எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Saturday, January 23, 2016

விமானத்தில் அன்னியள்.....இரயில் பயணங்கள் மிகவும் பிடித்தவை என்றாலும், குறைவான நேரத்தில் தமிழகம் வந்து சேர்ந்து விட முடியும் என்ற காரணத்தினால் விமானப் பயணங்கள் மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. பொங்கலுக்கு ஊருக்கு வர வேண்டும் என 14-ஆம் தேதிக்கு விமானத்தில் பயணிக்க முன்பதிவு செய்திருந்தேன்.  இம்முறையும் புறப்படும் நாளுக்கு ஒரு நாள் முன்பு தான் விடுமுறை எடுத்துக்கொள்ளலாம் என அனுமதி கிடைத்தது! அதன் பிறகு இரயிலில் பயணித்தால் மாட்டுப் பொங்கலுக்குக் கூட வந்து சேர முடியாது!

இரயில் பயணங்கள் ஸ்வாரஸ்யமானவை. அதில் கிடைத்த பல அனுபவங்களை என்னுடைய வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன். விமானப் பயணங்களில் கிடைத்த அனுபவங்களையும் இதுவரை அதிகமாகப் பகிர்ந்து கொண்டதில்லை. இரயில் பயணம் போல நீண்ட நேரம் எடுத்துக் கொள்ளாது என்றாலும், இப்பயணங்களிலும் சில ஸ்வாரசியங்கள் இல்லாது போகாது. காலை 06.55க்கு புறப்படும் விமானத்தில் தான் முன்பதிவு செய்திருந்தேன் என்பதால் இரண்டு மணி நேரத்திற்கு முன்பாகவே வீட்டிலிருந்து புறப்பட்டால் தான் சரியாக இருக்கும். 04.45க்கு வண்டி சொல்லி இருந்தேன்.

காலை நேரம் என்பதால் தில்லியின் சாலைகளில் அத்தனை போக்குவரத்து இருக்காது – இருபது நிமிடங்களில் எனது வீட்டிலிருந்து விமானநிலையம் சென்றடைந்தேன்.  Spice Jet விமானப் பயணம் spicy-ஆக இருக்கப் போகிறதோ என்ற நினைவுடன் அவர்களது Counter-க்குச் செல்ல, காத்திருந்த நீண்ட வரிசையில் இணைந்தேன். எனக்கு முன்னர் இருந்தவர் பெட்டியில் 16 கிலோவுக்கு மேல் இருக்க, அதற்கு கட்டணம் கேட்க, அங்கேயே பெட்டியைத் திறந்து கடை விரித்தார்.  கூடவே “Corporate Customerக்கு தரும் மரியாதை இது தானா என்று சண்டை பிடித்தார். ஒருவழியாக பெட்டியிலிருந்து காலணி, சில பல துணிகள் என வெளியே எடுத்த பிறகு 15.5 கிலோவாகக் குறைந்தது.

Cabin Luggage-க்குள் அவற்றை எல்லாம் திணித்து Boarding Pass பெற்று அவர் நகர, நானும் எனக்கான Boarding Pass வாங்கிக் கொண்டேன். ஜன்னலோர இருக்கையா, உங்கள் உயரத்திற்கேற்ற இருக்கை வேண்டுமெனில் காசு கொடுத்தால் தருகிறோம் என ஆசை காட்ட, எந்த இருக்கையானாலும் சரி என்று சொன்னேன்.  சரி இங்கே காசு பெயராது போலும் என 16F சீட் கொடுத்தார். ஜன்னலோர இருக்கை – எப்படியும் தூங்கத் தானே போகிறோம் என்று நினைத்தபடியே பாதுகாப்பு சோதனைகளுக்காக நகர்ந்தேன்.

சாதாரணமாகவே தில்லி விமான நிலையத்தில் பாதுகாப்பு சோதனைகள் கொஞ்சம் அதிகமாகவே இருக்கும். அன்றோ அதை விட அதிகமாக இருந்தது. வரிசையில் நிற்கும் பலரின் கால்களில் பார்த்தால் சாக்ஸ் மட்டுமே – Shoe-க்கள் கூட Scanner-ல் வைக்கச் சொல்லிக் கொண்டிருந்தார்கள்.  நல்ல வேளை Shoe மட்டும் கழற்றச் சொன்னதோடு விட்டார்கள். இல்லை எனில் ஒரே ரசாபாசமாகி இருக்கும்! எனது Cabin Luggage-ல் எனது ஆயுதமான Camera இருக்க, அதை எடுத்து விட்டு மீண்டும் ஒரு முறை Scanner-ல் சோதனைகள் முடித்து வெளியே வருவதற்குள் பதினைந்து நிமிடங்களுக்கு மேல் ஆனது!

