புதன், 13 ஜனவரி, 2016

ஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு




மகிழ்நிறை வலைப்பூவில் எழுதும் மைதிலி கஸ்தூரி ரெங்கன் துவங்கி வைத்த அடுத்த தொடர்பதிவு “பயணங்கள் முடிவதில்லை”.  இதே தலைப்பில் என்னையும் எழுத அழைப்பு விடுத்திருக்கிறார்கள் தேன் மதுர தமிழ் வலைப்பூ எழுதும் கிரேஸ் மற்றும் மனசு வலைப்பூவில் எழுதும் பரிவை சே. குமாரும்.. எனக்குத் தெரிந்து ஏற்கனவே சிலர் இத்தொடர் பதிவினை தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களது பதிவுகளில் ஒரு சில பதிவுகள் மட்டுமே படிக்க நேரம் கிடைத்தது. மற்றவர்களின் பதிவுகளை படிக்கும் முன்னரே எனது பதிவினை எழுத வேண்டிய கட்டாயம் [மூன்று வார விடுமுறையில், இணைய இணைப்பு சரியாக கிடைக்காது எனும் காரணத்தினால் பதிவுகள் எழுதுவது கடினம்]. பயணங்கள் பற்றி எழுத கசக்குமா என்ன? இதோ தொடர்வண்டியின் ஒரு பெட்டியாக எனது பதிவும் இன்றைய தினத்தில் வெளியிட்டு விட்டேன்!



சிறு வயது முதலாகவே எனது பயணங்கள் துவங்கி விட்டன எனச் சொல்லலாம்! படித்தது நெய்வேலி என்றாலும், ஆண்டுத் தேர்வு முடிந்து வரும் விடுமுறை அனைத்திலும் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகருக்கு பயணம் செய்வது எங்களுக்கு வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் அப்படி பயணம் செய்வது நினைவில் இருந்தாலும், ரயில் வண்டியில் நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லை. விஜயவாடா நகரில் நடந்த நிகழ்ச்சிகள் பலவும் மனதில் பசுமையாய்......  அது பற்றி எழுதினால், அதற்காகவே பல பதிவுகள் எழுத வேண்டி வரலாம் என்பதால் பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! இப்போதைக்கு தொடர் பதிவில் கவனம் செலுத்துகிறேன்!



1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?

சிறுவயதில் சென்னையிலிருந்து விஜயவாடா வரை பலமுறை ரயிலில் பயணித்திருந்தாலும், முதல் பயணம் நினைவில் இல்லை – மிகச் சிறிய வயதிலேயே [மூன்றோ அல்லது நான்கு வயதிலோ] பயணித்த காரணத்தினால்! நினைவு தெரிந்த பிறகு பல பயணங்கள். அதுவும் தில்லியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு எத்தனை எத்தனை பயணங்கள் – ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவங்கள்..... கடந்த ஆறு வருடங்களில் கிடைத்த சில ரயில் அனுபவங்களை எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.

சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இளம்பெண் எனது இருக்கையில் அமர்ந்து கொண்டு தனது இருக்கை அது தான் என அடம் பிடிக்க, அவர் பயணச் சீட்டினைக் காண்பிக்கச் சொன்னால் மறுத்து விட்டு, இடத்தை விட்டு அகலாமல் ரொம்பவே படுத்தினார்.  பரிசோதகர் வந்து, சீட்டினை வாங்கிப் பார்த்துவிட்டு சொன்னது – “இந்தாம்மா...  இது நாளைக்கு போற ரயிலுக்கான சீட்டு...  ஃபைன் கட்டுறயா, இல்லைன்னா விஜயவாடாவில் இறங்கிக்கோ!”  என்று சொல்ல, பரிசோதகரிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி காலியான இடம் ஒன்றை அப்பெண்ணுக்குத் தர வைத்தேன்.  கிடைத்தது தேங்க்ஸ்ண்ணா....மட்டுமே..... படுத்திய படுத்தலுக்கு அவர் Sorry கூட சொல்லவில்லை!



2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?

