மஹாகும்பமேளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
மஹாகும்பமேளா லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 6 மே, 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 8 – பிரம்மாண்டம்




மஹாகும்பமேளாவிற்குச் சென்று வந்தேன் என இத்தனை பகுதிகளாகச் சொல்லிக் கொண்டிருந்தது நீங்கள் அனைவரும் அறிந்ததே... ஆனால் விழாவினைப் பற்றிய தகவல்கள் ஒன்றும் தரவில்லையே என உங்களில் சிலராவது நினைத்திருக்கக் கூடும். நீங்கள் நினைத்தது டெலிபதி போல எனக்கும் தெரிந்துவிட்டதால், மஹாகும்பமேளா எனும் பிரம்மாண்டத்தினைக் கொஞ்சம் இங்கே பார்க்கலாம்.


பட உதவி: கூகிள் ஆண்டவருக்கு நன்றி.


  • மகரசங்கராந்தி நாளான ஜனவரி 14 ஆம் தேதி துவங்கி மஹா சிவராத்திரி நாளான மார்ச் 10 ஆம் தேதி வரை 56 நாட்கள் நடைபெற்றது மஹா கும்பமேளா. 
  • இந்த கும்பமேளாவில் பங்குபெற்ற மக்களின் எண்ணிக்கை 12 கோடிக்கும் மேல். இதில் வெளி நாட்டவர்கள் மட்டுமே பத்து லட்சம். மௌனி அமாவாசை தினமான ஃபிப்ரவரி 10 ஆம் தேதி மட்டும் இங்கே வந்த மக்களின் தொகை மூன்று கோடி. 
  • மேளாவிற்கு ஒதுக்கப்பட்ட நிதி – 1200 கோடி. கிட்டத்தட்ட ஆறு லட்சம் மக்களுக்கு மேளா சமயத்தில் பணம் சம்பாதிக்க வாய்ப்பு. 
  • உத்திரப் பிரதேச மாநில அரசுக்கு வரிகள் மூலமும் மற்ற வழிகளிலும் கிடைக்கக் கூடிய தொகை 12000 கோடி என மதிப்பிடப்பட்டது. எத்தனை கோடி அரசுக்குப் போனது மீதி எங்கே போனது என்ற விவரம் எல்லாம் வல்லவனுக்கே வெளிச்சம்! 
  • போடப் பட்ட புதிய சாலைகள் – 156 கிலோ மீட்டர். புதிய தண்ணீர் குழாய்கள் – 575 கிலோ மீட்டர். புதிய மின்சாரக் கம்பிகள் 800 கிலோ மீட்டர். புதியதாய் திறக்கப்பட்ட மின்சார விநியோகக் கூடங்கள் – 48. 
  • பாதுகாப்பிற்கு பணியில் இருந்த காவல்காரர்கள் 30000 பேர். தவிர மத்திய அரசின் 72 படைகள். அமைக்கப்பட்ட கண்காணிப்பு கேமராக்கள் 120. 
  • இத்தனை பேருக்கும் உணவு, சுகாதார வசதிகள் என அனைத்தும் செய்ய நிச்சயம் பிரம்மப் பிரயத்தனம் செய்ய வேண்டியிருந்திருக்கும். அமைக்கப்பட்ட தற்காலிக பொது கழிப்பறைகள் மட்டுமே 35000. இருந்தும் பல மக்கள் வெட்டவெளியை கழிப்பறையாகப் பயன்படுத்தியிருந்தது கண்கூடு! 
  • 24 மணி நேர மருத்துவ வசதி, எப்போதும் பணியில் 25 மருத்துவர்கள், 120 ஆம்புலன்ஸ் வண்டிகள், 100 படுக்கை வசதிகள் கொண்ட மருத்துவமனை என நிறைய ஏற்பாடுகள். 
  • காணாமல் போனவர்கள், வழி தவறிப் போனவர்கள் பற்றிய அறிவிப்பு செய்ய வசதிகள். 
  • பயணிகள் தங்க ஏற்பாடு செய்யப்பட்ட விடுதிகள் ஸ்விட்சர்லாந்து தருவிக்கப்பட்டவை. அதற்கான வாடகை மட்டுமே பல கோடிகள்.... 
  • மஹாகும்பமேளா மாவட்டமாக அறிவிக்கப்பட்ட இடத்தின் பரப்பளவு 1936 ஹெக்டேர். 
  • மேளாவினைப் பற்றிய தகவல்களை நேருக்கு நேர் ஒளிபரப்பு செய்ய ஊடகங்கள் இந்தியாவிலிருந்து மட்டுமல்ல, பல வெளிநாடுகளிலிருந்தும் வந்திருந்தார்கள்.