3B Gate அருகே காத்திருக்கையில் ஒரு பெண் கைக்குழந்தையோடு என்னை நோக்கி வந்து கொண்டிருந்தார். கூடவே அவரது கணவரும் வேறொரு பெரியம்மாவும் – “சென்னைக்கு போறீங்களா, இவங்க என் பெரியம்மா... பெரியம்மா என்று இரண்டு முறை சொல்லி, இவங்க முதல் முறை பயணம் செய்கிறார்கள், கொஞ்சம் பார்த்துக்கோங்க எனச் சொல்லி அவர்கள் வேறு விமானத்தினைப் பிடிக்கச் சென்றுவிட எனக்கு பொறுப்பு அதிகமானது. அதற்குள் விமானத்திற்கு வரும்படி அழைப்பு வர பெரியம்மாவையும் அழைத்துக் கொண்டு முன்னேறினேன். 

விமானம் வரை அழைத்துச் செல்ல ஒரு பேருந்து காத்திருந்தது. அதில் பெரியம்மாவையும் உட்கார வைத்து நானும் உட்கார்ந்து கொள்ள சிறிது சிறிதாக பேருந்து நிறைந்தது. பேருந்து நிறைந்ததும் விமானத்தினை நோக்கி முன்னேறியது. விமானத்தின் அருகே சென்று நின்றது.  கிட்டத்தட்ட ஐந்து நிமிடங்களாக அங்கே நின்று கொண்டிருந்தது. கதவுகளைத் தான் திறக்கவே இல்லை! அதற்குள் ஒருவர் தமிழில் சத்தமாக, “கதவைத் திற.... காற்று வரட்டும்!என்று சொல்லி முடிப்பதற்கும், ஓட்டுனர் கதவுகளைத் திறப்பதற்கும் சரியாக இருந்தது! ஒரு வேளை ஓட்டுனர் தமிழரோ!

பெரியம்மாவினை அவரது இருக்கையில் உட்கார வைத்துவிட்டு அவர் கையிலிருந்த தில்லி கம்பளியை மேலே வைத்தேன்.  தமிழகத்தில் இருக்கும் மிகக் குறைந்த குளிருக்கு தில்லி கம்பளிகளை எடுத்து வரும் அனைவரையும் பார்க்கும்போதே எனக்கு வியர்த்து விடும்..... அன்றும் அப்படியே....  எனது இருக்கையில் சென்று கைப்பையை மேலே வைத்து விட்டு எனது இருக்கையில் அமர – அதிர்ச்சி! இருக்கையை பின்னால் தள்ளவே முடியவில்லை.  கைகள் வைத்துக் கொள்ள இருக்கும் Hand rest உடைந்து தொங்கிக் கொண்டிருந்தது! விமானத்தில் கூட இப்படி பராமரிப்பு இல்லாமல் வைத்திருக்கிறார்களே என்ற எண்ணத்துடன் Seat Belt அணிந்து கண்களை மூடி உறங்க முயற்சித்தேன்.

நடுநடுவே பல குரல்கள் கேட்டுக் கொண்டிருந்தன. முதல் முறை பயணிக்கும் ஒரு சிறுவன் அலைபேசியில் யாரையோ அழைத்து, “மாமா.... நான் Flight-ல இருக்கேனே!என்று மகிழ்ச்சியோடு சொல்லிக் கொண்டிருந்தான். Airhostess Mobile-Flight Mode-ல் வைக்கச் சொல்ல, அப்போது தான் ஏதோ மிக முக்கியமான வேலை இருப்பதைப் போல Mobile-ஐயோ Laptop-ஐயோ நோண்டிக் கொண்டிருந்தார்கள். சிறிது நேரத்தில் உறக்கத்தில் நான் மூழ்கினேன். 

விமானம் புறப்பட்டதோ, பக்கத்து இருக்கைகளில் யாரும் அமர்ந்தார்களா என்பதும் எனக்குத் தெரியாது. நல்ல உறக்கத்தில் இருக்க, விமானியின் குரல் எனது உறக்கத்தினைக் கலைத்தது. கண்களை மூடியபடியே என்ன சொல்கிறார் என்று கேட்டேன். பொதுவாக ஜனவரி மாதங்களில் தில்லியில் பனி மூட்டம் காரணமாக விமானங்கள் தாமதமாகத் தான் இயங்கும். ஆனால் அங்கே தப்பிய நாங்கள் வித்தியாசமாக சென்னையில் பனி மூட்டம் காரணமாக தரையிறங்க அரை மணி நேரத்திற்கு மேல் தாமதமாகும் என்று சொல்ல, மீண்டும் தூங்க முயற்சித்தேன். 

