எங்கள் வலைப்பூவை [ஸ்]வாசிக்க வந்த உங்களை வரவேற்கிறேன்.

Monday, October 31, 2011

கண்ணெதிரே ஒரு கொள்ளைஇரண்டு நாட்களுக்கு  முன் ஒரு அடையாள அட்டையின் இரண்டு நகல்கள் எடுக்கக் கடைக்குச் சென்றேன்.  அந்தக் கடையின் வெளியேமொத்த அளவில் நகல் எடுத்தால் ஒரு பக்கத்திற்கு 45 பைசா, மேலும் விதவிதமான பைண்டிங் செய்து தரப்படும் –  நியாயமான விலையில்!" என்றெல்லாம் விளம்பரம் எழுதி வைத்திருந்தார்கள்

உள்ளே சென்ற என்னிடமிருந்த அடையாள அட்டையை வாங்கி  கடையில் வேலை செய்யும் நபர் நகல் எடுத்துக் கொண்டிருக்கும் போது அவரிடம் வெளிநாட்டினைச் சேர்ந்த ஒரு இளைஞர் உள்ளே வந்து அவரது மின்னஞ்சலுக்கு வந்திருக்கும் ஒரு -டிக்கெட்டினை அச்சிட வேண்டும் என்றார் . 

அப்போது நடந்த சம்பாஷனையின் தமிழ் மொழிப்பெயர்ப்பு:

வெளிநாட்டு இளைஞர்:  என் மின்னஞ்சலில் வந்திருக்கும் பயணச்சீட்டை  படிமம் எடுக்க வேண்டும். எவ்வளவு
 
கடைக்காரர்:  ஒரு பக்கத்திற்கு 40 ரூபாய் 
வெளிநாட்டு இளைஞர்:  இது ரொம்ப அதிகம் நண்பரேஇது உங்களுக்கே தெரியலையா    
கடைக்காரர்:  சரி பரவாயில்லை 30 ரூபாய் கொடுங்க! 
வெளிநாட்டு இளைஞர்: எதற்கு இப்படி ஏமாற்றுகிறீர்கள்?  நானும் உங்களைப் போலவே உடலும் முகமும் இருக்கும் ஒரு நபர் தான்.  கலர் தான் வேறு.  உங்கள் நாட்டவரையும் இப்படித்தான் ஏமாற்றுவீர்களாவெளிநாட்டவர் என்பதால் இப்படி ஏமாற்றலாமா?
கடைக்காரர்:  நான் உங்களை அழைக்கவில்லை.  நீங்களாகவே வந்தீர்கள்.  வேண்டுமெனில் ரூபாய் முப்பது கொடுத்து உங்கள் பயணச்சீட்டின் படிமம் எடுத்துக்கொள்ளுங்கள்.  இல்லையெனில் நடையைக் கட்டுங்கள்    
வெளிநாட்டு இளைஞர்: சரி இப்ப எனக்குத் தேவை என்னுடைய பயணச்சீட்டு.  ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன்.  எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!”
இந்த சம்பாஷனைகள் நடந்து கொண்டிருக்கும்போது கண்ணெதிரே இப்படி கொள்ளை அடிக்கிறாரே என்று எனக்கும்  தாங்கவில்லை.   நடுவில் நான் புகுந்து கடைக்காரரிடம் "ஏன் இப்படி அதிகமாக காசு கேட்கிறீர்கள்?" என்று ஹிந்தியில் கேட்க, அதற்கு அவர் எனக்கு அளித்த பதில்இது எங்க விஷயம், அனாவசியமா உன் மூக்கை நுழைக்காம, வேலையைப் பார்த்துக்கிட்டுப்  போ!” என்பதுதான்.   