அனைத்து பயணங்களுமே மகிழ்ச்சியானவை தான். மகிழ்ச்சியாக இருப்பதற்காகத் தானே பயணம் செய்கிறோம். அதுவும் சுற்றுலா என்று செல்லும் போது ஒரே கும்மாளம் தான்.  தமிழகம் நோக்கிய சில பயணங்களில் சக பயணிகள் செய்யும் அட்டகாசங்களினால் அவதியுற்ற பயணங்களை வெறுத்திருக்கிறேன். மறக்கமுடியாத பயணம் எனில் கடும் குளிர் காலத்தில் [Visibility 2 Feet] தில்லியிலிருந்து இரவு நேரம் ஏடா நகர் வரை காரில் சென்ற பயணம் தான்..... சில இடங்களில் சுத்தமாக visibility குறைந்து அடர்ந்த பனிமூட்டத்தில் Blinkers ஐ உபயோகித்தபடியே ஓட்டுனர் வண்டியை நகர்த்தினார்! அந்த வேகத்தினை விட, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கூட கொஞ்சம் வேகமாக போயிருக்கும்!



3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?

பயணத்தின் ஆரம்பத்திலேயே எல்லாவித ஏற்பாடுகளும் செய்துவிட்டு, பயணிக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு தங்குமிடம் தேடுவது, உணவு தேடுவது என்று இல்லாமல் எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடுகள் செய்து கொண்டு போவது பிடிக்கும். கவலைகள் மறக்க பயணிக்கும் போது அங்கேயும் சென்று பட்ஜெட் பற்றி யோசிக்காது நிம்மதியாக பயணிக்க வேண்டும்.  மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் பணம் செலவாகிறதே என்ற எண்ணத்தோடு பயணிப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்!



4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?

மெல்லிசையாக இருத்தல் நலம்...... ஏகப்பட்ட ட்ரம்ஸ் பயன்படுத்தி காதினை கிழிக்கும் இசையை பயணத்தில் நிச்சயம் விரும்ப மாட்டேன். சமீபத்திய பயணம் ஒன்றில் எங்களுடைய ஓட்டுனர் ஒரு நேபாளி. பயணித்த நாங்கள் கேட்டதோ தமிழ் மற்றும் மலையாளப் பாடல்கள்.....  நீண்ட பயணம் அது!  சில மணி நேரங்களுக்குப் பிறகு அந்த ஓட்டுனர் எங்களிடம் கேட்ட கேள்வி – “கொஞ்ச நேரம் நேபாளி மொழி பாடல் கேட்கிறேன் ப்ளீஸ்!”  உடனே நாங்கள் அனுமதிக்க, சில மணி நேரத்திற்கு ஒரே மெட்டில் பல நேபாளி பாடல்கள் கேட்டோம்!



5. விருப்பமான பயண நேரம்:

அதிகாலை நேரம் அல்லது இரவு பத்து மணிக்கு மேல்...  இதமான குளிர் காலத்தில் – அதிக சூடோ, அதிக குளிரோ இருக்கும் நேரத்தில்/சீசனில் பயணிப்பதில் அவ்வளவு விருப்பம் இல்லை.....   இருந்தாலும் தவிர்க்க முடியாத சமயங்களில் எந்த நேரத்திலும் பயணம் செய்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை!



6. விருப்பமான பயணத்துணை:

விருப்பமான பயணத்துணை – அது Better half –ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை.  ஆங்கிலத்தில் சொல்வது போல Wavelength Match ஆகும் நண்பர்களுடன் கூட பயணிக்கலாம்! ஒரு சில இடங்களுக்கு Better half உடன் பயணிப்பது முடியாத விஷயம் – குறிப்பாக கடும் பயணங்கள்.....  அந்த மாதிரி பயணங்களில் ஒத்த மன நிலை கொண்ட நண்பர்களோடு பயணிப்பது தான் பிடிக்கும்!



7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?

செல்லும் இடம் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம் என்றால் படிக்க விருப்பமிருக்கும். அப்படி இல்லை, வேறு புத்தகம் எனில் நிச்சயம் படிக்க மாட்டேன். போகும் வழியெங்கும் கைகளில் காமிரா தயாராக இருக்கும் – ரசிக்கும் காட்சிகளை சிறைப்படுத்த!




8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?

தடையில்லாத பயணம் – இந்தியாவின் National Expressway -1-ல் தங்கு தடையின்றி பயணிக்க முடியும். அச்சாலையில் நான்கு சக்கர வாகனத்திலோ, அல்லது நீண்ட நாள் ஆசையான என்ஃபீல்ட் பைக்கிலோ பயணம் செய்ய வேண்டும். சில கிலோமீட்டர் தொலைவு அப்பாதையில் சென்றிருந்தாலும், முழு நீளப் பயணம் செய்ய வேண்டும் என்பது விருப்பம்.....