இப்படிப் பட்ட பிரம்மாண்டமான கும்பமேளாவில் சில சிக்கல்களும், விபத்துகளும் ஏற்படாமலில்லை. அலஹாபாத் ரயில் நிலையத்தில் நடந்த விபத்து உங்களுக்கும் தெரிந்திருக்குமென்பதால் அதைப் பற்றி இங்கே அதிகம் சொல்லப் போவதில்லை.

இந்த கும்ப மேளா சமயத்தில் நாங்களும் அங்கே சென்று, கங்கை, யமுனை மற்றும் சரஸ்வதி ஆகிய புண்ணிய நதிகளின் சங்கமத்தில் குளித்து விட்டு வந்தது மட்டுமல்லாது உங்களுக்கும் அங்கிருந்து சில காட்சிகளைப் பகிர்ந்து கொண்டதில் எனக்கு மகிழ்ச்சி. படித்த உங்களுக்கும் மகிழ்ச்சி தானே நண்பர்களே....

காலையில் சங்கமத்தில் நீராடி மாலையில் அலஹாபாத் நகரில் இருக்கும் சங்கர் விமான மண்டபம், மற்றும் படே ஹனுமான் கோவில் ஆகியவற்றைப் பார்த்துவிட்டு அன்றிரவே புது தில்லி திரும்பினோம். வழக்கம் போல பீஹாரிலிருந்து வருகின்ற வண்டியில் வந்ததால் பீஹாரிகளின் குட்கா வாசத்தோடு தில்லி வந்து இறங்கியபோது நாங்களும் ஒரு வித மயக்கத்தில் இருந்தோம் என்பதைச் சொல்லவும் வேண்டுமா!

மீண்டும் சற்றே இடைவெளிக்குப் பிறகு வேறொரு பயணம் பற்றிய தகவல்களோடு உங்களைச் சந்திக்கும் வரை......

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 29 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 7 – மன்காமேஷ்வர் மந்திர் – சில உணவு வகைகள்....


மஹா கும்பமேளா ஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5 பகுதி 6





இத்தொடரின் சென்ற பகுதியான மஹா கும்பமேளா ஒரு பயணம் பகுதி 6 ஜோதா அக்பர் மற்றும் ராமர் பதிவினை இப்படிச் சொல்லி முடித்திருந்தேன்.



என்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம், அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா?



யோசித்து வைத்திருப்பீர்கள் என நினைக்கிறேன்! அது கிடைக்கவேண்டுமானால் நீங்கள் ஒரு முறை அலஹாபாத் நகருக்குச் செல்ல வேண்டும்! இல்லையெனில் கீழுள்ள விஷயத்தினைப் படித்து விடுங்களேன்.





மன் காமேஷ்வர் மந்திர்



யமுனைக் கரையோரமாகவே வரும்போது உங்களுக்குத் தெரியும் இன்னுமொரு இடம் தான் நீங்கள் மேலே பார்க்கும் மன்காமேஷ்வர் மந்திர்.  இந்தக் கோவிலில் வழிபட்டால் நீங்கள் நினைக்கும் நல்ல விஷயங்கள் நடக்குமாம். யமுனையில் படகில் சென்று கொண்டிருந்ததால் நாங்கள் அங்கிருந்து பார்த்து விட்டோம். மனதில் என்ன நினைத்தேன்! :) ஒன்றும் பெரிதாக நினைத்து விடவில்லை. வேண்டிக்கொள்ளவும் இல்லை! நமக்கு என்ன தர வேண்டுமென எல்லாம் வல்லவனுக்குத் தெரியும் என்ற நினைப்பு தான்!







எருமைக் குளியல்!



