வெள்ளி, 30 நவம்பர், 2012

ஃப்ரூட் சாலட் – 23 – தில்லியில் திருவிழா – குங்குமப் பூவே
குழந்தைகள் தினமாம் நவம்பர் 14 ஆம் தேதியில் தொடங்கி, நேற்றைய முன் தினம் அதாவது 27-ஆம் தேதி அன்று தில்லியின் வருடாந்திர திருவிழா முடிந்தது.  என்னது தில்லியில் திருவிழாவா? சொல்லவே இல்லை!என்பவர்களுக்கு, இது வருடாந்திர திருவிழாங்க. கிட்டத்தட்ட 32 வருஷமா நடந்துட்டு இருக்கு. பொழுது போக்கு அம்சங்கள் அதிகமாக இல்லாத தில்லியில், பல மக்களுக்கு இந்த பதினான்கு நாட்களும் திருவிழா தான்.

ஒவ்வொரு வருடமும் இந்த நாட்களில் பிரகதி மைதானம் வரும் மக்களின் அலைவெள்ளத்தில் பிதுங்கி வழியும். ஒவ்வொரு மாநிலத்திற்கும் ஒரு நிரந்தரமான கட்டிடம், அதைத் தவிர வெளிநாட்டு அரங்குகள், அரசு துறைக்கான அரங்குகள், உணவுப் பொருட்களுக்கான இடங்கள் என்று எங்கும் மக்கள் கூட்டம் அலை மோதும். இந்த முறை கடைசி ஞாயிறான 25 ஆம் தேதி அன்று சுமார் ஒன்றரை லட்சம் பேர் கண்காட்சியைப் பார்க்க வந்திருந்தார்களாம். இதில் இடிமன்னர்களும், உரசல் மன்னர்களும், மொபைல்-பிக்பாக்கெட் அடிப்பவர்களும் அடக்கம்!கண்காட்சி முடிந்த பிறகு சிறப்பான பங்காளர்களுக்கு பரிசுகள் வழங்குவார்கள். இந்த வருடத்தின் மாநிலங்களுக்கான முதல் பரிசு பெற்ற மாநிலம் – அசாம், இரண்டாம் பரிசு – கேரளா, மூன்றாம் பரிசு பஞ்சாபிற்கும் ராஜஸ்தானிற்கும்.  என்னது இதுவரை தமிழகம் பரிசு பெற்றிருக்கிறதா? என்றா கேட்டீங்க! எனக்கு நினைவு தெரிந்து இது வரை இல்லை. காரணம் என்று ஒருமுறை வந்து பார்த்தால் தெரிந்துவிடும்!இந்த வருடம் வேலைகள் அதிகமாக இருந்ததால் நான் செல்லவில்லை. அதனால், போன வருடம் அசாம் அரங்கில் எடுத்த படங்களை இணைத்திருக்கிறேன். கேரள படமும் தான்!

எல்லா வருடங்களிலும் இதே நாட்களில் தான் இந்த திருவிழா நடக்கும். இச்சமயத்தில் வந்தால் நீங்களும் பார்த்து ரசிக்கலாம்.

இந்த வார முகப்புத்தக இற்றை:

இன்னும் எத்தனை நாளைக்குத் தான் காக்கா கல் போட்டு தண்ணீர் குடிச்சுதுன்னு சொல்லப் போறீங்க. இந்தக் காலத்து காக்கா MODERN காக்கா...  குழாய் போட்டு உறிஞ்சுடும்!இந்த வார குறுஞ்செய்தி

Heart is not a basket for keeping tension and sadness.  It’s a golden box for keeping roses of happiness…  Let your heart be happy always.

ரசித்த புகைப்படம்: 

எதாவது ஒரு இடத்தில் வரிசையாக வரவேண்டும் என எழுதி இருந்தால் ‘அவன் யார் சொல்றது?என்ற எண்ணத்தோடு குறுக்கே செல்பவர்கள் தாங்க நிறைய பேர்.  அவங்க எல்லாரும் இந்தப் பறவைகள் கிட்ட வகுப்புப் போகணும்.