9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?

பல பாடல்களை குறிப்பாக 80-90 களில் வந்த சில பாடல்களை முணுமுணுத்ததுண்டு!  மற்றபடி சத்தமாக பாடி, தன் இனத்தின் குரல் போல இருக்கிறதே என வேகமாகச் செல்லும் வண்டிக்குக் குறுக்கே கழுதையார் வந்து அடிபட்டுக் கொள்வாரேவாரே என்பதால் சத்தமாக பாடுவதில்லை!



10. கனவுப் பயணம் ஏதாவது ?

கனவுப் பயணம் ஒன்றல்ல, இரண்டல்ல நிறையவே உண்டு. இருந்தாலும், இரண்டு மூன்று பயணங்கள் போக ஆசை – அவை Leh-Ladakh பகுதிகளுக்கு குறைந்தது 15 நாட்கள் பயணமாகச் செல்ல வேண்டும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பயணிக்காத சிக்கிம் மாநிலத்திற்கு ஒரு வாரப் பயணம் செய்ய வேண்டும். தவிர கைலாஷ்-மானஸ்ரோவர் யாத்திரை செல்லவும் விருப்பமுண்டு.  இதைத் தவிர இந்தியாவில் இது வரை பயணிக்காத மாநிலமான ஜார்க்கண்ட் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்!  ஆசைக்கு எல்லை ஏது!




பயணம் குறித்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும் பதில் சொல்லி விட்டேன்!  அடுத்ததாக தொடர்பதிவு எழுத யாரையாவது அழைக்க வேண்டும்.....  அது தான் கொஞ்சம் கஷ்டம்! பயணம் பற்றி எழுதுவதில் அத்தனை சிரமம் இல்லை.  அடுத்தவர்களை அழைப்பதில் தான் சிரமம் இருக்கிறது.  தொடர நினைக்கும் நண்பர்கள் யாரும் தொடரலாம்!  எத்தனை பேராக இருந்தாலும் படிக்க நான் தயார்! எழுத நீங்கள் தயாரா?

சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.......

நட்புடன்

வெங்கட்.

புது தில்லி.   

60 கருத்துகள்:

  1. மூன்றாவது கேள்விக்கான பதில் நல்ல பதில். பாடம்.

    //ஒரே மெட்டில் பல நேபாளிப் பாடல்கள்// :)))) அடப்பாவமே...

    //செல்லுமிடம் எல்லாம் கேமிரா தயாராய் இருக்கும்// ரீ சார்ஜபிள் பேட்டரி ஆக இருந்தாலும் நீண்ட நேரம் வருவதில்லை. ரிசர்வ் பேட்டரி கையில் இருந்தாலும் கஷ்டமாய்த்தான் இருக்கிறது.

    பயண அனுபவங்களை ரசித்தேன்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. சில நேபாளி பாடல்கள் ஆரம்பத்தில் நன்றாகத் தான் இருந்தது! ஒரே பாடல் கேட்பது போன்ற உணர்வு வந்துவிட்டபின் கஷ்டம்!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம் ஜி!

      நீக்கு
  2. விடுமுறை செல்லும் முன் எங்கள் அழைப்பை ஏற்று உங்கள் பயண அனுபவங்களைப் பகிர்ந்ததற்கு முதலில் நன்றி சொல்லிக் கொள்கிறேன் அண்ணா.
    உங்கள் சீட்டில் அமர்ந்திருந்த பெண்ணைப் போல் ஒரு வயதான தம்பதி, 12 am டிக்கெட்டிற்கு ஒரு நாள் தாமதமாக வந்தார்கள். பெங்களூரிலிருந்து மதுரை செல்லும் ரயிலில், சேலத்தில் பனிரெண்டு மணிக்கு ரயில் நிற்கும், அதில் ஏற்பட்ட குழப்பம். பின்னர் பரிசோதகர் டிக்கட் மீண்டும் வாங்குங்கள், என்று சொல்லி அழைத்துச் சென்றார். பனிமூட்டத்தில் ஓட்டிய/ஓட்டும் அனுபவம் உண்டு. கவனமாக இருக்க வேண்டியது அவசியம் எனினும் பனியில் பளிச்சிடும் வாகன விளக்குகள் அழகாய்த் தோன்றும் :)
    அதானே...வெங்கட் அண்ணா புத்தகம் படித்தால் எங்களுக்கு அழகான படங்கள் கிடைக்குமா? அதனால் நீங்கள் புத்தகம் படிக்காமலிருப்பது(பயணத்தில்) எங்களுக்கு மகிழ்ச்சி. :)
    Leh பயணம், என்பீல்ட் ... என் கணவருக்கும் இந்த கனவு உண்டு. நானும் தொற்றிக்கொள்வேன்..ஹாஹா
    உங்கள் கனவுகள் நிறைவேற வாழ்த்துகள். (இதில் சுயநலமும் உண்டு, எங்களுக்கு சுவாரசியமான பதிவுகளும் படங்களும் கிடைக்குமே!)
    பயணத்திற்கு ஏற்ற சொற்றொடர்களும் படங்களும் ரசித்தேன். மீண்டும் நன்றி அண்ணா.
    உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினற்கும் இனிய பொங்கல் வாழ்த்துகள்!
    த.ம.3

