பெயர் காரணம் – உங்கள் பெயருக்கான
காரணம் என்ன என்பதை எழுதச் சொல்லி பதிவுலகில் ஒரு தொடர் பதிவு – பெரும்பாலான பதிவர்கள்
எழுதினார்கள். நானும் எழுதினேன். கோவை2தில்லி வலைப்பூவில் எழுதிய பதிவு இன்றைக்கு
மீண்டும் இங்கே.
தொடர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
தொடர்பதிவு லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
வெள்ளி, 1 பிப்ரவரி, 2019
செவ்வாய், 10 ஏப்ரல், 2018
ஏழு நாட்கள் ஏழு புத்தகங்கள்…
வலையுலகின் தொடர் பதிவு போல,
முகப்புத்தகத்திலும் அவ்வப்போது ஏதாவது வந்து கொண்டிருக்கிறது – பத்து
வருடத்துக்கு முன்னாடி எப்படி இருந்தீர்கள் என புகைப்படம் பகிரும் பலரை இப்போது
பார்க்க முடிகிறது. அப்படி ஒரு தொடர் தான் இந்த ஏழு நாட்கள் ஏழு புத்தகங்கள்.
நாள் -1; புத்தகம்-1:
இப்பொதெல்லாம் முகப்புத்தகத்தில்
எழுதுவதே இல்லை. என்னுடைய வலைப்பதிவின் சுட்டியைத் தந்து விட்டு ஒரே ஓட்டம்! நேரம்
இல்லை என்பது மட்டுமல்லாது, முகப்புத்தகம் அலுத்து விட்டது.
Labels:
அனுபவம்,
தொடர்பதிவு,
பொது,
முகப்புத்தகத்தில் நான்
புதன், 13 ஜனவரி, 2016
ஆதலினால் பயணம் செய்வீர் – தொடர்பதிவு
மகிழ்நிறை வலைப்பூவில் எழுதும் மைதிலி கஸ்தூரி ரெங்கன் துவங்கி வைத்த அடுத்த
தொடர்பதிவு “பயணங்கள் முடிவதில்லை”.
இதே தலைப்பில் என்னையும்
எழுத அழைப்பு விடுத்திருக்கிறார்கள் தேன் மதுர தமிழ் வலைப்பூ எழுதும் கிரேஸ் மற்றும் மனசு வலைப்பூவில் எழுதும் பரிவை சே.
குமாரும்.. எனக்குத் தெரிந்து ஏற்கனவே சிலர் இத்தொடர் பதிவினை
தொடர்ந்திருக்கிறார்கள். அவர்களது பதிவுகளில் ஒரு சில பதிவுகள் மட்டுமே படிக்க
நேரம் கிடைத்தது. மற்றவர்களின் பதிவுகளை படிக்கும் முன்னரே எனது பதிவினை எழுத
வேண்டிய கட்டாயம் [மூன்று வார விடுமுறையில், இணைய இணைப்பு சரியாக கிடைக்காது எனும்
காரணத்தினால் பதிவுகள் எழுதுவது கடினம்]. பயணங்கள் பற்றி எழுத கசக்குமா என்ன? இதோ
தொடர்வண்டியின் ஒரு பெட்டியாக எனது பதிவும் இன்றைய தினத்தில் வெளியிட்டு விட்டேன்!
சிறு வயது முதலாகவே எனது பயணங்கள் துவங்கி விட்டன எனச்
சொல்லலாம்! படித்தது நெய்வேலி என்றாலும், ஆண்டுத் தேர்வு முடிந்து வரும் விடுமுறை
அனைத்திலும் ஆந்திர மாநிலத்தின் விஜயவாடா நகருக்கு பயணம் செய்வது எங்களுக்கு
வழக்கமாக இருந்தது. ஒவ்வொரு வருடமும் அப்படி பயணம் செய்வது நினைவில் இருந்தாலும்,
ரயில் வண்டியில் நடந்த நிகழ்வுகள் எதுவும் நினைவில் இல்லை. விஜயவாடா நகரில் நடந்த
நிகழ்ச்சிகள் பலவும் மனதில் பசுமையாய்......
அது பற்றி எழுதினால், அதற்காகவே பல பதிவுகள் எழுத வேண்டி வரலாம் என்பதால்
பிறிதொரு சமயத்தில் எழுதுகிறேன்! இப்போதைக்கு தொடர் பதிவில் கவனம் செலுத்துகிறேன்!
1. பயணங்களில் ரயில் பயணம் எப்போதும் அலாதி
தான். உங்கள் முதல் ரயில் பயணம் எப்போது என நினைவிருக்கிறதா?
சிறுவயதில் சென்னையிலிருந்து விஜயவாடா வரை பலமுறை
ரயிலில் பயணித்திருந்தாலும், முதல் பயணம் நினைவில் இல்லை – மிகச் சிறிய வயதிலேயே
[மூன்றோ அல்லது நான்கு வயதிலோ] பயணித்த காரணத்தினால்! நினைவு தெரிந்த பிறகு பல
பயணங்கள். அதுவும் தில்லியில் வேலைக்குச் சேர்ந்த பிறகு எத்தனை எத்தனை பயணங்கள் –
ஒவ்வொன்றிலும் ஒவ்வொரு அனுபவங்கள்..... கடந்த ஆறு வருடங்களில் கிடைத்த சில ரயில்
அனுபவங்களை எனது வலைப்பூவில் பகிர்ந்து கொண்டிருக்கிறேன்.
