வெள்ளி, 28 நவம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 116 – புல்லட் ரயில் – அருணா சாய்ராம் - உப்புமா
இந்த வார செய்தி:

தில்லியிலிருந்து சென்னைக்கு [சுமார் 2200 கிலோ மீட்டர்] 7 மணி நேரத்தில் வர சாத்தியம் உண்டா?  தில்லியிலிருந்து சென்னைக்கு புல்லட் ரயில் விட முடியும் என்றால்! சீனாவும் இந்தியாவும் நினைத்தால் இது சில வருடங்களில் நடந்து விடக்கூடும்!  இது முடியுமா என்பதை தெரிந்து கொள்ள ஒரு Feasibility Study நடத்த இருக்கிறார்கள்.  அதிவேக விரைவு ரயில்களை இயக்கும் சீனாவில் இதற்கான ஆயத்த பயிற்சிக்கு இந்திய ரயில்வே துறையிலிருந்து 100 பேர் வரை பயிற்சி பெறப் போகிறார்களாம். 

இப்போது இந்த தொலைவினை ராஜ்தானி விரைவு ரயில் மூலம் கடக்க சுமார் 29 மணி நேரம் ஆகிறது. மணிக்கு 300 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் புல்லட் ரயில் வந்தால் 7 மணி நேரத்தில் வந்து விடமுடியும். 

சீன அரசாங்கமும் இந்திய அரசாங்கமும் இந்த சோதனைகளில் முழு நம்பிக்கையுடன் செயல்படுவோம் என்று சொல்கிறார்கள்.  பார்க்கலாம் – அதிவேக ரயில் வந்தால் நல்லது தானே!

இந்த வார முகப்புத்தக இற்றை:இந்த வார குறுஞ்செய்தி:இந்த வார ரசித்த பாடல்:

அருணா சாய்ராம் அவர்களின் அருமையான குரலில் “விஷமக்கார கண்ணன்பாடல் இந்த வார ரசித்த பாடலாய்.....
 இந்த வார புத்தகம்:

சமீபத்தில் படித்த ஒரு கவிதைத் தொகுப்பு – “தயக்கம் ஏனோ அதைச் சொல்ல! அறுசீர் விருத்தம், எண் விருத்தம், பிற கவிதைகள் என தனித்தனியாக எழுதியவற்றை தொகுத்து வெளியிட்டு இருக்கிறார் ஆசிரியர்.  ஒரே ஒரு கவிதை மட்டும் இங்கே.....

சோலையின் ஏக்கம்!!

மீனோடு போட்டியிடும் கண்கள் மின்னும்!
     மென்நடையைக் கண்டுநாணி அன்னம் ஓடும்!
தேனோடு கலந்திருக்கும் பழங்கள் தோற்கும்!
     தெளிதமிழால் அவள்பேச இனிப்பே முந்தும்!
வானோடு வகைமாறும் மேக வண்ணம்
     வடிவழகில் மாற்றமிடும், அவளைக் கண்டால்
மானோடு மயிலாடும் சோலை ஏங்கும்
     மலர்ப்பாதம் தன்மீது படுமா என்றே!!

இது போன்ற இனிமையான பல கவிதைகளை தன்னுள்ளே கொண்டது இப்புத்தகம்.

எல்லாம் சரி கவிதை எழுதியது யார் என்றே சொல்லாமல் விட்டாயேஎன்று நீங்கள் கேட்குமுன் சொல்லிவிடுகிறேன் – கவிதைத் தொகுப்பு பதிவர் “அருணா செல்வம்அவர்களின் ஏழாவது படைப்பு இது.  தொகுப்பில் உள்ள மொத்த கவிதைகளையும் ரசிக்க விரும்புவர்கள் புத்தகத்தினை இங்கே பெறலாம்:


“மணிமேகலை பிரசுரம், தபால் பெட்டி எண்: 1447, 7 [ப.எண் 4] தணிகாசலம் சாலை, தியாகராயநகர், சென்னை-600017. விலை ரூபாய் 60/-.