வெளிநாட்டில் இந்தியர்களை அவர்கள் ஏமாற்றுகிறார்களா இல்லையா என்பது இதுவரை  இந்தியாவைத் தாண்டி வெளியே போகாத எனக்குத் தெரியாது.  இருந்தாலும், தில்லிக்கு வரும் வெளிநாட்டவர்களையும் ஹிந்தி மொழி தெரியாதவர்களையும் இங்குள்ளவர்கள் நிறைய பேர் ஏமாற்றுவதையும் கண்ணெதிரே கொள்ளை நடக்கும்போது தட்டிக் கேட்கும் நம்மை  அசிங்கப்பட வைப்பதையும் நினைக்கும் போது "நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்" என்ற பாரதியின் வரிகளை நினைக்க  வேண்டியிருக்கிறது

ஒரு பக்கத்தில் சுற்றுலா மூலம் நல்ல வருமானம் கிடைத்தாலும் மறுபுறம் இது போல சுற்றுலா வரும் நபர்களிடம் பணம் பிடுங்கும் நபர்களுடைய கூட்டமும் அதிகமாகிக் கொண்டே வருகிறது.  என்னைப் பொறுத்தவரை இதுவும் ஒரு வகை திருட்டுதான்

திருடாதே பாப்பா திருடாதேஎன்ற பழைய திரைப்படப்பாடலின் நடுவே வரும்  ”திருடராய்ப் பார்த்து திருந்தாவிட்டால் திருட்டை ஒழிக்க முடியாதுஎன்ற வரிகள் தான் நினைவுக்கு வருகிறது.  இவர்கள் திருந்துவதெப்போ?

மீண்டும் சந்திப்போம்

நட்புடன்

வெங்கட்
புது தில்லி.

57 comments:

 1. வெளிநாட்டு இளைஞர்: சரி இப்ப எனக்குத் தேவை என்னுடைய பயணச்சீட்டு. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன். எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!”--

  அனுபவப்ப்கிர்வுக்குப் பாராட்டுக்கள்

  ReplyDelete
 2. @ இராஜராஜேஸ்வரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 3. வெளி நாட்டவர்களை இப்படி ஏமாற்றுவது இங்கும் நடக்கிறது. அரசு சார்ந்த சில சுற்றுலா தளங்களில் கூட நுழைவுக்கட்டணம் இந்தியர்களுக்கு மிகக்குறைவாகவும் வெளி நாட்டவர்க்கு எத்தனையோ மடங்கு அதிகமாகவும் இருக்கிற‌து. யாரை நொந்து கொள்ளுவது?

  சிறப்பான பதிவு!

  ReplyDelete
 4. வெளிநாட்டவரிடம் நிறைய பணம் இருக்கும் என்பது தான் முதல் எண்ணம். பொறியியற் கல்லூரிகளில் NRI கோட்டாவிற்கு அதிக கட்டணம் வசூலிப்பதும் இந்த முறையில் தான் வரும். காதல் கோட்டை படத்தில் ராஜஸ்தானில் கடையில் அதிக விலை கேட்பவரிடமிருந்து பாண்டு ஹிந்தியில் பேசி விலை குறைப்பதை நாம் பார்த்திருக்கிறோம். கடைக்காரர் நல்லவராக இருந்திருந்தால் சரியான விலையை கேட்டிருப்பார்.

  ReplyDelete
 5. //ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன். எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!”//

  அவர் சொல்வது நிச்சயம் உண்மையாகவே கூட இருக்கலாம். நம்ம ஆளுகளும் சரியில்லை. அசந்தால் நம்மையே கூடத்தான் பாஷை தெரியாவிட்டால் ஏமாற்றி விடுகிறார்கள்.

  நல்ல பகிர்வு. த.ம: 4

  ReplyDelete
 6. @ மனோ சாமிநாதன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 7. @ C. குமார்: உனது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி குமார்.

  ReplyDelete
 8. @ வை. கோபாலகிருஷ்ணன்: உண்மை தான்.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 9. அசிங்கம்.. வேறென்ன சொல்ல?
  அந்த நபருக்கும் வேறு கடை கிடைக்கவில்லையா என்ன?

  ReplyDelete
 10. @ அப்பாதுரை: அசிங்கம்தான்...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 11. வெட்ககேடான விஷயம். வெளினாட்டில் நம்மவர் ஏமாறுவது மிக மிக குறைவே. ஆனால், நம் நாட்டில் வெளிநாட்டவர் ஏமாறுவது அதிகம். அதற்கு காரணம் அவர்கள் நம் நாட்டின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். அதனால்தான், நாம் எது சொன்னாலும் அவர்கள் நம்பி விடுகிறார்கள்.