சில வருடங்களுக்கு முன்னர் ஒரு இளம்பெண் எனது
இருக்கையில் அமர்ந்து கொண்டு தனது இருக்கை அது தான் என அடம் பிடிக்க, அவர் பயணச்
சீட்டினைக் காண்பிக்கச் சொன்னால் மறுத்து விட்டு, இடத்தை விட்டு அகலாமல் ரொம்பவே படுத்தினார். பரிசோதகர் வந்து, சீட்டினை வாங்கிப்
பார்த்துவிட்டு சொன்னது – “இந்தாம்மா...
இது நாளைக்கு போற ரயிலுக்கான சீட்டு...
ஃபைன் கட்டுறயா, இல்லைன்னா விஜயவாடாவில் இறங்கிக்கோ!” என்று
சொல்ல, பரிசோதகரிடம் பேச வேண்டிய விதத்தில் பேசி காலியான இடம் ஒன்றை
அப்பெண்ணுக்குத் தர வைத்தேன். கிடைத்தது ”தேங்க்ஸ்ண்ணா....” மட்டுமே..... படுத்திய படுத்தலுக்கு அவர் Sorry கூட சொல்லவில்லை!
2. மறக்கமுடியாத மகிழ்ச்சியான பயணம் எது?
அனைத்து பயணங்களுமே மகிழ்ச்சியானவை தான். மகிழ்ச்சியாக
இருப்பதற்காகத் தானே பயணம் செய்கிறோம். அதுவும் சுற்றுலா என்று செல்லும் போது ஒரே
கும்மாளம் தான். தமிழகம் நோக்கிய சில
பயணங்களில் சக பயணிகள் செய்யும் அட்டகாசங்களினால் அவதியுற்ற பயணங்களை
வெறுத்திருக்கிறேன். மறக்கமுடியாத பயணம் எனில் கடும் குளிர் காலத்தில் [Visibility 2 Feet] தில்லியிலிருந்து இரவு நேரம் ஏடா நகர் வரை
காரில் சென்ற பயணம் தான்..... சில இடங்களில் சுத்தமாக visibility குறைந்து அடர்ந்த பனிமூட்டத்தில் Blinkers ஐ உபயோகித்தபடியே ஓட்டுனர் வண்டியை நகர்த்தினார்! அந்த
வேகத்தினை விட, மாப்பிள்ளை அழைப்பு ஊர்வலம் கூட கொஞ்சம் வேகமாக போயிருக்கும்!
3. எப்படி பயணிக்கப் பிடிக்கும்?
பயணத்தின் ஆரம்பத்திலேயே எல்லாவித ஏற்பாடுகளும்
செய்துவிட்டு, பயணிக்கும் இடத்திற்குச் சென்ற பிறகு தங்குமிடம் தேடுவது, உணவு
தேடுவது என்று இல்லாமல் எல்லாவற்றுக்கும் முன்னேற்பாடுகள் செய்து கொண்டு போவது
பிடிக்கும். கவலைகள் மறக்க பயணிக்கும் போது அங்கேயும் சென்று பட்ஜெட் பற்றி
யோசிக்காது நிம்மதியாக பயணிக்க வேண்டும்.
மகிழ்ச்சியாக இருக்கும் வேளையில் பணம் செலவாகிறதே என்ற எண்ணத்தோடு
பயணிப்பதில் என்ன சுகம் இருக்க முடியும்!
4. பயணத்தில் கேட்க விரும்பும் இசை?
மெல்லிசையாக இருத்தல் நலம்...... ஏகப்பட்ட ட்ரம்ஸ்
பயன்படுத்தி காதினை கிழிக்கும் இசையை பயணத்தில் நிச்சயம் விரும்ப மாட்டேன். சமீபத்திய
பயணம் ஒன்றில் எங்களுடைய ஓட்டுனர் ஒரு நேபாளி. பயணித்த நாங்கள் கேட்டதோ தமிழ்
மற்றும் மலையாளப் பாடல்கள்..... நீண்ட
பயணம் அது! சில மணி நேரங்களுக்குப் பிறகு
அந்த ஓட்டுனர் எங்களிடம் கேட்ட கேள்வி – “கொஞ்ச நேரம் நேபாளி மொழி பாடல்
கேட்கிறேன் ப்ளீஸ்!”
உடனே நாங்கள் அனுமதிக்க,
சில மணி நேரத்திற்கு ஒரே மெட்டில் பல நேபாளி பாடல்கள் கேட்டோம்!
5. விருப்பமான பயண நேரம்:
அதிகாலை நேரம் அல்லது இரவு பத்து மணிக்கு மேல்... இதமான குளிர் காலத்தில் – அதிக சூடோ, அதிக
குளிரோ இருக்கும் நேரத்தில்/சீசனில் பயணிப்பதில் அவ்வளவு விருப்பம்
இல்லை..... இருந்தாலும் தவிர்க்க முடியாத
சமயங்களில் எந்த நேரத்திலும் பயணம் செய்வதில் எனக்கு எந்த வித தயக்கமும் இல்லை!
