புதன், 27 ஜனவரி, 2016

வண்ணத்துப்பூச்சி பூங்கா – திருச்சி


நுழைவு வாயில்.....

வாயிலில் இருக்கும் அறிவிப்பு பலகை....

ஒவ்வொரு முறை திருவரங்கம் வரும்போதும் இங்கே ஒரு வண்ணத்துப் பூச்சி பூங்கா இருக்கிறது, போக வேண்டும் என்று மகள் சொல்வாள்.  ஆனாலும் அங்கே போக முடிந்ததில்லை. எங்கே இருக்கிறது என சிலரிடம் விசாரித்தால் யாருக்கும் தெரியவும் இல்லை.  ஆனால் இம்முறை தான் திருவரங்கத்தில் சில இடங்களில் “வண்ணத்துப்பூச்சி பூங்கா செல்லும் வழிஎன்ற பதாகைகளைக் காண முடிந்தது. பிறகு தான் தெரிந்தது ஒரு விஷயம் – இரண்டு வருடம் முன்னரே இது அமைப்பதற்கான அறிவிப்பு வந்தாலும், இரு மாதங்களுக்கு முன்னரே இப்பூங்கா பொதுமக்கள் பார்வைக்கு திறந்திருக்கிறார்கள் என்பது!

பூங்காவினுள்ளே சென்று எடுத்த சூரியன் படம்!

பூங்கா திறக்கப்பட்ட விஷயம் இம்முறை தெரிந்து கொண்டதும் அங்கே சென்று வந்தோம். வண்ணத்துப்பூச்சி பூங்கா, திருவரங்கம் என்று சொன்னாலும், இது இருப்பது திருவரங்கம் தாலுகாவில் உள்ள அணைக்கரை என்ற இடத்தில் தான்.  திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக சென்றால் சுமார் எட்டு கிலோ மீட்டர் தொலைவில் 25 ஹெக்டேர் அளவு பரப்பளவில் 9 கோடி ரூபாய் செலவில் அமைக்கப்பட்டிருக்கிறது.  இன்னும் பாதி இடத்திற்கு மேல் வேலைகள் முடிக்கவில்லை என்றாலும் வேலை முடிந்த இடங்கள் மிகச் சிறப்பாக இருக்கின்றன. 

வண்ணத்துப்பூச்சி மாதிரி....

பூச்செடிகளும், குழந்தைகள் விளையாட ஊஞ்சல்களும், வண்ணத்துப்பூச்சியின் பல்வேறு பருவங்களைக் காண்பிக்கும் மாதிரிகளும், பெரிய பெரிய வண்ணத்துப் பூச்சி மாதிரிகளும், வண்ணத்துப் பூச்சி வளர்க்க உள் அரங்குகளும் அமைத்திருக்கிறார்கள்.  செயற்கை நீருற்றுகள், நக்ஷத்திர மற்றும் ராசி வனங்களும் இங்கே உண்டு.  செவ்வாய்க்கிழமை தவிர வாரத்தின் மற்ற நாட்களில் காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இப்பூங்கா திறந்திருக்கும். 

செயற்கை மரம்....

இப்பூங்காவிற்கு நுழைவுக்கட்டணம் உண்டு! பெரியவர்களுக்கு பத்து ரூபாயும், சிறியவர்களுக்கு ஐந்து ரூபாயும் வசூலிக்கிறார்கள்.  கேமராவிற்கு இருபது ரூபாயும், வீடியோ கேமரா என்றால் ரூபாய் நூறும் கட்டணம்.  வாகனம் நிறுத்துவதற்கும் தனி கட்டணம் உண்டு.   நுழைவுக் கட்டணம் வசூலிப்பதும் ஒரு விதத்தில் நல்லது தான் – அதிலிருந்து வரும் பணத்தில் பூங்காவினை பராமரிக்கும் தற்காலிக ஊழியர்களுக்கு சம்பளம் கொடுக்க முடியும்.

செயற்கை நீருற்று...

பூங்காவினைப் பற்றிய சில தகவல்களை உங்களுடன் இங்கே பகிர்ந்து கொண்டுவிட்டாலும் உங்களை முறையே உள்ளே அழைத்துச் செல்வது தானே நல்லது.  தமிழ்நாடு வனத்துறை அமைத்திருக்கிற இப்பூங்காவின் வாயிலில் ஒரு செயற்கை நுழைவு வாயில் வடிவமைத்திருக்கிறார்கள். அதன் உள்ளே நுழைந்தால் நீர் சலசலத்து விழும் ஓசை – ஆமாம் நுழைவு வாயிலின் பின்புறத்தில் ஒரு செயற்கை நீர்வீழ்ச்சி....  அதன் எதிரே ஒரு வட்ட வடிவ மேஜையில் மிகப் பெரிய செயற்கை பட்டாம்பூச்சி.....  39 வகை பட்டாம்பூச்சிகள் இப்பூங்காவில் இருப்பதாகத் தெரிகிறது.