  
ரசித்த பாடல்

இந்த வாரம் ஒரு பழைய பாடல்.  சரி சரி ஓடாதீங்க. நிச்சயம் ரசிக்கும்படியான பாடல் தான். நம்ம சந்திரபாபு பாட்டு. பாட்டுலயும், சந்திரபாபுவிடமும் என்ன ஒரு துள்ளல். என்ன பாட்டுன்னு கேட்கறீங்களா?  “குங்குமப் பூவே, கொஞ்சும் புறாவேஎனும் பாடல் தான். 1959- ஆம் வருடம் வெளிவந்த மரகதம் என்ற படத்தில், திரு சுப்பையா நாயுடுவின் இசையில் சந்திரபாபுவும், ஜமுனா ராணியும் பாடிய பாடல்.  நீங்களும் ரசியுங்களேன்.

 ராஜா காது கழுதைக் காது:  

சமீபத்திய திருச்சி பயணத்தின் போது பேருந்து ஒன்றில் கேட்டது.  பாட்டி தனது நான்கு வயது சுமார் பேரனிடம்  – “கண்ணு, பார்த்து சாப்பிடணும், பப்பிள் கம் முழுங்கிடாத, வயத்துல போய் ஓட்டை போட்டுடும்!”. அதற்கு மகள் சொன்னது – ஏம்மா பஸ்ல இப்படி கத்தற, எல்லாம் அவனுக்குத் தெரியும்.

படித்ததில் பிடித்தது:
இப்படித்தான்....

அடைக்கப்படும் கதவின்
விருப்பமான சத்தத்திற்காக
உள் அறையில் காத்திருக்கிறேன்.
மிகுந்த கவனத்துடன்
சத்தமே கேட்காமல்
சாத்திவிட்டுப் போகிறார்கள்.
இப்படித்தான் ஒரு காரணமுமின்றி
இழந்துவிட நேர்கிறது
சின்னும் சிலவற்றை.

-          கல்யாண்ஜி

மீண்டும் ஃப்ரூட் சாலட்-உடன் அடுத்த வெள்ளியன்று சந்திக்கும் வரை

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

புதன், 28 நவம்பர், 2012

ஷங்கர் விமான மண்டபம் மற்றும் குஸ்ரோ பாக்திரிவேணி சங்கமம்  காசி பயணம்  பகுதி - 12

இப்பயணத்தொடரின் முந்தைய பகுதிகள்பகுதி 1 2 3 4  5 6 7 8 9 10 11

சென்ற பகுதியில் [B]படே ஹனுமான் கோவில் பற்றிய விவரங்களைப் பார்த்தோம். இந்தப் பகுதியில் நாம் பார்க்க இருப்பது ஹனுமான் கோவில் அருகே இருக்கும் ஷங்கர் விமான மண்டபம் பற்றி.

காஞ்சிபுரம் நகரில் இருக்கும் காஞ்சி காமகோடி பீடத்தினால் அலஹாபாத் நகரில் கட்டப்பட்ட கோவில் தான் இந்த ஷங்கர் விமான மண்டபம். முற்றிலும் தென்னகத்தின் கட்டிடக்கலை பயன்படுத்தி கட்டப்பட்ட இந்த கோவில் அலஹாபாத் ரயில் நிலையத்திலிருந்து சுமார் 6 கிலோ மீட்டர் தூரத்தில், சங்கமத்திற்கு வெகு அருகிலேயே இருக்கிறது. மொத்தம் நான்கு மாடிகள் கொண்ட இக்கோவிலில் சிறப்பான சிற்பங்கள் இருக்கின்றன. 16 தூண்கள் தாங்கிக் கொண்டிருக்கும் இந்தக் கோவிலின் மொத்த உயரம் 130 அடி.