நாங்கள் குளித்து விட்டு படகில் வந்து கொண்டிருந்தபோது 15-20 எருமைகளும் “இவங்களே குளிக்கறாங்க! நாம ஏன் குளிக்கக் கூடாது?என்ற எண்ணத்தோடு யமுனையில் கரையோரமாகவே இறங்கி குளித்துக் கொண்டிருந்தன! அவற்றை ஓட்டிக் கொண்ட மனிதர் கரையோரமாகவே நடந்து வந்தார்! அவருக்கு குளிப்பது பிடிக்காது போல! இல்லை எருமையோட எருமையா குளிக்கறான் பாருன்னுயாராவது சொல்லிடுவாங்களோன்னு பயமா தெரியல!





தேங்கா-மாங்கா பட்டாணி சுண்டலை நினைவு படுத்துகிறதோ!



கரையில் இறங்கி முந்தைய பதிவில் சொன்னது போல படகோட்டிக்கு கூலியைக் கொடுத்து விட்டு கொஞ்சம் நடந்து முக்கிய சாலைக்கு வந்தோம். அங்கே வெளியே சுடச் சுட சன்னா சுண்டல் – தக்காளி, வெங்காயம், கொத்தமல்லி, பச்சை மிளகாய் எல்லாம் துண்டு துண்டாக வெட்டி அதில் போட்டு விற்றுக் கொண்டிருந்தார். நிறைய முளை விட்டிருந்தது பார்த்தால் பழசாக இருக்குமோ என்ற ஒரு பயம் நெஞ்சில். பக்கத்திலேயே கொய்யாப் பழம் விற்க, அதை வாங்கி உண்டபடியே நடக்க ஆரம்பித்தோம். பத்து நிமிட நடையில் நாங்கள் தங்கியிருந்த வேணி மாதவ் கோவிலை அடைந்தோம்.







மட்டி!



வரும் வழியில் ஒரு சிறிய வீடு. வீட்டு வாசலிலேயே விறகு அடுப்பு. அடுப்பின் மேல் ஒரு பெரிய வாணலி. எண்ணை நிரம்பியிருக்கிறது. சுடச் சுட இருப்பது அதிலிருந்து வரும் ஆவியிலேயே தெரிகிறது. அப்படி என்ன தான் இங்கே பொரித்து எடுக்கிறார்கள் என ஆர்வத்துடன் எட்டிப் பார்த்தார்கள் கூட வந்தவர்கள் [நானும் தான்!] அங்கே செய்து கொண்டிருந்தது மட்டி [அ] மட்ரி என அழைக்கப்படும் ஒரு தின்பண்டம்! மைதா, கொஞ்சம் அரிசி மாவு, ஓமம், உப்பு மற்றும் வெண்ணை சேர்த்து கரகரன்னு இருக்கும் ஒரு தின்பண்டம். சாதாரணமாக சிறிய வடிவில் இருக்கும் மட்டி இங்கே அலஹாபாத் நகரில் பெரியதாக செய்கிறார்கள். அதுவும் அவ்வளவு க்ரிஸ்பியாக.....  உடனே 10 மட்டியை வாங்கிக் கொண்டு வந்தோம். நீங்க மட்டும் சாப்பிட்டீங்களே, எங்களுக்கு கண்ணுல காட்டினீங்களா?அப்படின்னு யாரும் நாக்கு மேலே பல்லு போட்டு கேட்டுட கூடாது பாருங்க! அதனால தான் அந்த மட்டியோட படத்தை போட்டு இருக்கேன்! :)



சரி சரி எல்லாருக்கும் பசி வந்துருக்கும்....  அதனால என்ன திட்டாம, ஒழுங்கா சாப்பிட்டு வாங்க, அதுக்குள்ள நான் இந்த தொடரோட அடுத்த பகுதிய எழுதி முடிச்சுடறேன்... 



மீண்டும் அடுத்த வாரம் திங்கள் கிழமை தொடரின் அடுத்த பகுதி மற்றும் கடைசி பகுதியில் சந்திக்கும் வரை.....



நட்புடன்



வெங்கட்.
புது தில்லி.

திங்கள், 22 ஏப்ரல், 2013

மஹா கும்பமேளா – ஒரு பயணம் – பகுதி 6 – ஜோதா அக்பர் மற்றும் ராமர்



மஹா கும்பமேளாஒரு பயணம்பகுதி 1 பகுதி 2 பகுதி 3 பகுதி 4 பகுதி 5

சென்ற பகுதியின் கடைசியில் சொன்ன யானைப் பலி விஷயம், படகோட்டி மூலம் கேட்டறிந்த போது எனக்கு ஏற்பட்ட அதே அதிர்ச்சியும் பாவ உணர்வுகளும் எனது பகிர்வினைப் படித்த அனைத்து நண்பர்களுக்கும் உண்டாகியதில் சந்தேகமில்லை. கனத்த மனதுடனே தான் படகுப் பயணம் செய்ய முடிந்தது.....