  ReplyDelete
 12. இதுக்கு ஏன் வெளிநாட்டவரா இருக்கணும்? சண்டிகரிலேயே வேற மாநிலத்தவரை ஏமாத்துப்பிடறாங்களே:(

  அதுவும் நாம் உள்ளூர் ஆள் இல்லைன்னு தெரிஞ்சவுடன் அவுங்க சொல்றதுதான் விலை. அதான் காசு வச்சுருப்பியே கொடுத்தால் என்ன என்ற மனோபாவம்:(

  நியூஸியில் இப்படி யாரையும் ஏமாத்தறதில்லை.

  ReplyDelete
 13. அரசு அனுமதியுடனேயே இது போல் நடப்பதில்லையா?

  உதாரணத்திற்கு தாஜ்மஹால் போன்ற சுற்றுலா இடங்களில் இந்தியருக்கு நுழைவுக் கட்டணம் எவ்வளவு? வெளிநாட்டவருக்கு எவ்வளவு?

  வேறுபாடு உள்ளதே! அது சரியா?

  ReplyDelete
 14. இந்தியாவுல பல இடங்கள்ல இது நடக்குதுய்யா, தட்டிக்கேக்க போனாள் நாம்தான் அவமானப்படனும்...!!!!

  ReplyDelete
 15. நிறைய நாடுகளில் இந்தியர்களை மனிதராய் ... ஒரு வாடிக்கையாளராய் கூட மதிக்காமல்...ஒரு திருடனைப்போல் நடத்துவதைப்பார்க்கையில் இது எவ்வளவோ பரவாயில்லை...

  இருந்தாலும் இந்த செயல் கேவலமானது தான் வெங்கட்ஜி...

  ReplyDelete
 16. இதுரொம்ப மோசமான நடவடிக்கைதான். ஒருவர் இருவர் செய்யும் தவறால் ஒட்டுமொத்த இண்டியர்களின் பேரையும் கெடுக்கிரார்கள்.

  ReplyDelete
 17. த.ம.8
  “அதிதி தேவோ பவ”!!

  ReplyDelete
 18. வெங்கட்ஜீ! ஏமாற்றுப்பேர்வழிகள் எல்லா ஊரிலும் இருக்கிறார்கள் என்றாலும், தில்லியில் எனக்கும் சில கசப்பான அனுபவங்கள் இருக்கின்றன. மறக்க முடியாத அனுபவம், ஐ.எஸ்.பி.டியில் ஹரிதுவார் செல்வதற்காகக் காத்திருந்தபோது, வெளியே லக்சுரி பஸ் காத்திருக்கிறது என்று கூறி அழைத்துச் சென்று இரட்டிப்புப் பணம் வாங்கியதோடு, தாமதப்படுத்தி, ஏன் என்று கேட்டதும், தில்லியின் டிப்பிக்கல் வார்த்தைகளால் ஏசி..சே, இதுவா இந்தியாவின் தலைநகரின் லட்சணம் என்று தோன்றிவிட்டது. இந்தி தெரியாத இந்தியனையே ஏமாற்றுகிறபோது, வெளிநாட்டவனையா விட்டு வைப்பார்கள்?

  ReplyDelete
 19. @ ராஜி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 20. @ துளசி கோபால்: உள்நாட்டினரையும் ஏமாற்றுகிறார்கள்.. வெளிநாட்டினரை ஏமாற்றுவது மிகவும் அதிகம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 21. @ வேங்கட ஸ்ரீனிவாசன்: உண்மை தான் சீனு. அரசு அங்கீகரிக்கப்பட்ட கொள்ளை தாஜ்மகால் போன்ற இடங்களில்....

  உனது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி சீனு.

  ReplyDelete
 22. @ MANO நாஞ்சில் மனோ: உண்மைதான் மனோ. பல இடங்களில் இது நடந்தபடியே இருக்கிறது. :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 23. @ ரெவெரி: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 24. @ லக்ஷ்மி: உங்கள் கருத்து உண்மை.... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றிம்மா...