சில நிமிடங்களுக்குப் பிறகு கண்களைத் திறந்து பக்கத்து இருக்கையைப் பார்த்தால் காலியாக இருந்தது. அடுத்த இருக்கையைப் பார்த்த எனக்குப் பேரதிர்ச்சி.....   அந்த இருக்கையில் முகத்தினை தனது கூந்தலால் மூடியபடி ஒரு பெண் அமர்ந்திருந்தார்.  அன்னியன் படத்தில் விக்ரம் தனது முகத்தினை தலைமுடி கொண்டு மூடிக் கொண்டு கண்களை உருட்டி பயமுறுத்துவாரே அது மட்டும் மிஸ்ஸிங்....  கண்களை மூடிக்கொண்டிருந்ததால் தப்பித்தேன்....... கண்களை உருட்டி உருட்டி என்னைப் பார்த்திருந்தால் அன்னியள் என்று நினைத்து அலறி இருக்க வாய்ப்பு உண்டு!இப்படியாகப் பயணித்து ஒரு வழியாக சென்னை விமான நிலையத்தில் தரை இறங்கி திருச்சி நோக்கி பயணிக்க வேண்டும்.  பொங்கல் சமயம் – பேருந்துகள் நிலை பற்றி நான் சொல்லித் தான் தெரிந்து கொள்ள வேண்டுமா?  இருந்தாலும் அப்பயணத்தில் கிடைத்த அனுபவங்களை இரண்டொரு நாளில் பகிர்ந்து கொள்கிறேன்!

மீண்டும் சந்திப்போம்......

நட்புடன்

வெங்கட்.

திருவரங்கத்திலிருந்து.....

32 comments:

 1. வணக்கம்
  ஐயா

  தொடருங்கள் படிப்பதற்காக காத்திருக்கேன். த.ம 2
  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   Delete
 2. சுவாரஸ்யம்... தொடர்கிறேன்...

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   Delete
 3. அன்னியள் என்ன ஆனாள்?

  ReplyDelete
  Replies
  1. நான் என் வழியே செல்ல, அன்னியள் அவரது வழிச் சென்றிருக்க வேண்டும்! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 4. புதுக்கோட்டைக்கு அன்போடு வரவேற்கிறோம். வாய்ப்பிருப்பின் தஞ்சைக்கு வாருங்கள்.

  ReplyDelete
  Replies
  1. தஞ்சைக்கும் வர முயற்சிக்கிறேன்......

   தங்களது வருகைக்கும் அழைப்பிற்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   Delete
 5. ஒவ்வொரு பயணமுமே நினைவலைகளில் தன் பங்கிற்கான சேமிப்பை விட்டுச் செல்கின்றன அல்லவா
  நன்றி ஐயா

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   Delete
 6. என்னவோ ஏதோ என்று வந்தேன். வெடிகுண்டு, துப்பாக்கி என்றெல்லாம் எதிர்பார்த்தேனே... ஏமாற்றி விட்டீர்களே!

  ReplyDelete
  Replies
  1. அதான் எல்லாவற்றையும் பாதுகாப்பு சோதனை செய்து பிடுங்கிக் கொள்கிறார்களே! :)

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   Delete
 7. அந்நியள்!! அஹஹஹ் நல்ல காலம் ஃப்ளைட்டில் (உங்கள்) சீட் கைப்பிடி உடைந்திருக்கிறது, பராமரிப்பு சரியில்லை யார் அந்த நபர் என்று அந்நியன் போல் அவதாரம் எடுக்காமல் இருந்தாரே!

  கீதா: ஒரு சிலர் நிறைய சாமன்கள் கொண்டுவந்துவிட்டு அங்கு கடைவிரிப்பார்கள். வழியனுப்ப யாரும் வந்திருக்கவில்லை எனில் சில சமயங்களில் குப்பைத் தொட்டிக்கு அல்லது கூடுதல் பணம் கட்டி எடுத்துச் செல்வார்கள். இருக்கை ப்ரிஃபெரன்ஸ் எக்ஸ்ட்ரா பைசாவா?!

  அடுத்த ஸ்வாரஸ்யங்களுக்காக காத்திருக்கின்றோம்!