மரமும் பூச்சிகளும் - செயற்கையாக....

புல்வெளிகளும், பூச்செடிகளும் அவற்றில் பூத்துக் குலுங்கும் பூக்களும் உங்கள் மனதில் மகிழ்ச்சி வெள்ளத்தினை ஏற்படுத்துகிறது.  இரண்டு பாதைகள் தெரிய எப்புறம் செல்வது என்று சற்றே குழப்பம். இடது புறம் திரும்பினோம். பூங்காவில் வழிகாட்டிகள் அமைத்தால் நல்லது. ஆங்காங்கே சில பதாகைகள் – பூக்கள்/செடிகளின் பெயர்கள், பட்டாம்பூச்சி வகைகள், அவற்றின் பெயர்கள் என பார்வையாளர்களுக்கு தகவல் தெரிவிக்கின்றன. ஒவ்வொரு இடமாகப் பார்த்து ரசித்தபடி சென்று கொண்டிருக்கிறோம்.

பள்ளிச் சிறுவர்களும் அவர்களின் ஆசிரியர்களும்...

எதிரே ஏதோ ஒரு பள்ளியிலிருந்து குழந்தைகளை பூங்காவிற்கு அழைத்து வந்திருக்கிறார்கள். வண்ணத்துப்பூச்சிகளைப் பார்க்க வந்த வண்ணத்துப் பூச்சிகள்.... எத்தனை குதூகலம் அவர்கள் முகத்தில்... அவர்களைப் பார்த்ததில் எங்களுக்கும் தொற்றிக் கொண்டது குதூகலமும் மகிழ்ச்சியும்.  “வரிசையா போ, ஒரு இடத்தில உட்காரு, “பிஸ்கெட் சாப்பிடலாமா? என்று கேட்ட சிறுவனிடம் “நான் சொன்னப்பறம் தான் சாப்பிடணும், சும்மா சும்மா கேட்கக் கூடாதுஎன்று கட்டளைகள் இட்ட சிடுசிடு ஆசிரியர், குழந்தைகளை கவனிக்காது தன்னை செல்ஃபி எடுத்துக் கொண்ட மூத்த ஆசிரியர், ஒவ்வொரு குழந்தைகளையும் பார்த்துப் பார்த்து அழைத்துச் சென்ற சில ஆசிரியர்கள் என பார்த்துக் கொண்டே பூக்களையும் ரசித்தோம்.

வண்ணத்துப்பூச்சி மாதிரி...

ஆங்காங்கே குடில்கள் அமைத்திருக்க, அதிலே அமர்ந்து ஓய்வு எடுத்த சிலர், அங்கேயும் அலைபேசியில் பாட்டுக் கேட்டபடி அமர்ந்திருந்த சிலர் என பார்த்தபடியே நகர்ந்தால், “பூக்கள் வண்ணத்துப்பூச்சிகளுக்கு உணவு – பறிக்காதீர்கள்என்ற அறிவிப்பினைப் படித்தபடியே பூவைப் பறிக்க முயற்சிக்கும் சில பெண்கள்! 37 வகை வண்ணத்துப்பூச்சிகள் இருப்பதாகச் சொன்னாலும் இருப்பவை வெகுசில மட்டுமே.  சமீபத்து மழையில் பல வண்ணத்துப்பூச்சிகள் இறந்து போனதாக பராமரிப்பில் இருந்த ஒரு பெண்மணி சொன்னார். கேட்கவே கஷ்டமாக இருந்தது.

வண்ணவண்ண தோட்டம்....

நக்ஷத்திர வனம், ராசி வனம் என்று பெயருடன் இருந்த இடத்தின் வெளியே ஒவ்வொரு நக்ஷத்திரத்திற்கும் என்ன மரம், பன்னிரெண்டு ராசிகளுக்கும் என்ன மரம் என்ற விவரங்கள் எழுதப் பட்டிருந்தது. உள்ளே நுழைந்தால், ஒவ்வொரு நக்ஷத்திரப் பெயரும், அதற்கான மரமும் பார்க்க முடிந்தது. அப்படியே பன்னிரெண்டு ராசிகளுக்கும்.  பெயர் எழுதியவர் பாவம் - அவருக்குத் தெரிந்ததை எழுதியிருக்கிறார்.  மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை!