  ReplyDelete
 25. @ சென்னை பித்தன்: “அதிதி தேவோ பவ...” சரி....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 26. @ சேட்டைக்காரன்: //தில்லியின் டிப்பிக்கல் வார்த்தைகளால் ஏசி..சே, இதுவா இந்தியாவின் தலைநகரின் லட்சணம் என்று தோன்றிவிட்டது. // இவர்களின் ஒவ்வொரு வாக்கியமும் ஆரம்பிப்பதே அந்த வார்த்தையில் தானே சேட்டை. சாதாரணமாக பேசும்போதே இப்படித்தான்.. :(

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி சேட்டை.

  ReplyDelete
 27. வேதனையான விஷயம்.

  //"நெஞ்சு பொறுக்குதில்லையே இந்த நிலை கெட்ட மாந்தரை நினைத்துவிட்டால்"//

  ஒரிரண்டு பேர்கள் இப்படி செய்வதால் வெளிநாடுகளில் மொத்த இந்தியர்களுக்குமே கெட்ட பேர்தான் கிடைக்கும்.

  ReplyDelete
 28. உங்கள் நாட்டில் மட்டும் இல்லை பாஸ் எங்கள் ஊரிலும் பல இப்படி சம்பவங்கள் நடப்பதுண்டு...

  ReplyDelete
 29. @ ராம்வி: வேதனையான விஷயம்.. உண்மை சகோ...

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 30. @ K.s.s. Rajh: எல்லா ஊரிலும் நடக்கிறது என்பதே வேதனை....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி நண்பரே.....

  ReplyDelete
 31. நல்ல பதிவு.
  எனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்திருக்கிறேன்.
  வாழ்த்துக்கள்.

  ReplyDelete
 32. இப்படியிருந்தா எப்படி டூரிஸ்ட் நம்ம நாட்டுக்கு வருவாங்க ??

  ReplyDelete
 33. சில நாடுகளில் இந்தியன் என்று சொன்னாலே
  மேலேயும் கீழேயும் பார்க்கும் நிலை இருக்கிறது...
  இதுபோன்ற மனப்பான்மை உள்ளவர்களால் தான்
  இப்படி உருவாகிறது...

  ReplyDelete
 34. நான் இப்போது சென்னையில் இல்லை..சென்னை ரேடியோ மிர்ச்சியில் இது போன்ற விஷயங்களுக்கு ரொம்ப குறும்பாக AWARENESS ஒளிபரப்புகள் வரும்.. கேட்டால் தப்பு செய்பவர்களுக்கே சுள்ளென்று உறைக்கும் விதமாக.இது போல வெளியூர் மக்களை எமாற்றுவதைக் குறித்து அவர்கள் வெளியிட்ட ஒன்று பிரமாதமாக இருக்கும்.. if somebody has, must share..

  ReplyDelete
 35. மனது வலிக்கிறது.

  ReplyDelete
 36. நீங்களும் அக்கடைக்கு போவதை இனிமேல் தவிர்க்கலாம்.

  நம்மாட்கள் நம்ம ஊரு ரூபாய்க்கு அவங்களோட பணத்தின் மதிப்பை ஒப்புமைப்படுத்தி காசு கேட்பார்கள்.

  அசிங்கம்-- வேறென்ன சொல்ல...

  ReplyDelete
 37. @ ரத்னவேல்: முகநூலில் பகிர்ந்தமைக்கு நன்றி. வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 38. @ மோகன் குமார்: வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளின் எண்ணிக்கை குறைந்தால் நம் நாட்டிற்கு, நமக்குத் தானே கஷ்டம்....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மோகன்...

  ReplyDelete
 39. @ மகேந்திரன்: தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி மகேந்திரன்....

  ReplyDelete
 40. @ ரோமிங் ராமன்: ஓ ரேடியோ மிர்ச்சி நிகழ்ச்சியில் வருகிறதா? நான் தமிழகத்தை விட்டு வந்தே இருவது வருடங்களுக்கு மேல் ஆகிவிட்டது. உங்களுக்குக் கிடைத்தால் பகிருங்கள்....

  தங்களது முதல் வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 41. @ DrPKandasamyPhD: எனக்கும்..... தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி ஐயா...