6. விருப்பமான பயணத்துணை:
விருப்பமான பயணத்துணை – அது Better half –ஆகத் தான் இருக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. ஆங்கிலத்தில் சொல்வது போல Wavelength Match ஆகும் நண்பர்களுடன் கூட பயணிக்கலாம்! ஒரு சில
இடங்களுக்கு Better half உடன் பயணிப்பது முடியாத விஷயம் – குறிப்பாக
கடும் பயணங்கள்..... அந்த மாதிரி
பயணங்களில் ஒத்த மன நிலை கொண்ட நண்பர்களோடு பயணிப்பது தான் பிடிக்கும்!
7. பயணத்தில் படிக்கவிரும்பும் புத்தகம்?
செல்லும் இடம் பற்றிய தகவல்கள் அடங்கிய புத்தகம்
என்றால் படிக்க விருப்பமிருக்கும். அப்படி இல்லை, வேறு புத்தகம் எனில் நிச்சயம்
படிக்க மாட்டேன். போகும் வழியெங்கும் கைகளில் காமிரா தயாராக இருக்கும் – ரசிக்கும்
காட்சிகளை சிறைப்படுத்த!
8. விருப்பமான ரைட் அல்லது டிரைவ்?
தடையில்லாத பயணம் – இந்தியாவின் National Expressway -1-ல் தங்கு தடையின்றி பயணிக்க முடியும். அச்சாலையில்
நான்கு சக்கர வாகனத்திலோ, அல்லது நீண்ட நாள் ஆசையான என்ஃபீல்ட் பைக்கிலோ பயணம்
செய்ய வேண்டும். சில கிலோமீட்டர் தொலைவு அப்பாதையில் சென்றிருந்தாலும், முழு நீளப்
பயணம் செய்ய வேண்டும் என்பது விருப்பம்.....
9. பயணத்தில் நீங்கள் முணுமுணுக்கும் பாடல்?
பல பாடல்களை குறிப்பாக 80-90 களில் வந்த சில பாடல்களை முணுமுணுத்ததுண்டு! மற்றபடி சத்தமாக பாடி, தன் இனத்தின் குரல் போல
இருக்கிறதே என வேகமாகச் செல்லும் வண்டிக்குக் குறுக்கே கழுதையார் வந்து அடிபட்டுக்
கொள்வாரேவாரே என்பதால் சத்தமாக பாடுவதில்லை!
10. கனவுப் பயணம் ஏதாவது ?
கனவுப் பயணம் ஒன்றல்ல, இரண்டல்ல நிறையவே உண்டு.
இருந்தாலும், இரண்டு மூன்று பயணங்கள் போக ஆசை – அவை Leh-Ladakh பகுதிகளுக்கு குறைந்தது 15 நாட்கள் பயணமாகச் செல்ல
வேண்டும். இந்தியாவின் வட கிழக்கு மாநிலங்களில் பயணிக்காத சிக்கிம் மாநிலத்திற்கு
ஒரு வாரப் பயணம் செய்ய வேண்டும். தவிர கைலாஷ்-மானஸ்ரோவர் யாத்திரை செல்லவும்
விருப்பமுண்டு. இதைத் தவிர இந்தியாவில்
இது வரை பயணிக்காத மாநிலமான ஜார்க்கண்ட் பகுதிகளுக்கும் செல்ல வேண்டும்! ஆசைக்கு எல்லை ஏது!
பயணம் குறித்து கேட்கப்பட்ட அனைத்து கேள்விகளுக்கும்
பதில் சொல்லி விட்டேன்! அடுத்ததாக
தொடர்பதிவு எழுத யாரையாவது அழைக்க வேண்டும்.....
அது தான் கொஞ்சம் கஷ்டம்! பயணம் பற்றி எழுதுவதில் அத்தனை சிரமம்
இல்லை. அடுத்தவர்களை அழைப்பதில் தான்
சிரமம் இருக்கிறது. தொடர நினைக்கும்
நண்பர்கள் யாரும் தொடரலாம்! எத்தனை பேராக
இருந்தாலும் படிக்க நான் தயார்! எழுத நீங்கள் தயாரா?
சற்றே இடைவெளிக்குப் பிறகு மீண்டும் சந்திப்போம்.......
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Labels:
அனுபவம்,
தொடர்பதிவு,
பயணம்,
பொது
திங்கள், 16 நவம்பர், 2015
கடவுளைக் கண்டேன்.....
படம்: இணையத்திலிருந்து....
சில மாதங்களாகக் காணாமல் போயிருந்த தொடர் பதிவு
இப்போது பதிவுலகத்தில் மீண்டும் வந்திருக்கிறது – நண்பர் கில்லர்ஜிக்கு வந்த
நகச்சுத்தியால்! அவர் ஆரம்பித்து வைக்க, ஒவ்வொரு பதிவரும் தங்களது ஆசைகளை பத்து
பத்தாக முத்து முத்தாக வெளியிட்டுக் கொண்டிருக்கிறார்கள். பத்து ஆசைகள் சொல்வது மட்டுமல்லாது, அடுத்த
பத்து பதிவர்களையும் எழுத வைக்க வேண்டும் என்ற ஆசையையும் சேர்த்து சொல்லி விட்டார்
கில்லர்ஜி! ஆசையே அலை போலே.... பதிவர்கள் எல்லோருமே அதன் மேலே!
இந்தப்
பதிவினை எழுதுகிற வரை, எனக்குத் தெரிந்து பத்துக்கு மேற்பட்ட பதிவர்கள் எழுதி
இருக்கிறார்கள். இந்த பத்துக்குப் பத்தில்
நண்பர் பரிவை சே. குமார் என்னையும் களத்தில் இறங்கப் பணித்திருக்கிறார்.