நுழைவு வாயில் அருகே செல்ஃபி எடுத்துக்கொள்ள ஓரிடம்....

செயற்கையாக வடிவமைக்கப்பட்ட புழுக்களின் வடிவத்தினுள் நுழைந்து செல்லும் குழந்தைகள் ஒலி எழுப்ப, எதிரொலி ரீங்காரம் கேட்டு, இன்னும் அதிகமாய் ஒலி எழுப்பும் குழந்தைகள்....  நமக்கும் ஒலி எழுப்பத் தோன்றுகிறது – நானும் கொஞ்சம் கத்தினேன்! ஆங்காங்கே சில செயற்கை நீர் நிலைகள், அவற்றைக் கடக்க தொங்கு பாலங்கள், அந்த நீர்நிலைகளில் வரிசை மாறாது செல்லும் வாத்துகள்....  செயற்கை மரங்களில் அமைக்கப்பட்ட ஊஞ்சல்கள்.....

விளையாட ஆசை தோன்றுகிறதா உங்களுக்கும்....

ஊஞ்சல்களில் விளையாடும் சிறுவர்கள்/சிறுமிகளைப் பார்த்த உடன் நமக்கும் ஊஞ்சலாட ஆசை வருகிறது.  சில பெண்கள் ஊஞ்சலில் உட்கார, “குழந்தைகளுக்கு மட்டும் தாங்க, நீங்கல்லாம் உட்காரக் கூடாது, ஊஞ்சல் உடைந்து விடும்!என்று சொல்லி அப்பெண்களிடம் திட்டு வாங்கிக் கொள்ளும் பூங்கா பராமரிக்கும் ஆண்கள்! ஒரு நீர்நிலையின் அருகே ஒரு செடி – அதன் பெயர் “மதனகாமேஸ்வரிஆங்கிலத்தில் Sago Palm! அச்செடியின் அருகே அமைந்திருந்த குடிலில் காதலன் மடியில் படுத்துக் கொண்டிருக்கும் காதலி...... 


பூ பூக்கும் ஓசை.... அதை கேட்கத் தான் ஆசை!


பூவில் வண்டு மோதும் கண்டு பூவும் கண்கள் மூடும்.....


என்னில் தான் எவ்வளவு அழகிய வண்ணம்.....

இப்படியாக வண்ணத்துப்பூச்சிகளையும், பூக்களையும் காட்சிகளையும் பார்த்து ரசித்தபடியே பூங்காவினை விட்டு வெளியே வரும் வழியின் அருகில் வந்திருந்தோம்.  பெயரில் வண்ணத்துப்பூச்சி இருந்தாலும் பூக்களும் செடிகளும் தான் அதிகம் இருந்தன. செயற்கை வண்ணத்துப் பூச்சிகளே அதிகம் இருப்பதாய்த் தோன்றியது.  காலை நேரங்களில் தான் வண்ணத்துப் பூச்சிகள் அதிகம் இருக்கும் என்று சொன்னார்கள் – நாங்களும் காலையில் தான் அங்கே சென்றோம் என்றாலும் அத்தனை இல்லை என்பதில் வருத்தம் தான்.


நீ மூன்னாலே போனா நான் பின்னாலே வாரேன்.....

இப்பறவையைப் போல ஆட்டின் மேல் பயணிக்க எனக்கும் ஆசை....  ஆடு அழுமே என நகர்ந்து விட்டேன்.....

திருச்சியில் கோவில்கள் நிறையவே உண்டு என்றாலும் சுற்றுலாத் தலங்கள் என்று பார்த்தால், முக்கொம்பு மற்றும் கல்லணை மட்டுமே. அவற்றிலும் பராமரிப்பு சரியில்லாத காரணத்தினால் போவதை விட சும்மா இருக்கலாம்.  சமீபத்தில் அமைத்திருக்கும் இப்பூங்காவினையும் நம் மக்கள் ஒரு வழி செய்து விடுவதற்குள் இங்கே சென்று விட்டால் பூங்காவினையும் பூக்களையும், வண்ணத்துப் பூச்சிகளையும் ரசிக்க முடியும்.....

திருச்சி வந்தால் இங்கேயும் சென்று ரசிக்கலாமே......

நட்புடன்

வெங்கட்
திருவரங்கத்திலிருந்து.....