இந்த வார புகைப்படம்:சென்ற வாரம் தில்லியில் உள்ள ஒரு சுற்றுலா தலத்திற்குச் சென்றபோது எடுத்த புகைப்படம். குடும்பத்துடன் வந்திருந்த சுட்டிப் பெண் – முதலில் புகைப்படம் எடுத்துக்கொள்ள மறுத்தாலும் பிறகு எடுத்துக் கொள்ளச் சம்மதித்தார்!

படித்ததில் பிடித்தது:

வன்முறையாளர்களின்
துப்பாக்கி ரவைக்குப்
பலியானார்கள் பலர்!
நானோ
அடிக்கடி
என் மனைவியின்
பம்பாய் ரவைக்கு
இரையாகிறேன்!

பல வருடங்கள் முன் படித்த உப்புமா கவிதை! நேற்று வீட்டில் உப்புமா சாப்பிட்ட போது ஏனோ நினைவுக்கு வந்தது!

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 26 நவம்பர், 2014

பச்சையம்மாவும் கன்னியம்மாவும்....

கடந்த ஃபிப்ரவரி மாதத்தில் சில நிகழ்வுகளுக்காக தமிழகம் வந்திருந்தபோது எனது பெற்றோர்கள் தந்தை வழி, தாய் வழி குலதெய்வம் கோவில்களுக்குச் செல்ல வேண்டும் எனச் சொன்னார்கள். குலதெய்வம் கோவிலுக்குப் போகும்போது வீட்டில் உள்ள அனைவரும் செல்ல வேண்டுமெனவும் அப்பா சொல்வார். ஒவ்வொரு முறை சொல்லும்போதும், குழந்தைகளுக்கு தேர்வு, பெண்களுக்கு வர முடியாத சூழல் என தள்ளிப் போய்க்கொண்டிருக்கும். இம்முறை எல்லோரையும் எதிர்பார்க்காது, நானும் பெற்றோர்களும், எனது பெரியம்மாவும் [அம்மாவின் அக்கா] இரண்டே நாட்களில் குலதெய்வ வழிபாட்டிற்கு ஏற்பாடு செய்து பயணம் செய்தோம்.

 

முதலில் சென்றது எங்கள் குலதெய்வமான அபிராமேஸ்வரர் கோவிலுக்கு. இக்கோவில் விழுப்புரம் அருகில் இருக்கும் அய்யூர் அகரம் எனும் கிராமத்தில் இருக்கிறது. இக்கோவில் பற்றி பிறிதொரு சமயத்தில் சொல்கிறேன்.  இன்று பார்க்கப்போவது நாங்கள் சென்ற எனது அம்மாவின் கிராமத்தில் இருக்கும் குலதெய்வ கோவில். பன்ரூட்டியிலிருந்து புதுப்பேட்டை வழியாகச் செல்லும் போது இருக்கும் ஒரு சிறிய கிராமம் ஒறையூர்.

ஒறையூர் கிராமத்தில் தான் அம்மா வழி தாத்தாவின் வீடு இருந்தது.  ஒரு காலத்தில் அந்த ஊரில் இருந்த பல விளைநிலங்கள் எங்கள் தாத்தாவுடையதாக இருந்தது. கிராமத்தில் பெரிய தனக்காரர் என்று செல்வாக்கு. கிராமத்து பாதையில் பயணிக்கும்போது பசுமையான நெல்வயல்களும், கொய்யா தோப்புகளும் நம்மை மகிழ்ச்சியோடு வரவேற்றன. பெரியம்மாவும், அம்மாவும் தங்களது வயல்களாக இருந்த இடங்களை காண்பித்துக் கொண்டே வந்தார்கள். பல வருடங்களுக்குப் பிறகு அவர்கள் சொந்த ஊருக்கு வருவதில் அவர்களுக்குள் ஒரு குதூகலம்.அவர்கள் இருந்த வீடுகள் இருக்கும் தெருவிற்குள் எங்கள் மகிழுந்து சென்று நின்றதும், கிராமத்து மக்கள் அனைவரும் பார்த்தபடியே எழுந்து நின்றனர். யாரு வீடு நீங்க?என்று கேட்க ஆரம்பித்தனர். இந்த வீடு எனத் தெரிந்ததும், அவர்கள் அனைவருக்குமே மகிழ்ச்சி.  ஒரு பெண்மணி, கொஞ்சம் வயதானவர் அம்மாவையும், பெரியம்மாவையும் பார்த்த உடனேயே கைகளைப் பிடித்துக் கொண்டு பழைய நினைவுகளுக்குச் சென்று விட்டார். அவர் அம்மா-பெரியம்மாவின் பால்ய கால நண்பரின் மனைவி - கன்னியம்மா.
 