அக்‌ஷய் வட் அடையாளம்

கோட்டை இன்னும் பலப் பல விஷயங்களை தன்னுள்ளே அடக்கி வைத்துள்ளது. இதே கோட்டையினுள் தான் அக்‌ஷய் வட் எனும் அழிவே இல்லாத மரம் இருக்கிறது. இந்த அக்‌ஷய் வட் பற்றி எனது முந்தைய பயணத் தொடரிலும் எழுதியது இங்கே இருக்கிறது. கோட்டையினுள் சென்று பார்க்க முடியாதவர்களுக்காக, இதன் அடையாளமாக கோட்டைச் சுவற்றில் ஒரு இடத்தினை சிவப்புக் கல் கொண்டு குறித்து வைத்திருக்கிறார்கள். அதன் படம் தான் நீங்கள் மேலே பார்த்தது!


ஜோதா அக்பர் வழி

படகுப் பயணத்தின் போது எங்கள் படகோட்டி குகன் ஒரு கதவு போன்ற இட்த்தினைக் காண்பித்து இந்த இடம் என்ன தெரியுமா எனக் கேட்கவே [தெரிந்திருந்தால் உடனே சொல்லி இருப்பேனே, என மனதுக்குள் நினைத்தபடி] ‘தெரியாதுஎன மண்டையை ஆட்டினோம்! சொல்லுமுன் 75 வயதிலும் அவருக்கு வெட்கம்! :) ‘மூடியிருந்த கதைவைக் காட்டி ஜோதா அக்பர் இந்த வழியே தான் குளிக்க வருவார்கள்என வெட்கப்பட்டுக் கொண்டே சொன்னார்.


கங்கை.... யமுனை...  இங்கு தான் சங்கமம்.... :)
தண்ணீரில் வண்ணம் மாறி இருக்கிறது தெரிகிறதா....

அதெல்லாம் சரி சங்கமம், சங்கமம்னு சொல்றீங்களே ஏதாவது புகைப்படம் போட்டா நாங்களும் சங்கமத்தினைப் பார்போமே எனச் சொல்லும் நண்பர்களுக்காகவே மேலுள்ள புகைப்படம். நடுவே வண்ணம் கலப்பதைக் கவனியுங்கள். கறுப்பு நிறத்தில் இருப்பது யமுனை, மண் நிறத்தில் இருப்பது கங்கை.....  சங்கமத்தினைக் கடக்கும் போது பல பயணிகள் அங்கே தூவிய பூக்களையும் காண முடியும்.


கரையில் பறந்து கொண்டிருக்கும் பறவைகள்..


கோட்டை ஒரு தோற்றம்....


சரஸ்வதி குண்ட்

மேலே உள்ள படம் கோட்டையின் ஒரு வழியை அடைத்து வைத்திருக்கும் படம். இந்த இடம் முன்பு திறந்திருந்தது. ராணுவம் கோட்டையை பயன்படுத்த ஆரம்பித்த பிறகு அடைத்து வைத்திருக்கிறார்கள். இப்போது அடைத்து வைத்திருக்கும் இந்த வழியே தான் ராம-லக்ஷ்மணர்கள் யமுனையைக் கரைக்கு வந்தார்களாம்! அங்கிருந்து தான் குகன் இவர்களைக் கரையேற்றினாராம். இதைச் சொல்லும் போது எங்கள் குகனுக்குப் பரவசம்.  



என்ன நண்பர்களே பயணக் கட்டுரையின் இந்தப் பகுதியினை ரசித்தீர்களா? இன்னும் என்னென்ன இடங்களைப் பார்த்தோம் என அடுத்த பகுதியில் பார்க்கலாமா? அது வரை உங்களுக்கு என்ன தேவை என்பதை மனதில் நினைத்துக் கொள்ளுங்கள். அது உங்களுக்குக் கிடைக்க வழி என்ன என அடுத்த பதிவில் சொல்கிறேன். சரியா?

மீண்டும் மஹா கும்பமேளா பயணத்தின் அடுத்த பகுதியில் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.