கோவில் நுழைவாயில்

1970-ஆம் ஆண்டு கட்ட ஆரம்பித்து 1986-ஆம் வருடம் கட்டி முடிக்கப்பட்டது. கோவிலின் வாயிலில் ஆதி சங்கரர் மற்றும் மந்தன் மிஷ்ரா [இவர்களுக்கிடையே நடந்த விவாதம் பிரபலமானது] அவர்களுடைய உருவச் சிலைகள் வைத்திருக்கிறார்கள்.  கோவிலின் உள்ளே மீமாம்ச தத்துவத்தினை பரப்பிய குமாரில பட்டர், ஜகத்குரு சங்கராச்சாரியர், காமாட்சி தேவி [51 சக்திபீடங்களுடன்], திருப்பதி பாலாஜி [108 விஷ்ணுவுடன்], யோகஷாஸ்திர சஹஸ்ரயோக லிங்கம் [108 லிங்கம்] ஆகிய சிலைகளும் இங்கே பிரதிஷ்டை செய்யப்பட்டு உள்ளது.

 கோவிலின் முழுத் தோற்றம் - பட உதவி கூகிள்.

அழகிய சிற்பங்கள் ஆங்காங்கே இருக்கின்றன.  ஆதி சங்கரரின் வாழ்க்கை வரலாற்றினை ஓவியங்களாக வரைந்து கோவிலின் சுவற்றில் வைத்திருக்கிறார்கள்.  காலை 6 மணி முதல் மதியம் 1 மணி வரையும், மாலை 4 மணி முதல் இரவு 8 மணி வரை கோவில் திறந்திருக்கும். சிறப்பான விழாக்களும் இங்கே கொண்டாடப்படுகின்றன. 

கோவில் மிகவும் நல்ல முறையில் பராமரிக்கப்பட்டு இருக்கிறது.  இங்கேயும் உள்ளே சென்று பார்வையிட ஐந்து ரூபாய் கட்டணம் வசூலிக்கிறார்கள். [நான் சென்ற நேரத்தில் பொது சேவை இல்லையோ!]

கோவிலின் வெளியே வரிசையாக நிறைய கடைகள். கடைகளில் விற்பது - வேறென்ன பெண்களுக்கான வளையல்கள், மோதிரங்கள், பொட்டு போன்றவை தான். மகளுக்கும் மனைவிக்கும் சில பொருட்களை வாங்கிக்கொண்டு அங்கிருந்து காரில் கிளம்பினோம் அடுத்த இலக்கை நோக்கி. 

அடுத்ததாய் நாம் பார்க்கப்போவது ஒரு அழகிய பூங்கா பற்றி.  கி.பி. 1606 ஆண்டு கட்டப்பட்டது இப்பூங்கா.  பூங்காவின் பெயர் மற்றும் பூங்கா இருக்கும் இடத்தின் பெயரும் குஸ்ரோ பாக் [Khusrau Bagh]. இவ்வழகிய பூங்காவினுள் சுல்தான் பேகம், நிடார் பேகம் மற்றும் குஸ்ரோ மிஸ்ரா ஆகியோருடைய சமாதிகள் இருக்கின்றன.


குஸ்ரோ பாக் [Khusrau Bagh] - பட உதவி கூகிள்.

அலஹாபாத் ரயில் நிலையத்தின் வெகு அருகிலேயே அமைந்திருக்கும் இந்தப் பூங்காவினுள் அமைந்திருக்கும் கட்டிடம் முகலாயக் கட்டிடக்கலையின் சிறப்பினை இன்றளவும் பறைசாற்றிக்கொண்டு இருக்கிறது.  முகலாய மன்னர் ஜஹாங்கீர் அவர்களின் முதல் மனைவி ஷா பேகம் அவர்கள் 1604-ஆம் ஆண்டு இறக்க, அவருக்கு ஒரு சமாதி எழுப்பி, அதனைச் சுற்றி ஒரு பெரிய பூங்காவும், பூங்காவினைச் சுற்றி பெரிய மதில் சுவரும் எழுப்பியுள்ளார்கள். 