முதலில் கோவிலுக்குச் சென்று வருகிறோம் பிறகு இங்கே மீண்டும் வருகிறோம் என்று சொல்லி, பச்சையம்மா எனும் கிராமத்து தேவதையைக் காணச் சென்றோம். அலைபேசி மூலம் பூசாரிக்கு சொல்லி இருந்ததால் அபிஷேகத்திற்கு வேண்டிய ஏற்பாடுகள் செய்து, கிராமத்து தேவதைகளுக்கான வஸ்திரங்களும் வாங்கி தயாராக இருந்தார். எல்லா கோவில்கள் போல இல்லாது பச்சையம்மனின் முன்னால் அமர்ந்து கொண்டு பூஜைகளைப் பார்க்க முடியும்.

பூஜைகளை முடித்து வீடு திரும்பினால் கன்னியம்மா எங்களுக்காக வீட்டுத் தோட்த்தில் இருந்து நாட்டு அவரைக்காய், முருங்கைக்காய் என்று நிறைய பறித்து வைத்திருந்தார் – கார் டிக்கி நிறைந்து விட்டது என்றால் பார்த்துக் கொள்ளுங்களேன்! – “இது எல்லாமே உங்கள் வீட்டில் விளைந்தது – உங்களுக்குத் தான் முதல் உரிமை!என்று சொல்லி நிறைய பொருட்களைத் தந்து விட்டார்.  பெரியம்மா அவருக்கு கொஞ்சம் காசு தர, வேண்டவே வேண்டாம் என மறுத்து விட்டார்.பச்சையம்மா கோவில் பக்கத்தில் இருந்த ஒரு விளை நிலத்தில் நிறைய மல்லாக்கொட்டை [வேர்க்கடலை] பயிர்கள் இருக்க, முதல் முறையாக அந்தச் செடிகளை நான் பார்த்தேன்.  “பச்சையா திங்கறீங்களா? புடிங்கித் தாரேன்!என்று சொன்ன அங்கிருந்த பெண்ணின் மனது நகரத்து மக்களுக்கு வருமா என்பது சந்தேகம் தான்.  பக்கத்தில் கொய்யாத் தோப்பு இருக்க, அங்கிருந்து விழுப்புரம், கடலூர் போன்ற சிறுநகரங்களுக்கு அனுப்புகிறார்கள். தோப்பிலிருந்து கொய்யாக்காய் கொடுக்க அவர்கள் தயார் என்றாலும் வாங்கிக் கொள்ள எங்களுக்குத் தான் வயிற்றில் இடமில்லை!வீட்டினுள் சென்று தாங்கள் வளர்ந்த இடங்களை பார்த்த அம்மாவிற்கும் பெரியம்மாவிற்கும் தங்களை அறியாமலேயே கண்களில் கண்ணீர்.  அந்தக் கால மரத்தூண்களும், வீட்டின் சில இடங்களும் அப்படியே இருக்கின்றன. அவர்கள் பயன்படுத்திய தரையில் பதித்த இயந்திரம் இன்னமும் அப்படியே இருக்கிறது!  நினைவுகளில் மூழ்கிய அம்மாவிற்கும், பெரியம்மாவிற்கும் அந்த வீட்டினை விட்டு வெளியே வர மனமே இல்லை.  நிறைய கதைகளைச் சொல்லிக் கொண்டே அங்கிருந்து பயணத்தினை துவக்கினார்கள். 