இதோ நானும் வந்து விட்டேன். இன்றைக்கு குஜராத்
பயணத்தொடரின் அடுத்த பகுதியை வெளியிட நினைத்திருந்தேன். அதற்குப் பதிலாக கடவுளைக் கண்டேன் பதிவாக
வெளியிடக் கட்டளை வந்துவிட்டது நண்பர் குமாரிடமிருந்து! அதனால் இதோ கடவுளைக்
கண்டேன் பதிவு.
கடவுளைக் காணும் போது கேட்க நினைத்த கேள்விகளைச்
சொல்வதற்கு முன்னர் ஒரு விஷயத்தினைச் சொல்லி விடுகிறேன். கேள்வி கேட்பதற்கும் நமக்குத் தெரிந்திருக்க
வேண்டும். தெரியாமல் எதையாவது கேட்டு விபரீதமான விளைவு உண்டாக வாய்ப்புண்டு. அதற்கு ஒரு கதையைச் சொல்லி
ஆரம்பிக்கிறேன். இந்தக் கதையை நீங்கள்
கேட்டிருக்கக் கூடும் – இருந்தாலும் பதிவிற்குச் சம்பந்தமுண்டு என்பதால் இங்கே
அக்கதையைச் சொல்லி விட்டே ஆரம்பிக்கலாம்!
ஒரு முறை எறும்புகள் எல்லாம் சேர்ந்து தங்கள்
கூட்டத்தை நடத்தின.
அந்தக் கூட்டத்தில், “நாம் ஒன்றாக வரிசையாகச் சென்று கொண்டிருக்கும் போது
ஏதாவது ஒரு யானை வந்து நம்மை மிதித்து விடுகிறது. நம் கூட்டத்திலிருக்கும்
எறும்புகளில் குறைந்தது ஆயிரம் எறும்புகளாவது இறந்து போய் விடுகின்றன... இதைத்
தடுக்க இந்த யானைக்கு நாம் ஒரு முடிவு கட்ட வேண்டும்” என்று அனைத்து
எறும்புகளும் புகார் தெரிவித்தன.
இதைக் கேட்ட எறும்புகளின் தலைவன், “ஆமாம், யானை மிகப்பெரிய உருவம். யானையிடமிருந்து நம்மைப் பாதுகாக்க, நாம் கடவுளிடம்தான் ஒரு நல்ல வரம் வாங்க வேண்டும்” என்றது.
“ஆமாம், நாம் கடவுளிடம் வரம் கேட்பது நல்லதுதான். எறும்பாகிய நாம் கடித்தால் கடிபட்டவர் இறந்து போய் விட வேண்டும் என்று வரம் கேட்க வேண்டும்” என்றன.
எறும்புகளின் தலைவன், “கடவுளிடம் வரம் வாங்குவது ஒன்று எளிமையானதில்லை. நம்மில் யாராவது கடவுளிடம் சென்று நமக்கான வரத்தைக் கேட்டு வர வேண்டும். எனக்கு வயதாகி விட்டது. நம்மில் வேறு யாராவது ஒருவரைத் தேர்வு செய்து கடவுளிடம் அனுப்பி வைக்கலாம்.” என்றது.
எறும்புகளும் தலைவனின் பேச்சுக்குக் கட்டுப்பட்டு, கடவுளைச் சந்தித்துத் தங்களுக்கான வரத்தைக் கேட்க ஒருவரைத் தேர்வு செய்தன.
கடவுளைத் தேர்வு செய்யப்பட்ட எறும்புக்கு மகிழ்ச்சி தாங்க முடியவில்லை. கடவுளைச் சந்திக்கத் தானே தகுதியானவர் என்று ஆணவம் கொண்டது. ஆனால், அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை.
சில நாட்களுக்குப் பின்பு தேர்வு செய்யப்பட்ட எறும்பு கடவுளைச் சந்திக்க சென்றது. சில நாட்களுக்குப் பின்பு அந்த எறும்பு கடவுளைச் சென்று சந்தித்தது. தங்கள் எறும்புக் கூட்டத்தின் சார்பில் தங்கள் கோரிக்கையை முன் வைப்பதாகச் சொன்னது.
கடவுளும் அந்த எறும்பிடம் என்ன கோரிக்கை என்று கேட்டார்.
தான் எனும் அகந்தையுடன் வந்திருந்த அந்த எறும்பு கடவுளிடம், “எறும்பாகிய நான் கடித்தால் இறந்து போய் விட வேண்டும்” என்று கேட்டது.
கடவுளும், “நீ கேட்ட வரத்தை உனக்குத் தந்தேன்” என்றார்.
கடவுளிடம் வரம் வாங்கிய மகிழ்ச்சியில் அந்த எறும்பு, கடவுள் கொடுத்த
வரத்தைச் சோதித்துப் பார்க்க விரும்பியது.
கடவுளைக் கடித்தது. கடவுள் தன் கையினால் அந்த
எறும்பை அடிக்க அது சாகும் நிலைக்குச் சென்றது.
உடனே அந்த எறும்பு, “கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், நீங்கள் கொடுத்த வரத்தின்படி கடிபட்டவர் சாகாமல், கடித்த நானே சாகப் போகிறேனே...” என்றது.