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கிரேஸ்.

      பதிவினை எழுதக் காரணம் தொடர்பதிவு துவங்கிய மைதிலி, அழைத்த கிரேஸ் மற்றும் குமார் தானே.. இப்பதிவு பிடித்திருந்தால், அதற்குக் காரணமும் நீங்கள் தானே! :)

      நீக்கு
  3. பயணங்களின் ரசிகர் மட்டுமல்ல... பயணித்த அனுபவங்களை மிக சுவாரசியமாகச் சொல்வதிலும் கைதேர்ந்தவர் நீங்கள். பயணங்கள் குறித்த உங்களுடைய அனுபவங்களும் கருத்துகளும் ரசிக்கவைத்தன. ஓட்டுநரின் விருப்பத்துக்கு மதிப்பளித்த செயல் பாராட்டுக்குரியது.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதமஞ்சரி.

      நீக்கு
  4. பயணமும் போட்டோ கிராபியும் உங்கள் வாழ்வின் இரு அம்சங்கள். உங்கள் வலைத்தளத்தில் உங்கள் பயண அனுபவங்களை நிறையவே படித்து இருக்கிறேன்..இந்த தொடர் பதிவிலும் சுவையான செய்திகள். நன்றி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஜி!

      நீக்கு
  5. தொடர் பதிவிற்கு பொருத்தமானவர்களில் நீங்கள் தான் முதலாமானவர்... திட்டமிடல் 3-வது பதில் உட்பட அனைத்தும் அருமை...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. என்னை விட அதிகமாய் பயணம் செய்பவர்களும், சிறப்பாக பகிர்ந்து கொள்பவர்களும் உண்டு!

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

      நீக்கு
  6. தங்களின் கனவுப் பயணங்கள் விரைவில் நிறைவேறட்டும்
    நன்றி ஐயா

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

      நீக்கு
  7. பயணங்கள் என்றுமே சுகமானவை..
    இனிய பதிவு.. அருமை..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

      நீக்கு
  8. உங்கள் பயணப் பகிர்வு அருமை அண்ணா...
    எங்கள் நண்பர்கள் குழு ஒரு முறை கம்பம், போடிமெட்டு வழியாக கேரளாவிற்குள் சென்றோம். அப்போது மலை ஏறி அங்கிருந்து மீண்டும் இறங்கிப் பயணிக்க வேண்டிய பாதை... கேரளாவிற்குள் மழை... அதில் பயணிப்பதே சிரமமாக இருந்தது. ஓட்டியவனும் எங்கள் நண்பனே... பகலில் மழை... இரவில் பனி... இரவில் மழையில் இறங்கிக் கொண்டிருக்கிறோம்... கொண்டை ஊசி வளைவுகள் அதிகம் இருந்த பாதை... பனி மூட்டம் வேறு சிரமப்பட்டு பயணிக்க, ஓரிடத்தில் சுத்தமாக ஓட்டமுடியாது என ஓரமாக நிறுத்திவிட்டான். நாங்கள் காரில் இருக்கிறோம்... பனி மூட்டம் எங்களைக் கடக்கிறது... எதிரில் இருந்து ஏதாவது வண்டி வரலாம் என்று பார்த்துக் கொண்டிருக்கிறோம்.... எங்களுக்கு இடதுபுறமாக வண்டி வருகிறது... அதாவது அந்த இடத்திலும் கொண்டை ஊசி வளைவு.... இன்னும் பத்துப் பதினைந்து அடி வண்டி நேரே பயணித்திருந்தால்.... இன்னைக்கு எழுதிக் கொல்ல நான் இருந்திருக்கமாட்டேன்... எல்லாருக்கும் உடம்பு ஆடிப்போச்சு... நண்பன் அதற்கு மேல் ஓட்டமாட்டேன் என்று சொல்லிவிட, மற்றொரு நண்பன் மிக மெதுவாக ஓட்ட, அருகில் இருந்த நகரத்திற்குள் சென்று தங்கினோம்...