  ReplyDelete
 42. @ RVS: நானும் தவிர்க்க ஆரம்பித்து விட்டேன்.... அசிங்கம் தான் வேறென்ன சொல்ல....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் நன்றி மைனரே...

  ReplyDelete
 43. அரசாங்கமே பொது இடங்களுக்கான நுழைவுச்சீட்டுகளில் இந்தியருக்கு ஒரு விலையும், வெளிநாட்டவருக்கு அளவுக்கதிகமான விலையும் நிர்ணயிக்கையில் மற்றவர்களை என்ன சொல்ல வெங்கட்.. வெரி பேட்.

  ReplyDelete
 44. ஒருபுறம் வெளி நாட்டினரை கவர்வதற்கான திட்டங்கள்
  மறுபுறம் இது போன்ற தனி மனித அவலங்கள்
  திருடராய்ப் பார்த்து திருந்த வேண்டும்
  த.ம 13

  ReplyDelete
 45. எல்லா இடத்திலும் நடப்பது தான் ...புதிது ஒன்றும் இல்லை...இருபினும்...அந்த வெளிநாட்டுகாரர்...விடாமல் ...வாக்குவாதம் செய்து...உள்ளார்...பாருங்கள்....அதை பாராட்ட வேண்டும்...என்ன நான் சொல்வது :))

  ReplyDelete
 46. @ விக்னேஷ்வரி: நீண்ட இடைவெளிக்குப் பிறகு பதிவுகள் படிக்க ஆரம்பித்து விட்டீர்கள் போல.... நல்லது. உண்மை தான் - அரசாங்கமே கொள்ளை தான் அடிக்கிறது....

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 47. @ ரமணி: திருடராய்ப் பார்த்து திருந்த வேண்டும்.... உண்மை தான்... அதுதான் நடக்கவில்லை....

  தங்களது தொடர் வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 48. @ அப்பாஜி: நீங்கள் சொல்வது சரிதான். வெளியூருக்குச் சென்றால் இது போல பேசத்தான் வேண்டியிருக்கிறது.

  தங்களது வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் நன்றி.

  ReplyDelete
 49. வெளிநாட்டு இளைஞர்: எதற்கு இப்படிஏமாற்றுகிறீர்கள்? நானும் உங்களைப் போலவே உடலும்முகமும் இருக்கும் ஒரு நபர் தான். கலர் தான் வேறு. உங்கள்நாட்டவரையும் இப்படித்தான் ஏமாற்றுவீர்களா? வெளிநாட்டவர்என்பதால் இப்படி ஏமாற்றலாமா?
  கடைக்காரர்: நான் உங்களை அழைக்கவில்லை. நீங்களாகவேவந்தீர்கள். வேண்டுமெனில் ரூபாய் முப்பது கொடுத்து உங்கள்பயணச்சீட்டின் படிமம் எடுத்துக்கொள்ளுங்கள். இல்லையெனில்நடையைக் கட்டுங்கள்…
  வெளிநாட்டு இளைஞர்: சரி இப்ப எனக்குத் தேவை என்னுடையபயணச்சீட்டு. ஆனால் ஒன்று மட்டும் சொல்கிறேன், நீங்கள்என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படிஏமாற்றமாட்டேன். எங்கள் நாட்டில் எவரும்ஏமாற்றமாட்டார்கள்!”