உடனே அந்த எறும்பு, “கடவுளே, நீங்கள் என்னை ஏமாற்றி விட்டீர்கள், நீங்கள் கொடுத்த வரத்தின்படி கடிபட்டவர் சாகாமல், கடித்த நானே சாகப் போகிறேனே...” என்றது.
கடவுள், “எறும்பே, நீ என்ன வரம் கேட்டாய்? எறும்பாகிய நான்
கடித்தால் இறந்து போய் விட வேண்டும் என்று கேட்டாய். நீ கடித்தாய், இப்பொழுது நீ சாகப்
போகிறாய்” என்றார்.
ஆணவப்பட்ட அந்த எறும்பு செத்தது.
இது செவி வழிச் செய்தி மட்டுமே.... உண்மையாக நடந்ததா என்று ஆராய்ச்சி நமக்குத்
தேவையில்லை. கேட்பதற்கும் தெரிந்திருக்க
வேண்டும் என்பதைச் சொல்ல மட்டுமே இக்கதையை இங்கே சொல்லி இருக்கிறேன்! நமக்கோ இப்படிக் கேட்பதற்கெல்லாம் தெரியாது.
கோவில்களுக்குச் செல்லும் வழக்கம் இருந்தாலும், பெரிதாய் வேண்டுதல்கள் இருந்ததில்லை.
என்னுடைய வேண்டுதல்கள் சில வார்த்தைகள் மட்டும் தான் – “எல்லோருக்கும் நல்லதையே கொடு.
எல்லோரையும் நல்லபடியாக வை!” இதைத் தவிர
வேறொன்றுமில்லை.
இப்போது இந்த வார்த்தைகளைத் தாண்டி பத்து ஆசைகளைச்
சொல்ல வேண்டிய கட்டாயம். அதனால் எனக்குத் தோன்றிய பத்து வரங்களை அருள கடவுளைக்
கேட்கப் போகிறேன். The Count Down Starts…..
10. பல இடங்களுக்குச்
செல்லும் வாய்ப்பு கிடைக்கிறது. செல்லும்
இடங்கள் அனைத்திலும் குட்கா, பீடா, ஜர்தா எனப் பயன்படுத்துகிறார்கள். வாயிலிருந்து
உமிழ்ந்து கொண்டே இருக்கிறார்கள். ஊரே சிகப்பு மயம்! அப்படித் துப்புகிற போது விழும் இடத்தில்
தானாகவே ஒரு Spring Board உருவாகி, துப்பியவர் முகத்திலேயே உமிழ்ந்தவை
விழும்படிச் செய்ய வேண்டும். தொடர்ந்து
இப்படி நடந்தால் நகரம் முழுவதும் சிவப்பு மயமாவதைத் தடுக்க முடியும்.
9. பணம் வாங்கிக் கொண்டு வேலை செய்யும்
அரசியல்வாதிகள் அதிகாரிகள் ஆகியவர்களிடம் கொடுக்கப்படும் பணம் வேலை முடிந்தவுடன்
அவர்களிடமிருந்து மாயமாக மறைந்து விடவேண்டும்.
மறைந்த பணம் வாழ வழியின்றி இருக்கும் ஏழை மக்களிடம் சென்று சேர வேண்டும்.
8. ஊர் முழுவதும் குப்பைகளை அள்ளி அள்ளி வீசிக்
கொண்டிருக்கிறோம். என்ன தான் அரசாங்கம் சுத்தம் செய்வதில்லை என்ற குற்றச்சாட்டை
அள்ளி வீசினாலும், குப்பைக்கூடைகளில் குப்பை போடாது போகும் வழியெல்லாம் குப்பைப்
போடுபவர்கள் இங்கே நிறைய பேர். குப்பைகளைப்
போட்டுவிட்டு அவர்கள் வீடு திரும்புவதற்குள், அந்தக் குப்பைகள் அவரது வீட்டின்
முன்னே கிடக்க வேண்டும்!
7. தில்லி போன்ற பெருநகரங்களில் மட்டுமல்லாது எல்லா
இடங்களிலும் பெண்களை வன்புணர்வு செய்வது அதிகரித்து வருகிறது. பச்சிளம்
குழந்தைகளைக் கூட விட்டுவைப்பதில்லை.
பெண்கள் மட்டுமல்ல, சில ஆண் குழந்தைகளைக் கூட பலவந்தப்படுத்தும் கொடுமை
நடந்து கொண்டிருக்கிறது. அப்படிச் செய்ய நினைக்கும் மிருகங்கள் [அவர்கள் மனிதர்கள்
என்று சொல்ல முடியவில்லை!] தங்களது உடையைக் கழற்றிய உடனேயே உறுப்பு வெட்டுப்பட
வேண்டும்.
6. விளை நிலங்கள் அனைத்தும் வீடுகளாக மாறிக் கொண்டு
வருகிறது. ஏரிகள், ஆற்றுப் படுகைகள் என எதையும் விட்டு வைப்பதில்லை. கூட்டுக்
குடும்பமாக இருந்தது மறைந்து ஒவ்வொருவரும் தனித்தனி வீடுகள் வேண்டும் என நினைத்து
விளைநிலங்களை விற்றுக் கொண்டிருக்கிறார்கள்.