    உங்கள் கனவுப் பயணம் விரைவில் நிறைவேறட்டும் அண்ணா...

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. கல்லூரி பயணத்தின் போது இப்படி ஒரு விஷயம் நடந்ததுண்டு. வால்பாறையின் கொண்டை ஊசி வளைவுகளில் வண்டியைத் திருப்ப முடியாது திண்டாடி சில வளைவுகளுக்குப் பிறகு அனைவரும் அலற ஓட்டுனர் வேறு வழியின்றி திரும்பினார் - வால்பாறை வரை செல்லவில்லை..... அதன் பிறகு ஒரு முறை செல்ல முடிந்தாலும், நண்பர்களுடன் செல்லும் மஜா அதில் இல்லை! :)))

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பரிவை சே. குமார்.

      நீக்கு
  9. பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

      நீக்கு
  10. ஆதலினால் பயணம் செய்வீர் .... தலைப்பும் கட்டுரையும் மிக அருமை. பாராட்டுகள், ஜி.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

      நீக்கு
  11. அருமையான அனுபவங்கள்!

    அனைத்து முன்னேற்பாடுடன் பயணம் செய்வது தான் சிக்கனமானது என நான் என்னூரை சைத்து அறிந்திருந்தேன், தீடீர் பயணங்கள் தான் செலவை அதிகமாக்கும் ஆனால் உங்கள் அனுபவம் உடனடி திட்டமிடல் செலவை குறைக்கும் என்பது எனக்கு புதிய செய்தி!

    அதே போல் செல்லுமிடங்களில் உணவுகள் வாங்கி உண்பதை தவிர்த்து விடுவேன், முக்கியமான காரணமாக டாய்லட் பிரச்சனை இருப்பதால் பெரும்பாலும் சாப்பாடு விடயத்தில் வெளியில் சாப்பிடுவதை குறைக்கவே விரும்புவோம்.

    கனவுப்பயணம் நிறைவேறிட வாழ்த்துகள். விடுமுறை வாழ்த்துகளோடு பொங்கல் வாழ்த்துகளும்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.....

      நீக்கு
  12. பயணங்கள் முடியாது தொடர்வதில் மகிழ்ச்சி! இனிமையான அனுபவங்களை பகிர்ந்துகொண்டமைக்கு நன்றி!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

      நீக்கு
  13. அருமையான பயணக் கட்டுரை ஜி 3 வது பலருக்கும் பயணளிக்கும் தங்களது பயணங்கள் மேலும் தொடர வாழ்த்துகள் புகைப்படங்கள் பொருத்தம்.

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

      நீக்கு
  14. அற்புதமான பதிவு நண்பரே, பல கருத்துகள் எனது எண்ணத்தோடு ஒத்துப்போகின்றன.
    த ம 8

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி செந்தில் குமார்.

      நீக்கு
  15. வணக்கம் வெங்கட் அண்ணா. பயணம் உங்க ஏரியா, சொல்லவும் வேண்டுமா, நருக்குத்தெரித்தார் போல விடைகள், நச் நச் படங்கள் என கலக்கிவிட்டீர். ஒரே மெட்டில் பல பாடல்கள்.....தமிழில் கடல் போல பாடல்கள் இருக்க நேபாளப் பாடல் பக்கெட் தண்ணீர் போல இருந்திருக்கும் இல்லயா அண்ணா! அதற்கு முன் ஒரு முக்கியமான விசயத்தை சொல்லனும். இந்த விடுமுறைக்கு முன் இந்த பதிவுக்கு முக்கியத்துவம் கொடுத்தமைக்கு மிகுந்த நன்றி அண்ணா. நாங்களும் இந்த பயணத்தில் இணைந்தமைக்கு மீண்டும் என் நன்றிகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. விடுமுறையில் செல்வதால், சீக்கிரமாக எழுதினேன். நேரம் எடுத்துக் கொண்டு இன்னும் சிறப்பாக எழுதி இருக்கலாமோ! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.....