டிஸ்கி:  பூங்காவில், வண்ணத்துப்பூச்சிகளை படம் பிடித்து அவற்றை சென்ற ஞாயிறில் ”ஒரு பட்டாம்பூச்சி நெஞ்சுக்குள்ளே” எனும் பதிவில் பகிர்ந்து கொண்டேன்.  அப்பட்டாம்பூச்சி படங்கள் மீண்டும் இங்கே..... 

அட... இங்கே நிறைய தேன் கிடைக்கும் போல இருக்கே!.....


இந்த மொட்டுகளும் பூவானால் தேன் கிடைக்குமே!..... என்று யோசிக்கிறதோ?


புல்லில் ஏதாவது இருக்குமோ!.....


என் எடை கூட தாங்கவில்லையே இப்பூ!


கொஞ்சம் கொஞ்சமா தேன் குடிக்கணும்....  நிறைய வேல இருக்கு!


மண்ணுக்குள்ளும் மது இருக்குமோ?


எங்களுக்குள் போட்டி......  

அங்கே பூக்களை படமாக எடுத்து வைத்ததில் சில இங்கே.  இன்னும் சில வரும் ஞாயிறில் வெளியிடப்படலாம்! :)


40 கருத்துகள்:

 1. அருமை ஜி அழகான புகைப்படங்கள் நல்ல விளக்கமும் நன்று
  கூடவே வந்தது போன்ற உணர்வைத் தந்தது
  மூலம் முலம் என்று இருந்தது நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை ஹாஹாஹா புரிந்து விட்டது
  கல்லணை வந்து இருக்கிறேன்
  பதிவுக்கு வாழ்த்துகள்
  நான்தான் முதல் நபர் என்று நினைக்கிறேன் இருந்தால் சந்தோஷம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. நீங்களே முதல்வர்....

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 2. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கில்லர்ஜி!

   நீக்கு
 3. அழகான பதிவு. அற்புதமான படங்கள். பொருத்தமான வாசகங்கள். இனிமையூட்டும் பல்வேறு செய்திகள். பகிர்வுக்கு நன்றிகள்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வை.கோ. ஜி!

   நீக்கு
 4. கல்லணையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா விற்கு ‘அழைத்து’ சென்றமைக்கு நன்றி! படங்கள் வழக்கம்போல் மிக அருமை.

  வண்ணத்துப்பூச்சிகளின் வாழ்வியல் உருமாற்றம் (Metamorphosis).காரணமாக நீங்கள் சென்றபோது அவை அதிகமாக இல்லாமல் இருக்கலாம். ஆனாலும் செடிகளும், பூக்களும் இருந்தால் அவைகள் தானே வந்து முட்டையிட்டு அதிலிருந்து புழு வந்து பின் அது கூட்டுப்புழுவாக மாறி வண்ணத்துப் பூச்சியாக வரும்.

  //மூலம் எனும் நட்சத்திரத்தினை “முலம்” என எழுதி இருந்தது – நல்லவேளை முதல் எழுத்து அதிகம் மாறவில்லை!//

  தங்களின் குறும்பை இரசித்தேன்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. //கல்லணையில் உள்ள வண்ணத்துப்பூச்சி பூங்கா// இது கல்லணையில் இல்லை. முக்கொம்பு அருகே உள்ள அணைக்கரை அருகே இருக்கிறது. திருவரங்கத்திலிருந்து மேலூர் வழியாக செல்ல வேண்டும்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி வே. நடனசபாபதி ஐயா.

   நீக்கு
 5. அழகான படங்கள்... அடுத்த முறை அங்கு செல்லும் போது, ரசிக்க வேண்டும்...

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தனபாலன்.

   நீக்கு
 6. அழகிய, தெளிவான புகைப்படங்கள். சுவாரஸ்யமான இடம்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஸ்ரீராம்.

   நீக்கு
 7. படச் சித்தரான தங்களால்
  வண்ணத்தப் பூச்சிப் பூங்காவினை நானும்கண்டேன் ஐயா
  நன்றி

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி கரந்தை ஜெயக்குமார் ஐயா.

   நீக்கு
 8. உண்மையான வண்ணத்துப் பூச்சிகள் வாழ்வதற்கான சூழ்நிலையை உருவாக்க ,பராமரிப்பவர்கள் இன்னும் கொஞ்சம் மெனக்கெட்டால் நல்லது :)

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி பகவான் ஜி!