நமது நாட்டில் இருக்கும் மக்கள் தொகைக்கு அனைவருக்கும் தனித்தனி வீடுகள்
வேண்டுமெனில் வெகு விரைவில் நமது நாட்டில் விவசாயமே மறைந்து போகக்கூடிய அபாயம்
இருக்கிறது. விவசாயம் பெருக வழி செய்ய
வேண்டும்.
5. இயற்கைக்கு எதிராய் பல விஷயங்களை மனிதர்கள்
தொடர்ந்து செய்து கொண்டிருக்கிறார்கள்.
அப்படிப்பட்ட எண்ணம் முழுவதும் மறைய வேண்டும். மனிதன் தனது ஆதாயத்திற்காக
இயற்கை தந்த வரங்களை சீரழித்துக் கொண்டிருக்கிறான். அது தடுக்கப்பட வேண்டும்.
4. உலகில்
உள்ள உயிர்கள் அனைத்திற்கும் வாழ்வதற்கு உரிமையுண்டு. மதம் என்ற பெயராலும், ஜாதி
என்ற பெயராலும் ஒருவொருக்கொருவர் அடித்துக் கொண்டு இருக்கிறார்கள். பல இடங்களில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடுகிறது.
எத்தனை எத்தனை உயிரிழப்புகள். இவையெல்லாம் அடியோடு ஒழிய வேண்டும். ஒன்றே குலம் – அது மனிதகுலம் என்ற உணர்வு
அனைத்து மனிதர்களுக்கும் வர வேண்டும்.
3. இன்றைக்கு
மனிதர்களிடத்தே பொறாமையும் காழ்ப்புணர்வும் நிறையவே இருக்கிறது. ஒருவர் நன்றாக
இருந்துவிட்டால் போதும் – பலருக்குப் பொறுக்காது. அவர் முன்னே பாராட்டினாலும்,
புறமுதுகில் குத்துபவர்கள் நிறையவே உண்டு.
அப்படி புறமுதுகில் குத்த நினைப்பவர்களைத் திருத்த வேண்டும்.
2. பல
இடங்களில் முதியோர் இல்லங்கள் வந்து விட்டன. அதை வியாபாரமாகவும் செய்வது
பெருகிவிட்டது. வசதி இருக்கிறதே என்பதற்காக இப்படி முதியோர்களை தனித்தீவுகளாக
ஆக்குவது குறைய வேண்டும். குழந்தைகளைப் பெற்றாலும் இப்படி தனியாக இருக்க வேண்டிய
நிர்பந்தம் சிலருக்கு. பெற்ற குழந்தைகளை
குப்பைக்கூடையில் வீசிச் செல்லும் சில அம்மாக்களும் இங்கே உண்டு. அப்படி வீசப்படும் குழந்தைகள் என்ன பாவம்
செய்தார்கள்? அவர்களுக்கு ஏனிந்த நிலை. இப்படி ஒரு நிலை வராமல் இருக்க வேண்டும்.
1. கடவுளைக்
கண்டேன் பதிவு மூலமாகப் பல பதிவர்கள் தங்களது ஆசைகளைச் சொல்லி இருக்கிறார்கள்.
அனைத்துப் பதிவர்களின் ஆசைகளும் நிறைவேற வேண்டும்! இது தான் முதல் ஆசையும் முடிவான
ஆசையும்!
”எல்லோரும் இன்புற்றிருக்க நினைப்பதுவே அல்லாமல், வேறொன்றறியேன் பராபரமே”
ஆஹா....
ஆசை.... பேராசையாக ஆகிவிட்டதா
என்பதை கில்லர்ஜியும் என்னை எழுத அழைத்த பரிவை சே. குமாரும், படிக்கப்போகும்
நீங்கள் அனைவரும் தான் சொல்ல வேண்டும்!
ஆஹா அடுத்ததா ஒரு விஷயம் இருக்கே! இன்னும் பத்து பேரை இத் தொடர்பதிவினைத்
தொடரக் கேட்க வேண்டும். பத்து பேரா....
ஏற்கனவே எனக்குத் தெரிந்து பன்னிரண்டு பேர் பத்து பத்து பேராக அழைத்து
இருக்கிறார்கள் – அவர்களில் பலர் எனக்குத் தெரிந்தவர்கள். அதில் இல்லாதவர்களை அழைப்பது கடினம். ஆகையால், இது வரை எழுதாத, எழுத ஆசைப்படும்
எவரும் எழுதலாம்!
என்ன நண்பர்களே, இன்றைய பதிவில் கண்ட எனது ஆசைகள், விருப்பங்கள்
பற்றிய உங்கள் கருத்துகளைப் பின்னூட்டத்தில் சொல்லுங்களேன்!
இன்றைக்கு வெளியிட்டு இருக்க வேண்டிய பஞ்ச் துவாரகா தொடரின் அடுத்த பகுதி நாளை வெளியிடப்படலாம்!
