திங்கள், 31 அக்டோபர், 2011

கண்ணெதிரே ஒரு கொள்ளைஇரண்டு நாட்களுக்கு  முன் ஒரு அடையாள அட்டையின் இரண்டு நகல்கள் எடுக்கக் கடைக்குச் சென்றேன்.  அந்தக் கடையின் வெளியேமொத்த அளவில் நகல் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு 45 பைசா, மேலும் விதவிதமான பைண்டிங் செய்து தரப்படும் –  நியாயமான விலையில்!" என்றெல்லாம் விளம்பரம் எழுதி வைத்திருந்தார்கள்

உள்ளே சென்ற என்னிடமிருந்த அடையாள அட்டையை வாங்கி  கடையில் வேலை செய்யும் நபர் நகல் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளே வந்து அவரது மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் ஒரு -டிக்கெட்டினை அச்சிட வேண்டும் என்றார் . 

அப்போது நடந்த சம்பாஷனையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:

வெளிநாட்டு இளைஞர்:  என் மின்னஞ்சலில் வந்திருக்கும் பயணச்சீட்டை  படிமம் எடுக்க வேண்டும். எவ்வளவு
 
கடைக்காரர்:  ஒரு பக்கத்திற்கு 40 ரூபாய் 
வெளிநாட்டு இளைஞர்:  இது ரொம்ப அதிகம் நண்பரேஇது உங்களுக்கே தெரியலையா    
கடைக்காரர்:  சரி பரவாயில்லை 30 ரூபாய் கொடுங்க! 
வெளிநாட்டு இளைஞர்: எதற்கு இப்படி ஏமாற்றுகிறீர்கள்?  நானும் உங்களைப் போலவே உடலும் முகமும் இருக்கும் ஒரு நபர் தான்.  கலர் தான் வேறு.  உங்கள் நாட்டவரையும் இப்படித்தான் ஏமாற்றுவீர்களாவெளிநாட்டவர் என்பதால் இப்படி ஏமாற்றலாமா?
கடைக்காரர்:  நான் உங்களை அழைக்கவில்லை.  நீங்களாகவே வந்தீர்கள்.  வேண்டுமெனில் ரூபாய் முப்பது கொடுத்து உங்கள் பயணச்சீட்டின் படிமம் எடுத்துக்கொள்ளுங்கள்.  இல்லையெனில் நடையைக் கட்டுங்கள்    
வெளிநாட்டு இளைஞர்: சரி இப்ப எனக்குத் தேவை என்னுடைய பயணச்சீட்டு.  ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன்.  எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!”
இந்த சம்பாஷனைகள் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணெதிரே இப்படி கொள்ளை அடிக்கிறாரே என்று எனக்கும்  தாங்கவில்லை.   நடுவில் நான் புகுந்து கடைக்காரரிடம் "ஏன் இப்படி அதிகமாக காசு கேட்கிறீர்கள்?" என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு அவர் எனக்கு அளித்த பதில்இது எங்க விஷயம், அனாவசியமா உன் மூக்கை நுழைக்காம, வேலையைப் பார்த்துக்கிட்டுப்  போ!” என்பதுதான்.   

வெளிநாட்டில் இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்களா இல்லையா என்பது இதுவரை  இந்தியாவைத் தாண்டி வெளியே போகாத எனக்குத் தெரியாது.  இருந்தாலும், தில்லிக்கு வரும் வெளிநாட்டவர்களையும் ஹிந்தி மொழி தெரியாதவர்களையும் இங்குள்ளவர்கள் நிறைய பேர் ஏமாற்றுவதையும் கண்ணெதிரே கொள்ளை நடக்கும்போது தட்டிக் கேட்கும் நம்மை  அசிங்கப்பட வைப்பதையும் நினைக்கும் போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" என்ற பாரதியின் வரிகளை நினைக்க  வேண்டியிருக்கிறது

ஒரு பக்கத்தில் சுற்றுலா மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும் மறுபுறம் இது போல சுற்றுலா வரும் நபர்களிடம் பணம் பிடுங்கும் நபர்களுடைய கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.  என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகை திருட்டுதான்

திருடாதே பாப்பா திருடாதேஎன்ற பழைய திரைப்படப்பாடலின் நடுவே வரும்  ”திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.  இவர்கள் திருந்துவதெப்போ?

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.