ஜஹாங்கீரின் மூத்த மகன் குஸ்ரோ, தனது தந்தைக்கு எதிராக குரல் கொடுத்த போது இங்கே தான் சிறை வைக்கப்பட்டார்.  தப்பிக்க முயற்சி செய்த போது அவரை கடுமையாகத் தண்டித்து சிறையில் மீண்டும் அடைக்கப்பட்டதாகவும், 1622-ஆம் வருடம் கொல்லப்பட்டதாகவும் வரலாறு சொல்கிறது.  அதன் பிறகு அவருக்கும் இங்கே சமாதி எழுப்பியிருக்கிறார்கள். 

இந்த இரண்டு சமாதிகளுக்கு இடையே இருக்கும் இடம் தான் மிகவும் அழகான வடிவமைப்பில் கட்டப்பட்டது. 1624-25-ல் கட்டப்பட்ட இது குஸ்ரோவின் சகோதரி சுல்தான் நிடார் பேகம் சொன்னபடியே அவருக்காக வடிவமைக்கப்பட்டது என அங்குள்ள பலகையில் எழுதி வைத்திருந்தார்கள்.

1857-ஆம் ஆண்டின் சிப்பாய்க் கலகத்தின் போது மௌல்வி லியாகத் அலி அவர்களுடைய தலைமையில் போரிட்ட சிப்பாய்களின் தலைமையகமாக இருந்தது இந்த குஸ்ரோ பாக் தான். அவர்கள் கைப்பற்றிய இரண்டே வாரத்தில் ஆங்கிலேயப் படைகளால் மீட்கப்பட்டதாம் இந்த இடம்.

வரலாற்றுச் சிறப்பு மிக்க இந்த இடத்தினையும் பார்த்து ரசித்தோம்.  அடுத்தது என்ன என்ற ஆர்வம் உங்களுக்கு இருக்கும்.  சீக்கிரமே மேலும் சில சிறப்பான இடங்களுக்கு உங்களை அழைத்துச் செல்கிறேன் வரும் காசி – அலஹாபாத் பயணப் பதிவுகளில்.

அடுத்த வாரம் இப்பயணத் தொடரின் அடுத்த பகுதியில் உங்களைச் சந்திக்கும் வரை.....

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி.

செவ்வாய், 27 நவம்பர், 2012

விளம்பரங்கள் அன்றும் இன்றும்நிறைய ஊடகங்கள் இருக்கும் நிலையில்  சாதாரண பற்பொடியிலிருந்து பளபளப்பான வைரக்கற்கள் பதித்த நகைகள் வரை  எந்த ஒரு பொருளையும் சுலபமாக மக்களைச் சென்றடையும்படி விளம்பரம் செய்வதில்  தொலைக்காட்சிகள் பெரும் பங்காற்றுகின்றன. சமீபத்தில் வந்த ICICI Bank இன் விளம்பரம் பார்த்தீர்களா? இரு சிறுமியர் ஒரு கடைக்குச் சென்று மிட்டாய் வாங்குவது போல் காண்பித்து நமது சிறு வயது நினைவுகளைத் தூண்டி விடுவார்கள். ஒரு நிமிடம் இருபது விநாடிகள் ஓடும் இந்த விளம்பரம், 10 பைசா ஐஸ் குச்சிக்காக, கையில் டம்ளரோடு தெருவில், அக்காவுடன் ஓடியதை  நினைவுக்கு வரவழைத்தது.  ஐந்து பைசாவிலும், 10 பைசாவிலும் பெற்ற கமர்கட் தேன் மிட்டாய் புளிப்பு மிட்டாய் சந்தோஷங்கள் அப்படியே நினைவில் வந்து நிறுத்திய விளம்பரம்.  இது வரை பார்க்காவிட்டால் இங்கே  பாருங்க.
.
மற்றுமொரு விளம்பரம் இதுவும் குழந்தைகளை வைத்து எடுத்த விளம்பரம் தான்.  ப்ரிட்டானியா குட் டே பிஸ்கெட்டுகளுக்காக எடுத்த இந்தக் காணொளியைப் பாருங்கள்.  குழந்தைகள் முகத்தில் ஏமாற்றமும், பிஸ்கெட் கிடைத்த பின் உள்ள குதூகலத்தையும் பார்த்துக் கொண்டே இருக்கலாம்
!