பல வருடங்களுக்குப் பின்னர் சொந்த கிராமத்திற்குச் செல்வது சில நல்ல நினைவுகளை மீட்டெடுத்தாலும் இழந்த பலவற்றையும் நினைவுக்குக் கொண்டுவந்த மனதை கஷ்டப்படுத்துகிறது.  அம்மாவிற்கோ, பெரியம்மாவிற்கோ அந்த ஊரில் இப்போது காணி நிலம் கூட இல்லை!  சொந்த வீடு என்று சொல்லிக்கொண்டு உரிமையோடு உள்ளே நுழைய அனுமதியும் இல்லை.

இன்னமும் கன்னியம்மா போன்ற வெள்ளை மனது கொண்ட மனிதர்களும் இந்த கிராமங்களில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள். நகரங்களை நோக்கி நகர்ந்து விட்ட நம் போன்ற சிலர் அனைத்தையும் இழந்து விட்டோமோ என்று கூட தோன்றியது.

பணி ஓய்வு கிடைத்த பிறகாவது இம்மாதிரி ஏதோ ஒரு கிராமத்தில் போய் நிம்மதியாக, எதைப் பற்றிய கவலையும் இல்லாமல் கழிக்க வேண்டும் என்ற நினைப்பிருக்கிறது.  என்ன நடக்குமோ? யாரறிவார்!

மீண்டும் சந்திப்போம்.....

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

திங்கள், 24 நவம்பர், 2014

நோ பிண்டி – பாபா தன்சர்மாதா வைஷ்ணோ தேவி பயணம்பகுதி 11

முந்தைய பகுதிகள்: பகுதி-1 2 3 4 5 6 7 8 9 10

சென்ற பகுதியில் சொன்னது போல கட்ரா அருகில் இருக்கும் சில இடங்கள் பற்றி இன்று பார்க்கப் போகிறோம்.  கட்ரா நகரின் அருகிலேயே சில அருமையான இடங்கள் உண்டு – அனைத்துமே இறைவன் சம்பந்தப்பட்ட இடங்கள் தான் என்றாலும், சில அருமையான காட்சிகள் அங்கேயும் உண்டு.  முதலாக நாம் பார்க்கப் போவது “[B]பா[B]பா [DH]தன்சர் எனும் இடம்தான். 

 சொட்டுச் சொட்டாய்.....  
 
கட்ரா நகரிலிருந்து சுமார் 15 கிலோ மீட்டர் தொலைவில் அமைந்திருப்பது இந்த “[B]பா[B]பா [DH]தன்சர்”.  சலால் அணைக்கட்டு போகும் பாதையில் பயணித்து இந்த இடத்தினைச் சென்றடைய முடியும். சுமார் 200 படிக்கட்டுகள் கீழ் நோக்கி அமைந்திருக்க, சாலையிலிருந்து அந்த படிகளில் நடந்து செல்ல வேண்டும். மலையேற்றம் முடிந்த அடுத்த நாள் என்பதால் கணுக்கால்கள் கெஞ்சத் துவங்கின. இருந்தாலும், என்ன தான் அங்கே இருக்கிறது என்பதை தெரிந்து கொள்ளும் ஆர்வத்தில் நானும் நண்பரும் கீழே இறங்கினோம்.  அப்படிச் சென்றது நிச்சயம் நல்லதாகப் போயிற்று. செல்லாமலிருந்தால் ஒரு அழகிய காட்சியை நாங்கள் தவற விட்டிருப்போம்.


 என்ன காட்சி டே! 