      நீக்கு
    2. உங்கள் சிறந்த பயணப் பதிவுகளை உங்களால் மட்டுமே இன்னும் சிறப்பாக்க முடியும் அண்ணா. ஒரு சிறந்த படைப்பாளியில் இயல்பு இது தானே. படிப்பவர்க்கு மனநிறைவும், படைப்பாளிக்கு இன்னும் எழுதியிருக்கலாமோ எனும் ஏக்கமும் இருக்கத்தான் செய்யும். எனக்கு இந்த பதிவு மிகசிறப்பானதாகத் தான் தோன்றுகிறது. மிக்கநன்றி அண்ணா. ஆதி அண்ணி மற்றும் குட்டி பாப்பாவை கேட்டதாக சொல்லுங்க:) பொங்கல் நல்வாழ்த்துகள் !

      நீக்கு
    3. தங்களது மீள் வருகைக்கும் கருத்துப் பைர்வுக்கும் மிக்க நன்றி மைதிலி.

      நீக்கு
  16. வணக்கம்
    ஐயா
    ஒவ்வொன்றையும் பற்றி நன்றாக சொல்லியுள்ளீர்கள் படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 9
    -நன்றி-
    -அன்புடன்-
    -ரூபன்-

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

      நீக்கு
  17. பயணம் செய்யவும் நேரமில்லை ,பயணத்தைப் பற்றி எழுதவும் நேரமில்லாமல் போய் விட்டது,உங்களுக்கு எப்படித்தான் நேரம் கிடைக்குதோ :)

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. நேரம் எப்படித் தான் கிடைக்குதோ? உங்களுக்கு இருக்கும் அதே 24 மணி நேரம் தான் எனக்கும்! :)

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

      நீக்கு
  18. அருமையான பயணங்கள் .....உங்களின் 1001ஆவது பதிவிற்கு வாழ்த்துகள்...சகோ..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கீதா ஜி!

      நீக்கு
  19. உங்கள் பயணக் கட்டுரைகளைப் போலவே, பயணம் பற்றிய இத்தொடர் பதிவும் அருமை !

    உங்களுக்கும், உங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள் !

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி சித்ரா.

      நீக்கு
  20. 2016 தைப்பொங்கல் நாளில்
    கோடி நன்மைகள் தேடி வர
    என்றும் நல்லதையே செய்யும்
    தங்களுக்கும்
    தங்கள் குடும்பத்தினருக்கும்
    உங்கள் யாழ்பாவாணனின்
    இனிய தைப்பொங்கல் வாழ்த்துகள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஜீவலிங்கம் யாழ்பாவண்ணன் காசிராஜலிங்கம் ஐயா.

      நீக்கு
  21. தங்களுக்கும், குடும்பத்தாருக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்!

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி ஆறுமுகம் அய்யாசாமி.

      நீக்கு
  22. இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!

    http://www.friendshipworld2016.com/

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி கிருஷ்ணா ரவி.

      நீக்கு
  23. அன்பினும் இனிய நண்பரே
    தங்களுக்கும், தங்களது குடும்பத்தினர் அனைவருக்கும்
    இணையில்லாத இன்பத் திருநாளாம்
    "தைப் பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்
    நட்புடன்,
    புதுவை வேலு

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் வாழ்த்துகளுக்கும் மிக்க நன்றி புதுவை வேலு.

      நீக்கு
  24. வெங்கட்ஜி சூப்பர்! உங்கள் தலைப்பே எங்கள் இறுதிவரி ஆகியிருப்பதைப் பார்த்த போது அட! என்று நினைத்தோம். நீங்கள் சொல்லியிருக்கும் பல கருத்துகள் எங்கள் எண்ணத்தோடு ஒத்துப் போயிருந்தது. என்றாலும் அதை முழுமையாகச் சொல்லவில்லை. உங்கள் பயணக் கட்டுரைகள் போலவே இதுவும் ஒரு ஹால்மார்க்!!!

    கீதா: குறிப்பாகப் பயணத் துணை பற்றியது எனக்கும் அப்படியே...நமது வேவ் லெங்க்த் ஒத்துப் போனால் அவர்களுடன் பயணம் செய்யப் பிடிக்கும். அதாவது சுற்றுலா. ஏனென்றால் மற்ற்படி பெரும்பாலும் எனது பயணங்கள் தனியாகத்தான்...பல கருத்துகள் சேம்...ஷார்ட் அண்ட் ஸ்வீட்..