  இந்த சம்பவத்தைக் கேட்டவுடன்தான் எனக்கும் ஒன்று நினைவுக்கு வருகின்றது .கொழும்பில் எங்களுக்கு தெரிந்த ஆட்டோ ஓடும் நபர் ஒருவர் இவ்வாறுதான்
  கூலியை அதிகமாகக் கேட்க அந்த வெள்ளைக்காரப் பெண்மணி ஏறும்போது ஆங்கிலத்தில் கதைத்தாராம் .இறங்கும்போது சுத்தத் தமிழில் சொன்னாராம்
  எனக்கும் தமிழ் தெரியும் .நீங்கள் என்னை எமாத்தியது எனக்குத் தெரியும் .பணம் தேவை என்றால் கேட்டு வாங்குங்கள் இனி இப்படிச் செய்யாதீங்கோ என்று அவர் கேட்ட தொகையைவிட அதிகமாகவே கொடுத்தாராம் தனக்கு இந்த செயல் தூக்கி வாரிப் போட்டதுபோல் ஆகிவிட்டது என்று என்னிடம் கூறி வெட்கப்பட்டார் .அனேகமாக நான் அறிந்தவரை வெளிநாடுகளில் வியாபரத்
  தளங்களில் நேர்மை தவற மாட்டார்கள் .அதற்கு இன்னொரு காரணமும் உண்டு .இங்கு சட்டத்தை மீறி நடந்தார் என்பது நிரூபிக்கப்பட்டால் தண்டப்பணம் மலைபோல கட்டவேண்டி வரும் என்ற பய உணர்வும் உண்டு .பொதுவில் ஏமாற்றும்
  குணம் வெளிநாட்டவர்க்கு குறைவென்றுதான் நான் சொல்வேன் .மிக்க நன்றி அருமையான பகிர்வுக்கு .

  ReplyDelete
 50. @ அம்பாளடியா: தங்களது வருகைக்கும் நீண்ட கருத்துரைக்கும் நன்றி. நீங்கள் சொன்னது போல தண்டனைப் பணம் கட்ட பயந்து வெளிநாடுகளில் இது போல செய்ய மாட்டார்கள் போலத் தெரிகிறது.... இங்கே வழக்கு பதிவு செய்தாலும் அதன் முடிவு தெரிவதற்குள் போதும் போதும் என்றாகிவிடும்....

  ReplyDelete
 51. @ காஞ்சனா ராதாகிருஷ்ணன்: தங்களுடைய வருகைக்கும் கருத்துப் பகிர்வுக்கும் மிக்க நன்றி.

  ReplyDelete
 52. வெங்கட்,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

  ReplyDelete
 53. @ ராம்வி: வலைச்சரத்தில் என்னையும் அறிமுகம் செய்தமைக்கு நன்றி சகோ....

  ReplyDelete
 54. // நீங்கள் என்னுடைய நாட்டிற்கு வந்தால் நிச்சயம் இப்படி ஏமாற்றமாட்டேன். எங்கள் நாட்டில் எவரும் ஏமாற்றமாட்டார்கள்!” //

  பிஞ்ச செருப்பால அடிச்சாலும் இந்தளவுக்கு வலிக்காது.. வாழ்க முகம் தெரியாதா அந்த வெளிநாட்டு இளைஞர்.

  எங்கள் ஊரில் எனக்கு இரண்டே ரூபாயில் டிக்கெட் பிரின்ட் அவுட் எடுத்து தருவார்கள் ஜெராக்ஸ் கடையில். மிஞ்சிப் போனா பத்து ரூபாய்.. அத விட அதிகமா கேட்பது கொடுமை.

  இனி ரயில் பயண இ-டிக்கெட் பேப்பர் மூலம் காண்பிக்க வேண்டிய அவசியம், இல்லை. அந்த jpg /image லேப்டாப், காமெரா, மொபைல், ஐபாட் போன்ற உபகரணத்தில் வைத்து காண்பித்து, ஐ.டி கார்டையும் காண்பித்தாலே போதும். இப்படி நீங்க அந்த வெளிநாட்டவருக்கு சொல்லி இருந்தால் அந்த எமாற்றுபவருக்கு முகத்தில் கரியை பூசியதுபோல இருந்திருக்கும்.

  ReplyDelete
 55. @ மாதவன் ஸ்ரீனிவாசகோபாலன்: //பிஞ்ச செருப்பால அடிச்சாலும் இந்தளவுக்கு வலிக்காது.. வாழ்க முகம் தெரியாத அந்த வெளிநாட்டு இளைஞர்.// ம்ம்ம்ம்.....

  தங்களது வருகைக்கும் கருத்திற்கும் மிக்க நன்றி மாதவன்....

  ReplyDelete

வாங்க.... படிச்சீங்களா? உங்களுக்குப் பிடித்ததா? குறை - நிறை இருப்பின் சொல்லிட்டுப் போங்களேன்....