   நீக்கு
 9. நாங்கள் நேரில் பார்க்க ஆசைப்பட்ட இடத்திற்கு அழைத்துச்சென்றமைக்கு நன்றி.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி டாக்டர் ஜம்புலிங்கம் ஐயா.

   நீக்கு
 10. படங்களுடன் பூங்காவை சுற்றி காண்பித்தமைக்கு நன்றி!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தளிர் சுரேஷ்.

   நீக்கு
 11. வணக்கம்
  ஐயா

  அற்புதமான அழகிய இடத்தை படங்களுடன் பகிர்ந்தது சிறப்பு ஐயா வாழ்த்துக்கள்
  த.ம6

  -நன்றி-
  -அன்புடன்-
  -ரூபன்-

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ரூபன்.

   நீக்கு
 12. வண்ணத்துப் பூச்சி பூங்கா – திருச்சியில் பொழுது போக்கும் அம்சங்கள் நிறையவே இல்லை என்போரது குறையைத் தீர்க்கும். இது பற்றிய விவரங்களை அழகிய படங்களுடன் தந்தமைக்கு நன்றி. வண்ணத்துப் பூச்சி பற்றிய இந்த பதிவில் வண்ணத்துப் பூச்சியின் படங்களே இல்லாதது என்னவோ போல் இருக்கிறது. எனவே இந்த பூங்காவில் எடுக்கப்பட்ட அந்த வண்ணத்துப் பூச்சிகளின் படங்களை மீண்டும் இந்த பதிவினில் இணைக்கவும். பின் நாட்களில் இந்த பதிவைப் பார்ப்போருக்கு உதவும்.

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தற்போது பட்டாம்பூச்சிகளின் படங்களையும் இணைத்து விட்டேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி தமிழ் இளங்கோ ஐயா.

   நீக்கு
 13. அழகான படங்களுடன் அற்புதமான பூங்காவைப் பற்றி அறிந்துகொண்டோம்

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ஜனா சார்.

   நீக்கு
  2. நாங்களும் வண்ணத்துப்பூச்சி பூங்காவினை ரசித்தோம். படங்களும் விளக்கங்களும் அருமை.

   சுதா த்வாரகாநாதன்

   நீக்கு
  3. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சுதா த்வாரகநாதன் ஜி!

   நீக்கு
 14. அடுத்த விடுமுறையில் அங்கு செல்லவேண்டும்.,
  கண்டு மகிழ வேண்டும் என ஆவல் பிறக்கின்றது..

  அழகிய படங்களுடன் இனிய பதிவு..
  வாழ்க நலம்..

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி துரை செல்வராஜூ ஜி!

   நீக்கு
 15. பதிவிலேயே சுற்றிப் பார்த்தாச்சு ! அனைத்தும் அழகான படங்கள் !

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சித்ரா சுந்தரமூர்த்தி.

   நீக்கு
 16. பொங்கல் அன்று ஸ்ரீரெங்கம் மேலூர் சென்றோம்...அப்போது இங்கும் செல்லும் எண்ணம் இருந்தது ....ஆனால் செல்ல வில்லை ,,

  இப்போது உங்கள் பதிவை பார்த்தவுடன் அடுத்த முறை கண்டிப்பாக செல்ல வேண்டும் எனற எண்ணம் வந்து உள்ளது ....


  வழக்கம் போல மிக அருமையான படங்கள் .....

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. பொங்கல் அன்று நானும் திருவரங்கத்தில் தான் இருந்தேன்.

   தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி அனுராதா ப்ரேம்.....

   நீக்கு
 17. பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி ராமலக்ஷ்மி.

   நீக்கு
 18. இதுவரை யாரும் சொல்லவில்லை! அருமையான படங்கள்!

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி புலவர் ஐயா.

   நீக்கு
 19. சத்திரத்தில் இருந்து பஸ் வசதிகள் இருக்கங்களா?

  பதிலளிநீக்கு
  பதில்கள்
  1. சத்திரம் பேருந்து நிலையத்திலிருந்து நேரடி பேருந்து வசதி இல்லை. திருவரங்கத்தில் இருந்து மினி பஸ் வசதி மட்டுமே - அதுவும் மணிக்கொரு முறை மட்டுமே. மேலூர் வரை செல்லும் டவுன் பஸ் உண்டு என்றாலும் அங்கிருந்து மினி பஸ்ஸிலோ அல்லது ஆட்டோவிலோ தான் பயணிக்க வேண்டி இருக்கும்.

   தங்களது முதல் வருகைக்கு நன்றி அன்பழகன்.

   நீக்கு

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....