  ReplyDelete
  Replies
  1. அன்று அங்கே வந்தவர், குப்பைத் தொட்டியில் போடவில்லை. எல்லாவற்றையும் மாற்றி மாற்றித் திணித்துக் கொண்டிருந்தார்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

   Delete
 8. பெரியம்மா என்ன ஆனாங்க? இங்கே ஶ்ரீரங்கத்தில் எத்தனை நாட்கள் முகாம்? நாளைக்குக் கொஞ்சம் பிசி. ஓர் சீமந்தம் கலந்துக்கணும். அப்புறமா புதன்கிழமை நாங்களும் ஓர் பயணத்தில்! முடிஞ்சா அதுக்குள்ளே வாங்க!

  ReplyDelete
  Replies
  1. பெரியம்மாவின் சீட் வரை அழைத்து வந்து உட்கார வைத்த பிறகு தான் என் இருக்கைக்கே சென்றேன். புதன் கிழமை அடுத்த பயணமா? உங்களை அலைபேசியில் அழைக்கிறேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா.

   Delete
  2. இல்லை, பெரியம்மாவைச் சென்னையில் உறவினர்கள் ஜாக்கிரதையா அழைத்துப்போனாங்களானு கவலை! :) அதான் கேட்டேன். முடிஞ்சா வாங்க வீட்டுக்கு.

   Delete
  3. தமிழகம் வந்து சேர்ந்தவுடன் பெரியம்மாவிற்கு அதீத தெம்பு வந்து விட்டது. என்னைக் கண்டுகொள்ளாமல் முன்னே சென்று விட்டார்கள்..... :) நானும் விட்டு விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா...

   Delete
 9. விமானப்பயணக் கட்டுரை சுருக்கமாகவும் சுவையாகவும் உள்ளது.

  //ஜன்னலோர இருக்கையா, உங்கள் உயரத்திற்கேற்ற இருக்கை வேண்டுமெனில் காசு கொடுத்தால் தருகிறோம் என ஆசை காட்ட, எந்த இருக்கையானாலும் சரி என்று சொன்னேன். சரி இங்கே காசு பெயராது போலும் என 16F சீட் கொடுத்தார்.//

  :)))))

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   Delete
 10. >>> Mobile-ஐ Flight Mode-ல் வைக்கச் சொல்ல, அப்போது தான் ஏதோ மிக முக்கியமான வேலை இருப்பதைப் போல அதை நோண்டிக் கொண்டிருந்தார்கள்.<<<

  நல்ல வர்ணனை.. இதைப் போல பலமுறை கண்டிருக்கின்றேன்..

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   Delete
 11. சுவாரஸ்யமான அனுபவம்! பகிர்வுக்கு நன்றி!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   Delete
 12. இது என் அனுபவம் ....முதல் முறை விமானப் பயணத்தின் போது ,சீட் பெல்ட்டை எப்படி அணிய வேண்டுமென்று ஏர் ஹோஸ்டஸ் அபிநயம் செய்து விவரித்ததை ,என் பையன் செல் மூலம் படம் பிடிக்க ,அதை தடுத்ததுடன் ,அதை செல்லில் இருந்து அழிக்கும் வரை விடவில்லை அந்த ஏர் ஹோஸ்டஸ் :)

  ReplyDelete
  Replies
  1. அது தப்புத் தான் பகவான் ஜி! அப்படிச் செய்திருக்கக் கூடாது! :(

   Delete
  2. உண்மை தான்.... அப்படி எடுப்பது தவறு தான்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   Delete
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

   Delete
 13. விமனப்பயண அனுபவம் அருமை!

  ஏயார்போர்ட்டில் செக்கிங்க் என இடுப்பில் இருக்கும் பெல்ட் முதல் சூ வரை ஸ்கேனரில் தனித்தனியே போடுவது மட்டுமல்ல ஹாண்ட் லக்கேஜில் பல்விளக்கும் பேஸ்ட் ரியூப், கிரீம் கள் இருந்தாலும் தூக்கி போட்டு விடுகின்றார்கள்.

  ReplyDelete
  Replies
  1. உண்மை தான். பலவற்றையும் தூக்கி எரிந்து விடுவார்கள் என்பதால் பெரும்பாலும் Cabin Luggage-ல் அவற்றை வைப்பதே இல்லை.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

   Delete
 14. விமானப் பயணம் மேற்கொண்டு இரண்டு வருடங்கள் ஆகிவிட்டன. இனி பயணித்தால் முதன் முறை பயணிப்பது போல் இருக்கும் போல. தொடர்கிறேன்!

  ReplyDelete
  Replies
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   Delete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....