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துளசிதரன்/கீதா ஜி!

      நீக்கு
  25. பதிவும் படங்களும் அவை சொல்லும் வாசகங்களும் அருமை ஜி..
    வழக்கம் போல உங்கள் தர முத்திரைப் பதிவு...



    நிகில் குறித்து சில செய்திகள்

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மது.

      நீக்கு
  26. எல்லா ஏற்பாடுகளும் செய்துட்டுப் பயணம் செய்யறச்சேயும் அது சொதப்பியது எங்களுக்கு நடந்திருக்கு! :) இப்போ சமீபத்திய ஒடிஷா பயணத்திலும் அப்படித் தான். நாலு மாசம் முன்னாடியே டிக்கெட் வாங்கியும் காத்திருப்போர் பட்டியலில் தான் இருந்தோம். கிளம்புவதற்கு முதல்நாள் தான் உறுதி செய்துச் செய்தி அலைபேசிக்கு வந்தது. அதுவும் இரண்டு பேருக்கும் மேல் படுக்கை இருக்கை. புவனேஸ்வரிலும் தங்க இடம் ஏற்பாடு செய்தும் ஐந்து மாடி என்பதால் கஷ்டம்! கல்கத்தாவில் சொல்லவே வேண்டாம்! :) அங்கேயும் இடம் முன் கூட்டிப் பதிவு செய்திருந்தோம். போனால் சேரியை விட மோசமாக இருந்தது! :(

    பதிலளிநீக்கு
    பதில்கள்
    1. எங்களுக்கு ஏற்பாடுகள் செது விட்டு புறப்படுவது செலவு கம்மி தான்,
      தீடிர் பயணத்தில் ஹோட்டல் ரூம்கள் இரு மடங்கு விலை கூட ஆகும்,ஆனால் முன் கூடி திட்டம் இட்டு செல்லும் சூழல் எங்கள் ஹோட்டல் பிசினஸுக்கு சரிவருவதில்லை.

      பிள்ளைகளின் பாடசாலை விடுமுறையில் ஆர்டர்கள் இல்லாத வாரங்கள் பார்த்து தீடிரென கிளம்புவோம். நான் எப்போதும் நிரம்ப சுத்தம் பார்ப்போன், முக்கியமாக டாய்லட் சமையலறை. அதனால் தான் எங்கள் தேவைக்கு நாங்களே சமைப்பது, அத்தோடு ஐரோப்பிய பசனங்களில் மெக்ரொடோனல்ஸ், கே,எப்சி, பிட்சா கடைகள் தவிர்ந்து சாப்பாடுகள் கிடைககாது என்பதனால் அவைகள் தொடர்ந்து சாப்பிட பிடிக்காதனாலும்,சுயமாய் சமைத்து விடுவேன்.

      சமைப்பது எனக்கு ரெம்ப பிடிக்கும்.

      நீக்கு
    2. கீதாமா சொல்வது போல் தங்குமிடம் ஏற்பாடு செய்து விட்டு போனால் பாதுகாப்பில்லாத ஒதுக்குப்புறமான ஏரியாவிலும் மாட்டிக்கும் வாய்ப்பு வரும் , அதனாலும் தீடீர் ஏற்பாடு தான்.

      நீக்கு
    3. பல சமயங்களில் முன் பதிவு செய்திருந்தாலும் இப்படி தொல்லைகள் உண்டு...... பயணத்தின் போது பல விதங்களில் Compromise செய்து கொள்ள வேண்டியிருக்கிறது....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கீதாம்மா....

      நீக்கு
    4. ஒரு சில பயணங்களில் இப்படி சமைத்து சாப்பிட்டதுண்டு. ஆனாலும், செல்லும் இடம் பொறுத்து அங்கேயே கிடைக்கும் அவர்களது உணவினை உண்பது வழக்கம்.

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு
    5. பாதுகாப்பில்லாத ஒதுக்குப் புறமான ஏரியாவில் மாட்டிக் கொள்வதும் நடக்கலாம். உண்மை தான். குடும்பத்துடன் பயணிக்கும் போது இது போல அமைந்து விட்டால் கடினம்....

      தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி நிஷா.

      நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....