மீண்டும் சந்திக்கும் வரை.....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Labels:
அனுபவம்,
தொடர்பதிவு,
பொது
புதன், 25 ஜூன், 2014
கேள்வியின் நாயகனே........... – தொடர் பதிவு
பழைய சினிமா படம் ஒன்றில் நடிகர் சிவக்குமார் “கேள்விக்கென்ன பதில்.... என் கேள்விக்கென்ன பதில்” என்று டூயட் பாடி இருப்பார். பூரிக்கட்டையால் அடி வாங்கிக் கொண்டே
இருந்தாலும், இன்னமும் தைரியமுடனும் தெம்புடனும் இருக்கும், அமெரிக்காவில்
வசித்தாலும் மதுரைத் தமிழன் என்று தம்மை அழைத்துக் கொள்ளும் நண்பர், சிவக்குமார்
போலவே சில கேள்விகளை அவர் மனைவியிடம் கேட்காமல் [கேட்டால் எப்படியும் பூரிக்கட்டை
பறக்கும் என்பது தெரிந்து வைத்திருப்பதால்] பதிவுலக நண்பர்கள் பத்து பேரைக் கேட்டுள்ளார்.
அந்த பத்து பேரும் இன்னும் பத்து பத்து பேரை பதில் சொல்லக் கேட்க, ஒரு சங்கிலித்
தொடர் இப்போது பதிவுலகில் ஓடிக் கொண்டிருப்பது உங்கள் அனைவருக்கும் தெரிந்த
விஷயமே.
கேள்வியின்
நாயகனாகிய மதுரைத் தமிழன் முதல் முதலாக அழைத்த பத்து பேரில் நானும் ஒருவன். அவரது
கேள்விகளும் எனது பதில்களும் இங்கே.....
பதில்களால் உங்கள் மனது சங்கடப்பட்டாலோ, கோபம் வந்தாலோ, சந்தோஷம்
அடைந்தாலோ, மொத்தத்தில் நல்லதோ கெட்டதோ, ”எல்லாப்
பெருமையும் மதுரைத் தமிழனுக்கே.....”
திருவிளையாடல்
தருமி மாதிரி எனக்கு கேள்வி மட்டும் தான் கேட்கத் தெரியும் என்று தப்பிக்க
முடியாது செய்த நண்பர் மதுரைத் தமிழனுக்கு இன்னும் நிறைய பூரிக்கட்டை அடி கிடைக்க
வாழ்த்தலாம் என்றாலும் எனது பூஞ்சையான மனது ஒப்புக் கொள்ள வில்லை!
வாங்க
கேள்வி பதிலுக்குப் போகலாம்.
1.
உங்களுடைய 100 வது பிறந்த நாளை எப்படிக் கொண்டாட விரும்புகிறீர்கள்?
இன்றைக்கு
நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் கலப்படத்திற்கு நூறு வயது வாழ்வதெல்லாம் பகல்
கனவு தான். அப்படி 100 வயது வாழ்ந்தால்,
100-வது பிறந்த நாள் அன்று, ஒரு அனாதை இல்லத்திற்குச் சென்று, 100 கிலோவில் பிறந்த
நாள் கேக் வாங்கி பிறந்த நாள் கொண்டாடி அந்த கேக்கினை எல்லா குழந்தைகளுக்கும்
பங்கிட்டு கொடுத்து விடுவேன். இது வரை நான் கேக் வெட்டி பிறந்த நாள் கொண்டாடியதே
இல்லையே! அக்குழந்தைகளுக்கு அன்றைய உணவுக்கான செலவும் என்னுடையதாக இருக்கும்.
2.
என்ன கற்றுக் கொள்ள விரும்புகிறீர்கள்?
இந்திய மொழிகளில் இன்னும் சில மொழிகளையாவது
கற்றுக் கொள்ள வேண்டும் – இப்போதைக்கு குஜராத்தி.... தில்லியில் புதுசு புதுசா
நிறைய குஜராத்தி வந்து சேர்ந்துட்டு இருக்காங்க! அவங்க பேசும்போது நம்மளை திட்டற
மாதிரியே ஒரு உணர்வு!
3.
கடைசியாக நீங்கள் சிரித்தது எப்போது, எதற்காக?.
தினம் தினம் சிரிப்பா சிரிச்சுட்டு
இருக்கேன்..... இன்றைக்கு ஒரு ஜோக்
படித்தேன்.... டீச்சர் [மைதிலி டீச்சர்
இல்லை!] வகுப்பறையில் பாடம் எடுத்துட்டு இருக்காங்க. “ஒரு நாள் இந்த பூமியினை நாலா
பக்கமும் தண்ணீர் சூழ்ந்து கொள்ளும், எல்லா உயிரினங்களும் அழிஞ்சு போயிடும்.
எல்லாமே சேதமாயிடும்” அப்படின்னு
சொல்லிட்டு இருந்தாங்க. அப்ப ஒரு பையன் எழுந்து அவங்களை ஒரு கேள்வி கேட்டானாம் –
“மிஸ்... அன்னிக்கும் உங்க கிளாஸுக்கு
வரணுமா?” – அவன்
கவலை அவனுக்கு!
4.
24 மணி நேரம் பவர் கட்டானால் நீங்கள் செய்வது என்ன?
தலைநகர்
தில்லியில் நான் இருக்கும் பகுதியில் பவர் கட் என்பது கிடையாது. அப்படி 24 மணி
நேரம் மின்சாரத் தடை இருந்தால், வியர்வை சிந்தி உழைத்ததாய் நினைத்தபடியே அமர்ந்து
விடுவேன் – வியர்வை சிந்தி உழைச்சு ரொம்ப நாளாச்சுப்பா!
5.
உங்கள் குழந்தைகளின் திருமண நாள் அன்று அவர்களிடம் நீங்கள் சொல்ல
விரும்புவது என்ன?....