ஒரு குகை – அதில் இயற்கையாக உருவான சிவலிங்கம் இருக்க, அதன் மேல் குகைக்குள்ளிருந்து தண்ணீர் சீராக விழுந்து கொண்டிருக்கிறது.  பக்கத்திலே பாறைகள் மேலிருந்து தண்ணீர் வந்து, அந்த முகட்டில் தனித்தனியாக சின்னச் சின்ன அருவிகளாக கொட்டி, கீழே பாய்ந்தோடி மலைகளுக்கு இடையே இருக்கும் [ch]செனாப்[b] நதியில் சென்று கலக்கிறது.  அற்புதமான காட்சியாக அது இருந்தது. அங்கேயே சில நிமிடங்கள் நின்று சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு திரும்பவும் சாலை நோக்கிய பயணத்தினை – படிகள் வழியாகத் தொடங்கினோம்!  200 படிகள் ஏற வேண்டும் எனும்போதே மலைப்பாக இருந்தாலும், கீழே பார்த்த காட்சிகளைப் பற்றி பேசிய படியே மேலே சென்று சேர்ந்தோம்.  அங்கே எங்களுக்காக வாகன ஓட்டி காத்திருந்தார்.

 எங்கள் சாரதி

அவருக்கும் எங்களுக்குமாக தேநீர் சொல்லி, அதை அருந்தியபிறகு புத்துணர்வுடன் அங்கிருந்து புறப்பட்டோம். அடுத்ததாக நாங்கள் சென்ற இடம் “நோ பிண்டிஎன்று அழைக்கப்படும் ஒரு குகைக் கோவில். ஒன்பது தேவிகள் இங்கே சிறிய சிறிய பிண்டங்களாக குடிகொண்டிருப்பதாக நம்பிக்கை.  ஒரு சிறிய துவாரத்தினுள்ளே செல்ல வேண்டும் – நேராக நடந்து செல்ல முடியாது.  ஊர்ந்து தான் செல்ல வேண்டும்.  இரண்டு மீட்டர் தொலைவு ஊர்ந்து சென்று தரிசிக்க வேண்டிய இடம் இது.  குகைக்குள் இருப்பதால் அப்படி ஒரு குளிர்ச்சி இங்கே.  நல்ல வெயில் காலத்திலும் குளிர்ச்சியாக இருக்கிறது.  அருமையான ஒரு அனுபவமாக அமைந்தது இந்த நோ பிண்டி தரிசனம். 

 ”நோ பிண்டி” இருக்கும் இடத்திலிருந்து மலைப்பகுதியில் கீழே ஓடும் சிற்றோடையும்

அங்கிருந்து கீழே நோக்கினால் [ch]செனாப்[b] நதி ஓடிக்கொண்டிருப்பதை பார்க்க முடிகிறது.  அங்கேயும் சில புகைப்படங்களை எடுத்துக் கொண்டு வெளியே வந்தோம்.  வழியில் நிறைய கடைகள் உண்டு – அங்கே இப்பகுதிகளுக்குத் தேவையான குளிர்கால உடைகள், கார்ப்பெட் போன்றவற்றை விற்றுக் கொண்டிருக்கிறார்கள். சுற்றுலா தளம் என்பதால் நிறைய பேரம் பேச வேண்டியிருக்கலாம்!


 என்னையும் ஃபோட்டோ புடிக்கறாங்கடோய்!
  
மலைப்பகுதிகளில் விளையும் பல பொருட்களையும் ஏதேதோ பெயர் சொல்லி, “இதற்கு நல்லது, அதற்கு நல்லதுஎன்று பார்ப்பவர்களின் தலையில் கட்டப்பார்க்கும் வேலைகளும் நடந்து கொண்டிருந்தது. அருமையான சில காட்சிகளைக் கண்ட திருப்தியுடன் அங்கிருந்து நகர்ந்தோம். வழியில் இன்னுமொரு பாபாவின் கோவில் இருக்கிறது என்று சொல்ல, அங்கே புல்வெளிகளும் இருந்தமையால் அங்கே அமர்ந்து கொஞ்சம் நேரம் ஓய்வெடுத்துக் கொண்டோம்.  இந்த இரண்டு மூன்று இடங்களும் பார்த்து முடிக்கும்போது மணி மூன்று. 

 நோ பிண்டி - குகை வாயில்.
படம்: இணையத்திலிருந்து....