சினிமாவிற்கு வரும் விளம்பரங்கள் பற்றி சொல்லவே தேவையில்லை. புதிதாய் ஒரு படம் பூஜை போட்டாலே, தமிழில் இருக்கும் அத்தனை தொலைக்காட்சி அலைவரிசைகளிலும் போட்டி போட்டுக் கொண்டு அப்படத்தின் விளம்பரங்கள் வர ஆரம்பித்து விடுகின்றன.  நாளிதழ்களும் முழுப்பக்க வண்ண விளம்பரங்கள், செய்திகள், கிசுகிசுக்கள் என்று வெளியிட்டு அப்படத்தினை மக்களுக்கு அறிமுகம் செய்கிறார்கள். 

ஆனால், இந்நாள் போல இத்தனை ஊடகங்கள் இல்லாத அந்தக் காலத்தில் விளம்பரங்கள் செய்ய வானொலியோ, வார இதழ்களோ, சிறப்பு மலர்களோ பயன்பட்டன.  நண்பர் பால கணேஷ் தன்னுடைய மேய்ச்சல் மைதானம் வலைப்பூவில் ர்ர்ர்ர்ரீவைண்ட் சினிமா! என்ற பதிவில் 1948 - ஆம் வருடத்திய பேசும்படம் இதழிலிருந்து, அலிபாபாவும் 40 திருடர்களும், வேதாள உலகம், பக்தஜனா, ஜீவஜோதி போன்ற படங்களுக்கு வெளியான விளம்பரங்களை வெளியிட்டிருந்தார்.  

அதே போல 1949 ஆம் வருடம் வந்த சில விளம்பரங்கள் சினிமா விளம்பரங்கள் இல்லாது கார், இன்சூரன்ஸ், போன்றவற்றின் விளம்பரங்களை இன்றைய பொக்கிஷப் பகிர்வாக உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.     ப்யூக் ஸுபர் 1949 ஆம் வருட மாடல் கார் விநியோகஸ்தர்களான டி.வி. சுந்தரம் அய்யங்கார் & ஸன்ஸ் லிமிடெட்”  வெளியிட்ட விளம்பரம்.


பிருத்வி இன்ஷ்யூரன்ஸ் கம்பெனி லிமிடெட் வெளியிட்ட கொடுக்கிற தெய்வம்விளம்பரம்.நீங்கள் அழகு பெற சுலபமான வழி சொல்லும் மைசூர் சந்தன சோப் விளம்பரம் 

.

அரைக்கீரை விதை தைலம் இது என்னவென்று தெரிந்தவர்கள் சொல்லுங்களேன்!இன்றைக்கு வழக்கொழிந்து விட்ட ரிப்பன்களுக்குக் கூட அந்நாளில் விளம்பரம் செய்திருக்கிறார்கள்....ரேடியோ வாங்குவது ஒரு சம்பிரதாயம் என்று சொல்லும் ரேடியோக்களுக்கான விளம்பரம்...

என்ன நண்பர்களே இக்கால மற்றும் அக்கால விளம்பரங்களைக் கண்டு ரசித்தீர்களா

மீண்டும் வேறொரு பொக்கிஷப் பகிர்வுடன் சந்திக்கும் வரை...

நட்புடன்

வெங்கட்.
புது தில்லி 

.