அவர்களுக்கு நான் சொல்ல விரும்புவது இது தான் –
வாழ்க்கைப் பயணத்தினை நீங்கள் இருவரும் சேர்ந்து
கடக்க வேண்டும் – உங்கள் பாதையில் ரோஜாப்பூக்கள் மட்டுமே இருக்கும் என்று சொல்ல
முடியாது, இடையிடையே சில முட்களும் இருக்கலாம். அதைத் தாண்டிச் செல்வதில் தான்
உங்கள் திறமை இருக்கிறது. எந்த விஷயத்திற்காகவும் உங்களுக்குள் சண்டையோ சச்சரவோ
வந்து விடக்கூடாது – விட்டுக் கொடுத்தலில் இருக்கும் சுகம் வேறெதிலும் இல்லை.
6.
உலகத்தில் நடக்கும் பிரச்சனைகளை உங்களால் தீர்க்க முடியும் என்றால்
எந்தப் பிரச்னையை நீங்கள் தீர்க்க விரும்புவீர்கள்?
எங்கே
பார்த்தாலும் குழந்தைத் தொழிலாளர்கள் – படிக்க வேண்டிய வயதில் கடுமையான வேலைக்கு
வந்து விடுகிறார்கள். அவர்கள்
பிரச்சனையைத் தீர்த்து வைக்க விரும்புவேன்.
7.
உங்களுக்கு ஒரு பிரச்சனை அதைத் தீர்க்க யாரிடம் அட்வைஸ் கேட்க
விரும்புவீர்கள்?
என்
நட்பு வட்டத்தில் இருப்பவர்களில் – என் பிரச்சனைக்கு இது தான் தீர்வு என்று எவரால்
நிச்சயமாக சொல்ல முடியுமோ – அவரிடத்தில்.
8.
உங்களைப்பற்றி ஒருவர் தவறான செய்தியைப் பரப்புகிறார். அதைக்கண்டால்
நீங்கள் என்ன செய்வீர்கள்?
தவறான செய்தி பரப்பும் நபரிடம் அவரது தவறினை
எடுத்துச் சொல்வேன். கேட்க மறுத்தால்,
அதைப் பற்றி கவலைப் படமாட்டேன். என்னை நன்கு புரிந்தவர்களுக்கு என்னைப் பற்றித்
தெரியும் என்பதால், தவறான செய்தி பரப்பும் நபரை விட்டுவிடுவேன்.
9.
உங்கள் நண்பரின் மனைவி இறந்து விட்டால் அவரிடம் என்ன சொல்வீர்கள் ?
அந்த நேரத்தில் அவரது தேவை தனிமை
மட்டுமே.... ”நீங்கள்
இருவரும் சேர்ந்து வாழ்ந்த சந்தோஷமான நினைவுகளை நினைத்துப் பார், அந்த நினைவுகளில்
உன் மனைவி தொடர்ந்து இருப்பார், உன்னை விட்டு அகல மாட்டார்” என்று
சொல்லி அவரை தனிமையில் விடுவேன்.
10.
உங்கள் வீட்டில் நீங்கள் தனியாக இருந்தால் என்ன செய்வீர்கள்?
வாசிப்பு, மெல்லிசை கேட்பது, சின்னச் சின்னதாய்
வீட்டு வேலைகள், தூக்கம் என பெரிய பட்டியலே இருக்கிறது. எதைச் சொல்ல எதை விட!
ஆஹா பத்து கேள்விகள் முடிந்து விட்டதா!
கேள்விக்கு பதில் சொல்வது கூட பெரிய வேலையாகத்
தோன்றவில்லை. இந்த கேள்விகளை கேட்டு நானும் பத்து பேரை மாட்டி விட
வேண்டுமாம்.... அது தான் கடினமான
விஷயம். என் வலையுலக நட்புகள் பலர் ஏற்கனவே
மாட்டிக்கொண்டு முழித்துக் கொண்டிருக்கிறார்கள்..... ம்....
சென்னை பித்தன் ஐயாவின் வழியை நானும் தொடர்வது நல்லது என்று
தோன்றுகிறது.
கேள்விகளுக்கு பதில் சொல்ல நினைக்கும் நண்பர்கள்
சொல்லலாம். பதிவினை முடிப்பதற்கு முன் கேள்விகள் பற்றி நண்பர் நெய்வேலி
பாரதிகுமார் சொல்வதைச் சொல்லி இப்பதிவினை முடிக்கிறேன்....
எண்ணங்கள் சிருஷ்டிக்கப்படும்போது கேள்விகளும்
முளைக்கின்றன. எனக்கும் அப்படித்தான். சில கேள்விகளுக்குப் பதில் தேட
முயன்றிருக்கிறேன். சில பதில்களை கேள்வியோடு பொருத்தமுடியாது திணறியிருக்கிறேன்.
சில கேள்விகள் இன்னும் சில கிளைக்கேள்விகளை பிறப்பித்திருக்கின்றது. சில கேள்விகள்
பதில்களில்லாமல் பேயாட்டம் போடுகின்றது. இருப்பினும் கேள்விகளோடு வாழ்தல்
அர்த்தமுள்ள வாழ்க்கையென்றே எனக்குப் படுகிறது.
மீண்டும் சந்திப்போம்....
நட்புடன்
வெங்கட்.
புது தில்லி.
Labels:
தொடர்பதிவு,
பொது
