வழியில் இருக்கும் வேறு சில இடங்களையும் பார்த்து விட்டு கட்ரா நகரில் எங்கள் பேருந்து புறப்படும் இடத்திற்கு வந்து சேர்ந்தோம். இந்த பயணத்தில் நாங்கள் பார்த்த இடங்களைப் பற்றி இந்த தொடரில் இதுவரை பார்த்தோம்.  நாங்கள் பார்க்காத, பார்க்க வேண்டிய சில இடங்கள் பற்றி அடுத்த பகுதியில் பார்க்கலாம்.

ஜெய் மாதா [dh]தி!

தொடர்ந்து பயணிப்போம்!

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வெள்ளி, 21 நவம்பர், 2014

ஃப்ரூட் சாலட் – 115 – லே லடாக் பிரச்சனை – என்ன குரல் வளம் - புகழ்இந்த வார செய்தி:

பனி மூடிய லடாக் நகரத்தின் அழகு அங்கே வரும் பயணிகளுக்கு ஒரு அற்புதமான காட்சியாக தோன்றலாம். ஆனால் அங்கேயே வசிக்கும் மக்களுக்கு எந்த விதமான பிரச்சனைகள் உண்டு என்பது அவர்களுக்குத் தெரியாது.  வருடத்தின் பெரும்பாலான நாட்களில் குளிர் என்பதால் தண்ணீர் உறைந்து போய்விடும்.  அப்படி இருக்கும் மக்கள் தண்ணீருக்காக என்ன செய்கிறார்கள் என்பது நமக்குத் தெரியுமா? 

இப்படி கடினமான வாழ்க்கை வாழும் மக்களின் நலன் கருதி செயல்படும் ஒரு குழுவினைப் பற்றிய ஒரு செய்தி இந்த வார செய்தியாக.

ஆங்கிலத்தில் செய்தியை வாசிக்க:இந்த வார முகப்புத்தக இற்றை

பவள சங்கரி அவர்களின் முகப் புத்தகத்திலிருந்து....
இந்த வார குறுஞ்செய்தி:

உன்னை அளவின்றிப் புகழுகிறவன் ஏற்கனவே உன்னை ஏமாற்றிவிட்டான் அல்லது இனி ஏமாற்றப் போகிறான்.

இந்த வார ரசித்த பாடல்:

என்ன குரல் வளம் இப்பெண்ணுக்கு.... 
இந்த வார புகைப்படம்:

முன்பு பகிர்ந்த சிவன் சிலை இருந்த இடத்தின் அருகே ஒரு மரம். அதில் இப்பூக்கள் நிறைய பூத்திருந்தன. என்ன பூ என்பதோ, பெயர் என்ன என்பதோ எனக்குத் தெரியவில்லை.  தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்.படித்ததில் பிடித்தது

 படம்: இணையத்திலிருந்து....

கை நீட்டி கண்ணீர் விடுவதற்கும் ,
வாய் திறந்து கதறி அழுவதற்கும்
உணர்வுகள் இருந்தும்
உடலில் உதிரம் இல்லை.
பசி எடுக்க மருந்தொன்றுக்
கண்டான் மனிதன்
நாங்கள் பசி மறக்க ஏனோ
மருந்தொன்று காணாமல் மறந்தான்..!!
நீங்கள் தினமும் சிதறவிடும்
ஒவ்வொரு சோற்று பருக்கையிலும்
எங்களின் உயிர்
இன்னும் சில நாட்கள்
இந்த பூமியில் சுவாசித்திருக்கும். .!
உண்ண உணவின்றி மறித்துபோகும்
இந்த உன்னத வரம் எங்களுடன்
அழிந்துபோகட்டும்.
இயன்றவரை உணவுகளை வீணாக்காதீர்கள்...!!
     மணிகண்டன் அழகர் என்பவர் எழுதி இருந்ததிலிருந்து.....

மீண்டும் அடுத்த வெள்ளியன்று வேறொரு ஃப்ரூட் சாலட்-ல் சந்திக்கும் வரை…..

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

வலைச்சரத்தில் இன்று:   அடிவாங்கும் ஆண்கள் - படித்து உங்கள் மேலான கருத்துகளைச் சொல்லுங்களேன்!