங்கிலத்தில் Sago Palm! அச்செடியின் அருகே அமைந்திருந்த குடிலில் காதலன் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் காதலி...... 


பூ பூக்கும் ஓசை.... அதை கேட்கத் தான் ஆசை!


பூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்.....


என்னில் தான் எவ்வளவு அழகிய வண்ணம்.....

இப்படியாக வண்ணத்துப்பூச்சிகளையும், பூக்களையும் காட்சிகளையும் பார்த்து ரசித்தபடியே பூங்காவினை விட்டு வெளியே வரும் வழியின் அருகில் வந்திருந்தோம்.  பெயரில் வண்ணத்துப்பூச்சி இருந்தாலும் பூக்களும் செடிகளும் தான் அதிகம் இருந்தன. செயற்கை வண்ணத்துப் பூச்சிகளே அதிகம் இருப்பதாய்த் தோன்றியது.  காலை நேரங்களில் தான் வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள் – நாங்களும் காலையில் தான் அங்கே சென்றோம் என்றாலும் அத்தனை இல்லை என்பதில் வருத்தம் தான்.


நீ மூன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....

இப்பறவையைப் போல ஆட்டின் மேல் பயணிக்க எனக்கும் ஆசை....  ஆடு அழுமே என நகர்ந்து விட்டேன்.....

திருச்சியில் கோவில்கள் நிறையவே உண்டு என்றாலும் சுற்றுலாத் தலங்கள் என்று பார்த்தால், முக்கொம்பு மற்றும் கல்லணை மட்டுமே. அவற்றிலும் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் போவதை விட சும்மா இருக்கலாம்.  சமீபத்தில் அமைத்திருக்கும் இப்பூங்காவினையும் நம் மக்கள் ஒரு வழி செய்து விடுவதற்குள் இங்கே சென்று விட்டால் பூங்காவினையும் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ரசிக்க முடியும்.....

திருச்சி வந்தால் இங்கேயும் சென்று ரசிக்கலாமே......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....

டிஸ்கி:  பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகளை படம் பிடித்து அவற்றை சென்ற ஞாயிறில் ”ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே” எனும் பதிவில் பகிர்ந்து கொண்டேன்.  அப்பட்டாம்பூச்சி படங்கள் மீண்டும் இங்கே..... 

அட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே!.....


இந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே!..... என்று யோசிக்கிறதோ?


புல்லில் ஏதாவது இருக்குமோ!.....


என் எடை கூட தாங்கவில்லையே இப்பூ!


கொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்....  நிறைய வேல இருக்கு!


மண்ணுக்குள்ளும் மது இருக்குமோ?


எங்களுக்குள் போட்டி......  

அங்கே பூக்களை படமாக எடுத்து வைத்ததில் சில இங்கே.  இன்னும் சில வரும் ஞாயிறில் வெளியிடப்படலாம்! :)